You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 5

Quote

5

கடந்த நான்கு வருடமாகவே பிரியனுக்கும் நிலாவுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இல்லை. தினமும் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு சண்டை கோபம் பிரச்சனை என நிகழ்ந்தபடியே இருந்தன. உண்மையில் இதற்கெல்லாம் மூலாதாரமே அவன் நடித்த ‘நீயும் நானும்’ தொலைகாட்சி தொடர்தான். 

அந்த புகழ் கொடுத்த போதைதான் அவளிடமிருந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வைத்தது. ஆனால் அது ஒரு காரணம் மட்டும்தான். மற்றொரு முக்கிய காரணம் அந்த தொடரில் தேவிப்ரியனுடன் ஜோடியாக நடித்த நித்யஸ்ரீ.

இருவரும் அந்த தொடரில் மட்டுமல்லாது பல ரியலாட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றார்கள். யூ ட்யூப்களில் பேட்டி கொடுத்தார்கள். சானல் நிகழ்த்திய சின்னத்திரை விழாக்களில் சிறந்த ஜோடி என்று விருதுகள் வாங்கி குவித்தார்கள். அதோடு முடிந்ததா? விருதினை வாங்கிய கையோடு நித்யா பிரியனை நெருக்கமாக கட்டி நின்று போஸ் கொடுத்து நிலாவை கடுப்பாக்கினாள். இதில் அந்த படம் சமூக ஊடகங்கள் முழுக்கவும் பகிரப்பட்டு பேசவும் பட்டது.

அது எல்லாம் போதாது என்று இருவரும் சேர்ந்து நடித்த ரொமான்ஸ் காட்சிகள் ஷாட்ஸ்களாகவும் ரீல்ஸ்களாகவும் இன்ஸ்டா, முகநூல் என்று அனைத்திலும் இன்றும் ட்ரென்டிங்கில் உள்ளன. பல மில்லியன் வியூஸ்களை அள்ளின.

ஊடகத்துறையில் பணி புரிந்தாலும் வெண்ணிலாவிற்கு இதை எல்லாம் பார்க்க பார்க்க கோபமும் கடுப்புமாக வந்தது. அதற்கு முக்கிய காரணம் நித்யாவின் தோற்றத்தின் மீதான  பொறாமையும் தான் அந்த அளவுக்கு அழகு இல்லை என்ற தன் தோற்றத்தின் மீது நிலா  கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மையும்தான். 

கல்லூரி காலத்தில் பார்க்க ரொம்பவும் ஒல்லியாக இருப்பாள். முடியை சிறிதாக கத்தரித்திருப்பாள். முதிர்ச்சி இல்லாத உடல். முகம் பார்க்க கொஞ்சம் குழந்தை முகமாகத்தான் தெரியும்.

ஹரியும் கவியும் பிறப்பதற்கு முன்பாக இருந்த அந்த ஒடிசலான தோற்றம் நாளடைவில் கொஞ்சம் எடை கூடிவிட்டது. இடை பெருத்துவிட்டது.  உடலை கவனித்து கொள்ள அவளுக்கு நேரமே கிடைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேல் அலங்காரம் செய்து கொள்ள எல்லாம் அவளுக்கு அப்போதும் வராது. இப்போதும் வராது.

ஆனால் முடி விஷயத்தில், “உனக்கு முடி பெருசா இருந்தா நல்லா இருக்கும் நிலா” என்று பிரியன் அடிக்கடி சொல்ல, அவன் சொன்னதற்காக வேண்டி அவள் தன் முடியை நீளமாக வளர்த்து கொண்டாள்.

மற்றபடி அவளுடைய வேலை திரைக்கு பின்னே நிற்பது என்பதால் எப்போதும் வியர்த்து ஒழுகியபடிதான் சுற்றி கொண்டிருப்பாள். அவளும் தன் தோற்றத்தில் பெரிதாக அக்கறை காட்டி கொண்டதில்லை. பார்த்து பார்த்து ஆடை அணிவது எல்லாம் கூட ஏதாவது விழாக்களுக்கு மட்டும்தான்.

