You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 19

Quote

தங்கள் அறிவு அச்சுறுத்தி ஒதுங்கச் செய்கிறது என்பதால் பெண்கள், அறிவை ஒளித்து வைத்து ஆண்களுக்கு வலைவீச ஆரம்பித்தனர். ஆண்கள் எதிரில் ஏதும் தெரியாத அப்பாவி மாதிரி நடிக்கும் கலையை பெண்கள் கையாள ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் இருண்டு நாளல்ல. பல நூற்றாண்டுகளாக. ஆனால் பெண்கள் தமக்குள் சகஜமாக இருக்க நேர்ந்த போது ஒரு ரகசிய எழுத்து வடிவில் எழுத படிக்கவே செய்தார்கள்.

இப்படி ஆண்களுக்கு தெரியாமல் பெண்கள் ரகசியமாக பயன்படுத்திய எழுத்து வடிவத்தை ‘நுஷு’ என்கிறார்கள்.

நுஷு என்றால் சீன மொழியில் பெண்ணின் எழுத்து என்று அர்த்தம். ஆக சீன ஆண்கள் எல்லாம் பெண்களை அறிவு கெட்ட முண்டங்கள் என்று நினைத்து கொண்டிருந்த போது பெண்கள் தங்கள் அந்தப்புரங்களில் நுஷுவில் எழுதி காலத்தை தள்ளிகொண்டுதான் இருந்தனர்.

தொடரும்...

19

மளிகை பொருட்களை தூக்கி கொண்டு கனி மாடியேறினாள்.

பைக் காலில் விழுந்ததில் படிக்கட்டுக்கள் ஏறும் போது பயங்கர வலியெடுத்தது. அதனை எப்படியோ பொறுத்து கொண்டு பூட்டை திறந்து வீட்டிற்குள் நுழைந்தவளின், உள்ளம் கொதித்தது.

அவளை அசிங்கமாக நிந்தித்துவிட்டு போனவனை பற்றி கூட அவள் பெரிதாக யோசிக்கவோ கவலைப்படவோ இல்லை. அது போன்ற வக்கிர புத்தி கொண்டவர்கள் நிறைய பேரை அவள் பார்த்திருக்கிறாள். ஆனால் மாயனின் கோபத்தையும் பேச்சையும் அத்தனை சுலபமாக அவளால் எடுத்து கொள்ள முடியவில்லை.

“இவன் யாரு என்னை பத்தி பேசறதுக்கு… என் நிலைமையை பத்தி என்ன தெரியும் இவனுக்கு… பெருசா வாக்காலத்து வாங்கிட்டு வந்துட்டான்… அம்மா அப்பாவாம்”

எதை எல்லாம் அவள் மறக்க நினைக்கிறாளோ அதை எல்லாம் யாராவது ஒருத்தர் நினைவுப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். அடிப்பட்ட அவள் காயத்தின் மீது குத்தி கிளறுகிறார்கள்.

அவளுக்கு எற்பட்டிருக்கும் மனவலிக்கு அப்போதிருக்கும் கால் வலி எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகி போனது.

பிரபுவுடன் அவளை திருமணம் செய்வித்து சென்னைக்கு அனுப்பிய பிறகு அவள் என்ன ஆனாள், எப்படி வாழ்கிறாள் என்று ஒரே ஒரு தடவையாவது வந்து எட்டி பார்த்திருப்பார்களா? ஒழிந்தது சனியன் என்றல்லவா இருந்தார்கள்.

கண்களை மூடி அப்படியே படுக்கையில் சுருண்டு விழுந்தாள்.

“நூலு மாதிரி இருக்கு இந்த செயினு… இது கூட இந்த மூக்குத்தி கம்மல் எல்லாம் சேர்த்தா கூட ஒரு பவனு தேறாது போல” அம்பிகா அவள் அணிந்திருந்த நகைகளை கழற்றி வாங்கி கைகளால் அளந்துவிட்டு தன் கணவன் சேகரை பார்த்து,

“உங்க சொந்தக்கார புள்ளன்னு இரக்கம் பார்த்து கட்டி வைச்சதுக்கு… இழவு… இதான் மிச்சம்” என்றார். கனியின் கண்கள் கலங்கிவிட்டன.

“ரொம்ப வருஷமா அம்மா உண்டியல சேர்த்து வைச்சிருந்த காசுல கஷ்டப்பட்டு வாங்கி போட்டதுங்க அத்தை” என்றதும் அம்பிகாவின் முகம் அஷ்டகோணலாக மாறியது.   

