You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 13

Quote

13

ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஷைனிங் ஸ்டார் பங்கேற்பாளர்கள் வீட்டின் முகப்பறையில் உள்ள அரைவட்ட வடிவப் பிரமாண்டமான சோபாவில் அமர்ந்திருக்க, எதிரே இருந்த தொலைக்காட்சியின் மூலமாக ஈஷ்வர் அவர்களிடம் தொடர்பு கொண்டு அன்றைய வாரம் நிகழ்ந்த போட்டிகள், நடந்த சம்பவங்கள், அரங்கேறிய பிரச்சனைகள் என அனைத்தையும் குறித்து விவாதிப்பது வழக்கம். அதேபோல குறைவான ஓட்டு எண்ணிக்கை உள்ள நபரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதும் நிகழும்.

ஆனால் கடந்த இரண்டு வாரத்தில் யாருமே வெளியேற்றப்படவில்லை. இந்த வாரத்திலிருந்துதான் வெளியேற்றும் படலமும் துவங்க இருந்தது.  

‘புதையல் டாஸ்க்’ பற்றிப் பேச ஆரம்பித்த ஈஷ்வரின் உரையாடல் இறுதியாக ஜித்தேஷுக்கும் பிரியனுக்கும் இடையிலான வாக்குவாதத்தில் வந்து சரியாக நின்றது. நடந்ததை குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்பதற்கு முன்னதாக போட்டியாளர்களிடம் கருத்து கேட்டார்.

எல்லோருடைய கருத்தும் ஒரு வகையில் பிரியனுக்கு எதிராகத்தான் இருந்தன. ஆனால் இவர்களுள் உதய் மட்டும் பிரியனுக்குச் சாதகமாகப் பேசினான். மற்றவர்களின் பேச்சுக்களில் பிரியனின் முகம் சுண்டிப் போனது. மறுபுறம் ஜித்தேஷின் மனம் வானத்தில் பறந்தது. ஆனால் மனதின் சந்தோஷத்தை வெளிப்படையாக அவன் காட்டிக் கொள்ளவில்லை. படு பவ்வியமாக அமர்ந்திருந்தான்.

பங்கேற்பாளர்களிடம் பேசி முடித்த ஈஷ்வர் ஜித்தேஷிடம் திரும்பி, “பிரியன் சாவி எடுத்ததால்தானே உங்க குழுவுக்கு வாய்ப்பு கிடைச்சுது... அப்புறம் எப்படி நீங்க அவரை வொர்ஸ்ட் ப்ளேயர்னு சொல்ல முடியும்” என்ற கேள்வியை எழுப்ப,

“இது டீம் கேம்... இதுல அவர் இஷ்டத்துக்கு முடிவு எடுக்க முடியாது இல்ல சார்” என்று அவனும் பவ்வியமாகக் கூற பிரியனுக்குத்தான் பொத்து கொண்டுவிட்டது. அத்தனை நேரமாக அவன் பிடித்து வைத்திருந்த பொறுமை எல்லாம் காற்றோடு பறந்து போனது.

“நான் அடிச்சு உடைச்சு பானைல ஒரு வேளை புதையல் இருந்திருந்தா” என்று சூழ்நிலை சந்தர்ப்பம் எல்லாம் யோசிக்காமல் மீண்டும் ஜித்தேஷிடம் எகிறினான்.

“பிரியன் அமைதியா இருங்க... நான் உங்ககிட்ட வருவேன்... அப்போ பேசுங்க” என்று ஈஷ்வர் அழுத்தமாகச் சொல்லப் பிரியனின் முகம் உள்ளே போய்விட்டது. இது ஒரு சின்ன விஷயம். இதற்கு போய் தன்னை குற்றவாளி போல நடத்துவது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.  