பிரியனும் அவளும் காதலித்த காலத்திலும் கூட அவள் அப்படிதான் இருந்தாள். அந்த வெண்ணிலாவைதான் அவன் காதலித்தான். மணந்து கொண்டான். இன்றுவரையில் அவள் மாறவில்லை. ஆனால் அவன் நிறையவே மாறிவிட்டான்

சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளில் முகமெல்லாம் புன்னகை மின்ன காட்சியளிக்கும் பிரியனின் கவர்ச்சிகரமான தோற்றத்தை பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். அவள் காதலித்த காலத்திலும் கூட பிரியன் அழகுதான் என்றாலும் இந்த அதீத முகப்பூச்சும் ஆளுமையும் ஆளை மயக்கும் புன்னகையும் அவளுக்கே புதிது. அவள் பார்க்காதது.

அவளது பிரியனுக்கு வாய் விட்டு சிரிக்கவே வராது. இறுகிய முகத்துடன்தான் சுற்றுவான். அவர்கள் காதலித்த போதும் அவன் அப்படிதான் இருந்தான். அப்படிதான் அவனை பார்த்தாள். நேசித்தாள். அரிதாரமில்லாத அவளது பிரியன் அவன். 

ஆனால் பளிச்சென்ற விளக்கொளியிலும் படம் பிடிக்கும் கருவியின் முன்பாக நிற்கும் இந்த பிரியன் வேறு ஆள். அந்தத் தோரணை, பேச்சு, சிரிப்பு என்று அத்தனையும் முற்றிலும் வேறு. அவன் மாறிவிட்டான். ஆனால் அவள் மாறவில்லை. இன்றும் அன்றும் அதே வெண்ணிலாதான். ஒரு வேளை அதுதான் அவனுடைய பிரச்சனையோ என்னவோ?

இந்த நிலையில்தான் ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சியின் பேச்சு வார்த்தை துவங்கியது. கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன்பு ஜே சானலை புதுப்பிக்கும் நோக்கில் ஏதாவது புத்தம் புது நிகழ்ச்சி ஒன்றையும் இறக்க வேண்டுமென்ற நோக்கத்தில் கலந்துரையாடல் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அவர்கள் சானலின் பெரிய தலைகள் மற்றும் நிகழ்ச்சிகளின் இயக்கநர்கள் துணை இயக்குநர்கள் என்று பலரும் கலந்து கொண்டு தங்கள் யோசனைகளை கூறினார்கள். அந்த சந்திப்பின் போதுதான் நிலா ஷைனிங் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்த தன் யோசனையை வெளியிட்டாள்.

வெளிநாட்டில் டாப் ரேட்டிங்கில் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் அந்த ரியலாட்டி ஷோவை நமது சானலில் நடத்தலாம் என்று நிலாவின் கருத்துக்கு,

‘அந்த ஷோல நம்ம ஊர்ல பார்க்க மாட்டாங்க’ என்ற மாற்று கருத்துக்கள் எழுந்தன. ஆனால் அவற்றிற்கு எல்லாம் நிலாவிடம் விளக்கம் இருந்தது. அதேநேரம் அந்த நிகழ்ச்சியை நமது ஊருக்கு ஏற்றார் போல சில மாற்றங்கள் செய்து நடத்தலாம் என்று அவள் கூறிய கருத்தும் யோசனையும் எல்லோரையும் கவர்ந்தது. அவள் யோசனை பரிசீலிக்கப்பட்டது.  

இரண்டு நாட்களுக்கு பிறகு நிகழச்சிகளின் தலைமை பொறுப்பாளர் சந்தீப், “நீ சொல்றது எவ்வளவு தூரம் பாஸிபிள்னு தெரியல... ஆனா இந்த ஷோ நடத்துறதுக்கான மொத்த பொறுப்பையும் உன்னை நம்பி கொடுக்கிறேன்” என்று நிலாவிடம் சொல்ல அவளால் நம்பவே முடியவில்லை.

அந்த நிகழ்ச்சியின் இயக்குநராக அவள் நியமிக்கப்பட்டதைதான் சந்தீப் அப்படி சொல்லிவிட்டு சென்றான். அதற்கு பிறகு ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சிக்காக தனக்கு என்று ஒரு குழுவை உருவாக்கினாள். நிகழச்சிக்கான சின்னம் துவங்கி அதன் படப்பிடிப்பு தளம், பிரபலங்கள் தங்க போகும் வீட்டின் வடிவமைப்பு என அத்தனையும் அவர்கள் குழுவுடன் இணைந்து அவள்தான் வடிவமைத்தாள்.

