You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 2

Quote

2

(மு. கு- AI தொழில்நுட்பம் மிகவும் அருமையாக உள்ளது. அதன் படைப்பாற்றல் உண்மையிலேயே வியக்க வைக்கிறது. அதனால இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் காட்சிகளுக்கு உருவம் கொடுத்து அப்லோட் செஞ்சா நல்லா இருக்கும்னு யோசிச்சேன். ஆர்வகோளாறு மாதிரிதன் இருக்கும். கண்டுக்காதீங்க. கதையை படிச்சு உங்கள் கருத்தை மட்டும் சொல்லிட்டு போங்க)

ஹரிதாவின் சிறிய கூந்தலில் குட்டியாக பின்னலிட்டு ரிப்பனை பிணைத்து கட்டுவதற்குள் வெண்ணிலாவுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. அடுத்து கவிதாவிற்கு வேறு கட்ட வேண்டும்.

“ஏய் ரிப்பனை எடுத்துட்டு வாயேன்டி” என்று நிலா சத்தமிட இடையில் பாதி அவிழ்ந்து நிலையிலிருந்த உடையை கையில் பற்றியடி ஆடி அசைந்து வந்த கவிதா இன்னும் நிலாவின் பிபியை தாறுமாறாக ஏற்றிவிட்டாள்.   

“கடவுளே! யூனிபார்மை கூட ஒழுங்கா போடலையாடி நீ” என்று கடுப்பானவள் அவளுக்கு சீருடையை சரியாக அணிவித்து தலையை பின்னி கட்டும் போது, “ம்மா டைட்டா கட்டுமா... ஸ்கூல கழண்டுக்குது” என்றாள்.

“நான் இதை போடுறதே பெரிசு... இவ ஒருத்தி” என்று எரிச்சலானாலும் ரிப்பனை இழுத்து கட்டி, “போதுமா டைட்டா இருக்கா?” என்று கேட்க,

“ஹ்ம்ம் ஓகே” என்றாள் கம்மிய குரலில். அத்துடன் முடியவில்லை. வீட்டு வாயிலை தாண்டுவதற்குள் இருவரும் சராமாரியாக வாங்கி கட்டி கொண்டார்கள்.

நிலா தனியாக இருந்தால் வழக்கமாக அவர்கள் காலை வேளை இப்படி கரடுமுரடாகத்தான் இருக்கும். ஆனால் பிரியன் உடன் இருந்தால் அந்த நாள் அமைதியும் நிதானமுமாக நகரும். அதுவும் மகள்கள் இரண்டும் அவனுக்கு அப்படியொரு செல்லம். இருவரையும்  ஒரு சொல் சொல்ல விட மாட்டேன்.

“நான் பார்த்துக்கிறேன்... நீ போடி... இதுக்கெல்லாமா டென்ஷனாவ” என்று அவனே மகள்களுக்கு சீருடை அணிவித்து தலைவாரி அழகாக குடுமி போட்டு விட்டு தயார் செய்வான். அதன் பின் அவர்கள் பைகளை தயார் செய்து தன் இரண்டு தோள்களிலும் மாட்டி கொண்டு,

“அம்மாவுக்கு பை சொல்லுங்க” என்று விட்டு வாயிலை தாண்டுபவன்,

“கார் சாவி... கார் சாவியை எடுத்துட்டு வந்துடுறேன்” என்று சாவியை தேடும் சாக்கில் வீட்டிற்குள் வருபவன் பின்னிருந்து அவள் இடையை அழுந்த பற்றி கொள்ள அவளுக்கு உடல் சிலிர்த்து போகும்.

“தேவ் விடு... பசங்க” எனும் போதே,

“நான் வர்றதுக்குள்ள குளிச்சு பிரஷா இருக்கணும்” என்று காது மடலில் உரசியபடி பேசும் அவன் உதடுகள் அவள் கழுத்தில் அழுந்த பதிந்து விலகியதை எல்லாம் இப்போது நினைக்கையில் அவள் உடலும் உள்ளமும் தாபத் தீயில் எரிந்தது.

அவள் அப்படியே அசைவின்றி முகத்தை மூடி கொண்டு விட்டாள்.

“ம்மா ம்மா” என்று ஹரிதா அவள் கழுத்து வளைவை திருப்பி முகத்தை பார்க்க,

“ஒன்னும் இல்லடா” என்று சட்டென்று தன் முகத்தை துடைத்து சரி செய்து கொண்டாள்.

