You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 16

Quote

மனித ஆண்… மற்ற மிருக ஆண்களை போல சாதாரணமானவன் இல்லையே! பெரிய அறிவாளி ஆயிற்றே! அந்த புத்திசாலித்தனம்தான் அவனுக்கு ஒன்றை புரிய வைத்தது. இந்த பெண்கள் எல்லாம் கலவியல் தேர்வு செய்து, ஆண்களை தேர்ந்தெடுக்கும் வரை ஆண்களுக்கு நிம்மதியே இருக்க போவது இல்லை.

எந்த பெண்ணும் தன் கர்பப்பையை சும்மா கொடுக்க தயாராக இல்லை. அது அவள் சொத்து. தன் கர்பப்பையில் யார் பிள்ளைகளுக்கு இடம் என்று அவளே தீர்மானித்தாள்.

ஆக பிரச்சனை என்னவென்றால் பெண்களிடம் இரண்டு வளங்கள் இருந்தன.  ஒன்று ஆண்களுக்கு ரொம்ப அவசியமான அவளுடைய கர்பப்பை. இன்னொன்று, ஆண்களுக்கு எந்த பயனும் இல்லாத அவளுடைய அறிவுத்திறன். அறிவுதான் அவளை யார் சிறந்தவன்? என்று யோசிக்க வைத்தது. இந்தச் சிந்தனைகள்தான் ஆண்களுக்கு எல்லாம் உபத்திரம்.

அங்கேதான் ஆண்கள் கொஞ்சம் வில்லத்தனமாக யோசித்தார்கள். கொஞ்சம் இல்லை நிறையவே!

இந்த பெண்ணை கொஞ்சம் மாற்றியமைத்து, கர்பபையை மட்டும் வைத்து கொண்டு அறிவுத்திறனை அப்புறப்படுத்திவிட்டால்….

தொடரும்...

16

டனக்கு னக்கா டனக்கு னக்கா…

டன் டனக்கா…  

என்று மூச்சு காற்றுடன் மோதி மூளை நரம்புகளையும் கூட அடித்து எழுப்பும் தமிழனின் தொன்மையான இசைக்கருவியான பறையடி விடாமல் கேட்டு கொண்டிருந்தது கனி ஊரின் அந்த தெருவிற்குள் நுழையும் போது…

அவள் தன் காதில் வைத்திருந்த அலைப்பேசியின் வழியாக உரக்க பேசினாள்.

“அஆன்… தெருவுக்குள்ள வந்துட்டேன் மேடம்”

“அப்படியே நேரா வாம்மா… சாவு மேளம் அடிக்கிறாங்க இல்ல… அதுக்கு எதிர் வீடுதான்… ஒரு வயசான பாட்டி… தொண்ணூறு வயசு இருக்கும்… ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு இருந்துச்சு… இன்னைக்கு காலைலதான் பாவம்” என்றவரும் அந்த பறையடியை மீறி உரக்க பதிலளிக்க, கனிக்கு அவர் சொல்வது கயலின் பாட்டி என்று புரிந்தது.

“என்னம்மா… வந்திருவியா… இல்லனா என் வீட்டுகாரர அனுப்பட்டுமா?”

“நீங்க போனை வைங்க… இரண்டு நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்” என்று விட்டு அழைப்பை துண்டித்துவிட்டு முன்னே நடக்க, அந்த பறைச் சத்தம் அவளை நெருங்கி கொண்டிருந்தது.

நாடி நரம்புகெளெல்லாம் சிலிர்த்தெழுந்து ஆடத்தூண்டியது. செத்த பிணத்தை கூட எழுப்பி ஆட வைக்கும் உத்வேகம் பறைக்கு உண்டு. அதனால்தான் அறிவியல் அறிவு இல்லாத காலகட்டத்தில் செத்துவிட்டானா என்று சோதிப்பதற்காக பறையடிக்க ஆரம்பித்தவர்கள் அதையே ஒரு வழக்கமாக கொண்டுவிட்டார்கள்.

பறையிலடிக்கும் ஒவ்வொரு அடியும் அவளின் சுடுகாட்டு வாழ்க்கையை அப்பட்டமாக முன்னே கொண்டு வந்து முகத்திலறைந்தன. தனக்கும் சுடுகாட்டுக்குமான பந்தத்தை அறுக்கவே முடியாது போல என்று எண்ணி கொண்டவளுக்கு ஊருக்குள் நுழையும் போதேவா என்று சலிப்பாக இருந்தது.

