You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 1

Quote

பருவமெய்தி…

ஜீவராசிகளிலேயே மனித குலம் மட்டும்தான் 'தன் மேலான பாதி'களை இவ்வளவு மோசமாக நடத்துகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். 

மற்ற மிருகங்களைப் பொறுத்தவரை பெண்தான் ஆணைவிடவும் உஷாராக இருக்கும். ஆண் புலியை விட பெண் புலி  சிறந்த வேட்டைக்காரி. ஆண் சிலந்தியைவிட பெண் சிலந்தி பெரியது. ஆண் பாம்பை விட பெண் பாம்பு அதிக விஷமானது. அவ்வளவு ஏன்? 

மழைக்காலம் வந்தாலே நம்மை எல்லாம் கடித்தே பாடாய் படுத்துகிறதே கொசு, அதில் கூட ஆண்கொசு அப்பிராணி, கடிக்காது. பெண் கொசுதான், மலேரியா கிருமிகளை மனிதர்களுக்கு விநியோகம் செய்கிறது!

இப்படியாக எல்லா உயிரினங்களிலும் பெண் இவ்வளவு உஷாராக இருந்தாலும் மனித வர்க்கத்தில் பெண் ஏன் ஆணை விட வீரியம் குறைந்தே காணப்படுகிறாள். 

உண்மையிலேயே வீரியம் குறைந்தவளா அல்லது காரணத்தோடுதான் அப்படி காணப்படுகிறாளா? 

-பெண்ணின் மறுப்பக்கம் புத்தகம் 

டாக்டர் ஷாலினி

 ****************************************************************

1

விசாலமான அந்தப் பின்கட்டு வாதநாராயணன், முருங்கை, வேப்பம், மூன்று தென்னைகள் என்று மரங்களால் நிறைத்திருக்க ஒரு ஓரமாய் குளியலறையும் கழிவறையும் தனித்தனியாக கட்டமைக்கப்பட்டிருந்தன. இடையில் பூட்டி வைக்கப்பட்ட பயன்படுத்தாத கிணறு ஒன்றும் அதனருகே துணித் துவைக்கும் கல்லும் இருந்தது.

நைட்டியுடன் குளியலறை விட்டு வெளியே வந்த நடுத்தர வயது பெண்ணவள், வெள்ளை துண்டால் தம்முடைய ஈரக்கூந்தலை இறுக கட்டியபடி அக்கல்லின் மீது அமர்ந்து கொண்டாள்.

திருத்தமான கலையான முகம். அவளது மூக்கிலிருந்த வைரக்கல் பதித்த மூக்குத்தி காலை சூரியனின் கதிரொளிப்பட்டு அந்த மாநிறத்தாள் மேனியில் மினுமினுத்த போதும் வலியால் அவள் முகம் துவண்டிருந்தது அப்பட்டமாக அவளின் விழிகளுனூடே பிரதிபலித்தன.

வயிற்றை அழுத்தி பிடித்து கொண்டவள் கண்களை இறுக மூடி அந்த வலியை சகித்துக் கொள்ள முற்பட்ட போதும் அது அவளால் இயலவில்லை.

வயிற்று வலியுடன் சேர்த்து வலது தொடையில் அப்படியொரு குடைச்சல். மாதந்திரமாக ஏற்படும் சுழற்சிதான் என்றாலும் வயது கூட கூட வலிகளும் கூடிவிடுகிறதோ அல்லது உடலுக்கு வலிகளைத் தாங்க கூடிய சக்தி குன்றிவிடுகிறதோ? அவளுக்கு தெரியவில்லை.

மனதாலும் உடலாலும் பலவீனமாக உணர்ந்தாள். அவளின் தைரியமும் வீரியமும் இந்த மூன்று நாட்களில் மட்டும் ஆட்டம் கண்டுவிடுகிறது. பெண்ணென்ற பச்சாதாப உணர்வு கழுத்தை இறுக்கி பிடித்து மூச்சு திணற வைக்கிறது. 

பெண்ணாக பிறந்துவிட்டாலே வலிகளுக்கு பழக்கப்பட்டுவிட வேண்டும் என்பது எழுதப்படாத நியதியோ!

தனக்கே இப்படி என்றால் ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக இயந்திரம் போல பிள்ளைகளைப் பெற்று கொண்ட தாய்மார்களுக்கு எப்படி வலிக்குமோ என்னவோ?   

