You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Seethaigal Yaaro - Episode 34 & 35

Quote

அத்தியாயம் 34

கதவு பலமாகத் திறக்கப்பட்டதும் சூர்யா ஆக்ரோஷத்துடன் வெளியே வந்தான். அவனுடைய நண்பர்கள் காளியப்பன், மனோ நின்றிருக்க, “எங்கடா அவ... எங்க அவ.... *****” என்று வாயில் வந்த வசை வார்த்தைகளை எல்லாம் உதிர்த்துக்கொண்டிருக்க, அவனது கண்கள் சிவந்து கொலைவெறியில் மின்னியது.

“அவ நாங்க வரும்போது ஆளே காணோம்” என்று மெல்லிய குரலில் சொன்னான் லோகநாதன்.

“என்னது காணோமா?” அதிர்ச்சியாக அவனை நோக்கியவன், “ஆமா மாப்பிள்ளை, நாங்க வரும்போது வாசக் கதவு திறந்து கிடந்துச்சு” என்று லோகு சொல்ல, “அது எப்படிறா நம்ம நாயுங்க இருக்கே... கொதறிப் போட்டிருக்குமோ” என்று கேட்டவன் பொறுமையிழந்து வாசலுக்கு ஓடினான்.

நாய்கள் நான்கும் மூலைக்கு ஒன்றாக மயங்கிக் கிடந்தன. அவனுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. “எப்படி நடந்துச்சு இது... ஆ எப்படி நடந்துச்சு” என்று மயங்கிக் கிடந்த ஒரு நாயின் அருகே சென்றான். அங்கே சின்னச் சின்னதாகக் கறித்துண்டுகள் சிதறிக்கிடந்தன.

“என்னவோ கலந்து போட்டிருக்காங்க” என்று அங்கே நின்ற காளியப்பன் கூறவும் சூர்யா உக்கிரமானான். “யாருக்குடா இந்த இடம் தெரியும்... எப்படிறா வந்தாங்க... எப்படிறா... சுடர்... அவ... அவ எப்படிடா தப்பிச்சா” என்று பித்து பிடித்தவன் போலக் கத்தினான்.

அவள் தப்பித்துவிட்டாள் என்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவன் மூளை சூடேறி அப்படியே வெடித்துவிடும் போலிருந்தது.

அவனுடைய அந்த ஆவேசத்தைப் பார்த்த காளி கடுப்புடன், “ஆமா தப்பிச்சுட்டா... எல்லாம் உன்னாலதான்! அப்பவே சொன்னேனே... அவளைக் கொன்னுடு கொன்னுடுன்னு... ஒரு நாளோ இரண்டு நாளோ உன் ஆசையைத் தீர்த்துக்கிட்டு அவளை முடிச்சு விடுறதை விட்டுட்டு... இரண்டு வாரமா கூடவே வைச்சு இருந்து...” என்று கேட்ட நொடி, “ஆமான்டா என் பேர்லதான் தப்பு என் பேர்லதான் தப்பு” என்று இருவருக்கு இடையிலும் வாக்குவாதம் வளர்ந்தது.

“இப்போ யார் பேர்ல தப்புன்குறது விஷயம் இல்ல... அவளைத் தேட ஆள் அனுப்பி இருக்கேன்... நம்மளும் போய் தேடுவோம்” என்று மனோ அவர்களை சமாதானம் செய்தான்.

ஒரு நொடி நிதானமாக யோசித்த சூர்யா, “வேற எங்க போயிருக்கப் போறா... வீட்டுக்குத்தான் போயிருப்பா, அங்கேயே வைச்சு அவளைக் கொளுத்துறேன்” என்று விட்டு காளியிடம் திரும்பி, “நாங்க மூணு பேரும் அவ வீட்டுக்கு போய் பார்க்குறோம்... நீ வேற பக்கமா போய் தேடு... அப்புறம் என் அப்பனுக்கு போன் பண்ணி இந்த விஷயத்தைச் சொல்லி வைக்காத” என்றான்.

