You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 7

Quote

7

நிகழ்ச்சியின் இரண்டாம் நாள்.

அந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை எல்லாம் வழிநடத்த அசரீரி போன்றொரு குரல் ஒலித்து அவர்களை வரவேற்றது. முகமும் உருவமும் இல்லாத அரூபமாக இருக்கும் அந்த குரல்தான் அவ்வீட்டின் தலைவன். அதாவது ‘பாஸ்’. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பன போன்ற விதிமுறைகள் மற்றும் சில வரையறைகளை அறிவுறுத்தியது.

அந்த பாஸ் குரலை கொடுப்பதற்கு என்றே இருவருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன. மேலும் அந்த குரல் வாய்ஸ் கன்வர்டர் மூலமாக கம்பீரமான குரலாக மாற்றப்பட்டு அந்த பங்களா முழுக்க எதிரொலிக்குபடியாக அமைக்கப்பட்டிருந்தன. பல நேரங்களில் அதிகாரத்துடன் ஒலிக்கும் அதே குரல், சில நேரங்களில் அன்பாகவும் அக்கறையாகவும் பேசியது.  

முக்கியமான நேரங்களில் கிருஷ்ணாவே அந்த பாஸ் குரலாக பேசுவதும் உண்டு. மொத்தத்தில் யார் பேசினாலும் அது ஒலிக்க போகும் விதம் ஒன்றுதான்.

தனிமைப்படுத்தல், ஒரே இடத்தில் பூட்டி வைத்தல் மற்றும் வெளியுலக தொடர்பற்று இருத்தல் போன்றவை எல்லாம் இயல்பாகவே மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்த கூடியவை. கோவிட் லாக் டவுன் ஆரம்ப கட்டத்தில் சந்தோஷமாகவும் கொண்டாட்டமாகவும் இருந்ததுதான். இதில் நாட்கள் கடந்து செல்ல செல்ல வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் உணர்வு பலருக்கும் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

இங்கும் அதே நிலைதான். வெளியுலக தொடர்பே இல்லாமல் இருப்பது. கைப்பேசி புத்தகம் உட்பட அனைத்து பொழுது போக்கு சாதனங்களுக்கும் தடை. முக்கியமாக நேரம் என்று ஒன்றே தெரியாது. தெரிவிக்கப்படாது.

காலை எட்டு மணி அல்லது ஏழு மணிக்கு பாடல்கள் போட்டு போட்டியாளர்கள் எழுப்பப்படுவார்கள். இரவு பத்து அல்லது பதினொரு மணிக்கு விளக்குகள் அணைக்கப்படும். இதற்கு இடைபட்ட நேரத்தில் யாரும் உறங்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பிறந்ததில் இருந்து நேரம் பார்த்தே பழக்கப்பட்டு வேலைகள் செய்த மூளை திடீரென்று இந்த மாறுதல் காரணமாக அதிக எரிச்சலை தோற்றுவிக்கும்.

மேலும் வீட்டிலிருக்கும் அந்த இருபது பேருடன் மட்டுமே நேரடி தொடர்பில் இருப்பதால் அவர்களுடன் இணக்கம் அல்லது வெறுப்பு உண்டாகும் வாய்ப்புக்களே அதிகம். இவ்விரண்டில் எவ்வகையான உணர்வுகள் ஏற்பட்டாலும் அது அந்நிகழ்ச்சிக்கான கன்டென்ட். அவ்வளவுதான்.

அந்த வீட்டினை சுற்றியுள்ள கண்ணாடி சுவர்கள் அனைத்திருக்கும் இன்னொரு பக்கம் உண்டு. கண்ணாடிக்கு அந்த பக்கம் இருப்பதை போட்டியாளர்கள் பார்க்க முடியாது. ஆனால் மறு பக்கமிருந்து நிகழ்ச்சி குழுவினர் உள்ளே நடப்பவற்றை தெள்ள தெளிவாக கண்காணிக்கும் முடியும் வகையில் அது அமைக்கப்பட்டிருக்கும். அங்கே வைக்கப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலமாக சில காட்சிகளின் நெருக்கமான ஷாட்களையும் எடுப்பார்கள்.

அன்றைக்கான விடியல் ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ என்ற பாடலுடன் துவங்கியது. அதன் பின் நிகழ்ச்சியின் முதல் ‘டாஸ்க்’ அறிவிக்கப்பட்டது. அதாவது கேப்டன்ஸி டாஸ்க்!