என்ன செய்வது? அது அவர்களாக தேடி கொண்ட வலி(விதி). ஆனால் தனக்கோ இது தேவையற்ற அவஸ்த்தை.

வீட்டு அலமாரிகளில் அலங்காரத்திற்காக அடுக்கப்படும் பொம்மைகள் அளவுக்கு கூட அவளது கர்ப்பப்பை அவளுக்கு உபயோகப்படவில்லை எனும் போது எதற்கு இந்த வலிகளையும் வேதனைகளையும் தான் மாதந்தோறும் சகித்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் தவறாமல் அவளுக்குள் எழும் கேள்வி இது. இந்த கர்பப்பையை கழற்றி வைத்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் யோசித்திருக்கிறாள்.

எல்லாமே இந்த மாதவிடாய் காலத்தில் சூழ்ந்து கொள்ளும் எண்ணங்கள். பின் மறந்து போகும். மீண்டும் அடுத்த மாதம் இதே போல…

கண்களினோரம் கசிந்துவிட இருந்த கண்ணீர், “கனி” என்ற கனிவான அழைப்பை கேட்டு தானாக இமைக்குள் அடங்கியது.    

“என்ன கனி… என்னாச்சு?” கேட்டு கொண்டே அருகே வந்து மிதமாக அவள் தோளில் கை பதிக்க,

“ஒன்னுமில்ல அத்தை…  பீரியட்ஸ்தான்” என்றாள்.

“இப்பதானேடி வந்துச்சு”

“நானும் அப்படிதான் நினைச்சேன்… ஆனா ஒரு மாசம் ஆகிடுச்சு”

“ஆமான்டி… இன்னைக்கு பதினைஞ்சு இல்ல… நாள் ஓடுறதே தெரிய மாட்டேங்குது பாரேன்” என்றவர் அவள் முகத்தை உற்று பார்த்து,

“ரொம்ப வலிக்குதா?” என்று பரிவுடன் கேட்க, “ம்ம்ம்” என்பது போலத் தலையை மட்டும் அசைத்தாள். வேகமாக உள்ளே சென்றவர் வழமையாக அரைத்து வைத்திருந்த வெந்தயப் பொடியையும் வெதுவெதுப்பான நீரையும் அவளிடம் கொடுத்து,  

“இதை போட்டு தண்ணி குடி… சரியா போகும்” என, அவளும் அதனை வாயில் போட்டு அந்த நீரை அருந்தினாள். அவர் அதன் பின் அவள் தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றி ஈரக்கூந்தலை துவட்டி கொண்டே,

“இந்த வலியோட ஸ்கூலுக்கு போகணுமா? இன்னைக்கு பேசாம வீட்டுல இருந்திரேன் கனி” என்றவர் சொன்னதுதான் தாமதம்.

அவள் மறுப்பாக தலையசைத்து, “எக்ஸாம் நடக்குது… நான் போகாம இருக்க முடியாது” என்றபடி எழுந்து நின்று கொண்டு, “இப்ப கொஞ்சம் பரவாயில்ல… நான் கிளம்புறேன்” என்று பின்கதவு வழியாக உள்ளே சென்றுவிட்டாள்.  

“இருடி தலையாச்சும் துவட்டிட்டு போடி… முடில ஈரம் சொட்டுது”  அவர் அவள் பின்னே தொடர,

  “சின்ன முடிதானே… அதெல்லாம் தானா ஆறிடும் அத்தை” என்று அசட்டையாக சொல்லி விட்டு அவள் தயாராக தன்னறைக்கு சென்று கதவை மூடி கொண்டாள்.

ஓடு வேய்ந்திருந்த பழமையான கிராமத்து வீடாக இருந்த போதும் அழகாகவும் அறைகள் விசாலமாகவும் இருந்தன. ஆங்காங்கே அலங்காரமாக நின்ற தூண்கள். இடையில் உள்ள முற்றத்தில் சுற்றிலும் உள்ள பூந்தொட்டிகளில் ரோஜா மலர்களும் சாம்பந்திகளும் பல வண்ணங்களில் பூத்து குலுங்கின.