காளி வேறு வழியாகச் சென்று தேட லோகு, மனோ, சூர்யா மூவரும் ஒரே பைக்கில் ஏறி சுடரின் ஊருக்குப் பயணப்பட்டனர். அவர்கள் ஆரிநத்தம் கிராமத்திற்குள் நுழையும்போது ஊரே ஜகஜோதியாக இருந்தது. அய்யனார் கோவில் திருவிழாவின் கடைசி நாள்.

சுற்றிலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. வழியெங்கும் ட்யூப்லைட்கள் கட்டப்பட்டிருந்தன. போதாக்குறைக்கு ஸ்பீக்கர்களில் பாடல்கள் அதிர்ந்தன. கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் ஊர் மக்கள் அத்தனை பேரும் அங்கேதான் திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்திற்கு இடையில் பைக்கை நுழைத்து ஊருக்குள் கொண்டு வருவதே பெரும்பாடாக இருந்தது.

“ஊரே திருவிழாவுக்குக் கூடி இருக்கு, இப்போ நம்ம போறது சரியா வருமா?” என்று லோகு கேட்க, “எனக்கு அவளைக் கொல்லணும்” என்றான் சூர்யா. அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை.

வீட்டை அடைந்ததும் சூர்யா பைக்கிலிருந்து இறங்கி விடுவிடுவென்று உள்ளே நடந்தான். “என்னடா இவன் பாட்டுக்கு உள்ளே போறான், பெருசா ஏதாவது பிரச்னையை இழுத்து வைக்கப் போறான்” என்று லோகு பதற, “அவன் கொலைவெறியில் இருக்கான், இப்போ நம்ம என்ன சொன்னாலும் கேட்க மாட்டான்” என்றான் மனோ.

சூர்யா யாரைப் பற்றியும் கவலைப்படாமல் வீட்டிற்குள் நடந்தான். அந்த வீடே வெறிச்சோடிப் போயிருந்தது. நடு ஹாலிலிருந்த சுவரில் சுடரின் படத்திற்கு மாலை போட்டிருந்ததைக் கண்டு எள்ளலாகச் சிரித்தான்.

அதன் பின் ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்துக் கொண்டே சென்றவன், ஒரு அறையில் நாராயணமூர்த்தி படுத்திருப்பதைப் பார்த்தான். மீண்டும் சத்தம் இல்லாமல் வெளியே வந்தபோது அங்கிருந்த ஜாடியைத் தள்ளிவிட்டான்.

“யாரு?” என்றவர் எழுந்து வந்து அவனைப் பார்த்ததும், “யாருப்பா நீ, நீ எப்படி வீட்டுக்குள்ள வந்த?” என்று கேட்க, “எல்லாம் வாசல் வழியாதான் மாமா” என்றான் நக்கலாக.

“யாரு உனக்கு மாமா?”

“உன் பொண்ணு என்னைக் காதலிக்குறா... அப்போ நீ எனக்கு மாமன்தானே?”

“ஏய் யார் நீ, என்ன பேசிட்டு இருக்க... வெளியே போ முதல்ல” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நீ போயா முதல்ல உள்ளே” என்று அவரை வேகமாக உள்ளே தள்ளி கதவைப் பூட்டிவிட்டான். தள்ளிய வேகத்தில் அவர் தலையில் அடிப்பட்டு மயங்கிவிட, அவன் மீண்டும் தன் தேடலைத் தொடங்கினான்.

அப்போது சமையலறை ஜன்னல் வழியாக நண்பர்கள் நிற்பதை  பார்த்துவிட்டு, “என்னடா வாசல்லயே நின்னுட்டு இருக்கீங்க... உள்ள வந்து தேடுங்கடா” என்று சத்தமிட, அவர்களும் தேடத் துவங்கினர்.

