You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 21

Quote

21

அஜயின் முகம் கடுகு போட்டால் படபடவென பொறிந்து வெடிக்குமளவுக்கு காய்ந்து சூடாகியிருந்தது. அவன் விழிகளோ கனலாக உஷ்ணத்தைக் கக்கியபடி இருந்தது. பார்வையாலேயே மதுவை எரித்தபடிக் காரை ஒட்டிக் கொண்டு வந்தான்.

அவளோ அவன் புறம் தன் பார்வையைத் திருப்பவே இல்லை. சாமர்த்தியமாக ஜன்னல் புறம் திரும்பிகொண்டாள். வேறு வழி.

‘வீட்டுக்கு போன பிறகு நம்ம நிலைமை அதோ கெதிதான்’ புலம்பிக் கொண்டிருந்த அவள் மனம் ஒருவகையில் அவன் கோபத்திலும் நியாயம் இருக்கிறது என்று இரண்டு பக்கமும் கோல் அடித்தது.

காவல் நிலையத்திலிருந்து அவள் வெளியே வந்தவுடன், “கிளம்பலாமா?” என்று அஜய் கேட்க, அவள் தயக்கத்தோடு இந்துவைப் பார்த்தாள்.

“என்ன? நான் வைச்சதுதான் சட்டம்னு அவளை ஜாமீன்ல எடுத்துட்ட இல்ல… அப்புறம் என்ன? கிளம்பு” என்று அவன் அதிகாரமாக சொல்ல,

“இல்ல அஜய்… நான் சரோவை ஹாஸ்பெட்டில் போய் பார்த்துட்டு வந்துடுறேன்… நீ கிளம்பேன்” என்றதும் அவன் முறைத்து வைக்க,

“ப்ளீஸ் அஜய்…” என்று இறைஞ்சினாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… ஒழுங்கா கார்ல ஏறு… வீட்டுக்கு போலாம்” என்றவன் கடுப்பாக சொல்ல, அவள் பிடிவாதமாக அவன் பேச்சை கேட்காமல் வெளியேவே நின்றாள்.

“ப்ளீஸ் அஜய்… நான் ஹாஸ்பெட்டிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடுறேன்… தாமு கூட அங்கேதான் இருக்காரு… நான் பார்த்துட்டு அவர் கூடவே வந்துடுறேன்” என்று அவள் கெஞ்ச ஆரம்பிக்க, அவன் பார்வையில் கொஞ்சமும் இறக்கமில்லை. அவளை விட்டு செல்ல அவன் தயாராக இல்லை. அதேநேரம் அவள் கேட்பதையெல்லாம் செய்ய அவனுக்கு விருப்பமுமில்லை.

அந்த நேரம் பார்த்து மழை வந்து சதி செய்ய அஜய் அவசரமாக, “மது கார்ல ஏறு… மழை வருது” என்றுப் படபடக்க.

“அப்போ ஹாஸ்பெட்டிலுக்கு” என்றவள் தான் பிடித்த பிடியில் நின்றாள்.

“ஐயோ! போலாம்…. ஏறுடி” என்றவன் வேறு வழியின்றி சம்மதிக்க, மது உடனே திரும்பி பார்த்து

“இந்து வா… நீயும் கார்ல ஏறு” என்றாள். இந்து புரியாமல் பேந்த பேந்த விழிக்க மது சத்தமாக, “வான்னு சொல்றேன் இல்ல” என்று மிரட்டி காரின் பின்னிருக்கையில் உட்கார வைத்த பின்னே அவள் காரில் ஏறினாள். 

அஜய் உச்சபட்ச கோபத்தை எட்டினான். “யாரைக் கேட்டு இவளை நீ என் கார்ல ஏற சொன்ன” என்று மதுவிடம் எகிறிய அதேசமயம் திரும்பி இந்துவிடம், “காரை விட்டு இறங்குடி கீழே… அவ ஏற சொன்னா நீ ஏறிடுவியா?” என்றான். இந்து இயலாமையோடு என்ன செய்வதென்று புரியாமல் பார்க்க மது உடனே,

“அப்போ நானும் இறங்குறேன்” என்று சொல்லி கார் கதவைத் திறக்க எத்தனிக்க, “மது” என்று அவள் கரத்தை அவன் அழுந்தப் பற்றித் தடுத்தான்.

