You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 8

Quote

8

நிலாவின்  வேலை தேடும் படலம் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்த நிலையில் யூட்யூப் சானல் ஒன்றிலும் செய்தி சானல் ஒன்றிலும் வேலை விஷயமாக அவளுக்கு அழைப்பு வந்தது. ஆனால் நேரில் சென்று பார்த்த போது அந்த வேலையும் சம்பளமும் அவள் தகுதிக்கு அனுபவத்திற்கும் கொஞ்சமும் பொருத்தமானதாக இல்லை.

மறுபுறம் கிடைத்த வேலையையும் மறுப்பதா என்ற குழப்பத்தில் இருந்தாள் நிலா. அப்போதுதான் எஸ்.வி சானலில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. ஜே சானலுக்கு நிகரான மற்றுமொரு சானல் என்றால் அது எஸ்.வி. அங்கிருந்து அவளுக்கு அழைப்பு வருவது இது ஒன்றும் முதல் முறையும் இல்லை.

ஜே சானலில் இருக்கும் போதே ஒரு முறை வந்தது. ஆனால் அவள் மறுத்துவிட்டாள். காரணம் சிவாவிற்கு எஸ்.வி சானலின் நிகழ்ச்சி தலைமை பொறுப்பாளர் தினேஷ் பாபுவிற்கும் இடையில் இருக்கும் மோதல்.

இருவரும் ஒன்றாக படித்தவர்கள். நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால் சிவாவின் வளர்ச்சியை தினேஷால் பொறுக்க முடியவில்லை. மெது மெதுவாக அவர்கள் நட்பு பகையாக  மாறிவிட்டது. தினேஷ் எஸ் வி சானலுக்கு சென்றுவிட்டார். அவரை தொடர்ந்து ஜே சானலில் பல முக்கியமான ஆட்களை எஸ் வி சானலுக்கு இழுத்து கொண்டார்.

இவர்கள் இருவரின் பிரச்சனை அவர்கள் சானல்களுக்கு இடையிலும் பிரதிபலித்தது.

ஜே சானல் புதிதாக ஏதாவது நிகழச்சியை கொண்டு வந்தால் அதற்கு போட்டியாக எஸ்.வி சானலை அதனை விடவும் பிரமாண்டமாக ஒரு நிகழ்ச்சியை கொண்டு  வரும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சிவாவிற்கு தினேஷிடம் எந்த போட்டியும் இல்லை பகையும் இல்லை.

ஆனால் தினேஷ் அப்படி இல்லை. வேண்டுமென்றே சிவாவை வீழுத்தவே அனைத்தையும் செய்தார். அதிலும் ஜே சானலில் முதலிடத்தில் இருக்கும் சிவாவின் உரையாடல் நிகழ்ச்சியை அடிக்க வேண்டும் என்பதற்காக அந்த குழுவில் பணிபுரியும் சிலரை தினேஷ் தங்கள் சானலுக்கு இழுத்து கொண்டார். அப்படிதான் நிலாவையும் ஒரு முறை அழைத்தது.

ஆனால் சிவாவை விட்டு செல்ல அவளுக்கு விருப்பமில்லை. தன்னுடைய மறுப்பை அவள் நேரடியாகவே தெரிவித்துவிட,“உனக்கு நல்ல வாய்ப்புனு தோணுச்சுனா நீ போ நிலா... இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல” என்றார் சிவா.

“நான் ஏன் போனோம்... சம்பளம் பதவி இதெல்லாம் விட முக்கியம் மனசுக்கு பிடிக்கிறது... எனக்கு இங்க இருக்கத்தான் பிடிச்சிருக்கு தலை... நான் இங்கதான் இருப்பேன்” என்று அழுத்தம் திருத்தமாக பதில் கூறியவளுக்கு இன்றும் அதே போல யோசிக்க முடியவில்லை.

  இப்போதிருக்கும் சூழ்நிலையில் அவளுக்கு தேவை ஒரு வேலை. அதுவும் முன்பு செய்து கொண்டிருந்த வேலையை விடவும் நல்ல வாய்ப்பு எனும் போது இதனை நிராகரிக்க அவளுக்கு மனம் வரவில்லை.

