You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nee Enbathe Naanaga - 5

Quote

5

பதட்டம்

அதிகாலை நான்கு மணியளவில் மீனா உறக்கத்திலேயே முனக, ஜானவி அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “மீனா ம்மா” என்று குரல் கொடுத்தாள். மறுகணமே மீனா பதறித் துடித்து தன் அம்மாவின் அருகில் எழுந்தமர்ந்து கொண்டாள்.

“மீனா என்னாச்சு?” என்று ஜானவி மகளைப் பரிவாக கேட்கும் போதே அவள் தன் அம்மாவின் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

“மீனா என்னடா?” என்று ஜானவி மகளின் தலையை வருடிக் கொடுக்க, மீனாவின் உடல் அனலாய் தகித்துக் கொண்டிருந்தது.

ஜானவி மகளின் நெற்றியைத் தொட்டுப் பார்க்க அவளோ, “அப்பா வந்து என்னைக் கூட்டிட்டு போயிடுவாராம்மா?” என்று நடுநடுங்கிய குரலில் கேட்டு அப்படியே ஜானவியின் மார்பில் சாய்ந்து கொண்டு அழத் தொடங்கினாள்.

ஜானவியின் விழிகளில் நீர் நிரம்பியது. தன் மகளின் அணைப்பில் உள்ள தவிப்பும் அச்சமும் புரிய, “அப்படியெல்லாம் அம்மா உன்னை விட மாட்டேன்டா தங்கம்” என்று ஆறுதல் உரைத்து மகளுக்கு காய்ச்சல் குறைவதற்கான மருந்தைக் கொடுத்துவிட்டு அவள் அருகிலேயே படுத்துக் கொண்டாள் ஜானவி.

மீனா தன் தாயை அணைத்தபடியே உறங்கிப் போனாள். அந்த நொடி ஜானவியின் உள்ளமோ ராஜனின் நடவடிக்கையை எண்ணி உள்ளூர கொந்தளித்துக் கொண்டிருந்தது. ராஜன் செய்த களேபரத்தின் விளைவு. இரவெல்லாம் அழுது உறங்கிய மீனாவிற்கு ராஜன் நடந்த கொண்ட விதம் மனதிற்குள் அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. எங்கே தன் தந்தையோடு போக வேண்டி நேரமோ என்ற பயமே அவள் உடல்நிலையையும் பாதித்திருக்கிறது.

சொந்த தந்தையை எண்ணிப் பயப்படுமளவுக்கு ராஜன் மகளிடம் நடந்து கொண்டிருக்கிறான். அவன் ஒரு நல்ல கணவனாகவும் இல்லை. அதேநேரம் சொந்த குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் இல்லை.  ஜானவிக்கு  இதெல்லாம் எண்ணும் போதே ராஜன் மீதான கோபமும் வெறுப்பும் பன்மடங்குப் பெருகியது.

விடிந்ததுமே முதல் வேளையாக ஜானவி மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று  பார்த்துவிட்டு அவளுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினாள். பின்னர் கிரிஜாவிடம் மீனாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.

அதன் பின் ஜானவி வீடு வந்து சேர மாலை ஆகிவிட்டது.

“குழந்தைக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல கூட உனக்கு ஆபீஸுக்குப் போகணுமா?” என்று வீட்டிற்கு வந்ததும் வாரததுமாக கிரிஜா மகளை கடிந்து கொள்ள,

“நான் ஆபீஸுக்குப் போனேன்னு உனக்குத் தெரியுமாக்கும்?” என்று அவள் முறைத்தபடி கேட்க, “அப்புறம் எங்கடி போன இவ்வளவு நேரம்?” என்று மகளை யோசனையோடுப் பார்த்தார் கிரிஜா!

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்... மீனாவுக்கு ஜுரம்எப்படி இருக்கு? எதாச்சும் சாபிட்டாளா?” என்று கேட்டு கொண்டே தன் அறைக்குள் மகளை பார்க்க செல்ல,

“அதெல்லாம் நல்லாத்தான் இருக்கா? கஞ்சி காய்ச்சி தந்தேன் குடிச்சா... என்னதான் நான் பார்த்துக்கிட்டாலும் இந்த மாதிரி நேரத்துல அம்மாவைத்தான் குழந்தைங்க தேடும்”  என்றார் கிரிஜா!