அவன் சுருங்கிய முகத்துடன் அப்படியே அமர்ந்துவிட ஜித்தேஷ் அன்று பேசியவற்றையே இன்றும் பேசினான். பிரியனின் செய்கையில் மற்றவர்களுக்கு இருந்த அதிருப்தியை அவன் அழுத்தமாக வெளிப்படுத்தப் பிரியன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஈஷ்வர் நடந்த விஷயத்திற்கு தன்னிடம் விளக்கம் கேட்பார் என்று அவன் எதிர்பார்த்துக் காத்திருக்க அவரோ விளக்கம் கேட்பதற்குப் பதிலாக,

“என்ன வேணா நடந்து இருக்கட்டும்... யார் மேல வேணா தப்பு இருக்கட்டும்... ஆனா நீங்க அவரை கை நீட்டனது சரியா?” என்று குற்றம்சாட்டினார். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. இதெல்லாம் ஒரு வகையில் பின்னிருந்து கிருஷ்ணா செய்யும் வேலை. அவன் மேலும் ஈஷ்வரிடம் பிரியனைக் குற்றம்சாட்டச் சொல்லித் தூண்டினான்.

“நீங்க அப்படி செஞ்சிருக்கவே கூடாது பிரியன்... எல்லா மனுஷங்களுக்கும் கோபம் வரும்... அது இயல்புதான்... ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சு பார்த்தா நாம செஞ்சுது சரியா தப்பான்னு புரியணும்தானே?” என, ஈஷ்வரின் அந்த கேள்விக்கு பிரியனுக்குப் பதில் பேச உள்ளூர துடித்தது.

ஆனால் பல கோடி மக்கள் காணும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியில் தான் செய்தது சரிதான் என்று விதண்டாவாதம் செய்வது சரியாக வராது என்று அவன் மௌனம் காத்தான்.

 ஈஷ்வர் மேலும், “சரி நாம செஞ்சது தப்புன்னு உணர்ந்ததும் நாம என்ன பண்ணனும்... மன்னிப்பு கேட்கணும்... சரிதானே பிரியன்? அதுவும் இல்லாம இந்த சம்பவம் நடந்து இரண்டு நாளாகியும் நீங்க அவர்கிட்ட மன்னிப்பு கேட்கல” என்றவர் மேலும் குற்றம்சாட்ட, பிரியனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

அதுவும் இல்லாமல் இதுவரையில் அவன் தன் மனைவி நிலாவைத் தவிர வேறு யாருக்கும் தான் செய்த செய்கைகளுக்கான விளக்கங்களைக் கொடுத்ததும் இல்லை. அவளிடம் கூட தன் செய்கைக்கான காரணக் காரியத்தைத் தெரிவிப்பானே ஒழிய அது சரியா தப்பா என்ற விவாதத்தை அனுமதிக்க மாட்டான்.

ஆனால் இன்று அவன் எதிரே நின்று கேள்வி கேட்பவர் திரைத்துறையின் மிகப் பெரிய பிரபலம். அவருக்கு என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே வெளியே இருக்கிறது. எல்லோரிடமும் காட்டும் முகத்தை அவரிடம் அவனால் காட்ட முடியாது. அப்படி ஏதாவது தப்பித் தவறி அவரை அவமதிப்பாகப் பேசிவிட்டான் எனில் இனி சினிமா துறையில் அவனுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடலாம். அத்துடன் அவனுடைய கனவு இலட்சியம் எல்லாம் ஸ்வாஹாதான்.

ஒரு பக்கம் தன்னுடைய ஈகோ. மறுபுறம் தன்னுடைய கனவு என்று இரண்டுக்கும் இடையில் பிரியனின் மனம் ஊசலாடியது.

அப்போது ஈஷ்வர், “நான் ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு வந்துடுறேன்... அதுக்குள்ளே நீங்க ஜித்தேஷ் கிட்ட ஏதாவது சொல்லணும்னு தோணுச்சுனா சொல்லுங்க” என்று விட்டு நகர்ந்தார். சூசகமாக மன்னிப்பு கேள் என்பதுதான் அதன் அர்த்தம்.