கனி நெருங்க நெருங்க அவள் இதயம் ஒரு மாதிரி படபடத்து கொண்டது. அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் சமீபமாக அவர் வெட்டியான் வேலை பார்ப்பதில்லை என்று கேள்விபட்டாள். ஆனால் தனக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் யாராவது இங்கே நிச்சயமாக இருப்பார்கள். அதுவும் ஒரு கூட்டமாக நிறைய பேர் வாசித்து கொண்டிருந்தார்கள்.

அந்த சூழலில் யாரும் தன்னை அடையாளம் கண்டுகொள்வதை கனி விரும்பவில்லை. அதனால் யாரையும் திரும்பி பார்க்காமல் அவர்கள் யார் கண்களிலும் படாமல் சென்றுவிட வேண்டுமென்று அவசர அவசரமாக அடிகளை எட்ட வைத்து விரைவாக நடந்து வீட்டிற்குள் நுழைய போகும் போது, “கனி… நீ எங்க இங்க?” என்றபடி கயல் வந்து நின்றாள்.

‘நம்ம டென்ஷன் புரியாம இவ வேற’ என்று கடுப்பானாலும் கயலிடம் திரும்பி, “நான் இந்த வீட்டுலதான் இருக்க போறேன்… உன்கிட்ட அப்புறம் பேசுறேன்” என,

 “இந்த வீடா… இங்கயாவா இருக்க போற?” என்று ஆய்ந்து ஓய்ந்து அவள் கேள்வி கேட்டு கொண்டு நிற்க, கனி எரிச்சலானாள்.

“உங்க ஆயா சாவை விட…  இப்ப நான் எங்க இருக்க போறேங்குறது உனக்கு ரொம்ப முக்கியமா… போய் அழுது முடிச்சிட்டு வா… அப்புறமா பேசுவோம்” என்று ஒரு வழியாக சமாளித்து அனுப்பிவிட்டு திரும்பியவளுக்கு யாரோ அவளை குறுகுறுவென்று பார்ப்பது போன்ற உணர்வு.

அந்த பார்வை அவள் முதுகை துளைத்தது. திரும்பி பார்க்காமல் விடுவிடுவென அவள் வீட்டிற்குள் நுழைந்துவிட ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் முன்னே வந்து, “வா ம்மா வா” என்றபடி அவளை உள்ளே அழைத்தார்

 இழுத்து கொண்டையிட்டிருந்த அவரின் முன் முடியெல்லாம் நரைத்திருந்தது. அவளை விட ரொம்பவும் உயரம் குறைவாக இருந்தார். ஆனால் பார்வையில் ஒரு ஆழமான தெளிவும் உள்ளத்தால் சிரிக்கும் உதடுகளுமாக, “வா ம்மா உட்காரு” என்று முகப்பறை சோபாவை காண்பித்தார்.

“இன்னைக்குன்னு பார்த்து எதிர் வீட்டுல சாவு… நல்ல வேளையா உன் சாமான் எல்லாம் காலைலயே வந்துடுச்சு… இறக்கி மேலே வைச்சாச்சு… அப்புறம் உன் பைக்கை சைட்ல நிறுத்த சொல்லி இருக்கேன்” என்றவர் தயாராக கையில் வைத்திருந்த தண்ணீர் குவளையை நீட்டி, “இந்தா ம்மா… தண்ணி குடி” என,

“தேங்க்ஸ் மேடம்” என்றவள் அதனை வாங்கி பருகே கொண்டே தன் பார்வையை ஓட்டினாள். வீட்டின் தோற்றத்தில் பழைமை இருந்தாலும் உள்கட்டமைப்பு புதுவிதமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. ஆன்டிராய்டு தொலைக்காட்சி தொடங்கி வீட்டு பொருட்கள் அனைத்தும் நவீனதத்துவமாக இருந்தன.    