“யாரு காதுல பூ சுத்துற… உங்கப்பன் வெட்டியான்தானே… ஏதாவது பிணத்துல இருந்து உருவினதை மாத்தி போட்டிருப்பான்”

அவர் சொன்னதை கேட்டு கனிக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

கோடீஸ்வரனாகவே இருந்தாலும் செத்த பிறகு அவன் ஓட்டாண்டிதான். பிணத்திலிருக்கும் அறைஞாண் கொடி வரை உருவிய பின்தான் கொண்டுவந்து எரிக்கவோ புதைக்கவோ செய்வார்கள். சுடுகாட்டிற்கு வந்து பிறகும் கூட பிணத்தின் விரலில் இருக்கும் மோதிரத்திற்க்காக அடித்து கொண்ட சொந்த பந்தங்களை எல்லாம் அவள் நிறையவே பார்த்திருக்கிறாள்.

அடித்தட்ட மக்களிடம் அடித்து பேரம் பேசும் இந்த கூட்டமா பிணத்தில் தங்கத்தை விட்டு வைக்க போகிறது. அப்படி விட்டிருந்தால் அவர்கள் வீட்டில் தங்கமும் வைரமுமாக அல்லவா ரொம்பி வழிந்திருக்கும்.    

மரணித்த பின் மனிதனுடன் வர போவது அவன் உடல் மட்டும்தான். அதுவும் கூட சில மணிநேரங்களில் எரிந்து சாம்பலாகிவிடும். அதன் பின் என்ன மிச்சம் இருக்க போகிறது?

“ஏய் கனி… என்னடி யோசிச்சிட்டு நிற்குற” என்று அம்பிகா அவள் தோளில் அடிக்க அவர் கரத்திலிருந்த தன் நகைகளை தவிப்புடன் பார்த்தவள்,

“அந்த மூக்குத்தி மட்டும் என் அம்மாவோடது அத்தை… எவ்வளவு கஷ்டத்துலயும் அம்மா அதை விக்கல… நான் வயசுக்கு வந்த போது அம்மா எனக்கு அதை போட்டுவிட்டுச்சு… அதை மட்டும் கொடுத்திருங்க” என்றவள் கெஞ்சி பார்த்தாள். கொஞ்சமாவது அவர் மனமிறங்குவாரா என்று?

அம்பிகா அலட்சிய பார்வையுடன் “சரி எடுத்துக்கோ… ஆனா அத்தோட நீ உன் துணி மணி எல்லாம் எடுத்துக்கிட்டு ஊருக்கு பஸ் ஏறிடணும்… அப்படியே திரும்பி வந்தாலும் கைல பதினஞ்சாயிர ரூபாய் பணத்தோடதான் வரணும்” என்று அடித்து சொல்லிவிட்டார். கனி மௌனமாக தலையை குனிந்து கொண்டாள். கண்ணீர் பெருகியது.

“நீ செய்றது கொஞ்சங் கூட நியாயமே இல்ல அம்பு” என்று சேகர் கண்டிக்க,

“அப்படினா நீ கொடுக்குறியாயா… காலேஜுக்கு கட்ட பீஸ் பணத்தை… குடிகார நாதாரி” என்று அம்பிகா பதிலுக்கு கத்தியதும் அவர் வாயை கப்பென்று மூடி கொண்டார்.

“அதானே… காசு கிடைச்சா குடிச்சிட்டு திரியிற பேமானிதானே நீ… உன்னை நம்பி இரண்டு புள்ளைய பெத்த என்னை சொல்லணும்… ஏதோ என் பையன் பிரபு இருக்கிறதால இந்த குடும்பம் நடக்குது” என்றவர் புலம்ப தொடங்கியதும் சேகர் அங்கிருந்து நழுவிவிட்டார்.

அம்பிகா அவள் நகையை விற்று கொண்டு வந்து காயத்ரியை பொறியியல் கல்லூரியில் பணம் கட்டி சேர்த்துவிட்டார்.

அந்த வீட்டிற்கு மருமகளாக வந்து ஒரு மாதம்தான் இருக்கும். தீப்பெட்டி போலிருக்கும் ஒண்டு குடித்தன வீடு. துணி மணிகள் சாமான்கள் என்று குப்பை போல பொருட்கள் வீடு முழுக்க அடைந்து கிடக்கும். அந்த பொருட்களுடன் பொருட்களாக அவளும் அங்கே வந்து சேர்ந்துவிட்டாள்.

