You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 18

Quote

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை எல்லாவகை ஞானமும் ஆண்களுக்காக மட்டுமே என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெண்கள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ள அனுமதிக்கப்படவே இல்லை. பல்கலைகழகம், கல்லூரி, பள்ளி, பாடசாலை, குருகுலம், கல்வியகம், சங்கம் என்று அறிவார்ந்த எல்லாவித அமைப்புகளும் பெண்களுக்கு இல்லை. ஆண்களுக்காக மட்டுமே என்று நிபந்தனை விதித்தன. இன்றுவரை உலகத்து பல்கலைகழகங்கள் எல்லாம் இளங்கலை, முதுகலை பட்டங்களை பாச்சுலர், மாஸ்டர் பட்டம்(Bachelor, Master degree) என்றுதானே வழங்குகின்றன.

அந்தக் காலத்து மனுஸ்மிருதி மாதிரியான புத்தகங்களும் வேதம் படிப்பதை பெண்கள் கேட்கவே கூடாது.. தப்பித்தவ்றி கேட்டுவிட்டால் அவள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று' என்று கல்வி கற்க விரும்பும் பெண்களை தண்டிக்க வழி சொல்லின.

இப்படியாக பெண்களின் கடைசி ஆயுதமான களவியல் தேர்வு முறையை ஒழிக்க, ஆண்கள் பயன்படுத்திய முதல் உத்தியாக அறிவை வளர்க்கும் வழிகளுக்குத் தடை செய்தார்கள்.

தொடரும்...

18

அன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் கனி காலையிலேயே எழுந்து துணிகளை துவைத்து அவற்றை காயப் போட்டு கொண்டிருந்தாள்.

“கனி” என்ற அழைப்பு கேட்டு திரும்பிவள் தோழியை கண்டதும் மகிழ்ச்சியுடன்,

“ஏ கயலு… வா வா” என்று அழைக்க கயல் பின்கதவின் வழியாக பால்கனிக்கு வந்தாள்.

“இப்பதான் உன்னை பத்தி நினைச்சிட்டு இருந்தேன்… நீயே வந்து நிற்குற” என்றவள் துணிகளை காய போட்டு கொண்டே பேச,   

“நானும் உன்னை வந்து பார்க்கணும் பேசணும்னு நினைச்சிட்டே இருந்தேன்… ஆனா என்ன பண்றது? வீட்டுல ஒரே வேலைடி… முடியல” என்றவள் பெருமூச்சுவிட்டபடி பதிலளித்தாள்.

“உங்க வீட்டுல சொந்தகாரங்க நிறைய பேர் தங்கி இருக்காங்க போல… யாரும் ஒன்னும் ஹெல்ப் பண்ண மாட்டாங்களா?”

“ம்ம்க்கும்… அப்படியே பண்ணிட்டாலும்… யாருக்கும் ஆயாவை பார்த்துக்க கூட துப்பு கிடையாது… கடைசி வரைக்கும் எங்க அம்மாவும் பக்கத்துல இருந்து சித்திங்களும்தான் பார்த்துக்கிட்டாங்க…

ஆயாவும் எந்த புள்ள வீட்டுக்கும் போவாது… அவங்க பார்த்துக்க மாட்டாங்கன்னு அதுக்கு தெரியும்… கடைசி காலம் வரைக்கும் எங்க அம்மாதான் கெதின்னு கிடந்தது… என்ன? ஒரு மாசம் படுத்த படுக்கையா கிடந்துச்சு… அப்புறம் போய் சேர்ந்திருச்சு…

அப்படி படுத்து கிடந்த போது கூட ஒரு புள்ளையங்களும் எட்டி பார்க்கல… எல்லாம் கொல்லி போட மட்டும் வந்திடுறாங்க…  ஆனா இதெல்லாம் அந்த கெழவிக்கும் வேணும்” என்று கயல் எதிரே தெரியும் தன் வீட்டின் வாயிலில் நடமாடும் உறவினர்களை கடுப்புடன் பார்த்து கொண்டே உரைத்தாள்.