“இத பாரும்மா… ஸ்கூலதான் மேடம் எல்லாம்… நீ இங்க என்னை ஆன்டின்னு கூப்பிடலாம்” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“கால் ஹேர் ஆன்டி… பட் டோன்ட் கால் மீ அங்கிள்… ஐம் வாசுதேவன்… வாசுதேவ கிருஷணன்… ஷார்ட்லி வாசு” என்று உயரமும் ஒல்லியுமாக முதிர்ந்த தோற்றத்தில் இருந்தாலும் படுஸ்டைலாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட அந்த மனிதர்  சோபாவில் அமர்ந்தபடி தோழமையுடன் அவளிடம் தன் கரத்தை நீட்ட,

“ஹாய் வாசு சார்” என்றபடி புன்னகையுடன் கைகுலுக்கினாள் கனி.

“நோ சார்… ஒன்லி வாசு” என்றவர் அழுத்தமாக சொன்ன நொடி நிர்மலா மேடம் நொடித்து கொண்டு,

“ம்க்கும்… சங்கூதுற வயசுல சங்கீதாவாமே… ஐயாவுக்கு அப்படியே இளமை ஊஞ்சலாடுதோ… எதிர் வீட்டுல செத்து போன கெழவிக்கும் இவருக்கும் பத்து வயசுதான் வித்தியாசம்” என்று காலை வார,   

“இதெல்லாம் ரொம்ப ஓவர் நிம்மி” என்று கடுப்பானார் வாசுதேவன்.

“கால் மீ வாசு… அது மட்டும் ஓவரா இல்ல” என்று நிர்மலா கணவனை ஒழுங்கெடுக்கவும், கனி பக்கென்று சிரித்துவிட்டாள். இருவரும் தோற்றத்தில் மட்டும் அல்ல. பேச்சிலும் எதிரும் புதிருமாக இருந்தனர்.

கனி தன் சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு அவர்களை பார்த்து, “சாரி ஆன்டி… என்னால கன்டிரோல் பண்ண முடியல… சிரிப்பு வந்துடுச்சு” என,

“சிரிக்குறதுக்கு எல்லாம் எதுக்கு சாரி… நல்லா வாய் விட்டு சிரியேன்… என்ன நஷ்டமாகிட போகுது” என்று வாசுதேவன் பரிவுடன் சொல்ல,

“எங்க வீட்டுல நீ எவ்வளவு வேணா சிரிக்கலாம்… சிரிச்சிட்டே இருக்கலாம்…. ஆனா இப்போ நீ போய் கை கால் கழுவிட்டு வந்தினா சாப்பிடலாம்… ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்திருக்க” என்று நிம்மி என்கிற நிர்மலா கூற,

“எதுக்கு உங்களுக்கு சிரமம்… நான் பார்த்துக்கிறேன்… நீங்க இவ்வளவு ஹெல்ப் பண்ணதே பெரிய விஷயம்”  என்று கனி எழுந்து கொண்டாள்.

“இதுல என்ன இருக்கு… நீ போய் கை கால் அலம்பிட்டு வாம்மா” என்று மிகவும் அக்கறையாகவும் கனிவாகவும் கூற அவளுக்கு அத்தையின் நினைவு வந்துவிட்டது.

“என்ன ம்மா நின்னுட்டே இருக்க… அதோ இருக்கு பாரு… பாத்ரூம்” முகப்பறை ஒட்டியது போலிருந்த குளியலறையை காண்பித்தவர்,

“போய் சீக்கிரம் கை கால் அலம்பிட்டு வா… இந்தா டவல்” என்றபடி ஒரு துண்டையும் எடுத்து அவள் கையில் திணித்துவிட்டார்.

“ஆன்டி… அது” என்றவள் அப்போதும் தயக்கத்துடன் நின்றாள்.

வாசுதேவன் உடனே, “நீ வரேன்னுட்டுதான் எனக்கு கூட சாப்பாடு போடல… டூ ஹவர்ஸா வெயிட்டிங்” என்று சொல்லவும் கனி அதிர்ந்துவிட்டு, “ நீங்க சாப்பிடலயா… என்ன ஆன்டி… எனக்காக போய் எதுக்கு இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க” என்று கேட்க,

“நீ அவர் சொல்றதை எல்லாம் நம்பாதே…. பரலோகம் போயிட்ட அவரோட கேர்ள் பிரண்டுக்காக இவ்வளவு நேரம் பீலோ பீல் பண்ணிட்டு இருந்தாரு” என்றதும் கனியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அந்த கெழவி ஒன்னும் எனக்கு கேர்ள் பிரண்டு இல்ல” வாசுதேவன் முறுக்கி கொண்டு சொல்ல,  

“அப்படினா பாய் பிரண்டா?” என்று கலாய்த்தார் நிர்மலா.  

