You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 4

Quote

4

ஜே சானலில் ஐந்து வருடத்திற்கும் மேலாக வெற்றிகரமாக அதுவும் பிரைம் டைமில் ஓடி கொண்டிருந்த தொடர் ‘நீயும் நானும்’. இரண்டு வருடத்திற்கு முன்பு டி ஆர் பி ரேட்டிங்கில் அந்த தொடர்தான் முதலிடத்தில் இருந்தது. மற்ற சானல்கள் என்ன முயன்றும் அந்த தொடரை வெல்ல முடியவில்லை.

அதுவரையில் செய்தி வாசிப்பாளராக மற்றும் தொகுப்பாளராக மட்டுமே இருந்தவன் நீயும் நானும் என்ற தொடரின் மூலமாக நடிப்பு துறையில் காலெடுத்து வைக்கிறான். அதுவும் அறிமுக நாயகனாக. அவன் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் அன்பு.

மெது மெதுவாக பிரியனின் பெயரும் அன்பு என்றே ஆகிவிட்டது.  கடை, மால், தியட்டர், ஏர்போர்ட் என்று அவன் எங்கு சென்றாலும் ‘அன்பு அன்பு அன்பு’ என்று ஒரு கூட்டம் அவனை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து கொள்ள முட்டி மோதியது.

அந்த ஒரே ஒரு தொடர் தேவிபிரியனை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று சேர்த்தது. பிரபலமாக்கியது. ஏன் சிங்கப்பூர் மலேஸியா என்று வெளிநாடு வாழ் தமிழர்களும் அன்பு என்ற பாத்திரத்தை கொண்டாடி களித்தார்கள்.

அதற்கு முக்கியமான காரணம் பிரியனுடைய மந்தகாசமான புன்னகையும் அவனது நடிப்பு திறமையும்தான். இதனால் வயது வித்தியாசமில்லாமல் அவனுக்கு அவ்வளவு பெண் ரசிகர்கள். மேலும் அந்த தொடரில் நடித்து கொண்டிருக்கும் போதே நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது. அதில் முக்கியமாக மோக்ஷா என்ற துணிகடைக்கு அவன் பிரான்டாக தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனது முகம் கொண்ட பிரமாண்டமான விளம்பர பதாகைகள்  அண்ணா சாலை போன்ற முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டன.

ஒரு சாதாரண சீரியல் நடிகனுக்கா இந்தளவு புகழா என்று ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு உலகம் முழுக்க ரசிகர் வட்டம் உருவாகி இருந்தது. பேர் புகழ் பணம் என்று எல்லாமும் சேர்ந்தது.

அதுவும் அந்த சீரியல் ஓடி கொண்டிருந்த முதல் இரண்டு வருடத்திலேயே அவன் குடும்ப நிலைமையும் மாறிவிட்டது. சென்னையில் உள்ள ஆடம்பரமான அடுக்கு மாடி குடியிருப்பில் தவணை முறையில் வீடு கார் என்று எல்லாம் வாங்கி போட்டான். அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டே வந்தது.

இதெல்லாம் நிகழ்ந்த சில நாட்களில் மீண்டும் பிரியனின் அம்மா உடன் வந்து தங்கிவிட்டார்.

நிலாவிற்கு அதில் கொஞ்சமும் உடனபாடில்லை. பிரியனோ, “என்னை விட்டா எங்க அம்மாவுக்கு யார் இருக்கா” என்று எமோஷனலாக பேச, வேறு வழி இல்லாமல் அவள் சம்மதித்தாள்.

“சரி அவங்க இருந்துட்டு போட்டும்... அதை பத்தி எனக்கு ஒன்னும் இல்ல... ஆனா நான் இந்த மாசத்துல இருந்து வேலைக்கு போக போறேன்” என அவன் அதிர்ச்சியுடன்,  

“என்ன? இப்போ எதுக்கு நீ வேலைக்கு போகணும்... அதுக்கு என்ன அவசியம் இருக்கு” என்று சாதரணமாக கூற அவளுக்கு கோபம் மூண்டது.  