“என் பொண்ணுக்கு உடம்புல பிரச்சனையா இருந்தா நான் அவ பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன்... ஆனா அவளுக்கு இப்போ இருக்க பிரச்சனையே வேற... அதை ஒரேடியா சரி பண்ணிடணும்னுதான் போய் நான் தனியாஅலைஞ்சுட்டு வரேன்...

என் பொண்ணை விட இந்த உலகத்துல வேற எவனும் முக்கியமில்ல... எதுவும் முக்கியமில்ல... அவதான் என் உலகம்... அவ மட்டும்தான் எனக்கு எல்லாமே” என்று சொல்லும் போதே தாய்மையின் வலி அவள் கண்களில் தெரிந்தது.

அதே நேரம் இறுகியிருந்த ஜானவியின் முகமும் அவளின் இந்த உணர்வுப்பூர்வமான வார்த்தைகளும் கிரிஜாவிற்கு குழப்பமாக இருந்தது. ஏதோ பெரிதாக செய்துவிட்டு வந்திருக்கிறாளோ என்று யூகித்தவர்,

“என்னடி பண்ண?” என்று கேட்க,

அவள் பதிலேதும் பேசாமல் மீனா அருகில் சென்று அவளை நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள். “என்னடி செல்லம்? சாப்பிட்டியா? அம்மாவை ரொம்ப தேடினியா?” என்று செல்லம் கொஞ்ச, “ம்ம்ம்” என்று சோகமாய் தலையசைத்தாள்.

இன்னும் நேற்று நடந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மீனா வெளியே வரவில்லை என்பது ஜானவிக்குப் புரிந்தது. தன் மகளை மடியில் அமர்த்திக் கொண்டு, “என் மீனா குட்டி இப்படி இருக்க மாட்டாளே!” என்று ஜானவி அவள் தலையை மென்மையாக வருடி கேட்டுக் கொண்டிருக்கும் போது, வெளியே முகப்பறையில் ஒரே சத்தமாக இருந்தது.

ராஜனின் தந்தையும் தாயும் சத்தமிட்டுக் கொண்டே உள்ளே வந்தனர்.

“எங்கடி உங்க அக்கா?” என்று நுழைந்ததும் அவர் ஜமுனாவிடம் கத்த, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னாச்சு?” என்று கிரிஜா கேட்டுக் கொண்டே வெளியே எட்டிப் பார்க்க, “உங்க பொண்ணு என்ன காரியம் பண்ணி இருக்கா தெரியுமா? ஒரு குடும்ப பொம்பள செய்ற காரியமா அது” என்று அவர் ஆக்ரோஷமாகக் குரல் கொடுக்க,

“மீனாம்மா நீ இங்கேயே இரு... அம்மா போய் பேசிட்டு வந்திடுறேன்” என்று ஜானவி மகளை மடியிலிருந்து இறக்கிப் படுக்கையில் அமர வைக்க, “உஹும்... வேண்டாம்” என்று மீனா அச்சத்தோடு ஜானவியின் கழுத்தை இறுக்கிக் கொண்டாள்.

“புரிஞ்சுக்கோ மீனம்மா... நான் போய் சித்தியை அனுப்பி விடுறேன்” என்று அவள் மகளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிரிஜா உள்ளே நுழைந்து, “என்னடி பண்ணி வைச்சிருக்க... உன் மாமியார் எதுக்குடி அந்த கத்து கத்திட்டு இருக்கா?” என்று சீற்றமாக வினவ,

“நீங்க இங்க இருந்து பாப்பாவைப் பார்த்துக்கோங்க... நான் போய் பேசிட்டு வரேன்” என்று சொல்லி விறுவிறுவென வெளியே சென்றாள் ஜானவி!

அப்போது ராஜனின் அம்மா சங்கரனிடம், “நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா? பொண்ணா யா வளர்த்து வைச்சிருக்க” என்று காட்டமாகப் பேச, “இப்ப என்ன நடந்துச்சு?” என்று சங்கரன் அவர்களிடம் நிறுத்தி நிதானமாக கேட்க,

ராஜனின் தந்தை அவரிடம், “உங்க பொண்ணுக்கு எவ்வளவு நெஞ்செழுத்தம் இருந்தா என் புள்ளை மேலயே கேஸ் கொடுத்திருப்பா”

“ஒழுங்கா உங்க பொண்ணை கேசை வாபஸ் வாங்க சொல்லுங்க... இல்லாட்டி உங்க குடும்பமும் சேர்ந்துதான் இதுல அசிங்கப்பட்டு போவும்” என்று மிரட்டலாக உரைத்தார்.

