You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 14

Quote

14

வெங்கட் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். அவன் அம்மாவின் அரிதிலும் அரிதாக வரும் அழுகையும் அப்பாவின் அரிதிலும் அரிதாக வரும் கோபமும் அவன் நிம்மதியைக் குலைத்திருந்தன.

மனநல மருத்துவன் என்றாலும் அவனும் அன்பிற்கும் பாசத்திற்கும் அடங்கிப் போகும் சமான்யன்தானே!

அதுவும் அவன் தன் அம்மாவின் மீது கொஞ்சம் அதிகப்படியாகவே பாசம் வைத்திருக்கிறான். மல்லியும் கூட அப்படிதான்.

ஆனால் அந்த அன்பே தன் அம்மா அப்பாவின் மனத்தாங்கலுக்கு காரணமாகிவிட்டது என்ற கவலைதான் அவன் மனதைப் போட்டு அறுத்துக் கொண்டிருந்தது.

எப்போதும் படுத்ததும் உறங்கி விடுபவனுக்கு இன்று எவ்வளவு புரண்டு படுத்தும் உறக்கம் வரவில்லை.

கைப்பேசியை எடுத்து பார்த்தான். முதல் முறையாக ஸ்ரீயின் அழைப்பிற்காக அவன் மனம் ஏங்கியது. அவளிடம் பேசினால் மனம் கொஞ்சம் அமைதியடையும். ஆனால் அவள் அழைக்கவில்லையே!

‘தூக்கம் வர அன்னைக்கு எல்லாம் ஃபோன் செஞ்சு கழுத்தை அறுப்பா… இன்னைக்கு பண்ணாளா பாரு’ என்று தனக்கு தானே புலம்பினாலும் இந்த இரவு வேளையில் அவனாக அவளுக்கு அழைக்க விரும்பவில்லை.

ஒரு வேளை அவள் தூங்கியிருப்பாள். தான் தேவையில்லாமல் அவள் உறக்கத்தைக் கலைக்க வேண்டாமென்று எண்ணியவன் தன் புத்தக அலமாரியிலிருந்த உளவியல் சம்பந்தப்பட்ட புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்கிவிட்டான்.

படிக்கப் படிக்க அவன் உறங்குவதையே மறந்துவிட்டு புத்தகத்தில் மூழ்கிவிட்டான். அப்போது தூரத்தில் டைகர் குரைக்கும் சத்தம் கேட்டது. முதலில் ஒன்றும் இருக்காது என்று எண்ணியவன் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆனால் அந்தக் குறைப்பு சத்தம் தொடர்ந்து ஆக்ரோஷத்துடன் கேட்கவும் துணுக்குற்றான்.

அதே சமயத்தில் லலிதாவின் காதுகளுக்கும் டைகரின் குறைப்பு கேட்டது. அதுவும் அவர்கள் அறை டைகர் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் இருப்பதில் டைகரின் குறைப்பு மிக நெருக்கத்தில் கேட்கும். டைகரோ விடாமல் குரைக்க லலிதா, 

‘கபில் கபில்’ என்று கணவனை எழுப்பினாள். அவனோ கும்பகர்ணனனுக்கு அண்ணன் போல அசைய கூட மறுத்து உறங்க அவளுக்கு எரிச்சல் மிகுந்தது.

“டேய் கபில்… டேய்ய்ய்ய்” என்றவள் தோள்களை உலுக்க, அவன் எழுந்திருப்பது போல தெரியவில்லை.

“உன்னை” என்றவள் வேகமாக அவனை அந்தப் பக்கமாக உருட்டிவிட அவன் தரையில் சென்று விழுந்தான்.

“ஐயோ அம்மா பேய்” என்றவன் அலறியடித்து விழித்துப் பார்க்க,

“உன் மூஞ்சி” என்ற லலிதா, “வெளியே டைகர் சத்தம் போட்டுட்டு இருக்கான்” என்றாள்.

“அதுக்கு ஏன் டி என்னை பெட்ல இருந்து கீழே தள்ளிவிட்ட”

“ஹ்ம்ம்… அது குரைக்கிற சத்தத்தில் உங்கப் புள்ளைங்க இரண்டு பேரும் எழுந்துட்டாங்கன்னு வை… அப்புறம் அவ்வளவுதான்…

அம்மா பாலு கொடு… பிச்சு கொடுன்னு எழுந்து உட்கார்ந்து அராஜகம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க” என்றவள் உரைக்க, அப்போதே மனைவியின் பதட்டம் அவனுக்குப் புரிந்தது.

