You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 12

Quote

12

மூன்றாவது வாரத் துவக்கம். அந்தப் பங்களாவின் விசாலமான முகப்பறையின் சோபாவில் போட்டியாளர்கள் அனைவரும் சுற்றி அமர்ந்தனர். ‘புதையல் எடுத்தல்’ டாஸ்க்கின் விதிமுறைகளை அனிதா விவரித்து முடித்தாள்.

போட்டியாளர்கள் இரு குழுவாகப் பிரிந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் பத்து நபர்கள். எஸ் எஸ் என்ற சின்னம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் காசுகள் கொண்ட பானைகள் போட்டிக்கான பிரத்தியேக அறையின் மேற்சுவரில் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த அறைக்குள் வருவதற்கான சாவி கிடைத்தால்தான் உள்ளே வந்து பானையை உடைக்க முடியும். அதேநேரம் அடித்து உடைக்கும் பானையும் புதையல் இருக்கும் பானையாக இருந்தால்தான் அவர்களுக்குப் புதையலும் கிட்டும்.

அந்த அசரீரி குரல் போட்டியின் துவக்கத்தை அறிவித்தது.  

வீட்டில் எங்கு வேண்டுமென்றாலும் அந்தச் சாவி இருக்கலாம். யார் அந்தச் சாவியை கண்டுபிடிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த அறையைத் திறக்கும் வாய்ப்பு கிடைக்கும். முதல் சுற்றில் சாவி கிடைத்தது பிரியனுக்குத்தான்.

குழுவிலிருந்து மூவர் மட்டுமே அறைக்குள் சென்று அந்தப் பானைகளை உடைத்து பொற்காசுகளை எடுக்க முடியும். அதுவும் அவர்களுக்குச் சரியாக 90 நொடிகள் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் அதிலும் பிரச்சனை இருந்தது. மூன்று தவறான பானைகளை உடைத்துவிட்டால் உடனடியாக அறை முழுக்கச் சிவப்பு விளக்கு எரியும். உடனடியாக போட்டியாளர்கள் அவ்வறையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பது விதிமுறை.

மூவரில் ஒருவர் பானையை உடைப்பது. மற்ற இருவரும் பொற்காசுகளை அள்ளுவது என்று முடிவு செய்தனர். பிரியன் உள்ளே சென்றதும் பானையை உடைக்கும் கொம்பை எடுத்துக் கொண்டான். எப்போதும் எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம்.

மேற்சுவர் முழுக்க பானைகள் தொங்கிக் கொண்டிருந்தன. நேரம் குறைவாக இருந்ததால் பிரியன் யோசிக்கவே இல்லை. உடனடியாகப் பானைகளை அடித்து உடைத்தான். அவன் அடித்து உடைத்த முதல் இரண்டு பானைகளுமே காலியாக இருந்தது.

பிரியனின் முகம் சுருங்கிப் போனது. இன்னும் ஒரே ஒரு வாய்ப்புதான். அடுத்து உடைக்கும் பானையில் பொற்காசுகள் இல்லை என்றால் வெறுங்கையுடன்தான் வெளியேற வேண்டும். பதற்றமான ஜித்தேஷ் பிரியனிடம் பானையை உடைக்க தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கேட்டான். ஆனால் யாருக்கும் எதையும் விட்டுக் கொடுத்து பிரியனுக்கு வழக்கமே இல்லையே.

அடுத்த பானையையும் அவனே உடைக்க, அவர்களின் துரதிர்ஷ்டம். அதிலும் பொற்காசுகள் இல்லை. அடுத்த நொடியே சிவப்பு நிற விளக்குடன் எச்சரிக்கை ஒலி கேட்டது. அவர்கள் வாய்ப்பும் முடிந்திருந்து என்ற அறிவிப்பும் ஒலித்தது.

மூவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வர, அறையின் வெளியே காத்திருந்த அவர்கள் குழுவினர் என்னவென்று விசாரித்தனர்  ஜித்தேஷ் நடந்ததைக் கூறியதும், எல்லோர் பார்வையும் பிரியனை ஏமாற்றத்துடன் நோக்கியது.

அவர்களின் உணர்வுகளை எல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாத பிரியன் யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்காமல் உள்ளே சென்றுவிட்டான். ஏற்கனவே போட்டியாளர்களுக்கு அவன் மீதிருந்த அதிருப்தி இன்னும் அதிகமானது. ஜித்தேஷ் பயங்கர கடுப்பில் இருந்தான்.

