You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 16

Quote

16

ஸ்ரீ தயக்கத்துடன் இறங்க, “வா ஸ்ரீ… உள்ளே போலாம்” என்றழைத்தான் வெங்கட். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் மற்றும் பள்ளி அது.

அவன் இப்படியொரு இடத்திற்கு அழைத்து வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கோவில், உணவகம், மால் இப்படி ஏதாவது ஓரிடத்திற்கு அழைத்து செல்வான் என்றே எண்ணினாள்.

அந்த காப்பகம் மற்றும் பள்ளியின் நிறுவனர் அவனை புன்னகையுடன் வரவேற்றார். அவன் அவருக்கு ஸ்ரீயை அறிமுகம் செய்து வைத்தான்.

வெங்கட் அந்த காப்பகத்திலிருந்த ஒரு சிறு வகுப்பிற்குள் அவளை அழைத்து சென்றான்.

அங்கிருந்தவர்கள் எல்லோருமே மனநலம் குன்றிய குழந்தைகளாக இருந்தனர். ஆனால் அவர்கள் வெங்கட்டை பார்த்து புன்னகைத்ததும் அவர்களின் மழலையில் அவனுக்கு வாழ்த்து தெரிவித்த விதத்தையும் பார்க்க பார்க்க, அவளுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

அவர்களும் அவனும் பேசி கொண்டதை பார்க்க ரொம்ப பழக்கமானவர்கள் பேசி கொள்வது போலத்தான் இருந்தது. அவன் வழமையாக இங்கே வந்து செல்கிறான் போலும். 

அந்த குழந்தைகளுடன் அவனிடம் காட்டிய அன்பும் அவன் அவர்களுடன் குழந்தை போல உரையாடிய விதமும் பார்த்து அவள் கண்கள் கலங்கிவிட்டன.

அங்கே நிற்க முடியாமல் அவள் வெளியே வந்து விட்டாள். சில நிமிடங்கள் கழித்து அவளை காணாமல் தேடி வந்த வெங்கட், “என்ன ஸ்ரீ இங்கே நிற்குற? உள்ளே வா” என்றான்.

“என்னால முடியல… நான் இங்கேயே நிற்குறேனே” என்று கண்கள் கலங்கி நின்றவளை ஆழமாக பார்த்தவன்,

“ரிஸ்க் எடுக்கிறது உனக்கு சுவாரசியமான விஷயம்னு சொன்ன இல்ல… அப்படி பார்த்தா இங்கே இருக்க ஒவ்வொரு குழந்தைகளுக்கு வாழுறதே ரிஸ்க்… தினம் தினம் போராட்டம்… அதுவும் இவங்களை மாதிரி குழந்தைகளை வளர்க்கிற பெற்றோர்களுக்கு வாழ்க்கையே போராட்டம்” என்றான்.

அவன் வார்த்தை அவளை ஆழமாக குத்த அவன் அமைதியான பார்வையுடன், “சாரி… உன்னை குத்தி காட்டணும்னு இப்படி சொல்லல ஸ்ரீ… அதேநேரம் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் ரிஸ்க் எடுத்து வாழ்க்கையை ரிஸ்க் ஆக்கிக்க வேண்டாம்… அப்படியே ரிஸ்க் எடுக்கணும்னா ஏதாவது உபயோகம் இருக்கிற விஷயத்துக்காக எடுக்கலாம் தப்பில்ல

எந்த குறையில்லாம கிடைச்சு இருக்க இந்த பிறப்பையும்… வரமா கிடைச்சு இருக்க இந்த வாழ்க்கையையும் வீண்டிச்சிற கூடாது ஸ்ரீ… 

லைப் இஸ் ஷார்ட்… எந்த நிமிஷம் என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது… கிடைச்சு இருக்க இந்த கொஞ்சம் காலகட்டத்துல நாமளும் சந்தோஷமா இருந்து மத்தவங்களையும் சந்தோஷமா வைச்சுக்கிட்டா அதுவே பெரிய விஷயம்” என்றான்.

அவன் சொன்னவை எல்லாம் அவள் மனதை ஆழமாக குத்தியது. அவள் விழிகள் கண்ணீரால் நிரம்பின.

அப்போது, “வெங்கட் சார்” என்று ஒரு பெண் வந்து நிற்கவும் ஸ்ரீ தன் கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“வாங்க ரத்னா… எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்” என்றவள் புன்னகையுடன், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்” என்றாள்.