அம்பிகா ஒரு பெரிய துணி கடையில் வேலை பார்க்கிறார். காலை ஒன்பது மணிக்கு கிளம்பினால் இரவு பதினொரு  மணிக்குதான் வீடு திரும்புவார். சேகர் ஏதாவது கிடைக்கிற வேலைகளை செய்து கொண்டு அதில் கிடைக்கிற பணத்தில் குடித்து கொண்டு ஊர் சுற்றுவார்.

அவள் வந்த புதிதில் காயத்ரி தன் பெரியப்பா வீட்டில் தங்கி இருந்தாள். கல்லூரி தொடங்கிய பிறகுதான் அவள் அங்கு வந்து சேர்ந்தாள். பிரபு ஏதோ ஒரு பெரிய பங்களாவில் செக்யூரிட்டி கார்டாக பணி புரிகிறான். பெரும்பாலும் அவன் இரவு பணிக்குதான் செல்வான்.

விடியற்காலையில் எழுந்து அவர்கள் அம்பிகாவிற்கும் காயத்ரிக்கும் காலை உணவு சமைத்து கொடுத்து மதிய உணவை தயார் செய்து டிபன் பாக்ஸில் கட்டி கொடுக்க வேண்டும். பிரபு மட்டும் காலையும் மதியமும் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவு உணவை கட்டி எடுத்து கொண்டு போவான்.

 வந்த புதிதில் அவளுக்கு சமைக்க தெரியாது என்று சொல்ல, அம்பிகா பேசாத பேச்சு இல்லை. பக்கம் பக்கமாக திட்டி தீர்த்தார்.

அதுவும் அந்த கெரோஸின் அடுப்பை எல்லாம் அவள் பார்த்தே பழக்கமில்லை.

   ஆனால் அம்பிகா விடவில்லை. அடுத்த இருபது நாளில் ஏனோ தானோவென்று அவளுக்கு சமைக்க கற்று கொடுத்துவிட்டார். அவற்றுடன் குடம் குடமாக கார்ப்ரேஷன் தண்ணீர் பிடிப்பது தொடங்கி துணி துவைப்பது வீட்டை பெருக்கி துடைப்பது… பாத்திரங்களை கழுவுவது என எல்லா வேலைகளையும் அவள் தலையில் கட்டிவிட்டார்.   

ஒருமுறை பருப்பு அளவு தெரியாமல் சாம்பார் வைத்து அது  மீதமாகிவிட்டதில் அம்பிகா சாமியாடிவிட்டார்.

 “பருப்பு என்னடி சும்மா வருதா… நீ பாட்டுக்கு அள்ளி கொட்டி வைச்சு இருக்க… ரேஷன் கடைல கால் கடுக்க நின்னு இதெல்லாம் வாங்கி இருந்தாதானே தெரியும்” என்றவர் அடுத்த நாளே ரேஷன் கார்டை கையில் கொடுத்து அந்த வேலையையும் அவள் தலையில் கட்டி வெயிலில் வரிசையில் நிற்க வைத்துவிட்டார். இது எதுவுமே அவளுக்கு பழக்கமில்லாத வேலைகள் எனினும் அவளுக்கு வேறு வழியும் இல்லை.

 காத்திருந்து அனைத்து பொருள்களையும் வாங்கி தூக்கி வருவதற்குள் முதகெலும்பு உடைந்து போனது. ஒவ்வொரு மாதமும் இது தொடர் கதையானது.

பெயருக்குதான் அவள் அந்த வீட்டிற்கு மருமகள். ஆனால் உண்மையில் அவள் அந்த வீட்டின் வேலைக்காரி. அப்படிதான் நடத்தப்பட்டாள்.

சேகர் ஒருவர்தான் அந்த வீட்டிலேயே அக்கறையாக பேச கூடிய மனிதர். “என்னம்மா சாப்பிட்டியா… ஏன் மா சும்மா வேலையே செஞ்சுக்கின்னு கிற… கொஞ்ச நேரம் இப்படி உட்கார கூடாதா?”

“இல்ல மாமா… அத்தை வர்றதுக்குள்ள மாவை அரைச்சு வைக்கணும்”

சேகர் அத்தனை அன்பான மனிதர். ஆனால் குடிப்பழக்கம் ஒன்றுதான் அவரிடம் இருக்கும் ஒரே குறை. குடித்துவிட்டு வந்தால் பழைய விஷயங்களை பேசி புலம்பி தீர்ப்பார்.

