You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-5

Oodal-5

Quote

5

நான் என் அம்மா வீட்டை வந்தடைந்து கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடந்திருக்கும். நடந்த எதைப்பற்றியும் விவாதம் செய்யும் மனநிலையில் நான் இல்லை.

தனியாக இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு என் அறைக்குள் புகுந்துவிட்டேன். நொடிக்கு ஒருமுறை என் கைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கெளதம் அழைத்திருப்பாரா என்று?!

ஆனால் இந்த ஒருமணி நேரத்தில் ஒருமுறை கூட அவர் என்னை அழைக்கவில்லை. எனக்கு அதுவே மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.

அப்போது வெளியே என் அம்மாவும் அப்பாவும் உரையாடிக் கொண்டிருப்பது என் செவிகளை எட்டியது.

“என்னடி பிரச்சனை? உன் பொண்ணு இப்படி திடுதிப்புன்னு சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்திருக்கா… மாப்பிள்ளை கூட எதாச்சும் சண்டையா?” என்று அப்பா கேட்க,

“அப்படிதான் இருக்கும்னு நினைக்கிறேன்” என்று அம்மா சந்தேகமாக இழுத்தார்.

“நீ உன் பொண்ணு கிட்ட எதுவும் கேட்கலயா?”

“வந்தவுடனே எப்படிங்க கேட்கிறது… முதல அவ சாப்பிடட்டும்… அப்புறம் மெதுவா கேட்கிறேன்”

“ம்ம்… ஒரு குழந்தைப் பிறந்துட்டா இந்த மாதிரி ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுக்கமாட்டாங்க” நீண்ட நெடிய பெருமூச்சோடு வெளிவந்த அப்பாவின் வார்த்தைகளுக்கு அம்மா கவலையோடு ‘உம்’ சொல்ல, எனக்கு அதற்கு மேலாக அவர்கள் உரையாடல்களைக் கேட்க விருப்பமில்லை.

என் காதுகளை இறுக மூடிக் கொண்டேன். குழந்தை இல்லை என்ற ஒரே ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு எத்தனைப் பேர் எத்தனை எத்தனை விதமாகத்தான் என்னைக் காயப்படுத்துவார்கள்.

எனக்கும் கௌதமிற்கும் இப்போது நடந்த பிரச்சனைக்கு மூலகாரணமும் கூட அதுதானே!

காதலென்ற பெயரால் என்னை நானே சில காலம் ஏமாற்றிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து முழுவதுமாக வெளியே வந்த பிறகும் திருமணம் என்ற பந்தத்தின் மீது ஏனோ எனக்கு நம்பிக்கை வரவில்லை. அதோடு முந்தைய அனுபவங்களின் மிச்சங்கள் எனக்குள் பயத்தைத் தோற்றுவித்தது.

இதனாலேயே என் பெற்றோர்கள் பார்த்த சம்பந்தங்கள் அனைத்தையும் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். ஆனால் கெளதம் விஷயத்தில் அப்படி எதுவும் செய்ய முடியாமல் போனதுதான் விதி.

அப்பாவிற்கு தெரிந்த சம்பந்தம். அதேநேரம் கெளதமிடம் சுட்டிக் காட்ட எனக்கு எந்தக் குற்றமும் குறையும் தெரியவில்லை. அதிக உயரமாக அல்லது கம்பீரமாக தெரியாவிட்டாலும் பார்க்க லட்சணமாக இருந்தார்.

அவர் வேலையும் படிப்புமே அவர் திறமையைப் பறைசாற்றியது. இத்தனையும் மீறி நான் அவரைத் தட்டி கழிக்க சொன்ன காரணங்கள் எதுவும் என் பெற்றோர்களிடம் எடுப்படவில்லை.

அவர்கள் எப்படியாவது கெளதமை எனக்கு மணமுடிப்பதில் ரொம்பவும் தீர்மானமாக இருந்தார்கள். கெளதம் வீட்டிலும் கூட.

