மோனிஷா நாவல்கள்
Nilamangai - 2
Quote from monisha on March 4, 2021, 12:07 PMநிலமங்கை-2
நினைவுகளில்...
நிலமங்கையின் பார்வை தாமோதரனின் மீது மோதி அவன் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடுத்த நொடி அனிச்சையாக தன் கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை மேலே உயர்த்தி அசைத்தான் தாமு.
அது, ஒரு அழகிய பறவை தன் சிறகுகளை விரித்துப் பறப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அவளுக்குக் கொடுக்க, அதற்குமேல் கொஞ்சம் கூட தாமதிக்காமல் சேற்றில் கால்கள் புதையப் புதைய அவனை நோக்கிக் கிட்டத்தட்ட அவள் ஓடவும்,
"ஏ... மங்க! அப்படி என்னடி அவசரம். சேத்துல விழுந்து வாற போற. கொஞ்சம் நிதானமா போ. சின்னவரு நேத்து ராவுக்குத்தான் வந்திருக்காரு போல. அதுக்குள்ள பட்ணம் வண்டிய புடிக்க ஒண்ணும் ஓடிப்போயிட மாட்டாரு" என கத்திக்கொண்டிருந்தார் பூங்காவனத்தம்மா கிழவி.
அதையெல்லாமல் காதில் வாங்காமல் வேக வேகமாக அவள் தாமுவை நோக்கி வரவும், அவளது அந்த வேகம் அவள் தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்த, கூடவே அத்தகைய பரவசம் அவளுக்குத் தன்னைப் பார்த்ததால் வந்ததா அல்லது தான் கையில் வைத்திருக்கும் புத்தகத்தைப் பார்த்துவிட்டதினால் வந்ததா என்ற குழப்பம் மேலோங்க பார்வையை விலக்காமல் அவளையே பார்த்திருந்தான் தாமு.
மூச்சு வாங்க அவனருகில் வந்து நின்றவள், "நான் கேட்ட புக்குதான தாமு… அத்தான். நீ அன்னைக்கு அப்படி சொல்லிட்டு போனத பார்த்து எங்க வாங்கிட்டு வர மாட்டியோன்னு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா?" என்றவாறே தன் பாவாடையில் கைகளைத் துடைத்துக்கொண்டு அந்த புத்தகத்தை அவனுடைய கையிலிருந்து பிடுங்காத குறையாக அவள் இழுக்கவும், அவளது மொத்த பரவசத்திற்குமான காரணம் அந்த புத்தகம்தான், புத்தகம் மட்டுமேதான், தான் இல்லை என்பது தெளிவாக விளங்கவே எரிச்சல்தான் உண்டானது அவனுக்கு.
புத்தகத்தை அழுத்தமாகப் பற்றியவன், "என்ன மங்க... ஒருத்தன் வேலை வெட்டியெல்லாத்தையும் விட்டுட்டு, உனக்காக... நீ கேட்ட புக்க வாங்கிட்டு வந்திருக்கேன். அத்தான் எப்படி இருக்கன்னு ஒரு வார்த்த கூட விசாரிக்கணும்னு தோணல இல்ல உனக்கு? ஸோ... நான் உனக்கு முக்கியமே இல்ல... அப்படித்தான?" என அவன் காரமாகக் கேட்க, தன் தவறை உணர்ந்து ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்தியவள், "சாரி தாமு! புக்க பார்த்ததும் எனக்கு இந்த உலகமே மறந்து போச்சு. பாரு... நட்டுட்டு இருந்த நாத்த கூட அப்படியே வுட்டுட்டு ஓடியாந்துட்டேன்" என்றவள், "சொல்லு தாமு நீ எப்படி இருக்க?" என அவள் கேட்க, அதுவும் கூட அவனுக்குத் திருப்தி அளிக்காமல் போக, "அது என்ன ஓரொண்ணு ஒண்ணுன்னு ஒண்ணாங்கிளாஸ் பசங்க வாய்ப்பாடு ஒப்பிக்கற மாதிரி இப்படி கேக்கற. ஒரு அக்கறை வேணாம்? அதோட விடாம... தலைல அடிக்கற மாதிரி பேரை வேற சொல்லி கூப்பிடற!" என அவளை கொஞ்சம் அதிகப்படியாகவே கடிந்துகொண்டான் அவன்.
