You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Rainbow kanavugal - 8

8

அன்று முழுக்கவும் நீதமன்ற வேலைகள், வழக்கு என்று அலைந்து திரிந்துவிட்டு அந்தி சாயும் நேரத்தில் கடற்கரை சாலையருகிலிருந்த மருத்துவமனை வளாகத்திற்குள் மதுபாலாவும் அவள் தோழி ரேகாவும் நுழைந்தனர். அங்கே படுக்கையில் நாற்பது வயது மதிக்கத்தக்க நிலையில் ஒருவர் சாய்ந்தமர்ந்திருந்தார். அருகில் அவர் மனைவி அவருக்குக் கஞ்சி ஊட்டிக்கொண்டிருந்தார்.

அவர்களிடம் பேசிவிட்டு வெளியே வந்த இருவரும் தங்கள் ஸ்கூட்டியில் பயணிக்க தொடங்க, மது ஓர் ஆழ்ந்த அமைதியோடு வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தாள்.

அவள் கையும் கண்களும் வண்டியை இயக்கினாலும் மனம் வேறோங்கோ தனியாக இயங்கியது. இருவரின் முகத்திலும் வியப்பும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு!

அவள் காலையில் பேசிவிட்டு வந்ததற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றியிருந்தான் அஜய். பாதிக்கப்பட்டவரின் மருத்துவ சிகிச்சைக்கான பணம் மற்றும் அவர்கள் தொழிலை மீண்டும் நடத்துவதற்கான உதவி என்று அவள் கேட்டதையும் எதிர்பார்த்ததையும் விட பன்மடங்கு அதிகமாகவே அவன் தந்துவிட்டுப் போயிருந்தான்.

அப்போது அவள் பின்னே அமர்திருந்த ரேகா, “அதான் அவங்களுக்கு தேவயானது கிடைச்சிடுச்சு… இன்னும் கேட்டா தேவைக்கு அதிகமாகவே… அப்படியிருக்கும் போது நீ அடிமிட் பண்ணும்போது கட்டின காசையாச்சும் கேட்டு வாங்கிட்டு வந்திருக்கலாம்” என்றாள் ஆதங்கத்தோடு.

“லூசாடி நீ… அல்பம் மாதிரி உதவி செஞ்ச காசைப் போய் கேட்க சொல்றியா?” என்றாள் மது கடுப்போடு!

“பின்ன கேட்காம… நீயென்ன பாரி வள்ளல் பரம்பரையா? கொடுத்தக் காசைக்கூடத் திரும்பி வாங்காம ஏமாந்த சோணகிரி மாதிரி கிளம்பி வந்துட்ட… உஹுக்கும்… அந்தம்மாகாச்சும் குடுக்கனும்னு தோணுச்சா பாரு” என்று ரேகா சொல்ல,

“வாயை மூடு… இப்ப அந்தக் காசை வந்துதான் எனக்கு நிறைஞ்சிட போகுதாக்கும்” என்றாள் மது.

“நீ எப்புடுறி இப்படி இருக்க… கோர்ட்ல பாதி கேசை நீதான் செலவு பண்ணி நடத்திட்டு இருக்க… இதுல முக்கால்வாசி பொதுநல வழக்கு வேற… அதுல முக்கால்வாசிய அவங்களே தள்ளுபடி பண்ணிடுறாங்க” என்றவள் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டே வர,

“நீ இப்படியே பேசிக்கிட்டு வந்த… உன்னை இங்கயே தள்ளி விட்டுட்டு போயிடுவேன் சொல்லிட்டேன்” என்றாள்.

“நீ செஞ்சாலும் செய்வடி” என்றுச் சொல்லிவிட்டு அதோடு ரேகா அவள் வீடு வரும் வரை வாயைத் திறக்கவில்லை. ரேகாவை இறக்கிவிட்ட பின் மது தன் வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் நன்றாக இருட்டிவிட்டிருந்தது.