அப்போது ஜானவி அவர்கள் முன்னே வந்து, “இத பாருங்க... நீங்க என்ன பேசறதா இருந்தாலும் இங்க என்கிட்ட பேசுங்க” என்க, சங்கரன் மனம்நொந்து மகளைப் பார்த்தார்.

அவள் நிச்சயம் தான் சொல்வதைக் கேட்கப் போவதில்லை என்பதைப் புரிந்தவராக,  “நீங்க எதுவா இருந்தாலும் ஜானவிகிட்டயே பேசிக்கோங்க... இதுல நான் பேசறதுக்கு எதுவும் இல்ல” என்று விட்டேற்றியாக பதில் சொல்லிவிட்டு சங்கரன் தன் அறைக்குள் சென்று விட்டார்.

இவற்றை எல்லாம் உள்ளே நின்று பார்த்துக் கொண்டிருந்த கிரிஜாவிற்கு மகள் மீது கோபம் பொங்கியது. ஆனாலும் அவர் எதுவும் பேச முடியாமல் இயலாமையோடு நின்றார். ஜானவி அவர் சொல்வதை மட்டும் கேட்கப் போகிறாளா என்ன?

ஜானவி மெளனமாக நின்று கொண்டிருக்க ராஜனின் தாய் அப்போது ஆவேசமாக, “எல்லாத்துக்கும் இவதான் காரணம்” என்று அவளை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தார்.

“அமைதியா இரு வள்ளி” என்று அப்போது ராஜனின் தந்தை முன்னே புகுந்து தடுத்துவிட்டார்.

ஜானவி அசராமல் அவர்கள் இருவரையும் அழுத்தமாகப் பார்க்க வள்ளி தலையிலடித்துக் கொண்டு, “என்ன கன்றாவி குடும்பங்க இது... பெத்த பொண்ணு செய்ற தப்பை தட்டிக் கேட்க கூட இங்க ஒருத்தருக்கும் துப்பில்ல” என்றவர் நொடித்துக் கொண்டு மேலும்,  “ம்ம்கும்  எப்படி கேட்பாங்க... பொண்ணு சம்பாதியத்துல உட்கார்ந்து திங்கிற மானங்கெட்ட குடும்பம்தானே” என்றார்.

ஜானவி விழகள் கனலேற, “வாயை மூடுங்க... யாரு மானங்கெட்ட குடும்பம்... நாங்களா நீங்களா? உங்க புள்ள எவளோ ஒரு பொம்பளையைக் கூட்டிட்டு வந்து வீட்டிலேயே... ச்சே... சொல்லக் கூட எனக்கு அருவருப்பா இருக்கு... ஆனா அந்த கன்றாவி எல்லாம் பார்த்த பிறகும் உங்க புள்ள செஞ்ச தப்பை விட்டுக் கொடுக்காம பேசறீங்க... இதுல எங்களை மானங்கெட்ட குடும்பம்னு நீங்க சொல்றீங்க... இந்த லட்சணத்துல நான் அந்த ஆள் கூட வந்து வாழணுமா? அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது” என்று அவள் தீர்க்கமாக உரைத்தாள்.

கருணாகரன்  உடனே “அதுக்கு... என் புள்ள மேல கம்பளைன்ட் கொடுப்பியா நீ?” அவர் அனல் தெறிக்கும் பார்வையோடு கேட்க,

“நான் ஒன்னும் சும்மா போய் உங்க பையன் மேல கம்பளைன்ட் கொடுக்கல... உங்க புள்ளதான் என்னை என் ஆபீசுக்கு தேடிவந்து அடிச்சாரு... அதோட இல்லாம சாகடிச்சிருவேன்னு வேற மிரட்டிட்டுப் போனாரு... வீட்டுக்கு வந்து மீனாவைக் கூட்டிட்டுப் போகணும்னு கலாட்டா பண்ணிட்டுப் போயிருக்காரு... இதனால மீனாவுக்கு ராத்திரில இருந்து காய்ச்சல்... தெரியுமா உங்களுக்கு?” என்று பேசிக் கொண்டிருந்தவள் இறுதியாக ஆக்ரோஷமாய் கேட்க வள்ளியின் முகம் கடுகடுத்தது.

