You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 11

Quote

11

 

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலா பிரியனுடனான பழைய நினைவுகளை எல்லாம் மனதிற்குள் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று காதலாகவும் அன்பாகவும் தெரிந்தது எல்லாம், இன்று சுயநலமாகத் தெரிந்தது. அதுவும் அவர்கள் திருமணம் முடித்துத் தங்குவதற்கு அவன் பார்த்த வீட்டைப் பற்றி இன்று யோசித்தாலும் அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. அவன் எப்போதுமே அவள் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. தான்... தான் என்று தன்னை பற்றித்தான் யோசித்திருக்கிறான் என்று தோன்றியது. இதில் குழந்தை பிரச்சனை வேறு. 

‘இப்போ நம்ம இருக்க நிலைமைல குழந்தை வேண்டாம்’ என்று அவள் தெளிவாகத்தான் அவனிடம் தெரிவித்தாள். சரி சரி என்று தலையசைத்துக் கேட்டு கொண்டவன், குறைந்தபட்சம் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை.

அன்று இருவருமாக வேலை முடித்து ஒன்றாகத்தான் கிளம்பினார்கள். “பீச்சுக்கு போயிட்டு போலாமா?” என்று நிலா கேட்கவும் அவனும் சரியென்று அவளுடன் வந்தான். கடலில் கால் நனைப்பது நிலாவிற்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் பிரியனுக்கோ அமைதியாக மணலில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்ப்பதுதான் விருப்பம்.

“வா தேவ்... தண்ணில கொஞ்ச நேரம் கால வைச்சுட்டு இருக்கலாம்” என்று அவள் கேட்க, “நீ போ... நான் இங்க உட்கார்ந்துக்கிறேன்” என்று மணலில் சென்று அமர்ந்து கொண்டான்.

“ஒரே தடவ எனக்காக வரலாம் இல்ல” என்று அவள் கெஞ்சிக் கேட்டும் அவன் வராது போக, “போடா” என்று கோபித்துக் கொண்டு சென்றவள் குழந்தையைப் போல அலையில் நனைந்து குதித்து விழுந்து விளையாடினாள்.

அவள் விளையாடுவதை ஆசையாக ரசித்துப் பார்த்தவன் ஒரு நிலைக்கு மேல் நேரம் கடந்து கொண்டே போகவும், “நிலா போலாம்... டைம் ஆகுது... வாடி... எவ்வளவு நேரம் தண்ணில இருப்ப... உடம்புக்கு ஏதாவது வர போகுது” என்று கெஞ்சிக் கொஞ்சி இறுதியாக அவள் எதற்கும் மசியாமல் போக, அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தான்.

“ஏன் டா... இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்” அவளுக்குப் போகவே விருப்பமில்லை. அந்த ஆர்ப்பரிப்பான அலைகளில் விளையாடும் போது அத்தனை பிரச்சனைகளும் மறந்து சிறு குழந்தையாக மாறிவிட்ட உணர்வுதான் அவளுக்கு.

“டைமாச்சு நிலா... வீட்டுக்கு போக வேணாமா”

“முன்ன தான் அம்மா கேட்பாங்க... அப்பா திட்டுவாருனு நம்ம பயப்படணும்... இப்போ யார் நம்மள கேட்பா”

“அது சரிதான்... ஆனா இன்னும் கொஞ்ச நேரமாச்சுனா நமக்கு வீட்டுக்கு போக பஸ் கிடைக்காது” என, “ப்ச்” என்று சலித்துக் கொண்டவள் அதன் பிறகு ஒன்றும் பேசவில்லை. அவனது கையை இறுகக் கோர்த்துக் கொண்டு நடந்தாள்.

மாநகரத்தின் சாலைகளில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது. சாலையோரக் கடையில் இரவு உணவை முடித்துக் கொண்டு கிட்டத்தட்ட நடுநிசியில்தான் இருவருமாக வீடு வந்து சேர்ந்தனர்.