அவள் எப்போதும் பைக்கை வீட்டின் முன்னே நிறுத்துவதுதான் வழக்கம். ஆனால் அந்த இடத்தை இன்று வழமைக்கு மாறாக ஒரு கம்பீரமான சாம்பல் நிற கார் ஆக்கிரமித்திருந்தது.

‘யாருடா அவன்… நம்ம வீட்டு வாசலில காரை நிப்பாட்டி இருக்கிறது’ என்ற யோசனையோடு தன் பைக்கை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

இத்தனை விலையுயர்ந்த காரை எடுத்துக் கொண்டு இந்தத் தெருவில் யாரைப் பார்க்க வந்திருக்க கூடும் என்று யோசித்த மூளையில் வேறோரு நினைவு பட்டென்று அவள் தலையைத் தட்டியது.

‘இந்தக் காரை நம்ம அந்த பெரிய பங்களால பார்த்தோம் இல்ல… இதெப்படி இங்க?’ என்று யோசித்த மறுகணமே அவள் மனதிற்கு ஏதோ சரியில்லை என்றுத் தோன்ற,

படபடவென மாடி படிக்கட்டுகளில் ஏறியவள் அவசரமாகக் உள்ளே நுழைந்தாள்.

அவள் வீட்டு முகப்பறையில் அஜய் ஒய்யாரமாக சோபாவில் அமர்ந்து, அவள் தாய் நந்தினியிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த நொடி அவள் உள்ளம் படபடத்தது. ஏதோ விபரீதமாக எண்ணத் தோன்றியது.

அடுத்த நொடியே அவன் முன்னே வந்து நின்றவள்,

“ஹலோ மிஸ்டர்… எதுக்கு நீங்க என் வீட்டுக்கு வந்தீங்க? உங்களுக்கு இங்க என்ன வேலை? என்ன மிரட்ட வந்தீங்களா?” என்றவள் சரவெடியாக வெடிக்க, அவனோ மதப்பாக அவளைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தான்.

“ஏ மது” என்று நந்தினி மகளைத் தடுக்க முனைய,

“உனக்கு அறிவே இல்ல நந்து… யார் என்னன்னு தெரியாம நீ பாட்டுக்கு உள்ளே உட்கார வைச்சிபேசிட்டு இருக்க” என்று அவள் தன் அம்மாவையும் கடிந்து கொள்ள அப்போது அஜய் சத்தமாக சிரித்துவிட்டு,

“நீ இன்னுமும் திருந்தலயா… உங்க அம்மா அப்பாவை பேர் சொல்லித்தான் கூப்புடுறியா?” என்றுக் கேட்க அவளுக்கு எரிச்சலானது.

“நான் எங்க அம்மா அப்பாவை எப்படி வேணா கூப்பிடுவேன்… உங்களுக்கு என்ன மிஸ்டர்?” என்றுக் கேட்டுக் கொண்டிருந்தவளின் குரலில் சுருதி மெல்ல இறங்க, அவளுக்கு அந்த நொடி அவன் கேட்ட கேள்வியும் தோரணையும் வேற எதையோ நினைவுப்படுத்தியது.

அவள் அமைதியாக அவன் முகம் பார்த்துக் குழம்பி நிற்கும் போது, “ஐயோ மது! அது யாரோ இல்ல… நம்ம அஜய்டி” என்று நந்தினி மகளிடம் சொல்ல, அஜய் இதழ்கள் இன்னும் அழகாக அவளைப் பார்த்தபடி விரிந்தன.

அந்த நொடியே மதுவின் இதழ்கள் இறுகப் பூட்டிக்கொண்டன. அப்போது நந்தினி அஜயிடம் திரும்பி, “தப்பா நினைச்சுக்காத அஜய்… அவ நீ யாருன்னு தெரியாம” என்று சொல்லவும்,

“பரவாயில்ல மாமி” என்றான் மிதமான முறுவலோடு!

மதுவின் மூளை அப்போதுதான் நடந்த அனைத்தையும் வைத்து கணக்குப் போட்டு கொண்டிருக்க நந்தினி மீண்டும் அஜயிடம்,

“அம்மா அப்பா அனன்யாலாம் எப்படி இருக்காங்க அஜய்? அனன்யாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று வரிசையாக தம் நல விசாரிப்புகளைத் தொடங்கியிருந்தார்.