“ஏன் தேவ்... உனக்குனு ஒரு கனவு இருக்க மாதிரி எனக்கும் இருக்காதா... அதை நோக்கி நானும் போக வேணாமா... ஏதாவது சாதிக்க வேணாமா?” என்று கேள்வி எழுப்ப,  தேவிப்ரியன் முகம் யோசனையாக மாறியது.

அவள் தொடரந்து, “நான் சிவா சார்கிட்ட பேசுனேன்... புதுசா ஒரு டாக் ஷோ ஆரம்பிக்க போறாங்களான்... அதுக்கு அசிஸ்டென்டா வந்து ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாராம்” என்று மேலும் சொன்னதில் அவன் முகம் அதிருப்தியாக மாறியது.

“திரும்பியும் அதே மாதிரி வேலையா நிலா?”

“வேற என்ன வேலைக்கு போகணும்... என் படிப்பு அனுபவம் அந்த துறைலதானே இருக்கு தேவ்”

“ஆனா வொர்க் டைமிங் ஏடாகுடமா இருக்குமே... குழந்தைகள பார்த்துக்கிறதை பத்தியும் யோசிக்கணும் இல்ல” என்றவன் மெல்லிய குரலில் சொல்ல,

“நான் அதை பத்தி சிவா சார்கிட்ட பேசிட்டேன்...  ஷுட் செவ்வாய் விழமையும் வியாழகிழமையும் மட்டும்தான்... அந்த இரண்டு கிழமைல நீ பார்த்துக்கோ... மத்த நாளில் த்ரீ டூ பைவ்குள்ள என் வேலை முடிஞ்சுடும்...  அந்த டைம்ல நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்

அதுவும் இல்லாம இந்த வருசத்துல இருந்து பசங்க ஸ்கூலுக்கு போறாங்க... ஸோ அவங்க ஸ்கூல் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா ஒரு இரண்டு மணி நேரம் உங்க அம்மா பார்த்துக்க மாட்டாங்களா என்ன?” என்றாள்.

அவள் இத்தனை தெளிவாக விளக்கிய போதும் அவன் முகத்தில் தெளிவே இல்லை. அதேநேரம் அவனுடைய அனுமதிக்காக அவள் காத்திருக்கவில்லை. குழந்தைகளை பள்ளியில் சேர்த்த ஒரு வாரத்தில் அவள் வேலையிலும் சேர்ந்துவிட்டாள்.

வீட்டு வேலைக்கு ஆள் வைத்துவிட்டாள். வீட்டை சுத்தம் செய்வது மற்றும் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவது போன்ற வேலைகளை அவர்களுக்கு தந்திருந்தாள்.

அதுவும் இல்லாமல் பிரியனின் அம்மாவை முழுவதுமாக நம்ப முடியாது என்பதால் அவர்கள் அடுக்கு மாடி குடியிருப்பிலேயே இருந்த டே கேரை விசாரித்து அவள் இல்லாத சமயங்களில் குழந்தைகளை பார்த்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாள்.

நிலா வேலைக்கு செல்வதில் பிரியனுக்கு துளி கூட உடன்பாடே இல்லை. இருந்தாலும் அதனை அவனால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அவள் நேரம் கழித்து வரும் போது அந்த கோபத்தையும் சேர்த்து மறைமுகமாக காட்டுவான்.

ஆனால் அது பற்றி எல்லாம் நிலா கவலைப்படாமல் தன் வேலை மற்றும் குழந்தைகள் இரண்டையும் ஒரளவு சமன்படுத்தி சமாளித்து கொண்டிருந்தாள். ஆனால் பிரியனின் அம்மா லோகேஷ்வரி அதற்கும் வேட்டு வைத்தார்.

