You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 18

Quote

18

திருமணம் முடிந்த கையோடு துர்கா மணமக்களை ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு வேண்டுதல்கள் காரணமாக அழைத்து சென்ற பின்னரே வீட்டிற்கு அழைத்து வந்தார்.

ஒரு மாதத்தில் தன் மகனுக்கு திருமணம் முடிவாகி அது நடந்தும் முடிந்துவிட்டதை இந்த நொடியும் அவரால் நம்ப முடியவில்லை.

சரவணனுக்கு ஆரம்பத்திலிருந்து எதுவும் சரியாக நடக்கவில்லை என்ற கவலையும் தன் மகனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒரு தாயாக தான் சரியாக செய்யவில்லை என்றக் குற்றவுணர்வும் அவ்வப்போது அவர் மனதை அழுத்திக் கொண்டேயிருக்கும்.

அதுவுமில்லாமல் மகனுக்கு பேச முடியாத குறை வேறு இருக்கும் போது அவனுக்கு திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையுமா என்று அவர் வேதனைப்படாத நாளே கிடையாது.

மகனுக்கு திருமணம் நல்லபடியாக முடிந்தால், மணமான தம்பதிகளைக் கோயில்களுக்கு அழைத்து வந்து தம் வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக வேண்டியிருந்தார்.

ஆதலால் முதலிரவு சடங்கை முடிப்பதற்கு முன்னதாகவே துர்கா தாம் வேண்டியிருந்த கோயில்களுக்கு சில நெருங்கிய உறவினர்களோடு மணமக்களை அழைத்து செல்ல ஆயத்தமானார்.

ஆனால் செல்விக்கு இதில் துளியும் உடன்பாடில்லை. ஆதலால் அவர் ராசப்பனின் உடல் நிலையைக் காரணம் காட்டி அவர்களுடன் செல்லவில்லை.

இன்னொரு புறம் இந்துவோ தன் மாமாவின் வீட்டிற்குதான் போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், அவர்கள் அவளை கோயில் கோயிலாக அழைத்து செல்வது அப்போதைக்கு நிம்மதியாக இருந்தது. இன்னும் கேட்டால் மூன்று வருடங்களுக்கும் மேலாக வீட்டு சிறையிலேயே அடைந்து கிடந்தவளுக்கு அந்தப் பயணம் மிகுந்த சுவாரசியத்தையும் உற்சாகத்தையும் அளித்திருந்தது.

அந்த இரண்டு நாட்கள் கோயில் சுற்றுலாவை அவள் சந்தோஷமாக அனுபவித்தாள். அதேநேரம் சரவணன் தன்னை எந்தச் சந்தர்ப்பத்திலும் நெருங்கிவிடாமல், தன் அத்தையின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே சுற்றினாள். அது அவனுக்குப் புரியாமல் இல்லை.

இருப்பினும் அவள் முகத்தில் பிரதிபலித்த அந்தக் கள்ளங்கபடமில்லாத புன்னகையை அவன் மானசீகமாக விரும்பியதால் அதை எந்தக் காரணம் கொண்டும் அவன் குலைக்க விரும்பவில்லை.

ஒருவாறு இரண்டு நாட்களில் துர்கா தம் வேண்டுதல்களையெல்லாம் முடித்து தம் முடியையும் காணிக்கையாகக் கொடுத்துவிட்டு, தன் மருமகளையும் மகனையும் வீட்டிற்கு அழைத்து வந்துச் சேர்ந்திருந்தார்.

இந்து வீட்டில் நுழைந்த மறுகணமே வீணாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

ஏற்கனவே இந்துமதியைப் பிடிக்காது அவளுக்கு. இப்போது தன் வீட்டிற்குள்ளேயே உரிமையோடு இவள் நுழைகிறாள். அதுவும் தன் தம்பியின் மனைவியாக என்பதைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

எவ்வளவோ முயன்றும் அந்த திருமணத்தை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லையே. அந்தக் கோபத்தை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை எனினும் அந்தக் கோபம் இன்னும் அவளுக்குள் கனன்று கொண்டிருந்தது.

