You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 9

Quote

9

நாள் பத்து. ‘என்னை பற்றி’ என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை கதைகளை கூறும் டாஸ்க் அது. அவர்கள் கடந்து வந்த நாள்கள், துயரங்கள், சிரமப்பட்டு முன்னேறி வந்த காலக்கட்டங்கள் என அனைத்தையும் கதையாக விவரித்தார்கள். ஒவ்வொருவர் கதையும் அவர்கள் சொல்லிய விதத்தில் பார்க்கும் பார்வையாளர்கள் மனதை உருக்கியது. சிலரின் கதைகள் ஆச்சரியப்படுத்தின.

அதில் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது பிரியனின் கதை. தன் தந்தை ஒரு சாதாரண தெருச் சண்டையில் உடன் வசித்த நபரை கோபத்தில் அரிவாள் எடுத்து வெட்டி கொன்று விட்டதாக சொன்னதும் அந்த சம்பவம் அவனுடைய சிறு வயது காலங்களை எப்படி நிர்மூலமாக்கியது என்று விவரித்ததும் பலரது மனங்களை உருகி கரைத்தது.  

 தாங்கள் ரசித்து நேசித்த நடிகனின் வாழ்க்கையில் இப்படியொரு மோசமான வலியுடன் கூடிய முன்கதை இருக்கிறது என்று பார்வையாளர்களால் நம்ப முடியவில்லை.  வியப்பும் அதிர்ச்சியுமாக பார்த்தார்கள். ஆனால் அதைவிடவும் உருக்கமான கதை எண்பதுகளில் நாயகியாக அறிமுகமான நடிகை பத்மாவினுடையதுதான்.

“ஆரம்பத்துல நான் நடிச்ச படமெல்லாம் ஹிட் ஆச்சு... நிறைய படம் புக்காகி மார்கெட் இருந்த போதே கல்யாணம் பண்ணிக்க சொல்லி வீட்டுல ஒரே நச்சரிப்பு... என்ன சொல்லியும் கேட்கல... கட்டாயப்படுத்தி நிச்சயம் முடிச்சுட்டாங்க...

 என்ன ஆனாலும் நடிக்குறது நிறுத்த கூடாதுனு நான் தீர்மானமா இருந்தேன்... கல்யாணமும் முடிஞ்சுது... அப்பத்தான் நான் நடிச்ச திலகா படத்துக்கு தமிழ்நாடு அரசு விருது அறிவிச்சாங்க

அதற்கு பிறகு இன்னும் நிறைய படங்கள் புக் ஆச்சு...  அதுலயும் பெரிய இயக்குநர் ஒருவரோட படவாய்ப்பு வந்துச்சு... ரொம்பவும் பிரமாதமான ரோல்... எல்லாம் ஹீரோயினும் கனவு கான்ற மாதிரியான ரோல்... எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது... ஆனா அந்த படத்தில் நடிக்க நான் ஒத்துக்கிட்ட அடுத்த ஒரு வாரத்துல நான் பிரகனன்டா இருக்குறதா தெரிய வந்துச்சு

எனக்கு என்னவோ நடிக்குறதுதான் முதல் ப்ரியாரட்டி... ஆனா வீட்டுல சம்மத்திக்கல... பெரிய பிரச்சனை சண்டைனு வேறு வழி இல்லாம ஒத்துக்கிட்ட எல்லா படத்துல இருந்தும்  விலக வேண்டியதா போச்சு... அப்புறம் குழந்தை பிறந்த பிறகும் என்னால நடிக்க முடியாமலே போச்சு

என் பையனுக்கு இரண்டு வயசாகும் போது என் கணவர் இறந்துட்டாரு... வேறு வழி இல்லாம திரும்பவும் சினிமா துறைக்குள்ள வந்தேன்... ஆனா பெருசா வாய்ப்பு எதுவும் கிடைக்கல... இந்த நிலைமைல குடும்ப கஷ்டம் கடனு எல்லாத்தையும் சமாளிக்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருந்த போதுதான் என் பையனுக்கு மூளை காய்ச்சல் வந்து அ....வனும்...” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவர் தொண்டை கமறியது. வார்த்தைகள் தடுமாறின. ஒரு நிலைக்கு மேல் பேசமுடியவில்லை.

“இற....ந்து போயிட்டான்” என்று விட்டு அப்படியே அமைதியாகிவிட்டார்.     