“ஆமான்டி… இரண்டும் எழுந்தா நமக்கு சிவராத்திரிதான்” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சகாதேவன் புரள, லல்லிக்கும் கபிலுக்கும் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

ஆனால் அவன் எழவில்லை. மூச்சை இழுத்து விட்ட லல்லி, “போடா… போய் ஒழுங்கா டைகரோட வாயை மூடிட்டு வா” என்று சொல்ல,

“சரி போறேன்” என்று சலிப்புடன் எழுந்து கொண்டவன்,

“பேச்சுலர் வாழ்க்கையை என்ஜாய் பண்ணாம இருபத்தி இரண்டு வயசுல கல்யாணம் பண்ணதுக்கு எனக்கு இதுவும் தேவை இதுக்கு மேலயும் தேவை”  என்றவன் புலம்பிக் கொண்டே சொல்ல, “ஆடி அசைஞ்சு போகாம சீக்கிரம் போடா” என்றாள் லல்லி.

“போறேன்டி” என்றபடி கதவைத் திறந்து வெளியே வந்தவன், “இது எல்லாத்துக்கும் இவன்தான் காரணம்… நீ மட்டும் நிம்மதியா தூங்குறியா” என்றவன் நேராக சென்று சர்வேஷின் அறைக் கதவைத் தட்டினான்.

“சர்வு சர்வு யாரோ நம் ரூம் கதவைத் தட்டுறாங்க” என்று அர்ச்சனா சர்வேஷை எழுப்ப,

“தட்டினா தட்டிட்டுப் போகட்டும் விடேன்” என்றவன் தூக்கத்தில் உளற,

“சீ சோம்பேறி கதவைத் திற” என்றாள் அவள்.

“நீ போய் திற” என்றவன் வாகாக போர்வையில் முகத்தை மூடிக் கொள்ள அருகிலிருந்த அவன் மடிக்கணினியைப் பார்த்தவள், “நீ இப்போ எழுந்துக்கபோறியா இல்ல லேப்டாப் எடுத்து உன் மண்டையைப் புளக்கவா?” என்றாள்.   

அவ்வளவுதான். அலறித் துடித்து எழுந்து கொண்டான்.

“லேப்டாப்பை ஒன்னும் பண்ணிடாதேடி… நானே போய் பார்க்கிறேன்” என்றவன் தள்ளாடியபடி எழுந்து கதவைத் திறக்க, கபில் நின்றிருந்தான்.

“இந்த ராத்திரி வேளைல எதுக்குடா என் ரூம் கதவைத் தட்டின”

“வெளியே டைகர் சத்தம் போட்டுட்டு இருக்கு… என்னனு பார்க்கலாம் வா” என, “நீ போய் பார்க்க வேண்டியதுதானே… அதுக்கு ஏன் டா என் தூக்கத்தைக் கெடுத்த” என்று வினவ,

“நீயில்லாம நான் ஏதாவது செஞ்சு இருக்கேனா? வா இரண்டு பேரும் ஒன்னா போய் என்னன்னு பார்ப்போம்” என்றான்.

“கட்டினவ ஒரு தொல்லைன்னா கூட பிறந்தவன் ஒரு தொல்லை” என்று சர்வேஷ் தலையிலடித்துக் கொள்ள,

“உன்னாலதான்டா எனக்கு எல்லா தொல்லையும்” என்று கபில் ஏட்டிக்குப் போட்டியாக உரைத்தான்.

“அப்படி என்னடா என்னால உனக்கு தொல்லை” என்று இருளில் வாக்குவாதம் செய்து கொண்டே இருவரும் நடக்க, கபில் வீட்டுச் சாவியை எடுத்து திறந்து கொண்டே,

“உன்னாலதான் நான் லல்லியைக் காதலிச்சேன்… நீ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணதாலதான் நானும் பண்ணேன்… இவ்வளவு சீக்கிரம் இரண்டு குழந்தைங்களுக்கு அப்பாவாகிட்டேன்… அந்த இரண்டுகளுக்காகதான்… இந்த நட்ட நடுராத்திரில நாயோட வாயை மூடப் போயிட்டு இருக்கேன்” என்றான்.

அவன் சொன்ன காரணங்களில் உச்சபட்சமாக எரிச்சலான சர்வேஷ், “எனக்கே தெரியாம அர்ச்சுவோட ஃபிரண்டு லல்லியை பிக்அப் பண்ணிட்டு… இப்போ என்னாலதான் கல்யாணம் பண்ணேன்… குழந்தைப் பெத்தன்னு கதையா சொல்லிட்டு இருக்க” என்று இருவரும் சண்டையிட்டு கொண்டே வாயிலுக்கு வந்த அதேசமயத்தில் மாடியிலிருந்து இறங்கிய வெங்கட்,

 “ஆமா நீங்க இரண்டு பேரும் இந்நேரத்துல ஏன் வெளியே நிற்குறீங்க” என்று விசாரித்தான்.   