“ஏன் டி இப்படி சொல்ற? உங்க ஆயா என்னடி பண்ணுச்சு”

“பின்ன… புள்ளைங்கள எல்லாம் நல்லா படிக்க வைச்சுது… ஆனா பொண்ணுங்க ஒருத்தரை கூட படிக்க வைக்கல… ஆனா கடைசில பார்த்துக்கிட்டது யாரு?” என்று எரிச்சலுடன் மொழிந்தாள் கயல்.

உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி எல்லா சாதியிலும் பெண் என்பவள் ஒடுக்கப்பட்ட இனம்தான் என்று நினைத்து கொண்ட கனி, “சரி விடு… எதுக்கு பழச எல்லாம்… அதுவும் ஆயா போய் சேர்ந்ததுக்கு அப்புறம்” கனி தோழியை சமாதானம் செய்தாள்.

“சரி என் கதையை விடு… நான் சும்மா உன்னை பார்த்து பேசிட்டு போலாம்னுதான் வந்தேன்… அதுவுமில்லாம நாளைக்கு நான் வீட்டுக்கு கிளம்பணும்” என,

“கிளம்புறியா… ஆயாவுக்கு பதினாராம் நாள் காரியம் எல்லாம் முடிச்சிட்டு போவேன்னு பார்த்தேன்” என்று யோசனையுடன் கேட்டாள்.

“நானும் அதான்டி நினைச்சேன்… ஆனா என்னத்த செய்ய… பசங்களுக்கு ஸ்கூல் இருக்குன்னு மூணு நாள் முன்னாடி வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்… என் புருஷன் போன் பண்ணி காச் மூச்சுன்னு கத்திராறு… உனக்கென்ன அங்கே வேலை கிளம்பி வர வேண்டியதுதானேன்னு… ஆனா அம்மாவை பார்த்தா பாவமா இருக்கு… ஏகப்பட்ட வேலை… அதான் கூட தங்கிட்டேன்… ஆனா நாளைக்கு போய்தான் ஆகணும்” என்றாள்.

தோழியிடம் பேசி கொண்டே துணிகளை காய வைத்து முடித்தவள்,

“சரி வா… உள்ளே போய் பேசுவோம்… நான் காபி போடுறேன்… காபி குடிப்ப இல்ல” என்று கேட்டு கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.

“அதெல்லாம் வேண்டாம் கனி”

“சும்மா இரு… இரண்டு பேருக்கும்தான் போடுறேன்… குடிச்சிக்கிட்டே கொஞ்ச நேரம் ஆரத்தீர பேசுவோம்” என்றவள் பாலை அடுப்பில் வைத்து பற்ற வைத்த பின் தோழியை சந்தேகமாக பார்த்து,

“ஆமா… உங்க அம்மாவுக்கு நான் இங்கே தங்கி இருக்கேன்னு தெரியுமா? சொல்லிட்டியா” என்று கேட்டாள்.  

“சொன்னேனே… அதுவும் நீ நம்ம ஊர் கவர்மெண்ட் ஸ்கூல டீச்சரா இருக்கன்னும் சொன்னேன்”

“என்ன சொன்னாங்க கயலு”

“ரொம்ப சந்தோஷப்பட்டாங்க” என்றதும் கனியால் நம்ப முடியவில்லை.

“நிஜமாவா சொல்ற”

“ஆமா பின்ன….”  

“நம்பவே முடியல… நான் சின்னதுல உங்க வீட்டுக்கு வந்த போது என்னை உங்க அம்மா எப்படி துரத்தி அடிச்சாங்க” 

“இன்னுமாடி அந்த விஷயத்தை நீ மறக்கல”

“மறக்க கூட விஷயமா அதெல்லாம்… இன்னுமும் என் ஆழ் மனசுல அந்த வலி இருக்கு” கனியின் குரல் கம்மியது.  