“நிம்மி” என்றபடி வாசுதேவன் முறைக்க,

“நிம்மி அம்மி எல்லாம் அப்புறம்… எனக்கு ரொம்ப நேரம் நின்னு சமைச்சதல கால் விட்டு போச்சு… கிச்சன் போய் சமைச்சதெல்லாம் டைனிங் டேபிளை கொண்டு வந்து வையுங்க” என்றதும் பதிலேதும் பேசாமல் வாசுதேவன் சமையலறைக்குள் சென்று சமைத்தவற்றை எடுத்து வந்து வைக்க, 

கனி அந்த தம்பதிகளின் அன்யோன்யத்தையும் ஆர்பாட்டத்தையும் வியப்புடன் பார்த்தபடியே குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு திரும்பினாள்.

“சாதம் ரசம் பொறியல் கூட்டு எல்லாம் எடுத்துட்டு வந்து வைச்சிட்டேன்… ஆமா குழம்பு எங்க இருக்கு”

“அடுப்பு மேலதான் இருக்கு… உங்களுக்கு கண்ணே தெரியாதே”

இப்படியும் ஒரு கணவன் மனைவியா என்று வியப்பு மேலிட பார்த்து கொண்டே டைனிங் டேபிளில் அமர போனவள் சட்டென்று அப்படியே நின்றுவிட,

“என்ன ம்மா ஏன் நிற்குற… உட்காரு” என்று நிர்மலா சொல்ல,

“இல்ல ஆன்டி… என்னை பத்தி எல்லா விஷயமும் சார் சொன்னாரு… அதாவது என் கேஸ்ட் பத்தி” என்று அவள் தயக்கத்துடன் நிறுத்த,

“முதல உட்காரும்மா நீ… சாதியாவது மண்ணாவது… எல்லோரும் மனுஷ சாதி… அவ்வளவுதான்… நான் மனசைத்தான் நம்புறேன்… மதத்தை எல்லாம் நம்பல” என்று படபடவென அவர் பேசியதை கேட்டு கனியின் கண்கள் கண்ணீரால் நிரம்பிவிட்டது. இது போன்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருநாவின் அம்மாவிற்கும் இவர் வயதுதான் இருக்கும். ஆனால் இந்த மனபக்குவம் அவருக்கு இல்லையே. அவள் சாதியின் பெயரை சொன்னதும் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார். ஆனால் சாதி வெறி பிடித்த சிலரை வைத்து மட்டும் இந்த ஒட்டுமொத்த உலகமே அநியாயமானது என்று சொல்லிவிட முடியாது. தெளிந்த ஓடை நீர் போல சென்ற அவள் மனவோட்டத்தை வாசுதேவன் குரல் நிறுத்தியது.

“மிஸ் கன்னிகை… இப்போ உட்கார போறீங்களா இல்லையா… எனக்கு பசிக்குது”

“சாரி அங்கிள்” என்று அவள் அமர்ந்து கொள்ள, நிர்மலா உணவு பரிமாறினார்.

விருந்து போல அவர் பரிமாறிய உணவை எல்லாம் பார்த்து, “வெளியே இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் போது எனக்காக போயிட்டு நீங்க இதெல்லாம் சமைச்சு வைச்சிருக்கிறது சங்கடமா இருக்கு ஆன்டி” என்றாள் கனி.

“அதுக்கு என்னம்மா பண்ண முடியும்… பாட்டி வயசாகி செத்து போச்சு… இதுல நம்ம செய்ய என்ன இருக்கு… அனேகமா நாளை காலைலதான் எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்… பாட்டிக்கு எட்டு புள்ளைங்க… நாலு பொண்ணுங்க… ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஊர்ல இருக்கு… எல்லாம் வந்து சேரணும் இல்ல… அதுவரைக்கும் நம்ம சமைக்காம சாப்பிடாம இருக்க முடியுமா என்ன

இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு… அவங்களே ஒவ்வொருத்தரா போய் பக்கத்துல இருக்க சொந்தகாரங்க வீட்டுல போய் சாப்பிட்டு வருவாங்க” என்று நிர்மலா சொல்லி கொண்டே உணவு பரிமாறிவிட்டு அவரும் உண்டார்.