ஜித்தேஷ் பார்வை பிரியனை திமிருடன் நோக்கியது. அந்த பார்வையே பிரியனை மன்னிப்பு கேட்கவிடவில்லை. எதுவும் பேசாமல் புல்வெளியிலிருந்த சாய்வு இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள உதய் அவன் அருகே வந்து நின்று, “பேசாம மன்னிப்பு கேட்டுட்டுங்க... இவ்வளவு பேர் பார்க்குற ஷோ வேற... தேவை இல்லாம உங்க இமேஜ்தான் பாதிக்கும்” என்று அறிவுரை கூற, பிரியன் முகம் கன்றிச் சிவந்தது. காரணமே இல்லாமல் அவன் மீதும் கோபம் வந்தது.

“உதய் ப்ளீஸ் என்னை கொஞ்ச நேரம் தனியா விடு” என்று விட, உதய் அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனைத் தனியாக விட்டு விட்டு உள்ளே வர, பிரியன் அமைதியாக அமர்ந்திருந்தான். நடந்த பிரச்சனை எல்லாம் குறித்த அவன் என்ன யோசித்தாலும் அவன் மூளை அவன் பக்கம்தான் நியாயமிருப்பதாகச் சொன்னது. சரி போனால் போகிறது என்று மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று நினைத்தால் கூட ஜித்தேஷ் முகத்தை பார்த்தால் கடுப்பும் கோபமும்தான் வந்தது அவனுக்கு.

ஈஷ்வர் இடைவேளை முடிந்து வந்து நிற்க, மீண்டும் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக முகப்பறையில் குழுமினார்கள். பிரியன் ஓர் ஓரமாக வந்து அமர்ந்தான். ஈஷ்வரின் பார்வை பிரியனை நேராக நோக்கியது.

“நீங்க தனியா அவர்கிட்ட மன்னிப்பு கேட்பீங்கன்னுதான் பிரேக் கொடுத்தேன்... ஆனா நீங்க கேட்கல... இதுல ஒரே ஒரு விஷயத்தை யோசிச்சு பாருங்க... நீங்க செஞ்சதை ஒரு வேளை ஜித்தேஷ் உங்களுக்கு செஞ்சு இருந்தா” என்ற கேள்வி நேரடியாகப் பிரியனைத் தாக்கியது.  அதுவும் இல்லாமல் ஈஷ்வர் மன்னிப்பு என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்ப கூறினார்.

வெளியே தன் ஈகோதான் பெரியது என்று இருந்திருக்கலாம். ஆனால் இங்கே அப்படி முடியாது என்று பிரியனுக்கு விளங்கிவிட்டது. அதற்கு மேல் தன் ஈகோவை விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழியும் அவனுக்கு  இருக்கவில்லை.  

“நான் செஞ்சது தப்புதான்... அந்த நேரத்துல அப்படி ரியாக்ட் பண்ணி இருக்க கூடாது” என்று விட்டு திரும்பி ஜித்தேஷிடம், “என்னை மன்னிச்சிடுங்க” என்று பிரச்சனையை முடித்தான்.

அவன் மனமோ முகமோ அந்த மன்னிப்பை யாசிக்கவில்லை. வெறும் வாய் வார்த்தைக்காகதான் கேட்டான் என்று அவனுக்கு மட்டும் இல்லை. அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்திருந்த ஒவ்வொருவருக்கும் துல்லியமாகத் தெரிந்தது.

மக்கள் தாங்கள் உருகி உருகி  ரசித்த நீயும் நானும் தொடரின் அன்பு என்ற கதாபாத்திரத்திற்கும் இவனுடைய உண்மையான குணத்திற்கும் வெகுதூரம் என்று அந்த நொடி விளங்கிக் கொண்டனர். அதுவும் இல்லாமல் அந்த தொலைக்காட்சி தொடரில் எல்லோரிடமும் பரிவுடன் நடந்து கொண்ட அன்புவைத்தான் அவர்கள் ரசித்தது நேசித்தது எல்லாம். இந்த ஈகோ பிடித்த பிரியனை இல்லை. இனி பிரியனை அவர்களால் அன்பு என்ற போலியான முகத்திற்குள் வைத்துப் பார்க்கவும் முடியாது.