நான்கு மாதத்தில் நிகழ்ச்சிக்கான அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்வையிட்ட சந்தீப், “வெல் டன் நிலா... நம்ம இன்னும் நாலு மாசத்துல இந்த ஷோவை  சானலில் லாஞ் பண்றோம்... ஷோவை நடத்த போற செலிப்ரிட்டி யாரு... பார்டிசிப்பென்ட்ஸ் லிஸ்ட் ரெடி பண்ணிடுங்க” என, அவளுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. பறக்காத குறைதான். அந்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு இனிப்பு வாங்கி கொண்டு சென்றாள்.

அதேநாளில் வேறொரு சம்பவமும் நிகழ்ந்தது. பிரியன் கையெழுத்திட்ட படத்திலிருந்து அவனை தூக்கிவிட்டார்கள்.  அது ஒரு பிரபலமான நடிகரின் படம். பிரியன் அதில் இரண்டாவது நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தான். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று காரணம் காரியம் எதுவும் சொல்லப்படாமல் பிரியன் படத்திலிருந்து தூக்கப்பட்டான்.

“என்ன சார் பிரச்சனை?” என்று அவன் இயக்குநரை தேடி சென்று விசாரிக்க, அவர் அவனை ஒரு பொருட்டாக கூட மதித்து பதில் சொல்லவில்லை. அந்த படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த துணை இயக்குநர் கணேஷ்தான் இன்னதென்று அவனுக்கு விவரத்தை கூறினான்.

“அந்த ஹீரோவை விட நீங்க ஸ்க்ரீன்ல ஸ்மாட்டா தெரியுறீங்களா ப்ரோ... அதான் வேண்டாங்குறாங்க” என்றவன் சொன்னதை கேட்ட பிரியன் நொந்து போய் வீட்டிற்கு வர அவனுக்கு முன்னதாகவே வீட்டில் ஆஜராகி இருந்த நிலா அவனை சிரித்த முகமாக வரவேற்றாள்.

ஆனால் அவன் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று விட, பின்னோடு நடந்தவள் தான் வாங்கி வந்த இனிப்பை அவனிடம் நீட்டினாள்.

“எடுத்துக்கோ தேவ்”

“எதுக்கு?” அவன் முகம் வெறுமையாக இருந்தது. அவள் சந்தோஷத்தை அவன் உள்வாங்கவே இல்லை.  

“என்னை ஒரு பெரிய ஷோவுக்கு டிரைக்ட்ரா போட்டிருக்காங்க... எங்க சானலில் இவ்வளவு பெரிய ஷோவை ஒரு பொண்ணுக்கு கொடுக்கிறது இதான் ஃபர்ஸ்ட் டைம்” என்று அவள் பெருமையுடன் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“என்னை படத்துல இருந்து தூக்கிட்டாங்க” என்றான் முகத்தை தொங்க போட்டு கொண்டு. அவள் அதிர்ச்சியடைய அவன் அந்த இனிப்பை எடுத்து கொள்ளாமல் உடையை மாற்றி கொண்டு சென்று சோபாவில் அமர்ந்தான்.

“என்னாச்சு தேவ்... ஏன் தூக்குனாங்க?” என்று கேட்டு கொண்டே நிலாவும் கணவன் அருகே அமர்ந்தாள்.

“ஹம்... நான் அந்த படத்துல நடிக்கிற ஹீரோவை விட ஸ்மாட்டா யங்கா இருக்கேனா... அதனால நான் வேணாம்னு சொல்லிட்டாங்க” என, “அடபாவிகளா” என்று கடுப்பான நிலா, “நம்ம இன்டஸ்டிரில இதான் பிரச்சனை” என்று சலித்து கொண்டாள். பிரியன் எதுவும் பேசாமல் தலையை தொங்க போட்டபடி அமர்ந்திருந்தான்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

அவன் கரத்தை தன் கைக்குள் எடுத்து கொண்டவள், “சரி விடு... பெரிய ஸ்க்ரீன்ல இந்த மாதிரி பாலிட்டிக்ஸ் எல்லாம் ரொம்ப சகஜம்... இது போனா போகுது... கண்டிப்பா வேற ஏதாவது சான்ஸ் வரும்...