“அதுக்காக என் பையனைத் தூக்கி நீ ஸ்டேஷன்ல உட்கார வைப்பியா?” என்று அவர்கள் இருவருமே தன் மகனின் நிலையை மட்டுமே யோசித்துப் பேசினரே ஒழிய ஜானவியின் நியாயம் அவர்களுக்குத் துளி கூட விளங்கவில்லை.

ஜானவி இருவரையும் மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து, “உங்ககிட்ட போய் இவ்வளவு விளக்கம் குடுத்தேன் பாருங்க...என்ன சொல்லணும்?” என்றவள் பெருமூச்செறிந்து கொண்டே,

“இத பாருங்க... இங்க வந்து நீங்க இப்படி கத்திக் கூப்பாடு போடுறதால எல்லாம் ஒன்னும் நடக்காது... நான் இன்ஸ்பெக்டர் மேடம் கிட்ட தெள்ளத்தெளிவா உங்க பையன் எனக்கு செஞ்சதெல்லாம் கம்ப்ளைன்டா எழுதிக் கொடுத்திருக்கேன்.... அதோடு உங்க பையன் என்னை அடிச்ச காயம் என் கன்னத்துல இருக்கு... எங்க அபீஸ் சிசிடிவிலயும் அது பதிவாகியிருக்கு... அதையும் இன்ஸ்பெக்டர் மேடம் கிட்ட நான் கொடுத்துட்டேன்... கடைசியா உங்க பிள்ளை என்னை கொன்னுடுவேன்னு வேறு மிரட்டி இருக்காரு... இதெல்லாமே குடும்ப வன்முறை தடுப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்... தெரியுமா உங்களுக்கு?” என்றாள்.

அவள்  சொல்வதை உள்வாங்கிக் கொண்ட  ராஜனின் தாயும் தந்தையும்  எதுவும் பேச முடியாமல் அப்படியே திகைத்து நின்றுவிட்டார்.

ஜானவி கைகளைக் கட்டிக் கொண்டு, “இப்ப கூட ஒன்னும் ஆயிடல... உங்க புள்ளைய ஒழுங்கா எனக்கு விவாகரத்து கொடுக்க சொல்லுங்க... அதேநேரம் என் பொண்ணு மேல எந்த உரிமையும் இல்லன்னு எழுதிக் கொடுக்க சொல்லுங்க... அப்புறம் எந்தக் காரணத்தை கொண்டும் அந்த மனுஷன் என் வாழ்க்கையில நுழையவே கூடாது” என்று முடித்தாள்.

வள்ளியின் முகம் சிவக்க அவளை உக்கிரமாக பார்த்துக் கொண்டு நின்றார்.

ஜானவி உடனே, “இந்த முறைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்...  உங்க புள்ளைக்கு நல்ல புத்தி சொல்லி...  நான் சொன்ன மாதிரி எழுதிக் கொடுக்க சொல்லுங்க... இல்லாட்டி என் லாயரை வைச்சி எப்படி டிவோர்ஸுக்கு மூவ் பண்ணனுமோ அப்படி மூவ் பண்ணுவேன்... அப்புறம் உங்க புள்ளை செஞ்ச கேவலமான வேலைக்கு தண்டனையும் அனுபவிச்சு... என் வாழ்கையில ஏற்பட்ட நஷ்டம் மனஉளைச்சல் எல்லாத்துக்கும் சேர்த்துப் பெரிய அமௌன்டா செட்டில் பண்ண வேண்டியிருக்கும்...சொல்லிட்டேன்” என்று தீவிரமாக சொல்லி முடித்தாள்.

ராஜனின் அம்மாவிற்கு விழி பிதுங்கி வெளியே வந்துவிடும் போலிருந்தது. மூச்சிரைக்க அவளைப் பார்த்தவர் மீண்டும் கோபத்தோடு அடிக்கலாம் என்று கை ஓங்கிக் கொண்டு போக, “வேண்டாம் வள்ளி... அப்புறம் உன் மேலயும் இவ கேஸ் கொடுத்தாலும் கொடுத்திருவா?” என்று கருணாகரன் தன் மனைவியைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

ஆனால் வள்ளியால் தாங்க முடியவில்லை. எப்படியாவது தன் கோபத்தைக் காட்ட வேண்டுமே என்று வாசலில் நின்று மண்ணை வாரித் தூற்றி, “நீ நல்லாவே இருக்க மாட்ட... நாசமா போயிருவ... உன் குடும்பமே விளங்காம போயிரும்” என்று சபிக்க அந்த தெருவே அவரை வேடிக்கை பார்த்தது.