உண்மையிலேயே அவளிடம் அவன் என்னதான் எதிர்பார்க்கிறான் என்பது கொஞ்சம் கூட புரியவில்லை அவளுக்கு. 'ஐயோ தாமு இப்படியெல்லாம் பேசாதே! இன்னைக்கு என்ன ஆச்சு இதுக்கு?' என அவள் விழிக்கவும், "பொழுது விடிய என்னை ரொம்பவே இரிட்டேட் பண்ணிட்ட. ஸோ இந்த புக்க இப்ப உங்கிட்ட குடுக்க மாட்டேன். வேணும்னா வீட்டுக்கு வந்து வாங்கிக்க" என்று சொல்லிவிட்டு, ஒரு நொடி கூட நிற்காமல் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டான் தாமு.
முகம் ஏமாற்றத்திலும் கோபத்திலும் சிவந்து போக, சுரத்தே இல்லாமல் மீண்டும் தன் வேலையைத் தொடரச் சென்றாள் நிலமங்கை.
கூட வேலை செய்துகொண்டிருந்த பெண்களுக்கு அங்கே என்ன நடந்தது என்பது புரியாமல் போனாலும் மங்கை முகத்தை தொங்கபோட்டவாறு வரவும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.
ஆனாலும் அவளிடம் விளக்கம் கேட்டு ஏதாவது ஒரு இடக்கான பதிலை அவளிடம் வாங்கி கட்டிக்கொள்ள அங்கே யாரும் தயாராக இல்லை. பூங்காவனத்தம்மாள் கூட சற்று தயங்கியே இருக்க, "ஏய் மங்க... என்னாடி ஆச்சு? மூஞ்சிய தூக்கி வெச்சிருக்க" என தேவி கிசுகிசுக்கவும், "ப்ச்... தாமு கிட்ட 'எந்நாடுடைய இயற்கையே போற்றி' புக்கு கேட்டிருந்தேன்னு சொல்லிட்டு இருந்தேன்ல. அந்த புக்கதான் வாங்கிட்டு வந்திருக்கு. நீ எப்படி இருக்க மகாராசான்னு நானு விசாரிக்கலியாம். அதான் அந்த புக்க கண்ணுல கூட காமிக்காம வீட்டுக்கு வந்து வாங்கிக்கோன்னு சொல்லி முறுக்கிக்கிட்டு போயிடுச்சு" என்றாள் மங்கை இறங்கிய குரலில்.
"அதான் வாங்கிட்டு வந்துட்டாரு இல்ல. அப்பறம் எதுக்கு இந்த பொலம்பல் பொலம்பற. பேசாம நடவு முடிஞ்சதும் நேர போய் அத வாங்கிட்டு உங்கூட்டுக்கு போ. உன் தாத்தா வக்கணையா சோறாக்கி வெச்சிருக்கும். நல்ல கொட்டிக்கிட்னு, கயித்து கட்டில வெப்பமரத்தடில இஸ்த்து போட்டுகினு படுத்துட்டே படிச்சி முடி" என தேவி அவள் அடுத்து செய்யவேண்டியதை பட்டியலிட, "அடி போடி இவளே. எங்கத்த வூட்டுக்கு போனா, தாமு வண்டி வண்டியா அட்வைஸ் மழையே பெய்யும்.