இதற்காக வெளியே புல்வெளியில் உயரமான கம்பத்தில் கூடை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. போட்டியாளர்களுக்கு பந்துகள் தரப்பட்டன. மணி ஒலித்ததும் அந்த கூடை மேலும் கீழுமாக ஆட ஆரம்பிக்கும். நேரம் முடிவதற்குள் யார் அதிகம் முறை பந்துகளை உள்ளே போடுகிறார்களோ அவர்கள்தான் கேப்டன்.

அவர் வீட்டின் தலைமை பொறுப்பை ஏற்று மற்றவர்களை வழிநடத்த வேண்டும். அந்த வீட்டினை சுத்தம் செய்வது சமைப்பது கழிவறை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலைகளை பிரித்து வழங்க வேண்டும்.  

போட்டி ஆரம்பமானது. அங்குள்ள இருபது பேருக்கும் சரியாக முப்பது நொடிகள் கொடுக்கப்பட்டது.

 இருபதில் பத்து பேர் ஒரு முறை கூட பந்தை கூடையில் போடவில்லை. சிலர் ஒரு முறையும் இன்னும் சிலர் இரண்டு முறையும் போட்டார்கள். பாப் பாடகன் ஜித்தேஷ் மற்றும் பிரியன் மட்டுமே பந்தை மூன்று முறை கூடையில் போட்டவர்கள். இதனால் மீண்டும் அடுத்த சுற்று வைக்கப்பட்டு, இருவருக்கும் பத்து நொடிகள் என பாஸ் குரல் அறிவித்தது. கிருஷ்ணா தன் குழுவினரிடம் அவர்கள் இருவரில் பிரியன்தான் வெற்றி பெற வேண்டுமென்று தெளிவாக சொல்லிவிட்டான்.

அதற்கு ஏற்றார் போல கூடையின் அசைவு பிரியன் போடும் போதும் மட்டும் கொஞ்சம் வேகம் குறைக்கப்பட்டது. ஆனால் அதனை பார்வையாளர்கள் அல்லது போட்டியாளர்கள் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு செய்தனர். ஒரு வழியாக பிரியன் வென்றுவிட்டான். அனைவரும் அவனை கட்டியணைத்து மகிழ்வுடன் வாழ்த்தினார்கள்.

ஜித்தேஷிற்கு உள்ளூர் அவன் மீது கோபம் மூண்டாலும் அதனை வெளிப்படுத்தி கொள்ளாமல் மேலோட்டமாக வாழ்த்து தெரிவித்து விட்டு அகன்றான். அதன் பின் அந்த வீட்டின் தலைமை பொறுப்பை ஏற்ற பிரியன் முகப்பறையில் எல்லோரிடமும் கலந்துரையாடினான். யாரால் எது போன்ற பொறுப்புகளை செய்ய முடியும் என்று கேட்டறிந்து வீட்டின் அனைத்து வேலைகளையும் மூன்று குழுவாக  பிரித்து கொடுத்தான்.

இதில் ஜித்தேஷ், நடன இயக்குநர் மற்றும் நடிகை மது, தொகுப்பாளர் சரவணன் மூவருக்கும் அவன் வென்றதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எனினும் அவர்களின் பொறுமல்களை அப்போதைக்கு அவர்கள் காட்டி கொள்ளவில்லை.

அன்றைய எபிசோடை தொலைக்காட்சியில் பார்த்தே ஆக வேண்டுமென்று கவிதா அடம் பிடிக்க, “அதெல்லாம் முடியாது... போய் படுங்க” என்று நிலா அவர்களை கண்டித்தாள். கோபம் காட்டினாள்.  

ஆனால் ஜானகி, “சரி விடு... பார்க்கணும்னு சொல்றாங்க இல்ல... பார்த்துட்டு போட்டும்” என்று பேத்திகளுக்கு ஆதரவாக நின்றதில் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“எப்படியோ போங்க?” என்று அறைக்குள் வந்து விட்டாள்.

வேலை விஷயமாக நண்பர்கள் சிலருடன் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்த போது, முகப்பறையில் மகள்கள் சத்தம் உயர்த்தலாக கேட்டதில் துணுக்குற்ற நிலா அவசரமாக வெளியே சென்று எட்டி பார்த்தாள்.

