You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 8

Quote

8

இரு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அந்தப் பிரமாண்டமான வாசலில் நின்றது. வாயில் மட்டும் பிரமாண்டம் இல்லை. வாயிற்கதவும் கூட அப்படியொரு பிரமாண்டமாக உயர்ந்து நின்றிருந்தது. 

திரும்பி தன் அம்மாவைப் பார்த்த வெங்கட், “இந்த வீடுதானாம்மா?” என்று சந்தேகமாகக் கேட்க,

“இந்த அட்ரெஸ்தான் திலகா கொடுத்தாங்க” என்றவர் தன் பேசியில் வந்த விலாசத்தை சரி பார்த்தாள்.

அப்போது வாயிற்கதவருகிலிருந்த தங்க நிற பலகையை மகனிடம் காண்பித்தார் நந்தா.

அதனைத் திகைப்புடன் பார்த்த வெங்கட், “ம்மா வேதா விலாஸ்னு போட்டிருக்கு” என, மல்லிக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கிறுக்கிறுத்தது. திலகா ஏன் ‘வேதா விலாஸின்’ விலாசத்தைத் தர வேண்டும்.

அதற்குள் காவலாளி அந்தப் பெரிய கேட்டைத் திறந்து விட்டு, “உள்ளே போங்க சார்” என்று சல்யூட் அடிக்க, அவன் திரும்பி அம்மாவைப் பார்த்தான். மல்லி கண்ணசைக்கவும் அவன் கார் உள்ளே செல்ல, பின்னிருந்த காரிலிருந்த லலிதா அர்ச்சனா எல்லாம் வாயைப் பிளந்து கொண்டு, “இவ்வளவு பெரியா வீடா?” என்று கேட்டனர்.

“வீடு  இல்ல அர்ச்சு… பங்களா” என்று சர்வேஷ் மனைவியைத் திருத்தினான்.

கிட்டத்தட்ட வாயிற்கேட்டிலிருந்து அவர்கள் கார் உள்ளே செல்லவே ஐந்து நிமிடம் பிடித்தது. அந்த பங்களாவின் பிரமாண்டத்தைப் பார்த்தவர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

மல்லியின் உறவினர்களே அவர்கள் குடும்பத்தில் வசதி படைத்தவர்கள் என்று இவர்களைதான் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த பங்களாவின் பிரமாண்டத்தைப் பார்த்தால் இவர்களின் வசதியெல்லாம் ஒரு மடங்கு கூட இருக்காது போல!

வாசலில் வந்த நின்ற காரைப் பார்த்ததும் உள்ளிருந்த வந்த திலகா, “வாங்க வாங்க” என்று வரவேற்கவும்தான் மல்லிக்கு தான் சரியான இடத்திற்கு வந்திருக்கிறோம் என்பது புரிந்தது.

ஆனால் உள்ளுக்குள் ஒருவிதமான படபடப்பு!

எல்லோரின் விழிகளிலும் அது அப்பட்டமாகத் தெரியத்தான் செய்தது.

நந்தா மகனிடம், “உங்க அம்மா அந்தப் பொண்ணைப் பத்தி சொல்லும் போது கூட நான் இவ்வளவு பெரிய இடம்னு நினைக்கலடா” என்று ஆச்சரிய பார்வையுடன் கூற,

“எனக்கும் தெரியலப்பா… ஆனா வெளியே வேதா விலாஸ்னு போட்டிருக்கிறத பார்த்தா?” என்று அவன் சந்தேகமாக இழுக்கும் போதே ஆஜானுபாகுவாக இருவர் உள்ளிருந்து வந்து அவர்களை மரியாதையாக வரவேற்றார்கள்.

அவர்தான் வேதா கல்வி குழுமத்தின் நிர்வாகிகள். தணிகாச்சலம் மற்றும் அருணாச்சலம்.

பள்ளியில் நடக்கும் முக்கிய விழாக்களில் மல்லி அவர்களை பார்த்திருக்கிறார். அவ்வப்போது பள்ளி சம்பந்தமான விஷயங்களில் இருவரிடமும் கைப்பேசியில் உரையாடியும் இருக்கிறார். ஆனால் இன்று நேருக்கு நேர் அவர்களை வீட்டில் சந்திப்பது மல்லிக்கே கொஞ்சம் படபடப்பாக இருந்தது.