உனக்குத்தான் மேத்ஸ் பிசிக்ஸ் ரெண்டும் நல்லா வருது இல்ல. ஐ.ஐ.டீ எண்ட்ரன்ஸ்கு ப்ரிப்பேர் பண்ண புக்ஸ் வாங்கிட்டு வரேன். டைம் வேஸ்ட் பண்ணாம அதை படி. அத வுட்டுட்டு இந்த புக்கெல்லாம் கேக்கற. இனிமேல் வர காலகட்டத்துல நம்ம ஊர்ல வெவசாயம் செஞ்சு பொழைக்க முடியாது அப்படி இப்படினு, இந்த புக்க வாங்கிட்டு வர சொன்னதுக்கே என்னென்னலாம் சொல்லிச்சு தெரியுமா? அது அன்னைக்கு பேசிட்டுப்போன தினுச பார்த்தா, எங்க வாங்கிட்டே வராதோன்னு நினச்சேன்.
இனிமேல் அது கிட்ட எதுவுமே கேக்க கூடாது தேவி. எதானா வேணும்னா பேசாம நாம ரெண்டுபேரும் சென்னைக்கே போய் வாங்கினு வந்துடலாம்.
காலைல ஒம்பது மணி பஸ்ஸ புடிச்சா சாயங்காலம் வூட்டுக்கு வந்துடலாம் இல்ல" என மங்கை சொல்லிக்கொண்டிருக்க, 'சொல்ல மாட்ட நீயி... பஸ் ஏற மெயின் ரோட்ட புடிக்கவே ஊர தாண்டி அஞ்சு கிலோமீட்டர் போவணும்!. இதுல அப்படியே தனியா... அதுவும் சென்னைக்கு... போக உட்டுட்டாலும்... தோ இருக்கற காஞ்சீவரத்துக்கே உடாதுங்க. ஏதோ உள்ளூர்லயே பள்ளிக்கூடம் இருக்கவே காட்டியும் படிக்கவாவது விட்டுவெச்சிருக்குதுங்க. நீ வேற" என நொடித்துக்கொண்டவள், "நடக்கற கதையா பேசு மங்க' என முடித்தாள் தேவி.
அவள் சொல்வதும் உண்மைதான் என்பது விளங்க, பல வித சிந்தனைகள் மனதிற்குள்ளே சுழன்றடிக்கவும் வேலையில் மூழ்கிப்போனாள் மங்கை.
முந்தைய தலைமுறை வரை அவர்களது சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்திலுமே பெண் கல்வி என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாகக் கருதப்படவில்லை. பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடனேயே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். நிலமங்கையின் அம்மா ராஜேஸ்வரியும் கூட அதற்கு விதிவிலக்கில்லை. அவள் தனது சொந்த தாய்மாமனான வேலுமணியை மணக்கும் பொழுது அவளுடைய வயது வெறும் பதினாறு மட்டுமே.
திருமணம் முடிந்த அடுத்த வருடமே, உலக நியதிப்படி அவள் நிலமங்கையைப் பெற்றெடுத்தாள். அடுத்ததாகக் குறைப்பிரசவத்தில் மற்றொரு பெண் குழந்தையையபம் பெற்று அதையும் பறிகொடுத்து கூடவே அதிக உதிரப்போக்கு உண்டாகி ஜன்னி கண்டு ராஜேஸ்வரி இறந்த சமயம் மங்கைக்கு முழுதாக மூன்று வயது கூட நிரம்பியிருக்கவில்லை.
நிலமங்கையின் தாத்தா சந்தானமும் பாட்டி பூங்கொடியும், அந்த சின்னஞ்சிறு குழந்தையை வைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுது ஓய்ந்தார்கள்.
பூங்கொடிக்கோ மகளுடைய இழப்பையும் கடந்து, தன் ஒரே தம்பியின் வாழ்க்கையும் உலகமே அறியாத பேத்தியின் எதிர்காலமும் மட்டுமே கண்களுக்கு பெரியதாகத் தெரிந்தது.
ஆகவே அவர்களை எந்த குறையுமின்றி கவனித்துக் கொள்ளும் பொருட்டு, வேறு எதைப் பற்றியும் கொஞ்சம் கூட யோசனை செய்யாமல், மூத்த மகளின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்த கையுடன் தனது இளைய மகளான மகேஸ்வரியை வேலுமணிக்கு மறுமணம் செய்து வைத்தார் அவளுடைய படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி.