இந்த நிலையில் இரண்டாவது சுற்றிலும் மூன்றாவது சுற்றிலும் அவர்கள் எதிர் குழுவினருக்குத்தான் சாவி கிடைத்தது. நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றிலும் இரு குழுவினருக்கும் சமமாக உள்ளே செல்ல வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவரவர்கள் உடைக்கும் பானைகளிலிருந்து விழும் பொற்காசுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வாய்ப்பிலும் பிரியன் குழுவால் பெரிதாக ஒன்றும் எடுக்க முடியவில்லை.

இறுதியாக எதிர் குழுவினர் வென்றார்கள். அவர்களுக்கு மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. அடுத்த வாரத்திற்கான உணவுப் பொருட்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அந்த அசரீரி குரல் இந்த வாரத்தின் மோசமான போட்டியாளரை அவர்களே தீர்மானிக்கச் சொல்லிக் கேட்டது. அந்தக் கேள்விக்குப் பெரும்பாலானோரின் பதில் பிரியன் என்றே இருந்தன. அவ்வளவுதான். பிரச்சனை துவங்கிவிட்டது.  

 “நான் எப்படி வொர்ஸ்ட் ப்ளேயர்... நான்தான் முதல் ரவுண்ட்ல சாவியை கண்டுபிடிச்சது” என்று பிரியன் பொங்கி விட,

“முதல் ரவுண்ட்ல நம்ம டீமுக்கு எந்த பாயிண்டும் கிடைக்காம போனது உங்களாலதான்” என்று ஜித்தேஷ் எழுந்து நின்று நேரடியாகவே அவனைக் குற்றம் சாட்டினான்.

“உடைச்சு பானைல எதுவும் இல்லன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்”

“நீங்களே மூணு தடவையும் உடைச்சீங்க... எங்க யாருக்கும் சான்ஸ் கொடுக்கல”

“யோசிச்சு பொறுமையா அடிக்க டைம் இருந்துச்சா என்ன? ஏன் நீ உடைச்சு இருந்தா பொற்காசா கொட்டி இருக்குமா” பிரியன் வார்த்தைகளில் மரியாதை தேய்ந்திருந்தது. அடுத்த நொடியே ஜித்தேஷும் எகிற ஆரம்பித்தான். போட்டியாளர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் பிரியன் மீது ஆரம்பத்திலிருந்தே கடுப்பிலிருந்த ஜித்தேஷ் இதுதான் சாக்கு என்று அவனை இன்னும் மட்டம் தட்டினான்.  

வீட்டினர்களால் இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில் ஜித்தேஷ், “உன்னாலதான் நம்ம டீம் தோத்து போச்சு” என்று மீண்டும் மீண்டும் கூற பிரியனுக்கு தாறுமாறாக கோபமேறிவிட்டது. இதில் ஜித்தேஷ் அவனை மேலும் மேலும் அதிகமாக உசுப்பிவிட்டதில் பிரியன் கை ஓங்கிவிட்டான். ஆனால் நீட்டிய கையை ஏதோவொரு முன்னெச்சரிக்கை உணர்வில் அடிக்காமல் உடனடியாக இறக்கியும்விட்டேன்.

அந்த வீட்டின் அசரீரி குரல் இவ்வளவு பிரச்சனையிலும் மௌனம் காத்தது. இயல்பில் அவர்களுக்கு வேண்டியதும் இது போன்ற அனல் பறக்கும் விவாதங்களும் சண்டைகளும்தானே.

அதுவும் இல்லாமல் அதிரடியான எபிசோட்கள்தான் நிகழ்ச்சியின் டி ஆர் பியையும் ஏற்றிவிடும். இந்தப் பிரச்சனைகளைக் காணொளி வாயிலாகப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணா அந்தக் காட்சிகளை கத்தரிக்காமல் அப்படியே வெளியிடச் சொன்னான்.

அடுத்த நாள் ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சியின் ட்ரைலரில் பிரியன் அடிக்க கை ஓங்கிய காட்சி வெளிவந்து சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பானது. சந்தியாவின் அலுவலகத் தோழி வேலை செய்வதை நிறுத்திவிட்டு அந்த ட்ரைலரை அவளிடம் காட்ட, அதனைப் பார்த்த சந்தியா உடனடியாகத் தன் மாமியாரின் செல்பேசிக்கு அழைத்து தகவலைக் கூறினாள். ஜானகி பொறுக்க முடியாமல் மகளின் செல்பேசிக்கு அழைத்தார்.

அந்தச் சமயம் நிலா அலுவலகத்தில் ஒரு முக்கிய கலந்துரையாடலில் இருந்தாள். தினேஷுடன் வேறு சில நபர்களும் அந்த அறையில் அமர்ந்து அவளது உரையை ஆர்வமாக கேட்டிருக்க, அபஸ்வரமாக அவளுடைய செல்பேசி சத்தமிட்டது.

