You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 35

Quote

35

அஜய் பேசிய எதற்கும் அவன் மனைவியிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போக,

“ஏய் என்னடி? என்னாச்சு?” என்று அவள் தோள்களை உலுக்கினான். அவள் அவன் கரங்களைத் தட்டிவிட்டு விலகி வர, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

 “என்னாச்சு மது?” என்று அவன் புரியாமல் கேட்க,

தன் கணவனின் விழிகளை சந்தித்தவள், “என்கிட்ட இருந்து நீ எதையாச்சும் மறைக்குறியா அஜய்?!” என்று அழுத்தமாக வினவினாள்.

வெகு இயல்பாக அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “நான் என்னடி உன்கிட்ட மறைக்க போறேன்?” என்க,

“அப்போ நீ என்கிட்ட இதுவரைக்கும் எதையும் மறைச்சதே இல்லையா?” என்றவள் பார்வை அவனை படுதீவிரமாக அளவெடுத்தது.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாது… சின்ன சின்னதா சில விஷயங்களை மறைச்சிருக்கேன்… ஏதாச்சும் ஆஃபீஸ் பார்ட்டில கொஞ்சமா ட்ரங் பண்ணிட்டு வரும் போதெல்லாம்” என்றவன் இழுக்க,

 “ப்ச் பெருசா எதாச்சும்” என்றுக் கேட்டு அவனை ஆழ்ந்து நோக்கினாள்.

“என்னது பெருசா? எனக்கு புரியல… நீ எந்த விஷயத்தை மனசுல வைச்சுகிட்டு இப்படியெல்லாம் கேட்டுட்டு இருக்க”

“நான் எதைப் பத்தி கேட்கிறேன்னு உனக்கு புரியல இல்ல”

“ஏ! சத்தியமா புரியலடி” என்க,

அவன் மீது நிதானமாக பார்வையைப் படரவிட்டவள்,

“அனுவுக்கும் சுரேஷுக்கும் உண்மையிலேயே கல்யாணம் ஆகிடுச்சா அஜய்? அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவிதானா? இல்ல அவங்களுக்குள்ள அப்படியான ரிலேஷன்ஷிப் இருந்துச்சா?” என்றுக் கேட்க அவன் ஷாக்கடித்த நிலையில் அப்படியே நின்றுவிட்டான்.

இதெப்படி இவளுக்கு தெரிந்திருக்கும்? என்று யோசிக்க, இந்த விஷயம் தன் கணவனுக்கு தெரியாமல் இருந்திருக்கவே முடியாது என்பதை அனு சொல்லும் போதே அவள் யூகித்திருந்தாள்.

அவனின் அந்த அதிர்ச்சியே அவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது என்பதை அப்பட்டமாக அவளுக்குக் காட்டிக் கொடுத்துவிட,

“எவ்வளவு பெரிய விஷயம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிச்சிருக்க இல்ல நீ?” என்று அவனை குற்றசாட்டும் பார்வைப் பார்க்க, அவன் பேச்சற்று நின்றான்.

அவள் மேலும், “நான் நினைச்சேன்… அத்தைக்கு இந்த விஷயம் உன் மூலமாதான் தெரிஞ்சிருக்கும்னு” என்ற போது அவளை பேரதிர்ச்சியாக ஏறிட்டவன்,

“அம்மாவுக்கு நான் இந்த விஷயத்தை சொன்னது பத்தி உனக்கு எப்படி தெரியும்?” என்று பதட்டமாக வினவினான்.

“அத்தை கண் விழிச்ச அன்னைக்கு நைட்…அனு அத்தைகிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு இருந்தாங்க… அப்படித் தெரியும்” என்றாள்.