மேலும் தூண் வழியாக முற்றத்தின் கம்பியில் நித்திய மல்லி கொடி தவழ்ந்து ஏறியிருந்தது அவ்விடத்தை ஒரு பூந்தோட்டமாக்கியது.

அம்பிகா நேராக சமையலறைக்குள் நடந்தார். 

“ஒரு நாள் லீவு போட்டா என்னவாயிட போகுதாம்… அப்படி என்ன வலியோட போகணும்… இவ இல்லனா அந்த ஸ்கூலே நடக்காதா?” என்றவாறு புலம்பி கொண்டே ஒரு சிறிய டிபன் கேரியரில் கீழடுக்கில் சாதம், மேலடுக்கில் கத்திரிக்காய் முள்ளங்கி சாம்பாரை ஊற்றி மூடினார். பின் தனியாக ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வெண்டக்காய் வறுவலை வைத்து கட்டினார்.

பின்னர் கேஸ் அடுப்பை பற்ற வைத்து இரண்டு தோசைகளை வார்த்து எடுத்து கொண்டு வரவும்,

“அத்தை… நான் கிளம்புறேன்” என்று கனி அறையை விட்டு கிளம்பி வெளியே வரவும் சரியாக இருந்தது.

கருநீல நிற காட்டன் சேலையில் பூசினார் போன்ற அவளின் தேகம் இன்னும் சற்றே உப்பலாக தெரிந்தது. அவள் உயரத்திற்கு அதீத கம்பீரமாகவும் தெரிந்தது. அவளின் மாநிற முகத்தில் எந்த அலங்கரிப்பும் இல்லை. புருவத்தின் மத்தியில் ஏதோ தேவைக்கென்று ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டு ஒட்டப்பட்டிருந்தன.

ஈரக்கூந்தலை அவள் தளர்வாக பின்னி கொண்டு வந்து நின்றதை பார்த்ததும், “என்னடி இது… ஈர முடியை பின்னிட்டு வந்திருக்க… அப்புறம் தலை வலின்னு அவஸ்த்தைபடுவ” என்று கடுகடுத்தவர்,

“முதல இப்படி உட்காரு… சாப்பிடு” என்று அவளை இழுத்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து தட்டை அவள் கையில் திணிக்க,

 “உஹும்… என்னால இப்போ சாப்பிட முடியாது… வயிறு ஒரு மாதிரி இழுத்து பிடிச்சிட்டு வலிக்குது” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போது அவளின் தலை பின்னலை அவர் கழற்றிவிட,  

“ஐயோ! டைமாகுது அத்தை” என்றவள் படபடத்தாள்.  

“ஒரே ஒரு தோசையாச்சும் சாப்பிடு… இல்ல ஸ்கூலுக்கு போகாதே… லீவு போடு” என்றவர் அதட்டலாக கூற,

“அது முடியாது… நான் போயாகணும்” என்றவள் திட்டவட்டமாக கூறி எழுந்து கொள்ளும் போது அவள் கூந்தல் இழுக்கப்பட,

“ஆஅ வலிக்குது” என்று மீண்டும் அமர்ந்து கொண்டு,

“முடியை விடுங்க த்தை… போகணும்… லேட்டாகுது” என்று முகத்தை சுருக்கினாள்.

“அப்போ சாப்பிடு… ஒரே ஒரு தோசையாச்சும் சாப்பிட்டுதான் ஆகணும்” என்றவர் கண்டிப்புடன் சொல்ல வேறு வழியின்றி மெதுவாக அந்த தோசையை பிய்த்து எடுத்தாள்.

வாயில் வைக்காமல் அவள் தயங்கியபடி, “என்னால முடியல” என,

“கனி” என்றவர் குரலிருந்த கனிவு மறைந்து மிரட்டலாக ஒலிக்க சிரமப்பட்டு அதனை தொண்டையில் இறக்கினாள். முடியவில்லை.

வயிறு ஒரு மாதிரி சங்கடம் கொடுத்தது. அந்த ஒரு தோசையை முடிப்பதற்குள் அரை மணி நேரம் ஓடிவிட அம்பிகா அதற்குள் டேபிள் ஃபேனை எடுத்து வந்து போட்டு அவள் கூந்தலை பிரித்து ஈரம் போக துடைத்து அழகாக வாரி கட்டிவிட்டார்.