ஆனால் நந்தா சற்றும் அசராமல், “இந்த ஹல்க் பிரதர்ஸ்தான் உங்க ஸ்கூல் கரஸ்பான்டென்ட்ஸா மல்லி” என்று மனைவியின் காதில் கேட்டு வைக்க,

“ப்ச்… என்ன பேச்சு இதெல்லாம்” என்று அவர் கோபமாக முறைக்க, 

“சரி சரி… ரொமண்டிக்லுக் விடாதே” என்றவர் மனைவியை முந்திக் கொண்டு அவர்கள் இருவருக்கும் கைக் குலுக்கினார். ஒரு விரல் விடாமல் எல்லாவற்றிலும் மோதிரம் அணிந்திருந்ததைப் பார்த்த போது அவருக்கு சிரிப்புதான் வந்தது.

எல்லோரையும் வரவேற்று அந்த ஹல்க் பிரதர்ஸ் உள்ளே அழைத்து செல்ல, திலகாவிற்கும் இவர்களுக்கும் எப்படி உறவு என்று மல்லிக்கு ஒரே குழப்பம்.

அதேநேரம் நந்தா சோஃபாவில் அமர்ந்ததும் மல்லியின் காதைக் கடித்தார்.

“ஆள்தான் ஹல்கா இருக்காங்கன்னு பார்த்தா கழுத்துல கையில போட்டுருக்கிறதும் பல்காதான் இருக்கு… எல்லாம் நீங்க உங்க ஸ்கூலில பெத்தவங்க வயத்துல அடிச்சு பீஸா புடுங்குறதுதானே” என்று கேட்க, மல்லிக்கு பிபி தாறுமாறாக ஏறியது.

பல்லைக் கடித்துக் கொண்ட மல்லிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. முறைக்கவும் முடியவில்லை. வேறு வழியின்றி, “ப்ளீஸ்ங்க… கொஞ்ச நேரம் எதுவும் பேசாம இருங்களேன்” என்று தாழ்ந்து குரலில் கெஞ்சினார்.

 மல்லி இப்படி கெஞ்சுவதெல்லாம் உலக அதிசியங்களில் ஒன்று.

“இப்படி பவ்யமா சொன்னா கேட்கப் போறேன்” என்ற நந்தாவின் காது வரை  நீண்ட புன்னகையை எரிச்சலுடன் பார்த்த மல்லி, இயல்பாகப் பேசுவது போல பாவனை செய்தார்.

இதற்கிடையில் அர்ச்சனாவும் லலிதாவும் அந்த வீட்டின் பிரமாண்டத்தைப்  பார்த்து வியந்து கொண்டிருக்க, சர்வும் கபிலும் கூட ஆச்சரியத்துடன் கிசுகிசுத்து கொண்டிருந்தனர்.

“நம்ம கூட அம்மா பார்க்கிற பொண்ணையே கட்டியிருக்கலாமோ?” என்று தனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை சர்வு ஒட்டிப் பிறந்த தன் இரட்டையிடம் சொல்ல, “ஆமான்டா” என்று அவனும் ஜிங்சாங் அடிக்க, அருகில் அமர்ந்திருந்த அர்ச்சனா காதில் அவர்கள் சம்பாஷனை விழுந்துவிட்டது.

“இப்ப கூட என்ன… இரண்டு பேரும் எங்களை டிவோர்ஸ் பண்ணிட்டு அம்மா பார்க்கிற பொண்ணைக் கட்டிகிறதுதானே” என்று அர்ச்சனா கணவனை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே சொல்ல,

“ஏய்… நான் சும்மா ஜாலியா சொன்னேன்… நீ சீரியஸா எடுத்துக்கிட்டியா பேபி?” என்று அவன் சமாளித்தான்.

“சும்மாவா… நீ வீட்டுக்கு வா ம்மா” என்று அர்ச்சனா சிரித்து கொண்டே கணவனை எச்சரிக்க, சர்வேஷ் அதன் பின் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட மட்டுமே வாயைத் திறந்தான்.