“தேங்க்ஸ் ரத்னா” என்றவன் ஆவலுடன், “ஷாலு எங்கே காணோம்?” என்று தேட,

“கூட்டிட்டு வரேன் சார்” என்றவள் உள்ளே சென்று ஒரு சிறுபெண்ணை அழைத்து வந்தாள். நிறைவான புன்னகையுடன் வெங்கட் அருகில் வந்த அந்த குட்டி பெண், “ஹாப்பி பர்த் டே அங்கிள்” என்றாள்.

“தேங்க்ஸ் டா” என்றவன் அவளிடம் இறங்கி பேச தொடங்கிவிட அவளும் சளைக்காமல் அவன் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாள்.

 “முன்ன மாதிரி இல்ல சார்… இப்ப எல்லாம் நிறைய பேசுறா… எல்லாத்தையும் காட்டி இங்கிலீஷ் பேர் சொல்றா… ரைம்ஸ் எல்லாம் மனப்பாடமா பாடுறா சார்” என்று ரத்னா மகளின் செய்கைகளை பூரிப்புடன் விவரிக்க,

“ஐ நோ… ஷாலு இஸ் எ பிரில்லியண்ட் கேர்ள்… அவ சொல்லி கொடுத்தா எல்லாத்தையும் புரிஞ்சிப்பா” என்றவன் ஷாலுவை பார்த்து, “என்னடா ஷாலு குட்டி… அங்கிள் சொல்றது சரிதானே” என்று கேட்க,

“எஸ் எஸ்” என்றவள் தலையாட்டிய விதத்தில், “ஸோ க்யூட்” என்று  ஸ்ரீ அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்.

அதன் பிறகு வெங்கட் ஸ்ரீயை ரத்னாவுக்கு அறிமுகப்படுத்தினான்.

“உங்களுக்கு கல்யாணம்னு கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்… அம்மா எப்பவும் உங்க கல்யாணத்தை பத்திதான் பேசிட்டே இருப்பாங்க” என்று மனமகிழ்வுடன் பேசிய ரத்னா, “கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடியே வந்திருந்து நான் எல்லா வேலையும் எடுத்து போட்டு செய்வேன்” என்றாள்.

“அம்மா தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க… ஹெல்புக்கு வர முடியுமான்னு நானே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன் ரத்னா”

“இதெல்லாம் நீங்க என்கிட்ட கேட்கணுமா சார்” என்றவள், “கவலையே படாதீங்க… அம்மா கூட இருந்து எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றாள். வெங்கட்டிற்கு அவளின் வார்த்தைகள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அதற்கு பிறகு அவன் வாங்கி வந்த இனிப்புக்களை ஸ்ரீயும் ரத்னாவும் அவனுடன் சேர்த்து குழந்தைகளுக்கு விநியோகித்த பின், இருவரும் புறப்பட்டனர்.

காரில் ஏறியதிலிருந்து ஸ்ரீ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவளுடைய அமைதியின் காரணத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. எனினும் அவளின் அந்த அமைதி அவனுக்கு என்னவோ போல  இருந்தது. காரை ஒட்டி கொண்டே அவன் அவளை திரும்பி திரும்பி பார்க்க அதனை உணர்ந்தவளாக,

“என்ன வெங்கி… என்னை திரும்பி திரும்பி பார்க்கற… என்னை சைட் அடிக்கிறியா?” என்று அவள் கண்ணடித்து கேட்கவும் அவன் அதிர்ந்தான். பின் என்ன எண்ணினோ? அவன் சத்தமாக சிரித்துவிட,

“சிரிச்சு மழுப்பாதே… நீ சைட் அடிச்ச… நான் பார்த்தேன்” என்றாள்.

அவன் தன் சிரிப்பை நிறுத்தாமல், “மேடமுக்கு குஷி படத்துல வர ஜோதிகான்னு நினைப்போ” என்று கேட்டதும் அவள் கோபமாக முறைத்து, “அப்போ உனக்கு மட்டும் விஜய்னு நினைப்பா” என்றாள்.

“இல்லவே இல்லபா… நான் விஜய் மாதிரியும் இல்ல…  சைட் அடிக்க நீ ஒன்னும் ஜோதிகா மாதிரி சூப்பராவும் இல்ல” என்றவன் சொன்னதுதான் தாமதம்.

