You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-3

Oodal-3

Quote

3

அந்த ஒரு விநாடி நேர பார்வை மட்டும்தான். அதற்குப் பிறகு அவனை மீண்டும் நேர்கொண்டுப் பார்க்கும் துணிவு எனக்கில்லை.

என் வாழ்க்கையில் நான் திரும்பவும்புரட்டி பார்க்கவே விரும்பாத என் கடந்த காலம்…

இப்படித் திடீரென்று ஒரு நாள் என் கண் முன்னே வந்து நிற்கும் என்று நான் கற்பனைக் கூட செய்து பார்த்ததில்லை. உண்மையில் நான் அவனை அடியோடு மறந்துவிட்டிருந்தேன்.

என் நினைவுகள் தானாகப் பின்னோக்கி நகர, அதனை இழுத்து பிடித்து நிறுத்த முடியாமல் நான் தத்தளித்து கொண்டிருந்தேன். வீட்டு ஓனர் வேறு என் நிலைமை புரியாமல் என்னிடம் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர் பேசிய எதுவும் என் செவிகளை எட்டவேயில்லை. அவர் சற்று பேசாமல் நிறுத்திய அந்த சிறிய இடைவெளியில்,

“ஹ்ம்ம்… சரிங்க ப்பா… வேலை இருக்கு… நான் அப்புறம் வரேன்” என்று அவர்களை நிமிர்ந்துப் பார்க்காமல் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றேன். அந்த இடத்தைவிட்டு போனால் போதும் என்றிருந்தது எனக்கு.

மறுகணமே என் வீட்டினுள் நுழைந்து கதவை மூடிவிட்டேன். எதிர்பாராத அந்தப் பேரதிர்ச்சியின் காரணமாக என் தேகம் மொத்தமும் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்த்து வடிந்து சில்லிட்டது. படுக்கையில் சரிந்து குலுங்கி குலுங்கி அழுதேன்.

என் இதயத்துடிப்பின் சத்தம் என் செவிகளில் எதிரொலித்தது.

நான் படித்தக் கதைகளில்தான் இப்படியெல்லாம் நடக்கும். நிஜத்தில் கூடவா? ஒரு வேளை நிறைய கதைகள் படித்துப் படித்து என் மூளை அதுவாகவே இப்படியெல்லாம் கற்பனைச் செய்துக் கொள்கிறதோ?

சை! இப்போதுதானே அவனை நேரடியாக பார்த்துவிட்டு வந்தோம். அது அவனேதான். முன்பை விட அதிக முதிர்ச்சியோடும் கம்பீரத்தோடும் மாறிவிட்டான். அவனுக்கும் எனக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம் இருக்கும்.

அவனுக்கு இந்நேரம் திருமணம் கூட ஆகியிருக்கலாம்.

ஆனால் ஒரு வேளை அவனுக்கு திருமணமாகாமல் இருந்தால்? அப்படியொரு சூழலை யோசித்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

ஒருவேளை அவன் நான் இங்கே இருப்பது தெரிந்துதான் குடிவந்திருப்பானோ? என்னைப் பழி வாங்க வந்திருப்பானோ? கெளதமிடம் காதல் விஷயங்களைப் பற்றிச் சொல்லிவிடுவதாக மிரட்டுவானோ?

ஏன் என் மூளை இப்படி தாறுமாறாக சிந்திக்கிறது.

நான் யோசிப்பது போல் அல்லாமல் அவன் சாதாரணமாகவே குடிவந்தாலும் நிச்சயம் அவன் என் பக்கத்து வீட்டிலேயே இருப்பதை என்னால ஏற்க இயலாது. தப்பித் தவறி கூட அவனை நேர்கொண்டுப் பார்ப்பது என்னால் முடியாத காரியம்!

நினைக்கவே கூடாது என்று நான் தீர்க்கமாக எண்ணிய போதும் அந்த கசந்த போன நினைவுகள் மீண்டும் என் மனக்கூட்டில் ஊஞ்சலாடின.