வீடு கணவன் மக்கள்... வருடத்திற்கு இரண்டு மூன்று புடவைகள்,விளைச்சல் கைகொடுக்கும் சமயத்தில் தங்கத்தாலான ஏதோ நகை, என சின்னஞ்சிறு வட்டத்திற்குள் மட்டுமே தங்கள் கனவுகளை அடைத்துவைத்திருக்கும் பூங்கொடிக்கும் ராஜேஸ்வரிக்கும் வேண்டுமானால் இது போன்ற வாழ்க்கை முறை நியாயமாகப் படலாம்.
திரைப்படத்தையும் தொலைக்காட்சி தொடர்களையும் பார்த்து, கல்லூரி படிப்பு, 'ஏசி' அறையில் பெரிய சம்பளத்துடன் வேலை, நகரத்து வாழ்க்கை குறைந்தபட்சம் 'பேண்ட்-சட்டை' அணிந்த நாகரிக தோற்றத்தில் கணவன் என வண்ண வண்ண கனவுகளை வளர்த்து அவற்றை மூளை முழுவதும் நிரப்பிவைத்திருக்கும் மகேஸ்வரி என்ற அந்த பதின்ம வயது பெண்ணிற்கு இதனால் கிடைத்ததெல்லாம் ஏமாற்றம்... ஏமாற்றம்... ஏமாற்றம் மட்டுமே.
அவளைப் பெற்றவர்களையும் தாண்டி, ஊர் வாய்க்கு வேறு பயந்து, தாய்மாமனுமான அக்காவின் கணவனையும், அவள் பெற்றுப்போட்ட ரத்தினத்தையும் வேண்டவே வேண்டாம் என்று மறுக்க இயலவில்லை அவளால்.
ஒரு வேளை தமக்கை இறந்துபோகாமலிருந்தால் அவள் கனவு கண்ட அத்தகைய வாழ்க்கை அவளுக்குக் கிடைத்திருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவள் மனதில் வேரூன்றிப்போயிருக்க, தமக்கையின் கணவனிடமும் அவள் பெற்ற குழந்தையிடமும், அவளால் எப்படி முழு மனதுடன் அக்கறை பாராட்ட இயலும்?
என்னதான் பிள்ளையைக் குறை இல்லாமல் கவனித்துக்கொண்டாலும் அவளுடைய ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் அந்த ஆற்றாமை வெளிப்படாமல் இருக்வே இருக்காது.
அன்னையையும் தமக்கையையும் கூடவே கணவனையும் திட்டிக்கொண்டே அந்த பிள்ளைக்கு செய்வாள். அல்லது செய்துகொண்டே திட்டி தீர்ப்பாள்.
நடுவிலிருந்து அவளுடைய கடுஞ்சொற்களுக்குத் தடுப்பணை போட்டுக்கொண்டே இருந்த பூங்கொடியும் நோய்வாய் பட்டு இறந்து போக, அவளுடைய மொத்த வடிகாலாகவும் ஆகிப்போனாள் நிலமங்கை.
இதற்கெல்லாம் நடுவில் பெண்ணொன்று ஆணொன்றுமாக அவளுக்கென்று இரண்டு பிள்ளைகள் வேறு பிறந்தன.
விவரம் புரிய ஆரம்பித்த பிறகு, அதுவும் சித்தி அவளைப் பெற்றவளைத் தினமும் குறை கூறிக்கொண்டிருக்க, தந்தையும் குற்ற உணர்ச்சியில் அவளை எதுவும் கேட்கும் நிலையில் இல்லாமல் போக, நிலமங்கையால் ராஜேஸ்வரியுடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்க இயலவில்லை.