“அம்மா டேடியை ரொம்ப மிஸ் பண்றாங்க” என்று கவிதா மெல்லிய குரலில் சொல்ல நிலாவின் சோகம் மறைந்து உதட்டோரம் புன்னகை எட்டி பார்த்தது.

இருவரில் கவிதா அதிக விஷமம். படிப்பு பேச்சு என்று எல்லாவற்றிலும் தெளிவு. அதிக முதிர்ச்சி. ஆனால் ஹரிதா அப்படி கிடையாது. எது சொன்னாலும் அவளுக்கு புரிய சில நிமிடங்கள் பிடிக்கும். ஹரியை தூண்டி விட்டு பேச வைப்பது சேட்டை செய்ய வைப்பது எல்லாம் கவிதான்.

கவிதாவின் முதர்ச்சி ஒரு வித அழகு என்றால் ஹரிதாவின் அறியாமை ஒரு தனி அழகு. 

மகள்களை பார்த்து தன் சோகத்தை ஆற்றுப்படுத்தி கொண்டவள் அவர்கள் முகத்தை துடைத்து பொட்டு வைத்து பள்ளிக்கு தயார் செய்தாள். இரண்டும் அந்த சீருடையில் பொம்மை கணக்காக இருந்தன. அவர்கள் புன்னகை  முகபொலிவு நிறம்  எல்லாம் அப்படியே அப்பாவிடமிருந்து வந்ததுதான்.

தனித்தனியாக சொல்வானேன். இரண்டுமே அப்படியே ப்ரியன்தான். மகள்களை இரு கைகளில் சேர்ந்தார் போல கட்டியணைத்த நிலா அவர்கள் கன்னங்களில் முத்தம் பதிக்க பதிலுக்கு அந்த குட்டி அழகிகளும், “லவ் யூ மா” என்று சொல்லி அவளது இரு பக்க கன்னத்தையும் முத்தமிட்டு நனைத்தார்கள்.

“சரி ஓகே ஓகே ஸ்கூலுக்கு கிளம்பலாம்” என்று கண்களில் நிறைந்த நீரை துடைத்து கொண்டு அரக்க பறக்க அவர்கள் இருவரின் புத்தக பைகள் மற்றும் மதிய உணவு பையை தூக்கி கொண்டு வெளியே வந்தாள்.

அதன் பின் இரவு அடுக்கி வைத்த பெட்டிகள் இரண்டையும் வெளியே தள்ளி எடுத்து வந்து வாயிலில் வைக்க, “ம்மா இன்னைக்கே பாட்டி வீட்டுக்கு போறோமா?” என்று கவி கேட்க,

“ஆமா நேரா ஸ்கூல இருந்து சாயந்திரம் பாட்டி வீட்டுக்கு போக போறோம்”  என்று சொல்லி கொண்டே வெள்ளை ஷுவை துடைத்து இருவருக்கும் இறங்கி அமர்ந்து போட்டுவிட,  

“என்ன பெட்டி எல்லாம் இருக்கு வாசலில... ஓ... ஊருக்கு போறியா நிலா” என்று கேட்டு கொண்டே வந்து நின்றார் எதிர் வீட்டாம்மள்.

“ஆமா ஆன்டி” என்றவள் தயக்கத்துடன் அவர் அடுத்து என்ன கேட்க போகிறாரோ என்று கவலையுறும் போது,

“நேத்து ஷோல பிரியனுக்கு அவ்வளவு க்ளாப்ஸ்... செமையா பேசுனான்” என்றவர் அந்த நிகழ்ச்சியை பற்றியும் பிரியனை பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார். அவள் இருக்கும் மனநிலைக்கு அதெல்லாம் இன்னும் எரியும் தீயில் எண்ணெய்யை வார்த்தது போலத்தான் இருந்தது.   

“சரி ஆன்டி ஸ்கூலுக்கு டைமாகுது” என்று ஒரு மாதிரி அவரது பேச்சிலிருந்து நழுவி கொண்டவள் அவர்கள் தளத்திலிருந்த மின்தூக்கியின் முன் மகள்கள் இருவரையும் நிறுத்தி விட்டு தன் பெட்டிகள் இரண்டையும் தூக்க முடியாமல் தூக்கி வந்து உள்ளே வைத்தாள்.