“டைகர் கத்திட்டு இருக்கான் ண்ணா… அதான் என்னன்னு பார்க்கலாம்னு” என்று கபில் சொல்ல,

“அதுக்கு இரண்டு பேரா” என்று கேட்டவன்,   

“சரி சரி நான் போய் என்னன்னு பார்க்கிறேன்… நீங்க போய் படுங்க” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.

“நிம்மதி… அண்ணன் பார்க்க போயிட்டாரு… நாம போய் தூங்குவோம் வா” என்று இருவரும் ஒற்றுமையாக உள்ளே சென்றுவிட்டனர். 

டைகரின் குறைப்பு சத்தம் இன்னுமும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கொஞ்சம் உள்ளே போன குரலில்.

வெங்கட் டைகரைத் தேடித் தோட்டத்திற்குள் எட்டிப் பார்த்தான்.  கொய்யா மரம், மாமரம், முருங்கை மரம் என்று மரங்களால் அடர்ந்திருந்த இருளுக்குள் அவன் டார்ச்சை ஒளிர விட்டு, “டைகர்” என்று அழைத்த மறுகணம் உள்ளிருந்து பாய்ந்து வந்தது டைகர்.

அவனை நெருங்கியதும் அதன் குரைப்பு சத்தம் சற்றே வித்தியாசமாக மாற, “என்னாச்சு டைகர்?” என்று கேட்க, அது மீண்டும் அந்த மரங்களுக்கு இடையே ஓடியது.

அவனும் டார்ச்சை எடுத்து கொண்டு உள்ளே சென்றான்.

டைகர் மாமரத்தின் மீது ஏறுவது போல தாவி நிற்க, அவன் டார்ச்சை மேலே அடித்து பார்த்தான்.

அவன் இதயம் அப்படியே ஒரு நொடி நின்றுவிட்டது. பேய் பிசாசுகள் மீது நம்பிக்கை இல்லாதவன் கூட இருளில் மரத்தின் மீது கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் வெள்ளை உருவத்தைப் பார்த்தால் அரண்டுதான் போவான்.

வெங்கட்டிற்கு குப்பென்று வியர்த்துவிட்டது. கையிலிருந்த டார்ச் தவறி விழுந்து அணைந்துவிட்டது.

என்ன செய்வதென்று புரியாமல் அவன் திகைக்க, “வெங்கி… ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு” என்ற அபய குரல் கேட்டது.

“ஸ்ரீ” என்று சொல்லிக் கொண்டே அவன் மேலே பார்க்க,

“உங்க டாக் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து வெங்கி” என்றாள்.

தான் காண்பது நிஜமா அல்லது கனவா?

கீழே குனிந்து டார்ச்சை எடுத்து மேலே அடித்துப் பார்த்தான்.

ஸ்ரீயேதான். வெள்ளை நிற சட்டையும் கருப்பு நிற திரீ பை போர்த் பேண்ட்டும் அணிந்திருந்தாள்.

“மரத்து மேல நீ என்ன பண்ணிட்டு இருக்க ஸ்ரீ” என்றவன் கோபமாகக் கேட்க,

“ம்ம்ம்… மாங்காய் பறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கேன்… கேட்குற கேள்வியைப் பாரு… உன்னைப் பார்க்கதான் வந்தேன்… வந்து இது கிட்ட மாட்டிக்கிட்டேன்… என்னைக் காப்பாத்து வெங்கி” என்றவள் பதிலைக் கேட்டு தலையில் கை வைத்துக் கொண்டான்.

இதில் டைகர் வேறு ஸ்ரீயைப் பார்த்து குரைத்தது குரைத்தபடி இருக்க, “ஷட்அப் டைகர்” என்று மிரட்ட, அது அப்போதும் அவன் பேச்சைக் கேட்பதாக இல்லை.

அவன் டைகரை இழுத்து வந்து அதனிடத்தில் கட்டிப் போட அது ஒத்துழைக்க மறுத்தது.

“என்னாச்சுடா உனக்கு… கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்றவன் எவ்வளவு சொல்லியும் அது திமிறிக் கொண்டிருந்தது. அவன் சிரமப்பட்டுக் கட்டிப் போட்ட போதும் அது கத்துவதை நிறுத்துவதாக இல்லை.