“என்ன... வெளி கேட் பூட்டி இருக்கு”

“பின்ன... நைட்டு பன்னன்டு மணிக்கு வந்தா கதவை திறந்து வைச்சு இருப்பாங்களாக்கும்... அதான் ஒனரம்மா பூட்டிட்டாங்க” என்றவன் சொல்லிக் கொண்டே நிலாவைத் திரும்பிப் பார்த்து முறைத்து, “அதுக்குதான் அப்பவே கிளம்பலாம்னு சொன்னேன்” என,

“இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற... இது என்ன பெரிய இந்த காம்பவுன்டா... வாடா” என்று சொல்லிக் கொண்டே சுவரின் மீது ஏறிவிட்டாள்.

“யாராவது பார்க்க போறாங்கடி” என்று அவன் பதற,

“அதெல்லாம் பார்க்கல நீ வா” என்று அவனுக்கும் கை கொடுக்க அவளுடன் சேர்ந்து அவனும் ஏறி குதித்தான். இருவரும் சத்தமில்லாமல் மாடியிலிருந்த தங்கள் குடியிருப்பில் வந்து புகுந்து கொள்ள நிலா நடந்ததை எல்லாம் நினைத்து சிரித்து சிரித்து ஓய்ந்தாள்.

 “இன்னைக்கு செம ஜாலியா இருந்துச்சு... அதுவும் இந்த மாதிரி நடுராத்திரில எல்லாம் நடந்து வந்ததே இல்ல... ஒரு மாதிரி எக்சைடிங்கா இருந்துச்சு... இல்ல தேவ்?” என்றபடி தன் பையைக் கழற்றி விட்டு தன் துப்பட்டாவையும் தூக்கி ஓரம் போட்டாள்.

கதவைப் பூட்டி விட்டு வந்த பிரியன் கிறக்கமாக வந்து அவளை தன் கரங்களுக்குள் பூட்டி கொள்ள, அவளுடைய சிரிப்பும் சந்தோஷமும் அடங்கிவிட்டது. இதுவரையில் இல்லாத அளவுக்கு அவனுடைய அணைப்பு அத்தனை இறுக்கமாக இருந்தது. அவளை ஏதோ செய்தது.

“தேவ்” என்று உதட்டைப் பிரித்துத் தவிப்புடன் அழைக்கும் போதே,   

“குழந்தை பொறக்காம இருக்க எல்லாம் நிறைய வழி இருக்கு நிலா... ப்ளீஸ் நிலா... ப்ளீஸ்ஸ்டி” என்று அவனது குரல் அவள் காது மடலில் கூசின. கன்னங்கள் அவள் கன்ன கதுப்பில் சூடேற்றின. அவள் மனதிலும் சலனம் எட்டிப் பார்த்தது.

அவன் அவளை அணைத்தபடியே பேசினான். “இந்த மஞ்சள் சுடிதார் உனக்கு ரொம்ப அழகா இருக்கு நிலா... அதுவும் நீ கடலில குளிச்சிட்டு இருக்கிறதை பார்த்த போது... சத்தியமா என்னால முடியலடி” என்ற அவன் இன்னும் தன் அணைப்பை இறுக்கிய போது அவளுக்கு மூச்சு முட்டியது. மறுபுறம் அவனது தொடுகை அவளின் உணர்வுகளைத் தூண்டியது.

 “தேவ்” என்று அவள் தவித்தாள். அந்த தவிப்பை எல்லாம் அவள் முகத்தில் சிந்திய அவனுடைய முத்தங்கள் விலகிப் போகச் செய்தன. அதன் பிறகு அவள் தடுக்கவில்லை. ஆனால் உறவாடி முடித்து உடல் களைத்த போதுதான் அவள் மனதைப் பயம் அப்பிக் கொண்டது.

இது போல இனி நடக்கவே விடக் கூடாது என்று நினைத்தாள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் நினைப்பிற்கு நேர்மாறாகத்தான் நடந்தது. பிரியன் அவளைக் காதலுடன் அணுகும் போதெல்லாம் அவள் பலவீனப்பட்டுப் போனாள்.  

இந்த நிலையில் முதல் மாதமே நாள் தவறிப் போனது. பயந்து போய் சோதனைக் கருவி வாங்கி சோதித்துப் பார்த்தாள். ஆனால் முடிவு அவள் பயந்தது போல வரவில்லை. உடனடியாக மருத்துவரைச் சென்று பார்த்த போது நீர்க்கட்டி என்றார்கள்.