இன்னொரு புறம் அங்கிருந்த எல்லோரும் இந்துமதிக்கு நெருங்கிய உறவுகள்தான் என்ற போதும் யாரிடமும் அவள் இதுவரையில் நெருங்கி பழகியதில்லை. அவள் அம்மா செல்வி பழகவிட்டதுமில்லை.

மனதில் ஒருவிதமான தனிமை உணர்வு அவளை ஆட்கொள்ள, வீணாவின் நான்கு வயது மகன் மாறன் அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் சிந்தனையைக் கவர்ந்து தனிமை உணர்வையும் போக்கியிருந்தான்.

அவள் கையைப் பிடித்துக் கொண்டு பெரிய மனுஷனை போல வீட்டைச் சுற்றிக் காட்டினான். இந்துவிற்கு அந்த வீடு புதிதில்லை எனினும் வந்து வெகுநாட்கள் ஆகியிருந்தது. வீணாவின் திருமணத்திற்கு வந்ததோடு சரி.

அவளும் அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு அவன் அழைத்து செல்லும் இடத்திற்கெல்லாம் ஆர்வமாக சென்றாள். கூடவே அவன் மழலையாகப் பேசுவதைக் கேட்டு ரசித்தபடி!

இறுதியாக அவளைப் பின்கட்டிற்கு அழைத்து வந்தவன் அங்கிருந்த கிணற்றைப் பார்த்தும் அச்சம் மேலிட பின்வாங்கி,

“இந்த கிணத்துல ஊஊஊ இருக்கு… நம்ம அங்கப் போக வேண்டாம்” என்றுப் பயத்தோடு சொல்ல, அவள் சத்தமாகச் சிரித்துவிட்டாள்.

பின் அவனை ஆச்சிரியமாக பார்ப்பது போல் பாவனைச் செய்தவள், “ஊஊஊவா?? எங்க நான் பார்க்கிறேன்?” என்றுப் பூட்டிய அந்தக் கிணறை எட்டி பார்க்க எத்தனிப்பதற்குள் அவள் கரத்தை அழுந்தப்பற்றிக் கொண்டவன்,

 “வேணாம் மாமி… அதுகுள்ள விழுந்துதான் மாமாவுக்குப் பேச்சு போச்சு… ஊஊ அவரோட குரலை எடுதுக்கிச்சுன்னு பாட்டி சொல்லுவாங்க… அதுக் கிட்ட யாரும் போகக் கூடாது” என்றுக் கொஞ்சும் குரலில் அழகாக பேசியவனை ரசனையாகப் பார்த்த அவள் இதழ்கள் விரிந்தன.

அந்தச் சமயம் பார்த்து சரவணனும் அங்கே வர, அவள் முகத்திலிருந்த முறுவல் மறைந்து போனது.

அவன் அவர்கள் இருவர் எதிரே வந்து நிற்க, அவளோ அவனை நேர்கொண்டுப் பார்க்க முடியாமல் தத்தளித்தாள். அவளின் அந்தத் தவிப்பை வெகுவாக ரசித்தது அவன் மனம்.

அவள் சிவந்த நிறமும் செதுக்கிய முகத்தோற்றமும் கூடவே அளவான உயரமும் உடலமைப்பும் அவளை அழகுப் பதுமையென காட்டியது. அதேநேரம் இந்த இரண்டு நாட்களாக அவள் முகத்திலிருந்த தெளிவும் பொலிவும் அவள் அழகை பன்மடங்கு கூட்டியிருந்தது. கூடவே புது மணபெண்ணிற்கு உரிய சௌந்தரியமும் சேர்ந்து கொள்ள அவன் பார்வைக்கு அவள் தங்க சிலை போலவே மின்னினாள்.  

அவளின் அந்த அற்புதமாக அழகினை விவரிக்க ஆயிரமாயிரம் வார்த்தைகள் அவன் மனதிற்குள் பிரவாகமாகப் பொங்கிப் பெருக, அவன் உதடுகளோ அவற்றிற்கு ஒலிவடிவம் கொடுக்க முடியாமல் தவித்தன.

மதி என்ற தனது அழைப்பினால் அவள் தன்னைப் பார்க்க வேண்டும் எனும் அவா அவனிடம் தோன்றியது. ஆனால் அவனால் முடியவில்லையே.