அவளுக்குப் பன்னிரண்டு வயதாக இருக்கும்போது ஒரு நாள், அவர்கள் வீட்டிற்கு நேரே புறமாக இருக்கும் வீதியில் உள்ள அவளுடைய பாட்டன் வீட்டுக்கு வந்தவள் அவளுடைய வீடு என்று சொல்லப்படும் இடத்திற்குத் திரும்பிப் போக மறுத்துவிட்டாள்.
பெற்றவன் சொன்ன சொல்லிற்குக் கட்டுப்பட்டோ, மறுபடியும் ஊருக்கு அஞ்சியோ இல்லை உண்மையிலேயே தன் தவறை உணர்ந்தோ மகேஸ்வரி அங்கே வந்து, அவளை தங்களுடன் வருமாறு எவ்வளவு கெஞ்சிக் கேட்டுப் பார்த்தும் கொஞ்சம் கூட அசைந்துகொடுக்கவில்லை நிலமங்கை.
அதன்பின் அப்பா தாத்தா என இருவரின் கண்டிப்பும் கவனமும் அவள்மேல் இருந்தாலும் தன் வாழ்க்கை தன் கையில் என்ற மனநிலையிலேயே வளர்ந்தாள் மங்கை.
பள்ளிப்படிப்பு ஒருபக்கம் இருந்தாலும் சிறு வயது முதலே விவசாயத்தில் அதிக நாட்டம் உண்டு அவளுக்கு. தன்னை போன்றே தன் பேத்தியும் இருப்பதால், அப்படி ஒரு பெருமிதம் சந்தானத்துக்கு.
அந்த மண்ணை தன் உயிராக நேசிப்பவர் அவர். அதனால்தான் தன் பேத்திக்கு அப்படி ஒரு பெயரையே வைத்தார் அவர். மனைவி மகள் என இருவரையும் இழந்தபின்னரும் அவரை உயிர்ப்புடன் வைத்திருப்பது அவர் விவசாயம் செய்யும் அந்த பூமிதான்.
எனவே பாட்டன் பேத்தி இருவரையும் தன்னோடு பிணைத்துவைத்திருந்தது அந்த பூமி என்றால் அது மிகையில்லை.
அந்த நிலத்தையும் அதில் விளையும் பயிர்களையும் அவளைச் சுற்றி எங்கும் பசுமையைப் பூசி நிறைந்திருக்கும் மரம் செடி கொடிகளையும் தவிர இந்த உலகில் வேறு எதையும் மிக உயர்ந்ததாக எண்ணவில்லை நிலமங்கை.
ஒருவாராக அனைவரும் சேர்ந்து அந்த நாற்றுகள் முழுவதையும் நட்டு முடித்துத் தலைநிமிர மதியம் இரண்டாகியிருந்தது. 'எப்பொழுதடா முடியும்?' எனக் காத்திருந்தவள் அங்கே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றாள் நிலமங்கை.
*
தனது அறையில் உட்கார்ந்து, ஹெட்போனை காதில் மாட்டியவாறு தன் மடிக்கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான் தாமோதரன். அப்பொழுது தன் பின்புறமாக நிழலாடவும், அவன் இதழ்களில் மென் புன்னகை அரும்பியது, அங்கே வந்திருப்பது யார் என்று உணர்ந்ததால்.
"என்ன மங்க! உனக்கு உடனே அந்த புக் வேணும்... அதுக்குதான இவ்ளோ வேகமா அடிச்சு பிடிச்சு இங்க ஓடி வந்திருக்க?" எனக்கேட்டான் தாமோதரன், அவன் உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியுடன் திரும்பியவாறு.