திருமணம் முன்பு அவ்வப்போது நாள் தவறிப் போனாலும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மருத்துவர் மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். வேலை பரபரப்பில் அவ்வப்போது நினைவு வந்தால் மட்டும் போட்டுக் கொள்வாள்.

இந்த நிலையில் மீண்டும் அடுத்த மாதம் நாள் தவறிப் போனது. இம்முறை அதனை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவரைப் பார்க்கலாம் என்று நினைத்தாலே ஒழியத் தன் வேலைக்கு இடையில் அதற்கு என்று அவள் நேரம் ஒதுக்கவே இல்லை. மூன்று மாதத்தை அப்படியே கடத்தியும் விட்டாள். ஒரு நாள் வேலை முடிந்து கிளம்பும் போது தலையைச் சுற்றியது.

மதியத்தில் இருந்தே சாப்பிட்டது எல்லாம் குமட்டிக் கொண்டே இருந்தது. நேற்று முன்தினம் காபி குடித்ததும் புரட்டிக் கொண்டு வாந்தி எடுத்திருந்தாள். இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து யோசிக்க உள்ளுற பயம் எட்டிப் பார்த்தது. வீட்டிற்குப் போகும் வழியில் மருந்தகத்தில் சோதனைக் கருவியை வாங்கிக் கொண்டு வந்து சோதித்துப் பார்த்தவள் அதில் தெரிந்த இருகோடுகளைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.

தலை இன்னும் பலமாகச் சுற்றியது. தன் மீதே கோபமாக வந்தது. இவ்வளவு அலட்சியமாக இருந்து விட்டோமே!

மூன்று மாதமாக மாதவிடாய் வரவில்லை. மூன்றா நான்கா? எத்தனை மாதம் என்று பிடிபடவில்லை.

சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டாள். அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததை அப்போதுதான் கவனித்தாள். அவசர அவசரமாகப் பேருந்திலிருந்த கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு இறங்கி வந்து அந்தப் பரபரப்பான சாலையைக் கடந்து அலுவலகத்திற்குள் நடந்தாள்.

 உள்ளே நுழைந்ததும் அவளைப் பார்த்த சிலர் சிரித்து முகமாகக் கையசைத்தார்கள். சிலர் வரவேற்பாகப் புன்னகைத்தார்கள். அவளுக்கு அது புது அலுவலகமாக இருந்தாலும் யாரும் அவளுக்கு அறிமுகமாகாதவர்கள் எல்லாம் இல்லை.

ஜே சானலில் அவளுடன் வேலை பார்த்த ஊழியர்களும் இருந்தனர். இன்னும் சிலரை ஊடக சந்திப்புகள்  அல்லது விழாக்களில் எல்லாம் பார்த்துப் பேசி இருக்கிறாள். ஆதலால் அறிமுகமில்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை. புது அலுவலகம் என்ற எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் உள்ளே நுழைந்தாள்.

ஆனால் இந்தப் புன்னகை கையசைப்பின் பின்னணியில் அவரவர் மூளைக்குள் நேற்றைய ஷைனிங் ஸ்டார் நிகழ்வைப் பற்றிய சிந்தனை ஓடாமல் இருக்காது. இருப்பினும் தன் முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காட்டாமல் இயல்பாகப் பேசிவிட்டுக் கடந்தவள் உடனடியாக தினேஷை பார்க்கச் சென்றாள்.

அறையில் இருக்கிறாரா என்று விசாரித்துவிட்டு அவள் உள்ளே வரவும், மடிக்கணினியில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தவர் அவளைப் பார்த்ததுமே முகம் மலர்ந்தார். உள்ளே அழைத்து அமரச் சொன்னார்.

அவராகக் கேட்பதற்கு முன்பாக அவள் முந்திக் கொண்டு, “நான் ஜாயின் பண்றேன் சார்” என்று பதிலை கூற, “ஓ ரியலி குட் குட்” என்று உற்சாகமாக பேசியவர்,

“நீங்க ஹெச் ஆர் டீமை மீட் பண்ணிட்டு வந்திருங்க... நான் கால் பண்ணி சொல்லிடுறேன்... அப்புறம் நம்ம மத்த விஷயத்தை பத்தி எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவோம்” என்றார்.