“நீ சின்ன வயசா இருக்கும் போது… நம்ம வூட்டுலதான் விளாடின்னு இருப்ப… உனக்கு ஞாபகம்குதா கனி… அப்பவே நீ இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு நான் ஆசைப்பட்டுக்கிறேன்… ஆனா அதே மாரியே மச்சான் உன் கல்யாணத்துக்கு பேசுன போது எனக்கு அவ்வளோ சந்தோஷம்… ஆனா இப்போ யோசிச்சா… ஏன் டா இந்த வூட்டுக்கு மருமகளா நீ வந்துக்கினன்னுக்குது”

“விடுங்க மாமா… இதையே எத்தன தடவை சொல்வீங்க” அவளுக்கு இதெல்லாம் கேட்டு கேட்டு அலுத்துபோய்விட்டது. முதல் முறை இந்த வசனத்தை அவர் பேசும் போது அவள் தன்னுடைய நினைவு பெட்டகத்தில் பிரபுவை தேடினாள்.

ஆனால் நகரத்தில் இறந்து போன மூத்த அண்ணனும் அவர்கள் வாழ்ந்த ஒண்டு குடித்தன வீடும்தான் அவள் நினைவிலிருந்தது.

விதி எப்படி எல்லாம் ஒரு முடிச்சு போடுகிறது. சிறு வயதிலேயே பிரபுவுடன் காயத்ரியுடன் எல்லாம் அவள் விளையாடி இருக்கிறாள் என்பது விசித்திரமான உணர்வை தந்தது.

பிரபு. சராசரியான உயரம். அளவான மீசை. கச்சிதமான உடல் வாகில் மாநிறமாக இருப்பான். அவனுடைய இளமை தோற்றத்தில் ஆண்மை இருந்தது. திருமணமான புதிதில் அது அவளை ஈர்க்கவும் செய்தது.

என்ன காரணமோ? அத்தகைய ஈர்ப்புணர்வு அவனுக்கு அவளிடம் ஏற்படவில்லை. அவள் முகம் பார்த்து பேசியதில்லை. முதல் இரவு அன்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு படுத்துறங்கியவன் அவனாகத்தான் இருப்பான்.

அப்போதிருந்த மனநிலையில் அவளும் உடல் தேவைகளை பற்றி யோசிக்கவில்லை. மெல்ல பேசி புரிந்து கொண்ட பிறகு காதலுடன் இணையலாம் என்று எண்ணி கொண்டாள்.

ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களில் பிரபு அவளிடம் பேச கூட முயலவில்லை. நைட் ஷிப்ட் முடித்து காலை எட்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவான். குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு உறங்கி போவான். மீண்டும் மாலை நான்கு மணிக்கு எழுந்து உணவு உண்டுவிட்டு தன்னுடைய காக்கி உடையை அணிந்து கொண்டு புறப்பட்டுவிடுவான்.

உணவு பரிமாறும் போது, “குழும்பு ஊத்தவா… சாதம் வைக்கவா?” இது போன்ற கேள்விகளுக்கு, “உம் சரி” என்று மிக சிக்கனமாக பேசுவான்.

முதல் மாதம் அவனாக பேசுவான் என்று அமைதியாக காத்திருந்தாள். இரண்டாவது மாதம் அவனுக்கு என்ன பிரச்சனை என்று குழம்பி தவித்தாள். மூன்றாவது மாதம் அவளாக அவனிடம் பேச முயன்றாள்.

அப்படி அவளாக பேசிய போது அவன் கண்டு கொள்ளாமல் பாயை விரித்து படுத்து கண்களை மூடி கொள்வான். அதற்கு மேல் என்ன பேசுவது.

அதன் பிறகுதான் அவனுக்கு தன் மீது விருப்பமே இல்லை என்று ஊர்ஜிதப்படுத்தினாள். கோபத்தை காட்டுவதற்கு கூட அவனுடன் சகஜமான உறவு இல்லையே!

யாரிடமாவது தன்னுடைய ஆற்றாமையை சொல்லி அழ வேண்டும் போல இருக்கும். ஆனால் யாரிடம் சொல்வது. திருமணம் செய்து கொடுத்த கையோடு பிறந்த வீட்டு தொடர்பே அறுந்து போய்விட்டது.

