You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 28

Quote

ஐந்தாம் யுக்தி : ஓசி சவாரி செய்ய சரியான ஆள் அமையாவிட்டால், வேறொரு ஆணையோ அல்லது தனக்கு பிறந்த மகனையோ அந்த ஸ்தானத்துக்கு உயர்த்தி, அவன் மூலமாக ஆட்சி செய்வது

ஆறாம் யுக்தி : இதில் தாயிற்கு பிறந்தது ஆண் இல்லை. வெறும் பெண் குழந்தைதான் என்றால், அந்த தாய் தன் மகனையே ஓர் ஆணை போல வளர்த்து, அந்த ஆண்மைப்படுத்தப்பட்ட பெண் குழந்தை மூலமாக தன் ஆசையை தீர்த்து கொள்வாள்.

ஏழாம் யுக்தி : சுய ஆண்மயமாக்கல். இப்படி தன் பதவி ஆசையை தீர்த்து கொள்ள தோதான கணவனோ, காதலனோ, மகனோ, மகளோ, வாய்க்காத பெண், தன்னைத்தானே ஆண்மை படுத்தி கொள்வாள். மறைமுகமாக ஆட்சி செய்யும் தந்திரமெல்லாம் எதுவும் இல்லாமல், வெளிப்படையாகவே ஒரு பெண் தன் சுயத்தை மட்டுமே முதலாகக் கொண்டு பெரும் பதவியை வகிக்கும் இந்த ஏழாம் வகை உத்திதான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தானது. காரணம, இந்த உத்தியில்தான் ஒரு பெண், பொதுவாக ஆண்கள் தங்களை பற்றி நம்பிக்கொண்டு இருக்கும், 'நான்தான் மிகப் பெரியவன்' என்கிற சுய அபிப்பிராயத்துக்கு நேரடியாக சவால் விடுகிறாள். 

28

கனி மாயனின் பைக்கை பின்தொடர்ந்து தன் பைக்கை இயக்கி கொண்டு செல்ல, அவன் சுடுகாட்டிற்கு போகும் வழியின் கொஞ்சம் முன்பாகவே நிறுத்திவிட்டிருந்தான்.

தளம் அமைத்து கட்டப்பட்டிருந்த வீட்டை பார்த்தவள் சந்தேகத்துடன், "இந்த வீடா" என்று மாயனிடம் வினவ,

"ஆமா வா" என்றவன் இறங்கி உள்ளே சென்றான்.

வியப்புடன் அவ்வீட்டை பார்த்தபடி இறங்கினாள். அவள் அங்கே இருந்த சமயங்களில் அவர்கள் பகுதியில் இது போன்ற தளம் அமைத்த வீடுகளே கிடையாது. பெரும்பாலும் கூரை வேய்ந்த வீடுகள்தான்.

வீட்டின் மாடியிலிருந்த நித்திய மல்லி கொடி சரிந்து மாலையாக தொங்கி கொண்டிருந்த காட்சியை பார்த்தபடி நடந்தவள் திகைப்புற்றாள். குடை போல நின்றிருந்த குல்மொஹர் மரத்தை பார்த்ததும் மனம் பரவசப்பட்டது. இனம் புரியாத ஒரு உத்வேகம் பொங்கி வழிந்தது.

அவள் அப்படியே நின்றுவிட, "ஏன் அங்கேயே நிற்குற? உள்ளே வா" என்றபடி வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள் வேலிக்கு இடையிலிருந்த சிறிய மரக்கதவை தள்ளி கொண்டு சென்றான்.

பூக்கள் பூக்காவிட்டாலும் அந்த மரமே தனி அழகுதான்.

அதனை ரசித்தபடி அவளும் உள்ளே வர மாயன் திரும்பி, "அத்தை உன்னை பார்த்ததும் எவ்வளவு சந்தோஷப்பட போறாங்க பாரேன்" என, பல வருடங்களுக்கு பிறகு தன் பெற்றோரை பார்க்கும் ஆவல் அவளுக்குள் புகுந்து கொண்டது.