“கொஞ்ச நேரம் அமைதியா இரு டைகர்… ப்ளீஸ்” என்றவன் அதனிடம் சொல்ல, நான் கேட்பேனா என்றுதான் கத்தியது.

தலையில் கை வைத்துக் கொண்டவன் ஸ்ரீயிடம் திரும்பி வந்து, “இறங்கி வா” என்றான் அதட்டலாக.

“உன் டாகை கட்டிப் போட்டுட்ட இல்ல” என்றவள் கேட்க,

“ஆமா வா” என்றவன் பல்லைக் கடித்து கொண்டு கூற அவளும் லாவகமாக மரத்தின் கிளைகள் மீது காலை வைத்து இறங்கி கீழே குதித்தாள்.

“அறிவிருக்கா உனக்கு” என்றவன் திட்டலாம் என்று ஆரம்பிக்கும் போதே,

“உனக்கு அறிவிருக்கா… உங்க வீட்டில இருக்கவங்க பத்தி எல்லாம் விலாவாரியா சொன்னியே… டாக் இருக்குன்னு சொன்னியா? சொல்லி இருந்தா நான் ஜாக்கிரதையா வந்திருப்பேன் இல்ல” என்றவள் சீற்றமாகப் பேச, அவன் வாயடைத்து நின்றான். ஏதோ அவன் தப்பு செய்தது போலிருந்தது அவள் பேச்சு தொனி.

அவள் நிறுத்தாமல், “பார்த்தியா… என் திரீ பை போர்த்தை ஒன் பை டூ ஆக்கிடுச்சு” என்றவள் கிழிந்த தன் கால் சட்டையைக் காட்ட அவன் சிரித்துவிட்டான்.

“என்ன நீ சிரிக்குற? நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்” என்றவள் பொறும,

“வேற என்னத்த நான் பண்ணித் தொலைக்க” என்றவன் தன் கோபத்தை மீட்டுக் கொண்டு, “ஆமா இப்போ எதுக்கு இந்த நட்ட நடுராத்திரில எங்க வீட்டு சுவரேறி குதிச்ச நீ” என்று கேட்க,

“உனக்காகதான் வெங்கி” என்றவள் கூலாகச் சொன்னாள்.

“எனக்காகவா?” என்றவன் கோபமாக முறைக்க,

“எஸ்” என்றவள் அவன் கையிலிருந்த டார்சை பிடுங்கிக் கொண்டு “ஒன் மினிட்… இதோ வந்திடுறேன்” என்றவள் செல்ல,

“என்ன பண்ணிட்டு இருக்க ஸ்ரீ நீ?” என்றவன் கடுப்பாக,

“எங்கே விட்டேன்… தெரியலயே” என்றவள் எதையோ தேட அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஆன் கிடைச்சிருச்சு” என்றவள் மீண்டும் அவனிடம் வந்து ஒரு பூங்கொத்தையும் க்ரீட்டிங் கார்டையும் நீட்டி,

“ஹாப்பி பர்த்டே வெங்கி” என்றாள் புன்னகையுடன்.

“பர்த்டேவா… ஓ… ஆமா” என்று தலையைக் கோதிக் கொண்டவன்,

“ப்ச்…. இதை நீ காலையில கொடுத்திருக்கலாம் இல்ல” என்று அவன் சலிப்பாகக் கேட்க,

“அதுல என்ன சுவாரிசியம் இருக்கு… இப்படி ரிஸ்க் எடுத்து வந்து கரக்கெட்டா பன்னண்டு மணிக்கு நான் உன் முன்னாடி வந்து விஷ் பண்ணா அதுதானே சுவாரசியமே” என்றவள் ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டது போல விளக்க,

“நீ நிறைய தமிழ் சினிமா பார்ப்ப போல” என்றவன் பெருமூச்சுடன், “எனிவே… தேங்க்ஸ்” என்றான்.

“இவ்வளவு ரிஸ்க் எடுத்து நைட்ல வந்து… சுவறேறி குதிச்சு உன் நாய் கிட்ட கடி வாங்கி வந்து உனக்கு விஷ் பண்ணி இருக்கேன்… நீ வெறும் தேங்க்ஸ்னு முடிக்கிற… திஸ் இஸ் நாட் ஃபேர்” என்றவள் ஏமாற்றமாக அவனைப் பார்க்க,

“நான் உன்னை இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க சொல்லவே இல்ல… சாரி… இதெல்லாம் பார்த்து நான் இம்ப்ரஸும் ஆகல… நீ ஃபோன்ல விஷ் பண்ணி இருந்தாலே நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்… ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்” என்று சொல்லியவன் அவள் முகம் வாடுவதை உணர்ந்த கணம்,

“ப்ச்… சரி விடு… போனது போகட்டும்… இனிமே இப்படி எல்லாம் பைத்தியகாரத்தனத்தைப் பண்ணாதே” என்று முடித்தான்.