அதற்குப் பிறகு என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. நிச்சயம் முடிந்ததும் காதலென்ற பெயரில் நான் என் அறையில் புதைத்து வைத்திருந்த வாழ்த்தட்டைகள் கடிதங்கள் எல்லாவற்றையும் எந்தவித தடயமுமின்றி அழித்துவிட்டேன்.

ஆனால் மனதில் தங்கியிருந்த குற்றவுணர்வை அத்தனை சுலபமாக என்னால் அழிக்க முடியவில்லையே. நான் கௌதமை ஏமாற்றுகிறேன் என்று என் மனது அவ்வப்போது என்னைக் குத்திக் காட்டிக் கொண்டேயிருந்தது.

இப்படி ஒரு மோசமான மனநிலையோடே எனக்கும் கௌதமிற்கும் திருமணம் நடந்ததேறியது.

நானும் கௌதமும் தனித்துவிடப்பட்ட அந்த முதலிரவு அறையில் சந்தோஷத்தையும் நாணத்தையும் சுமந்து செல்ல வேண்டிய நான் பயத்தையும் குற்றவுணர்வையும் சுமந்துக் கொண்டுச் சென்றேன்.

அதேநேரம் கௌதமிடம் என்னுடைய முந்தைய காதல் கதையை சொல்லி என் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. என்னவானாலும் இனி இதுதான் என் வாழ்க்கை என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

மனதார கெளதமிற்கு மனைவியாக முடியாவிட்டாலும் அவர் விருப்பத்திற்குத் தடையாகவும் இருக்க கூடாது என்று எண்ணிக் கொண்டுதான் உள்ளே நுழைந்தேன். ஆனால் நடந்தது முற்றிலும் வேறு.

கெளதமை என்னால் நேர் கொண்டுப் பார்க்க முடியவில்லை. அவர் என்னைக் கட்டாயப்படுத்தி அருகில் அமர்த்திய போதும் கூட, அவரை நான் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தது.

அந்த உறவுக்கும் அவருக்கும் நான் உண்மையாக இருப்பேனா என்று எண்ணித் தவிப்புற்றேன். எதுவும் பேசாமல் நான் மௌனமாக யோசனையில் ஆழ்ந்துவிட,

கெளதம் தன் எண்ணங்களையும் எதிர்ப்பார்ப்புகளையும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.

“நம்ம நிச்சயம் முடிஞ்சதும் நான் உன்கிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன்… ஆனா நீதான் என்கிட்ட சரியா பேசவே இல்ல” என்று அவர் குற்றச்சாட்டாக சொன்னாலும் அந்த வார்த்தைகளில் கோபம் இல்லை. ஏக்கமே தெரிந்தது.

“இல்ல… எனக்குக் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு” என்று அவர் முகம் பார்க்காமலே நான் சொல்ல,

“பரவாயில்ல காயு… அது கூட நல்லதுக்குதான்… மேரேஜ் அப்புறமா பேசிப் பழகுறது கூட சுவாரிசியமான விஷயம்தானே” என்று அவர் புரிந்துக்கொண்டுப் பேசியது என் மனதிற்கு இதமாக இருந்தது.

அவர் மெல்ல என் கரத்தை தன் கரத்தில் சேர்த்துக் கொண்டு மிருதுவாக வருட நான் சங்கடமாக உணர்ந்தேன்.

எனக்கு காதல் உணர்ச்சிகளைத் தாண்டி பய உணர்ச்சிகளே மேலிட்டது. கைகள் வியர்த்து சில்லிட்டிருந்தன. என் உடலெங்கும் பரவிய நடுக்கத்தை கெளதம் ஒருவாறு உணர்ந்துக் கொண்டு,

“ஏ… என்னாச்சு… பயமா இருக்கா?” என்றக் கேள்வியே எனக்குத் திக்கென்று இருந்தது.