"உட்கார்ந்த இடத்திலேயே ராட்டனத்துல சுத்திட்டு... கேக்கற பாரு கேள்வி" என நொடித்துக் கொண்டவள், "புத்தகத்துக்காக இல்லன்னா... வேற எதுக்காக வருவாங்களாம், அதுவும் இந்த நேரத்துல" என அவள் கடுப்புடன் கேட்க, "ஏன் உங்க அத்தை இருக்காங்க... அவங்கள பாக்க வரலாம். இல்ல மாமா இருக்காங்க... அவங்கள பார்க்க வரலாம். ஒரு சண்டைக்கார கிழவி இருக்கு... அதை பார்க்க வரலாம். எல்லாத்துக்கும் மேல இந்த அத்தான் இருக்கேன்... என்ன பாக்கவும் வராலாமில்ல" என அவன் கிண்டலாகக் கேட்கவும், "புதுசா வேலை கிடைச்சு வெளியூர்ல போயி உக்காந்துட்டு இருக்கற நீ இதை சொல்ல கூடாது. நீயி உன் அப்பன் ஆத்தாவ வந்து பார்த்துட்டு போறத விட அதிகமா அவங்கள வந்து பாக்கறவ நானு. அதே மாதிரி உன்ன வந்து பாக்கணும்னு எனக்கே தோணிச்சுன்னா நானே வருவேன். ஆனா இப்ப தோணல" என்றவள் ஒரு சலிப்புடன், "ஏன் தாமு இந்த தடவை இப்படி வித்தியாசமா நடந்துக்கிற. எனக்கு புரியவே இல்ல போ" என்று அவள் சொல்ல, அவள் மறுபடியும் பெயரிட்டு அழைத்ததால் கோபமாக முறைப்பது போல் ஒரு கள்ளச் சிரிப்புடன் அவன் அவளைப் பார்க்கவும்,
"இந்தா பாரு... இப்படி புதுசு புதுசா அத்தான் பொத்தான் இப்படியெல்லாம் கூப்புட சொன்னா அது எனக்கு வரவே மாட்டேங்குது. என்ன வுட்டுடு" என்று அவள் சிரித்துக்கொண்டே கெஞ்சலாகச் சொல்ல, "வரலன்னா அப்படியே விட்டுடுவியா? ஃபார் எக்ஸாம்பிள்... உனக்கு ஏதாவது ஒரு பார்முலா இல்லன்னா தியரம் வரலனா அப்படியே விட்டுடுவியா? மறுபடி மறுபடி உருப்போட்டு அத வர வெச்சுடுவ இல்ல. அது மாதிரி இதையும் பழகிக்க" என அவன் அசராமல் சொல்ல, "அதான் எதுக்குன்னு கேக்கறேன். காரணம் சொல்லு" என மங்கை முறுக்கிக் கொள்ள,
‘உன்னிடம் புதியதாக ஏற்பட்டிருக்கும் சிறு ஈர்ப்புதானடி காரணம் பெண்ணே!’ என அவளிடம் சொல்ல நா எழவில்லை தாமோதரனுக்கு. குறைந்தபட்சம் அவள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை, தானும் ஒரு உறுதியான முடிவுக்கு வரும் வரை எதையும் சொல்லக்கூடாது என்ற எண்ணத்திலிருந்தவன், "இப்போதைக்கு எந்தக் காரணத்தையும் நான் உங்கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல... உன்னோட வயசுல பெரியவந்தான நானு, மரியாதையோட கூப்பிடறதுல என்ன தப்பிருக்கு" என்று சொல்லிக்கொண்டே அந்த புத்தகத்தை தன் மடிக்கணினி பையிலிருந்து எடுத்தவன் அதை மேசை மீது வைக்க, "காரணத்தை என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு இந்த அத்தான் பொத்தான்னெல்லாம் கூப்பிடுறேன். அது வரைக்கும் நீ எனக்கு தாமுதான்" என அவள் சளைக்காமல் பதில் கொடுக்கவும் அதில் அவனுடைய வீம்பு அதிகமாகிப்போக, "நீ என்ன அத்தான்னு சொல்லி கூப்ட்டா... இந்த புக்க எடுத்துட்டு போ. இல்லன்னா இத நீ தொடக் கூட கூடாது" என அவன் கண்டிப்புடன் சொல்ல, அதில் உண்டான கோபத்தில் அவளுடைய முகம் சிவந்துபோய், "அப்படின்னா இந்த புக்கு எனக்கு வேணவே வேணாம் நீயே வச்சுக்க" என்று சொல்லிவிட்டு ஒரு நொடி கூட நிற்காமல் விறுவிறுவென அவள் அங்கிருந்து சென்றுவிட, "ஹே மங்க! இந்த புக்க வச்சிட்டு நான் என்ன செய்ய போறேன். சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். எடுத்துட்டு போடி" என சொல்லிக்கொண்டே அவன் அவளை பின் தொடர்ந்து வரவும் அதற்குள்ளாகவே வேகமாக மாடிப்படிகளிலிருந்து இறங்கிச் சென்றே இருந்தாள் நிலமங்கை.