 அன்றைய எபிசோடில் கேப்டன் போட்டியில் பிரியன் வென்றதை பார்த்துதான் கவிதாவும் ஹரிதாவும் குதித்து கும்மாளம் போட்டு கொண்டிருந்தார்கள். வினயும் எரிச்சலுடன் அந்த காட்சியை தன் அறையிலிருந்து எட்டி பார்த்துவிட்டு செல்ல, அதனை பார்த்த நிலாவிற்கோ கடுப்பும் கோபமும்தான் வந்தது.

அப்போது பார்த்த அம்மாவிடம் உற்சாகத்துடன் ஓடி வந்த கவிதா, “ம்மா அப்பா வின் பண்ணிட்டாரு... வின் பண்ணிட்டாரு” என்று தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள். வேறு வழி இல்லாமல் நிலா தன் வெறுப்பை ஓரங்கட்டிவிட்டு மகள்களுக்காக முகம் மலர்ந்தாள்.

 ஆனால் இந்த நிகழ்ச்சியை குறித்த ஒவ்வொரு இண்டு இடுக்குகளையும் அறிந்தவள் என்ற வகையில் இதெல்லாம் ஒரு வெற்றியே இல்லை என்று அவளுக்கு தெரியும். அதுவும் யாரை ஆரம்பத்தில் தூக்கி காட்டுகிறார்களோ விரைவில் அவர்களை தரை மட்டமாக்கவும் செய்வார்கள். அதுதான் இந்த விளையாட்டின் சூட்சமமும்.  

பிரியன் மீது அவளுக்கு என்ன கோபமும் வெறுப்பும் இருந்தாலும் அவன் தோற்று போவதையோ அல்லது அவமானப்படுவதையோ அவளால் நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது. அதற்காகத்தானே அவனிடம் இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாமென்று அவ்வளவு தூரம் சொன்னாள். ஆனால் அவன் கேட்கவில்லையே.

இப்போது யோசித்தால் தனக்கான குழியை அவளே தோண்டி கொண்டாலோ என்ற எண்ணம் உதித்தது. ஒரு வகையில் இதையே அவள் மற்றவர்களுக்கு செய்யும் போது வியாபாரமாக பார்த்தாள். ஆனால் அது தனக்கு நிகழும் போதுதான் அதன் ஆழமான பாதிப்பினை அவள் உணர நேர்கிறது.

அடுத்தடுத்து எபிசோட்கள் இதே போல பிரியனுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புகள் குறைவுதான் என்று யோசித்திருக்கும் போது நிலாவுடைய செல்பேசி அடித்தது.

‘தலை’ என்று இருந்த பெயரை பார்த்தவளின் முகம் துவண்டது. யோசனையாக செல்பேசியை உற்று பார்த்தாலே ஒழிய எடுக்கவில்லை.

தலை என்பது வேறு யாரும் இல்லை. அவள் முன்பு வேலை செய்த உரையாடல் நிகழ்ச்சியின் இயக்குநர் சிவா.  

இருபது வயதிலிருந்தே ஜே சானலில் இருக்கிறார். அவர்கள் சானலில் பெரும்பாலோனோர் சிவாவை தலை என்றுதான் விளிப்பார்கள். சானலின் தலைமை வரை தொடர்பு அவருக்கு உண்டு. மிக பெரிய பொறுப்புகள் பதவிகள் எல்லாம் சானலில் அவருக்கு வழங்கப்பட்ட போதும் அவர் மறுத்துவிட்டு இந்த டாக் ஷோவை மட்டும் நடத்தி கொண்டிருந்தார்.

காரணம் பெரிய பெரிய பொறுப்புகளை தலையில் போட்டு கொண்டு அவஸ்த்தை படுவதெல்லாம் சிவாவிற்கு பிடிக்காது. சினிமாவில் ஒன்றிரண்டு படங்களை இயக்கினார். பின் ஒத்து வராமல் மீண்டும் சானலுக்கு திரும்பி விட்டார்.

பிடித்தமான ஏதாவது ஒரு விஷயத்தை சரியாக செய்தாலே போதும் என்ற எண்ணம்தான். மேலும் தலைமை பொறுப்பு என்ற பதிவியில் இருக்கும் அரசியல்களில் அவருக்கு தலை கொடுக்க விருப்பம் இல்லை. இதே கருத்து அவருக்கு குடும்பம் என்ற சமூக கட்டமைப்பின் மீதும் உள்ளதால் சிவா இன்று வரையில் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.