“இல்ல அது வந்து” என்று நான் தடுமாற,

“ரீலேக்ஸ்… இதெல்லாம் இப்பவே நடக்கனும்னு எந்தக் கட்டாயமும் இல்ல… பொறுமையா இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டப் பிறகுப் பார்த்துக்கலாம்” என்று இயல்பாக பேசி என்னை மனதால் அணுகிய கெளதமை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

முதல் முதலாக அவர் விழிகளை நேர்கொண்டுப் பார்க்கச் செய்தது. அந்தப் பார்வையிலும் பேச்சிலும் பொய்யில்லை.

“தேங்க்ஸ்” என்று நான் சொல்ல,

“பார்றா இப்ப மட்டும் பேச்சு வருது” என்று அவர் சிரித்துக் கொண்டே கேட்க, நான் மீண்டும் தலையைக் கவிழ்ந்துக் கொண்டேன்.

“ம்ம்ம்… அப்படின்னா இப்போ என்ன பண்ணலாம்.. தூங்கலாமா… பேசலாமா?”

என் மனதிலிருந்து பயமும் தயக்கமும் விலகாமல் நான் எப்படி அவரிடம் பேசுவது. அதுவும் அவர் ஏதாவதுக் கேட்டு நான் பதில் சொல்ல வேண்டி நேர்ந்தால் ‘எதுக்கு வம்பு?’ என்று எண்ணிவிட்டு,

“டயர்டா இருக்கு… தூங்கலாமே” என்றேன்.

கௌதமின் முகம் வாடி போனது. “பேசலாம்னு சொல்லுவன்னு பார்த்தேன்… இட்ஸ் ஓகே… இன்னும் நம்ம  பேச லாங்பீரியட் இருக்கே! ம்ம்ம் பொறுமையாவே பேசுவோம்” என்று கெளதம் எனக்கும் சேர்த்து தலையணையை சரி செய்துப் படுத்துக் கொள்ள சொன்னார். அவர் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்க்க மனதிற்கு கஷ்டமாக இருந்தது. ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க,

“ஆமா… என்ன யோசிக்கிற… டிவி சீரியல்ல காட்டிற மாதிரி கீழே படுக்கணும்னு ஏதாச்சும் கண்டிஷன் போட போறியா?” என்று அவர் பொய்யான அச்சத்தோடு கேட்கவும் நான் கொல்லென்று சிரித்துவிட்டேன்.

“சேச்சே… அப்படி எல்லாம் இல்ல” என்று நான் சொல்லவுமே அவர் முகம் தெளிவு பெற்றது.

“நல்லவேளை… தப்பிச்சேன்” என்று இயல்பாக உரையாடிய கெளதம் என் மன இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தார்.

தூங்கலாம் என்று படுத்துக் கொண்டோமே ஒழிய இருவரும் அன்று விடிய விடிய பேசிக் கொண்டேயிருந்தோம்.

என் பயமெல்லாம் மெல்ல மெல்ல வடிந்து கெளதமின் பால் மதிப்பும் மரியாதையும் உண்டானது. அது வெகுவிரைவாக காதலாகவும் உருமாறியது.

தூரிக் கொண்டேயிருக்கும் மழை சாரல் போல மிகவும் இதமாக வருடியது கெளதமின் தூய்மையான காதல்.

கசந்து போன என் பழைய நினைவுகள் அனைத்தும் மெல்ல வடிந்து போக புத்தம் புதுப் பொலிவோடு என் வாழ்க்கை கெளதமுடன் அழகாக ஆரம்பித்தது.

முதல் வருடம் அன்பும் காதலும் பொங்கிப் பெருகிய எங்கள் திருமண வாழ்க்கையில் குழந்தை இல்லையென்ற யோசனை கூட எட்டிப் பார்க்கவில்லை அவ்வப்போது அபஸ்வரமாக எங்கள் சந்தோஷத்தை சிலர் குழந்தைப் பற்றி பேசி சஞ்சல்ப்படுத்துவது உண்டு.