“நீ வேற… அதெல்லாம் அப்போ கனி… இன்னைக்கு நான் உன்னை பார்க்க போறேன்னு சொன்ன போது… உன் பிரண்டை வீட்டுக்கு கூட்டுட்டு வான்னு சொன்னாங்க… தெரியுமா?” என்றாள். பாலை ஊற்றி காபியை கலக்கி கொண்டிருந்த கனிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

கயல் காபியை பருகி கொண்டே, “போன வருஷம் புருஷன் கொடுமை தாங்காம தங்கச்சி இரண்டு பிள்ளைங்களயும் கூட்டிட்டு இங்க வந்துட்டா… அப்பத்துல இருந்தே அம்மா நிறைய மாறிட்டாங்க… பசங்கள நல்லா படிக்க வைச்சிருந்தா… இன்னைக்கு அவளுங்க வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்… புருஷன் சரியில்லனாலும் அவ ஏதாவது வேலை செஞ்சாச்சும் பிழைசசிட்டிருப்பாளேன்னு புலம்பிட்டே இருப்பாங்க…

இப்போ நீ படிச்சு கவர்மென்ட் உத்தியோகம்… அதுவும் டீச்சர் வேலைக்கு போறன்னு சொன்னதும் அவங்களுக்கு உன் மேல தனி மதிப்பே வந்துடுச்சு” என்று தெரிவிக்க, இதெல்லாம் கல்வி தேடி தந்திருக்கும் மரியாதை என்பதை கனி உணர்ந்திருந்தாள்.

இருவரும் அதன் பின் காபியை குடித்து கொண்டே நேரம் போவது தெரியமல் உரையாடி கொண்டிருந்தனர். 

“ஐயோ கனி… நேரமாச்சு… ரொம்ப நேரம் பேசிட்டு இருந்திட்டேன்” என்று கயல் எழுந்து கொள்ள,

“இருடி டிபன் செய்றேன்… சாப்பிட்டு போ” என்றாள் கனி.

“இல்ல கனி… போகணும்… வேலை இருக்கு… நான் ஆயாவோட காரியத்துக்கு வருவேன் இல்ல… அப்போ மறுபடியும் வர்றேன்”

“அப்போ வரும் போது… கண்டிப்பா சாப்பிட்டிட்டுதான் போகணும்”

“கண்டிப்பா” என்றவள் படிக்கட்டில் இறங்கி செல்லவும் தோழிக்கு கையசைத்துவிட்டு உள்ளே வந்தாள். தோழியுடன் பேசியது அவள் மனதிற்கு இதமாக இருந்தது.

இந்த ஊருக்கு மாற்றலான போது உண்மையில் ரொம்பவும் பயந்தாள். இப்போது யோசித்தால் அந்த பயம் அர்த்தமற்றது என்று  தோன்றியது. இங்கே வராமல் இருந்திருந்தால் நிம்மிம்மா, வாசுப்பா, கயல் இவர்களை எல்லாம் சந்தித்திருக்கவே முடியாது.

அதுவும் வந்த நாளிலிருந்து நடப்பதெல்லாம் நல்லதாகவே இருந்ததில் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தாள் கனி. அந்த உணர்வுடனே வீட்டு வேலைகளை எல்லாம் பரபரவென்று செய்து முடித்தவள் காலை டிபனை ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்து கொண்டு கீழே சென்றாள்.

எப்போதும் போல வாசுப்பா செய்திதாள் வாசித்து கொண்டிருக்க,

“குட் மார்னிங் பா” என்றாள் புன்னகையுடன்.

“வா கனி… குட் மார்னிங்” என்று மலர்ந்த முகத்துடன் அவளை ஏறிட்டவர் கையிலிருக்கும் பாத்திரத்தை பார்த்துவிட்டு, “என்னவோ ஸ்பெஷலா எடுத்துட்டு வந்திருக்க போல” என்று ஆவலுடன் விழிகளை விரித்தார்.  