மற்றொரு புறம் மல்லியிடம் திலகா தனக்கும் வேதா குழுமத்திற்கான உறவுமுறையை விளக்கலானார்.

வேதாச்சலம் தன் சொந்த அக்கா மகளான வேதவல்லியை மணம் முடித்தார். இருவரும் ஆசிரியர் பணிக்குப் படித்திருந்தனர். மதுரையில் அவர்கள் இணைந்து தொடங்கிய வேதா என்ற சிறிய பள்ளி தற்சமயம் சர்வதேச பள்ளிக்கூடமாக வளர்ந்து நிற்கிறது.

வேதாக்களின் மகன்களான தணிகாச்சலமும் அருணாச்சலமுமான ‘வேதா பிரதர்ஸ்’ தற்சமயம் பள்ளிகள் மற்றும் பொறியியில் கல்லூரி வரை அனைத்தையும் நிர்வகித்துக் கொள்கிறார்கள்.

வேதா பிரதர்ஸ் பற்றித் தெரிந்த அனைவருக்கும் அவர்களின் பாசமலர் திலகாவைப் பற்றித் தெரியாது. அவளும் தெரியப்படுத்திக் கொண்டதில்லை.

மல்லிக்குப் பெருத்த ஆச்சரியம்தான். அதெப்படி தெரியப்படுத்திக் கொள்ளாமல் நான்கு வருடங்கள் அதே பள்ளியில் ஒரு சாதாரண ஆசிரியர் போல பணி புரிந்தார்… அவரால் நம்பவே முடியவில்லை.

தணிகாவிற்கு இரு மகன்கள். அருணாச்சலத்திற்கு ஒரு மகன் ஒரு மகள் என்று எல்லோருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் குடும்பம் பெரியது. இவர்களுடன் சேர்த்து திலகாவின் கணவன் வசந்தும் வந்து நின்றார். என்னவோ அந்த குடும்பத்திற்கு தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல அவர் ஒதுங்கி நின்ற விதம் நந்தாவிற்கு ஏதோ சரியில்லை என்று உறுத்தியது.

மகளின் பெண் பார்க்கும் படலத்தில் ஒரு அப்பா, இப்படி சுவாரசியமே இல்லாமல் நின்றிருப்பது நந்தாவின் மனதை நெருடியது. அவர்கள் குடும்பத்தாரும் கூட பெரிதாக அவரைக் கண்டுகொள்ளவில்லை.

மல்லிக்கு இதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. அவள் தணிகா மற்றும் அருணாச்சலத்தின் குடும்ப அறிமுகத்தில் மும்முரமாக இருந்தார். ஆனால் நந்தாவிற்கு இந்த அறிமுக படலம் கடுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. 

“எல்லோரையும் காட்டுறாங்க… பொண்ணை மட்டும் காட்ட மாட்டுறாங்க” என்று அவர் மனைவியின் காதோடு புலம்ப,

“பொண்ணு பார்க்க வந்தது என் பையனுக்கு… அவனே அமைதியா இருக்கான்… உங்களுக்கு என்ன?” என்று மல்லி பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

“ஆனா வந்தது பொண்ணு பார்க்கிறதுக்குதானே” என்று அவர் விடாமல் மல்லியைச் சீண்டினார்.

அந்த சமயம் பார்த்து அர்ச்சனா பொங்கி பெருகிய ஆவலுடன் மாமனாரிடம் செய்கை பாஷையில் பெண் வருவதாகக் கூறினாள். மாடியிலிருந்து இறங்கி வருவதை ஆர்வத்துடன் அவர் நிமிர்ந்து பார்த்தார். எல்லோரும்தான்.

நந்தாவின் முகம் சுருங்கிப் போனது.

“ஃபோட்டோல பொண்ணு நல்லாத்தான் இருந்துச்சு… ஆனா நேர்ல பார்த்தா ரொம்ப வயசு ஜாஸ்தி மாதிரி தெரியுது” என்றவர் மகன் காதைக் கடிக்க,

 “ஐயோ அப்பா… வர்றது பொண்ணு இல்ல… அவங்க பாட்டி வேதவல்லி” என்றவன் கடுப்பாக,

“சாரிடா… ஆர்வ கோளாறுல”

“ஆர்வ கோளாறு இல்ல… உங்க கண்ணு கோளாறு… முதல கண்ணாடியை எடுத்து போடுங்க” என்று கடுகடுத்தான்.