ஒருவன் மாடிக்கு ஓடினான். ஆனால் எந்த அறையிலும் யாருமே இல்லை. அப்போது கடைசி அறையிலிருந்து பின்பக்க ஜன்னல் வழியாக மெல்லிய பேச்சுக்குரல் கேட்டது.

சூர்யா மெதுவாக எட்டிப் பார்த்தான். அந்த கும்மிருட்டில் நால்வர் நின்றிருந்தனர்.

சுடர் அந்தப் பங்களாவிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. அவள் பயத்துடன் எட்டிப் பார்க்க வெளியே செல்வத்தின் முகம் தெரிந்தது.

அவள் அந்த நொடியே கதவைத் திறக்க, அந்த நாய்கள் நான்கும் மயங்கிக் கிடந்தன. எழில்தான் இந்த யோசனையைக் கூறினாள். ஜோஸ் மயக்க மருந்தை ஏற்பாடு செய்ய, செல்வம் அதை இறைச்சியில் கலந்தான். காம்பவுண்ட் வழியாக அதனைத் தூக்கி வீசியவர்கள், நான்கு நாய்களும் மயங்கி விழுந்ததும் மூவரும் ஒவ்வொருவராக வீட்டிற்குள் குதித்தனர்.

செல்வம்தான் கதவை உடைக்க முயற்சி செய்துகொண்டிருக்க, சுடருக்கு அப்படியொரு ஆசுவாசம். ஓடிச் சென்று சகோதரியையும் ஜோஸையும் கட்டிக்கொண்டு அழுதவள், “அவன் பிரண்ட்ஸ் வர்றதுக்குள்ள இங்கே இருந்து தப்பிச்சு ஓடிடலாம்” என்றாள்.

வீட்டிற்கு வந்ததும் அவள் உள்ளே வரத் தயங்கிப் பின்பக்கமாக சென்று உட்கார்ந்து கொண்டாள்.

“அப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிப் புரிய வைச்சுக்கலாம்” என்று எழில் சமாதானம் செய்ய, “இந்தக் கோலத்துல யாரும் என்னைப் பார்க்குறதுல எனக்கு விருப்பம் இல்லை... ஒரு பக்கம் செத்துடலாம் போல இருக்கு... இன்னொரு பக்கம் அவனுங்கள எல்லாம் கொல்லணும் போல இருக்கு” என்று சுடர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “என்னை கொல்லப் போறியா... எங்க கொல்லு!” என்று எகத்தாளமாகக் கேட்டுக்கொண்டே சூர்யாவும் வந்திருந்தான். அவனைப் பார்த்த கணமே சுடருக்கு வெடவெடக்கத் தொடங்கிவிட்டது.

சூர்யாவைத் தொடர்ந்து அவன் நண்பர்களும் வந்து நிற்க, நால்வரும் மிரட்சியடைந்தனர். அந்த இருட்டு இன்னும் அவர்களை மிரட்டலாகக் காட்ட, “தப்பிச்சு எங்கடி ஓடிட முடியும் உன்னால?” என்றவன் பாய்ந்து சென்று சுடரின் முடியைப் பிடித்து அப்படியே தன் புறம் இழுத்தான்.

“ஏய் விடுடா அவளை” என்று ஜோஸ் அவனைத் தாக்க முற்பட, லோகு அவளைப் பிடித்துக்கொண்டான். எழில் உடனடியாக செல்வத்திடம் கண் காட்டி, அவன் ஊருக்குள் இருந்து ஆட்களைக் கூட்டிவர ஓட எத்தனித்தான்.

ஆனால் அதற்குள் சூர்யா, “டேய் அவனைப் பிடி!” என்று மனோவுக்குக் கட்டளையிட, அவன் செல்வத்தைப் பிடித்துச் சுவரில் முட்டிவிட்டான். ரத்தக் காயத்துடன் அவன் தரையில் அப்படியே சரிந்துவிட்டான்.