“உங்களுக்காகதான் பா… பொங்கல் செஞ்சு எடுத்துட்டு வந்தேன்” என்று பாத்திரத்தை திறந்து காண்பிக்கவும் அவர் முகம் பிரகாசித்தது.

“ஆஹா… எனக்கு இப்பவே பசிக்குதே” என்றவர் ஆர்வமாக எழுந்து கொள்ள,

இவர்கள் உரையாடலை கேட்டபடி வந்த நிம்மி, “ஏன் கனி… அவரு ஏற்கனவே கன்டிரோல் இல்லாம சாப்பிட்டுட்டு இருக்காரு… நான் ஸ்கூலுக்கு இந்த பக்கம் கிளம்பினதும் இவர் சமையல்கட்டில போய் இருக்கிறதெல்லாம் ஆராய்ஞ்சு வேர்கடலை உடைச்ச கடலை எல்லாத்தையும் காலி பண்ணி வைச்சு இருக்காரு” என்று அவர் புலம்பலை கேட்டு கனி சிரித்தாள்.  

“அவ அப்படிதான்… ஏதாச்சும் சொல்லிக்கிட்டு இருப்பா… நீ அந்த பொங்கலை வை” என்று வாசு தட்டுடன் டைனிங் டேபிளில் ஆஜாராகிவிட்டார்.

“கடவுளே!” என்று நிம்மி தலையிலடித்து கொள்ள,

“டென்ஷன் ஆகாதீங்கம்மா… இது தினை பொங்கல்… உடம்புக்கு நல்லதுதான்… நீங்களும் உட்காருங்க… சாப்பிடலாம்” என்றபடி அவள் வாசுவிற்கு பரிமாற,

“தினை பொங்கலா?” என்று நிம்மி ஆச்சரியத்துடன் பார்த்தார்.

வாசு பொங்கலை சட்னியில் குழைத்து சாப்பிட்டுவிட்டு, “அட இந்த பொங்கல் கூட நல்லா இருக்கே” என்றவர் நிம்மியை பார்த்து,

 “எப்பப்பாரு கஞ்சி செஞ்சே என்னை கொல்றியே… பாரு… கனி சிறுதானியத்துலயே வரைட்டியா டேஸ்டா செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கா” என, அவர் முகம் கடுப்பானது,

“நாங்களும் இந்த வரைட்டி எல்லாம் செய்வோம்… அப்புறம் அதையும் நீங்க கண்டிரோல் இல்லாம தட்டு தட்டா சாப்பிட்டு சுகரை ஏத்துப்பீங்க…” என்று சொல்லி நிம்மி சலித்து கொள்ள,

“ஏறிட்டு போகிறது… தென் ஐ ல் பீ த ஸ்வீட்டஸ்ட் மேன் இன் தி வார்ல்ட் மை ஸ்வீட் ஹார்ட்” என்று வாசு மனைவியை பார்த்து கூலாக பதிலளித்தார். 

“எப்படி பா… ஆன் தி ஸ்பாட்ல இப்படி அடிச்சு விடுறீங்க” என்று கனி சிரித்து கொண்டே கேட்க,

“அதுவா ஒரு ப்ளோல வருதுமா” என்றார்.  

“ஐயோ! இவங்க கூட முடியலயே” என்று நிம்மி தலையிலடித்து கொண்டார்.

கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் அவர்களின் காலை பொழுது இனிதே கழிய, அவர்களிடம் பேசி சிரித்துவிட்டு மேலே சென்ற கனி குளித்து முடித்து கையில் ஒரு கட்டை பையை எடுத்து கொண்டு வீட்டைபூட்டி கொண்டு கிளம்பினாள். படிக்கட்டில் இறங்கிய கனியை பார்த்து,

“எங்க கிளம்பிட்ட” என்று நிம்மி விசாரிக்க,

“கொஞ்சம் மளிகை பொருள் வாங்கணும் ம்மா… அதான் கடைக்கு” என்றாள்.