கருணாகரன் எப்படியோ வள்ளியை கட்டுப்படுத்தி அழைத்துக் கொண்டு சென்றுவிட ஜானவி எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவர் செய்கையைப் பார்த்துவிட்டு உள்ளே வர கிரிஜா மகளை அறைந்துவிட்டார்.

“பாவி! இப்படி நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டியே?” என்றதும் சங்கரன் வந்து நின்று, “கொஞ்சம் அமைதியா இரு கிரிஜா” என்றார்.

 “எப்படிங்க அமைதியா இருக்கிறது... அந்த அம்மா வேற வீட்டு வாசலில் நின்னு மண்ணை வாரி தூத்திட்டு போகுது... அதை பார்த்ததும் எனக்கு அப்படியே அடி வயிறெல்லாம் கலங்கிப் போச்சு தெரியுமா? இவ ஒருத்தியால இன்னும் நாம என்ன எல்லாம் அசிங்கப்படப்போறோமோ தெரியலயே” என்று அவர் தலையில் அடித்துக் கொள்ள, “அம்மா... என்னம்மா நீங்க?” என்று ஜமுனா பதறிக் கொண்டு தன் அம்மாவின் கரத்தைப் பிடித்துத் தடுத்தாள்.

ஜானவி கல்லாக நின்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க ஜமுனா உடனே, “உனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம் இல்ல க்கா... யாரை பத்தியும் கவலை பட மாட்டியா நீ... ச்சே!”  என்று தன் தமக்கையைப் பார்த்து முகம் சுளிக்க,

“அப்போ இப்பவும் தப்பெல்லாம் என் பேர்லதான்னு எல்லோரும் சொல்ல வரீங்களா?” என்று எல்லோரையும் தீர்க்கமாகப் பார்த்துக் கேட்டாள் ஜானவி.

“உன்னை யாருடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரைக்கும்  இந்த பிரச்சனையைக் கொண்டு போக சொன்னது... கல்யாணம் ஆகாம உனக்கு ஒரு தங்கச்சி வீட்டுல இருக்கான்னு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா” என்று கிரிஜா ஜானவியைப் பார்த்து உக்கிரமாக கேட்க,

“ஜமுனாவோட கல்யாணதுக்கும்  இதுக்கும் என்ன சம்பந்தம்னு எனக்குப் புரியல” என்று கேட்டு தன் அம்மாவை ஆழ்ந்து பார்த்தாள்.

“உனக்குப் புரியாதுடி... உனக்குப் புரியவே புரியாது... உனக்கு நீ மட்டும்தான்டி முக்கியம்... அப்பவே ஜோதி சொன்னா... என் புத்திக்குதான் உரைக்கல... உன்னை எந்நேரத்தில பெத்து தொலைச்சனோ... இவ வாழ்கையை கெடுத்துகிட்டதில்லாம... எல்லோரோட வாழ்க்கையும் நிம்மதியையும் கெடுக்க பார்க்கிறா... சனியன்” என்று கிரிஜா புலம்பிக் கொண்டே தரையில் அமர்ந்து அழத் தொடங்கினார்.

 சங்கரன் மனைவியை சமதானம் செய்ய முயன்று கொண்டிருந்தார். ஜமுனாவும் தன் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு, “ஆழாதீங்க ம்மா... உங்க உடம்புக்கு எதாச்சும் வந்திர போகுது” என்று சொல்லிக் கொண்டிருக்க, ஜானவி மௌனமாக இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்காக பேசவோ அல்லது அவள் நிலையில் நின்று பார்க்கவோ அங்கே யாரும் இல்லையே என்று அவளுக்கு மனம் வெறுத்துப் போனது.

தன் அறைக்குள் சென்று மௌனமாக கதவைத் தாளிட்டு கொண்டாள். நல்ல வேளையாக இந்த சண்டைகளை எல்லாம் பார்க்காமல் மீனா உறங்கிக் கொண்டிருந்தாள்.  மகளின் நிர்மலமான முகத்தைப் பார்த்து அவள் மனம் லேசாக நிம்மதி அடைந்தது. ஆனால் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.