“சாரி” என்ற நிலா அதில் ஒளிர்ந்த அம்மாவின் எண்ணைப் பார்த்து குழப்பமானாள்.  ‘அம்மா யூஸ்வலா இந்த மாதிரி நேரத்துல கூப்பிட மாட்டாங்களே... பசங்களுக்கு எதாச்சுமா? காலைல ஒழுங்காதானே ஸ்கூலுக்கு கிளம்புனாங்க’ என்ற அவள் மூளை பாட்டுக்கு யோசிக்க ஆரம்பித்து விட்டது.

அவள் எதிரே அமர்ந்திருந்த நபர்களைத் தயக்கத்துடன் பார்த்து, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று விட்டுத் தள்ளி வந்து அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“என்னம்மா ஏதாவது பிரச்சனையா?”

“நீ இன்னைக்கு எபிசோடோட ட்ரைலரை பார்த்தியா நிலா” என்றவர் வெகுதீவிரமாக கேட்ட கேள்வியில் நிலாவிற்கு கடுப்பானது.

“எது ட்ரைலரா? ம்ம்ம்ம்ம்மா” என்று பல்லைக் கடித்துக் கொண்டே பேசினாள்.

“இதெல்லாம் ஒரு மேட்டர்னு கால் பண்ணியா?” என,

“உன் புருஷன் என்ன பண்ணி வைச்சு இருக்காருனு பாருடி?” என்றவர் குரல் இன்னும் அழுத்தமாக ஒலித்ததில் அவளுக்கு எரிச்சல் மிகுந்தது.

“என்னவோ பண்ணிட்டு போட்டும்... நீ போனை வைய்யு... நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவள் மீண்டும் வந்து தன் உரையைத் தொடர எத்தனித்தாள். ஆனால் முன்பு போல இயல்பாகப் பேச முடியவில்லை. குரல் தடுமாறியது. மூளைக்குள் பேச நினைத்த விஷயங்களை எல்லாம் தெளிவாக வகுத்து வைத்திருந்த போதிலும் பேச முடியாமல் வார்த்தைகள் உடைந்தன.

“எனி பிராப்ளம்” என்று தினேஷ் விசாரிக்க, “நோ நோ நத்திங்” என்று கூறிவிட்டு ஒரு மாதிரி தன் உரையை சுருக்கமாக முடித்துவிட்டிருந்தாள்.

ஒரு வாரத்திற்கு முன்பாக பேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் என்று அத்தனை செயலிகளையும் அன் இன்ஸ்டால் செய்துவிட்டாள். இதற்கிடையில் சில யூ ட்யூபர்கள் வேறு அவள் செல்பேசிக்குத் தொடர்பு கொண்டு பேட்டி கொடுக்க கேட்டார்கள்.

இருக்கும் பிரச்சனைகளில் இது வேறா என்று கடுப்பானவள் அவர்களிடம் திட்டவட்டமாக மறுத்த போதும் திரும்பத் திரும்ப அழைத்து தொந்தரவு செய்தார்கள். வந்த கோபத்திற்குச் சரமாரியாகத் திட்டிவிட்டாள். ஊடகத் துறையில் இருப்பதால் அவளுடைய செல்பேசி எண் யார் மூலமாவது தெரிந்திருக்கக் கூடும். அதை எல்லாம் அவளால் தடுக்கவும் முடியாது. இதனால் தெரியாத எண்களையே எடுப்பதைத் தவிர்த்தாள்.

என்னதான் அவள் ஓடி ஓடி ஒளிந்தாலும் இந்த நிகழ்ச்சியும் அது சார்ந்த தகவல்களும் அவளைத் துரத்தி வந்தன.

கலந்துரையாடலை முடிந்து வெளியே வந்தவளுக்குத் தன் அம்மா பேசிய விஷயம்தான் மண்டையில் ஓடியது. ‘அப்படி என்ன இருக்கு அந்த ட்ரைலர்ல... என்ன பண்ணி வைச்சு இருக்கானோ” என்ற பயத்துடன் இருக்கைக்கு வந்ததும் அந்த ட்ரைலரை திறந்து பார்த்தாள்.

பிரியன் கோபத்துடன் ஜித்தேஷை கை ஓங்கியதைக் கண்டவள் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டாள். ‘இவனை என்னத்தான் பண்றது... போச்சு... எல்லாம் போச்சு’ என்று புலம்பி கொண்டாள். இருப்பினும் இந்த காட்சி அந்தளவுக்குப் பெரிய அதிர்ச்சியை எல்லாம் அவளுக்குக் கொடுத்துவிடவில்லை.