அந்த சமயத்தில் இருவரும் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தோம். ஆதலால் அந்த விஷயம் எங்களை அந்தளவு பாதிக்கவில்லை. அதேநேரம் விரைவில் எங்களுக்கு குழந்தைப் பிறக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

இரண்டாவது வருட துவக்கத்தில் என் மாமியாரும் குழந்தைப் பற்றிய பேச்சுக்களை எடுக்கத் துவங்கினார். எனக்கு மாதவிடாய் வரும் நாட்களில் எல்லாம் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.

அவரின் திருப்திக்காக ஒரு குழந்தை பேறு மருத்துவமனையில் சோதனைகள் செய்துக் கொண்டோம். எல்லாமே நலம்தான் என்று தெரிந்தப் பிறகும் கூட அவருக்கு நிம்மதி ஏற்படவில்லை.

ஏதோ பரிகாரம் என்று சொல்லி கோயில் கோயிலாக அவர் சுற்றுவதோடு அல்லாமல் என்னையும் புதுப்புது பெயர்கள் சொல்லி தவறாமல் விளக்கேற்ற சொல்வார். இப்படியே கிழமைகள் தவறாமல் ஏதாவது விரதம் பூஜை என்ற அவரின் கோட்பாடுகள் எனக்குக் கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை. அதுவுமில்லாமல் நான் வேலைக்கு சென்றுக் கொண்டே அவர் சொல்லும் பூஜைகளை அனுஷ்டிப்பதும்  மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் என் மாமியாருக்கும் எனக்கும் அடிக்கடிக் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இறுதியாக கெளதமும் என் மாமனாரும் உள்ளே புகுந்து சமாதானம் செய்வர்.

என் மாமியாரின் கலகம் அதோடு நிற்கவில்லை. நான் வேலைக்கு செல்வதால்தான் எனக்கு கரு தங்கவில்லை என்ற ஒரு பெரிய புரளியைக் கிளப்பி இறுதியாக என் வேலையை விடும்படியும் செய்துவிட்டார்.

முக்கால்வாசி நேரம் அலுவலகத்தில் கழியும்போதே என் மாமியாருக்கும் எனக்கும் ஒத்து போகாது. முழு நேரம் வீட்டிலிருந்தால் இருவருக்கும் ஒத்து போகுமா?

கெளதம் வேறு வழியின்றி என்னைத் தனிகுடித்தனம் அழைத்து வந்தார்.

தனியாக வந்த பின் நிம்மதியாக இருக்கலாம் என்றால் அதுதான் இல்லை. எனக்கும் கௌதமிற்கும் இடையில் உண்டான தனிமை நெருக்கத்திற்கு பதிலாகப் பிணக்கத்தையே அதிகரித்தது.

குழந்தை இல்லையென்ற ஏக்கம் எங்களுக்குள்ளும் ஏக்கத்தை வளர்த்தது. வாழ்கையில் ஒருவிதமான சலிப்பும் வெறுமையும் உண்டானது.

அதோடு சுற்றதார்களின் இலவசமான அறிவுரைகள் உபயமாக மலட்டுத்தன்மைகளுக்கு சிகிச்சை தரும் மகப்பேறு மருத்துவமனைகளின் வாசலில் தவம் கிடந்தோம். நிறைய சோதனைகளுக்கும் புதுப்புது சிகிச்சைகளுக்கும் உட்படுத்தப்பட்டோம்.

குழந்தை பிறந்தால் போதுமென்ற எண்ணத்தில் அனைத்தையும் சகித்துக் கொண்டோம். குழந்தைப் பெற்று கொள்ள வேண்டுமென்ற ஆசையே மேலோங்கியிருந்தது. ஆனால் அந்த ஆசை நாளடைவில் பெரும் சுமையாக மாறியது.

வருடங்கள் கடந்தும் சிகிச்சைக்கும் பலனில்லை. இதில் எங்கள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்பது ஒரு புறமென்றால் இதனால் ஏற்படும் செலவுகளும் எங்களின் மன உளைச்சகளும் அதிகமானதே மிச்சம்.