பார்வையை சுழல விட்டு கொண்டே வர வீட்டிற்கு அருகே இருந்த கூரைக்குள் கருவாட்டு குழம்பின் வாசம் தூக்கி அடித்து கொண்டிருந்தது.

அந்த கூரைக்கு கீழே அடுப்பில் கட்டையை வைத்து நெருப்பை ஏற்றி சமைத்து கொண்டிருந்தவரிடம், "அத்தை... யாரு வந்திருக்கா பாரு" என்றபடி மாயன் அவரை நெருங்கி தோளை பற்றி தூக்கினான்.

கனியின் மனம் தவிப்புற்றது. மனதினோரத்தில் மெலிதாக ஒரு பயவுணர்வு அழுத்தியது. "யாரு மாயா?" என்றபடி தூக்கி சொருகியிருந்த புடவை கொசுவத்தை இறக்கிவிட்டு திரும்பியவரின் விழிகள் மகளை பார்த்த மாத்திரத்தில் கண்ணீரில் நனைந்தன.

"கனி" என்று பாய்ந்து வந்து மகளை சேர்த்து அணைத்து பிடித்து கொண்டு சாந்தி விம்மி அழ தொடங்கிவிட்டார். அவளும் அவரை அணைத்து கொண்டு அழுதாள்.

இருவரும் உணர்ச்சிமயமாக தங்களை மறந்து கண்ணீர் வடித்து கொண்டிருக்க, வீட்டின் உள்ளே இருந்து வந்த செவ்வந்தி இந்த காட்சியை பார்த்ததும் நெகிழ்ந்து போனார்.

மெல்ல தலையை நிமிர்த்தி மகளின் தோற்றத்தையும் மாற்றத்தையும் அளந்த சாந்தியின் பார்வையில் பெருமை பொங்கி வழிந்தது.

"என் தங்கம்... இப்படி உன்னைய பார்க்க எம்புட்டு நாளா காத்து கிடந்தென் தெரியுமா" என்று அவள் கன்னத்தை வழித்து முத்தம் பதிக்க,

கனியால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அழுது கொண்டே, "இவ்வளவு பாசத்தை வைச்சிட்டு ஏன் ம்மா என்கிட்ட கோபமா பேசுன" என்று கேட்க,

மகளை ஆழ்ந்து பார்த்தவர், "உனக்கு இனிமே இந்த சுடுகாட்டு வாழ்க்கை வேணாம்தான் கண்ணு... அதேல்லாம் எங்களோட போகட்டும்... நீ யாரையாச்சும் கண்ணாலம் கட்டிக்கிட்டு மருவாதையா வாழணும்... அதை காது குளிர கேட்டா போதும்னு இருந்தோம் கனி" என,

அந்த வார்த்தைகளை கேட்டவள் நெகிச்சயுடன் மீண்டும் தாயை கட்டி கொண்டு அழ,

"இபப்டியே எம்புட்டு நேரமா வாசலிலயே அம்மாவும் பொண்ணும் கட்டி பிடிச்சு அழ போறீங்க" என்று மாயன் சொல்லவும்தான் இருவரும்
இயல்பு நிலைக்கு திரும்பினர்.

சாந்தி முந்தானையில் கண்களை துடைத்து கொண்டு, "வா கனி... உள்ளர போய் உங்க அப்பாவை பார்க்கலாம்" என்று அழைத்தார்.

வாயிலில் செவ்வந்தி நிற்க அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்த தடங்கள். அவர் முன்பு போல மெலிந்த பலவீனப்பட்ட தோற்றத்தில் இல்லை. ஆரோக்கியத்துடன் தென்பட்டார்.

"எப்படி இருக்க கனி?" என்று அவள் கரங்களை சேர்த்து பிடித்து கொண்டு அன்புடன் விசாரிக்க,

"நல்லா இருக்கேன் அத்தை... நீங்க நல்லா இருக்கீங்களா?" என்றவள் புன்னகையுடன் கேட்டாள்.