அவள் கை அலம்ப எழுந்து கொள்ளவும், “இப்படியே கை கழுவு” என்று தட்டிலேயே தண்ணீர் ஊற்ற கை அலம்பி கொண்டு எழுந்தவள்,

“லேட்டாயிடுச்சு நான் கிளம்பணும்” என,

“சாப்பாடு கட்டி வைச்சுட்டேன் டி…. எடுத்துட்டு போ” என்று பரபரப்பாக உள்ளே சென்று அந்த டிபன் கேரியரை கொடுக்க,

“கொஞ்சமா கட்டினீங்களா… இல்ல… சோத்தை போட்டு அழுத்தி ரொப்பி வைச்சு இருக்கீங்ளா?” என்றவள் முறைத்து பார்க்க,

“என்ன அழுத்தினாலும் அந்த டிபன் பாக்ஸ் சைஸுக்கு ஒரு கைப்பிடி சாதம்தான்டி இருக்கும்” என்றவர் சொல்லி கொண்டே அதனை பையில் வைத்து அவள் கையில் கொடுத்து,

“முழுசா சாப்பிட்டிருக்கணும்” என்றார். 

“முடிஞ்சாதான் சாப்பிடுவேன்… முடியலனா சாப்பிட மாட்டேன்” என்று சொல்லி கொண்டே வாசலில் நின்ற ஸ்கூட்டியில் பையை மாட்டிவிட்டு அவள் அமர,

“ஏய் ஏய்… கொஞ்சமாதான்டி வைச்சு இருக்கேன்… சாப்பிடாம வந்துடாதே” என்றவர் மேலும் இறங்கிய குரலில்,

“இந்த மாதிரி நேரத்துல சாப்பிட்டாதான்டி தெம்பு வரும்” என்றார்.

“சரி சாப்பிடுறேன்… நீங்களும் நேரத்தோடு சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க… அதை சுத்தம் பண்றேன்… இதை சுத்தம் பண்றேன்னு ஏதாவது வேலை பார்த்து உடம்பை அலட்டிக்காதீங்க” என்றபடி தன் ஸ்கூட்டியை கிளப்பினாள்.

வண்டியின் பக்க கண்ணாடியில் அவர் புன்னகையுடன் கையசைத்த காட்சி அவள் நினைவுகளில் அப்படியே பதிவாகியிருந்தது.

துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தபடி அந்த நினைவுகளை ஓட்டி பார்த்தவளின் விழிகள் கண்ணீரைச் சுரந்தன.

 இன்றும் அதே போல மாதவிடாய் வலி படுத்தி எடுக்க, அன்று போல் இன்றும் ஆறுதல் சொல்ல அத்தை உயிருடன் இல்லை.

ஈரக்கூந்தலை துவட்டிவிடவும் சமைத்து வைத்து அவளை சாப்பிட சொல்லி தொந்தரவு செய்யவும் அவர் இல்லை.

சில நிமிடங்கள் கழித்து ஒருவாறு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி முகத்தை அழுந்த துடைத்து கொண்டு எழுந்து உள்ளே சென்றாள்.

முற்றத்தின் அருகே வந்ததும் அவர் நெஞ்சை பிடித்து கொண்டு சாய்ந்ததுதான் நினைவுக்கு வந்தது.

“வாங்க அத்தை… ஹாஸ்பெட்டில் போலாம்” என்றவள் பதட்டத்துடன் அழைத்து செல்லும் போது கடைசியாக இந்த வீட்டு வாயிலை கடக்கையில்,

“எனக்கு ஏதாவது ஆகிட்டா நீ தனியா நின்னுடுவ கனி… உனக்குன்னு யாருமே இருக்க மாட்டாங்க” என்று வருந்திய அந்த நல்ல உள்ளம் மருத்துவமனை விட்டு வரும் போது வெறும் உடலாகத்தான் திரும்பியது.  

ஒரு வாரம் கடந்துவிட்டது.

ஒவ்வொரு தூணின் அருகிலும் அம்பிகா நின்று பேசிய ஏதோ ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து அவளை வாட்டி வதைத்தது.

வயிற்று வலியுடன் சமையலறைக்குள் நுழைந்து வெந்தயத்தை தேடினாள். அங்கிருந்த ஒவ்வொரு டப்பாக்களையும் திறந்து பார்த்து அயர்ந்து போய் நின்றாள்.