“எங்க வீட்டில மாப்பிள்ளைப் பார்க்கிறாங்க”

“இப்ப நான் என்ன பண்றது அதுக்கு?” அவனுடைய அலட்சிய பதில் எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. சில நொடிகள் மௌனித்த பின் நான் மீண்டும் ஒரு தெளிவான முடிவோடு அவனிடம் பேசினேன்

“நீ வந்து எங்க வீட்டில பேசு… இல்லாட்டி போனா அப்புறம் ரொம்ப சிக்கலாயிடும்”

“உங்க வீட்டில வந்து பேசவா… என்னடி விளையாடுறியா? எனக்கு இன்னும் ஒரு சரியான வேலை கூட இல்ல… பேசுன்னா எப்படி வந்து பேசறதாம்”

“ப்ச்… அதெல்லாம் பரவாயில்லபா… முதல பேசு… வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு”

“லூசு மாதிரி பேசாதே… ஒரு வேலை கூட இல்லாம உங்க வீட்டில வந்து நான் நின்னா எனக்கு அங்க என்ன மரியாதை கிடைக்கும்… நான் வரமாட்டேன்”

“வரமாட்டேன்னு சொன்னா என்னடா அர்த்தம்?” அவன் சட்டையைக் கோபத்தில் பிடித்து உலுக்கி எடுத்தேன்.

“என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோ காயு! உங்க வீட்டில நான் பேசமாட்டேன்னு சொல்லவேயில்லை… வேலை கிடைக்கட்டும்தான் சொல்றேன்” இறங்கி வந்தாலும் அவன் பேச்சில் உறுதியில்லை.

“இப்படியே எத்தனை நாளைக்கு சொல்லிட்டு இருப்ப… நான்தான் என் ஆபீஸ்லையே உனக்கு ஒரு வேலைக்கு ரெக்கமென்ட் பண்னேன் இல்ல… நீதான் அது இதுன்னு ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழிச்சிட்ட”

“எனக்கு இந்த ரெகமென்டேஷன் எல்லாம் பிடிக்காதுன்னு உன்கிட்ட அப்பவே சொல்லியிருக்கேன்… என் தகுதிக்கும் என் திறமைக்கும் ஏத்த வேலை எனக்கு கூடிய சீக்கிரம் கிடைக்கும்”

“இப்படிதான் நீ ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்க… இதுவரைக்கும் ஒண்ணையும் உருப்பிடியா நீ செஞ்ச மாதிரி தெரியல”

“ஒ! அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை”

“உண்மையை சொல்லணும்னா ஆமா! இல்லை” என்றேன். நான் சொன்னப் பதிலை கேட்டு அவன் முகம் கோபத்தில் சிவந்தது.

“அப்படின்னா கிளம்புடி… உங்க அம்மா அப்பா பாக்கிற எவனாவது ஒரு இளிச்சவாயனைக் கட்டிக்க”

“என்னடா பேசுற?”

“எல்லாம் தெரியும்… கடைசியா நீ சுத்தி வளைச்சு அங்கதான் வருவன்னு”

“நான் அப்படி சொல்லவே இல்லையே”

“கடைசில நீ அதான்டி சொல்லுவ… உன்னை மாதிரி பொண்ணுங்களைப் பத்தி தெரியாதா எனக்கு”

அன்று பேசப் பேச எங்களுக்கு இடையிலான மனக்கசப்பு வளர்ந்துக் கொண்டே போனது. அதற்கு மேலாக நான் அவனிடம் பேசினாலும் அவன் என்னிடம் பேசினாலும் இருவருக்கும் இடையில் வாக்கு வாதங்களே மேலோங்கியது.

மெல்ல மெல்ல எங்கள் உறவிற்கு நாங்கள் பூசிவைத்த காதல் சாயம் வெளுத்துப் போனது. சீட்டுக்கட்டு கோபுரம் போல எங்கள் உறவு உறுதியின்றி சரிந்து போக, இருவருமே நாளடைவில் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ளவே இல்லை.