"நல்லா இருக்கேன்டா கண்ணு" என்றவள் கன்னத்தை தட்டியவர் கையை பிடித்து உள்ளே அழைத்து செல்ல,

சாந்தி அதற்கு முன்பாக வீட்டின் முகப்பறையில் ஓரமாக கட்டிலில் கிடந்த கன்னியப்பனிடம் மகள் வந்ததை தெரிவித்து கொண்டிருந்தார். தந்தையின் நிலையை பார்த்ததும் அப்படியே உடைந்து நின்றுவிட்டாள். மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவரை அப்படியொரு நிலையில் பார்க்க முடியாத தவிப்புடன் கால்கள் முன்னேற முடியாமல் கெஞ்சியது.

"அப்பாவை பாரு கனி" என்று சாந்தி அழைக்க கன்னியப்பன் படுத்தபடியே சிரமப்பட்டு மகளை பார்க்கும் ஆவலில் தலையை திருப்பினர்.

மனதை திடப்படுத்தி கொண்டு அருகே சென்றவள் கட்டிலின் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்து கொள்ள அவளை தூக்கி வளர்த்த கரம் தோல் சுருங்கி நடுக்கத்துடன் அவள் தலையை ஆதுரமாக தொட்டது.

அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல், "அப்பா" என்று அவர் கையை பிடித்து கொண்டு, "இந்த நிலைமைல இருந்த உங்களை இத்தன நாளா நான் பார்க்க கூட வரலையே பா... என்னை மன்னிச்சிடுங்க பா" என்று கண்ணீர் விட்டு கதற, அவர் மூச்சு திணறலுடன் சிரமப்பட்டு பேசினார்.

"அழாதே கனி... எனக்கு உன் மேல கோபம் எல்லாம் இல்லடா... நீ நல்லா இருந்தா அதுவே போதும்"

அந்த வார்த்தைகளை கேட்டதும் அவளின் அழுகை அதிகமானது. இந்த நிலையிலும் தான் நன்றாக இருக்க வேண்டுமென்று மட்டும் யோசிக்கும் இந்த நல்ல உள்ளங்களை தான் புரிந்து கொள்ளாமல் போனோமே என்று அவள் விம்மி அழுதாள்.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல் என்பார்கள். தானும் அப்படி கல் நெஞ்சு படைத்த சுயநலம் பிடித்தவளாக இருந்துவிட்டோம் என்ற குற்றவுணர்வில்,

"பாவி பா நான்... நீங்க இத்தனை நாளா எப்படி இருக்கீங்கனு கூட வந்து பார்க்காம சுயநலபிடிச்சவளா இருந்திருக்கேன்" என்று உணர்ச்சிவசப்பட்டு முகத்திலறைந்து கொண்டு அழ,

மாயன் பதட்டத்துடன், "அத்தை கனியை சமாதானப்படுத்துங்க" என, சாந்தியும் செவ்வந்தியும் அவளை தேற்றினர். மெல்ல மெல்ல அவள் அழுகை மட்டுப்பட்டிருந்தது.

"அழுது அழுது தொண்டை வறண்டு போயிருக்கும்... இந்தா... இந்த டீயை குடி" என்று மாயன் தேநீரை நீட்ட,

"புள்ளயக்கு ஒரு டீ போட்டு கொடுக்கணும்னு எனக்கு தோணுச்சா" என்று செவ்வந்தி சொல்லி கொண்டே அவன் நீட்டி கொண்டிருந்த டம்ளரை வாங்கி, "குடிடா மா" கனியின் கையில் திணித்தார்.

மாயனை அவள் நன்றியுடன் நிமிர்ந்து பார்க்க அதனை உணர்ந்தவன் மெல்லிய புன்னகையை சிந்தினான்.