“என்ன சொன்ன? என்ன சொன்ன?” என்றவள் அவன் கைகளில் அடிக்க,

“சரி சரி அடிக்காதே … நீ ஜோதிகா அளவுக்கு சூப்பரா இல்லனாலும் ஜெனிலியா அளவுக்கு சுமாரா இருக்க” என்றவன் சமாளிக்க,

“போ வெங்கி” என்றவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

“ஏய் ஸ்ரீ… சும்மா விளையாடுனேன்… நீ சைலன்டா வர்றது எனக்கு என்னவோ போல இருந்துச்சு… அதான்… உன்னை சும்மா சீண்டி பார்த்தேன்” என்றதும் அவள் முகம் புன்னகையாக மாறியது.  

அவன் மேலும், “நீ மட்டும்தான் லவ் படமெல்லாம் பார்ப்பியோ… நாங்களும் பார்ப்போமே” என்று கூற, அவளும் சிரித்துவிட்டாள். அவனும் அவளுடன் இணைந்து கொண்டு சிரிக்க அந்த பயணம் இருவரின் மனதை லேசாக்கியது. அடுத்த சில விநாடிகளில் ஸ்ரீ இறங்கும் இடம் வந்தது.

“ப்ச்” என்றவள் வருத்தத்துடன், “எனக்கு வீட்டுக்கு போகவே மனசு வரல… உன் கூடவே வந்துடணும்னு போல இருக்கு வெங்கி” என்றாள்.

“அதுக்கு இன்னும் டைம் இருக்கு மேடம்”

“இல்ல என் டைம் முடிஞ்சு போச்சு” என்றவள் முகம் வேதனையுடன் மாற,

“என்ன சொல்ற நீ… டைம் முடிஞ்சு போச்சா” என்று கேட்டான்.

“இல்ல… வீட்டுல கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு… நான் சீக்கிரம் போகணும்னு சொன்னேன்” என்றவள் சொல்லிவிட்டு, “ஒகே பை” என்று இறங்க போக,

“என்ன… எனக்கு விஷ் பண்ணாமலே போற?” என்றான்.

“அதான் நடுராத்திரில வந்து உனக்கு விஷ் பண்ணிட்டு திட்டு வேற வாங்கிட்டு போனேனே”

“அது நைட்டு… இது பகலு” என்றவன் அசராமல் அவளை வம்பிழுக்க குழப்பமாக பார்த்தவள், “சரி ஒகே… ஹாப்பி பர்த் டே வெங்கி” என்றவள் தன் கரத்தை நீட்ட,

“இந்த கை இல்ல… அந்த கை” என்றான்.

“எல்லோரும் ரைட் ஹேன்ட்லதான் விஷ் பண்ணுவாங்க” என்றவள் கூற,

“நீதான் எல்லாத்தையும் ஏடாகுடமா பண்ணுவியே” என்றவன், “அந்த கையை நீட்டு” என்றான். அவனை திகைப்பாக பார்த்தவள் பின் தன் இடது கரத்தை நீட்டி,

“ஹாப்பி பர்த் டே” என, அவள் நீட்டிய கரத்தில் அவன் தன் கையிலிருந்த தங்க நிற கைகடிகாரத்தை கட்டிவிட்டான்.

“வாவ்” என்றவள் வியப்புடன் அவனை பார்க்க, அவன் தன் கரத்திலிருந்து கைக்கடிகாரத்தை அவள் கைக்கடிகாரத்துடன் சேர்த்து வைத்து காண்பிக்க,

“ஏய்… கப்பில்ஸ் வாட்ச்… சேம் டூ சேம்… செமையா இருக்கு” என்றாள்.

“ரிஸ்க் எடுத்து விஷ் பண்ணி இருக்கேன்… வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா கேட்ட இல்ல… அதான் இந்த ரிட்டர்ன் கிப்ட்… ஆனா இது நான் வாங்கல… அர்ச்சனாவும் லலிதாவுதான் கிப்டா கொடுத்தாங்க” என்றவன் சொல்ல அவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“நைஸ் கிப்ட்… ஆனா நான் எக்ஸ்பெட் பண்ணது இதை இல்ல” என்றாள்.

“அப்புறம்”

“டாக்டர் சாருக்கு இன்னும் எக்ஸ்பீரியன்ஸ் பத்தல” என்றவள் காரை விட்டு இறங்கி அவனை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றாள்.

அவள் இறங்கிய சில கணங்களில் அவள் செல்பேசியிலிருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதனை அவன் திறந்து பார்க்க அதில் ஒரு முத்த எமோஜியை அனுப்பி இருந்தாள். அதை பார்த்த மறுகணம்,

“அடிப்பாவி… இவளை” என்றவன் முகத்தில் அதிர்ச்சியுடன் சேர்ந்து வெட்க புன்னகையும் வந்து சேர்ந்தது.