அதன் பின் மெது மெதுவாக தன்னைதானே தேற்றி கொண்டு, “வேலையும் போச்சு வாழ்க்கையும் போச்சு... இந்த இழப்புல இருந்து எல்லாம் மீண்டு வரவே எனக்கு ரொம்ப வருஷமாச்சு

எனக்கு அடிக்கடி தோன்ற விஷயம்... நல்ல மனநிலையோட சந்தோஷமா என் புள்ளைய பெத்துக்கிட்டு இருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்காது... நான் என் பையனை இழந்து இருக்க மாட்டேனோனு பல சமயம் எனக்கு தோணி இருக்கு... பல சமயம்” என்று சொல்லி முகத்தை மூடி அழுதார். அது ஒரு தனி அறை.

கண்களை துடைத்து கொண்டவர் மீண்டும் பேச ஆரம்பித்தார். “அது மட்டும் இல்ல... அந்த நல்ல பட வாய்ப்பை இழக்காம இருந்திருந்தா என் வாழ்க்கைல எனக்குனு ஏதாவது இருந்திருக்குமோ...  சின்னதா நான் ஆசைப்பட்டதை செஞ்சேன்கிற திருப்தி இருந்திருக்குமோ... தெரியல... என்னால இன்னைவரைக்கும் அந்த இழப்பை ஏத்துக்க முடியல...

அது ஏன்? குடும்பமா கரியரானு எப்பவும் பொண்ணுங்க மட்டும் யோசிச்சு யோசிச்சுதான் எல்லா விஷயத்துலயும் முடிவு எடுக்கணுமா? எல்லோருக்காகவும் அவங்க சந்தோஷங்களை தியாகம் பண்ணனுமா? அவங்க விருப்பங்களை தூக்கி போடணுமா?” என்று அவர் கண்ணீரும் கோபமும் பொங்க கேட்ட கேள்வியுடன் அன்றைய நிகழ்ச்சி முடிந்தது.

பத்மா கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் அவர் கூறிய சம்பவங்கள் நிகழ்ச்சியை பார்த்திருந்த பெண்களின் மனங்களை அசைத்து பார்த்தது.

இது பற்றி தங்கள் கருத்துக்களை பெண்கள் முகநூல் இன்ஸ்டா ட்விட்டர் என சமூக ஊடகங்களில் பதிவு செய்தார்கள். அதுவும் இருபதாம் நூற்றாண்டிலும் தங்கள் உடல்களை குறித்த எந்த முடிவுகளையும் எடுக்க பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்ற முகநூல் முழுக்க கருத்துக்கள் காட்டு தீயாக பற்றி கொண்டன.

நிறைய பேர் பத்மாவின் கருத்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அவருக்காக வருத்தப்பட்டு பதிவுகள் எழுதினார்கள். இந்த பதிவுகள் ஒரு வகையில் ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரமானது.

நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட அன்றைய எபிசோட்களை இணையத்தில் தேடி எடுத்து பார்த்தார்கள். பத்மா அழுது கொண்டே பேசிய காட்சிகள் ரீல்ஸ்களாக பகிரப்பட்டு இன்னும் இன்னும் வைரலாக்கப்பட்டன.

இயல்பாகவே உணர்ச்சிகரமான விஷயங்களுக்கு சமூக ஊடகங்களில் கவனம் அதிகரிக்கும். அதுதான் இது போன்ற ரியாலட்டி ஷோக்களின் கவன ஈர்ப்புகளுக்கு காரணம். யாரையாவது அழ வைத்து அவர்கள் வாழ்க்கையின் வலிகளை சோகங்களை பேசுபொருளாக்கி பணம் சம்பாபிப்பது.

அது மட்டும் அல்லாது அந்த நிகழ்ச்சி குழுவினர்களே சமூக ஊடகங்களில் அதிக பாலோயர்ஸ் இருக்கும் சில நபர்களை பிடித்து காசு கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்ய வைப்பார்கள். இது போன்ற சம்பவங்களில் சின்ன பொறி போதும். அது காட்டு தீயாக பரவுவதற்கு.

ஒரே நாளில் எஸ் எஸ் நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் எகிறியது. டாஸ்க் முடிந்த பிறகும் நடிகை பத்மா அழுது கொண்டே இருந்தார். மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தார்கள். பிரியன் அமைதியாக நின்றான். நிலைமை சீரான பிறகு அவன்  எப்போதும் போல தோட்டத்தில் வந்து தனியாக அமர்ந்து கொண்டான்.

எல்லோரும் இரவு உணவு உண்டு கொண்டிருக்க அவன் மட்டும் செல்லவில்லை. “என்னாச்சு? எல்லோரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க... நீங்க சாப்பிட வரலையா... ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க” என்று உதய் அவனை தேடி வந்து விசாரித்தான்.

“பசிக்கல... நீ போய் சாப்பிடு உதய்”

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க... எதையோ தீவிரமா யோசிச்சுட்டு இருக்க மாதிரி வேற இருக்கு” என்று கேட்டபடி அவன் அருகே அமர்ந்து,

“என்னாச்சு பாஸ்... பழைய கதை எல்லாம் சொன்னதுல அப்ஸட்டா?” என்று உதய் மீண்டும் கேட்க, அவன் இல்லையென்பது போல தலையசைத்தான்.