ஐந்தாவது மாடியிலிருந்து விர்ரென்று அந்த மின்தூக்கி கீழே இறங்கியது. அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் வந்ததும் அவள் தன் செல்பேசி எடுத்து பேச சில நிமிடத்தில் ஒரு வாடகை கார் வந்து அவர்கள் முன்னே நிற்க,

“நம்ம கார்ல போலையாமா” என்று கேட்டாள் கவிதா.

“நம்ம காரை பாட்டி வீட்டுல நிறுத்த இடம் இருக்காது” என்று சொல்ல,

“ஏன்... அங்க மாமா கார் நிற்குதா?” என்று அடுத்தடுத்து கேள்விகள் மற்றும் சந்தேகங்களை தொடுத்த மகள்களை சமாளித்து,

“உள்ளே ஏறி உட்காருங்கடி” பெட்டியை ஓட்டுநரிடம் கொடுத்து விட்டு மகள்களை ஏற்றி அமர வைத்தாள்.

“ம்மா அப்பா எப்போமா வருவாரு” கவிதா வாயை மூடியதும் ஹரிதா ஆரம்பித்துவிட,

“எனக்கு தெரியாது... கம்னு வாங்க... என்னை டென்ஷன் படுத்தாதீங்க” என்றதும் கவிதா ஹரியின் காதில் ஏதோ ஓதினாள். சகோதிரிகள் இருவரும் ரகசியமாக பேசி கொண்டே வர அவள் அவர்களை கண்டு கொள்ளாமல் தன் செல்பேசியை திறக்க அதில் பிரியன் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்கான வாழ்த்துரைகளாக குறுந்தகவல்கள் வந்து கொட்டி இருந்தன.

கடுப்பில் மீண்டும் அதனை மூடிவிட்டாள். குழந்தைகள் இருவரையும் பள்ளியில் இறக்கிவிட்டு, “சாயந்திரம் நானே வந்து கூட்டிட்டு போறேன்.. நான் வர வரைக்கும் கிளாஸ்விட்டு வெளியே  வர கூடாது” என்று அறிவுறுத்த,

“ம்மா நீ வர லேட்டாசுனா... நானும் ஹரியும் வெளியே கிரவுண்ட்ல விளையாடிட்டு இருக்கோம்” என்றாள் கவிதா. மகள்களை கண்டிப்புடன் பார்த்தவள்,

“நீங்க வெளியே வரவும் கூடாது... நானும் லேட்டா வர மாட்டேன்... கவி உனக்குத்தான் சொல்றேன்” என்று எச்சரித்து அவர்களை பள்ளிக்கு உள்ளே அனுப்பிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

உடலும் மனமும் சோர்ந்து களைத்து அப்படியே இருக்கையில் பின்னே சாய்ந்து கொண்டவளை நினைவலைகள் சுழற்றி அடித்தன.

பிரியனும் அவளும் ஒரே கல்லூரி. ஆனால் வேறு வேறு துறை. அவன் விஸ் காம். அவள் ஊடகவியல். முதல் வருடத்தில் பெரிதாக இருவருக்குமே அறிமுகம் இல்லை.

இரண்டாம் வருடத்தின் முடிவில்தான் நேருக்கு நேராக நின்று முகம் பார்த்து பேசி கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.

சென்னையின் உள்ள ஒரு மிக பெரிய கல்லூரி விழாவில் அனைத்து கலை கல்லூரி மாணவர்களும் கலத்து கொண்டு தங்களது  நடிப்பு நடன மற்றும் பாடும் திறமைகளை வெளிகாட்ட போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரியன் நடனம் மற்றும் நாடகம் என்று இரண்டிலும் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்தான்.

நாடகத்திற்கான கதை குறித்த கலந்துரையாடல்கள் பிரியனின் வகுப்பறையில் நடந்து கொண்டிருந்தது. அவளது தோழி ரேஷ்மாவும் அந்த நாடகத்தில் நடிப்பதாக இருந்ததால், “ஏய் கொஞ்ச நேரம்தான்டி... முடிச்சுட்டு போலாம்” என்று நிலாவையும் அங்கே இழுத்து வந்து அமர வைத்துவிட்டாள்.

