You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 3

Quote

3

வெண்ணிலா பெரிது பெரிதாக இரண்டு பெட்டியுடன் வீட்டு வாசலில் வந்து இறங்கியதை பார்த்த அவளின் பெற்றோருக்கு திகில் பற்றி கொண்டது. மகள் மருமகனின் உறவு சுமுகமாக இல்லை என்பது கேசவனுக்கும் ஜானகிக்கும் ஏற்கனவே தெரிந்திருந்த நிலையில் பெட்டியுடனான மகள் வருகை சாதாரண வருகையாக இருக்காது என்பதை ஒரளவு கணிக்கவும் முடிந்தது. வாயிலில் வந்து நின்ற மகளை அவர்கள் கேள்வியாக பார்த்தனர்.

ஆனால் அவர்கள் பார்வைக்கு எல்லாம் எந்த பதிலுரையும் கொடுக்காமல் அமைதியாக அவள் வீட்டிற்குள் வந்துவிட்டிருந்தாள்.

மகள் கையிலிருந்த ஒரு பெட்டியை கேசவன் முன்னே வந்து வாங்கி கொண்டார். அதேநேரம் கேசவன் மனைவியிடம் எதுவும் கேட்க வேண்டாமென்று கண் காட்ட, அவரும் வேறு வழியில்லாமல் வாயை மூடி கொண்டார். இயல்பான விசாரிப்புக்கள் கூட இல்லை.

அதேநேரம் அலுவலகத்திற்கு தயாராகி தங்கள் அறையிலிருந்து வெளியே வந்த தமையன் மனைவி சந்தியா நிலாவை பார்த்ததும் முகம் சுணங்கினாள். இருப்பினும் சமாளித்து கொண்டு, “வா நிலா... ஆமா பசங்க எல்லாம் வரல” என்று எதார்த்தமாக விசாரிக்க,

“ஸ்கூல விட்டிருக்கேன் அண்ணி... சாயந்திரம் போய் கூட்டிட்டு வரணும்” என்றாள்.   

“ஒ அப்படியா சரி சரி... ஆமா டிபன் சாப்பிட்டியா... வா சாப்பிடு?” என்றவள் அழைக்க,

“இல்ல அண்ணி... சாப்பிட்டேன்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே தங்கை குரல் கேட்டு அறையிலிருந்து வெளியே தலையை காட்டிய தமையனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

‘நீ எங்கே இங்கே வந்தாய்’ என்று வினய் வெறுப்பான பார்வையை உதிர்க்க அவள் அவன் பார்வையை கண்டும் காணாமல் தன் பெற்றோரின் அறைக்குள் வந்து விட்டாள். கேசவன் பின்னோடு வந்து பெட்டியை வைத்து விட்டு சென்றார்.

பெயருக்கு கூட அவர் எதுவும் கேட்டு கொள்ளவில்லை. ஜானகி மட்டும், ‘என்ன நிலா?’ என்று கண்ணசைவால் கேட்டு வைக்க,

‘அப்புறமா சொல்றேன்’ என்று கை காட்டி விட்டு அங்கிருந்த படுக்கையில் காலை மடக்கி அமர்ந்து கொண்டாள். ‘அடுத்து என்ன செய்வது?’ இந்த கேள்விதான் அவள் மண்டையை அப்போதைக்கு குடைந்து எடுத்து கொண்டிருந்தது.

அப்போது உணவு மேஜையின் முன்னே அமர்ந்து உண்டபடி வினய் சத்தமாக பேசினான்.  

“இப்போ எதுக்கு வந்திருக்காளாம்... அவளுக்கு நம்ம தயவு எல்லாம் தேவையா என்ன... அவன் புருஷன்தான் பெரிய ஸ்டாராச்சே... அதுவும் இல்லாமல் இப்போ அவன் ஒரு ரியாலிட்டி ஷோல வேற கலந்துக்கிட்டு இருக்கான்... பரிசு ஒரு கோடியாம்... ஜெயிச்சுட்டானா இவ நம்மள கண்டுக்கவே மாட்டா... ஏன் மனுஷனா கூட மதிக்க மாட்டா” என்று அவன் இவளை பற்றி பொறுமியதை எல்லாம் அவள் காதிலும் நன்றாகவே விழுந்தது. அவனும் விழ வேண்டுமென்றுதானே சொன்னேன்.