ஒருபக்கம் லோகுவின் பிடியிலிருந்த ஜோஸ் தன்னை மீட்டுக்கொள்ளப் போராட, “பாவம் அவங்களை எல்லாம் விட்டுடு... நான் உன் கூட வரேன்” என்று சுடர் சூர்யாவிடம் கெஞ்சினாள்.

“அதுக்கு நான் உன்னை கதவைத் திறக்கச் சொல்லும் போதே திறந்திருக்கணும்டி நீ” என்றான் வெறியுடன். அந்த நொடியே எழில் குனிந்து சூர்யாவின் காலைப் பிடித்துக்கொண்டாள். “ப்ளீஸ் சுடரை விட்டுடு... நாங்க நடந்த எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டோம் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.

“பாருடா... கூடப் பொறந்தவளுக்காக காலைக் கூடப் பிடிக்குறா அவ... எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சு இருக்கு... கத்துக்கோ சுடர்... உன் கூடப் பொறந்தவகிட்ட இருந்து எப்படி கெஞ்சுறதுன்னு கத்துக்கோ!” என்றதும் சுடர் பல்லைக் கடித்துக்கொண்டு, “உனக்கு நான்தானே வேணும்... என்னைக் கூட்டிட்டுப் போ, கூட்டிட்டுப் போய் எங்கயாவது வைச்சுக் கொன்னுடு” என்றாள்.

“முன்னாடி அதான் என் திட்டம்... ஆனா இப்போ என் மனசு மாறிடுச்சு... பேசாம உன்னை இங்கேயே வைச்சு எரிச்சுட்டு, இவளைத் தூக்கிட்டுப் போயிட்டா என்ன? கூடப் பொறந்தவ செத்த சோகத்துல இவளே நெருப்பு வைச்சு எரிச்சுக்கிட்டான்னு ஊருக்குள்ள சொல்லுவாங்க” என்றவன் எழிலை பார்த்து வன்மமாகக் கூற, சுடர் குரல் ஆக்ரோஷமாக ஒலித்தது.

“அவளைத் தொட்டன்னா உன்னைக் கொன்னுடுவேன்!”

“உன்னைக் கொன்னுட்டுதான்டி அவளைத் தொடப் போறேன்” என்று நக்கலாகச் சொன்னவன் மனோவிடம், “சமையல் ரூம்ல மண்ணெண்ணெய் கேன் பார்த்தேன்... போய் அதை எடுத்துட்டு வா” என்றான்.

“வேண்டாம் அப்படி எதுவும் பண்ணிடாத” என்று ஜோஸ் கெஞ்ச, அவள் புறம் திரும்பிய சூர்யா, “ஏய் ஜோஸ்! உன்னை மறந்தே போயிட்டேன். உன்னை மன்னிச்சு விட்டுடுறேன் உன் ஊருக்கு ஓடிடு... இல்லனா உன் வீடியோவை ஊர் முழுக்க ஓட விட்டுடுவேன்” என்றான்.

“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல” என்று ஜோஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே எழில் மெதுவாகப் பின்னுக்கு நகர்ந்தாள். அங்கே மரங்களை வெட்டும் அரிவாள் ஒன்று ஓரமாகக் கிடந்தது. அதனை கையில் எடுத்துக்கொண்டவள், “டேய் விடுடா சுடரை!” என்று எழுந்து நின்று ஆவேசமாகச் சொல்ல, சூர்யா அவளை அசட்டையாக ஒரு பார்வை பார்த்தான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்ன காலில் விழுந்து கெஞ்சிட்டு இருந்த... இப்போ என்ன அருவாளைத் தூக்கி வைச்சுட்டு நிற்குற?”