“ஓகே சார்” என்றவள் எழுந்து கொள்ள, “சார்... எல்லாம் வேண்டாம் நிலா... கால் மீ தினேஷ்” என, “ஓகே தினேஷ்” என்று விட்டு வெளியேறினாள். வேலை சம்பந்தமான சில பேச்சு வார்த்தைகள் செயல்பாடுகள் என்பதாக அன்றைய நாள் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தது. அலுவலகப் பணியில் இருந்தவர்கள் புறப்பட்டு விட அவளும் கிளம்ப எத்தனிக்கும் போது தினேஷ் அவளை அறைக்கு அழைத்தார்.

அவள் நடத்தப் போகிற நிகழ்ச்சியைப் பற்றிய உரையாடலைத் துவங்கினார். இதில் அவளுக்கு என்னென்ன மாதிரியான புது யோசனைகள் இருக்கின்றன என்பன போன்ற  கருத்துக்களைக் கேட்க அவளும் ஆர்வமாகப் பதில் கூறினாள்.

அந்த உரையாடல் சட்டென்று ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சி பக்கமாகத் திசை மாறியது. ஆரம்பத்தில் அவள் அந்த நிகழ்ச்சிக்காகச் செய்த வேலைகளை எல்லாம் விவரித்தாள்.

அப்போது தினேஷ், “பிரியன் அந்த ஷோல கண்டஸ்டன்டா போகலனா நீங்கதான் அந்த ஷோவை நடத்தி இருப்பீங்க இல்ல நிலா” என்று கேட்டார். அந்தக் கேள்வி அவளைப் பலமாகக் குத்தியது. இருப்பினும் தன் உணர்வுகளைக் காட்டி விடாமல் வெகு ஜாக்கிரதையாக , 

“இல்ல... அதுக்கு முன்னாடியே நான் வெளியே வந்துட்டேன்” என்று கூற,

“அந்த ஷோல பிரியன் கலந்துகிறதுல உங்களுக்கு விருப்பமா?” என்று தினேஷ் தம் கேள்விகளைத்  தொடர்ந்தார். ஒரு நொடி என்ன பதில் சொல்வதென்று அவள் திகைத்து நின்று விட,

அவள் முகமாற்றங்களைக் கவனித்தவர், “சாரி நான் சாதராணமாதான் கேட்டேன்... உங்களை ஹார்ட் பண்ணனும்னு எல்லாம்?” என்று தயக்கமாக இழுக்க,

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... எனக்கு அவர் அந்த ஷோல கலந்துக்கிறது விருப்பம் இல்லதான்... ஆனா அது அவரோட டெசிஷன்... அவருக்கு அந்த பப்ளிசிட்டி தேவையா இருக்கு” என்றாள் இயல்பாக.

“அது அவருடைய தனிப்பட்ட முடிவா இருந்தாலும் இது இப்போ உங்களையும் சேர்த்து இல்ல பாதிக்குது” என்று தினேஷ் கூற அவள் முகம் சுருங்கியது. இந்தப் பேச்சை வளர்க்க அவளுக்கு விருப்பமில்லாவிடினும் எப்படித் தவிர்த்து விட்டுப் போவது என்று தெரியாமல் அவதியுற்றாள்.

“நேத்து என் மனைவி அந்த ஷோவை பார்த்துட்டு ரொம்ப கோபமா பேசிட்டு இருந்தா தெரியுமா... ஆக்சுவலி அவ உங்க ஹஸ்பென்டோட பயங்கரமானா பேன்” என்ற அவர் மேலும் பிரியனைப் பற்றிப் பேசப் பேச அவளுக்குத் தாங்கவில்லை.

ஒரு பக்கம் அவர் முன்னிலையில் அழுது விடுவோமோ என்று வேறு பயமாக இருந்தது. அவர் விட்டால் போதுமென்று அவள் நினைத்திருக்க, “ஓகே நிலா... நாளைக்கு ஷோ பத்தி கொஞ்சம் டீடைலா டிஸ்கஸ் பண்ணலாம்” என்று அவர் சொன்னதுதான் தாமதம்.

