You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 6

Quote

6

உலகத்தின் ஆதி பொழுது போக்கு புரளி பேசுதல்தான். அதன் வேறு வேறு வடிவங்கள்தான் சமூக ஊடகங்கள். அதனை இன்னும் நவீனமாக மாற்றி ஜே சானல் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிதான் இந்த ‘ஷைனிங் ஸ்டார்’.

அந்த போட்டியில் பங்கேற்பாளராக வந்திறங்கிய அத்தனை பேரும் பி வி என்ற ஷுட்டிங் நகருக்குள் அந்நிகழ்ச்சிக்காக என்றே பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட பங்களாவிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

 அடுத்தவர்கள் வீட்டையும் வாழ்க்கையையும் எட்டி பார்ப்பது மனிதனுக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. இதுவும் அவ்வகைதான். அதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கரும்பு தின்ற கூலி கொடுப்பது போலதான்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போலதான் இதுவும். உள்ளே இருக்கும் பிரபலங்கள் சிறிய இரைகள். வெளியே இருக்கும் பார்வையாளர்கள் பெரிய இரைகள். அதாவது பெரிய மீன். மொத்தத்தில் இரண்டுமே இரைகள்தான்.  பின்னிருந்து இந்த நிகழ்ச்சியை வழிநடத்தும் குழுவினர்தான் சூத்திரதாரிகள். இவர்கள் மனித உளவியலை கொண்டு ஆட போகும் சுவாரசியமான விளையாட்டுதான் இந்த எஸ் எஸ் நிகழ்ச்சி.

அந்தப் பங்களாவில் பூசப்பட்ட வண்ணபூச்சுக்கள், பொருட்களின் நிறங்கள், ஓவியங்கள் என அனைத்துமே இந்த உளவியல் விளையாட்டின் முக்கிய அங்கம். மனித உணர்வுகளுடன் மிக நெருக்கமான தொடர்புடையவை நிறங்கள்.

 மருத்துவமனைகள் வெள்ளை நிறங்களில் இருப்பதும் கண்ணை உறுத்தாத விளக்கொளியை அவ்விடம் கொண்டிருப்பதும் உடல் மற்றும் மனதின் நலனுக்காக. ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகள் அதற்கு நேரெதிரான உளவியலுடன்தான் விளக்கொளிகள் மற்றும் வண்ணங்களையும் பயன்படுத்தி இருப்பார்கள்.

சில வண்ணங்களும் விளக்கொளியும் இணை சேரும் போது அதே நிறம் வேறு மாதிரியாக பிரதிபலிக்க கூடும். அவற்றிலும் மனித உணர்வுகளை தூண்டி எழ செய்கிற சக்தி சிவப்பு நிறங்களுக்கும் பளிச்சென்ற விளக்கொளிகளுக்கும் உண்டு. அந்த வகையில் அங்கே தங்கி இருப்பவர்கள் கூடும் இடங்களை சிவப்பு நிறங்கள் ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் அமர்ந்தும் பேசும் சோபாவின் நிறம் அல்லது எதிர் சுவரின் நிறம் அங்கே வைக்கபட்ட ஓவியம் என ஏதோ ஒன்று சிவப்பு நிறத்தில் திட்டமிட்டே அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிறங்கள் போட்டியாளர்களை மட்டுமல்ல. தொலைகாட்சியில் பார்க்கும் பார்வையாளர்களின் உணர்வுகளையும் தூண்ட கூடியவை. இதே நிற யுக்திகள் கைப்பேசி வீடியோ கேம்களிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. போட்டியாளர்களை மீண்டும் மீண்டும் அடிமைப்படுத்தி விளையாட வைக்கும் உளவியல் அது.  