“அப்போ காரை எடுங்க” என்றவள் சொல்ல அஜயின் விழிகளில் பொறி பறந்தது. மனைவியை அழுத்தமாக அவன் முறைத்துப் பார்க்க,

“சரோவைப் பார்த்துட்டு அவளை ஹாஸ்பெட்டில விட்டுட்டு போயிடலாம்” என்ற மதுவின் வார்த்தையில் அவனுக்கு துளியும் உடன்பாடில்லை.

ஸ்டியரிங்கை அவன் அழுத்திய விதத்தில் அது இன்னும் நொறுங்காமல் இருப்பது ஆச்சரியம்தான். காரை இயக்கியவன் சாலையைப் பார்ப்பதும் மதுவை முறைப்பதும் என்று வந்து கொண்டிருந்தான்.

 இவர்கள் இருவரின் உணர்ச்சி போராட்டத்திற்கு இடையில் சிக்கி தவித்தது என்னவோ இந்துதான்.

நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போல அவள் அல்லாடினாள். ஏன் அந்த காரில் ஏறினோம்? என்றவள் மனம் நொந்து போகுமளவுக்கு அஜயின் செயல்பாடுகளும் அசூயையான பார்வைகளும் இருந்தன. ஆனால் அந்தச் சூழ்நிலையில் அவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

இன்னும் சில நிமிடங்களில் எப்படியாவது தன் கணவனிடம் சென்று சேர்ந்துவிடுவோம் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமே அவளுக்கு அப்போதைக்கு இருந்த ஆறுதல்!

இதே இந்துதான் அன்று சரவணனை தன் கணவன் என்றும் யோசிக்காமல் அவனையும் அவன் அருகாமையையும் அடியோடு வெறுத்தாள். அவன் இருக்கும் திசையைக் கூட தவிர்த்தாள். ஆனால் இன்று அவனும் அவனிருக்கும் இடமும்தான் தனக்கு அடைக்கலம் என்று யோசிக்குமளவுக்கு அவள் மனம் மாறியிருந்தது.

அதற்கு இந்தக் காவல் நிலைய அனுபவம் மட்டுமே காரணமில்லை. முந்தைய அவளின் காதல் அனுபவமும் காரணமாக இருந்தது.

சற்றுமுன் மது அவளை நோக்கி கேட்ட ஒரு கேள்வி.

‘அப்போ உனக்கும் சுரேஷ்க்கும் இருக்க உறவுக்கு பேர் என்ன?’ இந்துவின் மனதில் ஈட்டியாகப் பாய்ந்த அந்தக் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

எல்லோருக்கும் சுரேஷைதான் தெரியும். ஆனால் அவளுக்கு மட்டும்தானே சுரேஷ் என்ற போலியான பெயருக்குள் ஒளிந்திருக்கும் உண்மையான சீதாராமனைத் தெரியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவருக்கிடையிலிருந்த உறவுக்கு அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் காதல்!

காதல் இப்படிதான் இருக்கும் என்று அவளாக வரையறை செய்து கொண்ட நாட்கள் அவை!

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறு பெண். பருவ வயதை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில்தான் இந்துமதி முதல் முறையாக சீதாராமனைப் பார்த்தது.

இந்துவின் அண்ணன் இசக்கியப்பன் படிக்காவிட்டாலும் பெயருக்கென்று அவ்வப்போது பள்ளிக்கு சென்று வந்தான். இந்துமதி தன் ஊருக்குள் இருந்த அரசு மகளிர் பள்ளியில் பயில, இசக்கியப்பன் சற்றே தொலைவில் டவுனிலிருந்த ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்றான்.

தன் அண்ணன் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு அவள் சென்ற போதுதான் மேடை நாடகத்தில் கதாநாயகனாக சீதாராமனைப் பார்த்தாள். அவன் அப்போது பதினொன்றாம் வகுப்பு முடித்திருந்தான். அந்த பள்ளியிலும் சரி. அவன் கிராமத்திலும் சரி. சீதாராமனின் அழகிற்கும் அவன் நடிப்பிற்கும் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

எல்லோரும் ரசிக்கும்படியான அவன் நடிப்பும் ஈர்க்கும் படியான தோற்றமும் அங்கிருந்த பல கன்னிப் பெண்களோடு சேர்த்து இந்து என்ற சின்ன பெண்ணையும் கவர்ந்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஈர்ப்பின் முதல்கட்ட நிலை அது!