இந்த சந்திப்பிற்கு பிறகு இருவருக்கும் சந்திக்கும் வாய்ப்பே அமையவேயில்லை. குறுந்தகவல்கள் அழைப்புகள் என்று நாட்களை ஓட்டினாலும் வெங்கட்டை பார்க்காமல் ஸ்ரீக்கு நாட்களே நகரவில்லை.

திருமணத்திற்கு முந்தைய ஐந்தாம் நாள் பந்தக்கால் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. வீடு முழுக்க உறவினர்கள் கூட்டம்.

“என்ன இப்படி அவசரம் அவசரமா கல்யாணம் பண்றீங்க?” என்று சொந்தக்காரர்கள் கேள்விக்கு எல்லாம் மல்லியால் பதில் சொல்லி மாளவில்லை. ஒரளவு வீட்டு வேலைகளை ரத்னா செய்து கொடுத்ததால் மல்லிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அர்ச்சனாவும் லலிதாவும் அவர்கள் பங்குக்கு உறவினர்களை கவனித்து கொள்வது என்று அனைத்து வேலைகளையும் செய்தனர்.  என்னதான் மருமகள்களை ஒதுக்கி வைத்தாலும் உறவினர்கள் முன்பாக அவ்வாறு நடந்து கொள்வது நாகரிகம் இல்லை என்பதால் மல்லி இயல்பாகவே இருந்தார்.

இத்தனை நாட்கள் கணவனிடம் வீம்பு பிடித்து கொண்டு பேசாமல் இருந்தாலும் இன்று அதெல்லாம் முடியாது. உறவினரிடம் பேசி கொண்டிருந்த நந்தாவை தனியாக அழைத்த மல்லி, “நாளைக்கு ஸ்போர்ட்ஸ் டே… நான் இன்னைக்கு கண்டிப்பா ஸ்கூல இருந்தாகணும்… ப்ளீஸ் இன்னைக்கு நாளைக்கு சமாளிச்சுக்கோங்க… கூட ரத்னா இருக்க அவ எல்லாம் பார்த்துப்பா” என்று உரைக்க,

“அதெல்லாம் யாரு தேவையில்ல… என் மருமகளுங்க இரண்டு பேர் போதும்… நாலு கல்யாணத்தை தனியாளா நடத்தி முடிப்பேன்” என்றான்.

“எது ரெஜிஸ்டர் ஆபிஸ்லதானே?” என்று மல்லி கடுப்புடன் கேட்க,

“உனக்கு என் மருமகளுங்க அருமை தெரியல… பாரு எப்படி பறந்து கட்டிட்டு வேலை செய்றாங்கன்னு” என்றவர் பெருமையுடன் சுட்டிகாட்டும் போதுதான் பரபரப்பாக வந்த அர்ச்சனா லலிதா மீது முட்ட வேண்டுமா? அவள் கையிலிருந்த தட்டிலிருந்த காபியெல்லாம் கொட்ட வேண்டுமா?

‘ம்ம்க்கும்… நான் பெருமையா சொல்லும் போதுதான் இப்படி ஏதாவது பண்ணி சொதப்பி வைப்பாளுங்க’ என்று எண்ணி கொண்டே அவர் மனைவியை பார்க்க அவர் முறைத்து கொண்டிருந்தார்.

“சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க… நீ பாட்டுக்கு இப்படி என்னை ரொமேன்டிக் லுக் விடுறது நல்லாவா இருக்கு” என்று நந்தா கலாய்த்து வைக்க, “ஐயோ கடவுளே… உங்ககிட்ட போய் பேச வந்தென் பார்… என்னை” என்று மல்லி கடுகடுக்க,

“செருப்பு வெளியே இருக்கு” என்றார்.

 “என்ன சொன்னீங்க?” என்று மல்லி முகம் உக்கிரமாக மாற, “இல்ல போட்டுட்டு ஸ்கூலுக்கு கிளம்புன்னு சொல்ல வந்தேன்” என்றவர் சமாளத்துவிட, மல்லி அவரை கடுப்புடன் பார்த்துவிட்டு ஒரு வழியாக புறப்பட்டு சென்றார்.

அதன்  பிறகு அவர் பரபரப்பாக பள்ளிக்கு கிளம்பிவிட்டார். அவர் வாழ்க்கையிலேயே மிக மோசமான நாளாக அந்த நாள் இருக்க போகிறது என்பதை அறியாமல்!   

vanitha16 has reacted to this post.
vanitha16
Quote

Super ma 

You cannot copy content