ஒரு பக்கம் நிறங்கள். மறு பக்கம் பார்வையாளர்களை கவரும் இடங்களில் அவர்கள் நிகழ்ச்சியின் விளம்பரதாரர்களின் பொருட்கள் அல்லது அதன் படங்கள், பெயர்கள் போன்றவை பொறிக்கப்பட்டிருக்கும். நாம் கவனிக்காமலே அவை நம் கவனத்தை பெறும். அந்த பெயர்கள் அல்லது பொருட்கள் நம் மனதில் பதியும். கடையில் சென்று நின்றதும் நம்மை அறியாமலே அந்த பிராண்டின் பெயர் நம் வாயில் வரும்.

இதெல்லாமே ஒரு வகையான PSYCHOLOGICAL MANIPULATION. உளவியல் ரீதியாக நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை வேறொருவர் தீர்மானிப்பது. நம் உணர்வுகளை கையாள்வது அல்லது தூண்டுவது என்று இதில் நிறைய வகைமை உண்டு. உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் சரி. வெளியே பார்க்கும் பார்வையாளர்களும் சரி. உணராமலே இந்த உளவியலின் ஆளுகைக்குள் வந்துவிடுகிறார்கள்.

 இதை எல்லாம் உணராத அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பல வண்ணபூச்சுக்களால் அழகுற மின்னிய அந்த பங்காளாவின் வசீகரத்தை ரசித்தார்கள். எங்கும் ஜொலித்த அலங்கார மின்விளக்குகளை கண்டு வியந்தார்கள்.

 விசாலமான வெளிவாயில் பெரிய நீச்சல் குளம், மேலும் வீட்டின் உள்மைய பகுதியில் வட்டவடிவிலான மிக பெரிய முகப்பறை, அதனை ஒட்டினார் போல திறந்த சமையலறை மற்றும் கண்ணாடி கூடு போலிருந்த அரைவட்ட வடிவிலான படுக்கையறை மற்றும் பெரிய வண்ண படுக்கைகள் என அனைத்தையும் பார்த்தவர்கள் பிரமித்து நின்றார்கள்.

படுக்கையறையை பொறுத்த வரை ஆண்களுக்கு வலது புறம் மற்றும் பெண்களுக்கு இடது புறம் என பிரிக்கப்பட்டதற்கு சாட்சியாக இடையில் ஒரு கண்ணாடி சுவர் நின்றது. சக போட்டியாளர்களுடன் சேர்ந்து பிரியனும் அந்த பங்களாவின் வடிவமைப்பை எல்லாம் சுற்றி பார்த்து ஆச்சரியித்தான்.

அதுவும் வாயிலில் பிரமாண்டமான அளவில் எஸ் எஸ் என்ற எழுத்து பாம்பு போல பின்னி கொண்டிருந்ததும் அது மஞ்சள் விளக்கொளியில் மின்னியதையும் கண்டு திகைப்புற்றான். அந்த நொடியே அவனுடைய பால்ய பருவ கால நினைவுகள் அவன் மூளைக்குள் மின்னலென தோன்றி மறைந்தன. 

ரொம்பவும் சமீபமாகத்தான் ஓரளவு வசதியான வாழ்க்கையை அவன் வாழ்கிறான். அதற்கு முன்பு வரையில் அத்தியாவசிய உபகரணங்கள் கூட இல்லாத மிக சிறிய வீடும் வாழ்க்கையயும்தான் அவனுடையது. நிலாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட அவனை ஏழ்மை துரத்தி துரத்தி அடித்ததுதான்.

இருவரும் ஒரே ஒரு அறை கொண்ட ஒண்டு குடித்தனத்தில் வசித்தார்கள். சிறியளவிலான ஒரு அறை. படுத்து கொள்ள ஒரே ஒரு பாய். தலையணை கூட கிடையாது. வீட்டுக்கு தேவையான சில பொருட்கள். அவ்வளவுதான்.