“போன வருஷம்தான் அனன்யாவுக்கு கல்யாணம் முடிஞ்சுது… பாப்பா பிறந்து ரெண்டு மாசம் ஆகுது… அப்பா நல்ல இருக்காரு… அம்மா” என்று நிறுத்தி யோசித்தவன்,

“அவங்களும் நல்லா இருக்காங்க” என்று முடிக்க, மதுவிற்கு பால் மணம் மாறாத அந்த குழந்தையின் முகம் நினைவுக்கு வந்தது. மெல்லிய புன்னகை அவள் உதட்டில் மலர, ‘அனன்யா பாப்பாவா அது’ என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.

அஜயின் பார்வையோ மது ஏதாவது பேசுவாளா என்று ஏக்கமாக அவளையே பார்க்க நந்தினி மகளின் தோளை இடித்து,

“என்னடி இத்தனை வருஷம் கழிச்சு அஜய் நம்மல தேடிகிட்டு வந்திருக்கான்… நீ என்னடான்னா ஒன்னும் பேசாம பிடிச்சுவைச்ச பிள்ளையாராட்டமா நிற்குற” என்றார்.

“இல்ல… அது வந்து… நான் ப்ரெஷாகிட்டு வந்திடுறேன்… ஜஸ்ட் டூ மினிட்ஸ்”  என்று அவள் அவசர அவசரமாக தன்னறைக்குள் புகுந்து கதவை அடைத்து கொண்டாள்.

‘எப்படி என்னால அஜயை அடையாளம் கண்டுபிடிக்க முடியாம போச்சு… அப்பவே பார்த்த மாதிரி தோணுச்சுதான்… நான்தான் யோசிக்காம விட்டேன்… இப்படி உயரமா வாட்டசாட்டாமா வளர்ந்திருப்பான்னு யார் கண்டா… அப்பவே அஜய் உயரம்தானே… ஆனா இப்போ பயங்கர ஸ்மார்ட்டாயிட்டான்…’ தன் மனதிற்குள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவளுக்கு அவனிடம் பேச வேண்டுமென்று உள்ளுர மனம் துடித்த போதும் முன்னே போல் இயல்பாக பேச முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

‘நான்தான் மதுன்னு கண்டுபுடிச்சு… அஜய் எனக்காக என்னைத் தேடி வந்திருக்கானா? இல்ல… இல்ல எனக்காகன்னு இருக்காது… எல்லாருக்காகவும் வந்திருப்பான்’ என்று தம் எண்ணப்போக்கில் யோசித்தவள் சற்று நிதானித்து,

‘ஐயோ! இப்படி மரியாதை இல்லாம யோசிக்கிறேன்… பேசும் போதும் அதையே போல வந்து தொலைச்சிட்டா… தப்பு தப்பு… அஜய் இப்போ நம்ம வீட்டுக்கு வந்திருக்க கெஸ்ட்… அதுவுமில்லாம அஜய் இப்போ முன்ன மாதிரி இல்ல… எவ்வளவு பெரிய ஆளாயிட்டான்… நோ நோ… ஆயிட்டாங்கன்னு சொல்லணும்

அவனை… ஐயோ! அவங்ககிட்ட மரியாதையாதான் பேசணும்… ஆனா அது ரொம்ப கஷ்டமாச்சே… ஆர்டிஃபிசியலா இருக்குமே!’ இவள் இப்படி திண்டாடிக்கொண்டிருக்கும்போதே,

“மது” என்று நந்தினிஅறைக்கதவைத்தட்டினார்.

“இதோ வந்திடுறேன்ம்மா” என்று குரல் கொடுத்தவள் தன் முகத்தை அலம்பி கொண்டுக்கண்ணாடியில் அவசரமாக ஒரு பார்வைப்பார்த்துவிட்டுத்கதவைத் திறந்தாள்.