வார்த்தைகளால் பேச முடியாத அவனை அவளின்  பாரா முகம் ரொம்பவே சோதித்தது.

அந்த நொடி மாறனிடம் சரவணன் ஏதோ செய்கைச் செய்ய,

“மாமி… இப்படித் திரும்புங்க… மாமா உங்கக் கிட்ட ஏதோ சொல்லணுமாம்” என்று தெள்ளத் தெளிவாக சரவணனின் எண்ணத்தைப் பிரதிபலித்தது மாறனின் மழலை குரல்.

அவள் கடுப்பாக,  “உங்க மாமா கிட்ட எனக்கு எதுவும் பேச வேண்டாம்… நீ வா உள்ளே போகலாம்” என்று வெடுக்கென சொல்லிவிட்டு அவன் கைப் பிடித்து நழுவ பார்க்க சரவணன் அவர்களை வழிமறித்து நின்றான்.

அவன் அப்படி நிற்பதைப் பார்த்தவளுக்கு உள்ளுர நடுங்கியது. அவள் அவசரமாக அவனைக் கடந்து செல்ல எத்தனித்தாள். ஆனால் அவள் எந்தப் பக்கம் நகர்ந்தாலும் அவனும் அந்தப் பக்கமெல்லாம் அவளை மறித்து நின்றான்.

அவள் முகம் வெளிறி போனது. திருமணமான இந்த இரண்டு நாட்களில் எங்கேயும் அவன் இப்படியெல்லாம் நடந்து கொள்ளவில்லை. நாகரிகமாக அவள் விலகலைப் புரிந்து அவனும் விலகியே வந்திருந்தான்.

ஆனால் இன்று என்ன ஆனது அவனுக்கு? மனதில் அச்சம் பற்றிக் கொள்ள எச்சிலைக் கூட்டி விழுங்கியபடிக் கையைப் பிசைந்துக் கொண்டு, “உங்க மாமாவை வழிவிட சொல்லு மாறா!” என்றாள்.

மாறன் தன் மாமாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, “முடியாதாம்” என்று அவன் பார்வைச் சொன்னதை அப்படியே சொல்ல,

“ஏன் முடியாதாம்? என்ன வேணுமாம் அவருக்கு?” என்று அவள் உதறலோடுக் கேட்க,

“உங்களைதான் வேணுமாம்?” என்று மாறன் சொல்ல அவள் அதிர்ச்சியோடும் கோபத்தோடும் சரவணனை ஏறிட்டுப் பார்த்தாள்.

மாறன் சொன்னதைக் கேட்டு அவனுமே அதிர்ந்துப் போனான். தான் அப்படி சொல்லவே இல்லை என்றுத் தலையசைத்து மறுத்தான்.

அவளிடம் பேச வேண்டுமென்று சொன்னதை மாறன் மாற்றி சொல்லிவிட்டதாக அவன் விளக்கமளிக்க, அவள் எரிச்சலாகப் பார்த்தாள்.

அவன் சொல்ல நினைப்பதை தெரிந்து கொள்ளும் பொறுமை அவளுக்கில்லை. அவள் அவனைக் கடந்து செல்ல எத்தனிக்க மாறன் அவள் கைகளைப் பிடித்து தடுத்து, “எங்க போறீங்க? மாமா பேசணும்னு சொல்றாரு இல்ல” என்று அவனுக்காகப் பேசியது அந்தப் பிஞ்சு!

சரவணன் மனம் நெகிழ்ந்து மாறனைத் தூக்கி தன்னோடு அணைத்து பிடித்துக் கொண்டு அவளை ஏக்கமாகப் பார்த்தான். அவளோ அவனைப் பார்க்காமல் பார்வையைத் திருப்பிக் கொண்டிருந்தாள்.

அந்த விழிகள் தன்னை நோக்காமல் எப்படி அதனிடம் தான் எண்ணுவதை ஜாடையால் சொல்வது என்று அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை. அவள் தெரிந்துதான் செய்கிறாளா?

அவளின் அந்த நிராகரிப்பு அவனை ரொம்பவும் காயப்படுத்தியது.

அந்தச் சமயம் பார்த்து, “மாறா! டே எங்கப் போன?” என்றுத் தேடிக் கொண்டு வந்த வீணா, அவர்கள் மூவரையும் அங்கே பார்த்துவிட்டு எரிச்சலானாள்.