நேர்காணலுக்கு கிளம்பி சென்றாள். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தொடர் நேர்காணலுக்கு பிறகு நிகழ்ச்சியின் தலைமை பொறுப்பாளர்  தினேஷ் பாபுவை சந்தித்தாள்.

அவளால் நம்பவே முடியவில்லை. மிக பெரிய அட்வஞ்சர் நிகழ்ச்சியை இயக்க அவள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தினேஷ் தெரிவித்தார். அவளுக்கு அந்த தகவல் இன்ப அதிர்ச்சிதான்.

இது போன்ற வாய்ப்பிற்காகதானே அவள் இவ்வளவு நாளாக காத்திருந்தாள். அப்படியொரு அற்புதமான வாய்ப்பு. யோசிக்கும் போதே அவள் மனம் துள்ளியது. ஆனால் சட்டென்று ஏதோவொன்று அவள் சந்தோஷத்தை உச்சத்திற்கு செல்லவிடாமல் கீழே பிடித்து இழுத்தது. குழந்தைகள்!

அவர்களை விட்டு பிரிந்து வார கணக்கில் வெளியிடங்களுக்கு படப்பிடிப்பிற்கு செல்வது எப்படி சாத்தியமாகும்?

இதுநாள் வரையில் கவியையும் ஹரிதாவையும் பிரிந்து எங்கேயும் அவள் தனியாக சென்றதில்லை.

“உங்க திறமையை பத்தி நல்லா தெரிஞ்சுதான் இப்படியொரு ஆபர்சுனட்டியை உங்களுக்கு தர்றோம் நிலா” என்று தினேஷ் எதிரே அமர்ந்து பேசியவை அனைத்தும் கிணற்றுக்கடியில் இருந்து கேட்பது போலிருந்தது.

“என்ன நிலா... உங்களுக்கு ஓகேதானே” என்று தினேஷ் மீண்டும் கேட்டார். ஏனோ அவளால் எந்தவித தயக்கமும் இல்லாமல் சரி என்று சொல்ல முடியவில்லை. கனவா? குழந்தைகளா? என்ற கேள்விக்கு இடையில் சிக்கி கொண்டு தவித்தாள்.

கனவை விட்டு குழந்தைகளை தேர்ந்தெடுத்தால் எல்லோரும் மட்டம் தட்டுவது போல பெண்ணகளால் எதையும் சாதிக்க முடியாது என்ற வார்த்தை உண்மையாகிவிடும். ஒரு வேளை குழந்தைகளை விட்டு கனவை நோக்கி சென்றால் அவள் மனசாட்சியே அவளை நிந்தித்து கொன்றுவிடும்.

உண்மையில் இரண்டிற்கும் இடையில் எதை தேர்ந்தெடுப்பது என்று அவள் குழம்பி கொண்டிருக்க தினேஷ், “என்ன நிலா... ஆர் யூ ஓகே?” என்று கேட்டார்.  

“எனக்கு ஒரு நாள் டைம் வேணும்... நான் நாளைக்கு சொல்றேன்” என்றாள். தினேஷ் முகத்தில் அப்பட்டமான அதிருப்தி வெளிப்பட்டதை அவளால் காண முடிந்தது. இருப்பினும் அவளால் அவசரகெதியில் இந்த முடிவை ஒப்புக்கொண்டுவிட முடியவில்லை.

ஆண்களுக்கு எப்போதும் இது போன்ற முடிவு எடுப்பதில் தயக்கங்கள் இருப்பதில்லை. ஏனெனில் குழந்தைகளை பார்த்து கொள்வது அவர்களுக்கு கட்டாய பொறுப்பு இல்லை. ஆனால் வேலைக்கே சென்று கொண்டிருந்தாலும் பெண்களுக்கு குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்புகள்தான் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பது சமுதயாத்தின் எதிர்பார்ப்பு.  

அதுவும் வேறு எதில் அவள் தோற்றாலும் அது பெரிய விஷயம் இல்லை. தாய்மை என்ற பொறுப்பில் மட்டும் அவள் தோற்றுவிடவே கூடாது என்று இந்த சமூகம் எதிர்பார்க்கிறது. அலுவலகத்தை விட்டு வெளியேறியவளின் மனம் இயல்பு நிலையில் இல்லை. ரொம்பவும் பாரமாக இருந்தது.