அப்போது கதவருகிலேயேகாத்திருந்த நந்தினி, “ஏ மது… நீ அஜய் கிட்ட பேசிட்டு இருக்கியா?… நான் நம்மசரோகடையில போய் கேரட் வாங்கிட்டுவந்திடுறேன்” என்று சொல்ல,

“ஏன் எதுக்கு?” என்று கேட்டாள் மது.

“அஜய்க்கு நான் செய்றகேரெட்அல்வான்னாரொம்ப பிடிக்கும்… அதான் செஞ்சி கொடுக்கலாம்னு” என்று நந்தினிபரபரப்போடு சொல்ல,

மது உடனே, “நான் போய் வாங்கிட்டுவரேன்” என்றாள்.

 “ஒன்னும் வேண்டாம்… நீ அஜய்கிட்டபேசிட்டு இரு… நான் வந்திடுறேன்” என்றவர் வேகமாக நகர்ந்துவிட்டார்.

‘இந்த நந்து இப்படி நம்மல தனியா மாட்டிவிட்டுட்டுபோகுதே’ என்று ஒரு விதமான சங்கடத்தோடுஅவள் முகப்பறை நோக்கி வர, அவன் தீவிரமாக அங்கிருந்த அவளின் கல்லூரி புகைப்படங்களைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

‘ஐயோ! இதைப்போயாபார்க்கணும்… ஒரு போட்டோல கூட நாம அடக்கம் ஒடுக்கமா நின்றிருக்க மாட்டோமே’ என்றுப்பதட்டமானவள்,

“அந்தப்ஃபோட்டோ எல்லாம் பார்க்காத… தீங்க… அதெல்லாம் அவ்வளவாநல்லா இருக்காது” என்று மிகவும் பிரயத்தனப்பட்டு மரியாதையாக பேச முயன்றாள்.

அவன் பின்னே வந்து நின்றவளைத்திரும்பிப் புன்னகையோடு ஏறிட்டவன், “நல்லாதானே இருக்கு… ஆனா நீ அப்போ பண்ணசேட்டையெல்லாம்கம்பேர்பண்ணா இதெல்லாம் ரொம்ப கம்மிதான்” என்றான்.

“யார் சேட்டை எல்லாம் பண்ணது? அந்தப்ஃபோட்டோல எல்லாம் சும்மா அப்படி விளையாட்டாபோஸ்கொடுத்திருக்கேன்… அவ்வளவுதான்” என்றவள் முகம் சுருங்க கூறவும்,

“அது சரி” என்றவன் அவளை முறைப்பாய்ஏறஇறங்கப் பார்த்து, “உன் வீடியோஸ் எல்லாம் நான் இப்பதான் பார்த்தேன்… ஆமா உனக்கு என்ன அப்படி ஒரு அசட்டு துணிச்சல்… நம்ம நாட்டோட பிரச்சனையெல்லாம் நீ ஒருத்தியா நின்னு சால்வ் பண்ண போறியா? நெட்ல முழுக்கப் புரட்சி பெண் அது இதுன்னு போட்டு வைச்சிருக்காங்க… உனக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை… எதாச்சும்வம்புல கிம்புல மாட்டி வைச்சேன்னா?” அவன் இம்முறை ரொம்பவும் உரிமையாக கேட்டான். அவளைப் பற்றிய தகவலைச்சேகரித்தபோது இதெல்லாம் அவனுக்கு தெரிய வந்திருந்தது.

என்னவோ அவன் கேட்ட விதம் அவளுக்கு பிடிக்காமல், “அதெல்லாம் நான் சமாளிச்சிடுவேன்” என்றவள் அலட்சியமாக பதிலளிக்க,

“என்ன சமாளிப்ப? நீ என்ன லாயராஇல்லரவுடியா?” அவள் மீதான அக்கறையில்அவன் கடிந்து கொள்ள, அவளால் அவன் வார்த்தைகளை ஏற்க முடியவில்லை.