“மாறா வா சாப்பிடலாம்” என்றவள் கடுகடுத்தப் பார்வையோடுச் சொல்லி மகனை அழைத்துக் கொண்டுச் சென்றுவிட இந்துவும் அதுதான் சமயம் என்று அங்கிருந்து நழுவிவிட்டாள்.

சரவணன் உள்ளம் தவிப்பில் ஆழ்ந்தது.

அவன் அந்த நொடி தன் அருகாமையிலிருந்த அந்தக் கிணற்றைப் பார்த்தான். அந்தக் கிணறுதான் இரக்கமே இல்லாமல் அவன் குரலைப் பறித்துக் கொண்டது. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்று அந்தக் கிணற்றின் மீது அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.

பேச்சின்றி போனதை இத்தனை நாள் அவன் ஒரு இழப்பாகவே கருதவில்லை.

அந்த இழப்போடும் வலியோடும் அவன் ஒருவாறு வாழ பழகிவிட்டான். எல்லோரிடமும் சமிஞ்சையால் தான் சொல்ல நினைத்தவற்றைத் தெரியப்படுத்திவிடுவான்.

ஆனால் உணர்வுகளைப் பரிமாற அதுமட்டுமே போதாதோ என்ற எண்ணம் தோன்றியது.

அப்போது அவனுக்கு ஒரு யோசனை உதிக்க, அந்த நொடியே துரிதமாக தன் கடைக்குச் சென்றவன் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து எழுத தொடங்கினான். அவளிடம் நிறைய நிறைய சொல்ல வேண்டுமென்று அவன் மனம் தவித்தது.

ஆனால் ஒரு வரி கூட அவனால் சரியாக எழுத முடியவில்லை. அவனுக்குக் கடுப்பானது.

அவன் கடைக்காக பக்கம் பக்கமாக எவ்வளவு வேண்டுமானாலும் கணக்கு எழுதுவான். ஆனால் கடிதம் அப்படி வந்துவிடுமா?

அதுவும் மனதிற்குப் பிடித்தவளுக்காக வாழ்க்கையில் முதல் முறையாக எழுதும் காதல் கடிதம். தமிழ்ச் சொற்கள் அவனிடம் திண்டாடிக் கொண்டிருந்ததா அல்லது தமிழ் சொற்களிடம் அவன் திண்டாடிக் கொண்டிருந்தானா?

எழுதிய வார்த்தைகள் எல்லாமே தப்பும் தவறுமாக வந்தால் அவனும் என்னதான் செய்வான்?

அப்போது அங்கே அவனைத் தேடிக் கொண்டு வந்த பாலா, “யாருமில்லாத கடையில யாருக்கு ண்ணா டீ அத்துற?” என்றுக் கிண்டல் செய்ய, சரவணின் முகம் சிவந்தது.

அவன் தம்பியைக் கோபமாக முறைக்க, “சாரி ண்ணா… சும்மா சொன்னேன்” என்று சமாளித்தவன்,

“அம்மா உன்னை வீட்டுல தேடிட்டு இருக்கு… நீ என்னடான்னா இங்க உட்கார்ந்திட்டு இருக்க” என்றான்.

சரவணன் அவன் சொல்வதை காதில் வாங்காமல் தீவிரமாக எழுதுவதும் கசக்கிப்போடுவதுமாக இருக்க,

“இப்போ கணக்கு ரொம்ப முக்கியமா… வா ண்ணா… அம்மா கூப்புடுறாங்க” என்றவன் தமையன் கரத்தைப் பற்றி அழைத்தான்.

சரவணன் அவனை அழுத்தமாக முறைத்து விட்டுபோகச் சொல்லி கண் காட்ட பாலாவின் விழிகள் கசங்கியிருந்த காகிதங்களைப் பார்த்தது.

அவனுக்கு ஓரளவு தமையனின் செயல் பிடிப்பட்டு போனது. “உன்னைப் பார்த்தா கணக்குப் போடுற மாதிரி தெரியலயே… கணக்குப் பண்ற மாதிரி தெரியுது… என்ன ண்ணா அப்படி எழுதிட்டு இருக்க?” என்று அவன் நெருங்கி வரவும் வேகமாக தான் எழுதி வைத்திருந்ததை மறைத்துக் கொண்டான்.