நடக்க முடியாமல் நடந்து சென்றவளுக்கு யாரிடமாவது தன் மனஉணர்வை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றவும் சிவாவின் நினைவு வந்தது. நேராக அவர் வீட்டிற்கு சென்றாள்.

இருப்பாரா மாட்டாரா என்று தயக்கத்துடன் கதவை தட்ட, சிவா வந்து நின்றார். கச்சிதமான உயரம் மற்றும் உடல்வாகு. அடர்ந்த தலை முடியில் சில வெள்ளி கம்பிகள் பளபளத்தன. ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்டில் வந்து கதவை திறந்தவர் அவளை வாயிலில் பார்த்ததும் முதலில் ஆச்சரியத்துடன் விழிகள் விரித்தார்.  

பின் சற்றே கடுப்புடன் முறைத்து, “ஒரு மெசஜ் இல்ல... போன் இல்ல.... சரி நானே போன் பண்ணாலும் எடுக்குறது இல்ல... இப்போ என்னடானா சொல்லாம கொல்லாம என் வீட்டு வாசலில் வந்து நிற்குற” அந்த கேள்வியில் கொஞ்சம் கோபமும் கூடவே நிறைய வருத்தமும் இருந்தது. ஆனால் அவள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

“அட வழி விடுங்க தலை... எல்லா வாசலிலயே நின்னுதான் கேட்பீங்களா?” என்று சொல்லி கொண்டே உள்ளே வந்துவிட்டாள். அந்த விசாலமான முகப்பறையின் வட்டமாக இருந்த சோபாவில் சம்மணம் போட்டு அமர்ந்தவள் எதிரே இருந்த மது குப்பியையும் சிப்ஸ் பாக்கெட்டையும் பார்த்தாள். கூடவே தொலைகாட்சியில் அப்படியே நிறுத்தப்பட்டிருந்த ஆங்கில பட காட்சிகளை கவனித்து,  

“ஷுட் இல்லனா? இதான் உங்க ரொட்டினா” என்று எள்ளல் பார்வையுடன் கேட்க,

“வேற என்ன செய்ய சொல்ற” அலட்சிய புன்னகையுடன் வந்து அவள் முன்னே நின்றார்.

“வாழுறீங்க தலை... வாழ்ந்தா உங்களை மாதிரி வாழணும்... கல்யாணம் குழந்தைனு வாழ்க்கைல எதையுமே சாதிக்க முடியாம... ஏன் கிடைச்ச வாய்ப்பை கூட செய்ய முடியாம முட்டு சந்துல முட்டிட்டு... என்ன பொழைப்பு?!” என்றவள் குரலில் தொனித்த விரக்தியை கவனித்தவர்,

“ஏதோ டிப்ரஷன்ல இருக்க போல... சரி காபி குடிக்குறியா... காபி போட்டு எடுத்துட்டு வரட்டுமா?” என்று சகஜமாக கேட்க, “ஏன்... நாங்க எல்லாம் ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டோமா?” என்று எகத்தாளமாக கேட்கவும் மிதமாக புன்னகை செய்த சிவா,  

“எனக்கு ஒன்னும் ப்ராபளம் இல்ல... நானே கம்பனிக்கு ஆள் இல்லன்னு நினைச்சேன்?... ஆனா ஒன்னு... பிரச்சனை... டிப்ரஷ்னு எல்லாம் குடிக்காத...  குடிக்குறது எல்லாம் பிரச்சனைகளுக்கு தீர்வும் இல்ல... அது இன்னும் உன்னை ப்ரஸ்டிரேன்லதான் தள்ளும்... வேணா ஜாலிய குடிக்கிறனு சொல்லு... க்ளேஸ் எடுத்துட்டு வர்றேன்” என்றார்.