அவனுடைய ஆறடி உயரமும் கட்டுடலான தேகத்திற்கும் பின்னணியில் இப்படியான அலட்சிய போக்கும் சோம்பேறித்தனமும் ஒளிந்துக் கொண்டிருப்பதை முன்னமே கவனிக்காமல் போனது என் தவறுதான்.

கவிதை நடையான அவன் வார்த்தைகளும் அவனின் ஆண்மையான தோற்றம் மட்டுமே காதலுக்கு போதுமான தகுதிகள் என்று என்னை யோசிக்க வைத்தது எது என்று எனக்கு இப்போதும் புரியவில்லை.

அவன் காதலை நான் ஏற்றுக் கொண்ட மாத்திரத்தில் அவன் என்னிடம் நடந்துக் கொண்ட விதமும், அதன் பின் வருடங்கள் போக போக அவன் நடந்துக் கொண்ட முறைமையும் முற்றிலும் மாறிப்போனது.

அவன் குணநலன்களை முன்னமே நான் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால் அதெல்லாம் அத்தனை முக்கியமானதாக அப்போது எனக்குத் தோன்றவில்லை.

இந்த உலகத்தில் காதல் ஒன்றே புனிதமானது. உயர்வானது. மகத்தானது என்ற மாயையை நம்பி சுயமாக சிந்திக்கும் திறனை நான் இழந்திருந்த காலகட்டம் அது. அவன் உருகி உருகி பேசிய காதல் வசனத்தில் நான் அப்படியே கரைந்துருகி போனேன். அப்போதே நான் கொஞ்சம் சுதாரித்திருந்தால் எனக்கு இந்த மாதிரியான இக்கட்டான ஒரு சூழ்நிலை உருவாகியிருக்காது.

ரொம்பவும் தாமதமாகவே இப்படியான எண்ணங்கள் வந்து சேருகிறது. இதைதான் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பார்கள் போலும்.

அவனுடைய பழக்கத்தினால் எனக்கு ஏற்பட்ட காயங்களே பெரிதாக இருந்தே ஒழிய அவன் பிரிவோ விலகலோ என்னை அதிகமாகப் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படியாக யோசித்து யோசித்து சோர்ந்து போன என் மூளையும் அழுது அழுது அயர்ந்து போன என் விழிகளும் எப்போது உறக்க நிலையை எய்தின என்பது எனக்கே தெரியாது.

ஆனால் அந்த உறக்கத்திலும் கூட எனக்கு நிம்மதி கிட்டவில்லை. என் ஆழ்மனதிற்குள் அவனின் பழைய சிந்தனைகள் அலைபுறதலை என்னால் தடுக்க முடியாமல் என் தேகம் மொத்தமும் ஏதோ கட்டிற்குள் சிக்குண்டது போன்ற உணர்வு.

தூரத்தில் எங்கோ அழைப்பு மணி சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தது எழுந்து கொள்ள வேண்டுமென்று என் மூளை செய்யும் எச்சரிக்கைக்கு என் உடல் கட்டுப்பட மறுத்தது.

மேலும் மேலும் அழைப்பு மணி சத்தம் நிற்காமல் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த சத்தத்தால் என்னை ஏதோ ஒரு உணர்வு உந்தி தள்ளி எழுப்பிவிடவும் பதறித் துடித்து எழுந்தமர்ந்தேன். விளக்குகளைக் கூட அணைக்காமலே தூங்கிவிட்டேன். அதையெல்லாம் பார்க்கும் மனநிலையிலா நான் இருந்தேன்.

யோசித்துக் கொண்டே நான் கடிகாரத்தைப் பார்க்க, அழைப்பு மணி சத்தம் மீண்டும் ஒலித்த மாத்திரத்தில்  அச்சத்தில் குலுங்கியது என் தேகம்.

மணி இரவு ஒன்று. அவர் காலையில் தானே வருகிறேன் என்று சொன்னார். அப்போது இது யார்? கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு படுக்கையறையிலிருந்து வாயில் கதவை நோக்கி நடந்தேன்.