கனிக்கு அந்த உணவு வகைகளை எல்லாம் பார்த்து அத்தையின் நினைவு வந்துவிட்டது. அத்தைதான் இப்படி பார்த்து பார்த்து பொரியல் ரசம் கூட்டு என்றெல்லாம் வகை வகையாக சமைத்து போடுவார். இப்படி ருசி பசியுடன் அவள் சாப்பிட்டே பல நாட்களாகிவிட்டன.

திருப்தியாக சாப்பிட்டு முடித்து அவள் எழுந்து கை கழுவி கொள்ளவும், “நீ இன்னைக்கு இங்கேயே படுத்துக்கோ மா… உள்ளே ஒரு பெட் ரூம் இருக்கு… மேலே எல்லாம் செட் பண்ணதும்… நல்ல நாள் நேரம் எல்லாம் பார்த்து… பாலெல்லாம் காய்ச்சிட்டு போயிக்கலாம்” என,

“உங்களுக்கு எதுக்கு ஆன்டி சிரமம்… நான் பார்த்துக்கிறேன்” என்று கனி சொல்ல,

“இதுல என்ன சிரமம் இருக்கு… இங்க இரண்டு பெட் ரூம் இருக்கு… ஒண்ணுல நீ தங்கிக்க போற… நாளைக்கோ நாளன்னைகோ நீ மேல போயிட போற… அதுக்கு அப்புறம் உன் பிரைவஸில நாங்க தலையிட மாட்டோம்” என்றவர் சொன்னதும்,

“ச்ச்சே… அப்படி எல்லாம் நான் யோசிக்கல ஆன்டி” என்றாள் உடனே!

அவள் தோளை ஆதரவாக தொட்டவர், “இத பாரு கனி… உன்னை பத்தி உங்க சார் எல்லாம் சொன்னாரு… உனக்கு உங்க அத்தை மட்டும்தான்… அவங்களும் இப்போ இறந்து போயிட்டதா சொன்னாரு… நீ தனியாளா உன்னை நினைக்காத

எங்களை உன்னோட உறவா நினைச்சிக்கோ” என்றவர் பேசியதை கேட்டு கனியின் கண்கள் மீண்டும் கலங்கிவிட்டன.

“நான் கஷ்டத்திலும் கவலையிலும்தான் அடிக்கடி அழுவேன்… இங்க வந்த ஒரே நிமிஷத்துல அதிகப்படியான அன்பை காட்டி என்னை நெகிழ்ச்சில அழ வைக்கிறீங்க…. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… ரொம்ப நன்றி ம்மா” என,

“ம்ம்ம்… இப்போ கூப்பிட்டியே அம்மா… அப்படியே கூப்பிடு அதான் நல்லா இருக்கு… இவரை அப்பான்னு கூப்பிடு” என்று சொன்னதும் வாசுதேவன் இடையிட்டு,

“உன்னை எப்படி கூப்பிடணும்னு நீ சொல்லு… என்னை எப்படி கூப்பிடணும்னு நான்தான் சொல்லுவேன்… நீ என்னை வாசுன்னே கூப்பிடு மா” என,

“இவரு வேற… கோமாளி மாதிரி… நீ இவர் சொல்றதை எல்லாம் கேட்காதே கனி” என்றதும் அவர்களுக்கு இடையில் ஒரு விவாதம் தொடங்கிவிட, கனி சிரிக்க தொடங்கியவள்தான். வெகுநேரம் அவர்களின் பேச்சிலும் கலகலப்பிலும் தான் இருப்பது புது இடம் பழகாத மனிதர்கள் என்பதெல்லாம் சுத்தமாக மறந்து போனது.

அவளும் அவர்களுடன் சகஜமாக உரையாடலில் கலந்து கொண்டு,

“சரி ஒகே… நான் பொதுவா உங்களை வாசு ப்பான்னு கூப்பிடுறேன்” என,  

“இது ஒகே” என்று நிம்மி சம்மதமாக தலையசைக்க,

“ஓ…கே” என்று வாசுதேவனும் கொஞ்சம் இழுத்தபடி சம்மதித்தார்.