அவருக்கு நாற்பதைந்து வயது. வெள்ளையும் கருப்புமுமாக சால்ட் அன் பெப்பர் தலை முடி. இருப்பினும் உடற்கட்டமைப்பிலும் தோற்றத்திலும் இளமையாகவே தெரிவார். உடற்பயிற்சிகள் செய்து எப்போதும் உடலை கட்டுகோப்பாக வைத்திருந்தார்.

நிலாவை பொறுத்த வரை சிவா அவளுடைய குரு. இந்த உலகத்திலேயே அவள் மதிக்க கூடிய முதல் முக்கிய நபர். அவளுக்கு ஊடக துறையின் நெளிவு சுளிவுகள் அனைத்தையும் கற்று கொடுத்தவர். அவள் மட்டுமே இல்லை. கடந்த பத்து வருடத்தில் சிவாவிடமிருந்து கற்று கொண்டு மேலே வந்தவர்கள் பலர். ஆனால் சிவா மட்டும் தனக்கு விருப்பமான இடத்தை விட்டு கொடுக்காமல் அங்கேயே இருக்கிறார்.

 நிலா இந்த நிகழ்ச்சியின் யோசனையை கூட முதலில் சிவாவிடம்தான் பகிர்ந்து கொண்டாள்.

“இந்த இது ரொம்ப ரிஸ்கியான ஐடியா நிலா... ஆனா இந்த ரிஸ்கை மீறி இதை நீ சக்ஸஸ் பண்ணி காட்டுறதுதான் இதுல இருக்க சாலஞ்... எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு... நீ பண்ணு” என்றவர் கொடுத்த நம்பிக்கையில்தான் அவள் அடுத்தடுத்த அடி எடுத்து வைத்தது.

 எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சி குறித்த நிறைய விஷயங்களை அவள் சிவாவிடம் கலந்துரையாடி விட்ட பின்னரே செயல்களில் இறங்குவாள். தினமும் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு சிவாவை சந்தித்து பேசுவாள். நேரம் தாமதமாகும் சமயங்களில் சிவாவே அவளை காரில் கொண்டு வந்து வீட்டில் விட்டிருக்கிறார். இது எதையும் பிரியன் எப்போதுமே தவறாக எடுத்து கொண்டதில்லை.

ஆனால் சானலில் சில விஷமிகள் அவளுக்கும் சிவாவிற்கும் தொடர்பு இருப்பதாக வதந்தியை கிளப்பிவிட்டார்கள். அதற்கு காரணம் அவளுக்கு கிடைத்திருந்த இயக்குநர் வாய்ப்பு. இத்தனை சீக்கிரத்தில் அவளுக்கு இயக்கும் வாய்ப்பு கிட்டியதே சிவாவுடனான தொடர்பினால் என்று அவளது திறமையை மட்டுப்படுத்தி பேசினார்கள்.

ஆண்கள் முன்னேறினால் அதனை திறமை என்பவர்கள் அதே துறையில் பெண்கள் வளர்ந்தால் மட்டும் அவள் அந்த மேலதிகாரியுட்ன் அட்ஜஸ்ட் செய்து கொண்டிருப்பாள் என்று மட்டமாக பேசுவார்கள். இவை காலம் காலமாக பெண்கள் வளர்ச்சியின் மீது இரக்கமற்ற முறையில் நடத்தப்படும் தாக்குதல்கள்.

இந்த வதந்தி பேச்சுக்கள் நிலாவை ரொம்பவும் நொறுங்கி போக செய்தது. பிரியன் காதிற்கும் இந்த விஷயம் சென்றது. அவன் இதை எப்படி எடுத்து கொள்வான் என்று பயந்த போது, ‘இதெல்லாம் ஒரு மேட்டர் இல்ல... தூக்கி போட்டுட்டு வேலைய பாரு’ என்று விட்டான்.