உனக்கு திறமை இருக்கு தேவ்... நிச்சயம் நீ ஜெயிப்ப... இதுக்கெல்லாம் டிஸப்பாயின்ட் ஆகாத” என்று தைரியம் கூற, அவன் முகம் தெளியவில்லை.

“நான் ரொம்ப மோசமான மூட்ல இருக்கேன்... ப்ளீஸ் என்னை கொஞ்ச நேரத்துக்கு தனியா விடு” என்றபடி தன் கையை அவள் கரத்திலிருந்து பிரித்து கொண்டான்.

“தேவ்” என்றவள் மீண்டும் பேச ஆரம்பிக்க, “என்னை தனியா விடுன்னு சொன்னேன்” அவன் திரும்பி முறைக்க, அவள் அமைதியாக எழுந்து கொண்டாள். தன் கையிலிருந்து இனிப்புகளை பார்த்தவளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பிருந்த சந்தோஷமும் எதிர்பார்ப்பும் மொத்தமாக வடிந்து விட்டது.

அன்றிலிருந்து பிரியனின் நடவடிக்கை இன்னும் மோசமாகிவிட்டது. எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்து கொண்டே சுற்றினான். அவனுக்கு நம்பிக்கை தரும் விதமாக அவள் என்ன பேசினாலும் அவன் காதிலேயே வாங்குவதில்லை. அவளும் அவனிடம் பேச முயற்சித்து வெறுத்து போய்விட்டாள்.

வீட்டு வேலைகள் செய்வதிலும் அவன் உடன் நிற்பதில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து போக கூட அவனிடம் அவள் கெஞ்ச வேண்டியதாக இருந்தது. சில நேரங்களில்  அவனிடம் கேட்டு அதனை செய்ய வைப்பதற்கு அந்த வேலையை தானே செய்து விடலாம் என்ற மனநிலைக்கு சென்றுவிடுவாள்.

இதில் பிரியன் ஒரளவு சகஜமாக இருப்பது அவனது மகள்களிடம் மட்டும்தான். நிலா வீட்டிற்கு வரும் வரை அவர்களை பார்த்து கொள்வான். அதுவே அவள் வேலை முடித்து வீட்டிற்கு வந்துவிட்ட அடுத்த நொடியே மொத்த பொறுப்புகளையும் அவள் தலையில் கட்டிவிட்டு வெளியே கிளம்பிவிடுவான்.

“தேவ் எங்கே போற?” என்று அவள் கேட்டால் நிச்சயம் அது சண்டையில்தான் முடியும்.

“நான் கொஞ்ச நேரம் நிம்மதியா வெளியே கூட போயிட்டு வர கூடாதா?” என்பான் அல்லது, “வீட்டுக்குள்ள இருந்து இருந்து... எனக்கு பைத்தியம் பிடிக்குது” என்று முகத்தை வெறுப்புடன் காட்டுவான். அதற்கு மேல் அவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியாது.

எப்படியோ போகட்டும் என்று அவளும் அவனை கேள்வி கேட்பதை நிறுத்தி கொண்டுவிட்டாள். அதன் பிறகு குழந்தைகளை படிக்க வைப்பது இரவு சமையல் என அனைத்தையும் செய்து முடித்து அவர்களையும் தூங்க வைத்து விட்டு படுக்கும் போது அவள் உடலும் மனமும் ஓய்ந்து போய்விடும்.

அதுவும் சமீபமாக அந்த நிகழ்ச்சி பொறுப்பை எடுத்து கொண்டதில்  அலுவலகத்திலும் அவளுக்கு வேலை பளூ அதிகமாகி இருந்தது. அன்று நேரம் பன்னிரண்டு ஆகியும் பிரியன் வீடு திரும்பவில்லை. அவனுடைய செல்பேசிக்கு அழைத்தாலும் எடுக்கவில்லை. அதற்கு மேல் காத்திருக்க அவள் உடல் ஒத்துழைக்காததால் குழந்தைகள் அருகில் படுத்து தூங்கிவிட்டாள்.