இந்த அனுபவங்கள் எல்லாம் ஆடம்பரமான வாழ்க்கையின் மீதான அவனது விருப்பத்தை  கூட்டியது. ரொம்ப வருடங்களாக அவனுக்குள் அடக்கப்பட்ட ஆசைகளும் ஆதங்கமும் சினிமாத்துறையில் நாயகனாக ஜொலிக்க வேண்டுமென்ற எண்ணத்தை வலுப்பெற செய்தது.

ஒரு வகையில் அவனது இலட்சியத்தின் முக்கிய நோக்கம் பேர், புகழ், வசதி. அது மூன்றையும் இந்த நிகழ்ச்சி அவனுக்கு கொடுக்கும் என்று நம்பிக்கையில்தான் இதில் பங்கேற்க உடனடியாக சம்மதித்தான்.   

 இப்படியாக யோசித்து கொண்டே பிரியன் அந்த பங்களாவிற்குள் பிரவேசிக்க, அதன் உள் கட்டமைப்பும் அவனை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அவனுடைய கவனத்தை அதிகமாக ஈர்த்தது மூலை முடுக்குகள் விடாமல் சுழன்று கொண்டிருக்கும் நவீன ரக கேமரா.

அங்குள்ள கேமராக்களை ‘அது’ என்று குறிப்பிட்டு அஃறிணையில் சேர்க்க முடியாது. அந்த போட்டியாளர்களுடன் சேர்த்து அந்த கேமராவும் அவ்விளையாட்டில் பங்கு கொள்ள போகிறது. அங்கிருந்தவர்களை கண்காணிப்பது அல்ல. அதன் வேலை அவர்களை காட்டி கொடுப்பதும்தான். 

இங்கே மனிதர்களுக்கு பல முகங்கள் உண்டு. ஆனால் எந்த முகத்தை வெளியே காட்ட வேண்டும், எந்த முகத்தை மறைத்து கொள்ள வேண்டுமென்பது எல்லாம் அவரவர்களது விருப்பம். அரசியல்வாதிகள் சினிமா நடிகர்கள் என்று இல்லை. சமான்ய மனிதனுக்கும் கூட இப்படி பல முகங்கள் உண்டு. ஆனால் இருபத்து நாலு மணி நேரமும் ஒருவனால் தன்னுடைய நிஜ முகத்தை மறைத்து கொண்டிருக்க முடியாது. முக்கியமாக தொடர்ந்து நூறு நாட்கள் நடிக்கவும்  முடியாது.

ஒரு கேமராவிடம் நடித்தாலும் வேற ஏதாவது கேமராவில் அவன் பிடிபட்டுவிட கூடும். கழிவறை மற்றும் உடை மாற்றும் அறை தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்த மூன்றவாது கண்கள் முனைப்புடன் தங்கள் கண்காணிப்பு பணியை செய்து கொண்டிருந்தன.

பார்ப்பதற்கு அழகாக ஆடம்பாரமாக இருந்தாலும் அந்த பங்களா ஒரு நவீன சிறைதான். ஓடி போவதற்கும் வழியில்லை. ஒளிந்து கொள்வதற்கும் வழியில்லை.

இருபது போட்டியாளர்களும் தங்களின் சக போட்டியாளர்களுடன் அறிமுகம் செய்து கொண்டார்கள். ஒரு வகையில் பலரும் முன்பே அறிமுகமானவர்களாக இருந்தார்கள். பிரியனுக்கு சிலருடன் நேரடியாகவே அறிமுகம். ஏற்கனவே பேசி பழகி இருக்கிறான். மற்றபடி சிலரை பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். பழகியதில்லை.

 அதில் இருவர் மட்டும் அவன் கேள்விப்படாத நபர்கள். ஜிக் ஜேக் ஆப்பில் ரீல்ஸ் போட்டு பிரபலமானவர்கள். மற்றபடி வந்திருந்த போட்டியாளர்கள் எல்லோருக்கும் பிரியனை நன்றாக தெரிந்திருந்தது. அவனை பார்த்ததுமே ஆர்வமாக வந்து பேச்சு கொடுத்தார்கள்.