 “சரி வா… நாம மேலே போய் வீட்டை பார்த்துட்டு  வருவோம்” என்றபடி சாவியை எடுத்து கொண்டு வந்தவர் வெளிவாயிலின் வழியாக மேலே செல்லும் படிக்கட்டில் ஏறிச் சென்று பூட்டிய கதவை திறந்தார்.

“கொஞ்சம் பழைய போர்ஷன்தான்… என் மாமியார் மாமனார் இருந்தாங்க… அப்புறம் அதை ஆல்டிரேஷன் எல்லாம் பண்ணி இருக்கோம்… உனக்கு எப்படி செட்டாகுமான்னு பாரு” என, இருவரும் உள்ளே வந்தனர்.

மூட்டை கட்டிய சாமான்கள்… அட்டை பெட்டிகளில் கச்சிதமாக அடுக்கி வைத்திருந்த பொருட்கள், பிரட்ஜ் சோபா டேபிள் என்று எல்லாமே முகப்பறையில் தாறுமாறாக அடைத்திருந்த போதும் இடம் பெரிதாக இருந்தது.

“இதோ பாரும்மா இந்த ஜன்னலை திறந்து விட்டியானா… நல்லா காத்து வரும்” என்றபடி அவர் அந்த ஜன்னல் கொக்கிகளை திறக்க அறை வெளிச்சமானது. காற்றும் வந்தது. அதனுடன் இணைந்தார் போல அடுத்தடுத்து சின்ன படுக்கையறையும் சிறிய சமையலறையும் இருந்தன.

அவள் முன்னே தங்கியிருந்த வீட்டுடன் பொருத்தி பார்க்க முடியாவிட்டாலும் இதுவும் கச்சிதமாகவும் அழகாகவும் இருந்தது.

“பாத்ரூம் வெளியே இருக்கு கனி” முகப்பறை பின்னிருந்த கதவை திறக்க மிக பெரிய பால்கனியும் அதனுடன் கழிவறையும் குளியலறையும் இருந்தது. பார்க்க பழைய வீட்டின் முற்றத்தை பார்க்கும் உணர்வை கொடுத்தது.

குளியலறையும் கழிவறையும் தனித்தனியாக இருந்தன. அந்த பரந்து விரிந்த பால்கனியை பார்த்ததுமே கனிக்கு பூச்செடிகள் எல்லாம் இங்கே வைத்து கொள்ளலாம் என்று எண்ணம் தோன்றியது. அவற்றை பார்த்தபடி நடந்து வந்து திண்டினை பற்றி கீழே பார்த்தாள்.

பறையடி சத்தம் நின்றிருந்தது. அந்த சாவு வீடு துக்கத்தை விட ஒரு மாதிரி கொண்டாட்ட உணர்வில் இருந்ததாகவே தோன்றியது.

பின்னே இருக்காதா? கல்யாண சாவாயிற்றே! வழி வழியாக சந்ததிகள் எல்லாம் பார்த்து வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்து முடித்த முதியவர்களின் இயற்கை மரணங்களை கல்யாண சாவு என்பார்கள்.

கீழே கூட்டம் அலைமோதியது. ஆளுயர மாலைகளும் ஆளாய் கனத்த மாலைகளும் என்று மாலைகள் யாவும் மலையாக குவிந்து கிடந்தன. பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேத்தி, கொள்ளு பேரன், சமீபமாக பிறந்த எள்ளு பேத்தி என்று சந்ததிகளின் சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாண்டுவிட்டு அமைதியாக ஐஸ் பெட்டிக்குள் அடங்கியிருந்த பாட்டியை பார்த்து பார்த்து ஒப்பாரி வைத்து அழுது தொண்டை வறண்டு பெண்களெல்லாம் இப்போது தேநீர் குடிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார்கள் .

 ஆண்கள் கூட்டமோ அமைதியாக வாயில் கை வைத்து கொண்டு துக்கம் காத்தது. அதில் சிலர் பாக்கெட்டிலேயே குவாட்டரை வைத்து கொண்டு அவ்வப்போது வாயிற்குள் சரித்து கொண்டனர்.