“கண்ணாடி போட்டா வயசான மாதிரி தெரிவேனேடா”

விழிகளை சுருக்கி தந்தையைப் பார்த்தவன், “வயசான பாட்டி பொண்ணு மாதிரி தெரியறதுக்கு… நீங்க வயசாகித் தெரியிறது ஒன்னும் தப்பில்லை” என்றான்.

அவரும் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு பார்த்தார். வேதவல்லி இப்போது தெளிவாகத் தெரிந்தார். அவர் மருமகளைத் திரும்பி முறைக்க, “சாரி மாமா” என்று வாயசைத்தாள்.

வேதா குழுமத்தின் ஆணிவேரே வேதவல்லிதான்.

கணவன் இறந்த பிறகு அவர்களின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனத்தையும் அவர்தான் கட்டிக் காத்தார். இன்றும் அனைத்து முக்கிய முடிவுகளும் அவரைக் கேட்டுத்தான் செயல்படுத்தப்படும். இப்போதும் அந்த கம்பீரமும் கெத்தும் குறையவில்லை.

மூப்படைந்ததால் லேசாக அவர் உடல் தளர்ந்து காணப்பட்டது. அவ்வளவுதான்.

அவர் கீழே வந்த மறுகணம் மல்லியிடம்தான் வந்து நின்றார்.

“மல்லி… ஹவ் ஆர் யு… க்ளேட் டூ மீட் யு…  யு ஆர் டுயிங் கிரேட்” என்று அந்த பாட்டி ஒரே ஆங்கிலத்தில் அள்ளிவிட,

‘இந்த ஹல்க் ப்ரதர்ஸுக்கு இப்படி ஒரு ஆங்கிலோ இந்தியன் அம்மாவா?’ என்று மனதில் எண்ணிக் கொண்ட நந்தாவிற்கு  இந்த குடும்பத்தைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

‘பர்கரும் பிரியாணியும் மாதிரி ஒன்னுக்கு ஒன்னு கனெக்டே… ஆகலயே’ என்றவர் குழம்ப, அந்த பீட்டர் பாட்டியோ,

“பேசிட்டே இருந்தா எப்படி… கால் மை கிரேன்ட் டாட்டர் லக்ஷ்மி… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வெயிட் பண்றாங்க இல்ல” என்று சொன்ன பிறகுதான் பரபரப்பாகப் பெண்ணை அழைத்து வர திலகா மாடியறைக்கு ஓடினார்.

ஸ்ரீயின் அறையை நெருங்கும் வரை இருந்த திலகாவின் வேகமெல்லாம் மெது மெதுவாகக் குறைந்தது. கதவருகில் சென்றதும் அவருக்கு லேசாக நடுங்கத் தொடங்கிவிட்டது. அவ்வப்போது அவள் அறையிலிருந்து கேட்கும் அமானுஷ்ய சத்தங்கள் அவருக்கு கிலியை உண்டாக்கியிருந்தது.

இப்போதும் அப்படி ஏதாவது கேட்கிறதா என்றவர் தன் காதை வைத்து பார்த்துவிட்டு மெல்ல, “சாரு” என்று அழைத்தபடி கதவைத் தட்டவும், “உள்ளே வாங்க ம்மா கதவு திறந்துதான் இருக்கு” என்று பெண்ணவள் குரல் கொடுத்தாள்.

“நான் உள்ளே வரல… நீ வெளியே வா… எல்லோரும் வெயிட் பண்றாங்க” என்றதும் கதவு திறக்கப்பட்டது. ஸ்ரீலக்ஷ்மி புன்னகை முகமாக வந்து நின்றாள்.

மகளின் அலங்காரங்கள் ஆடை அணிகலன்களைப் பார்த்தவருக்கு பூரண திருப்தி.

‘இவ இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டவர் கொஞ்சம் நீண்ட நெடிய பெருமூச்சொன்றை வெளிவிட்டு,

 “கீழே எல்லோரும் வந்திருக்காங்க… வெயிட் பண்றாங்கமா… வா போகலாம்” என்றார். அவளும் அதே புன்னகையுடன் அவருடன் நடந்து வந்தாள்.