"சரி நீங்க பேசிட்டு இருங்க... நான் கடைக்கு போயிட்டு வரேன்" என்றபடி சுவற்றில் மாட்டியிருந்த பை ஒன்றை எடுத்து கொண்டவன், "ஏன் கனி உனக்கு ஆட்டு கறிதானே பிடிக்கும்" என்று கேட்க,

"அதெல்லாம் வேண்டாம் மாயா... அம்மா செஞ்ச கருவாட்டு குழம்பே போதும்... வரும் போதே வாசனை பிடிச்சிட்டேன்" என்றவள் சொல்ல எல்லோர் முகமும் மலர்ந்தது.

சாந்தி தலையில் கை வைத்து கொண்டு, "ஐயோ! குழம்பை அடுப்புல வைச்சிட்டு வந்துட்டேன்" என்று பதறி எழ,

"உட்காரு அத்தை... நான் அதை எப்பவோ அணைச்சிட்டேன்" என்றான் மாயன்.

"நல்ல வேலை செஞ்ச போ... இல்லனா சட்டியோட குழம்பும் கருகிட்டு இருக்கும்" என்று ஆசுவாசமாக சாந்தி மூச்சை இழுத்துவிட,

"அத்தையோட கருவோட்டு குழம்பை நான் அப்படி கருக வுட்டுருவேனா" அவர்கள் இருவரும் பேசுவதை கனி ஆச்சரியமாக பார்த்தாள்.

"சரி சரி... நான் போய் கறி வாங்கியாந்துடுறேன்" என,

"நான் வேண்டாம்னு சொல்றேன் இல்ல" என்று கனி சொல்ல,

"நீ வேண்டாம்னு சொன்னாலும் நான் வாங்கியாருவேன்" என்று விதண்டாவாதமாக சொல்லிவிட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு கிளம்பிவிட்டான்.

"வேண்டாம்னு நீங்களாவது சொல்ல கூடாதா அத்தை" என்றவள் செவ்வந்தியை பார்க்க,

"அட வாங்கியாராட்டும்... எம்புட்டு வருசம் கழிச்சு நம்ம வூட்டுக்கு வந்திருக்க" என, "ஆமா ஆமா வாங்கியாரட்டும் நான் பூண்டு வெங்காயம் எல்லாம் உரிச்சு வைக்கிறேன்" என்று சாந்தி எழுந்து கொள்ள,

"நீ உட்கார்ந்து புள்ள கிட்ட பேசிட்டு இரு... நான் அதலாம் பார்த்துக்கிறேன்" என்றார் செவ்வந்தி. இருவரின் பேச்சில் அப்படியொரு அன்யோன்யமும் நெருக்கமும் இருந்தது.

தேநீரை குடித்து கொண்டே வீட்டை சுற்றிலும் பார்த்தாள். இரண்டே அறைகள் கொண்ட சிறிய வீடுதான் என்றாலும் பொருட்கள் எல்லாம் மிக அழகான நேர்த்தியுடன் அடுக்கப்பட்டிருந்தது. குளிர்சாதன பெட்டி, தொலைகாட்சி வசதிகளும் இருந்தன. எதிரே ஒரு அறை மூடிவைக்கப்பட்டிருந்தது.

"வீடு நல்லா இருக்கு" என்று கனி சொல்லவும்,

"ஆமா... ஆறு வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துக்கு பட்டா வாங்கினான்... இப்பதான் மூணு வருஷத்துக்கு முன்ன இந்த வீட்டை படாத பாடுப்பட்டு கட்டி முடிச்சான் மாயன்... எல்லாம் எங்களை நல்ல பார்த்துக்ணும்கிறதுக்காக" என்று சாந்தி சொன்னதை கேட்டு கனி யோசனையுடன் திரும்பி,

"அப்படினா நீங்க இப்போ அண்ணன் கூட இல்லையாம்மா?" என்று கேட்க சாந்தியின் முகம் கோபமாக மாறியது.

"உங்க அண்ணன் ஒரு நன்றிகெட்டவன்... உங்க அப்பா எப்போ படுத்த படுக்கையா ஆனாரோ அப்பவே அவன் எங்களை துரத்திவுட்டான்... இருந்த வரைக்கும் கூட அவன் எங்கள நல்லா பார்த்துக்கல...