அவனிடம் இலகுவாக பழகி நட்பு பாராட்டினார்கள். ஆனால் அவர்களுள் பெரும்பான்மையானவர்கள் அவனை மிக பெரிய போட்டியாகத்தான் பார்த்தார்கள். அவன் உள்ளே இருக்கும் வரை தங்களின் வெற்றி சாத்தியம் இல்லை என்ற எண்ணம் பலரின் மனதிலும் ஓடியது. ஆனால் அந்த எண்ணத்தை யாரும் வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அமச்மே காட்ட விரும்பாத முகங்களை காட்டி கொடுப்பதுதானே.

எந்த உணர்வுகளையும் வெகுநாளைக்கு மறைத்து வைக்க முடியாது. பிரியனுக்கும் இயல்பாகவே அப்படி உணர்வுகளை மறைக்கும் திறமை எல்லாம் கிடையாது. அவனுடைய வெளிப்படையான குணம்தான் ஊடக துறையில் அவனுக்கு பல நேரங்களில் பிரச்சனையாக அமைந்தது. ஆனால் யாருக்காகவும் அவன்  தன்னை மாற்றி கொண்டது இல்லை. தன் இலட்சியத்தை விட்டு கொடுத்து பின்வாங்கியதும் இல்லை. அந்த குணம்தான் அவனுடைய வெற்றிக்கான காரணமும் கூட.

அங்குள்ள எல்லோரிடமும் பிரியன் இயல்பாக அறிமுகம் செய்து கொண்டாலும் அவன் போலியாக யாரிடமும் சிரிக்கவில்லை. மனதிலிருந்த உணர்வுகளை அப்படியே அவன் முகம் வெளிக்காட்டியது. எல்லோரும் குழுவாக உணவருந்த அமர்ந்தார்கள். பேசி சிரித்து கொண்டே உண்டார்கள். ஆனால் பிரியன் மட்டும் அமைதியாக தனக்கான உணவை உண்டுவிட்டு எழுந்தான்.

அவனை கூர்ந்து கவனித்த சிலர் அவனை சிடுமூஞ்சி என்று எண்ணி கொண்டார்கள்.

பிரியன் உடைமாற்றி வந்து வெளியே புல்வெளியில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.  “என்ன சார்... எல்லோரும் பேசி சிரிச்சுட்டு சாப்பிடுறாங்க... நீங்க தனியா வந்து உட்காந்துட்டீங்க” என்று பேச்சு கொடுத்தான் உதய் குமார். ஜிக் ஜேக் ஆப் பிரபலம்.  

“எனக்கு சட்டுனு அப்படி பார்த்தவுடனே கலந்து பழகுறது கொஞ்சம் கஷ்டம்”

“நான் அப்படி இல்ல சார்... பார்த்ததும் நல்லா பேசி சிரிச்சு பழகுவிடுவன்... ஆனா எல்லோரும் பெரிய செலிப்ரிட்டியா இருக்காங்களா... சட்டுனு அவங்க கூட கலந்து பழக கொஞ்சம் தயக்கமா இருக்கு” என்று சொல்லி கொண்டே,

“சார் நான் இப்படி உட்கார்ந்துகட்டுமா?” என்று கேட்க, “யா ஷுவர்” என்றான் பிரியன்.

“ஆனா உங்ககிட்ட மட்டும் பேச அப்படி தயக்கம் வரல சார்... பார்த்ததும் பேசணும் பழகனும் போல இருக்கு” என்றான்.

“ஏன் அப்படி?” என்று கேட்ட பிரியன் முகத்தில் கோடாக புன்னகை வந்து மறைந்தது. 