அவர்கள் கலந்துரையாடலில் நிலா எதார்த்தமாக தனக்கு உதித்த ஒரு யோசனையை சொல்லி வைக்க அது எல்லோருக்கும் பிடித்துவிட்டது. முக்கியமாக பிரியனுக்கு.    

“ஏய் சூப்பர்.. இதே நல்லா இருக்கு... இதையே பண்ணலாம்” என்று தீர்மானித்தவன் அப்போதுதான் அவளை கவனித்து,

“நம்ம டிபார்ட்மென்டா” என்று அவளை குறிப்பிட்டு கேட்க,

“இல்ல... என் டிபார்ட்மென்ட்... பேர் வெண்ணிலா” என்று ரேஷ்மா அவளை அறிமுகம் செய்விக்க,

“என் பேர் தேவிபிரியன்” என்று சகஜமாக அவளுக்கு கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

அந்த அறைக்குள் நுழைந்ததிலிருந்து அவளால் அவன் முகத்தை விட்டு வேறு எங்கும் பார்வையை திருப்ப முடியவில்லை. அத்தனை வசீகரமான முகம் அவனுடையது.  சிரமப்பட்டே தன் விழிகளை வேறு புறமாக அவள் திருப்பி கொள்ள நேரிட்டது.

இதற்கிடையில் அங்கிருந்து எல்லோரும் சிரித்து அரட்டை அடித்து கொண்டே பேசினாலும் அவன் கொஞ்சம் இறுகிய முகத்துடனேயே அமர்ந்திருந்தான். அவளிடம் அறிமுகம் செய்து கொள்ளும் போதுதான் கொஞ்சமே கொஞ்சம் அவன் உதடுகள் சென்டி மீட்டர் அளவுக்கு விரிந்தன.

அவனுடைய கை குலுக்கல் மற்றும் அந்த சிக்கனமான புன்னகையே அவள் மனதை புரட்டி போட இன்னும் ஒரு நொடி கூட அங்கே அமர்ந்திருக்க கூடாது என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.

“ரேஷ்மா எனக்கு டைமாகுது... நான் போகணும்” என்றவள் அங்கிருந்து நழுவி கொள்ள முயன்ற போது, “உன் பிரண்டை கொஞ்சம் கூப்பிடு” என்று ரேஷ்மாவை தூண்ட,

“நிலா இரு” என்று அவளை போக விடாமல் நிறுத்தினாள் ரேஷ்மா.

“கிளம்பணும்டி”

“எல்லாம் கிளம்பலாம்... நானும் வந்துடுறேன்” என்று சொல்லி கொண்டே ரேஷ்மா மீண்டும் அந்த வகுப்பிற்குள் நிலாவை அழைத்து போக முயல,

“இப்போ எதுக்கு என்னை கூப்பிடுற” என்றாள்.

“தெரியல பிரியன்தான் கூப்பிட சொன்னான்” என்று விட்டு அவளை உள்ளே கொண்டு வந்து நிறுத்திவிட,

“எனக்கு டைமாயிடுச்சு கிளம்பணும்” என்று பிரியன் முகத்தை பார்த்தும் பார்க்காமல் தோழியிடம் உரைத்தாள்.

“எல்லோருக்கும்தான் டைமாயிடுச்சு...  கிளம்பத்தான் போறாங்க” என்று சொல்லி கொண்டே பிரியன் தான் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து எழுந்து வந்து அவள் முன்னே நின்று,

“நீ நாளைக்கு ட்ராமாக்கு ஸ்க்ரிப்ட் எழுதிட்டு வந்துடு” என அவளுக்கு புரியவில்லை.

“நானா?” என்று விழித்தாள்.

“ஐடியா உன்னோடதுதானே... அப்போ ஸ்க்ரிப்ட் நீதானே எழுதிட்டு வரனும்” என்று அவன் கூற,

“இல்ல இல்ல எனக்கு இந்த ஸ்க்ரிப்ட் எல்லாம் எழுத வராது... அதுவும் இல்லாம இந்த காம்ப்டீஷன்லயும் நான் இல்ல” என்ற அவளுக்கு விட்டால் போதுமென்று இருந்தது.

“ஜர்னிலஸம் பண்ணிட்டு ஸ்க்ரிப்ட் எழுத தெரியாதுனா எப்படி?”