பாலாவின் விழிகள் சுருங்கின.

“எனக்கு புரிஞ்சுடுச்சு… நீ அண்ணிக்கு லவ் லெட்டர் தானே எழுதுற” என்றான்.

சரவணனின் பார்வை அவனை எரிச்சலாக முற்றுகையிட பாலா நகைப்போடு, “நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றுக் கேட்கவும் மேஜை மீதிருந்த புத்தகம் அவன் மீது பறந்து வந்து விழுந்தது.

“சரி சரி நான் போறேன்… நீ நடத்து” என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டான்.

அதற்கு பின் சரவணன் எவ்வளவோ முயன்றான். அவனால் ஒரு வரி கூட சரியாகக் கோர்க்க முடியவில்லை.

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இப்போது மட்டும் மது இருந்திருந்தால்… என்று மானசீகமாகதன் தோழி இல்லாததை எண்ணி ஏங்கியது அவன் மனம்.

தன் மனதிலுள்ளதை மதியிடம் அவளே புரிய வைத்திருப்பாள். ஆனால் விதி அவளை தன் திருமணத்திற்குக் கூட வர விடாமல் தடுத்துவிட்டது. மனதினோரத்தில் அவனுக்கு அது பெரிய குறையாகவே இருந்தது.

இன்னொரு புறம் அவர்களுக்கு முதலிரவுக்கு அறையைத் தயார் செய்த துர்கா மகனைத் தேடிக் கொண்டு வந்து, “இங்க என்னடா பண்ணிட்டு இருக்க வா” என்று அவனை வலுக்கட்டயாமாக அழைத்து வந்து அறையில் விட்டார். அந்த அறையில் கமழும் பூ வாசமும் அலங்காரமும் இன்னும் அவனின் படபடப்பை அதிகரித்தது. 

அதேநேரம் இந்துவிடம் எப்படி தன் மனதிலுள்ளதை சொல்ல போகிறோம் என்று பலவாறாக யோசித்து யோசித்து அவன் ஓய்ந்து போய் படுக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

 மறுபுறம் வீணாவிடம் இந்துமதியை தயார் செய்து அவன் அறையில் விட சொல்லியிருந்தார் துர்கா. ஏற்கனவே படுகோபத்திலிருந்த வீணா அவளை வேண்டா வெறுப்பாக அலங்காரம் செய்து அறை வாசலில் சென்று நிறுத்த இந்து உள்ளே செல்லாமல் தயங்கி நின்றாள்.

 “இப்ப எதுக்குடி புடிச்சப் புள்ளையாராட்டும் நிற்கிற… உன் கையைப் பிடிச்சு உள்ளே கூட்டிட்டு போய் விடுவாங்களாக்கும்… அப்படியே எதுவுமே தெரியாதவ மாதிரி நடிக்காதே… உள்ளே போ” என்றவள் சொல்ல இந்து வீணாவின் முகத்தைத் தவிப்போடு ஏறிட்டாள்.

“அமுக்கினி மாதிரி செய்றதெல்லாம் செஞ்சிட்டுப் பார்க்கிறா பாரு… என்னடிப் பார்க்கிற… அப்படியே உத்தம பத்தினி இவ…

ஆனா சும்மா சொல்ல கூடாதுடி நீயும் உங்க அம்மாவும் நல்லாவே திட்டம் போட்டு என் அம்மாவையும் தம்பியையும் ஏமாத்தி இருக்கீங்க” என்க, இந்துவிற்கு அதிர்ச்சியாக இல்லை. ஆயாசமாக இருந்தது.

தன் மரணம் வரை இந்த மாதிரி வார்த்தைகள் தன்னைத் துரத்திக் கொண்டே வரும் போல! அவள் உள்ளமோ இப்படியான நிறைய  வார்த்தைகளில் அடி வாங்கி மறுத்து போயிருந்தது.

எதுவும் பேச முடியாமல் அவள் தலைக் கவிழ்ந்து கொள்ள, வீணா விடுவதாக இல்லை.