கல்லூரியில் இருந்து வந்த ஜெகன் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு அவனும் தன் பங்குக்கு ஜானவியைக் காயப்படுத்த, யாரிடமும் தன்னிலை விளக்கம் கொடுக்க ஜானவி விரும்பவில்லை. மௌனமாகவே இருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தது. ஜானவியும் வீட்டில் யாரிடமும் பேசவில்லை. வீட்டில் உள்ள யாரும் அவளிடமும் பேசவில்லை. ஜானவி வீட்டில் சாப்பிட கூட இல்லை. ஏதோ பெயருக்கென்று  அவள் அங்கு இருந்தாள்.

அதேநேரம் ராஜன் தான் செய்த தவறுக்கு ஸ்டேஷனில் ஜானவியிடம் மன்னிப்பு கேட்டு, அவள் விதித்த நிபந்தனைக்கு எல்லாம் சம்மதித்திருந்தான். அவனுக்கு அப்போதைக்கு அதைத் தவிர வேறு வழியும் இல்லை.

இந்தப் பிரச்சனைகளுக்கு இடையில் ஜானவி ஒரு வாரமாக மகளை பள்ளிக்கு அனுப்பவும் இல்லை. அவளும் அலுவலகத்திற்குப் போகாமல் வீட்டில் இருந்தபடியே தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டாள். அதேநேரம் அவள் வெளியே போவதும் வருவதுமாக இருந்தாள். யாருமே அவளிடத்தில் என்ன ஏதென்று ஒரு வார்த்தை  கூட விசாரிக்கவில்லை.

ஆனால் அவளின் செய்கைக்கும் அழுத்தத்திற்கும் பின்னணியில் ஒரு காரணம் இருந்தது என்று பின்னரே அவர்கள் எல்லோருக்கும் தெரிய வந்தது.

“நான் பக்கத்துக்கு தெருவில தனியா வீடு பார்த்திருக்கேன்...  இனிமே நானும் மீனாவும் அங்கேயே போயிடலாம்னு இருக்கோம்” என்று எல்லோரிடமும் தகவலாக உரைத்தவள் முன்பாகவே தன்னுடைய பெட்டி மற்றப் பொருட்களை எல்லாம் தயார் செய்து வைத்திருந்தாள். எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போக,

கிரிஜாதான் ஒருவாறு அதிர்ச்சியிலிருந்து மீண்டு, “என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல... இன்னைக்கு காலமே கெட்டு போயிருக்கு... எப்படிறி நீயும் மீனாவும் தனியா இருக்க முடியும்” என்று கேட்க,

“தனியா இருக்கணும்னு முடிவாயிட்டா... இருந்துதானே ஆகணும்” என்று அலட்சியமாக ஜானவி பதில் சொல்ல சங்கரன் மகளிடம், “வேண்டாம் ஜானு... வீம்புக்காக எதாச்சும் பண்ணாதே... தனியா ஆம்பள துணை இல்லாம இந்த காலத்துல இருக்க முடியாது... அதுவும் பொம்பள புள்ளைய வைச்சிக்கிட்டு” என்றார்.

“உங்க அட்வைஸுக்கும் அக்கறைக்கும் தேங்க்ஸ்... ஆனா என் முடிவில எந்த மாற்றமும் இல்ல” என்றவள் பிடிவாதமாக சொல்ல கிரிஜா பேத்தியை இழுத்து அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார்.

ஜானவிக்கும் அந்தக் காட்சியைப் பார்க்க மனம் வலித்தாலும் அவள் முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை.

“அக்கா ப்ளீஸ் க்கா... போகாதே” என்று ஜமுனா கண்ணீரோடு சொல்ல, “நான் இங்கே இருந்தா உனக்கு கல்யாணம் நடக்காது ஜமுனா” என்று விரக்தியான புன்னகையோடு தங்கையைப் பார்த்து உரைத்தாள். இந்த பதிலில் ஜமுனா முகம் இருளடர்ந்து போனது.

ஜெகனும் கூட அவளிடம் பேசிப் பார்த்தான். ஆனால் அவள் யாருக்காகவும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

“நான் எங்கயும் தூரமா எல்லாம் போயிடல... பக்கத்தில்தான் ஒரு அப்பார்ட்மெண்ட்ல குடி போக போறேன்... எப்ப உங்களுக்கு வேணும்னாலும் வந்து பாருங்க” என்று அவள் சொல்ல, “நானும் உன் கூட வரேன் க்கா” என்றான் ஜெகன்.