கிட்டத்தட்ட ஒரு மணிக்கு மேல் அழைப்பு மணி கேட்டது. அவளால் எழுந்து கொள்ளவே முடியவில்லை. அடுத்ததாக அவளுடைய செல்பேசி சிணுங்கியது. எங்கே குழந்தைகள் விழித்து விட போகிறார்கள் என்ற படபடப்பில் உடனடியாக எழுந்து அதனை அணைத்தவள் வந்து கதவை திறக்க பிரியன் வாயிலில் நின்றிருந்தான்.

“எங்க போன நீ... ஏன் இவ்வளவு லேட்டு... போன் பண்ணா கூட எடுக்க மாட்டியா” என்று தூக்க கலக்கத்துடன் அவள் கேட்டு வைக்க, “நைட் ஷோ படம் பார்க்க போனேன்” என்று சுருக்கமாக சொல்லிவிட்டு அவன் உள்ளே நடந்தான்.

அவள் வாயிற் கதவை மூடியபடி, “தேவ்... குழந்தைங்க தூங்கிட்டாங்க... நீ இந்த ரூமுகுள்ள போய் லைட்டை கியட்டை போட்டு அவங்கள டிஸ்டர்ப் பண்ணி வைச்சுடாத... பக்கத்து ரூம்ல படுத்துக்கோ... அப்புறம் இனிமே லேட்டா வர்றதா இருந்தா இன்னொரு சாவி இருக்கு இல்ல... அத எடுத்துட்டு போ” என்று விட்டு அவள் அறைக்குள் நுழைய போக, பிரியன் அவளை பின்னிருந்து அணைத்து பிடித்தான்.

“அதான் குழந்தைங்க தூங்கிட்டாங்க இல்ல... நீயும் என் கூட பக்கத்து ரூம்ல படுத்துக்கோ”

‘இதுக்கு மட்டும் நான் வேணுமாக்கும்’ என்று எரிச்சலுடன் பல்லை கடித்து கொண்டவள்,

“எனக்கு டயடா இருக்கு தேவ்... மூட் இல்ல விடு” என்று சொல்லி அவன் பிடியிலிருந்து வெளியேறி கொள்ள, அவன் இரு கரங்களும் மீண்டும் அவளை இழுத்து பிடித்தது. அவன் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் அவள் வந்தே ஆக வேண்டுமென்பது போல!

 “எனக்கு டயடா இருக்குபா... தூக்கம் வருது... நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா கிளம்பணும்” என்றவள் சொன்ன போதும், “நிலா ப்ளீஸ் ப்ளீஸ்டி” என்று அவளை நெருக்கமாக அணைத்தபடியே தன் முகத்தால் அழுந்த உரசினான். அவளுக்கு ஒரு பக்கம் எரிச்சல் மூண்டது என்றால் மறுபுறம் சோர்வாக இருந்தது. தூக்கம் கட்டி இழுத்தது.  

“சொன்னா புரிஞ்சிக்கோ தேவ்... நான் நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும்... வேலை நிறைய இருக்கு” என்று அமைதியாகவே அவனிடம் சொல்லி புரிய வைக்க முயல,   

“உனக்கு வேலை இருக்கு... நான் வெட்டியா இருக்கன்... அதானே” என்றவன் சிலிர்த்து கொள்ள, அவளுக்கு பக்கென்றானது. அடுத்த வார்த்தை பேசாமல் அவள் உதடுகள் பூட்டி கொண்டன.

ஆனால் அவன் அந்த கோபத்துடன் அவள் பிடியை விட்டுவிட்டு பக்கத்து அறைக்கு சென்று விட, அவளுக்கு இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. இரண்டு அறைக்கு இடையில் நின்றாள். ஒரு பக்கம் அவளுடைய உறக்கம். மறுபக்கமோ அவளுடைய நிம்மதி.

இப்போது இரண்டுமே பறிபோய்விட்ட உணர்வுதான். அதேநேரம் அவன் எப்படியோ கோபித்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு குழந்தைகள் அறைக்கு சென்று படுக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவ்வாறு சென்று படுத்தாலும் அவளால் உறங்க முடியாது.

அமைதியாக அவனிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

 படுக்கையில் கிடந்த பிரியனிடம், “தேவ்... நான் அப்படி மீன் பண்ணல” என்று மெதுவாக சொல்லி கொண்டே அவள் அருகே அமர, “கிளம்பு... உனக்கு நிறைய வேலை இருக்கும்” என்று பட்டென்று முகத்தை திருப்பி கொண்டான்.