“அப்புறம் என்ன? சொல்லுங்க” என்று உதயும் விடாமல் பிரியன் வாயை கிளற, ஒரு நிலைக்கு மேல் முடியாமல் தன் மனதிலிருந்த எண்ணங்களை அவனிடம் உரைத்தான்.

 “நானும் வெண்ணிலாவும் லவ் மேரேஜ்... எங்க இரண்டு பேர் பேமிலியுமே எங்க காதலுக்கு சப்போர்ட் பண்ணல... ரொம்ப கஷ்டமான சூழ்நிலை... என் சைனை வித்துதான் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தோம்

சரியான வேலை கூட இல்ல இரண்டு பேருக்கும்... வாடகை கொடுக்க கூட ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தோம்... இந்த நிலைல என் வொய்ப் பிரகனன்டா இருந்தா... அவ என்னவோ தெளிவா இருந்தா... இப்போதைக்கு குழந்தை வேண்டாம்... அபார்ட் பண்ணிடலாம்னும் சொன்னா

ஆனா எனக்கு என்னவோ மனசு கேட்கல... என்ன வந்தாலும் பரவாயில்ல... பெத்துக்கலாம்ம்னு சொன்னேன்... அவ கேட்கவே இல்ல... இப்போ குழந்தை வேண்டாவே வேண்டாம்னு பிடிவாதமா இருந்தா...  நான் என்ன சொல்லியும் அவ கன்வின்ஸ் ஆகவே இல்ல... அப்போதைக்கு குழந்தை வேண்டாங்குறதுல அவ ரொம்ப தீர்மானமா இருந்தா... எங்களுக்குள்ள அது பயங்கரமான சண்டையா வெடிச்சுது... அதுவரை எங்களுக்குள் அந்தளவு பெரிய சண்டைனு எதுவும் வந்தது இல்ல...  கோபத்துல அவளை நான் கை நீட்டி” என்று அடுத்த வார்த்தை சொல்லாமல் சுதாரித்து நிறுத்திவிட்டான். உதய் அதிர்ச்சியுடன்,

“ஓ” என்றானே ஒழிய அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த கருத்தும் சொல்ல விழையவில்லை.

பிரியனே மேலும் தொடர்ந்தான். “நிறைய பிரச்சனை சண்டைக்கு பிறகுதான் என் குட்டி பொண்ணுங்க பொறந்தாங்க” என்று மெல்லிய புன்னகையுடன் கூற,

“பாப்பா பேர்?” என்று ஆர்வமாக கேட்டான் உதய்.

“கவிதா... ஹரிதா”

“ஓஒ ட்வின்ஸா?”

“அவங்க டிவின்ஸா இருந்ததாலதான் என் வொய்பு அபார்ட் பண்ணனும்கிற எண்ணத்தை விட்டா... ஒரு வகைல பார்த்தா என் பொண்ணுங்க பொறந்த பிறகு எங்க வாழ்க்கைல இருந்த நிறைய பிரச்சனை சால்வ் ஆகிடுச்சு... எகானாமிக்கலா ஒரளவு எங்க லைப் செட்டிலும் ஆகிடுச்சு” உதய் அவன் அடுத்து என்ன கூற போகிறான் என்று ஆவலுடன் பார்த்தான்.

“பத்மா அம்மா வாழ்க்கைல நடந்தது சரி இல்லதான்... ஆனா என் லைப்ல நடந்ததை கம்பர் பண்ணும் போது கரியருக்காக வயித்துல இருக்க குழந்தையை கொல்லனும்னு சொல்றது என்னவோ எனக்கு சரியா படல... அப்படி எடுக்குற டெசிஷன் எல்லா நேரத்துலயும் சரியா இருக்காது... வொர்க் அவுட் ஆகாது... அதுவும் இல்லாம குழந்தைங்கனு போது அது கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விஷயம்தானே... இரண்டு பேரோட முடிவும் அதுல முக்கியம்தானே” என்று அப்போதைக்கு தன் மனதை அரித்து கொண்டிருந்த எண்ணத்தை அவன் எதார்த்தமாக பகிர்ந்து கொண்டுவிட்டான்.

முன்யோசனை இல்லாமல் பதிவு செய்த இந்த கருத்து எது போன்ற எதிர்வினையை உருவாக்கும் என்று பிரியனுக்கு அப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் கிருஷ்ணாவிற்கு தெரியும், அதனாலேயே ஒரே நாள் நடந்த சம்பவத்தை இரண்டு அத்தியாயங்களாக பிரித்தான்.

ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் வெற்றி என்பது நடக்கும் நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் மட்டும் இல்லை. நிகழ்வுகளை வரிசைப்படுத்துவது மற்றும் எதை எப்படி சூட்சமமாக கத்தரித்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.    

பத்மாவின் வாழ்க்கை சம்பவத்திற்கான எதிர்வினையை பொறுத்து அடுத்த அத்தியாயத்தில் பிரியன் பேசிய பதிவை போடுவது என்று முடிவு செய்திருந்தான் கிருஷ்ணா. அவன் எதிர்பார்த்தது போல சமூக ஊடகங்களில் பத்மாவின் கருத்துக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு அளித்திருந்தார்கள்.    

இப்படியான சமயத்தில் பிரியன் அபாஷன் செய்வது தவறு என்ற கருத்து கூறியதை போட்டால் அது எப்படி வெடிக்கும் என்று கிருஷ்ணாவிற்கு தெரியும். இதனை அடுத்த நாள் அத்தியாயமாக அவன் ஒலிபரப்ப இருந்த நிலையில் நிகழ்ச்சியின் குழுவிலிருந்த பெரோஸ், “வெண்ணிலா சிஸ் பத்தி பேசுற எல்லாத்தையும் எடிட் பண்ணி தூக்கிடலாமானு சொன்னீங்களே?” என்று கிருஷ்ணாவிடம் சந்தேகமாக கேட்டான்.  

“இல்ல இல்ல... இது கண்டிப்பா வேணும்... அடுத்த நாள் ஷோல இது டெலிகாஸ்ட் ஆகனும்” என்று உறுதியாக சொன்னான் கிருஷ். பெரோஸ் அவனை குழப்பத்துடன் நோக்கி, “நீங்கதானே முன்னாடி வெண்ணிலா சிஸ் பத்தி என்ன பேசுனாலும் எடிட் பண்ணி தூக்க சொன்னீங்க” என,   

“கரெக்ட்தான்... ஆனா இது செம கண்டன்டாச்சே... நமக்கு தேவை கன்டென்ட்... அது யார் மூலமா எப்படி கிடைச்சாலும் நம்ம யூஸ் பண்ணிக்கணும்.. பார்த்துட்டே இரு... இன்னைக்கு ஷோ பயங்கர வைரல் ஆக போகுதுனு” கிருஷ்ணாவின் சூட்சமம் பெரோஸிற்கு அப்போது புரியவில்லை. 

அன்று இரவு எப்போதும் போல அந்த நிகழ்ச்சியை கவிதாவும் ஹரிதாவும் பார்க்க அமர்ந்தார்கள். என்ன நடந்தாலும் இந்த நிகழ்ச்சியை மட்டும் அவர்கள் தவறாமல் பார்த்துவிடுவதுண்டு. அதன் பின்பே தூங்கச் செல்வார்கள். அவர்கள் தொடர்ந்து பார்ப்பதினாலேயே வீட்டிலுள்ள மற்றவர்களும் அதனை பார்க்க ஆரம்பித்தனர்.

மணி ஒன்பது ஆகிவிட்டாலே எல்லோரும் தொலைகாட்சி முன் ஆஜாராகி விடுவார்கள். வினயிற்கு பார்க்க விருப்பம் இல்லாவிட்டாலும் அவன் பெரும்பாலும் அலுவலகத்திலிருந்து வரும் நேரம் அது. அவன் உடைமாற்றி கொண்டு வந்து உணவு உண்ண அமரும் போது சரியாக அந்த நிகழ்ச்சி துவங்கும்.

“வேற வேலை இல்ல... இந்த ஷோவை போய் பார்க்குறாங்க” என்று புலம்பவான். ஆனால் அவனாலும் ஒன்றும் செய்ய முடியாது. விளம்பரம் வரும் போது சானலை மாற்றினால் கூட கவிதாவும் ஹரிதாவும் கத்தி கூச்சலிட ஆரம்பித்துவிடுவார்கள்.

வேறு வழி இல்லாமல் அவனும் அதனை பார்த்தாக வேண்டிய கட்டாயம். தினமும் பார்ப்பதால் சந்தியாவிற்கும் அது வழக்கமாக மாறிவிட்டது. அதுவும் நேற்றைய பத்மாவின் விஷயம் அவள் அலுவலகங்களிலும் பேசு பொருளானதில் இன்றைய எபிசோடை பார்க்கும் ஆவல் அவளுக்கு கூடியது.

கணவனுக்கு உணவு பரிமாறி கொண்டே அவள் டிவியை வெறிக்க, “நீயுமாடி” என்று கேட்டு கடுப்பாக முறைத்தான். அவள் பதில் பேசவில்லை. இருப்பினும் அவளால் நிகழ்ச்சியை  பார்க்காமலும் இருக்க முடியவில்லை.   

