You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 11

Quote

11

எப்போதும் நொடி நேரத்தில் பதில் அனுப்புபவளின் அமைதி வெங்கட்டிற்கு என்னவோ போல இருந்தது.

பத்திரமாக வீட்டிற்குச் சென்று இருப்பாளா? என்று அவனுக்கு கவலையாக இருந்தது. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அவள் கைப்பேசிக்கு மீண்டும் அழைத்து பார்க்க வேண்டுமென்று அவன் எண்ணியிருக்க, சரியாக அந்த சமயத்தில் பாவனா வந்து நின்றாள்.

“ஹாய் அண்ணா” அவள் அறைவாசலில் வந்து நிற்க,

“வா பாவனா” என்று புன்னகை முகமாக அழைத்தவன், “ஸ்கூல் எப்படி போயிட்டு இருக்கு… நீட்டுக்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கியா?” என்று கேட்கவும்,

“அட நீங்க வேற… போங்க அண்ணா… நான் பாட்டுக்கு காமர்ஸ் அக்கௌண்ட்ஸ்னு எடுத்து நிம்மதியா இருந்திருப்பேன்… பயாலஜி க்ரூப் சேர்த்துவிட்டு சாகடிக்கிறாங்க… இதுல நீட்டுக்கு வேற படிக்கணுமா… முடியல” என்று நொடித்து கொண்டாள்.

“ப்ச்… முதல நீ அப்படி யோசிக்காதே பாவனா… நீ கஷ்டம்னு நினைச்சாதான் அது கஷ்டமா இருக்கும்?”

“ஈஸின்னு நினைச்சா ஈஸியா இருக்குமா… மனசாட்சியே இல்லாம இப்படி பொய்யெல்லாம் சொல்லக் கூடாது… கெமிஸ்ட்ரில ஒரே ஃபார்மூலாவா இருக்குன்னா பிஸிக்ஸ் புக்கை திறந்தா ஒரே எக்ஸ்பிரிமென்டா இருக்கு… சரின்னு பயாலாஜிக்கு வந்தா பொட்டானிக்கல் நேம்… சைன்டிஃபிக் நேம்னு ஒரே பூவுக்கு ஹைபிஸ்கஸ் ஹிப்போபொட்டமஸ்னு வாயில நுழையாத பேரா வைச்சு சாகடிக்கிறானுங்க… பேரும் நுழையல… ஸ்பெல்லிங் சுத்தமா என் மூளைக்குள்ள நுழையல… 

இதெல்லாம் படிச்சாலே எனக்கு பிபி சுகர்னு எல்லாம் வந்திரும் போலவே… அப்புறம் நான் எங்கே டாக்டராக… பேஷன்டா வேணா ஆகலாம்” என்றவள் அழுதமேனிக்கு தன் சோகக் கதையைச் சொல்லி முடிக்க அவன் சிரித்தமேனிக்கு,

“இதெல்லாம் நீ என்கிட்ட சொல்லக் கூடாது… உங்க அம்மாகிட்டயும் பெரிம்மாகிட்டயும் சொல்லணும்” என்றான்.

“சேகர் செத்துருவான்… அத்தோட எனக்கு ஊ… ஊ… தான்” என்றவள் சொன்ன தொனியில் வெங்கட் விழுந்து விழுந்து சிரிக்க,

“டாக்டர்தான் இந்த உலகத்துலயே ஆகச் சிறந்த படிப்புன்னு அந்த டார்ச்சர் சிஸ்டர்ஸ் நம்பிட்டு இருக்காங்க… நீங்கதான் எப்படியாவது அவங்களுக்குப்  புரிய வைக்கணும் அண்ணா” என்றவள் கெஞ்சல் தொனியில் முடிக்க,

“சரி… உன்னோட அம்பிஷன் என்னன்னு சொல்லு… நான் அவங்களுக்குப் புரிய வைக்கிறேன்” என்றவன் சிரிப்பதை நிறுத்திவிட்டு அவளிடம் தீவிரமாக வினவினான்.

“இப்போதைக்கு டாக்டராகாம இருக்கிறதுதான் என்னோட ஒரே அம்பிஷன்”

“சத்தியமா உனக்காக நான் பேச மாட்டேன்”

“அண்ணா அண்ணா ப்ளீஸ் அண்ணா… வேணா ஒரு பெரிய கிரைம் நாவல் ரைட்டர் ஆகிறதுதான் என் அம்பிஷன்னு வைச்சுக்கலாம்”

“சும்மா பேச்சுக்கு எல்லாம் சொல்லக் கூடாது”

“நீங்க வேற… நான் எழுதி இருக்கேன் அண்ணா… ஒரு இன்டிரஸ்டிங்கான பேய் கதை ஒன்னு என் டைரில எழுதிட்டு இருக்கேன்”

“பேய் கதையா?” என்றவளை மேலும் கீழுமாகப் பார்த்தவன், “சரி… அந்தக் கதையைச் சொல்லு கேட்போம்” என்றான்.