பத்து வருடமாக அவள் பிரியனுடன் வாழ்கிறாள். இந்த முன்கோபம்தான் அவனுடைய பெரிய பிரச்சனையே. கோபம் வந்துவிட்டால் யோசிக்கவே மாட்டான். எதிரே யார் நின்றாலும் கை நீட்டிவிடுவான்.

“நான் கண்டிப்பா அபாட் பண்ண போறேன் தேவ்” என்று அவள் உறுதியாகக் கூற,

“அப்போ என் பேச்சுக்கு மரியாதை இல்ல” என்று பிரியன் பதிலுக்குக் கோபமாகப் பேசினான். இருவருக்கு இடையிலும் வாக்குவாதம் தீவிரமான நிலையில்,   

“இந்த விஷயத்துல நீ சொல்றதை நான் கேட்குறதா இல்ல தேவ்... சாரி” என்று அவள் தீர்க்கமாக கூற அவள் கன்னத்தில் சுரீலென்று ஓர் அறை விழுந்திருந்தது.

 “என்னடி திமிரா? நான்தான் சொல்லிட்டே இருக்கன் இல்ல... அபாட் பண்ண கூடாதுன்னு” என்று அதிகாரமாக ஒலித்த அவன் குரலில் அவள் அதிர்ந்து ஒடுங்கி இருந்தாள்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவனது அந்த அடியை அவளால் மறக்க முடியவில்லை. அந்தளவு கோபத்தை நேரடியாக எதிர்கொண்டது அதுதான் முதல் முறை. ஆனால் முன்பே கல்லூரியில் ஒரு பிரச்சனையில் சக மாணவன் ஒருவனை அடித்து விட்டதில் பெரிய பிரச்சனையே உண்டாகிவிட்டது. விஷயமறிந்த கல்லூரி முதல்வர் அவனை அழைத்து எச்சரித்திருந்தார்.

அதோடு முடிந்ததா?அவள் தமையன் வினயை அவன் அடித்துவிட்டது. இன்று வரையில் அதற்கான எதிர்வினையை அவள்தானே அனுபவித்து கொண்டிருக்கிறாள். அந்தச் சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் கூட பிறந்தவனே தன்னை அன்னியமாக பார்க்கிறான். நடத்துகிறான். அவளின் அந்த வலி எல்லாம் பிரியனுக்கு புரியாது. அவனுக்கு கோபம் கொள்ள மட்டும்தான் தெரியும்.

 அந்த பிரச்சனைகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு காரியத்தை இன்று செய்து வைத்திருக்கிறான். கொஞ்சமும் யோசிக்காமல் கோடி பேருக்கும் மேல் பார்க்கும் நிகழ்ச்சியில் சக போட்டியாளனை அடிக்க கை ஓங்கிவிட்டான். உண்மையில் அடித்தானா இல்லையா என்று நிகழ்ச்சியைப் பார்த்தால்தான் தெரியும். யோசிக்கும் போதே அவள் தலை கனத்தது.

இப்போது பிரியனை பற்றி கூட கவலை இல்லை. தன் மகள்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியை இப்படி ஒரு நாள் விடாமல் பார்த்துத் தொலைக்கிறார்களே என்றுதான் அவளுக்கு மனம் அடித்துக் கொண்டது. பார்க்க கூடாது என்று அவள் என்ன தடுத்தாலும் தடை போட்டாலும்  கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். என்னதான் செய்வது?

இது பற்றி யோசித்திருந்தவளுக்கு இன்றைய எபிசோடை மட்டுமாவது அவர்களை பார்க்கவிடாமல் செய்துவிட்டால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.

அந்த நொடி இரண்டு வாரம் முன்பு திரையிடப்பட்டிருந்த கார்டூன் படமொன்றைப் பார்க்க மகள்கள் கேட்டது நினைவு வந்தது. உடனடியாக இணையச் சேவையைத் திறந்து இரவு ஏழு மணி ஷோவிற்கு டிக்கெட் முன்பதிவு செய்தாள். ஆறு மணிக்கே வீட்டிற்கு வந்து குழந்தைகளைத் தயார் செய்தாள்.

“ஏன் டி... இந்த நேரத்துல தனியா பசங்கள அழைச்சிட்டு போகணுமா?” என்று ஜானகி கவலையுடன் கேட்க,

“நான்தான் நீங்க வரீங்களானு கேட்டன் இல்ல... நீங்கதான் வரலன்னு சொல்லிடீங்க” என்றவள் சொல்லவும்,

“அதுக்கு இல்லடி படம் முடிய லேட்டாகுமேனு சொன்னேன்” என்றவர் சொல்ல,

“தெரியும் மா... படம் முடிஞ்சு... சாப்பிட்டுதான் வருவோம்... அதனால் வீட்டுக்கு வர லேட்டாதான் ஆகும்” என்று விட்டு குழந்தைகளைப் பார்த்து, “போலாமா” என்றதும் அந்த சின்ன வாண்டுகள், “போலாம் போலாம்” என்று சந்தோஷமாகக் குதித்தன.