“ஏய் தேவ் தேவ்... இங்க பாரேன்” என்று நெருக்கமாக அமர்ந்து அவன் கன்னங்களை பிடித்து திருப்பி, “சாரி... நான் உன்னை ஹார்ட் பண்ணனும்னு பேசல... சத்தியமா இல்ல” என்று பொறுமையாக கூறவும் அவன் கண்களிலிருந்த கோபம் வடிந்திருந்தது.

அவள் கன்னத்தை பற்றி அருகே இழுத்து முத்தமிட்டவன் கரங்கள் மெல்ல அவளை தன்னுடன் இறுக்கி கொண்டன. மெது மெதுவாக அவள் உடல் அவன் ஆளுகைக்குள் வந்தது. அவன் ஆசையாக கூடினாலும் அவள் மனமும் உடலும் அதில் ஒட்ட முடியாமல் தவித்தது. அந்தரத்தில் நின்றது.

‘அவனுக்கு மூட் இல்லனா என் கூட... பேச கூட மாட்டான்...  முகத்தை திருப்பிட்டு போவான்... ஆனா இதுவே எனக்குனா’ அவன் புணரும் போதே அவள் உள்ளம் புழுங்கி தவித்தது. ஆனால் தன் வெறுப்பையும் கோபத்தையும் அவளால் இதுவரையில் முழுதாக அவனிடம் காட்டவே முடிந்ததில்லை. அது அவன் மீது கொண்டு காதலாலா அல்லது தன்னுடைய இயலாமையாலா என்று அவளுக்கு தெரியவில்லை.   

எல்லாம் முடிந்ததும் அவன் பாட்டுக்கு உறங்கிவிட்டான். ஆனால் அவளுடைய உறக்கமோ காத தூரத்திற்கு ஓடிவிட்டது. அதன் பின் என்ன முயன்றும் அவளால் உறங்கவே முடியவில்லை.

இதனால் காலை சீக்கிரமாகவே தன் வேலையை துவங்கியவள் குழந்தைகளை தயார் செய்து அனுப்பிவிட்டு அலுவலகத்திற்கு விரைந்துவிட்டாள். அவர்கள் நிகழ்ச்சியின் கட்டுமான ஏற்பாடுகளை சரி பார்த்து கொண்டிருக்கும் போது பிரியனிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஹரிக்கு ரொம்ப உடம்பு சரி இல்ல நிலா” என்றவன் பதட்டத்துடன் கூறயதுமே அடித்து பிடித்து அவன் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு ஓடி சென்று, “என்னாச்சு தேவ்” என்று விசாரிக்க,

“ஏதோ வைரல் பீவர் மாதிரி இருக்கு” என்றான். பள்ளி சீருடையில் அவன் அருகே அமர்ந்திருந்த மகளின் முகம் சோர்ந்த களைத்திருந்ததை பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு கவலையானது. தான் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் மகளின் உடல்நிலையை கவனிக்காமலே காலை பள்ளிக்கு அனுப்பிவிட்டோமா என்று அவள் தன்னைத்தானே குற்றவாளியாக பாவித்து மனதிற்குள் நிந்தித்து கொண்டாள்.

 மருத்துவரை பார்த்து மருந்து மாத்திரைகளை எல்லாம் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றவள் இரண்டு நாட்களுக்கு மகளை விட்டு எங்கும் அசையவில்லை.

“நீ போறதுனா போ... நான் பார்த்துக்கிறேன்” என்று பிரியன் சொன்ன போதும் அவள் வேலைக்கு செல்லவில்லை. ஒரு வகையில் அது அவளின் குற்றவுணர்வின் வெளிப்பாடுதான். மறுபுறம் நிகழ்ச்சிக்கான முக்கியமான வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

அந்த பொறுப்புகளை எல்லாம் குழுவில் அவளுடன் இணைந்து பணிபுரியும் கிருஷ்ணாவிடம் தந்திருந்தாள். ஹரிக்கு  ஜுரம் விட்டு உடல் தேறிய பின்னரே அவள் பணியில் இணைந்தாள்.