நாட்கள் செல்ல அந்த ஈர்ப்பு அவள் மனதை விட்டு லேசாக அகன்று கொண்டிருந்தச் சமயத்தில் அவனை மீண்டும் காணும் நிலை உருவானது.

பள்ளியிலேயே இசக்கியப்பன் குடித்துவிட்டு விழுந்து கிடக்க, அவனை தன் நண்பர்களோடு வீட்டிற்கு சீதாதான் பொறுப்பாக அழைத்து வந்து சேர்த்திருந்தான்.

செல்வி உள்ளம் குமுறி தலையிலும் மார்பிலும் அடித்து அழ அவரை அவன் சமாதானம் செய்த விதத்தில் அவளுக்கு அவனைப் பிடித்து போகாமல் போனால்தான் ஆச்சரியம்! ஈர்ப்பின் அடுத்தக் கட்ட நிலையாக அந்தச் சம்பவம் அமைந்தது!

அதற்குப் பின் இசக்கி பள்ளிக்குப் போகவில்லை. வீட்டிலேயே இருந்து இன்னும் இன்னும் குடிபழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்ததுதான் மிச்சம்.

இந்துமதிக்கு அதற்கு பின் சீதாராமனை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் மனம் அவனைப் பற்றி அவ்வபோது நினைத்து கொள்வதும் அவனை போகும் இடங்களில் தேடுவதும் என்று அவள் மனம் ஈர்ப்பின் அடுத்தடுத்த படிநிலைக்குச் சென்றிருந்தது.

அப்படியே அவனைப் பார்க்காமல் போயிருந்தால் அவள் மனம் அவனைப் பற்றிய நினைப்பை அவள் மூளையிலிருந்து ஓரங்கட்டி இருக்க கூடும்.

ஆனால் அவள் பதினொன்றாம் வகுப்பு பெண்கள் மேல்நிலை பள்ளிக்காக டவுனுக்கு அரசு பேருந்தில் சென்று வர நேரிட்டது. அப்போது சீதாராமனோ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவள் செல்லும் பேருந்தில் மீண்டும் அவனைப் பார்க்க நேரிட்டது.

அதன் பின் காலையில் பள்ளிக்கு செல்லும் போது அவன் வரும் திசை பார்த்து காத்திருப்பது தினமும் அவளுக்கு ஒரு பழக்கமாகத் தொடர ஆரம்பித்தது. அவன் வருவதும் இவள் பார்ப்பதும் என்று இப்படியே நாட்கள் கடந்தன. ஆனால் அவள் பார்த்தாலே ஒழிய அவன் இவளைப் பார்க்கவில்லை.

அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்ப்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட உணர்வில் சிக்கித் தவித்திருந்த சமயம் ஒரு நாள் இவள் அவனைப் பார்ப்பது அவனுக்கும் பிடிபடத் தொடங்கியது.

ஒரு நாள் பேருந்திலிருந்த சீதாராமனின் நண்பன் ஒருவன் இந்துமதி கொடுத்திருந்த ரெகார்ட் நோட்டை எடுத்துக் கொண்டு அவளின் பள்ளியின் நிறுத்தம் வருவதற்கு முன்னதாகவே இறங்கிவிட்டிருந்தான்.

இந்து பதறிக் கொண்டு பேருந்திலிருந்து இறங்கி, “அண்ணே! என் ரெகார்ட் நோட்… ரெகார்ட் நோட்டைக் கொடுத்துட்டுப் போங்க” என்றுப் பின்னோடு அவள் ஓட, சீதாராமனின் நண்பர்கள் கூட்டம் அவள் புறம் திரும்பியது.

அந்த ரெகார்ட் நோட்டைக் கொடுக்கும் உத்தேசம் அவர்களுக்கு இல்லையென்பது அவர்களின் கேலியான பார்வையிலும் சிரிப்பிலும் இருந்து புரிந்தது. கையில் அவளின் நோட்டை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி விளையாட,

“அண்ணே! அண்ணே! என் ரெகார்ட் நோட்… மிஸ்ஸு திட்டுவாங்க” என்று அவள் ஒவ்வொருவரிடமும் கெஞ்சத் தொடங்கினாள்.