வேலைக்காரியுடன் சண்டையிட்டு துரத்திவிட்டார்.  அடுத்தடுத்து வந்த இரண்டு வேலைகாரிகளையும் அதே போல அவர் சண்டையிட்டு துரத்திவிட, நிலாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இதனால் நிலா தொடர்ந்து வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

“வேலை செய்ய வர்றவங்க எல்லோரையும் ஏதாவது சண்டை போட்டு உங்க அம்மா இப்படியே துரத்தி விட்டுட்டு இருந்தா நான் எப்படித்தான் வேலைக்கு போறது... என்னால முடியல தேவ்” என்று அவள் தன்னுடைய மனஉளைச்சல்களை எல்லாம் அவள் கணவனிடம் ஆதங்கமாக  கொட்ட,

“இப்போ என்ன சொல்ல வர்ற... எங்க அம்மாவை நான் துரத்தி விட்டுடணும்னா” என்று அவள் நிலைமையை உணராமல் அவள் மீதே பாய்ந்தான்.

சில நொடிகள் அமைதி நிலையில் இருந்தவள் பின்னர் நிமிர்ந்து அமர்ந்து, “சரி ஓகே... நீயும் உங்க அம்மாவும் இங்க சந்தோஷமா இருங்க... நானும் என் பசங்களும் எங்க அம்மா வீட்டுக்கு போறோம்” என்று கூறி பெட்டியில் பொருட்களை எல்லாம் அடுக்கினாள்.

அவள் அடுக்கி முடித்து கிளம்பும் வரை பிரியன் அப்படியே சிலையாகத்தான் நின்றான். அவன் தன்னை ஏதாவது ஒரு கட்டத்தில் தடுத்து நிறுத்துவான். அவளை போக வேண்டாம் என்று சொல்வான் என்று எல்லாம் எதிர்பார்த்தாள்.

அவள் வாயிலை தாண்டும் வரை அமைதியாக இருந்தவன் மகள்களை அழைத்து செல்ல எத்தனித்த போது அவர்களை தன் பக்கம் இழுத்து பிடித்து கொண்டு,

“வேணும்னா நீ மட்டும் போ... என் பசங்கள தூக்கிட்டு போகாத” என, அவளுக்கு கோபம் மூண்டது.

“எது உன் பசங்களா?” என்று கேட்க,

“உனக்குதான் குழந்தைங்க பொறுப்பை எடுத்துக்க கஷ்டமா இருக்கே... அப்புறம் என்ன... நானே என் பசங்கள பார்த்துக்கிறேன்”

‘பார்த்துக்கோ’ என்ற வார்த்தை வாய் வரை வந்தாலும் சொல்ல முடியவில்லை. குழந்தைகள் இருவரையும் விட்டு செல்ல மனம் தவித்தது.

கண்களில் கிர்ரென்று கண்ணீர் சுழன்று விட என்ன செய்வது என்று ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விக்கித்து நின்றாள். அதற்குள் ப்ரியனின் அம்மா இடைபுகுந்து, “இவ வேலைக்கு போறேன்... போறேன் சொல்றது எல்லாம் சால்ஜாப்புடா... இவளுக்கு வேற எவன் கூடயோ தொடர்பு இருக்கு” என்று வார்த்தையை விட, ஒரு நொடி நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.  

“ம்மா என்ன பேசுற” என்று பிரியன் அதிர்ந்து அம்மாவை கண்டித்த அதேசமயம் இயல்பு நிலைக்கு மீண்ட நிலா,

“சை... எவ்வளவு கீழ்த்தனமா பேசுறீங்க... இனிமே ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன்... முக்கியமா நீங்க இருக்க வீட்டுல இருக்க மாட்டேன்... போதும் எல்லாமே போதும்” என்று விட்டு  அருவருப்பான பார்வையுடன் மாமியாரையும் கணவனை பார்த்தவள் விறுவிறுவென்று தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாள். அந்த நொடி குழந்தைகளை பற்றிய எண்ணம் கூட அவளுக்கு இல்லை.

அங்கேயோ அவள் பிரச்சனைக்கான காரண காரியம் எல்லாம் கேட்காமல் அவள் அம்மா ஜானகி வந்ததும் வராததுமாக அவளையே சாட ஆரம்பித்துவிட்டார்.