“எனக்கு யார் துணையும் வேண்டாம்... எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்” என்று முகத்திலறைந்தது போல் பதில் சொல்லிவிட்டு, “வா மீனு” என்று தன் மகளை அழைத்தார்.

“நான் வரமாட்டேன்... அம்மம்மா கூடத்தான் இருப்பேன்” என்று மீனா கிரிஜாவின் காலை கட்டிக் கொண்டு அடம்பிடித்து அழ ஜானவிக்கு மகளை சமதானம் செய்து அழைத்துப் போவதற்குள் பெரும்பாடானது.

ஆனால் எப்படியோ மகளைப் பேசி ஒருவாறு சம்மதிக்க வைத்துவிட்டாள்.

பின்னர் ஜானவி மகளைத் தன்னோடு ஸ்கூட்டியில்  ஏற்றிக் கொண்டு பெட்டிகள் மற்ற பொருட்களை எல்லாம் வாடகை காரில் முன்னே ஏற்றி அனுப்பினாள். யாருக்குமே அவர்களை அனுப்ப மனமில்லை. அதேநேரம் அவர்கள் யாராலும் ஜானவியின் பிடிவாதத்தை உடைக்கவும் முடியவில்லை.

 ஜானவியின் ஸ்கூட்டி அந்த ஏழு மாடி குடியிருப்பின் வாயிலுக்குள் நுழைந்தது. “இவ்வளவு பெரிய வீடா?” என்று மீனா வாயை பிளக்க,

“இவ்வளவு பெரிசு எல்லாம் இல்ல... இதுல ஒரு போர்ஷனலதான் நாம இருக்க போறோம்” என்று சொல்லிவிட்டு, கார் ஓட்டுனரிடம் பொருட்களை எல்லாம் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டு எண்ணைக் குறிப்பிட்டு எடுத்து மேலே வர சொன்னாள்.

அவள் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே நுழைந்ததும் மீனாவிற்கு அதுவரை இருந்த வருத்தமெல்லாம் காணாமல் போனது. குடியிருப்பின் முன்னே இருந்த பெரிய பரப்பளவில் குழந்தைகள் விளையாடவென்று அமைத்திருந்த ஊஞ்சல் சறுக்கு மரம் யாவற்றையும் பார்த்து அவள் குதுகலமாகி, “ம்மா... ம்மா... நான் போய் விளையாடிட்டு வரட்டுமா?” என்று கேட்க,

“முதல்ல வீட்டுக்குப் போவோம்... அப்புறமா வந்து விளையாடலாம்" என்று மகளை அழைத்துக் கொண்டு அவள் மேலே சென்று இரண்டாவது மாடியிலிருந்த அந்த வீட்டின் கதவைத் திறந்தாள். வெறிச்சோடி இருந்த அந்த வீட்டைப் பார்த்ததும் மீனாவின் முகம் சுருங்கிப் போனது.

“அம்மம்மா வீட்டில இருக்குற மாதிரி இங்க டிவி சோபா பெட் எதுவுமே இல்ல” என்றவள் வருத்தப்பட, “எல்லாம் நம்ம வாங்கிக்கலாம் மீனு” என்று சொல்லிக் கொண்டே அறைகளை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக திறந்தாள்.

வீடு பெரியதாக இருந்தது. மீனா வீடு முழுக்க சுற்றிப் பார்த்துவிட்டு, “இங்கே நம்ம மட்டும்தான் இருக்கப் போறோமா?” என்று கேட்க,

“ஆமா” என்று அவள் கேள்விக்குப் பதலளித்துக் கொண்டே கார் ஓட்டுனர் எடுத்து வந்து வைத்தப் பொருட்களை எல்லாம் ஒன்றொன்றாக உள்ளே எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகள் கழிந்த போது அந்த வீடே நிசப்தமான நிலையில் இருப்பதை உணர்ந்த ஜானவி தேடலாய் பார்த்து, “மீனு” என்று அழைக்க, பதிலில்லை.