“போயும் போயும் உன்னை மாதிரி ஓடுகாலியை என் தம்பிக்குப் பொண்டாட்டின்னு நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு” என்று அவள் சொன்ன மறுகணம் இந்துமதி சீற்றமானாள்.

“போதும்… இதுக்கு மேல பேசாதீங்க” என்று அவள் கைக்காட்டிவிட்டு அதற்கு மேல் அங்கே ஒரு நொடி கூட நிற்காமல் அறைக்குள் சென்றுவிட்டாள்.

உள்ளே சரவணனைப் பார்த்தும் அவளின் கோபம் இன்னும் அதிகமானது. அந்த அறையின் அலங்காரங்களை வேண்டாவெறுப்பாகச் சுற்றிப் பார்த்தவள் கதவைத் தாளிட்டுவிட்டு அவன் முன்னே வந்து நிற்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன் எழுந்து நின்றான்.

முதல் முறையாக அவர்கள் விழிகளிரண்டும் சந்தித்துக் கொண்டன. தன்னைப் பார்க்காதா என்று ஏங்கிய அவளின் விழிகள் அவனை நேர்கொண்டுப் பார்த்தது. ஆனால் அதில் ஒருவிதமான கடினத்தன்மை இருந்தது. வெறுப்பு இருந்தது. ஆழமான கோபம் இருந்தது.

அவன் என்னவென்று புரியாமல் குழம்ப,

“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்று அவள் வினவினாள். அவனும் சம்மதமாக தலையசைக்க,

 “எதுக்கு என்னை மாதிரி ஒரு ஒழுக்கங்கெட்டப் பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணிககிட்டீங்க?” என்று அவள் கேட்க அவன் தலையில் இடியிறங்கியது.

அப்படியொரு கேள்வியை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் அதிர்ச்சி நிறைந்த பார்வையோடு அவளைப் பார்த்திருக்க,

“நான் உங்ககிட்ட வந்து எனக்கு வாழ்க்கைக் கொடுங்க எனக்கு வாழ்க்கைக் கொடுங்கன்னு கெஞ்சுனனா?” என்றவள் அடுத்தக் கேள்வியை வாளாக வீச, அவனுக்கு ஏன் அவள் அப்படி பேசுகிறாள் என்று ஒன்றும் விளங்கவில்லை.

அவள் கோபத்தின் காரணம் புரியாமல் அவன் விழிக்க,

“ஏன் மாமா… ஏன் இப்படி பண்ணீங்க? முதல என்னை வேண்டான்னு சொன்னதோட விட்டிருக்கலாமே… ஏன் திரும்பவும் சம்மதிச்சீங்க” இம்முறை அவள் குரலில் கோபத்தைத் தாண்டி ஆழமான வலி தெரிந்தது.

அவள் விழிகளில் கண்ணீர் பெருக, அவளை சாமதானம் செய்ய அவன் மனம் அல்லாடியது. ஆனால் எப்படிச் செய்வது? அவனுக்குப் புரியவில்லை.

அவளோ தன் வேதனையும் கண்ணீரையும் கொட்டித்தீர்த்தாள். “நான் ஒரு தப்பு செஞ்சுட்டேன்தான்… ஆனா அதுக்காக இன்னும் எவ்வளவு நாளைக்குதான் எனக்கு தண்டனைக் கொடுத்துகிட்டே இருப்பீங்க… அப்படியென்ன யாரும் செய்யாத தப்பை நான் பண்ணிட்டேன்… ஓடுகாலி ஒழுக்கங்கெட்டவன்னு எல்லோரும் சொல்லி சொல்லி அதை நான் கேட்டுக் கேட்டு” என்று அவள் மேலே பேச முடியாமல் உடைந்து அழ, அவள் கண்ணீர் அவளை விட அதிகமாக அவனுக்கு வலியை ஏற்படுத்தியது.

திடீரென்று என்ன ஆனது அவளுக்கு என்று யோசித்தவனுக்கு யாரோ அவளை காயப்படுத்தியிருக்கிறார்கள் என்றளவுக்கு மட்டும் புரிந்தது. ஆனால் அது யார் என்ன சொல்லியிருப்பார்கள்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு!

அதேநேரம் அவளிடம் என்னவென்று கேட்க கூட முடியாத இயலாமை அவனை வாட்டி வதைத்தது.