ஆனால் அந்த ஒரு வாரத்திற்குள் அவள் எதிர்பாராதளவுக்கான சில மாற்றங்கள் அவள் அலுவலகத்தில் நிகழ்ந்திருந்தன. அவள் தொகுப்பாளாராக திட்டமிட்டு வைத்திருந்த நடிகருக்கு பதிலாக ஈஸ்வரை கமிட் செய்திருந்தார்கள்.

இந்த முடிவை செய்தது கிருஷ் என்று அறிந்ததுமே அவளுக்கும் அவனுக்கும் இடையில் முட்டி கொண்டது. பிரச்சனை சந்தீப்பிடம் சென்றது. ஆனால் சந்தீப் அவளுக்கு ஆதரவாக பேசாமல் கிருஷ்ணா பக்கமாக பேசினான்.

“ஈஷ்வர் குட் சாய்ஸ்தானே நிலா”

“எனக்கு என்னவோ ஈஷ்வரால இந்த ஷோவை நடத்த முடியும்னு தோணல... அன் இது வெறும் ஆங்கரிங் பண்ற வேலை மட்டும் இல்ல”

“எனக்கும் தெரியும்... ஆனா இவங்க சொல்ற ஆக்டரை போட்டா அவரை நாம நினைச்சபடி எல்லாம் பேச வைக்க முடியாது” கிருஷ் கருத்து கூற சந்தீப்பும் அவன் கருத்தை ஆமோதித்தான்.

“இப்போ இத பத்தி பேசி பிரயோஜனம் இல்ல.. ஈஸ்வரை கமிட் பண்ணியாச்சு” என்ற முடித்த சந்தீப் மேலும் அவளிடம்,  “பார்டிஸிபன்ட் லிஸ்ட் என்னாச்சு நிலா?”  என்று விசாரித்தான். அவள் குரல் இறங்கியது.

“ரெடி பண்ணனும் சார்... இந்த வீக் என்ட்ல கொடுத்துடுறேன்”

“நான் ரெடி பண்ணிட்டேன் சார்... மொத்தம் இருபத்து அஞ்சு பேர்” என்று அதற்குள் கிருஷ் முந்தி கொண்டு ஒரு விரலியை சந்தீப்பிடம் நீட்டினான்.

அதனை பார்வையிட்ட சந்தீப் குழப்பத்துடன் நிலாவை பார்த்தான்.

“சார் இதெல்லாம் நியாயமே இல்ல... கிருஷ் வேணும்டே இந்த ஷோவை என்கிட்ட இருந்த ஸ்டீல் பண்ண பார்க்கிறான்”

“இங்க அதெல்லாம் சகஜம் நிலா... இங்க திறமையும் புத்திசாலித்தனமும்தான் முக்கியம்... அன் டெடிகேஷன் எல்லாத்த விட ரொம்ப முக்கியம்” என்று அழுத்தி கூற,

“அப்போ நான் டெடிக்கேடடா இல்லன்னு சொல்ல வறீங்களா?” என்று சந்தீப்பை தீவிரமாக பார்த்தாள் நிலா.

“பத்தல நிலா... இவ்வளவு பெரிய ஷோவுக்கான உங்க டெடிகேஷன் பத்தலன்னுதான் சொல்லுவேன்”

“என் குழந்தைக்கு உடம்பு சரி இல்ல... அதனாலதான் இந்த ஒரு வாரமா என்னால வர முடியல... ஆனா இந்த நாலு மாசமா இந்த ஷோவுக்காக நான் எவ்வளவு வொர்க் பண்ணி இருக்கன்...  என் உழைப்பை போட்டிருக்கணு எல்லாம் உங்களுக்கு தெரியாதா”

“நீங்க மட்டும் தனியாவா வொர்க் பண்ணீங்க... நாம டீமாதானே பண்ணோம்” என்று இடையில் பேசினான் கிருஷ்.

“ஆனா இந்த ஷோ ஐடியா என்னோடதுதான்” என்று அதிகாரமாக சொன்னாள் நிலா.