நிலா வாசலைத் தாண்டும் வரை கூட ஜானகி புலம்பிக் கொண்ட பின்னே வந்தார்.

“ஏன் டா இதெல்லாம் பகல போக கூடாதா? இல்ல நான் வினய் கிட்ட சொல்லட்டுமா... கார் எடுத்துட்டு வருவான் இல்ல” என்றவர் சொல்லவும் நிலா கடுப்புடன் திரும்பி, “அவன் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசறது இல்ல... அப்புறம் எதுக்கு அவன்கிட்ட நான் ஹெல்ப் கேட்கணும்... எனக்கு ஒன்னும் அவன் தயவு தேவை இல்ல” என்று வீம்பாக உரைத்து விட்டு மேலும்,

“அதுவும் இல்லாம பசங்க இன்னைக்கு ஷைனிங் ஸ்டார் பார்க்க கூடாதுன்னுதான் கூட்டிட்டு போறேன்” என்று மெல்லிய குரலில் சொல்ல,  ஜானகிக்கு விஷயம் புரிந்தது.

மகளும் பேத்திகளும் தனியாகச் செல்வதைக் அவர் கவலையுடன் பார்த்தார். நிலா வாடகை காரில் குழந்தைகளை அழைத்துச் சென்றாள். அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த கார்டூன் கேரக்டரின் படம் என்பதால் முடியும் வரை அந்தச் சின்ன வாண்டுகள் இருக்கையை விட்டு எங்கும் அசையவே இல்லை.

சந்தோஷமாகச் சிரித்து கை தட்டி ரசித்த மகள்களை ஆசையாகப் பார்த்தாள் நிலா. முந்தைய வாரப் பிரச்சனைகளால் முகம் கொடுத்துக் கூட பேசாத கவி இரண்டு நாளில் சரியாகி விட்டாள். அதுதான் குழந்தைகள். ஆனால் நிச்சயம் கவிதா மனதில் அந்த விஷயத்தின் தாக்கம் இல்லாமல் இருக்காது. அதை முழுவதுமாக எப்படிச் சரி செய்வது என்று நிலாவிற்கு இப்போதைக்குத் தெரியவில்லை.  

எப்படியோ இன்று ஒரு நாளாவது அவர்கள் அந்த நிகழ்ச்சியை மறந்திருக்கிறார்கள் என்பதே அவளுக்கு நிம்மதியாக இருந்தது. படம் முடிந்து வெளியே வந்ததும், “படம் எப்படி இருந்துச்சு” என்று மகள்களிடம் விசாரிக்க,

“சூப்பர் ம்மா... ஸ்கை செம ஸ்டிராங்” என்று கவி சொல்ல, “நம்ம கூட அப்படிதான் ஸ்டிராங்கா இருக்கணும் நீ சொல்லி இருக்க இல்ல மா” என்று கேட்டாள் ஹரிதா.

“ஆமா நம்மளும் அப்படிதான் ஸ்கை மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கணும்” என்றவள் மகள்கள் சினிமா அரங்கின் அருகிலேயே இருந்த உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தாள்.

உணவகத்தில் கை கழுவிச் சென்ற இடத்தில் பின்னே வந்து நின்ற இருவர் அவளையும் குழந்தைகளையும் வித்தியாசமாக பார்த்தார்கள். இருக்கையில் வந்து அமர்ந்த பிறகும் அந்தப் புது மனிதர்களின் பார்வைகள் அவளையும் குழந்தைகளையும் பின்தொடர்ந்தன.

அந்த நொடி யூ ட்யூபில் வெளியிடப்பட்ட அவர்களின் குடும்ப புகைப்படத்தின் நினைவு வந்தது. அப்போதே அக்காணொலியை  ஐம்பதாயிரத்திற்கும் மேல் பார்த்திருந்தார்கள். இன்றைய நிலவரப்படி இன்னும் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

அந்த தெரியாத மனிதர்களின் பார்வை நிலாவைச் சங்கடப்படுத்தியது. கொஞ்சம் பயப்படுத்தவும் செய்தது. ஏற்கனவே இரவு மிகவும் தாமதமாகிவிட்டது. வீட்டிற்குக் கிளம்பிவிடலாமா என்று ஒரு பக்கம் மூளை அவளை எச்சரித்தது.

