You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilamangai - 1

Quote

நிலமங்கை-1

நினைவுகளில்...

ஆதவனின் கிரணங்கள் மிக மிக மென்மையாக நில மடந்தையை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் இளம் காலை நேரமது.

சற்று தூரத்தில் ஒரு ட்ராக்டர் இயங்கும் படபடவென்ற ஒலி மெல்லியதாகக் கேட்டுக்கொண்டிருக்க, நன்கு உழுது பதப்பட்டிருந்த நிலத்தில் சீரான இடைவெளியில், முதுகை நன்கு வளைத்து குனிந்தவண்ணம் பெண்டிரெல்லாம் நெல் நாற்றுகளை நடவு செய்துகொண்டிருந்தனர்.

அப்பொழுதுதான் பூஜை போட்டு நடவை தொடங்கியிருப்பார்கள் போலும். மிகச் சிறிதளவேதான் நாற்றுகள் நடப் பட்டிருந்தன.

புடவை அணிந்த பெண்களுக்கு இடையிடையே சில பாவாடை தாவணி பெண்களும் கலந்திருக்க, ஒருவரைப்போல அனைவருமே ஆண்கள் அணியும் சட்டையை மேலே அணிந்திருந்தனர்.

அந்த சிறு குழுவுக்குள் ஒருத்தியைத்தான் தேடிக்கொண்டிருந்தன வரப்பின் மீது வந்து நின்ற தாமோதரனின் கண்கள்.

அப்பொழுதுதான் நடுவிலிருந்து கணீரென்று ஒலித்தது அவன் தேடிய அவனது நிலமங்கையின் இனிமையான குரல்.

நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து...

என அந்த அழகிய நாட்டுப்புற பாடலை அவள் பாடத் தொடங்க, அதை அப்பிடியே லாவகமாக பிடித்து, தொடர்ந்து பாட ஆரம்பித்தனர் மற்ற பெண்களெல்லாம்.

நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து......

சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது பூங்காத்து...

சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது பூங்காத்து...

 

ஒரு பூமி நமக்கிருக்கு.. அதப் போற்றி நடந்திடலாம்...

ஒரு பூமி நமக்கிருக்கு.. அதப் போற்றி நடந்திடலாம்...

 

ஒரு ஏருங்கலப்பையுமே போதும் நாம ஜெயிச்சிடலாம்...

ஒரு ஏருங்கலப்பையுமே போதும் நாம ஜெயிச்சிடலாம்...

 

 

 

நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து...

சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது காத்து...

 

கூழோட பச்சமெளகா அது நம்ம பலகாரம்...

சுடுசோறும் கெடைக்கும் நமக்கு சில நேரம் விருந்தாட்டம் ...

 

மேற்கால பொழுது சாஞ்சாலே...

மெதுவாக மனசு கரையேறும்...

 

ஆலமரம் குயில்களும் பாடுதைய்யா... பாடுதைய்யா...

கேட்டதுமே எங்க துயில் தீருதைய்யா... தீருதைய்யா...

 

நம்ம பொன்மருதம் பேரச் சொல்லி.. பேரச் சொல்லி..

பாட்டுக் கட்டி மனம் பாட்டுக்கு பாடுது பாடுது..

 

நாத்து நடவ நட்டு வாங்க நல்ல நேரம் பாத்து......

சேத்து மேல நட்ட நடவ வீசித் தள்ளுது காத்து...

 

கால் காணி நெலமே நம்ம உயிராகும் உயிராகும்...

சம்சாரி வேர்வதானே பயிராகும் பயிராகும்...

 

வயலோர வேப்ப மரமாடும்... மரமாடும்...

அதப் பாத்து எங்க மனசாறும்... மனசாறும்...

 

வானவில்லத் தொட்டுவர ஆசையில்ல ஆசையில்ல...

வாழ்க்கையில கோடிப் பணம் தேவையில்ல... தேவையில்ல...

 

உயிர் உள்ளவர கையும் காலுமா காலம் தள்ளணும்...

நம்ம உழைப்பால உண்ணும் உணவை ஊருக்கெல்லாம் படியளக்கணும்...

 

நம்ம உழைப்பாலே உண்ணும் உணவைப் ஊருக்கெல்லாம் படியளக்கணும்...

நாத்து நடவ நட்டு... வாங்க நல்ல நேரம் பாத்து...