விஷயம் தெரிந்து சிவாவும் அதையேதான் சொன்னார். ஆனால் அவளால் முடியவில்லை. இதனால் அவள் சிவாவிடம் பேசுவதையே நிறுத்தி கொண்டாள். நண்பனுக்கு நண்பனாக குருவுக்கு குருவாக இருந்த ஒருவரை இழப்பதில் மனம் வேதனைப்பட்டாலும் அது போன்ற கேவலமான வதந்தியை ஊக்குவிக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

அவள் வேலையை விடுமளவுக்கு பிரச்சனை வந்த போதும் சிவாவை அவள் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு வேளை சிவா தலையிட்டிருந்தால் இந்த பிரச்சனை சுமுகமாகவே முடிந்திருக்கும். அவள் தன் வேலையையும் கிடைத்த அருமையான வாய்ப்பையும் விட்டு வர நேர்ந்திருக்காது.

ஆனால் சிவாவின் உதவியை பெற்று கொண்டால் அவர்களுக்கு  இடையிலான தொடர்பு என்ற வதந்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்டுவிடும். அதற்கு பயந்துதான் அவள் உதவிக்கு அவரை நாடவில்லை.

நடந்தவற்றை எல்லாம் அறிந்து சிவா அவளை பல முறை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் அழைப்பை அவள் ஏற்கவில்லை. அவர் மீது அவளுக்கு அதீத குரு விசுவாசம். மரியாதை எல்லாம் இருக்கிறதுதான். இருப்பினும் இந்த விஷயத்தில் சிவாவிடம் கலந்தலோசிக்க அவளுக்கு சங்கடமாக இருந்தது. அதனாலேயே அவர் எத்தனை முறை அழைத்தும் ஏற்காமல் தவிர்த்தாள்.  

‘அட்டென்ட் மை கால் நிலா... டாக் டூ மீ’ என்று சிவாவின் குறுந்தகவலுக்கும் ‘சாரி’ என்று ஒற்றை வார்த்தையில்  பதில் போட்டு ஒதுங்கிகொண்டாள்.

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் குதூகலமாக குதித்து கொண்டே படுக்கையறைக்கு வந்த மகள்களை,

“ஷோ முடிஞ்சிருச்சா? சரி கம்னு படுங்க” என்று அதட்டி உருட்டி படுக்க வைத்தாள். அவர்கள் இருவரும் தாத்தா பாட்டிகளுடன் படுத்து கொள்ள, அவளுக்கு சில வேலைகள் இருந்ததால் தன் லேப்டாப்பை எடுத்து கொண்டு முகப்பறையில் வந்து அமர்ந்தாள்.

அப்போது எதிரே இருந்த அவள் அண்ணன் அண்ணி அறையிலிருந்து பேச்சு சத்தம் கேட்டது.  

“இத்தனை வருஷம் ஆகியும் நமக்கு குழந்தைப் புறக்கல... ஆனா உங்க தங்கச்சிக்கு இரட்டை குழந்தை இருக்கு... அதான் என்ன பண்ணாலும் உங்க தங்கச்சிய அவங்க விட்டு கொடுக்க மாட்டுறாங்க... நம்மள விட்டு கொடுத்துறாங்க” என்று சந்தியா அழுது கொண்டே வினயிடம் பேசியதெல்லாம் நிலா காதிலும் விழுந்து தொலைத்ததில் அவள் உடைந்து அமர்ந்தாள்.

என்ன விதியோ? எங்கே சென்றாலும் ஏதோ ஒன்று அவளை துரத்தி அடித்தது. அவர்கள் உரையாடல் மூலமாக இந்த வீடும் தனக்கு வெகுநாளைக்கு நிரந்தரமாக இருக்க போவதில்லை என்பது மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்து போனது. விரைவில் ஒரு வேலையை தேடி கொண்டு தன் மகள்களுடன் இங்கிருந்து அகன்று விடுவதுதான் நல்லது என்று நினைத்தாள்.

ஹெர் ஸ்டோரிஸ் தளத்தில் நான் எழுதும் குடும்ப நாவல் கட்டுரை தொடர் இரண்டாம் அத்தியாயம். லிங்க் கீழே 

இப்படிக்கு இலக்கியநாசினி - 2 

shanbagavalli, Rathi and chitti.jayaraman have reacted to this post.
shanbagavalliRathichitti.jayaraman
Quote

Priyan ku ini dan game na enna nu puriyum ade pola life na enna nu inga dan terimjika poran, pavam nila velai thedanum ivalukum ithu paadam ivalum life na enna nu terimjika pora

Quote

Super ma 

You cannot copy content