“அது வெள்ளைகாரன் ஐடியா... நீங்க பட்டி டிங்கரிங் பார்த்தீங்க... அவ்வளவுதான்” என்று இருவரும் சந்தீப்பின் முன்பாகவே வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

“நிலா கிருஷ்... அமைதியா இருங்க” என்று அவர்களை கட்டுபடுத்தியவன்,

“நீங்க உங்க லிஸ்டை எடுத்து வாங்க நிலா... அப்புறம் பேசுவோம்” என்று விட்டான். சந்தீப் அப்படி சொன்னது கூட வெறும் அப்போதைய சமாதானத்திற்கு என்றுதான் அவளுக்கு தோன்றியது. அதற்கு ஏற்றார் போல இரண்டு வாரத்தில் அவள் எடுத்து வந்த பட்டியலில் முக்கால் வாசி பெயர்களை சந்தீப் நிராகரித்துவிட்டான்.

அது மட்டும் இல்லாமல் கிருஷ் கொண்டு வந்த பட்டியலில் அவள் கணவனின் பெயர் இருந்தது.

“யாரை கேட்டு நீ தேவ் பேரை இதுல சேர்த்த” என்று அவள் கிருஷிடம் சண்டையிட, “நான் ஆல்ரெடி பேசிட்டேன்... தேவிப்ரியனும் ஒத்துக்கிட்டாரு... என்ன... உங்க ஹாஸ்பென்ட் உங்ககிட்ட சொல்லலயோ?” என்று கேட்டு எளக்காரமாக அவளை பார்க்க, அவளுக்கு பற்றி கொண்டு எரிந்தது.

“இல்ல இந்த் ஷோல தேவ் கலந்துக்க மாட்டான்” என்று அவள் உறுதியாக கூற,

“அவரே ஒத்துக்கிட்டாரு... உங்களுக்கு என்ன பிரச்சனை” என்றான் கிருஷ்.

“நான் ஒத்துக்க விட மாட்டேன்... தேவ் இந்த ஷோல கலந்துக்க போறதில்ல” என்றவள் நேராக சந்தீப்பிடம் சென்று இது பற்றி பேசவும், “நானே இதை பத்தி பேசணும்னு நினைச்சேன் நிலா... ஆக்சுவலி கிருஷ் பிரியனை சஜஸ்ட் பண்ணது நல்ல ஐடியாதான்... மக்கள் மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான ஆக்டர் பிரியன்... அப்படி ஒருத்தர் பார்டிஸிபன்டா இருக்குறது நம்ம ஷோவோட டிஆர் பி ய ஏத்தும்... அதுவும் புதுசா ஆரம்பிக்கிற ஷோல இந்த மாதிரி பிரபலமான ஆட்கள் பார்டிஸிபன்டா இருந்தாதான் ஷோவை ஹிட் பண்ண முடியும்” என்று விளக்கமாக கூறியவன் இறுதியாக,

“எனக்கு என்ன தோணுதனா உங்க கணவர் பார்டிஸிபேன்ட் பண்ற ஷோல நீங்க டிரைக்டரா இருக்குறது...ம் சரியா வராது... நீங்க வேணா அடுத்த சீசன் பண்ணுங்களேன்” என்று நாசூக்காக அந்த ஷோவிலிருந்து அவளை  விலக்கினான்.

அவளுடைய யோசனை மற்றும் இத்தனை மாத உழைப்பு என அனைத்தையும்  உறிஞ்சு கொண்டதோடு நியாயமே இல்லாமல்  அவள் வாய்ப்பையும் பிடுங்கி கொண்டதை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

“பைன்... நான் இந்த ஷோல இல்லனா இந்த சானலயும் நான் இருக்க போறதில்ல... ஐ க்விட்” என்று அதிரடியாக கூறிவிட்டு அறை வாசலுக்கு செல்ல இருந்தவள் மீண்டும் திரும்பி நின்று சந்தீப்பையும் கிருஷையும் பொதுவாக பார்த்து, “அன் என் ஹஸ்பென்ட் தேவிப்ரியனும் இந்த ஷோல பார்டிஸிபேட் பண்ண போறதில்ல” என்று அழுத்தமாக தெரிவித்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.

 

shanbagavalli, Rathi and 2 other users have reacted to this post.
shanbagavalliRathichitti.jayaramanpriya.jagan
Quote

Understanding illadavan priyan purimjikira thanmai illa adan ivlo problem

Quote

Super ma 

You cannot copy content