அது வரை பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்தவன் அவளுடைய குரலைக் கேட்டபின் அவளுக்கு நேராக வந்து நின்றான், இப்பொழுதாவது அவள் தன்னை தலை நிமிர்ந்துபார்ப்பாளா என்று.

ம்ஹும்... அப்பொழுதும் கூட தலை நிமிரவில்லை அவள்.

சேற்றையும் நாற்றையும் பாட்டையும் தவிர வேறெதிலும் கவனம் இல்லை போலும் அவளுக்கு.

அவளுக்கு அருகிலிருந்த அவளுடைய தோழி தேவிதான் அவனைப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையைச் சிந்தியவாறு தன் தோளால் அவளுடைய தோளில் இடித்து காதில் ஏதோ கிசிசுகிசுத்தாள்.

சட்டெனத் தலை நிமிர்ந்தவள், தன் விழிகளை மலர்த்தி நேர்கொண்டு அவனைப் பார்த்தாள் அவள்.

ஆச்சரியத்தில் விரிந்த அவளது கண்கள் மகிழ்ச்சியில் மின்ன, 'தாமு' என இதழுக்குள் உச்சரித்தவள் நாக்கை கடித்து தன் தவறை திருத்தி. 'அத்தான்' என முணுமுணுத்தாள் நிலமங்கை அருகிலிருந்த யாருடைய கவனத்தையும் கவராமலே.

அவளுடைய குரல் அவனை எட்டவில்லையென்றாலும், அவளது அந்த செய்கை அவனுக்குப் புரிய, இதழ் கடையில் ஒரு புன்னகை அரும்பியது தாமோதரனுக்கு.

அவளுடைய அந்த பார்வை, அந்த பரவசம், அந்த முணுமுணுப்பு என அவன் உணர்ந்த அனைத்தும் மொத்தமாக நங்கூரம் பாய்ச்சியதைப் போல அவன் மனதில் அப்படியே இறுக பற்றிக்கொண்டது.

அன்று ஏனோ அவனுடைய கண்களுக்குப் புதிதாய் தெரிந்தாள் நிலமங்கை.

*

நிதரிசனத்தில்...

"தாமு! ஸ்டாப் இட். அளவுக்கு மீறி போயிட்டு இருக்க" கண்டனத்துடன் ஒலித்தது தாமோதரனின் நண்பன் விக்ரமுடைய குரல்.

சென்னை கிண்டியில் இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் 'பார்'ரில் இருந்தனர் இருவரும்.

இன்னும் சற்று நேரத்தில் தாமுவுக்கு விமான நிலையம் வேறு செல்ல வேண்டி இருக்க, அந்த எண்ணமே இல்லாமல் மதுவை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தான் அவன்.

விக்ரம் அப்படிச் சொல்லவும், ஒரு சதவிகிதம் கூட அவனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது, இருந்தாலும் தனக்காகத்தான் பொறுத்துக்கொண்டிருக்கிறான் என்பது புரிய, அவனுடைய கையை எடுத்து தன இதயத்தின் மேல் வைத்தவன், "பாருடா மாமா! எவ்வளவு ஃபாஸ்ட்டா துடிக்குது... அந்த ராட்சசி என்னை எப்படி மாத்தி வெச்சிருக்கா பாரு. ஐ ஹேட் மை செல்ஃப்" என புலம்பியவனின் இதயம் உண்மையில் அதி வேகமாய் துடிக்க, அதிர்ந்தான் விக்ரம்.

அவனை அமைதிப் படுத்தும் விதமாக, கொஞ்சம் இறங்கிய குரலில், "தாமு! கண்ட்ரோல் யுவர்செல்ப். இவ்வளவு எக்ஸைட்மென்ட் கூடாது. அண்ட் இதோட நிறுத்திக்கோ. அவளை பார்க்கற வரைக்கும்தான் இந்த டென்ஷன் எல்லாம். பார்த்த அடுத்த செகண்ட் நீ கூல் ஆயிடுவ" என்றான் நண்பனை உணர்ந்தவனாக.

அதுவரை அதிக கூட்டமில்லாமல் அமைதியாக இருந்த அந்த இடத்தில் திடீரென்று பேரரவம் கேட்க, அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தான் விக்ரம்.

செல்வ செழுமையைப் பறைசாற்றும் தோரணைகளுடன், ஏழெட்டு இளைஞர்கள் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தனர். ஆனால் அதற்கும் கூட அசரவில்லை தாமோதரன். கருமமே கண்ணாயிருந்தான்.