“காய்திரி மாமியார் வீட்டு சொந்த கார பையன் ஒருத்தன்… பார்க்கவும் நல்லா இருக்கான்… நீ சரின்னு சொன்னா”

“அத்தை என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்”

“ஏண்டி… இப்படி பிடிவாதம் பிடிக்கிற… வயசும் இளமையும் போயிட்டா திரும்பி வராது”

“அதான் ஏற்கனவே போயிடுச்சே… அப்புறம் என்ன?”

“முப்பத்து இரண்டு ஒன்னும் பெரிய வயசில்ல… இன்னுமும் உனக்கு வாழ்க்கை இருக்கு”

“கல்யாணம்தான் வாழ்க்கையா… நான் இப்போ நல்லா கௌரவமாதானே வாழ்ந்துட்டு இருக்கேன்”

“வேலை எல்லாம் சரிதான்… ஆனா உனக்குன்னு குடும்பம் குழந்தை வேண்டாமா?”

“வேண்டாம்” அவள் திடமாக மறுத்தாள்.

சட்டென்று அவர் அவள் கைகளை பற்றி கொண்டு கண்ணீருடன், “உன் வாழ்க்கையை நான்தான் நாசாமாக்கிட்டேன்னு ஏற்கனவே மனசால நொந்து நொந்து நான் செத்துக்கிட்டு இருக்கேன்… இதுல உன்னை நான் தனியா விட்டு செத்து கித்து போயிட்டா” என்று சொல்லி கொண்டே அழுதுவிட,

“அத்தை என்ன பேசுறீங்க” அவளும் பதறிவிட்டாள்.

“பயமா இருக்கு கனி… நானும் இல்லாம போயிட்டா… உனக்கு யார் ஆதரவு… அப்புறம் நீ ஒத்த பனமரமாட்டமா நின்னுடுவடி… அப்புறம் சத்தியமா சுடுகாட்டுல என் பிணம் வேவாது… உனக்கு செஞ்ச அநியாயதத்துக்கு நான் நல்ல வழிக்கே போய் சேர மாட்டேன்” என்றவர் அன்று ரொம்பவும் அதிகமாகவே கதறிவிட, அவள் மனம் உருகி போனது.

“சரி சரி… நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்… நீங்க அழாதீங்க… தண்ணி குடிங்க” என்றவள் தண்ணீரை எடுத்து கொடுத்து குடிக்க வைத்து அவரை அமைதியடையச் செய்தாள்.

இந்த வாக்குவாதம் எல்லாம் நிகழ்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக இருக்கும். இங்கே… இதே சமையலறையில்தான் நிகழ்ந்தது. 

இறுதி வரை வெந்தயம் கிடைக்கவில்லை. பாலைச் சூடு செய்து காபி போட்டு எடுத்து கொண்டு முற்றத்தில் வந்து அமர்ந்தாள்.

நித்திய மல்லிக் கொடியும் ரோஜாச் செடிகளும் வாடியிருந்தன. மாதவிடாய் நேரங்களில் செடிகள் அருகில் வர கூடாது… தண்ணீர் ஊற்ற கூடாது என்று அத்தை கண்டிப்பாக சொல்லி இருக்கிறார்.

இயலாமையுடன் அவற்றை பார்த்தாள். அவை எப்போதும் அழகாக சிரித்திருக்கும். இப்போது அவை எல்லாம் அழுது வடிவது போல தோன்றியது.

 அந்தச் செடிகள் எல்லாம் அம்பிகாவின் கைவண்ணம்தான். இது போன்ற விசாலமான வீட்டில் தன் ஆயுள் முடிவதற்குள் வாழ வேண்டுமென்பது அவரின் கனவு.

கன்னிகைக்கு அந்த ஊரிலுள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்ததும் அங்கே தங்க வாடகைக்கு  வீடு தேடும் போது இந்த வீட்டை பார்க்க நேர்ந்தது.

“வாடகை கம்மிதான்… ஆனா இந்த வீடு ரொம்ப பெருசா இருக்கு அத்தை… நம்ம இரண்டு பேருக்கு இவ்வளவு பெரிய வீடு எதுக்கு” என்றவள் கேட்டதும் அவர் முகம் துவண்டது.