ஆனால் அவனது குத்தல் பேச்சுக்கு அவள் எந்த எதிர்வினையும் காட்டி கொள்ளவில்லை. அமைதியாக கேட்டிருந்தவளுக்கு தமையன் கோபத்தில் இருக்கும் நியாயமும் புரியாமல் இல்லை.  

கல்லூரி இறுதி வருடத்திலிருந்து அவளுக்கும் தேவிப்ரியனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. படிப்பை முடித்ததும் இருவருமே ஒரே சானலில் ஒன்றாகத்தான் வேலைக்கு சேர்ந்தனர். அது ரொம்பவும் சாதாரணமான சானல்தான். தேவிப்ரியன் செய்தி வாசிப்பாளராக சேர்ந்தான். அவள் செய்தி சேகரிப்பாளராக இருந்தாள். பெரியளவில் வேலையும் இல்லை. சம்பளமும் இல்லை.

ஒரு பக்கம் நல்ல வேலைக்காக முயற்சித்து  கொண்டே ஊர் சுற்றும் வேலையையும் செவ்வனே செய்து கொண்டிருந்த அந்த காதல் ஜோடிகள் ஒரு நாள் எதிர்பாராவிதமாக வினய் கண்ணில் சிக்கிவிட்டார்கள். நிலா வீட்டில் ஆரம்பத்தில் கொஞ்சம் கோபம் காட்டினாலும் பிரியன் பற்றி விசாரித்து அவன் குடும்பத்தை நேரில் சென்று பார்க்குமளவுக்கு மனமாறி வந்தார்கள்.

ஆனால் அவன் தந்தை ஏதோ கொலை குற்றம் செய்து விட்டு சிறைக்கு சென்றவர் என்று அறிந்த மாத்திரத்தில் மீண்டும் நிலா வீட்டிலிருந்து தீவிர எதிர்ப்பு கிளம்பியது. அவளுக்கும் அது வரையில் அவன் அப்பா விஷயம் தெரியாது.

கொஞ்சம் அதிர்ச்சியடைந்தவள், “ஏன் உங்க அப்பா பத்தி என்கிட்ட சொல்லல” என்று கேட்டதுமே பிரியனுக்கு ஏறிவிட்டது. “எதுக்கு சொல்லணும்... நீ என்னைத்தானே லவ் பண்ற... என் கூடத்தானே வாழ போற... எங்க அப்பா பத்தி தெரியுறதால ஏதாவது மாறிட போகுதா... ஒரு வேளை எங்க அப்பா ஜெயில இருக்குறதுனால நான் காதலிக்க தகுதி இல்லாதவன் ஆகிடுவேனா” என்று கோபம் காட்டவும் அவள்,

“நான் அப்படி சொல்லல” என்று பொறுமையாக பேச, அவன் அமைதியடையவில்லை.

“உனக்கு அப்படிதான் தோனுச்சுனா என்னை விட்டுட்டு போயிட்டே இரு நிலா... எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றான்.

என்ன செய்வது என்று அவள் குழம்பி கொண்டிருந்த நிலையில் வீட்டில் மாப்பிளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். 

வேறு வழியே இல்லாமல் நிலாவும் தேவிப்ரியனும் பதிவு திருமணம் செய்து கொள்ள, இரு வீட்டாரும் அத்துடன் அவர்கள் உறவை முறித்து கொண்டார்கள். தனியாக நின்ற நிலா பிரியனுக்கு ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் அளவுக்கான சூழ்நிலையும் இல்லை. பொருளாதாரமும் இல்லை.

இந்த நிலையில் அவள் கருத்தரித்து விட்டது அவர்களுக்கு இன்னும் அதிக சிக்கலை உண்டாக்கியது. ஆனால் குழந்தைகள் பிறந்ததுமே இரு வீட்டிலும் சமாதானம் ஆகி மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டு போனார்கள்.