இது போன்ற நிகழ்ச்சிகளின் சூட்சமமும் அதுதானே. நாம் போட்டுக் கொண்டிருக்கும் போலி முகமூடிகள் எல்லாம் தானாகவே கழன்றுவிடும். இது போன்ற முகமூடிகள் பிரபலங்களுக்கு மட்டும் இல்லை. பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் உண்டு. வேலை செய்யும் இடத்தில் ஒரு முகம். வீட்டில் மனைவியிடம் ஒரு முகம். சமூக ஊடகங்களில் நியாயஸ்தன் போர்வையில் ஒரு முகம். இப்படி பல முகங்கள்.

இதில் சிலர் தங்கள் உண்மை முகத்தையே பேக் ஐடிகள் எனும் போலி முகங்கள் அல்லது போலி அடையாளங்களில் ஒளிந்து கொண்டுதான் காட்டுகிறார்கள். இந்த நவீன புரளி பேசும் நிகழ்ச்சி அப்படியான எல்லோருக்கும் தீனி போட்டது.

நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு வீடுகளிலும் நாயகனாகக் கொண்டாடப்பட்ட பிரியன் அதே வீடுகளில் வில்லனாக்கப்பட்டான்.

அன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த வினயிற்கு உள்ளுர குளுகுளுவென்று இருந்தது. அவன் தன் மனைவியிடம் ரகசியமாக, “அன்னைக்கு என் மேல இதேபோலதானே கை நீட்டுனான்... ஆனா மன்னிப்பு கேட்க மனசு வரலையே... அவ்வளவு ஈகோ.... ஆனா இப்போ இந்த ஷோல சாரால ஒன்னும் பேச முடியல” என்று நக்கலடித்து கூற, “ஷ்ஷ் சும்மா இருங்க... அத்தை மாமா இருக்காங்க... பசங்க வேற இருக்காங்க” என்று கணவன் தோளைத் தட்டி அடக்கினாள்.

அவனைப் போலக் கேசவன் மற்றும் ஜானகியால் சந்தோஷப்பட முடியவில்லை. என்னதான் இருந்தாலும் மகளின் கணவனாயிற்றே. அவர்களின் கவலைக்கு நிகரான தவிப்பில் கவிதா அந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்திருந்தாள். ஹரிதாவோ அன்று நிகழ்ச்சியைப் பார்க்காமலே உறங்கிவிட்டாள்.

அவளுக்கு அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில் எல்லாம் எப்போதும் ஆர்வம் இல்லை. தன் சகோதரி கவிக்காகத்தான் பார்த்தாள். அந்த ஆர்வம் நாளடைவில் அவளுக்குக் குன்றிவிட்டது. ஆனால் கவிதா அப்படி இல்லை. அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டுத்தான் அவள் உறங்கவே செல்வாள். இன்றைய அத்தியாயம் முடிந்ததுமே மனவேதனையில் இருந்த கவி வீட்டின் வெளியே இருந்த அம்மாவைத் தேடி ஓடினாள்.

நிலாவிற்கு அந்த நிகழ்ச்சியைப் பார்க்க விருப்பம் இல்லை. ஆதலால் அவள் வெளியே வந்து மாடிக்கு போகிற படிக்கட்டில் அமர்ந்து கொண்டு தன் மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மும்முரமாக வேலையில் மூழ்கி இருக்க, கவிதா அமைதியாக வந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“இன்னும் தூங்க போலயாடி நீ” என்று நிலா வினவ, “ம்ஹும்” என்ற கவியின் குரலில் வருத்தம் நிரம்பி இருந்தது. உடனே மகள் முகத்தைப் பார்த்தாள். அவள் முகமும் வாடிப் போயிருக்க, தன் மடிக்கணினியை ஓரமாக வைத்து விட்டு மகள் புறம் திரும்பி அமர்ந்து, “என்ன கவி... என்னாச்சு?” என்று கேட்டாள்.