பாட்டியின் மிக பெரிய படமொன்று வீட்டு வாசலில் பேனராக கட்டப்பட்டிருந்தது.

முதிர்ந்த தோற்றம். சுருங்கிய தோல்கள். கம்பீரமான பார்வை.

கயல் தன் பாட்டியை பற்றி சொன்ன கதை எல்லாம் நினைவுக்கு வந்தன.

 தாத்தா பொறுப்பில்லாமல் எப்போதும் ஊர் சுற்றி கொண்டும் குடித்து கொண்டும் இருப்பார். பாட்டிதான் தனியாளாக அனைத்தை பொறுப்பையும் கட்டியாண்டார். அவர் ஒரு குரல் கொடுத்தால் பிள்ளைகள் எல்லாம் பயந்து நடுங்குவார்களாம். அந்தளவு வீட்டையும் குடும்பத்தையும் தன் கட்டுபாட்டில் வைத்திருந்தவர்.

கனிக்கு அந்த கதைகள் எல்லாம் அடுக்கடுக்காக யோசனையில் வந்து நிற்க, பந்தலுக்கு வெளியே நடக்கும் காட்சிகளை சுவாரசியமாக பார்த்தபடி நின்றுவிட்டாள்.

“என்னடா சும்மா இருக்கீங்க அடிங்கடா” என்று ஒரு பெரிசு அதட்டிவிட்டு போகவும் மெல்ல பறை இசையின் சுருதி கூடியது.

அதிரும் பறை சத்தத்தை சுற்றி சில அரைவேக்காடுகள் உத்வேகமும் உற்சாகமும் ஆட்டம் போட்டன. மெல்ல மெல்ல சத்தம் கூடியது. அடிக்கும் வேகத்தை பார்த்தால் பறையடி  சத்தம் ஊர் எல்லையில் கேட்கும் போல. அப்படி ஒரு அதிர்வு.

 எல்லாவற்றையும் கிட்டத்தட்ட அவள் மறந்த நிலையில் அவ்விடத்தின் காட்சிகளை சுவாரசியமாக பார்த்து ரசித்திருக்கும் போது சட்டென்று ஒரு பார்வை கத்தி போல கூர்மையாக அவளை தாக்கியது.

தவிர்க்க முடியாமல் கனியும் அந்த பார்வையை எதிர்கொள்ள, பறையின் உக்கிரம் கூடியது. அடித்து அவள் காதை கிழித்தது.

‘மாயன்’

தாமாக அவள் உதடுகள் அவன் பெயரை உதிர்த்தன. கைலியும் கரும்பச்சையில் மேற்சட்டையும் அணிந்திருந்தவன் பார்க்க திடகாத்திரமாக தெரிந்தான். தோள் வரை நீண்ட முடியை  கோர்த்து பின்னே கட்டியிருந்தான்.

அவள் திருமணத்திற்கு முன்பு பார்த்த நினைவுதான். ஆனால் இன்றும் அதே முரட்டு பார்வையும் தோற்றமும் அவனிடம் அப்படியே இருந்தது.  

அதுவும் அவன் விழிகள் கூரிய வாளாக அவளை நோக்கி நீண்டிருந்தன. குத்தி கிழிக்க முற்பட்டன. இன்னொரு பக்கம் அவன் கைகளில் வாகாக அமர்ந்திருந்த பறை ஆங்காரமாக ஒலியெழுப்பின.

 அவசரமாக அங்கிருந்து நகர்ந்து உள்ளே வந்துவிட்டாள்.

பறைச் சத்தமும் அவளின் இதய துடிப்பின் சத்தமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு கொண்டன.

 அவன் பார்வையே சொன்னது. அவன் தன்னை கண்டுகொண்டான் என்று. ஆனால் அந்த பார்வையில் எதற்கு அத்தனை வெறுப்பும் கோபமும். தான் என்ன அவனுக்கு செய்துவிட்டோம்?

watch PARAI album... its based on real incident

shanbagavalli, Rathi and 4 other users have reacted to this post.
shanbagavalliRathiThani Sivaindra.karthikeyanchitti.jayaramansembaruthi.p
Quote

Nirmala pola manidargal um irukamga mayan en ivalai muraichitu irukan, inda parai adikumbodu en kaal ellam adite irukum enaku anda sound rumba pudikum pa appadiye odambu ellam pullarikum,

Rathi and Thani Siva have reacted to this post.
RathiThani Siva
Quote

பறை அடிக்கிறது இதுக்கு தான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்... நிம்மி, வாசு சார் அருமையான ஜோடி.. அவங்க பேசுறதை கேக்கவே ஆசையா இருக்கு...