“தேங்க்யூ தினேஷ்” என்றவள் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியே வந்து விட்டாள். அந்தக் கணமே அவளுக்கு அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கண்ணீராகப்  பெருகிவிட்டது. அவசரமாக அந்தத் தளத்தின் இடது மூலையிலிருந்த ஒப்பனை அறைக்குள் வந்து புகுந்து கொண்டாள்.

அவளுடைய நல்ல நேரம். அங்கே யாரும் இல்லை. அப்படியே அங்கிருந்து கண்ணாடி முன்பு நின்றபடி அழ துவங்கிவிட்டாள்.

சில நிமிட அழுகைக்குப் பிறகு தன்னை ஒரு மாதிரி சமன்படுத்திக் கொண்டு வெளியே வந்த போது ஆண்கள் அறையிலிருந்த வெளிவந்து கொண்டிருந்தார் தினேஷ். அவரை மீண்டும் அவள் அங்கே எதிர்பார்க்கவில்லை.

அவள் முகத்திலிருந்த அழுத தடங்களைக் கவனித்த தினேஷ், “எனி பிராபளம் நிலா” என்று விசாரித்தார்.

‘திரும்பியுமா’ என்று பயந்தவள், “அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்” என்று அங்கிருந்து நழுவி விட்டாள்.  அதன் பின் அவள் கிளம்பி விரைவாகப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள். பேருந்துக்காகக் காத்துக் கொண்டே அவள் தன் கைப்பேசியைத் திறக்க அதில் நிறையக் குறுந்தகவல்கள் வந்து குவிந்திருந்தன.

அதில் சிலவற்றை மட்டும் திறந்து பார்த்தாள். அவளுடன் வேலை பார்த்த தோழன் ஒருவன் யூ ட்யூப் காணொலியின் சுட்டி ஒன்றைப் பகிர்ந்து, “ஸீ திஸ் நான்-சென்ஸ்” என்று தட்டச்சு செய்திருந்தான். உடனடியாகக் காதில் ஹெட்செட்டை அணிந்து கொண்டு அதனைத் திறந்தாள்.

எவனோ ஒரு யூ ட்யூபர் பிரியனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறேன் பேர்வழி என்று அவளுடைய பெயர் ஊர் என்று அவளைப் பற்றிய தகவல்களையும் சேர்த்து உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்.

அதைச் சொன்னதோடாவது விட்டானா? குழந்தைகளுடன் இருந்த அவர்கள் குடும்ப புகைப்படம் ஒன்றை வேறு காட்சிப்படுத்த, அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. முகத்தை மறைத்தது போலத் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

ஊடகங்கள் வழியாக நவீன முறையில் புறணி பேசுகிற இங்கிதமற்ற இந்தக் கூட்டம் நடிகர்களின் படுக்கையறைகளைக் கூட விட்டு வைப்பதில்லை. பிணங்களை வைத்துக் கூட பணம் பார்ப்பவர்கள், கேவலமான வியாபாரத்திற்காக இல்லாத பிரச்சனையைக் கூட இருப்பது போலக் கதை கட்டிவிடுவார்கள். ஆனால் நிலாவிற்கு அவர்கள் மீதெல்லாம் கோபம் வரவில்லை. கணவன் மீதுதான் வந்தது. டன் டன்னாக வந்தது.

எல்லாவற்றிற்கும் மேல் இதெல்லாம் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. போகப் போக நிகழ்ச்சியில் பிரியன் என்னவெல்லாம் பேசி, அது எப்படி எல்லாம் போக போகிறதோ என்று நினைத்தாலே, அவளுக்கு பதறியது.

இப்படிக்கு இலக்கியநாசினி - அத்தியாயம் 7 

shanbagavalli, Rathi and chitti.jayaraman have reacted to this post.
shanbagavalliRathichitti.jayaraman
Quote

Pavam nila ivan innum enna enna pesa porano 

Quote

Super ma 

You cannot copy content