‘அம்மா வீட்டுக்கு போகணும்’ என்று அம்பிகாவிடம் சொல்ல பயமாக இருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் அவளுடைய ஏக்கம் தாபவுணர்வுகள் எல்லாம் விரலிடுக்கில் சரியும் மணலாக கரைந்து காற்றோடு போய்விட்டது.

 வேலை வேலை வேலை என்று வேலைகள் அவளை மூழ்கடித்தனவா அல்லது அவள் தன் உணர்வுகளுக்கு பயந்து  வேலைகளுக்குள் தன்னை மூழ்கடித்து கொண்டாளா என்று அவளுக்கே தெரியவில்லை.

ஒரு வகையில் ஓய்வு இல்லாமல் செய்யும் அந்த வேலைகள்தான் அவளுக்கு ஒரே ஆறுதல். என்றாவது ஒரு நாள் வேலை குறைவாக இருந்தால் அவ்வளவுதான். அவளது சுயபச்சாதாப உணர்வு அவளை அணுஅணுவாக சித்ரவதை செய்யும்.

சில நேரங்களில் போர்வையை போர்த்தி உறங்கி கொண்டிருக்கும் பிரபுவின் தலையில் அம்மி கல்லை போட்டுவிட்டாள் என்ன என்று ஆத்திரம் வரும். ஆனால் அந்தளவுக்கு அவளுக்கு தைரியம் இருந்தால்தான் பராவாயில்லையே!

தான் வளர்ந்த சாதி குலத்தினால் சிறு வயதிலிருந்து அவளுக்கு ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மை அவளை வாயில்லாத பூச்சியாகவே மாற்றியிருந்தது. மனதிற்குள்ளேயே புழுங்கி அழுவது அவள் வாழ்வில் எழுதப்படாத விதியாகி போனது.

ஆனால் அதற்கும் ஒரு விடிவு காலம் வந்தது. பக்கத்து வீட்டில் சசி அக்காவும் அவள் கணவனும் புதிதாக குடித்தனம் வந்ததிலிருந்து அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குடித்தனவாசிகள் யாரிடமும் பேச்சு வைத்து கொள்ள கூடாது என்று அம்பிகா கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார்.

ஆதலால் அவளாக யாரிடமும் பேச மாட்டாள். ஆனால் சசி அக்கா அவளாகவே வந்து பேச்சு கொடுத்தாள். பழகினாள். நல்ல தோழியாக மாறினாள்.  

‘எனக்கு ஒன்னும் வேலை இல்ல கனி… நீ துவைச்சு கொடு… நான் அலசி கொடுக்கிறேன்’

‘இருக்கட்டும் கா… பரவாயில்ல… ’

‘கொடு இங்க’ என்று கேட்காமலே உதவிகள் செய்வாள்.

சில நேரங்களில் இது போன்ற சில நல்ல மனிதர்களை சந்தித்த காரணத்தால்தான் அவள் தன் பிரச்சனைகளில் மொத்தமாக மூழ்கி போய்விடாமல் தேறி கொண்டால் என்று தோன்றும்.

வீட்டு வேலைகளை முடித்ததும் கனியை இழுத்து வம்படியாக உட்கார வைத்து கதை அளந்து கொண்டிருப்பாள்.

“ராஜேஷ் என்னை துரத்தி துரத்தி லவ் பண்ணான்” என்று தொடங்கி அவளின் காதல் கதை, வீட்டை விட்டு ஓடி வந்த கதை, என்று கதை கதையாக பேசுவாள். கனிக்கும் அவற்றை எல்லாம் கேட்க சுவாரசியமாகதான் இருக்கும். சில நேரங்களில் ஏக்கமாகவும் இருக்கும். இப்படியொரு காதல் வாழ்க்கை தனக்கு அமையவில்லையே என்று. மின்னலடித்தது போல அருள்மொழியின் முகம் வந்து போகும்.  

அவள் ஏக்கங்களையும் தாபங்களையும் இன்னும் அதிகப்படுத்தும் விதமாக சசி லைப்ரரியில் எடுத்து வந்து படிக்கும் அவளின் விருப்பமான நாவல்களை இவளுக்கும் படிக்க கொடுப்பாள்.

உயர்மட்ட நாகரிகத்தில் சர்வதேச நாட்டு பெண்களின் திருப்தி இல்லாத தாம்பத்யத்திற்கான வடிகாலாக எழுதப்பட்ட மில்ஸ் அன் பூன் வகையறா நாவல்களின் தமிழ் வெர்ஸன் நாவல்கள்தான் அவை.  