அழைப்பு மணி சத்தம் நின்று போக கதவிலிருந்த துவாரம் வழியே வெளியே பார்த்தேன். அதில் ஒன்றுமே தெரியவில்லை.

கதவின் மீது சாய்ந்தபடி அச்சம் மேலிட, “யாரு?” என்று நான் பதட்டத்தோடு கேட்கவும்,

“காயு நான்தான்… கதவை திற” என்ற குரல் என் உயிரை மீண்டும் மீட்டெடுத்த உணர்வை தந்தது.

வேகமாக கதவைத் திறந்தேன். அவர்தான்.

அயர்ந்துக் களைத்து போய் நின்றிருந்தார். உள்ளே வந்து அவர் கதவைப் படாரென்று மூடிய வேகத்திலேயே அவர் எந்தளவு கோபத்திலிருக்கிறார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

“அவ்வளவு நேரம் நான் திரும்ப திரும்ப ஃபோன் அடிக்கிறேன்… நீ ஏன் எடுக்கல?” கேட்டுக் கொண்டே அவர் என்னைக் கடந்து சென்றார்.

ஃபோன் எப்போது அடித்தது என்று கூட எனக்கு தெரியாதே. நான் அதை சொல்ல வருவதற்குள் என்னைப் பேசவே விடாமல் அவர் பாட்டுக்குப் பொறிந்து தள்ள ஆரம்பித்தார்.

“நீ அந்தக் கோபத்தை மனசுல வைச்சிக்கிட்டுதான்  இவ்வளவு நேரமா கதவைத் திறக்காம என்னை வெளியே நிற்க வைச்சு பழிவாங்கிட்ட இல்ல… சை! உனக்காக போய் அவசரம் அவசரமா வேலையை முடிச்சிட்டு ஓடி வந்தேன் பாரு… என்னைச் சொல்லணும்டி” என்று வெறுப்போடு என்னைப் பார்த்து சொல்லிவிட்டு கெளதம் உள்ளே சென்றுவிட, எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ரொம்ப நேரமாக நான் கதவைத் திறக்காதக் காரணத்தால் உண்டான கோபம். அவரிடம் எப்படி என் நிலைமையை விளக்குவதென்றே புரியவில்லை. அவர் மீதிருந்த கோபம் எதுவுமே இப்போது எனக்கு இல்லைதான்.

இன்னும் கேட்டால் ரொம்ப நாட்கள் கழித்து அவனை சந்தித்த காரணத்தால் எனக்குள் உண்டான குற்றவுணர்வே அவர் முன்னே நின்று என்னைப் பேச விடாமல் தடுத்தது.

இருந்தும் என் மனதைத் தேற்றிக் கொண்டு அறைக்குள் நுழைந்தேன், கெளதம் தலையுயர்த்தி மேலே பார்த்தபடி படுத்திருந்தார். அருகில் சென்று,

“நான் ஒன்னும் வேணும்டே கதவை திறக்காம இல்ல… நான் நல்லா தூங்கிட்டேன் அதான்” என்று என் பக்கத்து நியாயத்தைத் தெரிவித்தேன்.

“யாரு நீ தூங்கிட்ட… ராத்திரியெல்லாம் ஏதாச்சும் கதை புக் வைச்சு படிச்சிக்கிட்டே இருப்ப… இன்னைக்கு மட்டும் நீ தூங்கிட்டியாக்கும்… நான் இதை நம்பணும்”

“நம்புங்க… உண்மையிலேயே இன்னைக்கு நான் தூங்கிட்டேன்”

“ராத்திரி எத்தனை மணிக்கு கால் பண்ணாலும் ஒரே ரிங்ல ஃபோனை எடுப்ப… ஆனா இன்னைக்கு மட்டும் நீ தூங்கிட்ட அப்படிதானே” அவர் பார்வையில் துளியளவும் என் மீது நம்பிக்கையில்லை.

“ஆமா ங்க” என் குரலில் தவிப்பு.