மிக உயர்மட்ட மது பிரியர்கள் மட்டுமே வந்து போகும் இடம் என்பதால் பாதுகாப்பு குறித்த பிரச்சனை எழ வாய்ப்பில்லை என்ற ஒரே காரணத்தினால்தான் தாமு விக்ரம் இருவரும் அங்கே வந்ததே.

ஆனால் உள்ளே நுழைத்த அந்த கூட்டம் மதுவையும் தாண்டிய வேறேதோ போதை தலைக்கு ஏறியதை போல கொஞ்சம் கூட நிதானத்தில் இல்லை என்பதால் விக்ரமுடைய பார்வை கூர்மை பெற, அதற்குள் பின்னாலிருந்து தாமுவை பார்த்துவிட்டு, "டேய் மச்சான்... யாரோ லோக்கல் கை டா... நாட்டாமை மாதிரி டோ...ட்டில வந்திருக்கான் பார்" என்றான் ஒருவன் முழு நக்கலுடன்.

தாமோதரன் அணிந்திருந்த வேட்டி சட்டையைப் பார்த்து அவ்வளவு எள்ளல் அவர்களிடம்.

விக்ரம் கோபத்துடன் ஒரு அடி எடுத்துவைக்க, அதற்குள் அவனுடைய பேச்சில் கடுப்பாகி, தன் முழுக்கைச் சட்டையை மடக்கிவிட்டவாறு திரும்பியவன், தன் வலது காலால் எத்தி வேட்டியை மடித்துக்கட்டி, "எவண்டா அவன்... சவுண்ட் விட்டது" என்றான் தாமு கர்ஜனையாக.

அந்த கூட்டத்தில் ஒருவன் மட்டும் தாமுவை அடையாளம் கண்டுகொண்டுவிட, "டேய்... டீ.கே டா... சாரி சொல்லுங்கடா" என அலறினான் முழு பயத்தில்.

ஒரு சிலருக்கு மட்டும் அவன் யார் என்பது புரிந்தது. பலருக்குத் தெரியவில்லை. ஆனாலும் மொத்தமாக அதிர்ந்து நின்றது அந்த கூட்டம். அங்கே வேலை செய்பவர்களும்தான்.

தலையில் கை வைத்துக்கொண்டான் விக்ரம்.

அதற்குள், முதலில் இகழ்ச்சியாகப் பேசியவன் பயந்துபோனவனாக, என்ன ஏது என எதுவும் புரியவில்லை எனும் பாவத்தில், "சாரி... சாரி... சாரி ப்ரோ! தெரியாம பேசிட்டேன்" என்றவாறு தாமுவை நெருங்கி அவனைத் தொட வர, அடுத்த நொடி வலியில் அலறினான் அவன்.

காரணம் அவன் கையை அப்படியே வளைத்துப் பிடித்திருந்தான் செல்வம்... தாமுவின் மெய்க்காப்பாளன்... அவனுடைய பிரத்தியேக காரோட்டி எல்லாம்.

அப்படியே அவனை ஒரு தள்ளு தள்ளியவன், "அண்ணாவை டச் பண்ற அளவுக்கு பெரிய பருப்பாடா நீ! அவங்க யார்னு தெரியும் இல்ல" என்றான் அவன் உச்சபட்ச கோபத்தில்.

"செல்வம்" என தாமு அவனை அடக்க, "சாரிண்ணா!" என்றவன், "என்ன சொன்ன... லோக்கல் கை...ன்னா? ஆமாம்... நாங்க இந்த நாட்டோட லோக்கல் ஆளுங்கதான். வேட்டி எங்க லோக்கல் டிரஸ்தான் ஒத்துக்கறேன்" என்று சூடாகச் சொன்னவன், "நீயெல்லாம் எந்த ஊர் மேக்கு? எதாவது பாரின் ஃப்ரீடா?" எனக் கேட்டான் எள்ளலாக. அவனுடன் வந்த ஒவ்வொருத்தனின் முகமும் கலவரத்தைப் பூசிக்கொண்டது

விக்ரம் தாமுவை பார்த்து சிரிக்க, "என்னோட தளபதிடா" என்றான் தாமு பெருமையாக..

அதற்குள் அந்த 'பார்'ரின் மேலாளர் அங்கே வர, அந்த கூட்டத்தைக் கலைக்க, அவர்களிடம் மன்னிப்பு வேண்ட என சில நிமிடங்கள் கரைய, அங்கிருந்து கிளம்பினர் மூவரும்.