“மன்னிப்பு கேட்டாளா? செய்ற தப்பெல்லாம் செஞ்சிட்டு மன்னிப்பு வேற கேட்கிறாளா?” என்று கோபமானவன்,

“சுரேஷை அவ கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்த அப்பவே அவ ஏதோ கேடி வேலைப் பண்ணி இருக்கான்னு எனக்குத் தோணுச்சு… ஆனா அப்போதைக்கு நான் பெருசா அதைப் பத்தி யோசிக்கல… அப்புறம்தான் அவ கர்ப்பமா இருந்தது… அதுவும் நாலு மாசம்னு தெரிஞ்ச போதுதான் எனக்கு டவுட்டே வந்துச்சு… நாலு மாசம் முன்னாடி வரைக்கும் அவ மும்பைல இருந்தா… இந்த சுரேஷ் இங்க சென்னைல சின்ன சின்ன விளம்பரத்தில் நடிச்சிட்டு இருந்தான்… அப்புறம் எப்படின்னு விசாரிச்சபோது” என்று சற்று நிறுத்தியவன் முகச்சுளிப்போடு,

“அவசெஞ்ச வேலைக்கு அவளைக் கொலை பண்ணிடலாம்ங்கிற அளவுக்கு கோபம் வந்துது… எனக்கு இருந்த டென்ஷன்ல அம்மாகிட்ட எல்லாத்தையும் உளறி தொலைச்சிட்டேன்… அதுதான் வினையா முடிஞ்சு போச்சு

இதுல அனுவை பத்தி ஒரளவு நல்லா தெரிஞ்ச அம்மாவே இப்படி படுத்த படுக்கையாகிட்டாங்கன்னா பொண்ணு மேல உயிரையே வைச்சிருக்க அப்பாவுக்கு தெரிஞ்சா… அதான் நான் இப்ப வரைக்கும் அனு சுரேஷ் விஷயம் எதுவுமே தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல… ஏன்? எனக்கு இந்த விஷயம் தெரியும்னு அனுவுக்கும் சுரேஷுக்கும் கூடத் தெரியாது?” என்றவன் சொல்வதைக் கேட்டவளுக்கு இத்தனை நாளாக எத்தனைப் பெரிய விஷயத்தை அவன் சர்வசாதாரணமாக மறைத்து வைத்திருக்கிறான் என்று அவன் மீது கோபம் மூண்டது.

அஜய் மெல்ல, “ப்ளீஸ் மது… இந்த விஷயத்தை இதோட விட்டுடு” என்றான்.

“என்ன சொன்ன? இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுவா?” என்றபடி தன் மௌனத்தைக் கலைத்தவள்,

“எப்படி அஜய்? நம்ம குடும்பத்துக்கும் சுரேஷுக்கும் எந்த உறவுமே இல்லன்னு தெரிஞ்சும் சுரேஷோட இறுதி சடங்கை நம்ம வீட்டுல செஞ்ச… அதுவும் அவன் சொந்தபந்தம் யாருக்கும் சொல்லவும் இல்லை… அனுதான் அறிவில்லாம இப்படியெல்லாம் பண்ணி இருக்கான்னா உனக்கு எங்கடா போச்சு புத்தி… இது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியாது உனக்கு?” அவள் காட்டமாக பொறிந்து தள்ள அவனும் பதிலுக்கு சீற்றமாகக் கத்தினான்.

“ஷட்அப் மது… முடிஞ்சு போன விஷயத்தைப் போட்டு சும்மா கிளறிட்டு இருக்காதே… இப்பதான் அம்மா குணமாகி இருக்காங்க… நம்ம வீடும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு… அதைக் கெடுத்துடாதே”

“நான் எதையும் கெடுக்கணும்னு நினைக்கல… ஆனா இப்ப நீ செஞ்சு வைச்சிருக்க காரியம் இருக்கு இல்ல? நம்ம குடும்பத்தோட நிம்மதி சந்தோஷம்னு மொத்தத்தையும் அடியோட அழிச்சிடும்… நம்ம புள்ளைங்களையும் அந்தப் பாவம் சும்மா விடாது அஜய்” என்றவளின் விழிகளில் கண்ணீர் கசிய,

“ஏ! இப்ப எதுக்கு அழற… அப்படி என்ன நான் பெரிய தப்பைப் பண்ணிட்டேன்” என்றான் அஜய்!