 “ஏன் டி... என்ன பிரச்சனைனாலும் குழந்தைய விட்டுட்டு வருவியாடி... அறிவு இருக்காடி உனக்கு” என்று மகளை கண்டிக்க,

“அவங்க எனக்கு மட்டும் குழந்தைங்க இல்ல... அவனுக்கும்தான்... பார்த்துக்கட்டும்” என,

“ஒரு அம்மா மாதிரியாடி பேசுற நீ” என்று அவர் கோபமாக எகிற,

“ம்மா அங்க என்ன நடந்ததுனு தெரியாம நீ பாட்டுக்கு பேசாத” என்று இவளும் பதிலுக்கு எகிறிவிட்டு அங்கே நடந்த அனைத்தையும் விவரித்தாள். மகள் பக்கம் நியாயம் இருப்பதாக பட்டதால் அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல் அப்போதைக்கு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள்.

அலுவலகத்தில் இருந்து வந்த வினயோ விஷயம் தெரிந்ததும் எப்போதும் போல இது நீயாக தேடி கொண்ட வாழ்க்கைதானே என்று நிலாவை குத்திவிட்டு இறுதியாக,

“பேசாம அவனை டிவோர்ஸ் பண்ணிடு” என்ற தீர்வு சொல்லவும் அவளுக்கு தூகிவாரி போட்டது.

அதேசமயம் அந்த வார்த்தையை வினய் சொல்வதற்கும் பிரியன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“சூப்பர்... எனக்கு தெரியும்... இப்படிதான் நடக்கும்னு” என்று கை தட்டியபடி உள்ளே வந்த பிரியன் எல்லோரையும் குற்றம் சாட்டும் பார்வை பார்த்து விட்டு மனைவியின் புறம் திரும்பி,

“உன்கிட்ட மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு போலாம்தான் டி பார்த்தேன்... ஆனா இங்க நடக்கிறது எல்லாம் பார்த்தா இவங்க யாரும் எங்க அம்மாவுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்ல போலவே” என்று எள்ளலாக கூற,  நிலா சீற்றமாகிவிட்டாள்.

“உங்க அம்மா பேசுதனதுக்கு எங்க அண்ணன் வேற எப்படி பேசுவானு நீ எதிர்பார்குற” என,

“எங்க அம்மா பேசுனது தப்புதான்... அதுக்குதான் இனிமே இந்த வீட்டுல நீ இருக்க கூடாது... ஏன்? என் வீட்டு பக்கமே தலை வைச்சு படுக்க கூடாது... செலவுக்கு பணம் வேணும்னா நான் அனுப்புறேனு சொல்லி வண்டி அரேஞ் பண்ணி அவங்கள அனுப்பிட்டென்... தெரியுமா?

ஆனா நீ... நீ என்னடி பண்ணிட்டு இருக்க... உங்க அண்ணன் என்னை பத்தி கேவலமா பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா நிற்குற” என்றவன் அவளையே குற்றவாளியாக மாற்றிவிட,

“உளராத தேவ்... எங்க வீட்டுல யாருமே உன்னை பத்தி மரியாதை குறைவா எல்லாம் பேசுல” என்றதும் அவன்,

“உங்க அண்ணன் உன்கிட்ட என்னை டிவோர்ஸ் பண்ண சொன்னது” என்று திருப்பி கேட்டதுமே அவள் பதில் சொல்வதற்கு திணறினாள். அதற்குள் வினய் இடையில் வந்து, “ஆமான்டா சொன்னேன்... உன் கூட வாழறதுக்கு அவ சும்மாவே இருக்கலாம்... கல்யாணம் பண்ணிக்கிட்டு என் தங்கச்சி வாழ்க்கையே நாசம் பண்ணிட்ட நீ” என்று கொதிப்புடன் கூற, பிரியன் கண்களில் கனலேறியது.