"ஆல் தி பெஸ்ட்டா மாமா" என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு தாமுவிடம் ஒரு முறைப்பைப் பதிலாகப் பெற்றுக்கொண்டு விக்ரம் அப்படியே விடைபெற, அடக்கப்பட்ட சிரிப்புடன் வாகனத்தை இயக்கினான் செல்வம்.

"ரோடை பார்த்து வண்டிய ஓட்டு... இப்படி லூசு மாதிரி இளிச்சிட்டே மீடியன்ல வுட்ற போற" என அவனை கடுப்படித்தான் தாமு.

அவன் கவலை அவனுக்குத்தானே தெரியும். இன்னும் சற்று நேரத்தில் வானத்திலிருந்து வந்து குதிக்கப்போகிறாள் அவனுடைய இராட்சசி. அதுவும் மிக நெடிய ஏழு வருடங்களுக்குப் பிறகு அவன் அவளைக் காணப் போகிறான்.

எப்படி இருப்பாளோ!? எப்படி நடந்துகொள்வாளோ? அவளை பார்த்ததும் அவன் எப்படி நடந்துகொள்வானோ? ஆயிரம் கேள்விகள் அவனுக்குள்.

விமானநிலையத்தை நெருங்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக மாறிப்போனது அவனுக்கு. விமானம் தரையிறங்கியதற்கான அறிவிப்பு வரும் வரை, அதில் வந்த பயணிகளெல்லாம் வெளியில் வந்த பிறகும் கூட அதுவேதான் தொடர்ந்தது.

எல்லோரும் வந்த பிறகும் நிலமங்கையைத் தேடி அவனுடைய கண்கள் சுழன்ற வண்ணம் இருந்தன. "இந்த பிளைட்ல வரதாத்தானே கேசவன் சொன்னான்?" எனக் கேட்டான் அவன் செல்வத்திடம் சந்தேகமாக. "ண்ணா... இந்த பிளைட் தாண்ணா" என்றான் செல்வமும்.

ஆனால் தாமோதரன் அவளைப் பார்க்கவில்லையே தவிர மங்கை அவனைப் பார்த்துவிட்டாள்.

அவளை அழைத்துச் செல்ல விமானநிலையத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தாள். இருந்தாலும் விடமாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும் இவனை... இந்த தாமோதரனை இங்கே எதிர்பார்க்கவில்லை அவள்.

கொஞ்சம்... கொஞ்சமில்லை... கொஞ்சம் அதிகமாகவே படபடப்பாகிப்போனது அவளுக்கு. அப்படியே அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள் அவள். ஆனால் அவள் பார்வை மட்டும் தாமுவின்மீதே இருக்க, அந்த பார்வை துளைத்ததால் அனிச்சையாக அவள் இருந்த பக்கம் திரும்பினான் தாமோதரன்.

முதலில் அவளை அடையாளம் காணக்கூட இயலவில்லை அவனால். ஒல்லியாக, கொஞ்சம் உயரமாக, ஜீன்ஸ் மற்றும் ஒரு டிஷர்ட் அணிந்து அதன் மேல் ஒரு ஜெர்கின் அணிந்து, மீசை முளைக்காத ஒரு பதின்ம வயது சிறுவன் என்றே நினைத்துவிட்டான் அவளை. முழுவதுமாக ஒரு 'டாம் பாய்' தோற்றத்திலிருந்தாள் அவள்.

அவளுடைய அந்த கண்கள்... அந்த கண்கள் மட்டும்தான் அவளை அவனுக்குக் காண்பித்துக் கொடுத்தது.

அடுத்த நொடி கொதிநிலைக்குப் போனான் தாமு. தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள சில நிமிடங்கள் தேவை பட்டது அவனுக்கு.

அவளுடைய அந்த தோற்றம், அதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள இயலவில்லை அவனால்.

'அவ எப்படி திரும்ப வந்தாலும் அவளை அப்படியே அக்சப்ட் பண்ணிக்கனும்னு நினைச்சிருக்க... இதுக்கெல்லாம் டென்சன் ஆகாத... எப்படி இருந்தாலும் அவ உன்னோட நிலமங்கைதான்' எனக் கண்களை மூடி தனக்கு தானே சொல்லிக்கொண்டு ஓரளவிற்கு அவளை எதிர்கொள்ளத் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டான் தாமோதரன்.

பின் அவளை நோக்கி அவன் சில எட்டுகளை எடுத்து வைக்க, அவளும் அவனை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தாள்.