எப்படியோ தங்கள் குடும்பத்தினர் சமாதானமாகி விட்டார்கள் என்று நினைத்தால் பிரச்சனையே அப்போதுதான் துவங்கியது.

என்ன முயன்றும் பிரியனுக்கு அவன் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற நல்ல வேலை கிடைக்கவில்லை. நடிப்பு, தொகுப்பாளர் என்று பிரியன் தேடிய  வேலைகளில் எல்லாம் போட்டிகள் அதிகமாக இருந்தன. திறமை இருந்தும் அனுபவம் இல்லை என்பதும் ஒரு குறையாக பார்க்கப்பட்டது.

 அவன் ரொம்பவும் முயன்று ஒரு லோக்கல் சானலில் தொகுப்பாளராக சேர்ந்தான். அதுவும் அந்த மூன்று மணி நேர நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடிற்கு இருநூறு ரூபாய்தான் கிடைக்கும். மாசத்திற்கு நான்காயிரம் சேர்ந்தார் போல் வந்தால் பெரிய விஷயம்.

குழந்தையை வைத்து கொண்டு வீட்டு செலவுக்கு எல்லாம் திண்டாடிய  போதுதான் தோழி ஒருவர் மூலமாக நிலாவிற்கு ஜே சானலில் ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் வேலை கிடைத்தது. சம்பளமும் கணிசமான அளவில் இருந்தது.  

ஆனால் ஆறு மாத குழந்தையை வைத்து கொண்டு வேலைக்கு போவது எப்படி என்று குழம்பியவள் இறுதியாக தன் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு வேலையில் சேர்ந்துவிட்டாள். இதனால் குழந்தைகளை பார்த்து கொள்வதற்கு பிரியன் தன் அம்மாவை வரவழைத்தான்.

நிலாவின் வேலைக்கோ நேரம் காலமே கிடையாது. படப்பிடிப்பிற்கு கிளம்பி சென்றால் இரவு பத்து பதினொன்று ஆகும். சில நேரங்களில் எத்தனை மணி ஆகுமென்று கூட  சொல்ல முடியாது.

பிரியனும் தன் அம்மாவுடன் இருக்கும் சமயங்களில் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் சில நேரங்களில் அவனுக்கும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு இருக்கும். அந்த சமாதிரி சூழ்நிலையில் அவள் தாமாதமாக வந்தால் லோகேஷ்வரி, “சின்ன குழந்தைகளை வீட்டுல விட்டுட்டு போறோம்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா உனக்கு?” என்று நிலாவை வசைப்பாடி தீர்த்து விடுவார்.

அவர் தம்பி மகளை பிரியனுக்கு கட்டி வைக்க முடியாத கோபத்தின் வெளிப்பாடு என்பது அவர் பேச்சில் அப்பட்டமாக தெரியும். இதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளை அவர் வறுத்து எடுத்து கொண்டிருந்தார்.

அவர் பேசுவதை விட அவள் ஒரு மாதிரி பொறுத்து கொள்வாள். ஆனால் அவர் அபப்டி பேசும் போது பிரியன் எதுவும் கேட்காமல் மௌனமாக நிற்பதுதான் அவளை பெரிதுமாக பாதிக்கும்.

“உங்க அம்மா அந்த பேச்சு பேசுறாங்க.. நீ பாட்டுக்கு சைலன்டா இருக்க” என்று கேட்டால்,  

“அவங்களும் இல்லனா நம்ம குழந்தைங்கள யார் பார்த்துப்பாங்க நிலா” என்று அவன் சமாளிப்பை மீறி அவளால் ஒன்றும் பேச முடியாது.

ஆனால் நாளுக்கு நாள் அவரின் பேச்சு அளவுக்கு மீறி போய் கொண்டே இருந்தது. ‘இன்னைக்கு பிரதோஷம் நான் கோவிலுக்கு போறேன்... நீதான் வீட்டுல இருந்து குழந்தையை பார்த்துக்கணும்’ என்று அவ்வப்போது ஏதாவது காரணம் சொல்லி அவளை வேலையை விட்டு நிறுத்திவிடுவதில் முனைப்பாக இருந்தார்.