ஆனால் அவன் பதில் சொல்வதற்குள் நிலா முந்தி கொண்டு, “நான் எப்போ சொன்னேன் உன்கிட்ட தேவ்வால என் வாழ்கையை நாசமா போச்சுனு... நீயா ஏதாவது பேசாத... எனக்கும் அவங்க அம்மாவுக்கும்தான் மிஸ் அனட்ர்ஸடான்டிங்கே தவிர அவனுக்கும் எனக்கும் இல்ல” என்று விளக்கம் தர, வினயின் முகம் இருண்டுவிட்டது.

“உனக்கெல்லாம் சப்போர்ட் பண்ணேன் பார்... என்னை சொல்லணும்”

“நான் ஒன்னும் உன்னை சப்போர்ட் பண்ண சொல்லலையே”

“அப்போ எதுக்குடி இங்க வந்த”

“ஏன் வர கூடாது... இது எனக்கும் வீடுதான்.. இவங்க எனக்கும் அம்மா அப்பாத்தான்” என்றவள் கூறிய நொடி,

“அப்படினா சரி... இனிமே நீயே இங்க இருந்துக்கோமா... நான் போறேன்... சந்தியா வா பேகேல்லாம் பேக் பண்ணு” என,

“உன்னால என்ன முடியுமோ அதை செஞ்சுட்ட இல்ல” என்று ஜானகி மகளிடம் சீறலாக கேட்க, “ம்மா” என்று பேச வந்த நிலாவை அவர் அடக்கிவிட்டு,

“உன் குடும்ப பிரச்சனைல எங்க குடும்பத்த உடைச்சுடாத... கிளம்பு... கிளம்பி உன் புருஷன் கூட போம்மா தாயே” என்று கையெடுத்து கும்பிட்டு சொல்ல அவள் முகம் சுண்டிவிட்டது.

“இதுக்கு மேல இங்க நின்னு அவமனப்படணுமா நிலா... வா போலாம்” என்று பிரியன் அவள் பெட்டியை தூக்கி கொள்ள, அதன் பிறகு அவளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. அவனுடன் சென்றே ஆக வேண்டிய நிலை.

அமைதியாக அவன் பின்னோடு நடந்து காரில் அமர பிரியன் அவள் கையை எட்டி பிடித்தான். அவள் உடனடியாக தன் கையை விலக்கி கொண்டு, “குழந்தைங்க எங்க? அவங்கள எங்க விட்டு வந்தீங்க” என்று இறுகிய முகத்துடன் கேட்க,

“டே கேர்ல விட்டிருக்கேன் நிலா” என்று பரிவான குரலில் சொன்னான். அவள் கோபமாக அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி கொள்ள, காரை அமைதியாக ஓட்டி கொண்டே மீண்டும் அவள் கையை பற்ற போனான்.

 “தொடாதே... நீ கூப்பிட்டதும் உன் பின்னாடி வந்துட்டேன்கிறதால நீ செஞ்சது எல்லாம் நியாயம்னு ஆகிடாது ... உண்மையை சொல்லணும்னா நீ எங்க திரும்பவும்... அண்ணனை அடிச்சிட போறியோங்கிற பயத்துலதான் உனக்கு சபோர்ட் பண்ணி பேசுனேன்” என்றாள்.

காரை ஓரமாக நிறுத்திவிட்டவன், “அப்போ மனசார எனக்காக பேசணும்னு பேசலயா?” என்று கேட்க,

“இல்ல சத்தியமா இல்ல” என்றவள் அழுத்தி சொல்ல, 

“அப்போ எதுக்குடி இப்போ என் கூட வர” என்றான் சீறலாக.

“உனக்காக இல்ல... நான் என் பசங்களுக்காக வரேன்” என்றவள் கூற அவன் தாடை இறுகியது. மனைவியை கோபத்துடன் முறைக்க,

“இப்போ நீ காரை எடுக்குறியா இல்ல... நான் ஆட்டோ பிடிச்சு போகட்டுமா?” என அவன் வேறு வழி இல்லாமல் காரை எடுத்தான்.

அதன் பிறகு ஒரு வாரம் வரை இருவரும் பேசி கொள்ளவில்லை. ஆனால் தங்கள் மகள்களின் குழந்தைத்தனங்கள் மீண்டும் அவர்கள் உறவிலிருந்த விரிசலை எல்லாம் மறக்கடித்தது.  