“எங்க அம்மா தினமும் உங்க சீரியலை தவறாம பார்ப்பாங்க... அப்படி தினைக்கும் உங்கள எங்க வீட்டுல ஒரு ஆளா பார்த்துனாலயே என்னாவோ உங்க கூட ரொம்ப நெருக்கமான பீல் வருது சார்”

“நெருக்கமான பீல் வருதுனு சொல்லிட்டு ஏன் என்னை சார் சார்னு கூப்பிடுற உதய்... பிரியன்னு கூப்பிடு”

“அதெப்படி சார்... உங்களை பேர் சொல்லி”

“நம்ம எல்லோருமே இங்க கன்டஸ்டன்ட்தான்... யாருமே இங்க மேல கீழ எல்லாம் கிடையாது... ஸோ நீ பேர் சொல்லி கூப்பிடலாம்”

“வேணா... அண்ணனு கூப்பிடட்டுமா?” என்று கேட்டான் உதய்.

“இந்த ஷோவுக்கு அப்படி உறவு முறை வைச்சு எல்லாம் கூப்பிடுறது செட்டாகுது உதய்... நாளைக்கே எனக்கு எதிரா நீ விளையாடுற சூழ்நிலை வரலாம்... அப்போ இந்த மாதிரியான பாண்டிங் உன்னை வீக்காக்கும்... முக்கியமா இந்த மாதிரி பாண்டிங் நம்ம ஹார்ட் பண்ணவும் செய்யும்... ஸோ கால் மீ பிரியன்”

“உங்க முழு பெயர் தேவிப்ரியன்தானே... நான் வேணா தேவ்னு கூப்பிடுறனே... எனக்கு தேவராஜ்னு ஒரு பிரண்டு இருந்தான்... அவனை அப்படிதான் கூப்பிடுவேன்” என பிரியன் தயக்கமாக அவனை பார்த்தான்.

“இண்டஸ்டிரில அப்புறம் மத்த எல்லா இடத்துலயும் நான் பிரியன்தான்... என் வொய்ப் வெண்ணிலாவுக்கு மட்டும்தான் நான் தேவ்... ஸோ பிளீஸ் என்னை நீ பிரியனே கூப்பிடு”

“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா... அப்போ நீங்க உங்க கூட நடிச்ச ஆக்டிர்ஸ் ஸ்ரீயை லவ் பண்ணலயா” என்று பட்டென்று கேட்டு விட்டு பின் உதட்டை கடித்து கொள்ள,

பிரியன் மிதமாக புன்னகைத்து, “அதெல்லாம் ரூமர்... நிஜம் இல்ல” என்றான்.

“அப்படியா?” என்று கேட்டவன் முகம் சுருங்கி போனது.

“சாரி... நான் ஏதோ விஷயம் தெரியாம கேட்டேன்” என,

“பரவாயில்ல விடு” என்ற பிரியன், “ஆமா நீ அந்த ஆப்ல என்ன மாதிரி வீடியோஸ் போடுவ” என,

“பாட்டு பாடுவேன்... எனக்கு பெரிய சிங்கர் ஆகணும்னு விருப்பம்... முக்கியமா ஏ ஆர் சார் மியூஸிக்ல பாடணும்” என்று பொங்கிய ஆர்வத்துடன் சொன்னான்.

“சூப்பர் உதய்” என்று வாழ்த்திய பிரியன் மேலும், “எனக்காக ஒரு பாட்டு பாடி காட்டு? கேட்போம்” என்றான்.

“என்ன பாட்டு பாடட்டும்... நீங்க சொல்லுங்க”

“வெண்ணிலவே வெண்ணிலவே சாங்”

“ஏய் அது எனக்கும் பிடிச்ச பாட்டு... ஆமா உங்க வொய்ப் பேர் வெண்ணிலானுதானே... அதானா புரிஞ்சு போச்சு” என்று கேட்டு உதய் கிண்டல் செய்து சிரிக்கவும் பிரியன் முகம் யோசனையாக மாறியது. அவன் இந்த நிகழ்ச்சிக்குள் பங்கேற்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட போது,

“ஷோல அதிகமா உங்க மனைவி பெயரை பயன்படுத்தாம இருந்தா நல்லா இருக்கும் சார்” என்று கிருஷ் கேட்டு கொண்டான்.