ஆனால் அவரின் அந்த அழிச்சாட்டியத்திற்கு எல்லாம் அவள் மசியவில்லை. பிரியனுக்கு நல்ல வேலை இல்லை என்பதை விட அவளுக்கு அவள் வேலை மீது அதிக காதல் இருந்தது. எத்தனை சிரமங்களிலும் அந்த வேலையை செய்வது அவளுக்கு மனதிருப்தியை தந்தது.

அதெல்லாம் பிரியனின் அம்மாவிற்கு அவளால் புரிய வைக்க முடியாது. சில நேரங்களில் பிரியனுக்கும் கூட புரிய வைக்க முடியாது.   

“இப்படி பொறுப்பில்லாதவல கட்டிக்கிட்டு என் உசுரை எடுக்குற” என்று அவர் பிரியனையும் வசைபாடுவததோடு அவனையும் தூண்டிவிடுவது போல பேச,

“பேசாம வேலையை விட்டுடு நிலா... பார்த்துக்கலாம்...எப்படியாச்சும் சமாளிக்கலாம்” என்று அவனும் சொல்ல ஆரம்பித்துப்வ்ட்டான்.

“முடியாது... வேணா உங்க அம்மாவை அனுப்பி விடு... நான் எங்க அம்மா அப்பா வீட்டுல விட்டு குழந்தைங்கள பார்த்துக்கிறேன்” என்றவள் வார்த்தை அவன் ஈகோவை பலமாக தாக்கிவிட்டது.

அன்று அதற்காக அவளிடம் பயங்கரமாக சண்டையிட்டவன் ஒரு வாரத்திற்கு வீட்டு பக்கமே வராமல் அவளை வெறுப்பேற்றினான். இதுதான் சாக்கு என்று அவன் அம்மாவும் ஊருக்கு கிளம்பிவிட்டார். அவளுக்கோ இரண்டு நாளில் முக்கியமான படப்பிடிப்பு.

பிரியன் வந்து விடுவான் என்று பார்த்தால் அவனும் வரவில்லை. அவள் செல்பேசி அழைப்பையும் எடுக்கவில்லை.  

இதில், “குழந்தையை பார்த்துக்கணும்” என்று அவர்கள் குழுவில் காரணம் சொல்லி விடுப்பு கேட்டால் பத்தில் ஐந்து பேர் புரிந்து கொள்வார்கள்.

மீதி ஐவர்,  “இந்த பொண்ணுங்களுக்கு அதுக்குதான் வேலை கொடுக்க கூட கூடாது... இந்த மாதிரி வேலை எல்லாம் அவங்களுக்கு செட்டும் ஆகாது” என்று மட்டம் தட்டுவார்கள். சில நேரங்களில் அவள் காதுப்படவே இது போல பேசி கேட்டிருக்கிறாள்.

என்ன செய்வது என்று யோசித்தவள் தன் தமையனை வரவழைத்து அவனிடம் நிலைமையை சொல்ல, “அவன்தான் வேணும்னு கட்டிகிட்ட இல்ல... உனக்கு இதுவும் வேணும்” என்று குத்தி காட்டினாலும் அவளையும் குழந்தைகளையும்  வீட்டிற்கு அழைத்து சென்றான்.

குழந்தைகளை தன் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பி படப்பிடிப்பிற்கு சென்று சேர்ந்த போது மாலை மணி ஆறு. மும்முரமாக படப்பிடிப்பிலிருந்த சமயம் பிரியன் அவளை அழைத்து,

“எங்கடி போன... வீடு பூட்டி இருக்கு” என்றான். அவன் மீது கோபமாக வந்தாலும் அப்போதைக்கு அதனை காட்டும் நிலைமையில் அவள் இல்லை.

“நான் ஷுட்டுக்கு வந்திருக்கேன்... சாவியை எப்பவும் வைக்கிற இடத்துலதான் வைச்சு இருக்கன்... பாரு”

  “ஆமா குழந்தைங்க” என்றதும், “அம்மா வீட்டுல விட்டு இருக்கேன்” என்று கூற அவன் கோபமாக கத்த ஆரம்பித்துவிட்டான்.