அவள் உடனே தொண்டையெல்லாம் கனைத்துக் கொண்டு கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

“ஒரு அழகான வீடு… அந்த வீட்டுல செல்லமா வளர்ற என்னை மாதிரி ஒரு அழகானப் பொண்ணு”

வெங்கட் முறைக்கவும், “சரி ஓகே… என்னை மாதிரி ரொம்ப அழகா இல்லாம… கொஞ்சம் சுமாரா அழகா இருக்க பொண்ணுன்னு வைச்சுப்போம்” என்றதும் அவன் தலையிலடித்துக் கொள்ள, 

“இனிமேதான் சுவாரசியமே… கதையைக் கேளுங்க அண்ணா” என்றவள் மறுபடியும் சுமாரான அழகு இருக்கும் அந்தப் பெண்ணிலிருந்து தொடர்ந்தாள்.

“ப்ச் பாவம்… அவ குடும்பமே ஒரு பெரிய ஃபைர் ஆக்ஸிடென்ட்ல இறந்து போயிடுறாங்க… ஆனா அவளோட ஆத்மா மட்டும் அமைதியடையாம அந்த வீட்டையே சுத்தி வந்திட்டு இருக்கு”

“ஏய் நிறுத்து நிறுத்து… என்ன மாயா கதையைச் சொல்லிட்டு இருக்க”

“எல்லா கதைக்கும் ஒரு உண்மை கதைதான் அண்ணா இன்ஸ்பிரேஷன்… நான் மாயா கதையை வைச்சு இந்தக் கதையை எழுதப் போறேன்”

“அம்மா தாயே… நீ முதல இங்கிருந்து கிளம்பு” என்றவன் கையெடுத்துக் கும்பிட,

“மீதி கதையையும் கேளுங்க” என்றவள் சொல்ல,

“வேண்டவே வேண்டாம்… நீ டாக்டராகி பேஷன்ட்ஸ்ஸ சாகடிப்பியோ இல்ல ரைட்டராகி ரீடர்ஸ கொல்லுவியோ… என்னை விட்டுடு” என்று அவன் அவளிடம் கெஞ்சவும், “ரைட்டு விடுங்க… நான் வந்த விஷயத்தைப் பத்தியாச்சும் பேசுறேன்” என்றாள்.

“வந்த விஷயமா? திரும்பியும் ஏதாவது வில்லங்கமா ஆரம்பிக்க போறியா”

“நோ நோ… நான் வந்ததே உங்ககிட்ட அண்ணி பத்தி கேட்கத்தான்” என்றாள்.

“அண்ணியா?”

“ம்ம்ம்… ஃபோட்டோ பார்த்தேனே… செமையா இருக்காங்க” என்றவள் மேலும்,

“அவங்களும் நீங்களும் ஸ்கூல்மெட்ஸாம்ல… அம்மா சொன்னாங்க… அப்படியா?” என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.

“ம்ம்ம் ஆமா” என்றவன் சொன்ன நொடி, “நான் அண்ணி கிட்ட பேசணும்… உங்ககிட்ட நம்பர் இருக்கா?” என்று அவள் ஆர்வமாகக் கேட்க, சில நொடிகள் யோசித்தவன்,

“நம்பர் இருக்கு… ஆனா என்கிட்ட நம்பர் இருக்குன்னு அம்மாவுக்குத் தெரியாது… நீயும் சொல்லிடாதே” என்றான்.

“பெரிம்மாவுக்குத் தெரியா… ம… லா?!… அதுவும் நீங்க சொல்றீங்களா?” என்றவள் அதிர்ச்சி ரியாக்ஷன் கொடுத்து வாயில் கை வைத்து மூடிக் கொள்ள,

“ஏய் வாலு… இப்போ எதுக்கு ஓவர் ரியாக்ட் பண்ற… அம்மாகிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்ல… சொன்னா நம்பர் எப்படி கிடைச்சதுன்னு கேள்வி வரும்… அதான்” என்றவன் விளக்கம் தர,

“நம்பர் எப்படி கிடைச்சது?” என்று கேட்டபடி அவள் அவனைக் கூர்மையாகப் பார்க்க அவள் தலையில் தட்டியவன்,

“உனக்கு அது தேவையில்லாத விஷயம்… உனக்கு ஸ்ரீ கிட்ட பேசணுமா வேண்டாமா?” என்று கேட்டான். 