அவன் பொண்டாட்டி எங்கள ஒரு அடிமை மாதிரிதான் நடத்துனா... தீண்டத்தாகவதங்க மாதிரி தனியா ஒரு தட்டுல சோத்த போடுவா... வூட்டுக்குள்ள புழங்க கூட வுட மாட்டா...

மாயன் மட்டும் இல்லனா நானும் உங்க அப்பாவும் ரோட்ல பிச்சைதான் எடுத்திருக்கணும்... அவன்தான் எங்களை கூட்டிட்டு வந்து வைச்சி பார்த்துக்கிட்டான்... இன்னைக்கு உங்க அப்பா உசுரோட இருக்காருன்னா அதுக்கும் மாயன்தான் காரணம்" என்றவர் வேதனையுடன் சொல்லிவிட்டு தன் கண்ணீரை புடவை முந்தானையில் துடைக்க,

"அட என்ன சாந்தி நீ... மாயனை வேத்தாள் மாதிரி பேசுற... அவனுக்கும் உங்கள பார்த்துக்க பொறுப்பு இருக்கு" என,

சாந்தி உடனே, "அதெப்படி அண்ணி... அவன் பொறந்ததுல இருந்து நான் அவனுக்கு எதுவுமே செஞ்சது இல்லையே... என் பொண்ணை கட்டி வைச்சிருந்தாலாச்சும் பரவாயில்ல... அதுக்கும்தான் கொடுப்பனை இல்லாம போச்சே" என்றவர் பொறுமியதை கேட்ட கனிக்கு சுருக்கென்றது.

அவள் முகம் மாறுவதை பார்த்த செவ்வந்தி, "முடிஞ்சு போன கதை எல்லாம் ஏன் பேசுற சாந்தி நீ... அவன் கனியை கட்டினாலும் கட்டலனாலும் உனக்கு அவன் மருமவப்புள்ளதான்... ஏன் மகன்னே வைச்சுக்கோ" என்று பேசி கொண்டே கண் ஜாடையில் சாந்தியை அடக்கியதை கனி கவனித்தாள்.

"சரி சரி... புள்ளய பின்னாடி இட்டுன்னு போய் தோட்டத்தை காட்டிட்டு வா" என்று அந்த பேச்சை மாற்ற, சாந்தியும் மகளை பின்புறம் அழைத்து கொண்டு வந்தார்.

சின்னதாக ஒரு காய்கறி தோட்டமே அங்கு குடியிருந்ததை பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தது. இரண்டு பாத்திகளில் கீரைகளும் வெண்டைக்காய், பச்சை மிளகாய், அவரைக்காய் என்று தனித்தனியாக காய்த்து தொங்கி கொண்டிருந்தன. கிழங்கு வகைகள் கூட இருந்தன.

குளியலறை கழிவறை என்று இரண்டு அறைகள் அவற்றுக்கு அருகில் இருந்தது. பின்னே இருந்த ஒரு சிறிய வேப்ப மரத்தின் முன்னே மேடை அமைத்து மூன்று செங்கல் வைத்து குல தெய்வ பூசை செய்யப்பட்டிருந்தன.

"தோட்டம் அழகா இருக்கு ம்மா" என்றவள் சொல்ல,

"எங்களுக்காகதான் மாயன் இமபுட்டும் செஞ்சு கொடுத்தான்" என்று பேசி கொண்டே அவர்கள் முன் வாயிலுக்கு நடந்தனர்.

கனி அந்த குல்மொஹர் மரத்தை ஆசையாக பார்த்து,

"இந்த மரம் ரொம்ப அழகா பூ பூக்கும் இல்லமா" என,

"ஆமா வெயில் காலத்துல அப்படியே பூத்து வாசல் எல்லாம் கொட்டி கிடக்கும்... பெருக்கி மாளாது" என்று சொல்ல, அந்த காட்சியை மனதில் வரித்து பார்த்து அதன் அழகை ரசித்தவள் அருகே சென்று அடித்தண்டை தொட்டு பார்த்தாள்.