மீண்டும் ஜானவி, “மீனா” என்று அழைத்துக் கொண்டே வீடு முழுக்கவும் தேடிப் பார்த்தாள். அவளைக் காணவே இல்லை. மனம் பதட்டம் கொள்ள ஒரு வேளை கீழே விளையாட போயிருப்பாளோ என்று அவசர அவசரமாக தரைதளத்திற்கு சென்றாள்.

அங்கேயும் மகளைக் காணவில்லை. ஜானவிக்குப் படபடப்பானது. அங்கே எதிர்ப்பட்ட எல்லோரிடமும் மீனாவின் அடையாளத்தை சொல்லி அவள் விசாரிக்க, யாருக்குமே மீனாவைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.

அந்தக் குடியிருப்பு காவலாளியிடம் சென்று விசாரிக்க அவனுக்குமே மீனாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவளுக்குப் பதட்டம் ஏறிக்கொண்டே இருந்தது. அந்த ஏழு மாடி குடியிருப்புகளில் மேலும் கீழுமாய் இறங்கிப் பார்த்தவளுக்கு வீம்புக்கென்று தனியா போகாதே என்று அவள் அம்மாவும் அப்பாவும் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஒரு நொடி தவறு செய்து விட்டோமோ என்று ஜானவியின் மனமெல்லாம் கடந்து அடித்துக் கொள்ள, அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தலையெல்லாம் சுற்ற தேகம் முழுக்க நடுங்க ஆரம்பித்தது. மீனா எங்கே போயிருப்பாள் என்று தேடிக் கொண்டே மீண்டும் தன் வீடு இருக்கும் இரண்டாவது  மாடிக்கே வந்தாள்.

“என்னங்க ஒரு நிமிஷம்” என்ற ஓர் ஆண் குரலின் அழைப்பு அவள் காதில் ஒலிக்க சோர்ந்த நிலையில் திரும்பிப் பார்த்தாள். அன்புச்செழியன் நின்று கொண்டிருக்க அவள் சிரத்தையே இல்லாமல் அவனை என்னவென்பது போல் பார்த்தாள்.

அப்போதும் கூட அவனை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவன் பார்வை அவள் மனநிலையையும் தவிப்பையும் அவள் நின்ற கோலத்தைப் பார்த்தே உணர்ந்து கொண்டது. அவள் சுடிதார் மொத்தமாக வியர்வையில் நனைந்திருந்தது. எதுவும் பேசக் கூட முடியாமல் மகளை தொலைத்த அவஸ்தையில் நின்றவளைப் பார்த்ததவன் சற்று தயக்கத்தோடு, “சாரிங்க... பாப்பா எங்க வீட்டுலதான் இருக்கா? அத சொல்லத்தான் நான் உங்களைத் தேடி” என்று அவன் சொன்ன முதல் வாக்கியம் மட்டுமே அவள் செவிகளில் விழுந்தது.

“எங்கே?” என்றவள் அவசரமாகக் கேட்க, “உள்ளே” என்று அவன் வீட்டிற்குள் கைகாண்பிக்க யார் வீடு என்று எதுவும் யோசிக்காமல் வேகமாக வீட்டிற்குள் நுழைய மீனா உள்ளே அன்புச்செல்வியோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.

மகளைப் பார்த்த பின்தான் அவளுக்கு மூச்சே வந்தது.

‘கடவுளே’ என்று மனம் ஆசுவாசப்பட்ட அதேநேரம் ஜானவிக்குக் கோபம் தாறுமாறாய் ஏறியது.

“ஏ மீனா!” என்று விளையாட்டில் மும்முரமாக இருந்த மகளை அழைக்க, மீனா அப்போதே தன் அம்மா அங்கே நிற்பதைக் கவனித்து, “ம்மா” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

“அறிவில்லடி உனக்கு... எங்கெல்லாம் உன்னைத் தேடுறது” என்று உச்சபட்ச கடுப்பில் இருந்த ஜானவி அங்கே யார் நிற்கிறார்கள் என்னவென்றெல்லாம் யோசிக்காமல் மகள் மீது அடிக்க கை ஒங்கினாள்.

ஆனால் அன்புச்செழியன் ஜானவியின் கரத்தைப் பின்னிருந்து பிடித்துத் தடுத்துவிட்டிருந்தான்.

Rathi, Muthu pandi and 2 other users have reacted to this post.
RathiMuthu pandirachel.kumarshiyamala.sothy
Quote

Nice

You cannot copy content