கவி அவள் தோளில் சாய்ந்தபடி, “அப்பாவை சாரி கேட்க சொல்லிட்டாங்க” என, நிலாவிற்கு விஷயம் புரிந்துவிட்டது.

“இங்க பாரு கவி” என்று மகள் முகத்தை நிமிர்த்தியவள், “அது வெறும் சாதாரண ஷோதான்” என,

“இல்ல அந்த ஷோ வேண்டாம்... பேசாம அந்த ஷோல இருந்து அப்பாவை வர  சொல்லிடலாம்” என்ற கவியின் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது. மகளை அந்த நிகழ்ச்சி எந்தளவு பாதிக்கிறது என்று தெரிந்த போதும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவள் கண்ணீரை தன் நைட்டியில் துடைத்து விட்டாள். அந்த நொடி மகளின் கலக்கத்தை தெளிவுபடுத்த வேண்டுமென்ற மனநிலையுடன் அவளிடம் நிலா பேச்சு கொடுத்தாள்.

“அப்பாவை அந்த ஷோவை விட்டு இப்போதைக்கு வர எல்லாம் சொல்ல முடியாது கவி”

“ஏன்?”

“அந்த ஷோல ஜெயிக்கணும்னா அப்பா உள்ளேதான் இருக்கணும்... வெளியே இருந்து யாரும் உள்ள இருக்கவங்கள கான்டக்ட் பண்ண கூடாது... உள்ளே இருந்தும் யாரும் வெளியே இருக்கவங்கள கான்டக்ட் பண்ண முடியாது” என்று அவள் நிலைமையை உணர்த்த,

“அப்போ அப்பாகிட்ட எப்படி பேசுறது மா” என்று கேட்ட மகளைப் பார்த்து,

“ஷோல இருந்து அப்பா வெளியே வந்ததான் பேசலாம் கவி” என்றாள்.

“அப்பா எப்போ வெளியே வருவாரும்ம்மா” என்று கவியும் விடாமல் கேள்விகளைத் தொடுக்க மகளை மிதமான புன்னகையுடன் ஏறிட்ட நிலா,

“நீதானே கவி அப்பா இந்த ஷோல ஜெயிக்கணும்னு சொன்ன” என்றதும், “அது” என்று இழுத்த மகளிடம்,

“உங்க அப்பா ஜெயிக்கணும்னு நீ ஆசைப்படுறியா இல்லையா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்” என்று கவி தலையசைக்கவும், “அப்போ அப்பா உள்ளேதான் இருக்கணும் கவி... உள்ளே இருந்து எல்லா பிரச்சனையையும் ஃபேஸ் பண்ணனும்... சால்வ் பண்ணனும்... அதுதான் இந்த ப்ரோக்ரோமோட சாலஞ்

நம்ம அன்னைக்கு ஒரு படம் பார்த்தோமே... ஞாபகம் இருக்கா? அதுல வந்த ஸ்கை கேரக்டர் என்ன பண்ணுச்சு... எல்லா  சோதனைகளையும் கடந்து போராடித்தானே ஜெயிச்சுச்சு... அவளுக்கு வெற்றி ஈஸியா கிடைச்சிடுச்சா என்ன? அப்படிதான் எல்லோருக்கும்... போராடணும்... உறுதியா தைரியமா இருக்கணும்... நிதனாமா யோசிச்சு செயல்படணும்... அப்போதான் ஜெயிக்க முடியும்” என்று நிலா சொன்னதை எல்லாம் அமைதியாகக் கேட்டு உள்வாங்கிய கவி,

“அப்போ அப்பாவும் ஜெயிப்பார்தானே மா” என்று மீண்டும் கேட்க அந்தக் கேள்வியை நிராசையுடன் எதிர்கொண்ட நிலா பெருமூச்செறிந்தாள். முன்பாவது அவனுக்கு வெற்றி பெற கொஞ்சம் வாய்ப்புகள் இருந்தன. இப்போதைய நிலைமையில் ஒரே ஒரு சதவீத வாய்ப்பு கூட அவனுக்கு இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.