பிரியனின் அம்மா இருந்த போது கிளம்பிய பிரச்சனைகளும் அப்போது இல்லை. வீட்டிற்கு வேலைக்கு ஆள் வைத்துவிட்டார்கள். அதேநேரம் நிலா வேலைக்கு போவதற்கு பிரியனும் எந்த தடையும் விதிக்கவில்லை. அந்த பிரச்சனைக்கு பிறகு அவர்கள் இரு வீட்டாரிடமும் தொடர்பற்று போனது. அதேநேரம் பிரியனும் வீட்டு வேலை குழந்தைகளை பார்த்து கொள்வது போன்றவற்றிலும் நிலாவிற்கு ஆதரவாக இருந்தான்.

அவளுக்கு ஷுட் இருக்கும் போது அவன் தன் படப்பிடிப்புகளை ஒதுக்கி விடுவான். இதனால் ஒரளவு அவர்கள் வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக நகர்ந்து கொண்டிருந்தது.   

மறுபுறம் பிரியனின் பேரும் புகழும் வளர்ந்து கொண்டிருந்தது. கூடவே அவனுடைய தலைகணமும். அப்படியொரு சூழ்நிலையில் பிரியனுடன் பள்ளியில் படித்த நண்பர் ஒருவர் திருமணத்திற்கு குழந்தை சகிதம் தம்பதிகளாக சென்றிருந்தார்கள்.

ஆனால் அங்கே சென்ற பிறகுதான் அந்த திருமணம் அவள் அண்ணி சந்தியாவின் நெருங்கிய உறவினர் திருமணம் என்று தெரிந்தது. அதாவது பிரியனின் நண்பன் சந்தியாவிற்கு பெரியம்மா மகன். திருமண வரவேற்பில் தன் அண்ணன் அண்ணியை பார்க்க நேர்ந்த நிலா உடனடியாக ஓடி சென்று அவர்களை விசாரித்தாள்.

சந்தியா ஏதோ பெயருக்கு என்று பதில் சொன்னாள். ஆனால் வினய் அது கூட பேசவில்லை. அவர்கள் இருவரையும் பார்த்த பிரியனுக்கோ கடுப்போ கடுப்பு. பார்வையிலேயே வினய் மீது வெறுப்பை உமிழ்ந்தான் பிரியன். இருப்பினும் தன் உணர்வுகளை காட்ட விடாமல் ஒரு கூட்டமே அவனை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க குவிந்தது.

இறுதியாக மாப்பிள்ளை குடும்பத்தினர் பிரியனுடன் ஒரு குழு படம் எடுத்து கொள்ள விரும்பினார்கள். அந்த படத்தில் வினய் மற்றும் சந்தியாவும் நின்றார்கள்.

அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தன் பெரியப்பா கட்டாயபடுத்தியதால் தன் கணவனை கெஞ்சி கேட்டு அந்த குழு படத்தில் சந்தியா வினயையும் நிற்க வைத்தாள். ஆனால் அவர்கள் வந்து நின்றதுமே பிரியன் மாப்பிளை வீட்டாரிடம், “அவங்க நிற்குற போட்டோல நான் நிற்க மாட்டேன்” என்று தடாலடியாக கூற,

“தேவ் என்ன பேசுற நீ” என்றவள் கணவனை முறைக்க,

“ஹரியை தூகிக்கோ கிளம்பலாம்” என்றவன் அவள் முறைப்பதையோ அலல்து கோபம் காட்டுவதையோ பொருட்படுத்தாமல் கவிதாவை தூக்கி கொண்டு, “வா கிளம்பலாம்” என்றான்.

“தேவ் நீ பண்றது சரி இல்ல” என்று அவள் ஒரு பக்கம் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“இருங்க இருங்க போகாதீங்க” என்று மாப்பிளை வீட்டினர் வம்படியாக பிரியனை தடுத்து நிறுத்தியதோடு அல்லாமல் சந்தியாவையும் வினயும் மேடையை விட்டு கீழே இறக்கிவிட்டார்கள்.