“நானும் கூட வரவா… உனக்கு கடை தெரியுமா?”

“தெரியும் மா… நம்ம ஸ்கூல் போற வழில இருக்கே”

“இல்ல… அங்கே போகாதே… அவன் பழைய ஸ்டாக்கா வைச்சி இருப்பான்… எல்லா பூச்சி புடிச்சு போயிருக்கணும்… நாலாவது தெரு சந்து முக்குல வாணி ஸ்டோர் இருக்கும்… அவன் கிட்ட கொஞ்சம் நல்லா இருக்கும்… அங்கே வாங்கிக்கோ” என,

“சரிம்மா” என்று தலையசைக்கவும்,

“நடந்து போகதே… தூரம்” என்றார் நிம்மி.

“இல்ல மா பைக்லதான் போறேன்… அரிசி எல்லாம் வாங்க வேண்டி இருக்கு” என்றவள் பைக்கில் சாவியை நுழைத்து திறந்து அதனை ஓட்டி கொண்டு சென்றாள்.

எப்படியோ நிம்மி சொன்ன வழியை வைத்து வாணி ஸ்டோரை கண்டுபிடித்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவள், “அண்ணா! லிஸ்ட்ல இருக்க சாமான் எல்லாம் போடுங்க” என்று அவள் அந்த லிஸ்ட்டை கடைக்காரரிடம் தந்துவிட்டு காத்திருக்கவும் அங்கே வந்த நபர்,

“அண்ணன் ஒரு தீப்பெட்டி” என்றபடி கனி அங்கே நிற்பதை கவனித்தான்.

“அட… நம்ம ஸ்கூல் மிஸ்…” என்றுவிட்டு ரொம்ப தெரிந்தவன் போல,

“வணக்கம் மிஸ்… என்ன கடைக்கு ஜாமான் வாங்க வந்தீங்களா?” என்று கேட்டான். அவனை அவளுக்கு பார்த்த ஞாபகமே இல்லை.

“ம்ம்ம்” என்றவள் தலையை மட்டும் அசைக்க,

“உங்களை எங்கயோ பார்த்திருக்கேன் மிஸ்… ஆனா எங்கன்னுதான் ஞாபகம் வரல… ஆமா உங்க ஊர் எது?” என்றவன் சகஜமாக பேச்சு கொடுக்க, கனியின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அவன் முகத்தை பார்த்தாலும் நல்ல மாதிரியாக தெரியவில்லை.

“என்ன மிஸ்… எந்த ஊருன்னு கேட்டதுக்கு இவ்வளவு யோசிக்கறீங்க” என்று கேட்டு கொண்டே தீப்பெட்டியை வாங்கி தன் கையில் உள்ள சிகரெட்டை பற்ற வைக்க, கனிக்கு எரிச்சலானது.

“நான் எந்த ஊரா இருந்தா உங்களுக்கு என்ன?” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.  

“ஊரை கேட்டதுக்கு எதுக்கு மிஸ் இப்படி கோவிச்சுக்கறீங்க”

“அண்ணா எல்லா போட்டீங்களா… எவ்வளவு ஆச்சு” என்று அவள் அதன் அவனை கண்டுகொள்ளாமல் கடைக்காரனிடம் பேச,

“போட்டாச்சு… விம் பார் மட்டும் இல்லமா… எக்ஸோதான் இருக்கு போடட்டுமா?” என்று கேட்க, “சரிங்க ண்ணா… போடுங்க… எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே சிகரெட்டை புகைத்தபடி அவளை ஒரு மாதிரி பார்த்து கொண்டே அவன் வெளியேறிவிட்டான்.