அதுவும் இல்லாமல் நடக்கும் சூழ்நிலைகள் பிரச்சனைகள் அனைத்தும் அவனுக்கு முற்றிலும் எதிராக இருந்த அதேநேரம் அவனும் அவற்றிற்கு எல்லாம் எதிராகத்தான் இருந்தான். ஏடாகூடமாக நடந்து கொண்டான்.  

அவனது முன்கோபம், சண்டை, நிதானமில்லாமல் வார்த்தைகளை விடுவது போன்ற குணங்களை வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் நீடிக்கலாமே ஒழிய, வெல்ல முடியாது. முக்கியமாக மக்களின் மனங்களை வெல்லவே முடியாது. இப்படியே போனால் சின்ன திரை வெள்ளி திரை என்று எங்கும் அவனுக்கு வாய்ப்பும் கிடைக்காது என்று அவள் யோசித்திருக்கும் போது,   

“ம்மா... ம்மா அப்பா ஜெயிப்பாருதானே... சொல்லுங்க ம்மா” என்று கவி நிலாவை உலுக்கினாள். தன் யோசனையிலிருந்து மீண்டு வந்த நிலா மகளுக்குப் பொய்யான வாக்குறுதியைக் கொடுக்க விரும்பவில்லை.

“அது உங்க அப்பாவை பொறுத்தது கவி... அவர் கோபப்படாம யார்கிட்டயும் சண்டைப் போடாம நிதானமா எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணா வாய்ப்பு இருக்கு”  என்று சொல்ல,

“அப்பா எல்லாம் பண்ணுவாரு... எனக்கு தெரியும்” என்ற கவியின் குரலில் தன் தந்தை வெற்றி பெற வேண்டுமென்ற ஆசையை விட அதிக பிடிவாதம் தெரிந்தது.

‘அப்பாவுக்கு தப்பாத பொண்ணு’ என்று மகளை குறித்து மனிதில் எண்ணி கொண்டாள். எல்லாவற்றிற்கும் மேல் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தீர்மானிப்பது பல கோடி மக்களின் ஓட்டும் இதற்கு பின்னணியிலிருக்கும் வியாபாரமும்தான். அதெல்லாம் இந்த சின்னவளுக்குச் சொன்னால் புரியாது.

“சரி கவி டைமாகுது... நீ போய் தூங்கு” என்று அவளை அனுப்பிவிட, “நீயும் வாம்மா” என்று அம்மாவின் கரத்தை பற்றி இழுத்தாள்.

“எனக்கு வேலை இருக்குடா”

“ம்மா ப்ளீஸ் ம்மா” என்றவள் கெஞ்ச அதற்கு மேல் அவளால் மறுக்க முடியவில்லை.

“சரி சரி... லேப்டாப் எல்லாம் மூடி எடுத்துட்டு வரேன் நீ போ” என்றதும் கவி உள்ளே சென்றாள். அதன் பின் நிலா தன் மடிகணனியை அணைத்து மூடி வைக்கும் போது அவள் செல்பேசி அடித்தது.

“இந்த நேரத்துல யாரு” என்று எடுத்துப் பார்த்தவள் சிவாவின் பெயரைப் பார்த்ததும் வியப்புற்றாள். பெரும்பாலும் இது போன்ற நேரங்களில் அவர் அழைக்க மாட்டார். அதுவும் இல்லாமல் அன்று காரில் வந்திறங்கிய போது அவர் சொன்ன வார்த்தை வேறு அவளை நெருடிக் கொண்டே இருந்ததில் அவளும் அவரிடம் அதன் பின் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

அதேநேரம் அவர் அழைப்பை எடுக்காமலும் இருக்க முடியவில்லை. தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அவளுக்கு முதல் ஆளாய் உதவ முன்வருவது அவர்தான் . அவளுக்கு குழப்பம் வரும் போது அவள் தேடி செல்வதும் அவரைத்தான்.