“நீ இந்த தப்போட நிறுத்தியிருந்தா பரவாயில்லயே… ஆனா அதுக்கும் மேலயும் நீ பண்ணி இருக்க”

“அப்படி என்ன பண்ணேன்?”

“எதுக்கு இந்துமதியை சுரேஷோட கொலை கேஸுல மாட்டிவிட பார்க்குற”

“என்ன உளற மது? நான் மாட்டிவிட பார்க்குறேன்னா?”

“நடிக்காதே அஜய்… எனக்குத் தெரியும்”

“என்னடி தெரியும் உனக்கு? எதை வைச்சு நீ இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க”

“எதை வைச்சா? நான் ஒரு வக்கீல்… அதை நீ மறந்துட்ட போல… ஒருவகையில நான் கூட அதை மறந்துட்டேன்… மொத்தமா எனக்கே நீ என்னைய மறக்கடிச்சுட்ட” என்றவள் சொன்ன நொடி, “இந்த வக்கீல் மேடம் இப்ப என்ன சொல்ல வரீங்க?” என்று நிதானமாக கேட்டான்.

“ஏன்? இந்த கேஸுல போலிஸ் இந்துவை மட்டுமே கார்னர் பண்ணிட்டு இருக்கு… அனுவையோ நம்மளையோ ஏன் போலிஸ் இது சம்பந்தமா எதுவுமே விசாரிக்கல?”

“இதான் உன் டவுட்டா?” என்று அவளை அசட்டையாகப் பார்த்தவன்,

“இதுல நீ யோசிக்கிற மாதிரி பெருசா எதுவும் இல்ல… ஆக்சுவலி சுரேஷ் கொலை நடந்த ஸ்பார்ட்டுக்கு இந்துமதி போனதுக்கான ஆதராம் இருக்கு… கடைசியா அவதான் அங்கே போயிருக்கான்னும்போது…போலிஸ் வேறு யாரை சந்தேகபடுவாங்க” என்றான்.

“இந்து அங்கே போனாங்கிறதுக்காக… அவதான் சுரேஷைக் கொலைப் பண்ணான்னு ஆகிடுமா?”

“அதெல்லாம் நம்ம பிரச்சனை இல்ல… போலிஸோட பிரச்சனை” என்றவன் அலட்சியமாக கூறினான்,

“இல்ல அஜய்… போலிஸ் இந்தக் கேசை நேர்மையா விசாரிக்கல… வேற யாரையோ காப்பாத்த இந்துவை இந்தக் கேஸ்ல அக்யூஸ்டா மாத்த பார்க்கிறாங்க” என்றவள் சொன்ன மறுகணம்

“மதுஊஊஊஊஊ… போதும் இதோட நிறுத்து” என்றவன் வெறி பிடித்தவன் போல கத்த, அவன் குரல் உயர்ந்த விதத்தில் மது அரண்டு போனாள்.

அவள் தோள்களை அழுந்தப் பற்றியவன்,

“அன்னைக்கு உன் ஃப்ரெண்ட் ஹாஸ்பெட்டில இருக்கான்னு சொல்லி அந்த இந்துவை ஜாமீன்ல எடுக்கனும்னு சொன்ன… நானும் ஒத்துகிட்டு உன்னைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு போனேன்… நீ அவளை ஜாமீன்ல எடுத்த… அதோட அந்த விஷயம் முடிஞ்சு போச்சு

ஆனா இனிமே இந்தக் கேசைப் பத்தி நீ பேசவும் கூடாது… கோர்ட்டுக்குப் போகவும் கூடாது… என்னை மீறி இந்த விஷயத்துல நீ ஏதாவது செஞ்ச… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்… சொல்லிட்டேன்” என்று காரமாக மிரட்டிவிட்டு அங்கிருந்து அவன் விடுவிடுவென நடந்து சென்றுவிட,

அவன் பேசியதில் படபடத்துபோனவளுக்கு இதய துடிப்பின் வேகம் இயல்பு நிலைக்கு வரவே சில நிமிடங்கள் பிடித்தது. 