அவன் மறுபடியும் தனது அறைக்குள் வர, சில நிமிடங்களில் அங்கே வந்த அவனுடைய அம்மா புஷ்பா, "ஏன்டா... இந்த மங்க பொண்ண என்னடா சொன்ன? அது ஏன் இப்படி கோச்சிட்டு போகுது" எனக் கவலையுடன் கேட்க, "அவ உடம்பெல்லாம் திமிறும்மா அதுதான்" என்றான் அவன் கிண்டலாக.
"பாவம்டா அந்த பொண்ணு... காலையிலிருந்து கழனி வேலை செஞ்சுட்டு நேரா இங்கதான் வந்திருக்கு போல. பசியோட வேற இருந்திருக்கும்" என அவர் மங்கைக்காக வருந்த, "எல்லாம் அவங்க தாத்தா... வீட்ல ஏதாவது சமைச்சு வச்சிருப்பாரு. இது நேரா அங்க போய் நல்லா ஒரு கட்டு கட்டும். நீ ஒண்ணும் அங்கலாய்க்காத" என்று சொன்னவனின் பார்வை மேசையிலிருந்த புத்தகத்தின் மீது பட்டது.
உடனே அனிச்சையாக அவன் அதை திறந்து,
'இந்த நூல்...
அறுத்த தானியத்தில் ஒரு பகுதியை நிலத்தில் விதைத்த
முதல் பெண்ணுக்கு...'
என அதன் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த வரிகளைப் படித்தவன், "ஓஹோ அதுதான்... இந்த புக்குக்காக இந்த மகாராணி உயிரையே விடுதா?! போகட்டும் எங்க போயிட போறா அவ. திரும்பவும் இந்த புக்கை வாங்க என்னை தேடி இங்கதான் வருவா" என இறுமாப்புடன் மனதில் எண்ணிக்கொண்டு அந்த புத்தகத்தை அப்படியே மூடி அங்கு இருந்த அலமாரியில் வைத்தான் தாமோதரன், இந்த ஒரு சிறிய புத்தகம் இந்த உலகத்தைப் பற்றிய அவனுடைய பார்வையே புரட்டிப்போடப் போவதை அறியாமலேயே.
நிதரிசனத்தில்...
வாகனம் அவர்கள் வீடுகளிருக்கும் வீதியில் நுழையவம், தூரத்திலிருந்தே கவனித்துவிட்டாள் மங்கை அவளுடைய அன்னை வாழ்ந்த வீடு திருமணக்கோலம் பூண்டிருந்ததை.
வாயிலில் வாழைமரம் கட்டி, முகப்பு வைக்கப்பட்ருக்க, , ஆதவனின் கிரணங்கள் பூமி முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டதால் ஒளி மங்கி தெரிந்தாலும் கூட, அதில் தொங்கிக்கொண்டிருந்த 'சீரியல்' விளக்குகள் தங்கள் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தன. கூடவே அதில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் பெருந்தன்மையுடன் அமைதி காத்தன.
அவளைக் கண்களால் அளந்தவாறே நிலமங்கையின் வீட்டின் வாயிலில் காரை நிறுத்தினான் தாமோதரன், அவளுடைய தாத்தா அங்கே இருப்பதினால் முதலில் அவள் அங்கே செல்லத்தான் விரும்புவாள் என்பதினால்.