அன்று சிவாவிடம் பேசி இருக்காவிட்டால் இந்தளவு கூட அவள் மனதில் தெளிவு ஏற்பட்டிருக்காது. அந்த நன்றியை எண்ணியவள் அவர் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“சொல்லுங்க தலை”

“தூங்கிட்டு இருப்பியோனு நினைச்சேன்” அவர் குரலில் ஒரு மாதிரி குழைவு இருந்தது.

‘குடித்திருக்கிறாரோ? ச்சை ச்சே இருக்காது குடிச்சிட்டு எல்லாம் நம்மகிட்ட பேச மாட்டாரு’ என்று எண்ணியவள் அவர் கேள்விக்கு பதிலாக, “இல்ல... இவ்வளவு நேரம் வேலை செஞ்சுட்டுதான் இருந்தேன்... இப்பதான் படுக்க போகலாம்னு எழுந்தேன்... அதுக்குள்ள நீங்க கூப்பிட்டீங்க... பரவாயில்ல சொல்லுங்க” என,

“நான் ஒன்னும் உன்னை டிஸ்டரப் பண்ணிடலயே” என்றார். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏன் இப்படி சுற்றி வளைத்து பேசுகிறார் என்று குழம்பியவள்,

“டிஸ்டபன்ஸா... உங்களை போய் அப்படி நான் நினைப்பானா தலை” என்ற அவர் மீதான மதிப்பில் அவள் சொல்ல,

“நீயும் என்னை எல்லோரையும் மாதிரி தலை தலைன்னு கூப்பிட்டு தள்ளி வைக்காத நிலா... சிவானு கூப்பிடு” என்றவர் பேசியதை அவளால் நம்ப முடியவில்லை.

“குடிச்சு இருக்கீங்களா?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்.

“ம்ம்ம்... எப்பவும் விட கொஞ்சம் அதிகாவே” என்றவர் சொல்ல அவளுக்கு அதனை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அந்த அழைப்பைத் தொடர தயக்கமாக இருந்தது. அதேநேரம் துண்டிக்கவும் மனம் வரவில்லை.

 அந்த சமயத்தில் அங்கே வந்து நின்ற கவிதா, “ம்ம்மா... தூக்கம் வருது வா ம்மா” என்று அவசரப்படுத்த அதையே சாக்காக வைத்து கொண்டு,

“பாப்பாவுக்கு தூக்கம் வந்திருச்சான்... நா...ன் அப்புறமா பேசட்டுமா” என்று தவிர்க்க பார்த்தாள்.

“எனக்குன்னு பேச கூட நாதி இல்லாம போயிடுச்சு... சரி போ... நீ போனை வைச்சிட்டு ... போய் உன் குழந்தைங்கள பாரு” என்றவர் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட அவளுக்கு அவர் சொன்ன கடைசி வார்த்தை குற்றவுணர்வை ஏற்படுத்தியது. அதேநேரம் அவர் பேசிய விதம் அவளைப் பெரிதுமாக குழப்பியது.

‘ஒரு வேளை... என்னை காதலிக்கிறாரா?’ இந்தக் யோசனையே அவளுக்குப் படுஅபத்தமாக இருந்தது. ஆனால் அப்படி இருக்கவும் வாய்ப்பிருப்பதாகவே அவருடைய சமீபத்திய உரையாடல்கள் அவளுக்கு சொன்னது.

இந்த யோசனையுடன் உள்ளே வந்து தன் மடிக்கணினி எல்லாம் எடுத்து வைத்து விட்டு அவள் படுப்பதற்குள் கவி உறக்க நிலைக்குச் சென்று விட்டாள். மகள் நெற்றியை வருடி முத்தமிட்டவள் பின் அவளை அப்படியே அணைத்தபடி படுத்துக் கொண்டாள்.