“உன்… உங்களுக்கு நான் செய்றதெல்லாம் தப்பாதான் தெரியும் மிஸ்டர் அஜய்… ஏன்னா இன்னைக்கு உங்க ஸ்டேட்டஸ் அப்படி… ரோட்ல நிற்கிற தள்ளு வண்டிக்காரனை எல்லாம் நீங்க மனிஷனா கூட மதிக்க மாட்டீங்க… இடிச்சு தள்ளிட்டு போயிட்டே இருப்பீங்க… பணம் கொடுத்து உங்க தப்பை எல்லாம் சரி செஞ்சிட முடியாது” என்றவள் சீற்றமாக உரைக்க, அந்த வார்த்தைகள் அஜயை ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது.

“ஸ்டாப் இட் மது… அந்த ஆக்ஸிடெண்டட்டைப் பண்ணது நான் இல்லை… அனன்யா… இன்னும் கேட்டா எனக்கு அதைப் பத்தி தெரிய கூடத் தெரியாது… நீ சொல்லித்தான் அந்த விஷயமே எனக்கு தெரிஞ்சுது” என்றவன் குரல் உடைய,

“ஒ!’ என்றவள் அந்த நொடி தான் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டோமோ என்று எண்ணி வருந்தினாள்.

அந்த அறையை சில நொடிகள் மௌனம் ஆட்சி செய்ய,

“நான் கிளம்புறேன்… மாமி வந்தா சொல்லிடு” என்று சொல்விட்டு அவன் விறுவிறுவென வெளியேற,

“அஜய் நில்லு” என்று அழைத்துக் கொண்டே அவன் பின்னே போனாள். ஆனால் அவன் கோபத்திற்கும் வேகத்திற்கும் அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அவன் கார் சீறிக் கொண்டு அந்த சாலையைவிட்டு பாய்ந்து செல்ல, அந்தக் காட்சியைப் பார்த்த நந்தினி குழப்பத்தோடு, “என்ன மது? அஜய் கிளம்பிட்டானா?” என்றுக் கேட்டபடிப் படிக்கட்டு ஏறி வந்தார்.

என்ன சொல்லி இப்போது அம்மாவை சமாளிப்பது என்று எண்ணியவள் பட்டென்று, “முக்கியமா ஏதோ கால் வந்துச்சு… போயிட்டா.. ங்க”  என்று பொய்யுரைத்தாள்.

“ப்ச் அப்படியா?” என்றுப் பெருமூச்செறிந்துக் கொண்டே  “உங்க அப்பாக்கிட்ட இப்பதான் நான் போன் பண்ணி சீக்கிரம் வர சொன்னேன்…” என்றுப் புலம்பியபடி அவர் உள்ளே செல்ல,

மது வெளியே நின்றபடி அவன் சென்ற திசையைப் பார்த்திருந்தாள். மனம் கனத்தது.

‘வீடு தேடி வந்தவனை இப்படி எடுத்தெறிஞ்சுப் பேசியிருக்கக்கூடாது… தப்பு பண்ணிட்டேன்’ என்றுக் குற்றவுணர்வில் தவிக்க,

“நீ ஏன் வெளியேவே நிற்குற உள்ளே வா” என்றார் நந்தினி!

“உஹும்… நான் சரோ கிட்ட போய் பேசிட்டு வரேன்” என்று அவள் கீழே இறங்கவும்,

“அவன் கடையில இல்ல… அவன் தம்பிதான் இருக்கான்” என்றார்.

“இந்நேரத்தில கடையில இல்லாம எங்க போனான்?”

“அவன் கல்யாண விஷயமா பேச அவங்க அம்மாவை அழைச்சிட்டு ஊருக்கு போயிருக்கானா?” என்று சொன்ன நொடி திரும்பி வீட்டிற்குள் நுழைந்தவள், “யாருக்கு கல்யாணம்?” என்றுக் கேட்டாள்.