“ம்ம் எனக்கு சிக்கன்” என்று கவி சொல்ல, “எனக்கும் எனக்கும்” என்றாள் ஹரிதா. சந்தோஷமாக உண்ண அமர்ந்திருக்கும் மகள்களைப் பார்த்த நிலா அப்போதைக்கான தன் மனத்தவிப்புகளை தள்ளி வைத்து விட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை ஆர்டர் செய்தாள்.

 சாப்பிட்டு முடித்து வெளியே வந்து வாடகை காருக்காக காத்திருந்த போது யாரோ பின்னே வந்து நெருக்கமாக நின்ற உணர்வில் நிலா மிரண்டு திரும்ப, அங்கே சிவா நின்றிருந்தார்.

“நீங்களா தலை” என்று ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டவள், “நான் யாரோ என்னவோனு பயந்துட்டேன்” என்றாள்.

“இல்ல தூரத்துல இருந்து பார்க்கும் போது உன்னை மாதிரியே இருந்துச்சு... ஆமா நீ என்ன இங்க... இவ்வளவு லேட்டா அதுவும் குழந்தைங்க கூட” என்று சிவா கேட்டு கொண்டே கவி ஹரியின் கன்னத்தை ஆசையாக கிள்ளி கொஞ்ச,

“இல்ல படத்துக்கு போயிட்டு அப்படியே பக்கத்துல சாப்பிட வந்தோம்... கேப் புக் பண்ணிட்டேன்... வந்துடும்” என்றவள் கூற,

“கேபுக்கு வெயிட் பண்றீங்களா... என்ன நீ... டைம் என்னாகுது... நீ பேசாம கேபை கேன்சல் பண்ணு... நான் உன்னையும் குழந்தைளையும் வீட்டுல ட்ராப் பண்றேன்” என்றார்.

“ஐயோ வேண்டாம் தலை... நான் இப்போ எங்க அம்மா வீட்டுல இருக்கேன்”

“இருக்கட்டும் வா... நான் ட்ராப் பண்றேன்” என்று விட்டு குழந்தைகளை பார்த்து, “அங்கிள் கார்ல வரீங்களா” என்று குனிந்து அவர்களை கேட்டார். குட்டி பெண்களின் பார்வை தன் அம்மாவை நோக்கியது. நிலாவிற்கும் அந்த நொடி சிவாவுடன் சென்றுவிடுவதே நல்லது என்று பட்டது. அவளும் சரியென்று சம்மதித்தாள்.  

காரின் பின்னிருக்கையில் குழந்தைகளை அமர்த்திவிட்டு அவள் முன்னே அமர்ந்து கொண்டாள்.

 ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து முன்கண்ணாடியில் குழந்தைகளை பார்த்து, “ஆமா இதுல யார் கவி... யார் ஹரி” என்று கேட்க, நிலா பதில் சொல்வதற்கு முன்பு கவி முந்தி கொண்டாள்.

“நான்தான் கவிதா... இவ ஹரிதா” என்றவள் அறிமுகம் செய்து கொள்ள சிவா அவள் மழலையான பேச்சை ரசனையுடன் பார்த்து புன்னகை செய்தார். கார் கிளம்பிய சில நொடிகளில் கவியும் ஹரியும் அப்படியே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து உறங்கிவிட,

“இரண்டு பேரும் செம க்யூட்டா தூங்குறாங்க” என்று சிவா சொல்ல நிலா திரும்பி மகள்கள் கண்டு மிதமாக புன்னகை செய்தாள். ஆனால் அந்த புன்னகை அவள் கண்களை எட்டவில்லை. ஒரு மெல்லிய சோகம் அவள் முகத்தில் அப்பிக்கிடந்தது.

நிலாவை தம் விழிகளால் அளவிட்ட சிவா, “ஆமா புது வேலை எப்படி போகுது” என்று மெல்ல விசாரிக்க,  

“நல்லா போகுது... அப்புறம் உங்க பிரண்ட் தினேஷும் செம சப்போட்டிவா இருக்காரு” என்று கொண்டலாக கூற, “யாரு அவன்... எனக்கு பிரண்டா?” என்று திரும்பி அவளை முறைப்பாக பார்த்தார் சிவா.

“இல்லையா பின்ன” என்றவள் தோள்களை குலுக்க,

“உனக்கு நக்கல் ஜாஸ்தியாகிடுச்சு” என்று சொல்லி சிரித்த சிவா, “எப்படியோ எல்லாமே நல்லா போனா சந்தோஷம்தான்” என்றார்.