“அவங்க ரெண்டு பேரையும் இப்போ ஒழுங்கா விடப் போறீங்களா இல்லையா” என்று எழில் இன்னும் தீவிரமாக மிரட்ட, “அப்படிலாம் செய்யணும்னா முதல்ல நீ அதை ஒழுங்கா பிடிக்கணும்” என்று சூர்யா எள்ளல் செய்ய, எழில் கோபத்துடன் அரிவாளை ஓங்கிக்கொண்டு முன்னே வந்தாள்.

அவன் அதற்குள் சுடரைத் தன் முன்பாகக் கேடயமாக முன்னே நிறுத்திவிட்டு, “என்னை வெட்டணும்னா முதல்ல நீ உன் கூடப் பொறந்தவளை வெட்டணும்” என்றான்.

அந்தச் சமயம் லோகு பிடியிலிருந்து ஜோஸ் திமிறிக் கொண்டு கீழே விழுந்துவிட்டாள். மீண்டும் அவன் ஜோஸைப் பிடிக்க கையை நீட்டவும், எழில் ஒரு ஆவேசத்தில் அரிவாளை வீச அது அவன் மணிக்கட்டைத் துண்டாக்கிவிட்டது.

“ஆஆ!” என்று லோகு கீழே விழுந்து துடித்து அலறியதைப் பார்த்த சூர்யா உட்பட எல்லோரும் அதிர்ச்சியாகிவிட்டனர்.

அதேசமயம் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மனோ இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்து நிற்க, “டேய் என்னடா வேடிக்கை பார்த்துட்டு நிற்குற அவ மேல ஊத்துடா கேரோசீனை” என்று சூர்யா சீறினான்.

எழிலுமே அப்போது அதிர்ச்சியில்தான் இருந்தாள். தான் அவன் கையை வெட்டியதை நம்ப முடியாமல் நின்றவளை வெறியுடன் பார்த்த மனோ அவளை ஓங்கி உதைத்துவிட்டான்.

அவள் உதைத்த வேகத்தில் அரிவாள் தனியாகச் சென்று விழுந்தது. மனோ கேனைத் திறந்து அவள் மீது ஊற்ற, ஜோஸ் அவனைத் தடுப்பதற்கு எழுந்து ஓடவும் சுடரைப் பிடித்திருந்த சூர்யா அவளைப் பின்புறமாக உதைத்துக் கீழே தள்ளிவிட்டான்.

மனோ வத்திபெட்டியைக் கிழிக்கும் போது சுடரின் கண்களில் சாஷாவிற்கு நடந்தது நினைவு வந்தது. சாஷா கையை நீட்டி காப்பாற்றச் சொன்ன போது அவளால் முடியவில்லை. இன்று மீண்டும்... அதேபோல ஒன்று நடக்கப் போகிறது. அவள் கண் முன்பாக நடக்கப் போகிறது. உடல் முழுவதும் அதே தீ பரவுகிறது.

இந்த முறை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அவள் மனம் உறுதியாகச் சொல்ல, அவளுக்குள் எழுந்த அசாத்திய பலம் சூர்யாவின் பிடியை உதறித் தள்ள வைத்தது. அவள் அசுர வேகத்தில் எழிலிடம் ஓடினாள்.

ஆனால் அதற்குள் மனோ எழில் மீது நெருப்பை வீசிவிட அது பற்றிக் கொண்டு எரிந்தது.

அத்தியாயம் 35

 “ஆ... அம்மா எரியுதே!” என்று எழில் மரண வலியில் அலறினாள். அடுத்த நொடி, புயல் வேகத்தில் பாய்ந்த சுடர், எரியும் எழிலை அப்படியே அணைத்துக்கொண்டாள். எழில் மீது பற்றிப் படர்ந்த நெருப்பை அணைக்க, அவளை மணலில் தள்ளித் தானும் விழுந்து புரட்டினாள்.