“எனக்கு இப்படியொரு வீட்டுல வாழணும்னு ரொம்ப வருஷ ஆசை கனி” என்று அம்பிகா வருத்ததுடன் சொன்ன மறுநாளே அவள் அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் தந்துவிட்டாள். மனம் நெகிழ்ந்து அவள் கைகளை பற்றி அவர் கண்ணீர் வடித்ததை எண்ணி கொண்டே அந்த காபியை அருந்தினாள்.

அம்பிகா இந்த வீட்டை எப்படி பார்த்து பார்த்து பராமறித்தார் என்று இப்போது யோசித்தாலும் அவளுக்கு சிரிப்புதான் வரும். சின்னதாக ஒரு தூசி இருந்தால் கூட அதனை துடைத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்.

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து அடுக்கி வைப்பார்.  எதுவும் இடம் மாறவோ களையவோ கூடாது. அவ்வளவுதான். அவரின் மூளை சூடேறிவிடும்.

“எங்கடி… இந்த டேபிள் மேல போட்டிருந்த துணி”

“எந்த துணி அத்தை?”

“அழகா இருக்கட்டும்னு போட்டு வைச்சேன்”

“எனக்கு தெரியாது”

“உன் க்ளேஸ் பசங்க எடுத்தாங்களா?”

“அவங்க எதுக்கு இதெல்லாம் எடுக்க போறாங்க”

“நீ வேற… அவனுங்க இங்கே வரும் போதெல்லாம் ஏதாச்சும் தொலைஞ்சு போகுது… எப்போ வந்தாலும் எதையாச்சும் எடுத்துட்டு போயிடுறானுங்க”

“ஐயோ! உளராதீங்க அத்தை…  இந்த துணியை எடுத்துட்டு போய் அவங்க என்ன பன்ன போறாங்க”

“உனக்கு தெரியாது அவங்களை பத்தி… அவனுங்க வரட்டும்” என்று அவர் புலம்பி கொண்டிருக்கும் போதே அந்த துணி ஒரமாக தரையில் விழுந்து கிடந்தது.

“ஐயோ அத்தை இங்கே இருக்கு… அதுக்குள்ள சின்ன பசங்களை எல்லாம்” என்று கனி அதன் பின் அவரை உண்டு இல்லையென்று செய்துவிட்டாள். இப்படி ஒரு நாளைக்கு ஒரு சம்பவமாவது நடக்கும்.

கன்னிகையின் கண்களில் கண்ணீருடன் புன்னகையும் அரும்பியது.  அவள் தன் கைப்பேசி எடுத்து அவரின் புகைப்படம் ஒன்றை எடுத்து பார்த்தாள்.

முகமெல்லாம் மஞ்சள் பூசி நெற்றியின் நடுவே வட்டமாக குங்குமம் இட்டு கொண்டபடி மங்களகரமாக திகழ்ந்தார்.

 பெருத்த உடம்பாக இருந்தாலும் பம்பரம் போல அவர் சுழன்று சுழன்று வேலை செய்வதை பார்க்க அவளுக்கு வியப்பாக இருக்கும்.

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடம்பு. கடைசி வரை அதை அவரால் விட்டு கொடுக்க முடியவில்லை. ஆனால் இறுதி காலத்தில் அவர் பணத்திற்காக உழைக்கவில்லை. தன் மனதிருப்திக்காக உழைத்தார்.

அவரின் படத்தை பார்த்தபடி கன்னிகை பெருமூச்செறிந்தாள்.

அவள் தன் வாழ்வில் அதிகம் வெறுத்ததும் அவரைதான். இப்போது அதிகமாக நேசிப்பதும் அவரைதான். அவர்கள் இருவரின் உறவும் பிணைப்பும் சற்றே விசித்திரமானது.

shanbagavalli, Rathi and 2 other users have reacted to this post.
shanbagavalliRathiThani Sivaindra.karthikeyan
Quote

அழகான ஆரம்பம் சிஸ்😀

அம்பிகா அருமையான அத்தை கனிக்கு அவரின் இறப்பு ரெம்ப வருத்தமாய் இருந்தது😥

கனியின் வாழ்க்கையில் என்ன தான் நடந்து ...

Quote

நல்ல அழகான அழுத்தமான பதிவு.

Quote

Super ma 

You cannot copy content