“வேற யாரு? நம்ம சரோக்குதான்… ஏதோ அவங்க மாமா பொண்ணாம்” என்று சொல்ல,

“என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல” என்றவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ஆமா… எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருப்பாங்களாக்கும்” என்று நந்தினி சொல்லிக் கொண்டே உள்ளே சென்றுவிட,

‘அதெப்படி என்கிட்ட சொல்லாம போகலாம்… நான் மட்டும் அவன்கிட்ட ஒன்னுவிடாம எல்லாத்தையும் சொல்றேன் இல்ல… வரட்டும் அவன்கிட்ட நான் பேசவே போறதில்ல’

அனாவசியமாக அழுதிராத அவள் விழிகள் கண்ணீரில் நிறைந்தன. அஜய் வெடுக்கென்றுக் கோபித்துக் கொண்டு சென்றதன் வலி சரவணன் சொல்லாமல் போனதில் அதிகமாகிவிட, அவள் இயல்பிற்கு நேர்மாறாக தலையணையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

மலையளவு பிரச்சனைகளைக் கூட உறுதியாக நின்று சமாளிக்கும் மதுவிற்கு ரொம்பவும் நெருக்கமான உறவுகளின் சின்ன நிராகரிப்பும் கோபத்தையும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

காதல், நட்பு இந்த இரண்டுமே அவளை பலவீனப்படுத்தும் ஆயுதங்கள்.

இருவரையுமே அவள் சரிவிகிதமாக பார்த்தாலும், அவள் விதியானது ஒன்றைவிட்டு கொடுத்தால்தான் இன்னொன்றை தக்கவைத்து கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு அவளைத் தள்ள போகிறது.

ஆனால் அஜய் அப்படியில்லை. அவனின் எல்லா உறவுகளையும் விட அவனுக்கு மது ஒருபடிமேல். அவள் அப்படி அவனைக் குத்திக்காட்டிப் பேசியதும் யாரோ போல நடத்தியதும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவளுக்காக ஆசையாக எடுத்த வந்த பரிசு பொருளைக்கூடக் கொடுக்காமல் திருப்பி எடுத்து வந்திருந்தான்.

தன்னறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டவன்… மனமெல்லாம் நடந்த விஷயங்களை எண்ணிக்கு முறியது.

‘ஏன்டி இப்படியெல்லாம் பேசுன… யாரோ மாதிரி என்கிட்ட பேச உன்னால எப்படுறி முடிஞ்சுது’ என்றவன் உள்ளம் வெதும்பிக் கொண்டிருக்க, அவன் தந்தை பாஸ்கரன் அறைக்கதவைத் தட்டி, “அஜய்” என்று அழைத்தார்.

முகத்தைத் துடைத்துக் கொண்டுக் கதவை அவன் திறக்க,

“உனக்காகதான் இவ்வளவு நேரமாகாத்திட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு உன் ரூமுக்கு வந்துட்ட… சரி சொல்லு ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே… சர்ப்ரைஸ் அது இதுன்னுவேற ஏதேதோ சொன்ன” என்றவர் ஆர்வமாகக் கேட்க, அவன் என்னவென்று சொல்லுவான்?

மொத்தமாக அவன் உற்சாகமும் சந்தோஷமும் வடிந்துபோய்விட,

“சொன்னேன்… ஆனா இப்போ அப்படி எதுவுமில்ல” என்றான்.

அவன் முகத்தில் அந்தளவு ஏமாற்றமும் கோபமும் குடிக்கொண்டிருந்தது.

“என்னடா ஆச்சு? ஏதோ அப்செட்டா இருக்க மாதிரி தெரியுது” என்று அவனிடம் அவர் கரிசனமாக கேட்க,

“உஹும் அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா” என்று மழுப்பிவிட்டான்.

“ஆனா உன் முகத்தை பார்த்தா அப்படி தெரியலயே அஜய்”

“அதெல்லாம் ஒன்னுமில்ல… நீங்க போய் படுங்க” என்றுப்பொய் சொல்லி அவரை சமாளித்து விட்டபோதும் தன் மனதை அப்படி சுலபமாக ஒரு பொய்யைச் சொல்லி சமாளிக்க முடியவில்லை அவனால்.

‘நான் உன்னைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் மது’ என்றவன் உள்ளம் திரும்பத் திரும்ப சொல்லி ஏமாற்றத்தில் தவித்தது.