நிகழ்ச்சி துவங்கிய சில நிமிடங்களில் பிரியன் உதயின் உரையாடல் முழுவதுமாக ஒளிப்பரப்பட்டதில் எல்லோர் விழிகளும் அசையாமல் தொலைக்காட்சி திரையில் நின்றுவிட்டன.

யாருமே அப்போது கவியும் ஹரியும் அங்கே இருப்பதை கவனத்தில் கொள்ளவில்லை. அதேசமயம் ஜானகி, “பாவி குழந்தை வேண்டாம்னு முடிவு எடுத்தாளா? இந்த மாதிரி முத்து முத்தான குழந்தைகளை வேணான்னு முடிவு எடுக்க எப்படிதான் மனசு வந்ததோ” என்று ஆவேசத்தில் மகளை திட்டவும் கவிதாவுக்கு விஷயம் தெளிவாக புரிந்து விட்டது.

ஓரளவு நிகழ்ச்சியில் காட்டிய அவர்கள் உரையாடலையும் புரிந்து கொண்டுவிட்ட கவிதா, “அம்மா எங்களை வேண்டான்னு சொல்லிட்டாங்களா?” என்று மெல்லிய குரலில் கேட்கவும்தான் அங்கிருந்த மற்றவர்கள் பார்வைகள் ஹரி கவிதா மீது விழுந்தன.  ஆனால் கவிதா அளவுக்கு  ஹரிதாவுக்கு எதுவும் பெரிதாக புரியவில்லை. 

“இல்ல கவிமா... அம்மா அப்படி சொல்லல” என்று உடனடியாக பேத்தியை ஜானகி சமாதானம் செய்ய முற்பட்டார். ஆனால் கவிதா அவர் சொன்ன எதையும் காதில் வாங்கவில்லை. தன் அம்மாவுக்கு தாங்கள் வேண்டாம் என்பதுதான் அப்போதைக்கு கவியின் மூளைக்குள் சென்று அழுத்தமாக உட்கார்ந்து கொண்ட விஷயம்.

 “அம்மாவுக்கு நாங்க வேண்டாமா... அம்மாவுக்கு எங்களை பிடிக்கலயா பாட்டி” என்று அவள் மீண்டும் மீண்டும் கேட்க ஜானகி அதிர்ந்தார். உடனே கேசவன், “ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்ல கண்ணுங்களா? அம்மா போய் அப்படி எல்லாம் யோசிப்பாளா” என்று பேத்திகளை சமாளிக்க எத்தனிக்க,

“இல்ல டிவில அப்பா சொன்னாரு... நாங்க கேட்டோம்... அம்மாவுக்கு நாங்க வேண்டாம்னு” என்று கவிதா தெளிவாக பேசினாள்.

“அது உங்கள இல்ல ம்மா... அப்பா வேற யாரை பத்தியோ பேசறாரு” என்று ஜானகியும் கேசவனும் எப்படி எப்படியோ சமாளித்து பார்த்தார்கள். ஆனால் கவிதா இயல்பிலேயே மிகவும் முதிர்ச்சியாக சிந்திக்கும் குழந்தை. பத்து நாட்களாக தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருப்பவள். ஆகையால் அவளுக்கு தன் தந்தையின் உரையாடல் தங்களை பற்றியது என்பதை புரிந்து கொள்ள முடியாதா என்ன?

யார் சொல்லும் சமாதானங்களையும் அவள் காதில் வாங்கவே இல்லை. “அம்மாவுக்கு நாங்க வேணாம்தான்... அம்மா அப்படிதான் அப்பாகிட்ட சொல்லி இருக்காங்க” என்று கவிதா அழ ஆரம்பித்து விட பெரிதாக எதுவும் புரியாவிட்டாலும் ஹரிதாவும் சகோதிரியுடன் சேர்ந்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

அது மட்டுமல்லாது, “நாங்க அப்பாகிட்ட போகணும்” என்று இருவரும் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிக்க ஜானகி, கேசவன், வினய், சந்தியா என்று எல்லோரும் தங்களால் முடிந்தளவுக்கு அவர்களை சமாதானம் செய்தனர். சில  எப்படியோ நிலைமை கட்டுக்குள் வரவும் நிலா வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கவும் சரியாக இருந்தது. 

வீட்டில் இப்படியொரு களேபரம் நிகழ்ந்திருக்கிறது என்று எந்த யூகமும் இல்லாமல் உள்ளே வந்து மகள்களை அவள் அணைத்து கொள்ள முற்பட்ட போதுதான் அவர்கள் அவள் கையை தள்ளிவிட்டு ஓடினார்கள்.