இறுதியாக நோட் சீதாராமன் கையில் வந்த போது அவள் தடுமாறி போனாள். “என் நோட்டைக் கொடுங்க” என்று அவனிடம் மட்டும் சற்று தாழ்வாக அவள் குரல் இறங்கவும்,

“எங்களை எல்லாம் அண்ணேன்னு கூப்பிட்ட… அவன் மட்டும் என்ன ஸ்பெஷல்? அவனையும் அண்ணான்னு கூப்பிடு” என்றவர்கள் குதர்க்கமாகக் கேட்க அவளுக்கு நடப்பது ஓரளவு புரிந்தது. ஏதோ திட்டம் போட்டுதான் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று.

அவர்கள் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் இக்கட்டான ஒரு நிபந்தனையை வேறு அவளுக்கு விதித்தான்.

“சீதாவை நீ அண்ணான்னு கூப்பிட்டன்னா உன் ரெகார்ட் நோட்டை நான் தந்திடுறேன்” என்றதும் சீதா அவனைப் பார்த்து முறைக்க,

“இரு மச்சான்” என்றவனை அடக்கிவிட்டு அவளைப் பார்க்க, திருதிருவென என்ன செய்வதென்று புரியாமல் கையைப் பிசைந்துக் கொண்டு தலைக் கவிழ்ந்து நின்றிருந்தாள்.

அவள் விழிகளில் கண்ணீர் வெளியே எட்டிப் பார்க்க சீதாராமன் உடனே, “சின்ன பொண்ணு டா… விளையாடுனது போதும் நோட்டைக் குடுங்கடா” என்றான்.

“யாரு சின்ன பொண்ணு? இவளா?” என்று ஒருவன் கிண்டலடிக்க,

“உன்னை அண்ணான்னு தானே கூப்பிட சொல்றோம்… அதுக்கு எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்” என்று மற்றவன் கேட்க அவள் முகம் இருளடர்ந்து போனது.

அப்போது இந்து தலையை நிமிராமலே, “மிஸ் நோட் இல்லாம போனா திட்டுவாங்க” என்றாள்.

“அதான் இவனை அண்ணான்னு கூப்பிட்டு வாங்கிக்கோன்னு சொல்லிட்டோம்ல”

“இல்ல… எனக்கு நோட்டு வேணும்… மிஸ் திட்டுவாங்க” என்ற அவள் அதே பாட்டைப் பாட,

“என்னடா இவ? 16 வயதினிலே வர கமல் மாதிரி சந்தைக்கு போகணும் ஆத்தா வைய்யும் காசு கொடுங்கிற மாதிரி கேட்குறா?” என்று ஒருவன் கடுப்பாக இந்துவின் அழுகை அதிகரித்து கொண்டே போக சீதாராமன் மனமிறங்கி, “பாவம்டா… நோட்டைக் கொடுத்திருடா” என்ற போதும் அவர்கள் யாரும் விட்டு கொடுக்க தயாராக இல்லை.

“இப்ப இந்தப் புள்ளைய நாங்க என்ன பண்ணிட்டோம்… உன்னை அண்ணான்னு கூப்பிட சொன்னதுக்கு எதுக்கு இந்த சீன போடுறா?” என்க, அவர்களை நிமிர்ந்து பார்த்த இந்து,

“இப்போ நோட்டை கொடுக்க போறீங்களா இல்லையா? நான் போகணும்” என்றுத் திடமாகக் கேட்டாள்.

“நீ அவனை அண்ணன்னு கூப்பிடு… கொடுக்கிறோம்” என்று அதே பதிலை அவர்கள் திரும்ப சொல்ல,

அவர்களை முறைத்துப் பார்த்தவள், “எனக்கு அந்த நோட்டு வேணா நீங்களே வைச்சுக்கோங்க… நான் அடி வாங்கினாலும் பரவாயில்ல… ஆனா நான் அவரை அண்ணான்னு மட்டும் கூப்பிட மாட்டேன்” என்று வீம்பாக சொல்லிவிட்டு அவள் சென்ற விதத்தைப் பார்த்து யார் முகத்திலும் ஈயாடவில்லை.

“பார்றா?! பிடிவாதமா உன்னை அண்ணன்னு கூப்பிடமாட்டேன்னு சொல்லிட்டு போறா?” என்று அவன் நண்பர்கள் வியப்பின் விளிம்பில் நிற்க, சீதாராமன் அப்போது ஒரு புது மாதிரியான உணர்வை அந்த நொடி அனுபவித்தான். அந்த உணர்வின் பெயர்தான் காதலா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. ஆனால் அவனுக்கும் அவளின் மீது ஒருவிதமான பிடித்தமும் நேசமும் உருவாகியிருந்தது.

Quote

Super ma 

You cannot copy content