“வேண்டாம் காயு… திரும்பத் திரும்ப பொய் சொல்லி என்னைக் கடுப்பேத்தாதே… சொல்லிட்டேன்”

“இல்லங்க… நான் பொய் சொல்லல”

“நீ பொய்தான்டி சொல்ற… அதான் உன் மூஞ்சியே காட்டிக் கொடுக்குதே”

அவரின் இந்த தீர்க்கமான குற்றசாட்டிற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.

அப்போது கெளதம் என் முகத்தை ஆழ்ந்துப் பார்த்து,

“நல்லா பாரு… உன் முகம் தூங்கின மாதிரியா தெரியுது… நல்லா தேம்பி தேம்பி அழுத மாதிரி தெரியுது” என்றார்.

அவரின் அந்த கணிப்பில் என் உள்ளம் பதறியது. அந்த விஷயத்திற்காக நான் அழவில்லையே. ஆனால் அதை நான் சொன்னாலும் பின் எதற்காக அழுதேன் என்ற கேள்வி வரும்.

“நான் உன்கிட்ட அன்னைக்கே சொல்லிட்டேன்… வேணும்டே நான் அப்படி சொல்லல… ஏதோ அன்னைக்கு இருந்த டென்ஷன்ல அப்படி சொல்லிட்டேன்னு… திரும்ப திரும்ப நீ அந்த விஷயத்தையே புடிச்சி தொங்கிட்டிருந்தா என்னடி அர்த்தம்?”

கெளதம் தன் ஆதங்கத்தையும் கோபத்தையும் நிறுத்தாமல் என்னிடம் கொட்டிக் கொண்டிருந்தார். எதுவும் பேச முடியாமல் நான் மௌனமாக இருந்தேன்.

“நீ இப்படியே செஞ்சிக்கிட்டு இருந்தன்னு வைய்யு… நான் அன்னைக்கு சொன்னதை உண்மையிலேயே செய்ய வேண்டி வந்திரும்” அவரின் அந்த வார்த்தை மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது எனக்கு.  அதிர்ச்சி ஒருபுறமும் ஆற்றாமை மறு புறமும் கண்ணீராக  பெருக,

“என்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு சொல்றீங்களா?” என்று கேட்டேன்.

“நானா சொல்லல… நீதான் என்னைத் திரும்ப திரும்ப அப்படி சொல்ல வைக்கிற காயத்ரி” என்றார். அவரின் அழுத்தமான என் பெயரின் உச்சரிப்பில் தெரிந்த எச்சரிக்கை என்னை மிரட்சிகுள்ளாக்கியது.

“இதுக்குதான் இதுக்குதான் நான் உங்ககிட்ட பேசாம இருந்தேன்” நான் வேதனையோடு சொல்ல, அவரோ தன் கோப நிலையிலிருந்து இறங்கி வர தயாராக இல்லை.

“பேசாதே போடி… நானும் உன்கிட்ட பேச போறதில்ல” என்றார். விக்கித்து போனேன்.

ரொம்பவும் அரிதாகவே அவருக்கு கோபம் வரும். அப்படி வந்தால் அவரை சமாதானம் செய்வது மிகவும் கடினமான காரியம்.

அதன் பின் கெளதம் என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் படுக்கையில் சரிந்து கண்களை இறுக மூடிக் கொண்டார்.

நான் அங்கே நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

இந்த ஐந்து வருட காலத்தில் இப்படியான சண்டைகள் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. ஆனால் இன்று நான் இருக்கும் மனநிலைமையில் இந்த சண்டை பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து என்னை மிரட்டியது.

எங்கள் இருவருக்கிடையில் சரி செய்யவே முடியாத பெரிய பிளவை உணடாக்கிவிடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்தது.

Uploaded files:
  • an.jpg
Priya, saru and 3 other users have reacted to this post.
PriyasaruShakthiMarli malkhanRathi
Quote

Nice moni

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from saru on January 22, 2020, 6:49 AM

Nice moni

thanks saru

Quote

Nice 👌😍

monisha has reacted to this post.
monisha
Quote

Super ma

 

You cannot copy content