ஜானகி அப்போது நிகழ்ச்சியில் பிரியன் பேசியதை எல்லாம் சொல்லவும் நிலா அதிர, “எப்படிறி வயித்துல இருக்க புள்ளைங்கள கலைக்க மனசு வந்தது உனக்கு” என்ற கூடுதலாக மகளிடம் கடுகடுத்தார்.  

தலையில் கை வைத்து கொண்ட நிலா, “அப்போ நான் இருந்த சூழ்நிலை அப்படிம்மா” என,

“என்னடி பெரிய சூழ்நிலை... இவன்தான் வேணும்னு பெத்தவங்கல கூட மதிக்காம போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட இல்ல... அப்புறம் புள்ள பெத்துக்க மட்டும் என்ன உனக்கு... இங்கே அவனவன் புள்ள இல்லன்னு கோவில் கோவிலா ஏறுறாங்க... காசை கொட்டி ட்ரீட்மென்ட் பார்க்குறாங்க... ஏன் உங்க அண்ணிக்கு இவ்வளவு வருஷமாகியும் ஒரு புள்ள பிறக்கல

ஆனா உனக்கு எந்த கஷ்டமும் இல்லாம கிடைச்சிருக்கு... அதை சுமக்க உனக்கு கஷ்டமா இருந்திருக்கு” என்று கண்டனமாக  ஒலித்தது அவர் குரல். இதெல்லாம் நிலாவை தாக்க அவர் உபயோகித்த வார்த்தைகள் என்றாலும் அது சந்தியாவையும் ஆழமாக குத்தியது. அந்த நொடியே அவள் முகம் சுருண்டுவிட்டது. வருத்தத்துடன் அவள் தன் அறைக்குள் சென்று புகுந்து கொள்ள,

கடுப்பான வினய், “இவ பண்ண முட்டாள்தனத்துக்கு எல்லாம் என் பொண்டாட்டியை ஏன் மா இழுத்து விடுற” என்று நிலாவை சுட்டிக்காட்டி கத்த துவங்கினான்.  

“நான் என்ன முட்டாள்தனம் பண்ண” என்று பதிலுக்கு நிலாவும் தமையனிடம் ஏறினாள்.

“நீ உன் வாழ்க்கைல செஞ்ச எல்லாமே முட்டாள்தனம்தான்... இன்னும் சொல்ல போனா எந்த முடிவையும் தெளிவா யோசிச்சு எடுக்க தெரியாத முட்டாள் நீ... இதுல உன் புருஷன் வேற... ரியாலட்டி ஷோல கலந்துக்குறனு நம்ம குடும்ப மானத்தை எல்லாம் கப்பலேத்துட்டு இருக்கான்... இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ?” என்று எரிச்சலுடன் மொழிந்து விட்டு வினய் தங்கள் அறைக்குள் புகுந்து கதவை அடைத்து கொண்டான்.

ஆயாசமாக தன் அம்மாவை பார்த்த நிலா, “ஏன் மா நீ வேற இப்ப... அண்ணிக்கு குழந்தை இல்லாத விஷயத்தை சொல்லி காண்பிச்ச” என்று வினவ,

“நான் எங்கடி சொல்லி காண்பிச்சேன்... அதுவா பேசும் போது வந்திருச்சு” என்றார்.

நடந்ததை யோசிக்க யோசிக்க நிலாவுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. அதுவும் சற்று முன்பு சிவாவை பார்த்து விட்டு வந்ததில் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உருவானது.

ஆனால் வீட்டிற்கு வந்த மறுகணமே அவளது நம்பிக்கை மொத்தமும் காற்றடித்து சாய்ந்த சீட்டுக்கட்டு கோபுரம் போல சரிந்துவிட்டது. அப்படியே அவள் சோபாவில் துவண்டு அமர்ந்து விட, “புள்ளைங்கள போய் சமாதானப்படுத்துடி” என்றார் ஜானகி.

வயதும் முதிர்ச்சியும் உள்ள இவர்களுக்கே அவளின் சூழ்நிலை புரியாத போது குழந்தைகளுக்கு என்ன சொல்லி எப்படி புரிய வைப்பாள். அவளுக்கு நம்பிக்கை இல்லை.

இருப்பினும் மகளிடம் பேச உள்ளே சென்றாள். ஆனால் கவிதாவும் ஹரிதாவும்  அவள் சொல்வதை கேட்க  தயாராக இல்லை. ஹரி கொஞ்சம் இறங்கி வருவது போலிருந்தாலும் கவி அவளை விடவில்லை. கோபமாக கையை தட்டிவிட்டாள். அவளை நிராகரித்தாள்.

“அம்மா சொல்றதை கேளுங்க” என்று அவள் பொறுமையாக பேசினாள்.