“ஏன் அப்படி”

“தப்பா எடுத்துக்காதீங்க... அவங்க நம்ம சானலில் வேலை செஞ்சுட்டு இருந்தவங்க... நம்ம என்னதான் நேர்மையா இந்த ஷோவை நடத்துனாலும் வெளியே பேசுறவங்க நிலா மேடம் பேரை வைச்சு உங்களை டவுன் பண்ண வாய்ப்பிருக்கு இல்லையா?” என்று விளக்கினான். அவள் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்பதை ஒரு எச்சரிக்கை போலவே சொல்லி இருந்தான்.

அதனாலேயே அறிமுக காணொளியில் பிரியன் வெண்ணிலாவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  ஆனால் இந்த உரையாடலின் போது அவனுக்கு அந்த எச்சரிக்கை எல்லாம் மறந்துவிட்டது.

இப்போது அது நினைவுக்கு வரவும் அவன் மௌனமாகிவிட, உதய் அந்த பாடலை பாடினான். அவன் குரலும் பாடலும் அத்தனை இனிமையாக இருந்தது. காந்தமாக ஈர்த்தது. இருப்பினும்  பிரியனால் அந்த பாடலில் லயிக்க முடியவில்லை.

‘இது இருள் அல்ல அது ஒளி அல்ல...

இது இரண்டோடும் சேராத பொன் நேரம்

தலை சாயாதே விழி மூடாதே

பல மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்

பெண்ணே பெண்ணே’ என்று உதயின் குரல் பெண்ணே என உருகியதில் பிரியனின் மனமும் தவிர்க்க முடியாமல் தன் மனைவியுடனான காதல் நிமிடங்களில் ஆழ்ந்தது.

இந்த உரையாடலின் காணொளியை ஆபரேட்டிங் அறையிலிருந்து பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணா, “இந்த சீனை மொத்தமா கட் பண்ணி தூக்கிடுங்க” என,

“சார் இது டெலிகாஸ்ட் பண்ணா நல்லா இருக்கும்... உதய் ரொம்ப நல்ல பீலோட பாடுறான்... அதுவும் இல்லாம பிரியனுக்கு வெண்ணிலா சிஸ் மேல இருக்க லவ்வை சொல்றது நல்லா இருக்கு” என்றான் நிகழ்ச்சியின் இணை இயக்குநர் பெஃரோஸ்.

“அதனாலதான் வேண்டாங்குறேன்... நிறைய பேருக்கு பிரியன் கல்யாண் விஷயம் தெரியாது... அப்புறம் ஸ்ரீ கூட பிரியனுக்கு இருக்க ரூமர் நமக்கு இப்போதைக்கு சீன்ல தேவை” என பெரோஸ் அவனை சந்தேகமாக பார்த்து,

 “உங்களுக்கு நிலா சிஸ் மேல இருக்க கடுப்பை இதுல காட்டுறீங்களா?” என்று கேட்டுவிட்டான்.

“உனக்கு விஷயமே புரியல... இது நிலா பிரியனை பத்தினது இல்ல... இது ஷோவ பார்க்குறவங்களோட சைக்காலஜி பத்தினது...  இப்போ பக்கத்து வீட்டுக்காரன் சந்தோஷமா இருக்கிறதுல நமக்கு என்ன ஆர்வம் இருக்க முடியும்... அடிசுக்கிட்டாதானே பார்க்க செமையா இருக்கும்... எல்லோரும் ஆர்வமா ஓடி போய் எட்டி பார்ப்போம்... அதே சைக்காலஜிதான் இங்கயும் வொர்க் அவுட் பண்ண போறோம்”

“அப்போ அடுத்த எபிஸோட்ல என்ன போட போறோம்”                       