செயற்கை கருவூட்டல் போன்றவற்றின் செலவைப் பற்றி அறிந்ததிலிருந்து கெளதம் வேலை வேலையென்று பணத்தின் பின்னோடு ஓட ஆரம்பித்தார். வயதோடு குழந்தைப் பெற வேண்டுமென்றக் கட்டாயமும் அப்படிப் பெற்றப் பிறகு அந்த குழந்தைக்கு தேவையானவற்றை செய்ய தன் உடலில் தெம்பில்லாமல் போய்விடுமோ என்ற பயம் அவரை வாட்டி வதைத்தது.

என்னால் அவர் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவரால்தான் என் வேதனையை இம்மியளவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

எனக்குள் செலுத்தப்பட்ட ஹார்மோன் ஊசிகள் ஏற்படுத்திய உடல் நிலை மாற்றங்களும் உணர்வுகளின் தூண்டுதல்களும் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

கெளதமோ என்னை மருத்துவமனை அழைத்து சென்று மருந்து வாங்கி தருவதோடு அவர் கடமை முடிந்ததென இருந்துவிடுவார். நான்தான் அவருக்கு அனைத்தையும் நினைவுப்படுத்த வேண்டும். அதுவே எனக்கு மிகவும் சங்கடமாகவும் மனஉளைச்சலாகவும் இருந்தது.

“மீட்டிங் முடிச்சு எப்போ வருவீங்க?”

“ஏன்?”

“என்ன ஏன்னு கேட்குறீங்க?”

“ப்ச்… என்னன்னு சொல்லு காயு?”

“நீங்க உங்க மீட்டிங்கையே பாருங்க… நான் போனை வைக்கிறேன்”

“இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற”

“பின்ன… டென்ஷன் ஆகாம”

“ஐயோ! இங்க மேனஜர்தான் என் உயிரை எடுக்குறான்னு… நீ வேற ஏன் காயு என்னைப் போட்டு படுத்துற?”

“டாக்டர் சொன்னதை மறந்துட்டீங்களா? ஒவுலேஷன் பீரியட்.. சொல்லித்தானே அனுப்பினேன்”

“ஸ்ஸ்ஸ்… சாரி சாரிடி”

நான் இப்படியே காத்திருந்து காத்திருந்து ஒய்ந்துபோயிருக்க அவர் வேலை முடிந்து அயர்ச்சியோடு வீடு திரும்பும்போது இருவருக்கும் உணர்வுகள் மொத்தமும் வடிந்து போயிருக்கும். சிகிச்சைத் தொடங்கிய பின் பெரும்பான்மையான சமயங்களில் இப்படிதான் எங்கள் தாம்பத்யம் இயந்திர கெதியில் நடந்தேறியது.

கடைசியாக ஆரோக்கியமான தாம்பத்யம் எங்களுக்கிடையில் எப்போது நடந்தது என்றே எனக்கு மறந்தே போனது.

அழகாக மலர்ந்த எங்கள் காதலும் தாம்பத்யமும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழுகி போவதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

குழந்தைக்காக என்று இயந்திர கெதியில் உறவு கொள்வதைவிட மிகவும் மோசமான விஷயம் எதுவுமே இல்லை. எங்கள் உறவுக்கிடையில் அதுவே பெரிய இடைவெளியை ஏற்படுத்திய உணர்வு!

அழகான எங்கள் திருமண பந்தத்தைப் பணயமாக வைத்து குழந்தைப் பெற்று கொள்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. அது கண்களை விற்று ஓவியம் வாங்குவது போல்தான். அதனால்தான் மருத்துவ சிகிச்சைகளுக்கு நான் மறுப்புத் தெரிவித்தது.

ஆனால் நான் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ கடைசியில் அதுவே நடந்துவிட்டது. இனி நானும் கெளதமும் சேர்ந்து வாழ முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

 

Uploaded files:
  • an.jpg
srinavee, Shakthi and 2 other users have reacted to this post.
srinaveeShakthiMarli malkhanRathi
Quote

Super na

You cannot copy content