“போ நீ எங்களுக்கு வேண்டாம்... எங்களுக்கு அப்பாதான் வேணும்... அப்பாக்கிட்ட போகணும்” என்று பிடிவாதமாக கூற இந்த வார்த்தைகள் எல்லாம் நிலாவை ரொம்பவும் காயப்படுத்தியது. மேலும் அவளின் கோபத்தையும் ஏற்றிவிட்டது.  

“ஆமாமா உங்க அப்பாவுக்கு அப்படியே உங்க மேல பாசம் பொங்கி வழியுதாக்கும்... எல்லா வேஷம் நடிப்பு” என்று அவள் காரமாக கூற,

“இல்ல அப்பா ஒன்னும் அப்படி இல்ல” என்று கவிதா மல்லுக்கு நின்றாள். நிலா மறுவார்த்தை பேசுவதற்குள் ஜானகி, “வாய மூடு குழந்தைங்ககிட்ட என்ன பேசணும்னு தெரியாமா?” என்று மகளை அதட்டியதோடு பேத்திகளிடம் இலகுவாக பேசி சமாதானம் செய்து அவரே உடன் இருந்து உறங்கவும் வைத்தார்.

நிலாவால் உறங்கவே முடியவில்லை. எப்படி உறங்க முடியும். அவளுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கிறது. பிரியனை தவிர வேற எந்த ஆணிடமும் அவள் ஈர்க்கப்பட்டது இல்லை. அன்பு கொண்டதில்லை. காதலித்தது இல்லை. எதை பற்றியும் யோசிக்காமல் தன் பெற்றோர்களை விட்டுவிட்டு அவன் பின்னே சென்றாள். மணம் முடித்தாள். ஆனால் இதெல்லாம் குறித்து என்றுமே அவள் குற்றவுணர்வு கொண்டதில்லை. அந்தளவு அவனை காதலித்தாள். காதலிக்கிறாள்.

ஆனால் சரியான வேலை கூட இல்லாத சமயத்தில் குழந்தை பெற்று கொள்ள வேண்டுமென்ற அவன் முடிவுக்கு அவளால் உடன்பட முடியவில்லை. திட்டவட்டமாக மறுத்தாள். சண்டை பிரச்சனை இதற்கிடையில் அவளுக்கு கருத்தரித்த விஷயம் தெரிந்த போது பதினெட்டு வாரங்கள் கடந்துவிட்டன. பிடிவாதமாக குழந்தையை கலைக்க சென்ற போதுதான் இரட்டை குழந்தை என்பதும் தெரிய வந்தது.

அதன் பிறகு குழந்தையை கலைக்க வேண்டுமென்ற எண்ணம் அவளுக்கே ஆட்டம் கண்டுவிட்டது. மனதை மாற்றி கொண்டாள். குழந்தை பெற்று கொள்ள சம்மதித்தாள். அதன் பிறகு நடந்து எல்லாமே அவனுக்கு சாதகமாகவே முடிந்தது. ஆனால் அவள் வாழ்க்கை??? 

 ‘காதல்ங்குற பேர்ல அவன் உன்னை எக்ஸ்ப்ளாயிட் பண்ணிட்டு இருக்கான்... உன்னோட வெற்றி கனவு இது எதை பத்தியும் யோசிக்காம அவனை பத்தி மட்டுமே யோசிக்கிற சுயநலவாதி’ பிரியனை பற்றி சிவா சொன்ன வார்த்தைகள் எல்லாம் அவள் செவியில் திரும்ப திரும்ப ஒலித்தன.

சிவா சொன்னதெல்லாம் நூறு சதவீதம் சரிதான். பிரியன் எல்லா சூழ்நிலைகளிலும் தன்னை பற்றி மட்டுமே யோசித்திருக்கிறான். இத்தனை நாளாக தன் மூளைக்கு இது உரைக்கவில்லை. காதல் காதல் என்று நம்பி ஏமாந்து போய் நிற்கிறோம்.

‘நீ உன் வாழ்க்கைல செஞ்ச எல்லாமே முட்டாள்தனம்தாண்டி...எந்த முடிவையும் தெளிவா யோசிச்சு எடுக்க தெரியாத முட்டாள் நீ’ என்று தமையனின் நிந்தனையும் ஒரு வகையில் சரிதான்.

‘தான் முட்டாள்தான். தான் முட்டாள்தான். தான் முட்டாள்தான்.’ என்று தனக்கு தானே திரும்ப திரும்ப சொல்லி கொண்டாள். கண்களில் கண்ணீர் பெருகிற்று.