படுத்ததும் உறங்கிவிட்டவளுக்கு நடுநிசியில் திடீரென்று உறக்கம் களைந்துவிட்டது. மேஜையிலிருந்த அவள் செல்பேசி ஓயாமல் சத்தமிட்டதுதான் அதற்கு காரணம். மேலும் அது மின்னி மின்னி அணைந்ததை கண்டு அதனை கையிலெடுத்துப் பார்த்தாள் நிலா.

பிரியன் படத்தைப் போட்டு படுமோசமாகக் கலாய்த்து வந்திருந்த மீமை எல்லாம் அவளுடன் பணிபுரிந்த ஊழியன் ஒருவன் அனுப்பி இருந்தான். அவனுடைய எண்ணைச் சேமித்து வைத்திருந்தாலே ஒழியப் பெரிதாக அவன் அவளுக்கு பழக்கமும் இல்லை. அதனை எல்லாம் பார்த்ததுமே அவளுக்கு எரிச்சலானது.

‘யாருடா அவன் பரதேசி... சை... இவனுங்க எல்லாம் எங்கிருந்து வந்து குதிக்கிறானுங்கனு... என் தூக்கத்த கெடுக்கணு’ அந்தக் கணமே அவனுடைய எண்ணைத் தடை செய்தாள். ஆனால் அத்துடன் அவள் உறக்கமும் தொலைந்து போனது.

அந்த நொடி கவி கவலையுடன் பேசியதை பற்றி எண்ணியவளுக்கு இன்றைய அத்தியாயம் குறித்து மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டானது. முகநூலை இன்ஸ்டால் செய்தாள்.

அவள் ஒன்றைப் பார்க்கப் போய் மற்றொன்று... மற்றொன்றைத் திறக்கப் போய் மற்றொன்று என்று விஷயங்கள் சங்கிலியாகத் தொடர்ந்தன.

“தலைக்கணம் பிடிச்சவன்... ஈகோ பிடிச்சவன்” என்று பிரியன் படத்தைப் பகிர்ந்து காட்டமாக விமர்சனங்களை எல்லாம் முகநூலில் கண்டவள் மறுபுறம் ஈகோஸ்டிக் பிரியன் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாவதை பார்த்துச் சோர்ந்து போனாள்.

 “ப்ச்” என்று ஒரு வித சலிப்புடன் செல்பேசியை எடுத்து வைக்கக் எத்தனிக்கும் போதுதான் சிவாவிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்திருந்ததை கவனித்தாள்.

“சாரி குடிச்சிட்டு தேவை இல்லாம ஏதேதோ உளறிட்டன்” என்று அனுப்பி இருக்க, அவள் மனம் அந்த மன்னிப்பில் சமாதானம் அடையவில்லை.

“குடிச்சதால மட்டும்தான் நீங்க அப்படி எல்லாம் பேசுனீங்களா? ஆமா உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க... அதை வெளிப்படையா சொல்லுங்க” என்று ஏற்கனவே இருந்த கடுப்பில் வேகமாக பதிலடித்து அனுப்பிவிட்டாள். பின்னரே எதற்கு இப்படி அனுப்பினோம் என்று யோசித்தவள் அதனை அவசரமாக அழிக்க எத்தனிப்பதற்குள் பளூ டிக் வந்தது.

‘ஐயோ!’ என்று அவள் தலையை பிடித்து கொண்ட அடுத்த நொடியே சிவாவிடமிருந்து பதில் வந்தது.

*******

Her stories குடும்ப நாவல் கட்டுரை தொடரின் அடுத்த அத்தியாயம் லிங்க் 

இப்படிக்கு இலக்கியநாசினி - 9

shanbagavalli has reacted to this post.
shanbagavalli
Quote

Priyan ego ah vittu eppo velila varuvano appo dan avan ninaichadu nadakum inda madiri game la porumai um telivum irukanum, thalao over ah kudichitu manasula irukura ellame pesa poraro

Quote

Super ma 

monisha has reacted to this post.
monisha

You cannot copy content