எதார்த்திதற்கு அப்பாற்ப்பட்ட அந்த மல்டிபில்லியனர் கதாநாயகர்களின் காதல் லீலைகள் எல்லாம் கனியின் தாபத்தை கூட்டியது. இரவு உறங்கவிடாமல் புரளச் செய்தன.

குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது போல திரும்ப திரும்ப இந்த  நாவல்களை சுற்றியே மனம் சுழன்றது. அவை அவள் மூளையை மழுங்கடிக்கின்ற போதை என்பதை அவள் உணராமலே அந்த ஆபத்தான கற்பனை வளையத்திற்குள் சுழன்றாள்.

அப்படி ஒருமுறை அவள் படித்துவிட்டு அலமாரியில் வைத்த நாவலை காயத்ரி தன் பாடபுத்தகத்தில் ஒளித்து வைத்து படித்து கொண்டிருந்த போது அம்பிகாவிடம் மாட்டி கொண்டாள்.

அதனை கையில் எடுத்து பார்த்தவர், “வருசா வருசம் உனக்கு பீஸ் கட்ட…  நான் நாயா பேயா அலையறேன்… ஆனா நீ என்னடானா சொகுசா உட்கார்ந்துக்குன்னு பாட புத்தகத்துல கதை புக் வைச்சு படிச்சிட்டு இருக்கியா” என்று உக்கிரமாக கத்த, காயு பயந்து நடுங்கினாள்.

“இல்லமா… அண்ணி படிச்சிட்டு இருந்த புக்கு” என்று இவளை கை காட்டிவிட, அம்பிகா பட்டென்று திரும்பி முறைத்தார். கனிக்கு பக்கென்றானது.

ஆனால் எதுவும் சொல்லாமல் மகள் புறம் திரும்பியவர், “அவ வீட்டுல கிடக்கிறா… என்ன இழவயோ படிக்கிறா… ஆனா நீ எதுக்குடி இதை எல்லாம் படிக்கிற” என்று சீறிய அம்பிகா உடனடியாக துடைப்பதை எடுத்து வந்து,

“அம்மா வேண்டாம்மா… வலிக்குது ம்மா” என்று கெஞ்சி கதறிய மகளை துளியும் இரக்கமில்லாமல் அடி வெளுத்து வாங்கிவிட்டார். கனிக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. அவளுக்கு தெரிந்தவரை அம்பிகா மகளை மிரட்டியது கூட இல்லை.

காயு அழுது தேம்பி கொண்டிருக்க அம்பிகா அவள் அருகில் அமர்ந்து கொண்டு, “உங்க அண்ணனுக்குதான் படிப்பு ஏறல… பன்னான்டாவது பெயிலாயிட்டான்… நீயாச்சும் நல்லா படிச்சு பெரிய உத்தியோகத்துக்கு எல்லாம் போவேன்னு கனவு கண்டா… நீயும் இப்படி பண்றியே பாவி!

என்னை மாதிரி நீயும் ஒரு குடிகாரனுக்கும் பொறுக்கிக்கும் வாக்கப்பட்டு காலம் பூரா கஷ்டப்பட கூடாதுன்னுதான் நான் கஷ்டப்படுறேன்… உழைச்சு சாவுறேன்” என்று புலம்ப,

“நான் ஒழுங்கா படிக்கிறேன் மா… இனிமே இந்த மாதிரி படிக்க மாட்டேன்மா” என்று காயு தேம்பியபடி சொல்ல,

“அடிச்சது ரொம்ப வலிக்குதா?” என்று கனிவுடன் மகளை மடியில் சாய்த்து கொண்டு,

“பதினைஞ்சு பதினாறு வயசுலேயே உனக்கு ஒரு மாப்பிளை பார்த்து கட்டி கொடுத்து… என் கடமை முடிஞ்சுதுன்னு இருக்க எனக்கு எவ்வளவு நாள் ஆகி இருக்கும் சொல்லு… ஆனா நான் ஏன் டி அதை செய்யல…

ஏன் னா என் வாழ்க்கை உனக்கு வேணாம்… நாய் படாத பாடு” என்று பெருமூச்செறிந்தவர் மேலும்,   

“பொம்பளை புள்ளயங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் காயு… நீ நல்லா படிச்சு… நம்ம சொந்தகாரங்க எல்லாம் மதிக்கிற மாதிரி நல்ல உத்தியோகத்துக்கு போகணும்கிறதுதான் என் ஆசை… கனவு எல்லாம்” என்று அறிவுரை கூற, அதெல்லாம் காயத்ரிக்கு புரிந்ததோ இல்லையோ. கனியின் ஆழ்மனதில் நன்றாகவே பதிந்தது.