'நீ எப்படி இருக்க? அம்மா அப்பா எப்படி இருகாங்க?' போன்ற பரஸ்பர நல விசாரிப்புகள் இல்லை, 'என்னை பிக் அப் பண்ண நீ ஏன் வந்த?' என்ற கேள்வி இல்லை. 'நீ என் இப்படி மாறிப்போயிருக்க?' என்ற கோபமான குற்றச்சாட்டுகள் இல்லை. ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

"கிளம்பலாம்... ஹாண்ட் லக்கேஜ் மட்டும்தான்" என அவள் நேரடியாகச் சொல்லிவிட, உடனே நிலமங்கையை அழைத்துக்கொண்டு கிளம்பினான் தாமோதரன்.

பேச எதுவுமில்லை என்பதுபோல அவள் இருக்க, அவளுடன் பேசவே பிடிக்கவில்லை தாமோதரனுக்கு.

செல்வம் காருடன் காத்திருக்க, "செல்வம் நீ டாக்சி பிடிச்சு வந்துடு... நான் ட்ரைவ் பண்ணிக்கறேன்" என்றான் தாமோதரன். தப்பித்தவறி வார்த்தைகள் எதாவது தடிக்க நேர்ந்தால் அவர்களுக்கு இடையில் யாரும் வேண்டாம் என்பது அவனது எண்ணமாக இருக்க, மறுக்க இயலாமல் செல்வம் இறங்கிக்கொண்டான்.

தாமு வாகனத்தைக் கிளப்பவும், அவனுக்கு அருகிலேயே வந்து உட்கார்ந்தவள் இருக்கையில் சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள் மங்கை.

சலனமற்று நிர்மலமாக இருந்த அவளுடைய முகத்தையே அசைவற்று பார்த்திருந்தான் அவன்.

பளிங்கு போன்ற நெற்றி, அவள் வழக்கமாக வைக்கும் சிறு பொட்டு கூட இல்லாமல் வெறுமையாக இருக்க, காதில் மட்டும் போனால் போகிறது என்று சிறிய வெள்ளைக் கல் தோடு அணிந்திருந்தாள்.

மூக்கில் அது கூட இல்லை. மூக்குத்தி போட்டதன் அடையாளமாகச் சிறு புள்ளி மட்டுமே இருந்தது.

அதைப் பார்த்ததும் அப்படி ஒரு கோபம் உச்சிக்கு ஏற அவன் கையில் அந்த வாகனம் ஒரு குலுங்கு குலுங்கி பின் கிளம்பியது.

பட்டென நிமிர்ந்தவள் அதிர்வான ஒரு பார்வையை அவனிடம் வீசிவிட்டு மறுபடியும் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துகொண்டாள் நிலமங்கை.

இவ்வளவு காலம் கடந்தபின்னும் அவளுடைய மனதில் பட்ட காயம் கொஞ்சம் கூட ஆறவில்லை என்பதை அவளுடைய அந்த பார்வை அவனுக்கு உணர்த்த , அதை ஆற்றும் வழி என்ன என யோசித்தவாறு தன்னை மேலும் மேலும் நிதானப்படுத்திக்கொண்டு வாகனத்தைச் சீராக ஓட்ட தொடங்கினான் தாமோதரன்.

அந்த வாகனம் அவர்கள் ஊரான பொன்மருதத்தை நோக்கிக் கிளம்ப, அப்பொழுதே மணி அதிகாலை நான்கு.

*

பேச்சற்ற அமைதியான பயணத்தில் இரண்டு மணி நேரங்கள் கடந்திருந்தன.

கொஞ்சம் கூட மேடு பள்ளம் இல்லாத அந்த தார்ச் சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றது அந்த உயர்ரக மகிழ்வுந்து. வழி நெடுகிலும் பசுமையைப் போர்த்தி இருக்கும் விளை நிலங்கள்தான்.

அன்றைய பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புலர்ந்துகொண்டிருந்தது. பரந்துவிரிந்திருக்கும் அந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நடுவில், அவளுக்கே அவளுக்கென்று சொந்தமாக இருந்த அந்த இரண்டு ஏக்கர் நிலம் கண்ணில் தென்படவும், மனது படபடவென அடித்துக்கொண்டது நிலமங்கைக்கு.

அடுத்த நொடி கொஞ்சமும் யோசிக்காமல், "எக்ஸ்க்யூஸ் மீ... கொஞ்சம் காரை நிறுத்துங்க" என்றாள் மங்கை யாரோ முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு கால் டாக்சி டிரைவரிடம் சொல்லுவதை போல.