நிலா இதை எதிர்பார்க்கவில்லை. அவள் எதிர்வினையாற்றுவதற்குள் எல்லாமே நடந்தே முடிந்துவிட்டது. அங்கிருந்த மற்றவர்கள் முன்பாக கணவனிடம் கோபம் காட்ட இயலாமல் மண்டபத்திலிருந்து வாயை இறுக மூடி கொண்டு வந்து காரில் அமர்ந்தவளுக்கு அப்படியே உள்ளமெல்லாம் கொதித்தது.

“நீ செஞ்சது நியாயமே இல்ல தேவ்” என, அவன் பதிலே பேசவீல்லை. அவள் என்ன சொல்லியும் அவன் தப்பையும் உணரவில்லை.

 மீண்டும் இருவருக்கும் இடையிலும் முட்டி கொண்டது. நிலாவிற்கு இம்முறை அம்மா வீட்டிற்கு போகும் வாய்ப்பும் இல்லை. அந்த கோபத்தையும் சேர்த்து அவனிடமே காட்டினாள். ஆனால் எத்தனை நாளைக்கு... குழந்தைகள் குடும்பம் என்று அவர்கள் பிரச்சனைகள் மீண்டும் அதன் தீவிரத்தை இழந்துவிட்டன.

இந்த நிலையில் எந்த தொடர் அவனை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்ததோ அதுவே அவனை கீழேயும் தள்ளியது. பிரியனின் கர்வத்தால் அந்த இயக்குநருக்கும் அவனுக்கும் பிரச்சனை உண்டாகிவிட்டது. அதற்கு பிறகு ஆறு மாதத்தில் அந்த தொடர் முடிந்துவிட பிரியனுக்கு சில சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன.

ஆனால் அவன் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல பெரிய திரை அவனுக்கு கை கொடுக்கவில்லை. சில நேரங்களில் திறமைகள் மட்டும் போதாது. அதிர்ஷடமும் வேண்டும். அவன் நடித்த முதல் படம் வெளியிடப்படவே இல்லை. அடுத்தடுத்து நடித்த படங்கள் பாதியிலேயே நின்றன.

இந்த தோல்விகள் எல்லாம் பிரியனை மூர்க்கமாக மாற்றியது. அவனுடைய கோபம் வெறுப்பு அத்தனைக்குமான வடிகாலாக நிலா மாறினாள்.

“இப்படியே இருக்காது தேவ்... எல்லா மாறும்... நீ பேசாம பழையபடி சீரியலே நடி... நான் சானலில் பேசுறேன்” என்றவள் அவனக்கு கூறிய சமாதானங்கள எல்லாம் இன்னும் அவன் கோபத்தை தூண்டிவிட்டன.

“நீ என்னடி எனக்காக பேசுறது... என் திறமையை வைச்சு மேலே வர எனக்கு தெரியும்” என்று அந்த நிலையிலும் கர்வத்துடனேயே பேச அதற்கு மேல் அவளும் என்ன செய்வாள். அவன் விருப்பம் போல செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டாள்.

ஆனால் நிலா இத்தனை பிரச்சனைகளுக்கு இடையிலும் தன் வேலையை மட்டும் விடவில்லை. தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள். அதற்கும் பிரியன் வேட்டு வைத்தான்.

ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சியில் பிரியன் கலந்து கொள்வது நிலாவின் முன்னேற்றத்திற்கு தடையாக வந்தது. இதனால் தன் வேலையை அவளே தூக்கி எரியும்படியான சூழல் அமைந்தது. வேலையும் இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்று அவள் மனம் சோர்ந்து போனாள்.

shanbagavalli, Rathi and 2 other users have reacted to this post.
shanbagavalliRathichitti.jayaramanpriya.jagan
Quote

Enda priyan konjam panam vandathum thimir kudi pochi da unaku ithu inda field ethukathu rasa, unaku innumlife na enna nu puriyala da adan kashta padura 

Quote

Super ma 

You cannot copy content