“பின்னாடி போய் அந்த பாப் சிங்கர் ஜித்தேஷ்கிட்ட மது பிரியனை சிடுமூஞ்சினு சொன்னாங்க இல்ல... அதை போகஸ் பண்ணுங்க... அதுதான் ஷோவோட ஹைப்பை ஏத்தும்... பிரியனுக்கு இருக்க பெண் ரசிகர்களோட டென்ஷனையும் ஏத்தும்” என்று விளக்கிய கிருஷ்ணன் மேலும் பிரியன் வெண்ணிலாவை பற்றி பேசிய காட்சிகளை மொத்தமாக கத்தரித்து தூக்கிவிட சொன்னான்.

*********

நான் எழுதி கொண்டிருக்கும் "இப்படிக்கு, இலக்கிய நாசினி" என்ற குடும்ப நாவல்கள் குறித்த கட்டுரை தொடர் her stories இணையத்தில் வெளியாகிறது. 

அதன் முதல் அத்தியாயம் லிங்க் கீழே

 இப்படிக்கு இலக்கிய நாசினி - 1

shanbagavalli, Rathi and chitti.jayaraman have reacted to this post.
shanbagavalliRathichitti.jayaraman
Quote

Priyan ah vida krishna dan over game adurane ida priyan eppo purimjika porano

Rathi has reacted to this post.
Rathi
Quote

இந்த கதையினை எழுதுவதற்கு முதலில் நன்றி சகோ.. இந்த நிகழ்ச்சி பற்றி மற்றவர்கள் பேசும் போது மக்களோட அறியாமை நினைத்து வருத்த மாக இருக்கும் .. சில சமயங்களில் கோபம் வரும் .. பக்கத்துல இதை பத்தி நிறைய பேசுவேன் சிலர் புரிதலோடு இருந்தாலும் பலருக்கு இந்த நிகழ்ச்சி யின் மீது பெரும் மோகம் ... நீங்கள் கூறியபடி உளவியல் ரீதியாக அவர்களை அறியாமல் அவர்கள் மீது நிறைய விஷயங்கள்  திணிக்கப்படுகிறது.. அவர்களால் அதிலிருந்து வெளி வர முடிவதில்லை.. அதனாலதான்பார்ட் 1,2,3,4, ...... என நீண்டு கொண்டே செல்கிறது

Rathi has reacted to this post.
Rathi
Quote
Quote from JOTHI JK on March 7, 2024, 7:04 PM

இந்த கதையினை எழுதுவதற்கு முதலில் நன்றி சகோ.. இந்த நிகழ்ச்சி பற்றி மற்றவர்கள் பேசும் போது மக்களோட அறியாமை நினைத்து வருத்த மாக இருக்கும் .. சில சமயங்களில் கோபம் வரும் .. பக்கத்துல இதை பத்தி நிறைய பேசுவேன் சிலர் புரிதலோடு இருந்தாலும் பலருக்கு இந்த நிகழ்ச்சி யின் மீது பெரும் மோகம் ... நீங்கள் கூறியபடி உளவியல் ரீதியாக அவர்களை அறியாமல் அவர்கள் மீது நிறைய விஷயங்கள்  திணிக்கப்படுகிறது.. அவர்களால் அதிலிருந்து வெளி வர முடிவதில்லை.. அதனாலதான்பார்ட் 1,2,3,4, ...... என நீண்டு கொண்டே செல்கிறது

முதலில் உங்களுக்கு நன்றி. இந்த பதிவை எழுதி விட்ட பின் யாருமே ஒரு  சின்ன புரிதலுடன் எதிர்வினையாற்றவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது. உங்க கமென்ட் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அடுத்த அடுத்து எழுதுவதற்கான எனக்கான உத்வேகம் இது போன்ற கமென்ட்கள்தான். மீண்டும் நன்றி 

 

Quote

Super ma 

You cannot copy content