“நான் ஜாலியான மனநிலைல இல்ல” என்றவள் முகம் சோர்வாக மாற,

“என்ன ப்ராபளம்” என்று நிதானமாக கேட்டு அவள் எதிரே ஒரு இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தார். அவள் எஸ் வி சானலில் வேலை கிடைத்ததை பற்றி கூறிவிட்டு பின்,

“சாரி தலை... நம்ம சானலில வேலையை விடுறதுக்கு முன்னாடியே உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும்தான்... ஆனா நான் நடந்த விஷயத்தை பத்தி எல்லாம் சொன்னா நீங்க எனக்காக பேசுவீங்க... அப்படி நடந்தா இன்னும் நம்ம ரிலேஷன்ஷிப்ப பத்தி கொச்சை படுத்தி பேசுவாங்க... உஹும் எனக்கு அதுல விருப்பம் இல்ல”என்றாள்.

அவள் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டிருந்தவர், “உன் பிரச்சனையே இதுதான் நிலா... எல்லாத்தையும் ரொம்ப எமோஷனலா எடுத்துக்குறது...எவனோ சம்பந்தம் இல்லாதவன் உன்னையும் என்னையும் பத்தி பேசுறதால பெருசா என்னவாகிட போகுது” என,

“இல்ல என்னால அப்படி யோசிக்க முடியல” என்றாள். 

“நீயும் நானும் சீரியலில உன் புருஷனையும் நித்யாஸ்ரீயையும் சேர்த்து வைச்சு ஊரே பேசுச்சு... ஆனா அதுக்காக எல்லாம் அவங்க இரண்டு பேரும் அந்த சீரியலில் நடிக்குறது நிறுத்திட்டாங்களா என்ன? ஏதாவது பேசிட்டு போட்டும்னு அவங்க புழைப்ப அவங்க பார்க்கல” என நிலாவால் பதில் சொல்ல முடியவில்லை.

சிவா மேலும், “யூ நோ வாட்... நம்ம சானல நீ நல்லா வளர்ந்துட்டு இருந்த... அப்படி உன்னோட வளர்ச்சியை பொறுக்க முடியாத எந்த நாதாரியோ இப்படி உன்னை பத்தி  கிளப்பி விட்ட புரளிதான் இது... அது பொய்யின்னு எல்லோருக்கும் தெரியும்

நீதான் தேவை இல்லாம அதை சீரியஸா எடுத்து மண்டைல போட்டுக்கிட்டு இருக்க... இத பாரு நிலா... இது ஒன்னும் உனக்கு முதல் முறையா நடக்குறது இல்ல.. இங்க பல பெண்களுக்கு இப்படி நடந்து இருக்கு... இதுக்கெல்லாம் நீ ரியாக்ட் பண்ணிட்டு இருந்தா வாழவே முடியாது... எவனோ என்னவோ சொல்லிட்டு போறான்னு தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கனும்

அப்படி இருக்கவங்களாலதான் டாப் லெவலுக்கு போக முடியும்... ஜெயிக்க முடியும்” என்ற சொன்னதை எல்லாம் நிதானமாக கேட்டவள்,

“எனக்கு அவ்வளவு தெளிவு இல்ல... திரும்பவும் பழசை எல்லாம் கிளறவும் எனக்கு விருப்பம் இல்ல... நான் இனிமே அங்க வர்றதாவும் இல்ல” என்றாள் உறுதியாக.

“அவசியம் இல்ல... உனக்குதான் எஸ் வி ல நல்ல ஆபர் கிடைச்சு இருக்கே... நீ அங்கே போ... என்னை கேட்டா இதுவும் நல்லதுக்குதான்... உன் திறமையை மதிக்குற இடத்துல நீ இருக்குறது சரிதான்... என்ன அந்த தினேஷ்... ப்ரொபஷ்னலா கொஞ்சம் கெடுபிடியானா ஆளு.. அவ்வளவுதான்” என்றார்.

நிலா யோசனையுடன், “ஆனா இப்போ அந்த வேலைல சேருறதே பிரச்சனையா இருக்கு” என,

“அதுல என்ன பிரச்சனை உனக்கு?” என்றார். 