"மா... தாமு அத்தானோட வண்டி வர சத்தம் கேக்குது. அக்கா வந்துடுச்சு போல" என்ற ஒரு இளம் பெண்ணின் குரலும் தொடர்ந்து வீட்டுக்குள் ஏற்பட்ட சலசலப்பும் அவளுடைய செவிகளைத் தீண்டவும், ஒரு ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவளை யாரோ திடீரென்று அடித்து எழுப்புவதுபோன்று அவளுடைய உடல் தூக்கிப்போட, அவனை நோக்கி, "தேங்க்ஸ்" என்கிற ஒற்றை வார்த்தையை உதிர்த்தவள், தன் கைப்பையை வசதியாக தோளில் மாட்டிக்கொண்டு, மகழ்ச்சியும் தயக்கமும் போட்டி போட வாகனத்திலிருந்து இறங்கி தீவிர யோசனையுடன் வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க, தன் தொண்டையை செருமிக்கொண்டவன், "இத பாரு மங்க... மதியம் வரைக்கும் உனக்கு டைம் தரேன். இங்க எவ்வளவு சீராடணுமோ சீராடிட்டு நேரா நம்ம வீட்டுக்குத்தான் நீ வரணும். இனிமே நீ அங்கதான் இருக்கப்போற ரைட். இனிமேலும் உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியதுங்கறத நெனப்புல வெச்சுக்க" என மிரட்டலாக ஆரம்பித்துத் தழுதழுக்கும் குரலில் அவன் முடிக்கவும், திரும்பிய மங்கை அவனை ஒரு உணர்வற்ற பார்வை பார்க்க, அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து அவளுடைய தங்கை, தம்பி சித்தி என ஒவ்வொரு தலையாகத் தெரியவும் 'காரை' அப்படியே 'ரிவர்ஸ்'இல் ஓட்டிவந்து அவன் வீட்டின் வாயிலில் நிறுத்தி இறங்கினான் தாமு. அதற்குள் வீட்டிற்குள் சென்றிருந்தாள் மங்கை.
அப்பொழுது அவசரமாக அவனை நோக்கி ஓடி வந்த செல்வம், "குடுங்கண்ணா... வண்டிய ஷெட்ல போட்டுட்றேன்" என்றவாறு அவன் கையிலிருந்த சாவியை வாங்கிக்கொண்டு காரை நோக்கிப் போக, "என்னடா தாமு! இம்மாம் வருஷம் கழிச்சு அந்த பொண்ணு இங்க வந்துருக்குது. நம்ம வூட்ட திரும்பி கூட பார்க்காம இப்புடி போவுதே. நல்ல வார்த்தையா பேசி... சமாதானப்படுத்தி அதை நேரா இங்கதான இட்னு வந்திருக்கணும் நீ" என வருத்தமும் ஏமாற்றமுமாகச் சொன்னார் புஷ்பா.
அவன் மனத்திலிருந்த ஏக்கமும் அதுதான் என்பதால் அவருக்குப் பதில் சொல்ல இயலாமல் அவன் விட்ட பெருமூச்சின் உஷ்ணத்தில், அவன் வீட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த வளைவில் மொத்தமாகப் படர்ந்திருக்கும் பச்சை பசேலென்ற கொடியும் அதில், சிவப்பு வெள்ளை பிங்க் என மூன்று நிறங்களும் கலந்தவாறு கொத்துக்குத்தாக பூத்துக் குலுங்கி கண்களை பறிக்கும், நிலமங்கைக்கு மிகவும் பிடித்தமான ரங்கூன் மல்லிகை மலர்களும் கூட அவனைப் பார்த்து பரிதாபமாக ஏக்கத்துடன் புன்னகைத்தன ‘உன் நிலமங்கையின் பார்வை எங்களையும்கூட தழுவவில்லை’ என்பது போல!
நிலமங்கை-2