 ‘நான் உன்னை விரும்பிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மதி… உன்னை நான் நல்லா பார்த்துப்பேன் மதி’ என்றுச் சொல்ல வேண்டுமென்று அவன் உள்ளம் துடிக்க,

“எல்லோருக்கும் அவங்கவங்க சுயநலம்… இதுல என் விருப்பமும் ஆசையும் யாருக்கும் முக்கியமில்ல” என்றவள் வெதும்பினாள்.

அவள் அப்படி அழுவதைத் தாங்கி கொள்ள இயலாமல் அவள் கண்ணீரைத் துடைத்து அவளை அணைத்து கொள்ள எத்தனித்தவன் அவளை நெருங்கி வர அதனை உணர்ந்த மறுகணம் அவள் விலகிப் போனாள்.

அவனிடம் கையெடுத்து கும்பிட்டு, “உங்களைக் கெஞ்சிக் கேட்கறேன்… என்னைத் தொடாதீங்க…

இந்த ஓடுகாலி ஒழுக்கங்கெட்டவங்கிற பட்டம் என்னோட போகட்டும்… நாளைக்கு அது என் வயித்துல பிறக்கிற புள்ளைங்களுக்கும் வர வேண்டாம்… வரவே வேண்டாம் ப்ளீஸ்” என்றவள் அப்படியே தரையில் சரிந்து அவனிடம் இறைஞ்சினாள்.

“எனக்கு அப்படியொரு தண்டனையை மட்டும் கொடுதிராதீங்க… ப்ளீஸ் மாமா… உங்க காலைப் பிடிச்சு கேட்கிறேன்” என்று அவன் கால்களைப் பிடிக்க போக அவன் பதறித் துடித்து பின்னுக்கு நகர்ந்துக் கொண்டான்.

அவளின் அந்தச் செய்கை அவனை உயிரோடு கொன்றுப் புதைத்தது. அதற்குப் பிறகு அவள் அருகாமையில் செல்ல தயங்கிய அவன் கால்கள் அனிச்சையாக பின்னோக்கி நகர்ந்தன.

திருமணம் என்ற உறவுக்கு அச்சாணியே நம்பிக்கைதானே. ஆனால் அதுவே இங்கே முறிந்து போன பின் எப்படி அவளுக்கு தன் காதலைப் புரிய வைப்பது.

எதன் மூலமாக? அவன் மனம் நொந்து படுக்கையில் தலையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான். ஒரு கனத்த அமைதி அந்த அறையைச் சூழ்ந்தது.

அவனுடைய அந்த மௌனத்திலிருந்த வலி யாருக்கும் தெரியாது. தன்னுடைய நிலைமை யாருக்கும் வர கூடாது என்று அவன் மனம் ஊமையாக தனக்குள் அழுததை அந்தப் பெண் மனம் அறியாது.

சில நிமிடயோசனைக்குப் பின் அவன் போர்வையைத் தரையில் விரித்துப்படுத்துக் கொண்டான். அவன் செய்கையைப் பார்த்து அவள் சங்கடமாக உணர்ந்தாள்.

அவனை மேலே எழும்பி படுக்க சொல்லாமா என்றவள் யோசிக்குபோது அவன் விழிகளை மூடியிருந்தான்.

அவனை அப்படிப் பேசியது அவளுக்கே பாரமாக இருந்தது. ஆனால் வார்ததைகளைக் கொட்டிய பின் யோசித்து என்ன பயன்?

சில நிமிடங்கள் கழித்து அவளும் போர்வையைத் தரையில் விரித்து படுத்துவிட்டாள். நிம்மிதியின்றி தவித்தவளை மெல்ல உறக்கம் தழுவி கொண்டது. அவள் முழுவதுமாக நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள்.

உறங்குவது போல் நடித்தவன் அவள் ஆழ்ந்து உறங்கிய பின் மெல்ல எழுந்தமர்ந்துக் கொண்டான்.

எப்படியாவது அவளுக்கு தன் மனதைப் புரிய வைத்துவிடமாட்டோமா? என்று தவிப்பும் வேதனையுமாக கழிந்தன அவளுடனான அவனின் அந்த முதலிரவு!

Quote

Super ma 

You cannot copy content