“ஆமா ஆமா… அண்ணிக்கிட்ட பேசணும்” என்றவள் வேக வேகமாகத் தலையசைத்தாள்.

‘ஏற்கனவே ஃபோனை போட்ட போது எடுக்கல… இப்ப எடுப்பாளோ என்னவோ’ என்ற சந்தேகத்துடன்தான் அழைத்தான்.

முழுவதுமாக ரிங் அடித்து ஓய்ந்த போதும் அவள் எடுக்கவில்லை. இப்படியே சில முறைகள் அழைத்தான். ஆனால் அவள் எடுக்கவில்லை. ஏமாற்றத்துடன் பாவனாவைப் பார்த்தவன், “எடுக்கல பாவனா… நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா உன்கிட்ட பேச வைக்கிறேன்” என்றான்.

“என்ன அண்ணா இப்படியாயிடுச்சு… நான் ரொம்ப ஆசையா வந்தேன்” என்றவள் வருத்தத்துடனே புறப்பட்டுச் சென்றாள். 

வெங்கட்டிற்கு இருப்புக் கொள்ளவில்லை. ஏன் அழைப்பை ஏற்க மாட்டேன் என்கிறாள். அவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாக அவன் நடந்து கொண்டிருக்கும்போது மாடியேறி வந்த மல்லி, “வெங்கட் இங்கேதான் இருக்கான்… இதோ ஃபோனைக் கொடுக்கிறேன்” என,

“யாரும்மா?” என்றவன் புரியாமல் கேட்க,

“திலகா பேசுறாங்க” என்றதும் அவனுக்கு ஸ்ரீ நினைவுதான் வந்தது.

உடனடியாகப் பேசியை வாங்கிக் கொண்டவன், “ஆன் சொல்லுங்க மிஸ்… எப்படி இருக்கீங்க?” என்றான்.

“என்ன வெங்கட்? இன்னும் மிஸ்னு கூப்பிட்டுட்டு இருக்க” என்றவர் கேட்கும்போதே மல்லி அருகிலிருந்து, “அத்தைன்னு கூப்பிடு வெங்கட்” என்று கூறினார்.

“சாரி அது… அப்படியே ஒரு ஃப்லோல வந்திருச்சு” என்றவன் அவரிடம், “எப்படி இருக்கீங்க அத்தை? வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க?” என்று நலம் விசாரித்தான்.

அவன் விசாரிப்பிற்கு பதில் சொன்னவர், “வெங்கட்… உனக்கு சூட் வாங்கி அளவெடுத்து தைக்கணும்… அக்சுவலி நீ வரணும்னு அவசியமில்லை… டிசைனரை அங்கே அனுப்புறேன்… நீ உனக்கு பிடிச்ச டிசைன் செலெக்ட் பண்ணி அளவு கொடுத்துடலாம்… நமக்கு டைம் இல்ல… இன்னும் கார்ட் வேற செலெக்ட் பண்ணனும்” என்றவர் பேசிக் கொண்டே போக, அவனுக்கு அவர் சொல்வதில் எல்லாம் பெரிதாக ஆர்வம் இல்லை.

ஸ்ரீயைப் பற்றிய சிந்தனையே மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

“சரிங்க அத்தை… ஓகே” என்றவன் அவர் சொல்வதற்கெல்லாம் இயல்பாகத் தலையசைத்துக் கேட்டுக் கொண்டான்.

இறுதியாக அவர் பேச்சை முடிக்கும் போது, “ஸ்ரீ இருக்காளா? நான் கொஞ்சம் அவகிட்ட பேச முடியுமா?” என்று கேட்டுவிட அருகிலிருந்து மல்லி,

“வெங்கட்… என்ன இது? திலகா ஏதாவது நினைச்சுக்கப் போறாங்க… அதுவுமில்லாம அவங்க பாட்டி வேதா ரொம்ப ஸ்ரிக்ட்டு… இதுக்கெல்லாம் அலோ பண்ண மாட்டாங்க” என்றார்.

மல்லி சொன்னதற்கு ஏற்ப திலகாவும் சில நொடிகள் அப்படியே அமைதியாக இருந்தார். ஆனால் அவனுக்கு அவனுடைய கவலை. அவள் நல்லபடியாக வீடு சென்று சேர்ந்திருப்பாளா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டுவிட்டான்.