“சும்மா கத்தாத... நீ எங்க போறன்னு சொல்லிட்டு போனியா... இதுல உங்க அம்மாவும் இதான் சாக்குனு கிளம்பி போயிட்டாங்க... நான் என்ன பண்ணட்டும் அதான் எங்க அம்மா வீட்டுல குழந்தைங்கள விட்டு வந்தேன்” என்றவள் கூறியதை கேட்டதும்,

“அப்போ உனக்கு குழந்தைங்கள விட உன் வேலைதான் முக்கியம்” என்று வினவ அவளுக்கு பற்றி கொண்டு வந்தது.

இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் பெரும்பாலும் பெண்களுக்குதான் வரும். இதற்கு மேலும் அவனிடம் பேச பொறுமை இல்லாமல் அழைப்பை துண்டித்தாள்.

அதற்கு பிறகாய் அவன் தொடர்ந்து அழைத்த எந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை. பத்து மணி போல அவள் படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பும் போது அண்ணன் வினயிற்கு அழைக்க அவனோ காரணமே சொல்லாமல் சத்தமிட ஆரம்பித்தான்.

“வினய் என்ன... ஏன் கத்துற... எனக்கு நீ என்ன சொல்றனு புரியல”

“என்ன புரியணும்... உனக்கெல்லாம் ஹெல்ப் பண்ண நினைச்சதே தப்பு”

“இப்போ என்னாச்சு”

“ஹ்ம்ம்... உன் புருஷன் என்னை அடிச்சுட்டான்... இப்போ புரியுதா என்ன நடந்ததுன்னு” என்று அடிக்குரலில் சீற அதிர்ந்தவள்,  

 “தேவ்வா... அவன் அங்க வந்திருந்தானா?” என,

“அதையும் நீ அவன்கிட்டயே போய் கேளு... அப்புறம் குழந்தைங்கள வீட்டுக்கு தூக்கிட்டு போயிட்டேன்”

“தனியா இரண்டு குழந்தைங்களையும் தூக்கிட்டு போனானா”

“ஆமா” என அவளுக்கு தலையே சுழன்றது. அவள் பிரியனுக்கு அழைத்தால் அவன் எடுக்கவே இல்லை. வீட்டிற்கு வந்து சேரும் வரை அவள் இதயம் படபடத்து கொண்டே இருந்தது. 

பிரியன் முகப்பறை சோபாவில் தன்னந்தனியாக இருளில் அமர்ந்திருந்தான். படுக்கறையில் எட்டி பார்க்க குழந்தைங்கள் உறங்கி கொண்டிருந்தன. நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டு கொண்டவள் மீண்டும் அவனிடம் வந்து,

“என்னடா பிரச்சனை உனக்கு... ஏன் தேவை இல்லாம போய் எங்க வீட்டுல பிரச்சனை பண்ண... அதுவும் எங்க அண்ணனை வேற அடிச்சிருக்க” என்று கொதிக்க,

“ஏன்... உனக்கு தெரியாதா... அவன் ஏன் அடிச்சனு சொல்லலயா?” என்று கேட்டு அலட்சியமாக நிமிர்ந்து அவளை பார்க்க,

“சொல்லல... நீ சொல்லு... என்ன நடந்துச்சு... அதுவும் எங்க அண்ணனை அடிக்கிற அளவுக்கு” என்றவள் சீறியபடி அவன் முன்னே நிற்க,

“அவன் பேசுன பேச்சு அந்த மாதிரி... அதான் அடிச்சேன்” எனவும் அவளுக்கு கோபமேறிவிட்டது.

“உங்க அம்மா கூடதான் ஏடாகுடமா என்னன்னவோ பேசுனாங்க... வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசி என்னை அவமானப்படுத்துனாங்க... பதிலுக்கு நானும் அவங்கள கை நீட்டி இருந்தா உனக்கு எப்படி இருக்கும்” என்ற அவளது கேள்வியில் எகிறி கொண்டு எழுந்தவன்,

“நிலாஆஆ” என்று அதட்ட அவள் அசரவில்லை. கை கட்டி கொண்டு அவனை முறைத்தாள். ஆனால் அவனது அந்த சத்தத்தில் கவிதா எழுந்து அலற அடுத்த கணமே சண்டையை நிறுத்திவிட்டு நிலா உள்ளே ஓடினாள்.