“எனக்கு இந்த மாதிரி ட்ராமா ஸ்க்ரிப்ட் எல்லாம் எழுத வராது”

“எல்லாம் வரும்... நாளைக்கு எழுதிட்டு வந்திடு” அவன் எழுதுகிறியா  என்றெல்லாம் கேட்காமல் அதிகாரமாக சொன்னதில் அவள் கடுப்புடன் ரேஷ்மாவை திரும்பி முறைக்க,

“ஏய் அவன் சொன்னதுக்கு நான் என்னடி பண்ணுவேன்” என,

“என்னால சத்தியமா ஸ்க்ரிப்ட் எல்லாம் எழுத முடியாது... எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று விட்டு போனவளுக்கு வீட்டுக்கு சென்றதிலிருந்து அவன் முகத்தை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

அதன் பின் வெள்ளை காகிதமும் எழுதுகோலையும் எடுத்து வைத்து மடமடவென்று ஒரு மணி நேரத்தில் அந்த நாடகத்தின் கதையை எழுதி முடித்து பையில் வைத்தாள். அடுத்த நாள் காலை அதனை ரேஷ்மாவிடம் கொடுத்து விடலாம் என்றுதான் நினைத்தாள்.

ஆனால் அதன் பின் பிரியனே வந்து கேட்டால் கொடுக்கலாம் என்று அமைதியாக இருந்துவிட அன்று மாலை அவள் எதிர்பார்த்தது போல பிரியனே அவளை தேடி கொண்டு வந்தான்.

அவன் கேட்பதற்கு முன்பாக அந்த தாள்களை நீட்டியவள், “எனக்கு தெரிஞ்சளவுக்கு எழுதி இருக்கேன்... மத்தபடி கரெக்ஷன்ஸ் எல்லாம்  உங்க டிராமாக்கு ஏத்த மாதிரி பண்ணிக்கோங்க... ஒரு வேளை நல்லா இல்லனு தோணினா கிழிச்சு போட்டுடுங்க... ஐ டோன்ட் மைன்ட்” என்று அதனை அவனிடம் கொடுத்து விட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவளுடன் நடந்து வந்த ரேஷ்மா குழப்பத்துடன், “ஏன் டி... என்கிட்ட எழுதிட்டு வர மாட்டேன்னுதானே சொன்ன... ஆனா எழுதிட்டு வந்து நீ பாட்டுக்கு அவன்கிட்ட கொடுத்துட்ட” என,

“வீட்டுக்கு போனதும் சரி எழுதுனா என்னனு தோணுச்சு... அதான் சும்மா எனக்கு தோணினத எழுதுனேன்... நல்லா இருக்குமானு எல்லாம் தெரியல” என்று அசட்டையாக பதிலுரைத்தாள். அடுத்த நாள் கல்லூரிக்குள் நுழையும் போதே அவளை எதிர் நின்று வரவேற்றது பிரியன்தான்.

“ஸ்க்ரிப்ட் வேற லெவல்... எழுத தெரியாது அப்படி இப்படினுட்டு நீ பாட்டுக்கு பயங்கரமா எழுதி இருக்க” என்றவன் பாராட்டுரை எல்லாம் கேட்டு அவள் நம்ப முடியாமல்,

“நிஜமாவா” என்றாள்.

“நிஜமாதான் சூப்பரா இருந்துச்சு” என்றான். அன்றைய நாள் முழுவதும் மேகத்தில் மிதந்து கொண்டிருக்கும் உணர்வுதான்.

அதன் பின் அவர்களின் நாடகத்திற்கான பயிற்சிகள் முழுவதிலும் பிரியன் அவளையும் விடாமல் பிடித்து வைத்து கொண்டான்.

“இப்படி பண்ணா நல்லா இருக்குமா... அப்படி பண்ணா நல்லா இருக்குமா” என்று எல்லாவற்றிற்கும் அவள் கருத்தையும் கேட்க அவளுக்கு பூரிப்பாக இருந்தது. இது போன்ற அனுபவங்கள் எல்லாம் அவளுக்கு புதிது.

அடுத்த நாள் போட்டிக்கு அவர்கள் நாடக குழுவுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்து கிளம்ப தயாராகி கொண்டிருக்க, “ஆல் தி பெஸ்ட்” என்று ஒவ்வொருக்கும் கை கொடுத்து, “நல்லா பண்ணிட்டு வாங்க”  என்று நிலா வாழ்த்து கூறினாள்.