அவன் செல்வதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவள் அதன் பின் கடைக்காரரிடம் பணத்தை கொடுத்து பையை வாங்கி பைக்கில் வைத்து கிளப்பி கொண்டு சாலையில் செல்லும் போது, “ஒய்” கத்தியபடி அதே நபர் அவள் பைக் அருகில் தன் பைக்கை ஒட்டி கொண்டு வந்தான்.

கனி மிரட்சியுடன் திரும்ப, “அடிங்கோத்தா… நீ சொல்லலனா… நீ எந்த ஊரு… நீ என்ன சாதின்னு தெரியாதாடி எங்களுக்கு?” என்றவன் அடுத்ததாக அவள் சாதி பெயரை சொல்லி இன்னும் மோசமான  வார்த்தைகளால் நிந்தித்துவிட்டு முன்னே சென்றுவிட்டான்.

கனியின் முகம் சிறுத்து போனது, “பொறுக்கி நாய்” என்று அவள் அவனை திட்டி கொண்டே சாலையிலிருந்த பள்ளத்தை கவனிக்காமல் தன்னுடைய இருசக்கர வாகனத்தை அதில் விட்டு சுதாரிக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டாள்.

பைக் அவள் காலில் விழுந்து கிடக்க அதனை தூக்கி கொண்டு எழ முடியாமல் அவள் தத்தளிக்கவும் அந்த வழியாக பைக்கில் வந்த நபர் உடனடியாக இறங்கி பைக்கை தூக்கி ஸ்டான்ட் போட்டுவிட்டு அவளும் எழ, கை கொடுத்தார்.

“தேங்க்ஸ்” என்றபடி அவன் கையை பற்றி எழுந்து நின்றவள் அவன் முகத்தை பார்த்ததும் படக்கென தன் கையை பின்னுக்கு இழுத்து கொண்டாள்.

“என்ன தீட்டு பட்டிருச்சா?” என்று கேட்ட மாயன் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து, “என்ன பேசுற நீ?” என,

“இல்ல… என் முகத்தை பார்த்ததும் வெடுக்குன்னு கையை எடுத்தியே… அதான் தீட்டு பட்டுருச்சான்னு கேட்டேன்” என்றவன் மீண்டும் அதே வார்த்தையை அழுத்தமாக சொல்ல,

“மாயா” என்று அவள் குரல் சீறலாக வந்தது. அவனோ மிக சாதாரணமாக,

“என் பேரெல்லாம் ஞாபகம் இருக்காடி உனக்கு” என்றான்.  

“எது… டி யா… கொஞ்சம் மரியாதையா பேசு” என்றவள் விரலை உயர்த்தி எச்சரிக்கையாக சொல்ல,

“மரியாதைனா எப்படிங்க… கையை கட்டிக்கிட்டு… முதுகு வளைஞ்சு… கும்பிடு போடணும்ங்களா?” என்றவன் வளைந்து அவளை பார்த்து எள்ளல் தொனியில் கேட்கவும் அவள் முகம் குழப்பமாக மாறியது.

“என்ன பிரச்சனை உனக்கு… எதுக்கு என்கிட்ட இப்படி ஏடாகுடமா பேசிட்டு இருக்க”

அவன் ஏளன நகைப்புடன், “நீ என் மாமன் பொண்ணு இல்லடி… அதான் உன்கிட்ட கொஞ்சம் வம்பு பண்ணலாம்னு” என்றதும் அவள் முகம் அசூயையாக மாறியது. உதடுகள் துடித்தன.

“ஏய்! யாரு உனக்கு மாமன் பொண்ணு… அதெல்லாம் இப்போ கிடையாது” என்றவள் எரிச்சலுடன் மொழிய அவன் அவளை ஏறஇறங்க பார்த்து,

“கிடையாதுனா என்ன சொல்ல வர்ற… உங்க அப்பன் என் மாமன் இல்லையா… இல்ல என் மாமன் உனக்கு பெத்த அப்பனே இல்லையா?” என்று கடைசி வரிகளை அழுத்தமாக சொல்ல, அவள் பேச்சற்று நின்றாள்.