விடியும் வரை அவளுக்கு இதே சிந்தனைதான் ஓடியது. இப்படியாக யோசித்து நேரமும் ஓடிவிட்டது. விடிந்ததும் குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்யும் சாக்கில் அவர்களிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றாள் நிலா. ஆனால் கவியும் ஹரியும் கொஞ்சமும் பிடி கொடுக்கவில்லை. அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உணவு ஊட்ட விடவில்லை. சீருடை அணிவிக்க விடவில்லை.

ஜானகிதான் அனைத்தையும் செய்தார். கேசவன் அவர்களை அழைத்து கொண்டு பள்ளிக்கு கிளம்பிவிடவும் நிலா படுக்கையறையில் வந்து விழுந்து தலையணையில் முகம் புதைத்து கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். பதறி போன ஜானகி மகள் அருகே வந்து அமர்ந்து,

“குழந்தைங்கதானடி... இரண்டொரு நாளில எல்லாத்தையும மறந்துடுவாங்க... இதுக்கு போயா அழுற” என, 

 “இல்லமா... ஹரிக்கு இதெல்லாம் புரியாது... ஆனா கவியால எல்லாமே புரிஞ்சிக்க முடியும்... அவ ரொம்ப மெசூர்டா யோசிப்பா... அவ கேட்குற கேள்விக்கு எல்லாம் சில நேரங்களில் என்னாலேயே பதில் சொல்ல முடியாது... இப்போ இந்த விஷயம்... அவளுக்கு நல்லா புரிஞ்சிருக்கும்... உஹும் என்னை மன்னிக்கவே மாட்டா” என்ற கண்ணீர் வடித்த நிலாவிற்கு தன்னுடைய குழந்தைகளின் நிராகரிப்பை ஏற்கவே முடியவில்லை. ஜானகி மகள் தலையை தடவி கொடுக்க,

“என்னால முடியலம்மா... நான் அபார்ட் பண்ணிடலாம்னு சொன்னேதான்... ஆனா இன்னைக்கு என் குழந்தைங்களதான் என்னோட முதல் பிரியாரிட்டியே... எல்லா விஷயத்துல அவங்கள பத்தி யோசிச்சுதான் நான் முடிவு எடுக்குறேன்... ஆனா அவங்க என்னை புரிஞ்சுக்காம” என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் நிறுத்தி விட்டு,

“நான் என் பசங்களுக்குக்கும் வேண்டாதவளா போயிட்டேன்மா” என்று சொல்லி மீண்டும் தாங்க முடியாமல் அழுதாள். ஜானகிக்கு பொறுக்கவில்லை.  

“உன் புருஷன் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம்... எல்லோரும் பார்க்குற ஷோல இதெல்லாம் சொல்லி வைக்கணுமா?” என்று கடுப்புடன் பிரியனை திட்ட இந்த விஷயத்தில் முழுவதுமாக நிலாவால் அவனை குற்றம் சாட்ட முடியவில்லை. அந்த நிகழ்ச்சியின் நோக்கமே இது போன்று வாயை பிடுங்குவதுதான்.

அதேநேரம் பிரியன் பேசியது நிலாவின் வீட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை விட சமூக ஊடகங்களில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.  

ஊடகங்கள் நினைத்தால் ஒரே இரவில் ஒருவனை உச்சாணி கொம்பில் ஏற்றி வைக்கவும் முடியும். அதேசமயம் கீழே போட்டு மிதித்து ஒருவனது பேர் புகழ் அனைத்தையும்  நிர்மூலமாக்கவும் முடியும்.

ஒரு வகையில் இந்த சம்பவம் பிரியனின் பெயரையும் புகழையும் ஆட்டம் காண செய்தது. எல்லாமே தலைகீழாக மாறியது.

நீயும் நானும் தொடரில் அவர்கள் ரசித்த அன்பு பாத்திரத்திற்கும் அவனுடைய நிஜ முகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் அவனுடைய பெண் ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நேற்று வரை அவனுக்கு ஆதரவாக பதிவிட்டவர்களே சீரியலில் பார்த்த பிரியனின் போலி முகத்தை பார்த்து ஏமாந்துவிட்டதாக பதிவிட்டார்கள்.

அந்த ஒரே நாளில் அவனுடைய இன்ஸ்டா பாலாயோரஸின் எண்ணிக்கை பல மடங்கு சரிந்தது.

**********

குடும்ப நாவல் கட்டுரை லிங்க் 

இப்படிக்கு இலக்கிய நாசினி - 4 

இப்படிக்கு இலக்கிய நாசினி - 5  

shanbagavalli and chitti.jayaraman have reacted to this post.
shanbagavallichitti.jayaraman
Quote

Adapavi priyan un vaai dan unaku ediri da summa illama kandai um pesi un perai damage pannita da, un ponnumga manasa kalaichita da pakki pavam nila

Quote

Super ma 

You cannot copy content