“இல்ல... மாசத்துல டூ வீக்ஸாச்சும் ஷுட்க்காக  வெளியூர் ட்ராவல் பண்ண வேண்டி வருமாம்... பசங்கள விட்டுட்டு போறது பத்தி யோசிச்சா எனக்கு ரொம்ப தயக்கமா இருக்கு... தினேஷ் சார் கேட்ட போது நாளைக்கு என் டெசிஷனை சொல்றேன்னு சொல்லிட்டேன்” என்றவள் கூறியதை கேட்டு,

“இல்ல நான் தெரியாமதான் கேட்குறேன்... ஷைனிங் ஸ்டார் ஷோல கலந்துக்க பிரியன் பசங்கள விட்டுட்டு போறதை பத்தி யோசிச்சானா... இல்ல கொஞ்சமாச்சும் ஹெஸிடேட் ஆனானா?”என்று குத்தலாக கேட்டார்.

“அவன் ஏன் அதெல்லாம் யோசிக்க போறான் தலை...  நான்தானே அம்மா... எனக்குதான் எல்லாம் பொறுப்பும்... அவன் ஏன் அப்படி இருக்க போறான்... அதுவும் இல்லாம தேவ் அப்படி இருக்கானு என் பொறுப்பை நான் தட்டி கழிக்க முடியுமா? பொம்பள பசங்க வேற... ஊருக்குள்ள நடக்குற நியூஸ் எல்லாம் கேள்விபடும் போதே பக்குன்னு இருக்கு”

“ஏன் நிலா... இங்க பாலியல் வன்முறைக்கு உட்படுத்த படுற குழந்தைங்களோட அம்மா எல்லாம் பொறுப்பில்லாதவங்களா இல்ல வேலைக்கு போறவங்களா... இல்ல பொருளாதாரத்துல கீழ் நிலைல இருக்கவங்களா... ஏன் பணம் பாதுக்காப்பு... எல்லாமே இருக்க குழந்தைகளுக்கு எல்லாம் இந்த மாதிரி நடக்காதா?” என்று சிவா அடுக்கு அடுக்காக கேட்ட  கேள்விக்கு நிலாவிடம் பதில் இல்லை.

சிவா தொடர்ந்து, “இந்த குற்றத்துக்கு எல்லாம் காரணம் பொறுப்பில்லாத பெற்றோர்கள் இல்ல... விழிப்புணர்வு இல்லாத சமுதாயத்தாலதான்...  குட் டச் பேட் டச் பத்தி பசங்களுக்கு சொல்லி கொடுத்து வளர்க்கணும்... தைரியமா என்ன நடந்தாலும் நம்மகிட்ட பேச சொல்லணும்... நம்மளும் குழந்தைங்க கிட்ட தினமும் பேசணும்... இதெல்லாம் நீ கூடவே பக்கத்துல இருந்துதான் செய்யணும்னு இல்ல”

“இல்ல ஆனா”

“ப்ச்... என்ன ஆனா... நீ எப்படி பார்த்தாலும் வேலைக்கு போனா நைட்டுதான் வருவ... அப்போ பசங்கள வேற யாராச்சும் பார்த்துக்கிட்டுதானே ஆகணும்... அதுவும் இல்லாம நீ வீட்டுலயே இருந்தாலும் பசங்க உன் கூடவே இருக்க போறதில்லையே... ஸ்கூலுக்கு போவாங்க... எந்த விதத்துல நீ உன் பசங்க கூடவே இருந்து பார்த்துக்கவும் பாதுகாக்கவும் முடியும்னு நினைக்குற

புரிஞ்சிக்கோ... கூடவே பக்கத்துல நிற்குறது இல்ல பாதுகாப்பு... எந்த பிரச்சனை வந்தாலும் என்ன மாதிரி சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ள சொல்லி தர்றதுதான் பாதுகாப்பு  ... நீ உன் பசங்ககிட்ட பேசு... பேசி புரிய வை.... எப்பவுமே நம்ம குழந்தைங்க கையை பிடிச்சுக்கிட்டே நம்ம வழிநடத்த முடியாது...