வெங்கட் பதட்டத்துடன் திலகாவின் பதிலுக்காகக் காத்திருக்க, “அவ ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா…  நான் வேணா அப்புறம் அவ எழுந்ததும்” என்றவர் தயக்கமாக இழுக்க,

“ஓ ஓகே… நான் சும்மாதான் கேட்டேன்” என்றான் அவன். அவள் வீட்டிலிருக்கிறாள் என்ற தகவலே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

அதன் பின் மல்லியிடம் அவன் பேசியைக் கொடுக்க அவர் திலகாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தப் பின் மகனிடம் வந்தார்.

“உனக்கு ஸ்ரீ கிட்ட பேசுணுமா வெங்கட்?” என்றவர் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் திருதிருவென்று விழித்தான். ஏற்கனவே நேரில் பார்த்து பேசுமளவுக்கு தாங்கள் சென்றுவிட்டதை அம்மாவிடம் சொன்னால் அவர் எப்படி எடுத்து கொள்வார் என்பதை விட ஸ்ரீயை இதில் சிக்க வைத்துவிடுவோமோ என்ற எண்ணத்தில்தான் அவன் சொல்லாமல் மறைத்துவிட்டான்.

ஆனால் அம்மா கேட்கும்போது உண்மையைச் சொல்லாமல் இருப்பது அவனுக்குக் குற்றவுணர்வாக இருந்தது.

இது எதுவும் தெரியாத மல்லி வருத்தத்துடன், “நானே லக்ஷ்மியோட நம்பர் உனக்கு வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சேன்… ஆனா அவங்க பாட்டிக்குதான் இதெல்லாம் பிடிக்காதாம்” என்று சொல்ல,

“ம்மா… அதெல்லாம் ஒன்னும் இல்லமா… நீங்க வருத்தப்படாதீங்க” என்றான்.

இங்கே இவர்கள் இது குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கே வேதா விலாஸில்… வேதவல்லி தன் மகளிடம் காட்டமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“ஒய் டு யு என்கரேஜ் ஆல் திஸ் நான்சென்ஸ்… எங்க காலத்தில எல்லாம் ஃபோன் இருந்துச்சா என்ன? நாங்கெல்லாம் நல்லபடியா குடும்பம் நடத்தலயா” என்றார் அவர்.

“இல்ல… மாப்பிளை பேசணும்னு விருப்பப்படும்போது” என்று திலகா தயக்கத்துடன் உரைக்க,

“ஏற்கனவே இரண்டு தடவை பிக்ஸான எங்கேஜ்மென்ட்ல உன் பொண்ணு பண்ண குழப்பம் போதாதா… புரிஞ்சுக்கோ திலகா? டோன்ட் அலோவ் தெம் டூ டாக்… இட் வில் டெஃபனட்டிலி க்ரியேட் ப்ராப்ளம்ஸ்” என்றவர் அழுத்தமாக எச்சரித்துவிட்டுச் சென்றார்.

திலகாவிற்கும் அது தெரிந்திருந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகான அவர்கள் இருவரின் வாழ்க்கையில் அனைத்து உண்மைகளும் தெரிந்துதானே ஆக வேண்டும். அப்போது அவர்கள் உறவில் ஏதேனும் சிக்கல் நேர்ந்துவிட்டால் என்றுதான் திலகாவிற்கு கவலையாக இருந்தது.

எனினும் வெங்கட்டின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஒரு வேளை தன் பெண்ணின் இந்த மனநிலையை அவனால் சரி செய்யவும் முடியலாம்.

ஆனால் ஸ்ரீயை நம்ப முடியாது. எப்போது எப்படி மாறுவாள் என்று சொல்ல முடியாது. பெற்ற மகளையே அவரால் புரிந்து கொள்ள  முடியாததுதான் வேதனை என்றால் அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளுமே அமானுஷ்யமாக இருப்பது அவருக்கு அதீத கவலையைக் கொடுத்தது. 

ஆவி, ஆன்மா, மாந்த்ரீகம் என்று அவளுக்கு எப்படி இதன் மீதெல்லாம் ஆர்வம் பிறந்தது என்று இப்போது வரை திலகாவிற்குத் தெரியவில்லை. பள்ளியில் படிக்கும் வரை அவளை மாதிரியான அமைதியான அடக்கமான பெண்ணைப் பார்க்க முடியாது.

அதேநேரம் புத்திசாலித்தனத்திலும் அவளை அடித்துக் கொள்ள முடியாது. எதை படித்தாலும் அது குறித்த முழு தகவல்களையும் தேடி அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் அவளுக்கு நிகர் அவள்தான்.