அவன் மேலும், “ஊருக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு… பெத்த அப்பன் ஆத்தாவை வந்து பார்க்கணும்னு தோணுச்சாடி உனக்கு… பெரிய இவளாட்டும் பேசுற… நீ எல்லாம் படிச்சு என்னத்த கிழிச்ச… ஆமா இதுல நீ புள்ளயங்களுக்கு பாடம் வேற சொல்லி தர்ற… என்ன? இதைதான் சொல்லி தருவியா… பெத்த அப்பன் ஆத்தாவ மதிக்காதீங்கனு” என்று அவன் சரவெடியாக வெடித்து தள்ள, அவள் முகம் சுருண்டு விழுந்தது. அத்தனை நாளாக தோன்றாத குற்றவுணர்வு அவன் வார்த்தையில் தலை தூக்கியது.

அவனை எதிர்த்து எதுவும் பேச முடியாத நிலையில் அவள் மௌனமாகிட, அவன் தன் பைக்கில் அமர்ந்து ஆவேசமாக கிக்கரை உதைத்தான்.

அது என்னவோ அவள் முகத்திலடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அவளை முறைப்பாக பார்த்துவிட்டு அவன் விர்ரென தன் பைக்கில் பறந்துவிட்டான்.  

காலையில் அவள் அனுபவித்த சந்தோஷமும் உற்சாகமும் நொடி நேரத்தில் தூள் தூளாக நொறுக்கப்பட்ட உணர்வுடன் கீழே சிதறிய மளிகை பொருட்களை பையில் போட்டு, வண்டியை ஓட்டியபடி வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

 

 

shanbagavalli, Chitrasaraswathi and 5 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathijamunaraniRathiThani Sivachitti.jayaramansembaruthi.p
Quote

Evlo thimir irukum inda pakki ku enna pesitu poran, aha mayan sema kovathula irukane enda amma appa pesina dane poi parka avamga dan sema kadupula irukamga, kani ku inda pechu ava vazhkai kudave varum pola nice update dear thanks.

monisha has reacted to this post.
monisha
Quote

ஜான் ஏறினா முழம் சறுக்கும்னு கதையா இருக்கே.. கனி கூட பேச அவ parents தானே விரும்பல.. ஏன் மாயன் இப்படி சொல்லிட்டு போறான்.வேற ஜாதி மிஸ் பாடம் எடுத்தா மண்டைல ஏறாதா 😡😡

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from chitti.jayaraman on June 30, 2022, 10:28 PM

Evlo thimir irukum inda pakki ku enna pesitu poran, aha mayan sema kovathula irukane enda amma appa pesina dane poi parka avamga dan sema kadupula irukamga, kani ku inda pechu ava vazhkai kudave varum pola nice update dear thanks.

thanks ma. kani maathiriayana pengalai kadaisi varai ithu pondra pechchukal thodarum

Quote
Quote from sembaruthi.p on June 30, 2022, 10:45 PM

ஜான் ஏறினா முழம் சறுக்கும்னு கதையா இருக்கே.. கனி கூட பேச அவ parents தானே விரும்பல.. ஏன் மாயன் இப்படி சொல்லிட்டு போறான்.வேற ஜாதி மிஸ் பாடம் எடுத்தா மண்டைல ஏறாதா 😡😡

maayan ipadi pesurana athuku reason irukum. thanks for commenting ma

 

Quote

மாயன் சொன்னது போல் பெற்றோரை பாக்காமல் விட்டது தவறு தானே ....அவர்கள் திட்டினாலும் வாங்கிட்டு போயிருக்கலம் கனி .

சூப்பர் சூப்பர் சிஸ்❤️

Quote

Super ma 

You cannot copy content