அந்த கனம் இளமை காலத்தின் சில அழகான நினைவுகள் அவள் உணர்வுகளுடன் பின்னி கொள்ள, இன்பமாக அவள் மனம் மிதந்தது.

சாந்தி மகளின் தோளை மிதமாக தொட்டு, "உனக்கு இந்த மரம் ரொம்ப பிடிக்குமாமே... அதான் மாயன் இந்த இடத்த வாங்கன கையோட இந்த மரத்தை நட்டு வைச்சிட்டான்" என, நெருப்பை தொட்டது போல படக்கென்று கையை எடுத்துவிட்டு தன் அம்மாவை அதிர்ச்சியுடன் திரும்பி நோக்கினாள்.

அவர் மேலும், "மாயன் உன் மேல உயிரையே வைச்சிருக்கான் கனி... அவனை கட்டிக்கிட்டு இருந்தா நீ இன்னும் சந்தோஷமா இருந்திருப்ப" என அவள் ஒன்றும் பேச முடியாமல் தவிப்புடன் நின்றாள். இந்த வார்த்தையை இரண்டு நாட்கள் முன்பு சொல்லி இருந்தால் அவள் கோபத்துடன் கத்தி இருப்பாள். ஆனால் இப்போது அவளால் முடியவில்லை.

அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்கு நிச்சயம் அவள் பொறுப்பாளி அல்ல. பிரபுவின் இடத்தில் வேறு யார் அமர்ந்திருந்தாலும் மறுப்பு தெரிவிக்கும் மனநிலையில் அன்று அவள் இல்லை.

சாந்தி மனம் தாங்காமல் தன் ஆதங்கத்தை கொட்ட துவங்கினார்.

"மாயனுக்கு நம்ம சாதில எத்தனையோ புள்ளய நானும் செவ்வந்தியும் கட்டி வைக்க பேசினோம்... பிடி கொடுக்கவே மாட்டேன்னுட்டான்... ... இந்த மரத்தை போல அவனும் ஒத்தையா நிக்குறான்... உன்னை மனசுல வைச்சிக்கிட்டு" என்றவர் சொன்னதை கேட்ட போது கனியின் இதயத்தை யாரோ கசக்கி பிழிவது போல உணர்ந்தாள்.

"நாங்கெல்லாம் இன்னும் எத்தன நாளைக்கு இருப்போமா தெரியாது... அதான் நீயும் மாயனும்" என்று மேலே பேசுவதற்குள்,

"அத்தை" என்று மாயனின் குரல் சீறியது.

அவர் பதறி கொண்டு திரும்ப மாயன் அவரை நெருங்கி வந்து, "என்ன அத்தை... கொஞ்சம் கூட விவஸ்த்தை இல்லாம பேசிட்டு இருக்கீங்க... உங்க பொண்ணு இங்க வந்தது உங்களுக்கு பிடிக்கலயா என்ன?" என,

"இல்ல மாயா நான்" என்று சாந்தி தடுமாறினார்.

"நீங்க எதுவும் பேச வேண்டாம்... இப்படி எல்லாம் பேசி வந்தவளையும் துரத்தி வுட்டுடாதீங்க... இந்தாங்க... ஆட்டு கறி வாங்கியாந்திருக்கேன்... எடுத்துட்டு போய் அம்மாகிட்ட கொடுங்க" என்று தன் கையிலிருந்த பையை கொடுத்து அவரை துரத்திவிடாத குறையாக அங்கிருந்த அனுப்பி வைத்தான்.

அதன் பின் அவன் கனியை தயக்கத்துடன் பார்த்து, "வயசாயிடுச்சு இல்ல... இப்படிதான் ஏதாச்சும் உளறிட்டு இருப்பாங்க... அவங்க பேசுனது எல்லாம் நீ மண்டைல ஏத்திக்காதே" என்று விட்டு,

"சரி வா உள்ளே போலாம்" என்று முன்னே நடந்தான்.