அவள் மௌனமாக தலை குனிந்து நிற்க, “ஆமா நீ எதுல வந்த… எப்படி போவ” என்று கேட்க,

“எதுலயோ வந்தேன்… எப்படியோ போறேன்… உனக்கு என்ன?” என்றவள் வெடுக்கென பதில் சொல்ல,

“நீ தனியா போக வேண்டாம்… நான் உன்னைக் கூட்டிட்டுப் போய் விடுறேன்” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“டைகர் குவைட்” என்ற மல்லியின் குரல் கேட்டது.

திரும்பி பார்க்க இன்னும் கருமமே கண்ணாக டைகர் கத்திக் கொண்டிருந்ததில் மல்லி எழுந்து வந்துவிட்டிருந்தார். வெங்கட் பதறிப் போனான்.

ஸ்ரீயை இந்த நேரத்தில் அவர் பார்க்க நேரிட்டால் என்றவன் யோசித்து திரும்பும் போது ஸ்ரீ அங்கே இல்லை.

எங்கே போனாள் என்றவன் சுற்றும் முற்றும் தேட அவளைக் காணவில்லை.

மல்லியின் ஒரு குரலுக்கு அடங்கி விடுபவன் இன்னும் கத்திக் கொண்டிருக்க, வெங்கட் நட்ட நடு காட்டில் விட்டது போல குழம்பி நின்றிருந்தான்.

கையில் அவள் தந்து விட்ட போன பூங்கொத்தும் கார்டும் இருந்தது.

“யார் டைகரைக் கட்டிப் போட்டது” அவன் தந்தை நந்தாவின் குரலும் கேட்க ஒரு நொடி யோசித்த வெங்கட் அந்த கார்டையும் பூங்கொத்தையும் மறைவாக வைத்துவிட்டு அவர்கள் முன்னே சென்றான்.

“வெங்கட் நீ என்ன பண்ற?” என்று நந்தா கேட்க மல்லியும் வியப்பாக மகனை நிமிர்ந்து பார்க்க,

“டைகர் கத்திட்டு இருந்ததால என்ன ஏதுன்னு பார்க்க வந்தேன்” என்று சொல்ல,

“அப்போ நீதான் டைகரைக் கட்டிப் போட்டியா?” என்று கேட்க, அவன் ஆமோதிப்பாகத் தலையசைக்க,

“இந்த இராத்திரி நேரத்துல நீ எதுக்கு தனியா உள்ளே எல்லாம் போற” என்று மல்லி கடிந்து கொள்ள, “அதானே என்னை எழுப்பி இருக்க வேண்டியதுதானே” என்றார் நந்தாவும்.

அவனோ பதில் சொல்லும் நிலையில் இல்லை. இதற்கிடையில் டைகர் ஒருவாறு தன் குரைப்பை நிறுத்திவிட்டது.

“என்னாச்சு இவனுக்கு… ஏன் இப்படி கத்துனான்… இப்படி எல்லாம் கத்த மாட்டானே” என்று மல்லி அவனை மிருதுவாக வருடிக் கொடுத்து,

“என்னமோ சொல்ல நினைச்சு இருக்கான்… நமக்குதான் புரியல” என்றார்.

“ஒன்னும் பிரச்சனை இல்லையில்ல” என்று நந்தா மகனின் முகத்தை உற்றுப் பார்த்து கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்லபா” என்றான். ஸ்ரீ போயிருப்பாளா? இந்த இரவில் அவள் பத்திரமாக வீடு போய் சேர்ந்துவிடுவாளா என்றவன் மனம் பதட்டத்திலிருந்த காரணத்தால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

“காலையில ஹாஸ்பிட்டல் போகணும் இல்ல… போய் படு… நான் பார்த்துக்கிறேன்” என்று நந்தா சொல்ல,

“ஆமா வெங்கட்… நீ போ” என்றார் மல்லியும்.

ஸ்ரீ தந்த பூங்கொத்தும் கார்டும் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பார்த்து கொண்டே தன்னறைக்குச் சென்றுவிட்டான்.

‘காலையில முதல் வேலையா… அந்த கார்டையும் ரோஸசையும் எடுக்கணும்’ என்று எண்ணிக் கொண்டே படுக்கையில் சாய்ந்தவன் எப்போது உறங்கிப் போனான் என்றே அவனுக்குத் தெரியவில்லை.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content