“வொர்க்ல எந்த பிரச்சனையும் இல்ல தலை?” என்றவள் குரல் மீண்டும் தேய,

“அப்புறம் வேற எதுல பிரச்சனை” என்றதும் அவள் முகம் சுருங்கியது. சிவா உடனே, “நானும் அந்த ஷோவை பார்த்துட்டுதான் இருக்கேன்... நீ தேவை இல்லாம அதை பத்தி ரொம்ப யோசிச்சு உன் மைன்ட்ல டென்ஷனை ஏத்திக்காத” என்றார்.

“அந்த ஷோவை பத்தி யோசிக்க என்ன இருக்கு... எதுவும் இல்ல... இனிமே எனக்கு எது...வும் இல்ல” என்றவள் விரக்தியாகவும் கொஞ்சம் அழுத்தமாகவும் சொன்னாள்.

அவள் முக உணர்வுகளை கவனித்த சிவா, “நிலா இந்த ஷோவ வைச்சு எந்த முடிவுக்கு வர வேண்டாம்” என்றார்.

“இல்ல தலை... ஷோவை வைச்சு இல்ல... ஆனா நான் முடிவு பண்ணிட்டேன்.. இனிமே எனக்கும் தேவுக்கும் சரிப்பட்டு வராது... என்னால இதுக்கு மேலயும் முடியாது... மனசு விட்டு போச்சு... நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப சரி... அவன் ஒரு செல்பிஷ்... இனிமேயும் எல்லாத்தையும் பொறுத்து போயிக்கிட்டு இருக்க என்னால முடியாது... அவன் வெளியே வந்ததும் எல்லாத்துக்கும் ஒரு முடிவு பண்ணிடலாம்னு இருக்கேன்” என்றவள் பேசி கொண்டிருக்கும் போதே கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அதனை அவசரமாக துடைத்து கொண்டாள். அவள் வலிகளை உணர முடிந்தாலும் என்ன மாதிரியான ஆறுதல் வார்த்தைகளை சொல்வது என்று சிவாவிற்கும் தெரியவில்லை. அத்துடன் நிலாவும் எதுவும் பேசவில்லை. மௌனமாகவே வந்தாள்.

காரை ஓட்டி கொண்டே சிவா அவளை திரும்பி நோட்டமிட்டார். கத்தரி பூ நிறத்திலிருந்த அந்த நீளமான கவுன் அவளது அளவான தேகத்திற்கு பாந்தமாக பொருந்தி இருந்தது. அளவான ஒப்பனையுடன் அழகாக மிளிர்ந்தாள்.  

ஆனால் அவருக்கு தெரிந்த நிலா இவள் அல்ல. எப்போதும் வேலை வேலை என்று ஓடுபவள் அவள். நெற்றியிலிருந்து வியர்வை வழிந்த வண்ணம் இருக்கும். ஓரிடத்தில் அவள் கால்கள் நிற்காது. சக்கரம் கட்டியது போல சுழலும்.

ஷுட்டிங் தளத்தை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாள். படப்பிடிப்பு முடியும் வரை அவள் ஓய மாட்டாள். அவருடைய பொறுப்பையும் சேர்த்து அவள் பார்ப்பாள். படப்பிடிப்பில் எந்த பிரச்சனை என்றாலும் ஒதுங்கி எல்லாம் நிற்க மாட்டாள். முதல் ஆளாக நின்று அதனை சரி செய்வாள்.

அவள் குழுவில் இணைந்ததில் இருந்தே அவருக்கான வேலைகள் பாதிக்கு பாதியாக குறைந்துவிட்டன. திறமைசாலி மட்டும் இல்லை. புத்திசாலி. நிகழ்ச்சியில் அவள் சொல்லும் புது புது யோசனைகள் சிவாவை பலமுறை வியக்க வைத்திருக்கிறது.

அந்த வியப்பு அன்பாகி... அந்த அன்பு காதலாகி இன்று அது விடை தெரியாத புதிராகி நிற்கிறது. அவள் வேறொரு நிகழ்ச்சிக்காக அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய போது மனம் வலித்தாலும் அவளுடைய கனவுகள் நிறைவேறட்டும் என்ற குரு நிலையிலிருந்த வாழ்த்தினார்.

ஆனால் பிரியன் மூலமாக அவள் அனுபவிக்கும் துயரங்களை கேட்கும் போதும் பார்க்கும் போதும் ஏனோ அவளுக்கும் சேர்த்து சிவாவிற்கு கோபம் எழும். அது போன்ற சமயங்களில் அவளுக்கு துணையாக இருக்க வேண்டும். அவள் துயரங்களை தாங்கி கொள்ள வேண்டுமென்று உள்ளம் தவிப்புறும்.

நிலா அப்படியே சாய்ந்த மேனிக்கு ஜன்னல் பக்கம் பார்வையை பதித்திருந்தாள். இன்று அவள் முகம் இன்னும் அதிக அழகாய் மிளர்ந்ததில் அவர் மனம் தன் கட்டுப்பாட்டை இழந்தது.