“அப்போ நீ வரலையா” என்று அதிர்ச்சியாக கேட்ட பிரியன் அவள் வரவில்லை என்றதுமே, “அதெல்லாம் இல்ல நீ வந்தே ஆகணும்” என்று அடம் பிடித்து ஏதேதோ சொல்லி அவளை அழைத்து சென்றுவிட்டான்.

ஆனால் அவளுக்கோ அங்கே செல்ல துளி கூட விருப்பமில்லை.

“நான் கிளாஸ்ல இருந்துலாச்சும் ஏதாச்சும் உறுப்படியா பண்ணுவேன்... இங்க வந்து டைம்தான் வேஸ்ட்” என்று அவள் சலித்து கொள்ள,  

“இங்கேயும் நிறைய இன்டிரஸிட்டிங்கான எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் கிடைக்கும் நிலா” என்று சமாதானம் செய்து அவளை அங்கிருந்த அரங்கில் அமர வைத்தான். ஆனால் அவளுக்கு பெரிதாக ஆர்வமில்லை. அந்த நிகழ்சிகளில் பெரும்பாலானவை படுமொக்கையாகத்தான் இருந்தது. அவற்றில்  தனி மற்றும் குழு நடன போட்டித்தான் கொஞ்சம் நன்றாக இருந்தது. அதிலும் பிரியன் சோலோவில் கலந்து கொண்டிருந்தான்.

அவனுடைய நடனம் ஆரம்பித்து முடியும் வரை அவளால் கண்களை எடுக்கவே முடியவில்லை. அந்த பாட்டின் இசைக்கு ஏற்றார் போல அத்தனை இலகுவாக அவன் உடல் வளைந்து நெளிந்தது ஆடியதை பார்க்க அவளுக்கு வியப்புதான். அந்த சோலோ நடனத்தில் அவன் தன்னந்தனியாக ஆடி கலக்கி இருந்தான்.

அதனை தொடர்ந்து நாடக போட்டி ஆரம்பமானது. அதில் அவர்கள் குழுதான் கடைசி. அதுவும் முடிந்து அரைமணி நேரம் கழித்து அங்கே வந்த விருந்தினர்கள் ஒவ்வொரு போட்டியில் வென்ற கல்லூரிகளின் பெயர்களை அறிவித்தார்கள்.

நடன போட்டிக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. பிரியனுக்கு கிடைக்கும் என்று அவர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்க, அவன் பெயர் அறிவிக்கப்படவே இல்லை.   

“என்ன க்ரயிட்டிரியால ப்ரைஸ் கொடுக்குறானுங்க... அதுவும் அந்த எம் எஸ் காலேஜ்க்கும் போய் செகன்ட் ப்ரைஸ்... நியாயமே இல்ல” என்று மாறி மாறி புலம்பி தீர்த்து கொண்டவர்ககளுக்கு அதன் பின் நாடக போட்டியிலும் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போய்விட்டது.

“வாங்கடா போலாம்” என்று கிளம்ப தயாராகிவிட்ட நிலையில் பிரியன்தான் எல்லோரையும் நிறுத்தி அமர வைத்தான். அவன் முகம் இறுகி போயிருந்தது. அந்த தோல்வியை அவனால் தங்க முடியவில்லை என்பதை அவனது முக உணர்வுகள் அப்பட்டமாக காட்டி கொடுத்தன.

“நீ நல்லாதான் ஆடுன... இதெல்லாம் பெருசா எடுத்துக்காத... போட்டில ஜெயிக்கிறதோ தோற்கிறதோ முக்கியம் இல்ல... அதுக்கான முயற்சிதான் முக்கியம்” என்றவள் அவனுக்கு சமாதானம் கூற அவளை பார்த்து மிதமாக தலையசைத்தான். ஆனால் அவன் மனம் சமாதானமடைந்ததாக தெரியவில்லை.

மேடையில் நாடக போட்டிக்கான பரிசுகள் அறிவிக்கப்படுவதை அவன் கண்கள் கூர்ந்து பார்த்திருந்தன.  

மூன்றாவது பரிசு இரண்டாவது பரிசு என்று வேறு வேறு கல்லூரி பெயர்கள் அறிவிக்கப்பட்டதில், அவன் முகம் துவண்டு விட்டது.