"மாயா ஒரு நிமிஷம்"

அவள் அழைப்பு கேட்டு அவன் திரும்ப, "எனக்கு குல்மொஹர் மரம் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டாள்.

"இந்த மரம் யாருக்குதான் பிடிக்காது... அழகாக பூ பூக்கும் இல்ல" என்று அவன் சமாளிப்பது அப்பட்டமாக தெரிந்தது.

"ஒழுங்கா உண்மையை சொல்லு" என்றவள் அவனை முறைத்து கொண்டு நிற்கவும் அவனும் அவளை ஆழ்ந்து பார்த்தான். அந்த கண்களில் என்ன இருந்தது. அவள் மீதான எல்லையற்ற காதலா?

இந்த கேள்வியுடன் அவள் நோக்க, அவனது கண்கள் அதற்கான பதிலை தராமல் வேறு புறமாக திரும்பி கொண்டு, "நீ ஸ்கூல் படிக்கும் போது பஸ்ல உன் ப்ரண்டு கயல்கிட்ட பேசிட்டு வருவ இல்ல... அப்போ ஒரு தடவை இந்த மரத்தை வீட்டுல நட்டு வளர்க்கணும்னு ஆசை ஆசையா நீ சொல்லிட்டு இருந்ததை கேட்டேன்" என, அவளுக்கு மயிர்கூச்செறிந்தன.

ஆம். அவள் அப்படி சொல்லி இருக்கிறாள். வருடங்கள் கடந்து அது அவள் நினைவில் பசுமையாக இன்றும் இருக்கிறது என்பதில் வியப்பில்லை. ஆனால் அது மாயன் நினைவிலும் இத்தனை ஆழமாக பதிந்திருக்கும் என்பதுதான் அவளுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் கொடுக்க ஆழமாக அவனை பருகி கொண்டிருந்தன அவள் விழிகள்.

மாயன் உடனே, "அம்மா கூப்புடுறாங்க இல்ல" என்று அவள் அடுத்த கேள்வி கேட்டு சங்கடத்தில் ஆழ்த்துவதற்கு முன்பாக அங்கிருந்து அவசரமாக தப்பி சென்றுவிட, அவள் உதடுகள் விரிந்தன. அந்த புன்முறுவலுடன் அவள் மீண்டும் அம்மரத்தை திரும்பி நோக்கினாள்.

'ஓ! இது அவளுக்கான காதல் சின்னமா?'

எண்ணும் போதே மனம் பூரித்தது. வறண்டு பாலைவனமாகி விட்ட அவள் மனதில் ஊற்றாக ஏதோ ஒரு உணர்வு சுரக்க தொடங்கியிருந்தது. அந்த உணர்வுக்கு பெயர்தான் காதலா என்று எல்லாம் அவளுக்கு தெரியவில்லை. 

 

shanbagavalli, Chitrasaraswathi and 3 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathiRathiThani Sivachitti.jayaraman
Quote

நீங்க சொன்ன ஏழாவது யுக்தியை கொஞ்சமா யூஸ் பண்ணுற பொண்ணுங்க பேரு திமிர்பிடிச்சவ, யாரையும் மதிக்கமாட்டா இப்படினு....

மாயன் காதல் ரொம்ப யதார்த்தம் ஆனது..  ரொம்ப பாக்குவமான மனிதனா இருக்காரு. வாழ்க்கை நிறைய கத்துகுடுத்து இருக்கு 🙂🙂

Rathi has reacted to this post.
Rathi
Quote

mayan ku avalai evlo pudichi irunda idellam panran avan love ah sollama solluthu inda maram, kani ippo avathu un moolai ah nalla vidama use pannu ivanai pathi konjam nalla mudivu edu, mayan late ah vandalum nee dan da hero super

Rathi has reacted to this post.
Rathi
Quote

மாயன் ரொம்ப நல்ல மனிதன் ,பாத்து பாத்து தன்னைத்தானே செதுக்கிய நல்லவன் 😀

Quote

Super ma 

You cannot copy content