சரியாக அந்தச் சமயம் படிக்கட்டில் தள்ளாடிக் கொண்டே ஏறி வந்தாள் அனன்யா! போதை அவள் தலை வரை ஏறியிருந்தது.

அவள் அணிந்திருந்த நவநாகரிக ஆடையும் அவளின் தள்ளாட்டமான நடையையும் பார்த்த அஜயின் முகத்தில் எரிச்சல் ஊற்றெடுத்தது. அவனுக்குள் இருந்த மொத்த கோபமும் ஏமாற்றமும் அவள் மீது திரும்பியது.

“என்ன அனு இது? நல்ல வேளை அப்பா இப்பதான் ரூமுக்கு போனாரு… அவர் மட்டும் உன்னை இந்தக் கோலத்தில பார்த்திருந்தாருன்னா என்ன ஆகுறது?!” என்றவன் பல்லைக் கடித்துக் கொண்டு எரிச்சலாக கேட்க,

“என்ன ஆகும்?” என்று அதே கேள்வியை அவன் புறம் திருப்பினாள்.

“உன்னால நல்ல மகளா இருக்க முடியலன்னா கூட பரவாயில்ல… ப்ளீஸ் ஒரு நல்ல அம்மாவாவாச்சும் இரு” என்றவன் கடுப்பாக சொல்ல,

“நான் நல்ல அம்மாதான்… என் அருணுக்கு இப்ப கூட எவ்வளவு காஸ்ட்லியான ஒரு பொம்மை வாங்கிட்டு வந்தேன் தெரியுமா?

அச்சோ! அதை மறந்து போய் கார்லயே வைச்சிட்டு வந்துட்டேன் அஜய்… நீ போய் எடுத்துட்டு வர்றியா?” என்று அவள் நிற்க கூட முடியாமல் தள்ளாடினாள்.

“கைக்குழந்தைக்கு பொம்மையா அனு முக்கியம்… தாயோட அரவணைப்புதான் தேவை… பாவம்! சுரேஷ்… எவ்வளவு நேரம்தான் அருணை வைச்சுக்கிட்டு சமாளிப்பான்” என்று அஜய் வேதனையோடு சொல்ல,

“சுரேஷ் மை டார்லிங்… அவன் எல்லா சமாளிப்பான்” என்றாள். அஜயிற்கு அதற்கு மேல் அவளிடம் பேசுவதே வீண் என்றுத் தோன்றியது.

“அம்மா தாயே… முதல நீ உன் ரூமுக்கு போ” என்றவளை அனுப்பிவிட அப்போது தள்ளாடி விழ போனவளை அவன் தாங்கிப்பிடிக்கக் கூட தயராகயில்லை. ஆனால் அந்த நொடி வெளியே வந்த சுரேஷ் அவளை விழாமல் தாங்கிப் பிடித்து அறைக்குள் அழைத்து செல்ல,

அந்தக் காட்சியைப் பார்த்து அவன் கடுப்பானான்.

இந்தப் பணம் அந்தஸ்த்து ஆடம்பரம் இதெல்லாம்தான் அனன்யாவை இப்படி தரம் தாழ்ந்து போக செய்கிறது. ஒருவேளை இந்த மாதிரியான காரணங்கள்தான் மது என்னிடம் அப்படி அவமதிப்பாக பேச காரணமோ? என்று ஒன்றோடு ஒன்று நடந்த நிகழ்வுகளை பிணைத்து பார்த்து யோசித்தது.

காரணம் என்னவாக இருந்தாலும் சரி. அவளை ஒருபோதும் அவனால் விட்டுக்கொடுக்க முடியாது.

‘நான் இல்லாத இத்தனை வருஷத்தில உன் வாழ்க்கையில வேற யார் வேணாம் வந்திருக்கலாம் போயிருக்கலாம்… ஆனால் என் இடத்தை என்னால ஒருநாளும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது மது’ என்றவன் தீர்க்கமாக எண்ணிக் கொண்ட அதேநேரம் அவள் வாழ்க்கையில் அவன் இடம் எது என்பதையும் தெளிவாகத் தீர்மானித்திருந்தான்.

You cannot copy content