அப்படி எதையோ தேட போய்தான் அவளுக்கு இந்த ஆத்மாக்கள் பேய்கள் மீதெல்லாம் ஆர்வம் உண்டானது. அதற்கு பிறகுதான் அவள் மொத்தமாக மாறிப் போனாள். அவளை நெருங்கவே பயப்படுமளவுக்கு நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.

இந்நிலையில் அவளிடம் மாற்றத்தைக் கொண்டு வரத்தான் மெல்போர்ன் யுனிவர்சிட்டியில் மாஸ்டர்ஸ் படிக்க அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவளோ தன் படிப்புடன் சேர்த்து இந்தப் பேய் ஆராய்ச்சியையும் சேர்த்தல்லவா செய்தாள்.

அந்த சமயத்தில்தான் மாயா என்ற புனைப்பெயரில் ‘தி டார்க் சீக்ரெட்ஸ் - ஆஃப்டர் டெத்’ என்றவள் பிளாகில் எழுதிய கட்டுரையை ஆங்கிலப் பதிப்பகம் கேட்டு வாங்கி புத்தகமாக வெளியிட்டது. அந்த புத்தகம் உலகளவில் நன்றாக விற்பனையானது.

ஆனால் வேதவல்லிக்கு இது தெரிய வந்த போது ஸ்ரீயை உண்டு இல்லை என்று செய்துவிட்டார். இனி இது போன்று எழுதவே கூடாது என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். 

மேலும் பெங்களூரில் மிகவும் பிரபலமான மனநல மருத்துவர் மூலமாக ஸ்ரீக்கு சிகிச்சை அளிக்க வைத்தார். ஆனால் அவளுக்குச் சிகிச்சை தந்த மருத்துவரே நாளடைவில் ஆத்மா ஆவிகள் என்று பேசத் தொடங்கிவிட்டார் என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

 கடைசி முயற்சியாக நம் முன்னோர்களின் நம்பிக்கையான திருமணம் செய்தால் திருந்திவிடுவாள் என்ற எண்ணத்துடன் அவளுக்கு மாப்பிளை பார்க்கத் தொடங்கிவிட்டார்.

மாமன் மகன்கள் எல்லாம் எங்கே அவளை தன் தலையில் கட்டி வைத்து விடுவார்களோ என்று அலறியடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். வேறு வழியின்றி அசலில்  மாப்பிள்ளை பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் இவள் சொல்லும் பேய் கதை ஆராய்ச்சிகளைக் கேட்டு காணாமல் போனவர்கள் பட்டியல்களில் சேர்ந்துவிட்டனர்.

என்னவோ இந்த முறைதான் எல்லாம் சரியாக நடக்கிறது.

அதுவும் கடந்த ஒரு வாரமாக அவளிடம் ஏதோ மாற்றம் தெரிகிறது. அதுவும் மல்லியைக் கோவிலில் பார்த்த பிறகு!

அன்று ஏதோ ஸ்ரீ நல்ல மனநிலையில் இருந்ததால் அவருடன் கோவிலுக்கு வந்திருந்தாள். வெங்கட்டின் திருமணத்தைப் பற்றிப் பேசி மல்லியே வந்துதான் வாயைக் கொடுத்துச் சிக்கினார்.

அன்று கூட ஆராய்ச்சியைப் பற்றியும் தான் எழுதிய புத்தகத்தைப் பற்றியும் ஸ்ரீ வாயைத் திறக்க, திலகா சமார்த்தியமாகப் பேச்சை மாற்றிவிட்டார்.

எப்படியோ? இந்தத் திருமணம் ஏற்பாடான நாளிலிருந்து ஸ்ரீயிடம் நல்லவிதமான  மாற்றங்கள் தெரிந்தது. அழகாக அலங்கரித்து கொள்கிறாள். சிரித்த முகமாக இருக்கிறாள். அவ்வப்போது அறையை விட்டு வெளியே வந்து எல்லோரிடமும் பேசுகிறாள்.

இன்று கூட ஏதோ அழகு நிலையத்திற்குப் போய்விட்டு வந்ததாக அவள் சொல்லும் போது திலகாவால் நம்பவே முடியவில்லை.

‘சாரு பியூட்டி பார்லர் போனாளா?’ என்றவர் ஆச்சரியம் கொண்ட போதும் இது இப்படியே நீடிக்க வேண்டுமென்று மனதில் இறைவனை வேண்டிக் கொண்டவர் எப்படியாவது இந்தத் திருமணத்தை நல்லபடியாக முடித்துவிட்டால் போதுமென்று நினைத்தார்.

ஆனால் ஸ்ரீயின் மனதில் என்ன இருந்தது என்று யாராலும் கணிக்க முடியவில்லை.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content