***

காவல் நிலையம்.

ஆய்வாளர் அறையில் இந்துமதி நடுக்கத்தோடு தலைக் கவிழ்ந்தபடி அமர்ந்திருக்க, அவளையே வன்மமாக விழுங்கி விடுவது போல் பார்த்திருந்த சாரங்கபாணி,

“அன்னைக்கு விட இன்னைக்கு நல்லா மூக்கும் முழியுமா பார்க்க அழகா இருக்க” என்று வர்ணிக்க அவளுக்கு படபடப்பானது.

அதற்குள் அவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவள் அருகில் வர, அவள் அவசரமாக எழுந்து கொள்ள முயல,

“அட! நீ உட்காரு” என்றவர் அவள் தோளைத் தொட்டு அழுத்தியதில் பதறியவள்,

“இப்படியெல்லாம் என்கிட்ட நடந்துக்காதீங்க சார்” என்று அழத் தொடங்கியிருந்தாள்.

“ஏன் இப்ப சின்ன புள்ள மாதிரி எதுக்கு எடுத்தாலும் அழுகுற” என்று பேசிக் கொண்டே அவர் கரம் அவளிடம் எல்லை மீறியதில் அவள் துடித்து பிடித்து எழுந்து கொள்ள அவர் அவள் கைகளை விடாமல் அழுந்தப் பற்றிக் கொண்டே, “ரொம்ப பண்ணாதே வா” என்றார்.

அவள் மிகவும் பிராயத்தனப்பட்டு அவர் கரத்தை உதறிய அதேநேரம் அவரை உக்கிரமாக முறைக்க,

 “சும்மா இந்தப் பத்தினி லுக் எல்லாம் என்கிட்ட விடாதே… உன் கதையெல்லாம் எனக்கு நல்லா தெரியும்… அந்த சுரேஷுக்கும் உனக்கும் எப்படித் தொடர்புன்னு கூட எனக்கு தெரியும்” என்று அவளைக் கீழாய் பார்த்த பார்வையில் அவள் உடல் கூசிப் போனது.

“நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எனக்கும் அவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்ல… ஆரம்பித்துல இருந்து நடந்த எல்லாத்தையும் நான் உங்ககிட்ட சொல்லிடுறேன்… அப்புறம் உங்களுக்கே புரியும்”

“கதைச் சொல்ல போறியா? சரி சொல்லு… கேட்போம்… ஆனா அங்க நின்னுட்டு சொன்னா என் காதுல விழாது… என் பக்கத்துல வந்து சொல்லு” என்று சாரங்கபாணி அவளை கல்மிஷமாக பார்க்க,

“சை” என்றவள் முகம் சுளிக்க, “சரி நீ கிட்ட வர வேண்டாம் நான் வரேன்” என்றவர் அவள் அருகே நெருங்கி வரவும் நெருப்பிலிட்ட புழு போல அவள் அல்லாடிய சமயம்,

“சார்” என்றபடி ஜெயா அறை வாசலில் வந்து நிற்க, சாரங்கபாணியின் விழிகள் கோபத்தில் சிவந்தன.

“நேரம் பார்த்து வரா பாரு” என்றவர் முனகிவிட்டு, “என்ன வேணும் உனக்கு?” என்றுக் கடுப்பாக கேட்க,

“இல்ல… இந்த கேஸ் பைலை ரேக்ல வைக்கலாம்னு” என்றவள் சொல்ல அவளை கடுங்கோபத்தோடு முறைத்தவர்,

“வேணும்டே பண்றியா இப்படியெல்லாம்” என்று வினவ,

“ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல சார்… நான் லஞ்சுக்கு கிளம்பிட்டு இருக்கேன்… பைல் ரொம்ப முக்கியமானது… அதான் உங்க ரூம்ல உங்க பாதுக்காப்புல வைச்சா பத்திரமா இருக்குமேன்னு” என்றவள் சொன்ன தொனியில் அவளை ஏற இறங்கப் பார்த்தவர்,

“வைச்சிட்டுப் போ” என்றார்.