'தாமு... தாமு... என அழைத்து வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவளா இவள்?' என்ற எண்ணம்தான் உண்டானது தாமோதரனுக்கு.

அவளுடைய பார்வையிலும் பேச்சிலும் தெறித்த அலட்சியம், அவனுடைய தான் என்ற அகங்காரத்தைச் சீண்டிவிடுவதாகவே இருந்தது.

'பல வருடங்கள் கழித்து இந்த மண்ணை மிதிக்கிறாள். அவளிடம் உன் கோபத்தைக் காண்பித்து விடாதே' என அவனுடைய அறிவு அவனை எச்சரிக்கை செய்ய, அவள் சொன்ன இடத்தை தாண்டி சில மீட்டர்கள் தள்ளியே வாகனத்தை நிறுத்தினான் அவன்.

அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை போலும் அவள். வேகமாகக் கீழே இறங்கி, மீண்டும் பின்னோக்கி சென்றாள் மங்கை.

வரிசையாக வளர்ந்திருந்த பனை மரங்கள், காற்றின் வேகத்தில் சலசலக்க, அவை தலை அசைத்து அவளை வாவென அழைப்பது போலவே தோற்றம் அளித்தது.

அந்த மண்ணின் ஒவ்வொரு அடியும் அவளுக்கு அத்துப்படி. சரியாக அவளுக்குச் சொந்தமாக இருந்த அந்த நிலத்திற்குள் இறங்கி வரப்பின் மீது நடந்தவள் அவள் பார்வையைச் சுழலவிட, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என காட்சி அளித்தது அந்த பகுதி முழுவதும்.

இதைத்தானே பார்க்க முடியாமல் போய் விடுமோ என அஞ்சினாள் அவள்.

இது எப்படிச் சாத்தியப்பட்டது. எவ்வளவு யோசித்தும் விடை காண முடியவில்லை. கண்களை மூடி ஆழ்ந்து மூச்சை எடுத்து அந்த பசுமையின் மணத்தை நுரை ஈரல் முழுதும் நிறைத்துக்கொண்டாள் நிலமங்கை.

மூடிய கண்களுக்குள்ளும் கூட அந்த இடத்தின் பசுமை நிறைந்தே இருக்க, கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஒரு வேளை அந்த கண்ணீர் கூட பச்சை நிறமாக இருக்குமோ?

கண்களைத் துடைத்துக்கொண்டவள் ஈரமான தன் கைகளைப் பார்த்துக்கொண்டாள்.

கண்ணீர் கண்ணீராக மட்டுமே காட்சி அளிக்க, அப்படியே கீழே குனிந்து அந்த வரப்பின் ஓரத்தில் சந்தனம் போலக் குழைத்திருந்த சேற்றைச் சுட்டு விறல் நுனியில் தொட்டு எடுத்தவள் அதை அப்படியே நெற்றியில் இட்டுக்கொண்டாள்.

விழி அகலாமல் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான் அவளைப் பின்தொடர்ந்து வந்த தாமோதரன்.

அவளுடைய தோற்றத்திலிருந்த மாற்றத்தை, அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத அந்த மாற்றத்தை, ரசிக்கவே முடியாத அளவுக்கு அவளிடம் ஏற்பட்டிருந்த அந்த மாற்றத்தை, ஒரு சலிப்புடன்... ஒரு இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய அந்த பார்வை அவளை ஊசியாய் தைக்க, அப்படியே திரும்பி அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனை ஒரு பார்வை பார்த்தாள் அவள் கண்கள் முழுவதும் வெறுப்பை உமிழ்ந்து.

காரணம், மடிக்கணினியைத் தட்டிக்கொண்டு கார்ப்பரேட் கலாச்சாரத்திற்குப் பழக்கப்பட்டுப்போனவன் இல்லை... தமிழனின் நிறத்துடன் ,கண்ணை பறிக்கும் அளவுக்குத் தூய்மையான வெள்ளை கதர் வேட்டி வெள்ளை சட்டையில், அளவான உயரமும் அதற்கேற்ற உரமேறிய உடல்வாகுடனும், கையை கட்டியபடி கம்பீர தோற்றத்துடன் அங்கே நின்றுகொண்டிருப்பவன் இந்த நிலமங்கையைப் போற்றி பாதுகாக்கும் தாமோதரன் என்று இவளுக்குத்தான் தெரியாதே!

You cannot copy content