அவங்களுக்கு புரிஞ்சுக்கிற வயசுதான்... என்ன... உன்னை ஆரம்பத்துல கொஞ்சம் மிஸ் பண்ணுவாங்க... மெது மெதுவா அவங்களே புரிஞ்சிக்கவாங்க... நாளைக்கு உன்னை மாதிரி அவங்களும் யாருக்காகவும் எதுக்காவும் அவங்களோட கனவை விட்டு கொடுக்காம முன்னேறி போவாங்க... சுதந்திரமா இருப்பாங்க.... அப்படி ஒரு முன்னுதாரணமான அம்மாவாதான் நீ உன் குழந்தைகளுக்கு இருக்கணும்” என்ற சிவா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிலாவின் மண்டையில் ஆணி அடித்தது போல அழுத்தமாக பதிவானது. அவள் மௌனமாக கைவிரல்களை பின்னி கொண்டு யோசிக்க,

 “தைரியமா டெசிஷன் எடு... அப்புறம் உனக்கே இது அப்படி ஹாண்டில் பன்றதுனு புரியும்... எல்லாத்தையும் சரியா பேலன்ஸ் பண்றதுலதான் உன் திறமை இருக்கு” என்றார்.

“நீங்க சொல்றது சரிதான்... எனக்கு இப்போதான் கொஞ்சம் தைரியமே வந்திருக்கு... நேத்தெல்லாம் நான் ரொம்ப டிப்ரஷன்ல இருந்தேன்... அதுவும் நான் எவ்வளவு சொல்லியும் தேவ் அந்த ஷோல கலந்துக்கிட்டது” என்றவள் அந்த நொடி பிரியனை குறித்து தன் மனவருத்தத்தை கொட்டிவிட,

“அவன் என்னைக்குமே உன்னை பத்தி உன் கனவை பத்தி எல்லாம் கவலைப்பட்டதே இல்ல... நீ என்னவோ இன்னைக்குதான் அவன் புதுசா இப்படி நடந்துக்குற மாதிரி பேசிட்டு இருக்க” என்றதும் அவள்,

“அப்படி எல்லாம் இல்ல தலை” என்றாள்.

“இல்ல?” என்று கேள்வியாக பார்த்த சிவா,

“காதல்ங்குற பேர்ல அவன் உன்னை எக்ஸ்ப்ளாயிட் பண்ணிட்டு இருக்கான்... உன்னோட வெற்றி கனவு இது எதை பத்தியும் யோசிக்காம அவனை பத்தி மட்டுமே யோசிக்கிற சுயநலவாதி... அவனுக்கு உன் மேல லவ் எல்லாம் இல்ல... அவனுக்கு அவன் மேலயேதான் லவ்

ஏன்? நாளைக்கே அவன் இந்த ஷோல ஜெய்சுட்டான் உன்னை ஒரு பொருட்டா கூட மதிக்க மாட்டான்... அதுவே தோத்துட்டானா...  திரும்பியும் உன்கிட்ட வருவான்... உன் நிம்மதியை கனவை எல்லாத்தையும் பறிச்சுப்பான்... பழைய மாதிரி உன்னை எக்ஸ்பலாயிட் பண்ணுவான்... நீயும் புருஷன்னு அவன் செய்ற எல்லாத்தையும் ஏத்துகுவ... பொறுத்துக்குவ” என்று சிவா காட்டமாக பிரியனை விமர்சித்த விதம் நிலாவிற்கு பிடிக்கவில்லை.

அவளுக்கு என்னதான் அவன் மீது கோபம் இருந்தாலும் வேறு யாரும் அவனை பற்றி எதுவும் சொல்வதை அவளால் ஏற்க முடியாது. அந்த உரையாடலை தொடர  விருப்பமில்லாமல் எழுந்து கொண்டவள்,

“லேட்டாகிடுச்சு தலை... நான் கிளம்புறேன்...அன் தேங்க்ஸ்... உங்ககிட்ட நான் பேசலனா சத்தியமா என்ன முடிவு எடுக்குறதுனு குழம்பிட்டு இருந்திருப்பன்” என்று விட்டு புறப்பட அவர் மையமாக புன்னகை செய்தார்.