“இட்ஸ் ஓகே தேவ்... நீங்க பார்டிஸிப்பேட் பண்ணதே பெரிய விஷயம்... ப்ரைஸ் வரலனா உங்க பெர்வாமன்ஸ் நல்லா இல்லன்னு அர்த்தம் கிடையாது... இதுக்கெல்லாம் அப்செட் ஆகா கூடாது... எல்லாமே அனுபவம்தான்” என்று அவள் அவனுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்கும் போதே முதல் பரிசுக்கு அவர்கள் கல்லூரி பெயர் அறவிக்கப்பட்டது.

யாருக்கும் ஒன்றுமே பெரியவில்லை. “என்னது... நம்ம காலேஜ் பேரை சொன்னாங்களா?” என்று ஆச்சரியத்துடன் அவர்களுள் எல்லோரும் ஒன்றுக்கு இரண்டு முறை சந்தேகமாக கேட்க, அப்போதுதான் பிரியன் நிமிர்ந்து அமர்ந்தான். அவன் முகத்தில் பழைய ஒளி மீண்டிருந்தது.

அவர்கள் கல்லூரியின் பெயரை தொகுப்பாளினி மீண்டும் அறிவித்தார்.

பரிசு வழங்கி கொண்டிருந்தவர் பிரபலமான சினிமா இயக்குநர் ரவி. “காங்கிராட்ஸ்... போங்க போங்க” என்று நிலா தன் நண்பர்களை உற்சாகத்துடன் மேடைக்கு அனுப்பிவிட யாருக்கும் கை கால் ஓடவில்லை.

அவசர அவசரமாக அவர்கள் மேடையை நோக்கி விரைய, பிரியன் அவள் கையை பிடித்து, “வா” என்று எழுப்பினான்.

“நான் எதுக்கு... நீங்க போங்க”

“வா நிலா” என்றவன் பிடிவாதமாக அவளையும் மேடைக்கு இழுத்து சென்றுவிட்டான்.

பிரபலமான சினிமா இயக்குநர் ரவி அவர்கள் கல்லூரி குழுவை பாராட்டி கை கொடுக்க, பிரியன் அவளையும் அருகே நிறுத்தி அந்த கோப்பையை வாங்க வைத்தான். அவள் வாழ்வில் நெகிழிச்சிமிகு தருணமாக அந்த நாளும் அந்த நிகழ்வும் அவளுக்கு பதிவாகி இருந்தது. 

அதுவும் பள்ளி காலத்தில் இருந்தே அவள் எந்த மேடையும் ஏறியதில்லை. பரிசு என்று ஒரு பேனா பென்சில் கூட வாங்கியது இல்லை. அப்படிப்பட்ட அவளை மேடையில் நிறுத்தி அந்த கோப்பையை வாங்கவும் வைத்து... அவளால் நம்பவே முடியவில்லை. எல்லாமே அவளுக்கு கனவு போலதான் இருந்தது.

அது மட்டும் அல்லாது இயக்குநர் ரவி அந்த கதைகருவை குறித்து பாராட்ட, பிரியன் அவளை முன்னே நிறுத்தி அந்த பாராட்டை அவளுக்கு வாங்கி கொடுத்தான்.

அந்த நொடி... அந்த கணம்... அவள் மனம் அவன் புறம் மொத்தமாக சாய்ந்துவிட்டது.  அவனை சத்தமில்லாமல் அவளுக்குள் காதலிக்க துவங்கிவிட்டாள்.

பதிமூன்று வருடங்கள் கடந்து விட்ட போதும் அவன் மீதான அந்த காதல் மாறாமல் அப்படியே அவளுக்குள் இருக்கிறது. ஆனால் பிரியனுக்கு... அவன் மாறிவிட்டான்.  அவளுக்கு அழுகை பொங்கியது. எங்கே காரிலேயே வெடித்து அழுது விட போகிறோம் என்று பயந்து அவள் தன் வாயை பொத்தி கொண்டாள். 

shanbagavalli, Rathi and 2 other users have reacted to this post.
shanbagavalliRathichitti.jayaramanpriya.jagan
Quote

Priyan dn inda program la kalathuka ivlo veriya irukan ethuku 

Quote

Super ma 

You cannot copy content