தன்னை சுத்தப்படுத்தி கொண்டு படுக்கையில் அமர்ந்தவள் மகளை மடியில் கிடத்தி சமாதானம் செய்து மெல்ல தட்டி கொடுத்து உறங்க வைக்கும் போதே, ஹரி அரற்ற ஆரம்பித்துவிட்டாள்.

சாவகாசமாக உள்ளே வந்து நின்ற பிரியன் அவள் அருகே வந்து நிற்க அவனை ஆயாசத்துடன் பார்த்தவள், “ப்ளீஸ் தேவ்... திரும்பியும் சத்தம் போட்டு குழந்தைங்கள எழுப்பி விட்டுட்டாத... எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்... எனக்கு டயடா இருக்கு... இவங்கள தூங்க வைச்சுட்டு நானும் தூங்கனும்...

கொஞ்ச நேரமாச்சும் தூங்கணும்... இரண்டு நாளா ஒரு பொட்டு தூக்கம் கூட இல்லாம இருக்கேன்... ப்ளீஸ்... என்னால இப்போ முடியாது” என்று அவள் கண்கள் சொருக உடலும் மனமும் தளர்ந்த நிலையில் கெஞ்சியதை பார்த்து பிரியனின் மனம் இறங்கியது.

ஹரியை மடியில் கிடத்தி கொண்டு அவள் எதிரே அமர்ந்து,

“சாரி நிலா... நான் சொல்லாம போயிருக்க கூடாது... இனிமே அந்த மாதிரி பண்ண மாட்டேன்” என அவள் பதில் சொல்லவில்லை. கவியை உறங்க வைபத்திலேயே கண்ணாக இருந்தாள்.

அவன் தொடர்ந்து, “என்னை வேலை வெட்டி இல்லாதவனு சொல்லி உங்க அண்ணன்தான் முதல என்னை ரொம்ப அவமானப்படுத்தி பேசுனா” என அவள் பார்வை சட்டென்று அவனை நிமிர்ந்து நோக்க,

“நான் உன்னை கொடுமைப்படுத்துறேனா நிலா... என்னாலதான் உனக்கு இவ்வளவு கஷ்டமாம்... நீ என்னை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பியான்... இப்படி எல்லாம் அவன் பேச பேச என்னால தாங்க முடியல” என்றவன் சொன்னதை எல்லாம் அவள் அமைதியாக கேட்டிருந்தாள். அவனுடைய மனநிலையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு சின்ன தோல்வியை கூட தாங்கி கொள்ள முடியாதவன். இதில் அவன் திறமைக்கு ஏற்ற வேலையும் கிடைக்கவில்லை. அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அப்படியொரு மனஉளைச்சலில் அவன் இருக்கும் போது இந்த வார்த்தைகள் எல்லாம் எந்தளவு அவனை பாதித்திருக்கும். கோபப்படுத்தி இருக்கும் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

கணவனை அவள் கவலையுடன்  ஏறிடவும் அவன் கண்ணீர் உகுத்தபடி,  “நீ சொல்லு நிலா... என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதாலதான் உனக்கு இவ்வளவு கஷ்டமா... என்னை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா நீ சந்தோஷமா இருந்திருப்பியா?” என்று கேட்க

“ச்சே... என்ன பேசுற தேவ் நீ... நான் அப்படி எல்லாம் யோசிச்சது இல்ல... இப்போ இல்ல எப்பவுமே என்னால அப்படி எல்லாம் யோசிக்கவும் முடியாது... உன் திறமைக்கு இன்னைக்கு அங்கீகாரம் கிடைக்காம இருக்கலாம்... ஆனா இதெல்லாம் இப்படியே இருக்காது... மாறும்... நீ விரும்புன மாதிரியான இடத்துல நீ இருப்ப... உனக்கான அங்கீகாரம் கண்டிப்பா கிடைக்கும்... எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” என்று நம்பிக்கையாக பேசி கணவன் கரத்தை அழுந்த பிடித்து கொண்டாள். அவன் மனம் நெகிழ்ந்தது.

அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் சேர்த்து பிடித்து முத்தமிட்டவன், “எனக்கு தெரியும் நிலா... இந்த உலகத்துல உன்னை தவிர வேற யாருமே என்னை இந்தளவு புரிஞ்சிக்க முடியாது... என் வலியை உணர முடியாது... என்னை ஊக்கப்படுத்த முடியாது” என,

 அவள் மெதுவாக, “அண்ணன் அப்படி எல்லாம் பேசி இருக்க கூடாதுதான் தேவ்... ஆனா அதுக்காக அண்ணனை நீ கை நீட்டினது” என்று நிறுத்த,

“தப்புதான்... எனக்கு தெரியும்... ஆனா என்னால என் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியல... சாரி” என்றான். இரு பக்கமும் தவறு இருக்கிறது. அவளுக்கு அதற்கு மேல் அந்த விஷயத்தை கிளற விருப்பமில்லாமல்,

“சரி இப்போ என்னதான் பண்ண போறோம்... குழந்தைங்கள யார்தான் பார்த்துக்கிறது” என்று கேட்டாள்.

“எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் நானே பார்த்துக்கிறேன்” என்றவன் கூற,

“நீ தனியா பசங்கள பார்த்துக்கிறது எல்லாம் கஷ்டம் தேவ்” என்றாள்.

“எல்லாம் நான் பார்த்துக்கிறேன்... உங்க வீட்டு ஆளுங்களும் வேண்டாம்... எங்க வீட்டாளுங்களும் வேண்டாம்” என, அவள் முகம் துவண்டது.

பிரியனின் பிடிவாதத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்ற முடியாது. அப்போதைக்கு அவன் சொன்னதை ஒப்பு கொள்வதை தவிர அவளுக்கும் வேறு வழிஇருக்கவில்லை.

தினமும் காலை இருவருமாக சேர்ந்து வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து முடித்ததும் அவள் கிளம்பிவிட, அவன் வீட்டிலிருந்து குழந்தைகளை பார்த்து கொள்வான். ஆறு மாத காலம் இப்படியே தொடர்ந்தது.

அதேநேரம்,  “பிரியன் நீ வேலைக்கு போறதில்லையா? உன் பொண்டாட்டிதான் வேலைக்கு போறா போல” என்ற குத்தல்கள் கிண்டல்கள் எங்கு சென்றாலும் அவனை விடாமல் துரத்தியது.

நமது சமூகத்தின் ஸ்டீரியோ டைப்பிக்கான மனநிலை குடும்பத்தில் ஆண்தான் வேலைக்கு போக வேண்டுமென்றும் பெண் வீட்டில் இருக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறது.

சூழ்நிலைகள் மாறும் போது வாழ்க்கை முறையும் காலத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் அதனை உணராத மனிதர்கள் மாற்றங்களை ஏற்கும் குடும்பங்களை நிம்மதியாக வாழ விடுவதே இல்லை.

இத்தனைக்கு இடையிலும் நிலாவும் பிரியனும் ஒரளவு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம் அவளுடைய பணியிலும் அவள் நல்ல முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருந்த சமயத்தில்தான் நீயும் நானும் தொடரின் பிரியனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஜே சானலின் பிரைம் டைம் சீரியல்.  

“எனக்கு இந்த சீரியல் வேணும் நிலா... என்னை ப்ரூப் பண்ணிக்க இது தேவை” என்று அவன் உணர்வுப்பூர்வமாக மனைவியின் கையை பிடித்து கெஞ்சி கேட்க, தன்  கணவனுக்காக அவள் தன் விருப்பமான வேலையை விட்டு கொடுத்தாள்.

பிரியனின் நிலாவாக மாறி தன் கனவுகளை தள்ளி வைத்தாள்.

shanbagavalli, Rathi and 3 other users have reacted to this post.
shanbagavalliRathichitti.jayaramankothai.sureshpriya.jagan
Quote

Super ma 

You cannot copy content