அதுநாள்வரை அம்பிகாவை பார்த்தாலே அவளுக்கு வெறுப்பும் கோபமும்தான் வரும் . ஆனால் இன்று அவரின் பேச்சை கேட்ட பிறகு கனிக்கு அவர் மீது மதிப்பு வந்தது.

எல்லாவற்றிற்கும் மேல் அவளுக்கு தன் படிப்பை எப்பாடியாவது தொடர வேண்டுமென்ற எண்ணம் உருவானது. அப்போதைக்கு அதற்கான வழிமுறை தெரியவில்லை என்றாலும் அந்த எண்ணத்தை அவள் தன் மனதிற்குள் வெறித்தனமாக வளர்த்து கொண்டாள். அதற்கான வாய்ப்பிறக்காக காத்திருந்தாள்.

 

shanbagavalli, jamunarani and 3 other users have reacted to this post.
shanbagavallijamunaraniRathiThani Sivasembaruthi.p
Quote

என்னடா இந்தம்மா மருமகளின் நகைய வாங்கி மகளை படிக்கவைக்கிறாங்க .....

பிரபு பிடிக்காத திருமணத்தை ஏன் பண்ணிகிட்டான்???

கனி தான் பாவம்

சூப்பர் சூப்பர் சிஸ்❤️

monisha and Rathi have reacted to this post.
monishaRathi
Quote

அம்பிகா அத்தையோட மறுபக்கம் இப்படியா இருக்கனும். ஆரம்பத்துல இருந்த மாதிரி நல்லவங்களவே இருந்து இருக்கலாம்.. காயுக்கு எடுத்து சொன்னது 👌🏻👌🏻. சிவப்பில் நீங்கள் குறிப்பிட்டுஇருக்கும் விஷயத்தில் சொன்னமாதிரி பெண்கள் தங்கள் அறிவை மறைச்சு வச்சு அவங்க இனத்தை பெருக்கினதை தவிர வேற என்ன யூஸ் 😔

monisha and Rathi have reacted to this post.
monishaRathi
Quote
Quote from Thani Siva on July 2, 2022, 7:01 PM

என்னடா இந்தம்மா மருமகளின் நகைய வாங்கி மகளை படிக்கவைக்கிறாங்க .....

பிரபு பிடிக்காத திருமணத்தை ஏன் பண்ணிகிட்டான்???

கனி தான் பாவம்

சூப்பர் சூப்பர் சிஸ்❤️

பிரபுவோட பாயின்ட் ஆப் வியூ அடுத்த எபில வரும்.

Thani Siva has reacted to this post.
Thani Siva
Quote
Quote from sembaruthi.p on July 2, 2022, 7:52 PM

அம்பிகா அத்தையோட மறுபக்கம் இப்படியா இருக்கனும். ஆரம்பத்துல இருந்த மாதிரி நல்லவங்களவே இருந்து இருக்கலாம்.. காயுக்கு எடுத்து சொன்னது 👌🏻👌🏻. சிவப்பில் நீங்கள் குறிப்பிட்டுஇருக்கும் விஷயத்தில் சொன்னமாதிரி பெண்கள் தங்கள் அறிவை மறைச்சு வச்சு அவங்க இனத்தை பெருக்கினதை தவிர வேற என்ன யூஸ் 😔

இயல்பிலேயே பெண் இனம் என்பது ஆளுமையான இனம்தான். ஆனால் திரும்ப திரும்ப அடிச்சு அடைச்சு வைக்கும் போது அவங்க திறமைகளையும் மறைத்து வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  வட்டத்திலயே ஓடி பழக்கப்பட்ட ரேஸ் குதிரை மாதிரித்தான் நாம பழக்கப்படுத்தப் பட்டிருக்கோம். இன்னும் முழுவதுமாக நம்முடைய அடிமை மனப்பான்மைல இருந்து வெளியே வரணும். அங்கே மாற்றம் வரும்.

Rathi has reacted to this post.
Rathi
Quote

Super ma 

You cannot copy content