மாயனுக்கு ஏன் இவ்ளோ வெறுப்பு கனி மேல..

Rathi and Thani Siva have reacted to this post.
RathiThani Siva
Quote

நிம்மி ,வாசு இவர்களின் அன்னியோன்னியம் செம ....அதுவும் வாசுசார் ....ப்ப்பா ....செம ...அடிதூள் 😀

மாயன் கனி மேல ரொம்ப கோவமா இருக்கிறான் ...ஆனாலும் அவன் கனியை அடையாளம் கண்டு கொண்டான் ....(கனி மேல இஸ்டமோ.)..மாயனுக்கு ,அவன் வாங்கி கொடுத்த புடவையை கூட (சடங்கு அன்னைக்கு )அவள் உடுத்தவில்லை😜❤️❤️❤️❤️

 

Rathi has reacted to this post.
Rathi
Quote
Quote from Thani Siva on June 25, 2022, 6:04 PM

நிம்மி ,வாசு இவர்களின் அன்னியோன்னியம் செம ....அதுவும் வாசுசார் ....ப்ப்பா ....செம ...அடிதூள் 😀

மாயன் கனி மேல ரொம்ப கோவமா இருக்கிறான் ...ஆனாலும் அவன் கனியை அடையாளம் கண்டு கொண்டான் ....(கனி மேல இஸ்டமோ.)..மாயனுக்கு ,அவன் வாங்கி கொடுத்த புடவையை கூட (சடங்கு அன்னைக்கு )அவள் உடுத்தவில்லை😜❤️❤️❤️❤️

 

உங்கள் கருத்திற்கு நன்றி. கனி மேல அவனுக்கு விருப்பமாங்கிறது அவனோட சைட் கதை என்னன்னு கேட்டாதான் தெரியும்... கதையில் போக்கில் பார்ப்போம்.

Thani Siva has reacted to this post.
Thani Siva
Quote
Quote from chitti.jayaraman on June 25, 2022, 2:38 PM

Nirmala pola manidargal um irukamga mayan en ivalai muraichitu irukan, inda parai adikumbodu en kaal ellam adite irukum enaku anda sound rumba pudikum pa appadiye odambu ellam pullarikum,

thanks ma. நம் ஊரில் யாருக்குதான் பறையடி பிடிக்காது. அதிலிருக்கும் உத்வேகம் வேறெதிலும் இல்லை. அதே போல மற்ற எல்லா தோல் கருவிக்கும் பறைதான் மூலம். ஆனால் இந்த தொன்மையான கருவியை வாசிப்பவர்களைதான் நாம் தீண்ட தாகாதவர்களாக நடத்துகிறோம்

 

Quote
Quote from sembaruthi.p on June 25, 2022, 2:56 PM

பறை அடிக்கிறது இதுக்கு தான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்... நிம்மி, வாசு சார் அருமையான ஜோடி.. அவங்க பேசுறதை கேக்கவே ஆசையா இருக்கு...

மாயனுக்கு ஏன் இவ்ளோ வெறுப்பு கனி மேல..

பறை அடிப்பது போல நம்மூரின் ஒவ்வொரு சடங்கும் தொடங்கியது வேறு காரணதிற்க்காக. மாலையில் விளகேற்றுகிறோம். எதுக்கு? அப்போ கரன்ட் இல்லை. இப்பவும் நாம அதை கடைப்பிடிக்கிறோம். இப்படிதான் ஒவ்வொரு சடங்கும் ஆரம்பித்த சூழல் வேற. அப்புறம் அதை ஒரு ஒப்புக்காக பயன்படுத்துறோம்.

கடைசியாக நீங்க கேட்ட கேள்விக்கு கதையில்தான் பதில் இருக்கு

Quote

Super ma 

You cannot copy content