அந்த நொடியே பார்வையை சாலை புறம் திருப்பி கொண்டார். எல்லோருமே உணர்வுகளுக்கு அடிமையான சாதாரண மனிதர்கள்தானே. தான் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன?

வெண்ணிலா சிவாவின் பலவீனமாகி வெகுநாட்களானது. கார் அவர்கள் ஏரியாவிற்குள் நுழைந்ததும், “நிலா” என்று சிவா குரல் கொடுத்து, “எந்த பக்கம் போணும்” என வழி கேட்டார்.

அவள் நிமிர்ந்து அமர்ந்து வீட்டிற்கு செல்ல வேண்டிய வழியை உரைத்தாள். சில நிமிடங்களில் அவள் காரும் வீட்டு வாசலில் நின்றது.

“இங்கதான் தலை” என்று விட்டு நிலா காரிலிருந்து இறங்கியதும் கவியை தூக்கி கொள்ள சிவா ஹரியை தூக்கினார். வாயிலிலேயே இவர்களுக்காக காத்திருந்த கேசவன், “என்ன இவ்வளவு லேட்டா வர... சொல் பேச்சே கேட்க மாட்ட இல்ல நீ... உன் இஷ்டம்தான் இல்ல எல்லாம்” என்று கண்டனமாக சொல்லி கொண்டே பின்னே வந்த நபரை சந்தேகமாக பார்த்தார்.

“ஃப்ரண்டு பா” என அவள் வார்த்தைகள் தடுமாறின. அதற்கு மேல் எதுவும் கேட்டு கொள்ளாமல் அவள் தோளில் உறங்கும் பேத்தியை தன் தோளுக்கு இடமாற்றம் செய்து கொண்டார். அவள் திரும்பி வந்து சிவா கையிலிருந்து ஹரியை வாங்கிச் சென்று உள்ளே படுக்க வைத்து விட்டு வெளியே வந்தவள்,

“என்ன தலை இங்கயே நின்னுட்டீங்க... உள்ளே வாங்க” என்று அழைக்க, “இருக்கட்டும் நிலா... ஏற்கனவே ரொம்ப லேட்டாகிடுச்சு... இன்னொரு நாள் வரேன்”என்றார்.   

 “சரிங்க சார்... உங்களுக்கும் லேட்டாகிடுச்சு... வீட்டுக்கு போக இன்னும் ஒரு மணி நேரம் டிராவல் பண்ணனும் இல்ல” என்றவள் சொல்ல,

“எனக்கு என்ன நிலா... குடும்பமா... குட்டியா யார் எனக்காக கார்த்திருக்க போற... எந்த டைமுக்கு போனாலும் பிரச்சனை இல்ல” என்றார்.

“அந்த மாதிரி ஃப்ரீடம் எல்லாம் எனக்கும் இருந்தா நல்லா இருக்கும்” என்று நிலா ஏக்கத்துடன் கூற, “ஒரு காலக்கட்டம் வரைக்கும்தான் அதுவும் சுதந்திரமா தெரியும் நிலா... ஆனா அப்புறம் அப்புறம் நமக்குன்னு யாருமே இல்லன்னு பீல் ஆக ஆரம்பிச்சுடும்” என்றவர் குரலில் தணியாத ஏக்கம் இருந்தது.

“நீங்க அப்படி பீல் பண்றீங்களா தலை” அவள் ஆச்சரியத்துடன் வினவ,

“கொஞ்ச நாளா” என்று விட்டு அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கியவர், “உன்னை மாதிரி ஒரு பொண்ணு என் வாழ்க்கைல இல்லையேனு பீல் பண்றேன்” என்றார். நிலாவின் விழகள் ஆச்சரியத்துடன் விரிந்தன.

“சரி நான் கிளம்புறேன்” என்று சொல்லி சிவா தன் காரில் கிளம்பிவிட அவர் சொன்ன கடைசி வாக்கியத்தின் அர்த்தம் என்ன என்று குழம்பியபடியே நிலா வீட்டிற்குள் நடந்தாள்.  அதேநேரம் உள்ளே இருந்து இவர்கள் பேசுவதை பார்த்திருந்த ஜானகியும் கேசவனும் அதிருப்தியான பார்வையை பரிமாறி கொண்டனர். 

her stories எழுதும் குடும்ப நாவல் தொடர் அடுத்த அத்தியாயம் சுட்டி கீழே 

இப்படிக்கு இலக்கியநாசினி - 8  

shanbagavalli and Rathi have reacted to this post.
shanbagavalliRathi
Quote

Super ma 

You cannot copy content