இத்தனை வருடங்களாக அவளை அவர் பார்க்கிறார். அவருக்கு தெரியதா? பிரியனை பற்றி குறையாக பேசினால் அவளுக்கு பிடிக்காது என்று. ஆனால் அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. ஒரு வேளை காதல் கல்யாணம் என்ற கட்டமைப்பிற்குள் நிலா சிக்காமல் இருந்திருந்தால்... அதுவும் பிரியனை போன்ற சுயநலவாதியை  மணக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இது எல்லாம் தாண்டி நிலாவின் திறமை மற்றும் புத்திசாலித்தனம் மீது எல்லாம் அவருக்கு தனி மரியாதை உண்டு. அது நாளடைவில் மெது மெதுவாக அவள் மீதான ஈர்ப்பாக மாறியது. வேற எந்த பெண்ணின் மீதும் தோன்றாத உணர்வு அவளிடம் தோன்றியது.  

இருப்பினும் தன்னை ஒரு குருவாக மட்டுமே பாவித்து பழகும் பெண்ணிடம் தான் இப்படியொரு உணர்வுகளை கொண்டிருப்பது சரி இல்லை என்று யோசித்த சிவா தனக்குள்ளாகவே அந்த எண்ணங்களை எல்லாம் புதைத்து கொண்டுவிட்டார். இருப்பினும் பிரியன் அவளை நடத்துகிற விதத்தை பார்க்கும் போது அவருக்குள் நிலா மீதிருக்கும் அன்பு ஏதோ ஒரு விதத்தில் வெளிபட்டுவிடும்.

 இன்றும் அதே உணர்வில்தான் தேவை இல்லாமல் அவளுடைய தனிப்பட்ட விஷயத்தில் முக்கை நுழைத்து விட்டோம் என்று எண்ண எழ சிவாவின் உள்ளம் பொறுமியது. அதே கடுப்புடன் அங்கிருந்த மது குப்பியை எடுத்து மொத்தமாக தொண்டைக்குள் சரித்து கொண்டார்.

அதேநேரம் அங்கிருந்து கிளம்பிய நிலா வீட்டிற்கு சென்று சேரவே இரவு பத்திற்கும் மேலாகிவிட்டது. அவள் அம்மா ஜானகிதான் கதவை திறந்து விட்டார்.ஆனால் அவர் பார்வை அவளை கோபத்துடன் குத்தியது. தாமதமாக வந்ததால் இப்படி முறைக்கிறார் போல என்று நினைத்து கொண்டே வீட்டினர் அனைவரும் முகப்பறையில் கூடி இருந்ததை பார்த்து ஆச்சரியித்தாள்.

 “என்ன ம்மா... இன்னும் யாரும் தூங்க போகலயா” என்று ஜானகியிடம் நிலா கேட்க அவர் அதற்கும் முறைத்து வைக்க,

“சாரி மா... கொஞ்சம் லேட்டாகிடுச்சு” என்று சொல்லி கொண்டே மகள்களிடம் வந்து,

“கவி... ஹரி இன்னும் தூங்கல” என்று கேட்டு கொண்டே மகள்கள் அருகில் வரவும்தான் அவர்கள் கண்களின் கண்ணீர் தடங்களை கவனித்தாள்.

“கவி என்னம்மா... என்ன ஆச்சு” என்று மகளை தொட்டு அணைக்க போக,

“போ... நீ வேண்டாம்... வேண்டாம்” என்று கோபமாக நிலாவை தள்ளிவிட்டு கவி உள்ளே செல்ல ஹரியும் அவள் பின்னோடு ஓடிவிட்டாள். ஒன்றும் விளங்காமல் அவள் மற்றவர்கள் முகங்களை பார்க்க எல்லோரின் முகமும் கோபத்துடன் இருந்தது.

“நீ எல்லாம் ஒரு பொண்ணா டி” என்று ஜானகி நிந்திக்க,

“ம்மா என்னாச்சுனு சொல்லிட்டு கோபப்படு?” என்று நிலா கடுப்பாக கேட்கவும் அன்றைய ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சியில் நடந்தவற்றை எல்லாம் விளக்கி கூற, அவள் அதிர்ந்துவிட்டாள்.

shanbagavalli, Rathi and chitti.jayaraman have reacted to this post.
shanbagavalliRathichitti.jayaraman
Quote

Iva oru mudivu edukardu kulla priyan enna pannano ivalai nimmadiya iruka vida matan pola, appadi enna nadanthadu

Quote

Super ma 

You cannot copy content