அவளாகவே மனது வந்து இந்தத் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாள். அவள் மனது மாறுவதற்குள் இந்தத் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்று அவசரமும் பதட்டமும் திலகாவைத் தொற்றிக் கொண்டது.

அவர் மாடிப் படிக்கெட்டை நெருங்கியதும் மகளிடம் மெல்லிய குரலில், “ப்ளீஸ்டி… எந்தக் கிறுக்குத்தனமும் பண்ணாதே… நீ பண்ற ரிசர்ச்… எழுதின புக்குனு… எதைப் பத்தியும் உளறி வைக்காதே… உனக்கு புண்ணியமா போகும்” என, அவளும் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு வந்தாள்.

‘எல்லாத்துக்கும் இவ தலையைத் தலையை ஆட்டுறா… என்ன வில்லங்கத்தைப் பண்ணி வைப்பான்னு தெரியலையே’ என்ற பதட்டத்துடன் மகளை அழைத்துக் கொண்டு கீழே வந்தார்.வேதவல்லி திலகாவைப் பார்த்து தலையசைக்க, அவரும் ஒன்றும் பிரச்சனையில்லை என்பது போல தலையசைத்தார்.

பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்தது.

ஸ்ரீலக்ஷ்மி அமைதி சொரூபமாகவும் அடக்கமாகவும் நின்றிருக்க, மல்லிக்கு ஒரே பெருமை. இந்த சில நிமிடங்களில் அவள் தலையை நிமிர்த்திக் கூட பார்க்கவில்லை.

மல்லி கர்வப்பார்வையுடன் கணவனைப் பார்த்து, “படிச்ச பொண்ணா இருந்தாலும் எப்படி அடக்க ஒடுக்கமா இருக்கா பாருங்க” என்று சொல்ல,

“அதானே… இவ்வளவு நல்லப் பொண்ணை ஏன் மாமன் பசங்க யாரும் கட்டிக்கல… இல்ல இவங்கக் கட்டி வைக்கல… ஏன் வெளியே இருந்து மாப்பிளை பார்க்கிறாங்க” என்று தன் ஆகப் பெரிய சந்தேகத்தை நந்தா கேட்டு வைக்க, மல்லி முறைத்து வைக்க இடையில் வேதவல்லி,

“எங்கப் பொண்ணை உங்களுக்குப் பிடிச்சுருக்குதானே” என்று கேட்டு வைத்தார்.

சட்டென்று நந்தா மகன் புறம் திரும்பி, “உடனே ஓகே சொல்லிடாதாடா” என்று எச்சிரிக்கை செய்து வாயை மூடுவதற்குள், “எங்களுக்குப் பிடிச்சிருக்கு…  சம்மதம்தான்” என்று மல்லி முந்திக் கொண்டு பதில் சொன்னார்.

‘அவசரக் குடுக்கை’ என்று நந்தா கடுப்பாக,

தணிகாச்சலமோ, “மாப்பிள்ளைக்குப் பிடிச்சிருக்குதானே” என்று வெங்கட்டிடம் நேரடியாகக் கேட்டார்.

அந்த நொடியே நந்தா மகன் கையை அழுந்த பற்றி தலையசைக்க அவனோ, “அம்மா சொன்ன பிறகு நீங்க என்னைக் கேட்கணும்னே அவசியமில்லை… அதுவுமில்லாம எனக்கு விருப்பமில்லாத எதையும் எங்கம்மா செய்யவே மாட்டாங்க” என்று பதில் கூறினான்.

‘இவன் அதுக்கு மேல’ நந்தாவின் மனம் இடையில் பொருமியதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

மகன் பதிலில் மல்லியின் முகம் பெருமையில் பிரகாசித்தது. ஆனால் வெங்கட் சம்மதித்து விட்டானே ஒழிய பெரிதாக வியக்கவும் இல்லை. குழம்பவும் இல்லை.

அம்மாவின் முடிவு எப்போதும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக உடையும் போது அவன் அதனை எப்படி எதிர்கொள்வான்.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content