“ஓகே சார்” என்று அந்த பைலை இடம் பார்த்து சரியாக வைத்தவள், “சரி சார்… நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்” என்று சொல்ல,

“முதல கிளம்பு” என்றார் கடுப்போடு!

அவள் வாசல் வரை செல்ல சாரங்கபாணி, “தொலைஞ்சா” என்று பெருமூச்செறியும் போது, “சார் ஒரு விஷயம்” என்றபடி மீண்டும் அவள் உள்ளேவர, அவர் முகத்தில் உண்டான எரிச்சலுக்கு அளவே இல்லை.

“என்ன விஷயம்?” என்றவர் பல்லைக் கடிக்க அவரிடம் ரகசியமாக

“புதுசா வந்த ஏசிபி வேற ரொம்ப கெடுபிடியான ஆளா இருக்காரு… இதுல நீங்க இந்த ஸ்டேஷன்ல வைச்சு இந்தப் பொண்ணுகிட்ட விசாரணைங்கிற பேர்ல எதாச்சும் தப்பா நடந்துகிட்டீங்கன்னா”

“என்ன சொன்ன?” என்றவர் அவளை எரிப்பது போல் பார்க்க,

“இல்ல… நீங்க அப்படி நடந்துக்கமாட்டீங்க… ஒருவேளை அப்படி எதாச்சும் நடந்த மாதிரி யாராச்சும் அபாண்டமா சொல்ல கூட வாய்ப்பு இருக்கு… பார்த்து இருந்துக்கோங்க… அப்புறம் அந்த ஏசிபிபிபிபி…” என்றவள் இழுத்த இழுவையில் அவர் மூச்சு வாங்க கோபத்தோடு,

“வாயை மூடுறியா? உன்கிட்ட நான் இதெல்லாம் கேட்டேன்” என்று பொறுமினார்.

“நீங்க கேட்கலனாலும் நான் சொல்லணும் இல்லையா? இந்த ஸ்டேஷனோட எஸ் ஐ… அப்புறம் எனக்கும் சேர்த்து இல்ல விசாரணை கமிஷன் வைப்பாங்க” என்று மிக சாமர்த்தியமாக அவரை எச்சரித்துவிட்டு ஜெயா அந்த அறையை விட்டு வெளியேறிவிட, அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அடிபட்ட புலி போல அப்படியும் இப்படியும் அவர் நடந்து கொண்டிருக்க, இந்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்திருந்தாள்.

நடுங்கியபடி நின்றிருந்த இந்துமதியின் புறம் பார்வையைத் திருப்பிய சாரங்கபாணிக்கு உள்ளுர குமைந்தது. “அந்த ஏசிபி இப்பன்னு பார்த்துதான் இங்க வரணுமா? என் நேரமே சரியில்ல…” என்று புலம்பியபடி அவர் இருக்கையில் வந்து சாய்ந்து அமர, இந்துமதிக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.

அதோடு அவளைக் கூர்மையாகப் பார்த்தவர், “வந்து என்னை டென்ஷன் படுத்தாம ஒழுங்கா நான் சொல்ற மாதிரி எழுதிக் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு கிளம்பு” என்ற போது அவள் முகம் மீண்டும் அச்சத்தை ஊற்றெடுத்தது.

ஆனால் அவன் தன் பயத்தைக் காட்டி கொள்ளாமல், “இல்ல… நான் எதுவும் கையெழுத்து போட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தீர்மானமாக அவள் மறுக்கவும்

சாரங்கபாணி கொதித்து எழுந்து,

“என்ன திமிரா? கையெழுத்துப் போட்டுக் கொடுன்னா போட்டுக் கொடு… முடியாதுன்னு சொன்ன மவளே உன்னை துவம்சம் பண்ணிடுவேன்” என்று சத்தமிட,

அவரின் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் அவள் கொஞ்சமும் அடிபணியவில்லை. கையெழுத்து போட மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்தாள்.

சாரங்கபாணியின் முகத்தில் அத்தனை எரிச்சல்.

“ஆமா… இப்படியெல்லாம் பேசச் சொல்லி அந்த வக்கீல் பொண்ணு உன்கிட்ட சொன்னாளோ?” என்றுக் கேட்டுவிட்டு அவரே மீண்டும்,

“சொல்லி இருப்பா… ஆனா சத்தியமா சொல்றேன்… அவ இந்தக் கேஸ்ல உனக்கு சாதகமா வந்து நிற்க மாட்டா” என்றார்.

இந்துவிற்கு சாரங்கபாணி வார்த்தையில் துளியும் நம்பிக்கை இல்லை. அவள் எந்த உணர்வும் காட்டிக்கொள்ளாமல் நிற்க,

“என்ன நான் சொல்றதை நீ நம்ப மாட்டியா? இந்தக் கேஸ்ல குற்றவாளி யாருன்னு தெரிஞ்சா அப்போ உனக்கு நான் ஏன் அப்படி சொன்னேன்னு புரியும்” என்றவர் கடைசியாக அவளிடம் சொன்ன அந்தப் பெயரைக் கேட்டு விக்கித்து நின்றாள்.

“இப்ப சொல்லு அவ உனக்காக வருவான்னு நினைக்கிற” என்று எக்காளமாக கேட்டவர் மேலும்,

“உனக்கு தெரியுமா? அவ மேல எனக்கு இருந்த காண்டுக்கு நான் கூட அவளை இந்த கேஸ் மூலமா எதாச்சும் பண்ணலாம்னு பார்த்தேன்… ஆனா இப்போதைக்கு அவளை யாரும் ஒன்னும் பண்ண முடியாத இடத்தில இருக்கா” என்று அவருடைய புலம்பலை வேறு சேர்த்துக்கொண்டார்.

ஆனால் இந்துவிற்கு அந்த குற்றவாளியின் பெயரை தவிர வேறெதுவும் காதில் விழவில்லை.

அப்படி இருக்குமா? ஆனால் அதெப்படி? அவளால் நம்பவே முடியவில்லை. தான் கேட்டது அந்தப் பெயரை தானா? என்று அவள் யோசித்திருக்கும்போது சாரங்கபாணி

வேகமாக அறையை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் அதே வேகத்தில் உள்ளே வந்து,

“ஆமா… வெளியே நிற்குறது உன் மளிகைக் கடை புருஷன்தானே?” என்றுக் கேட்ட நொடி அவள் பதட்டமாக,

“அன்னைக்கு என்கிட்ட அவ்வளவு அடிவாங்கியும் இன்னைக்கு உன்னை கூட்டிக்கிட்டு போலிஸ் ஸ்டேஷன் வந்திருக்கான்னா அவனுக்கு செம தில்லுடி” என்றவர் குரூரமாக ஒரு பார்வைப் பார்த்து,

 “தப்பு பண்ணிட்டேன்… என் மேல கை வைச்ச அவனை அன்னைக்கே அடிச்சு கொன்னு ரயில்வே ட்ரெக்ல தூக்கிப் போட்டிருக்கணும்”

அந்த வார்த்தையைக் கேட்டு அவள் பதறித்துடிக்க,

“பொண்டாட்டிக்கு கள்ளத் தொடர்பு இருக்கிறது தெரிஞ்சு பையன் தற்கொலைப் பண்ணிக்கிட்டான்னு சொல்லி ஈஸியா உன் கேஸ் அவன் கேஸுன்னு ரெண்டுத்தையும் ஒண்ணா க்ளோஸ் பண்ணி இருப்பேன்” என்றதும் அவள் விழிகளில் கண்ணீர் கரை புரண்டோடியது.

“அப்ப செய்யாம விட்டதை இப்ப கூட என்னால செய்ய முடியும்”

அவர் அவ்விதம் சொன்ன மறுகணமே பயந்து கைக்கூப்பி நின்றவள்,

“வேண்டாம்… அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க… நீங்க என்ன சொல்றீங்களோ அதே மாதிரி எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறேன்” என்ற போது சாரங்கபாணி கொடூரமாக சிரித்துவிட்டு,

“அப்ப வா… உட்கார்ந்து நான் சொல்றதை அப்படியே எழுது… நீ அந்த சுரேஷை கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ண… அவன் கூட நீ ஓடி போகலாம்னு பார்த்த… ஆனா அவன் உன் ஊர்காரங்களை பார்த்துப் பயந்து உன்னை விட்டுட்டு ஓடிட்டான்…

அப்புறம் நீ இந்த மளிகை கடை புருஷனைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட… ஆனா உனக்கு அவனைச் சுத்தமா பிடிக்கல… திரும்பியும் நீ வேலைக்கு போன இடத்தில சுரேஷை பார்த்ததும்… உங்க பழைய பழக்கம் திரும்ப ஆரம்பிச்சுது… ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருந்தாலும் தப்பான தொடர்பு வைச்சு இருந்தீங்க…

ஆனா நடுவுல உனக்கும் அவனுக்கும் கொஞ்சம் பிரிச்சனையாயிடுச்சு… அதுவுமில்லாம உன் புருஷனுக்கும் குடும்பத்துக்கும் தெரிஞ்சிருமோன்னு பயந்து போன நீ அவனை விட்டு விலகிடலாம்னு பார்த்த….

ஆனா அவன் விடுவானா? நீயும் அவனும் நெருக்கமா இருக்கிற போட்டோ காண்பிச்சு உன்னை மிரட்ட ஆரம்பிச்சிருக்கான்… அவன் ஆசைக்கு உன்னை இணங்க சொல்லி மிரட்டினான்… ரொம்ப டார்ச்சர் பண்ணான்… ஒரு லெவலுக்கு மேல உன்னால அவன் டார்ச்சர் தாங்க முடியல

உன்னை அவன் கூட பெங்களூர் வர சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கான்… ஆனா நீ வீட்டுல தெரிஞ்சா பிரச்சனையாயிடும்னு மறுத்திருக்க… உன் நகையெல்லாம் கொண்டு போய் கொடுத்து அந்தப ஃபோட்டோவை கொடுத்திர சொல்லிக் கெஞ்சி இருக்க… அவன் கொடுக்கவே மாட்டேன்னு சொல்லவும் உனக்கு ரொம்ப கோபம் வந்திருக்கு… அவனை ஆக்ரோஷமா தள்ளிவிட்டதுல அவன் பின் மண்டையில அடிப்பட்டு செத்துப்போயிட்டான்… ம்ம்ம் நான் சொன்னதை எழுது” என்று அவர் கட்டளையாக சொன்னதைக் கேட்ட நொடி அவளுக்கு தலையே சுற்றியது.

அவரைக் கண்ணீரோடு இறைஞ்சுதலாக பார்த்த அந்த அப்பாவி பெண், “இதெல்லாம் ரொம்ப அபாண்டம் சார்” என்றாள்.

“அப்போ எழுதாதே… போய்கிட்டே இரு… ஆனா நீ இந்த ரூமை தாண்டின பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது… புரியுதா?” என்று மிரட்டலாக வந்த அவர் குரலிலிருந்த உட்பொருள் அவளை நடுக்கமுற செய்ய, “இல்ல… நீங்க சொல்ற மாதிரி நான் எழுதிக் கொடுத்துடுறேன்” என்றாள்.

“அது நல்ல புள்ளைக்கு அழகு” என்றவர் வஞ்சகமாக புன்னகைக்க இந்துமதி கண்ணீரோடு சாரங்கபாணி சொன்ன அனைத்தையும் எழுதி தன் தலையெழுத்தையே மாற்ற போகும் அவளின் கையெழுத்தையும் அதில் போட்டுக் கொடுத்தாள்.

You cannot copy content