சுடரின் தோள்பட்டையிலும் நெருப்புப் பற்றிக்கொண்டது. சதையைச் சுட்டெரிக்கும் அந்த உஷ்ணத்தை விடவும், தன் தங்கையை இழந்துவிடுவோமோ என்ற பயமே அவளிடம் மேலோங்கி இருந்தது. தன் உடல் வேதனையைப் பொருட்படுத்தாமல், எழில் மீது தீ பரவாமல் தன் உடலால் தடுத்தாள். அதே நேரம் பதறியடித்து ஓடி வந்த ஜோஸ், சுடரின் முதுகில் பற்றி எரியத் தொடங்கிய நெருப்பைத் தன் துணியால் அடித்துத் தணித்தாள்.

அந்தக் காட்சியை ஒரு வக்கிரமான ரசனையுடன் பார்த்திருந்த சூர்யா, “என்னடி... ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி காப்பாத்திக்கிட்டு சென்டிமென்ட் காட்டுறீங்களா? இருங்கடி, உங்க மூணு பேரையும் மொத்தமா முடிச்சுவிடுறேன்!” என்று ஆவேசத்துடன் பாய்ந்து வந்தான்.

அவன் நெருங்கும் அந்த ஒரு கணத்தில், சுடர் மின்னல் வேகத்தில் தரையில் கிடந்த அரிவாளைக் கையில் ஏந்தினாள். ஆனால், அவள் இலக்கு சூர்யா அல்ல; எழிலை எரிக்கத் துணிந்த மனோவைத் தான் அவள் குறிவைத்தாள். அசுர வேகத்தில் அவள் அரிவாளைச் சுழற்றியபோது, அது மனோவின் கழுத்தைச் சீவிச் சென்றது. ‘சரேல்’ என்று பீய்ச்சியடித்த ரத்தம் சுடரின் முகத்தில் சூடாகத் தெறித்தது.

மனோ தன் கழுத்தைப் பிடித்தபடி சரிந்து விழ, சூர்யா அப்படியே உறைந்து நின்றான். அதிகாரத் திமிரிலும் ரவுடித்தனத்திலும் ஊறிய அவனது கண்களில், முதல் முறையாக மரண பயம் மின்னியது.

“சுடர்... இவனையும் வெட்டிக் கொல்லுடி!” என்று ஜோஸ் ஆக்ரோஷமாகக் கத்தினாள். சுடரின் கண்களில் தெரிந்த அந்த ருத்ரதாண்டவத்தைக் கண்ட சூர்யா, தன் பலமெல்லாம் வடிந்துபோக மிரண்டு நின்றான். அதற்கு மேல் அங்கே நின்றால் தன் உயிர் மிஞ்சாது என்பதை உணர்ந்தவன், தப்பித்து ஓடத் திரும்பினான். ஆனால், வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கை அவ்வளவு எளிதாக அவனை விட்டுவிடுமா?

சுடர் குறிப்பார்த்து வீசிய அரிவாள் சூர்யாவின் முதுகில் பலமாக இறங்கியது. “ஆக்...” என்று அலறியபடி அவன் குப்புற விழுந்து மண்ணைக் கவ்வினான். சரியாக அந்தத் தருணத்தில் செல்வம் மயக்கம் தெளிந்து எழுந்தான். ரத்தமும் சதையுமாகக் கிடந்த கோரக் காட்சியைக் கண்டு, “ஐயோ... அக்கா என்ன பண்றீங்க? விட்ருங்க அக்கா” என்று பதறித் துடித்தான்.

“நான் எதையும் பண்ணல செல்வம்... இவன்தான் என்னை இப்படிப் பண்ண வைச்சான்!” என்று வெறியுடன் கத்திய சுடர், எழ முயன்ற சூர்யாவின் முதுகில் ஏறி அமர்ந்துகொண்டாள். அரிவாளை அவன் கழுத்தில் அழுத்தி, அவனது முடியைக் கொத்தாகப் பிடித்துத் தரையோடு தரையாக அமுக்கினாள். அவனுக்கு மூச்சுத் திணறி முகம் நீல நிறமாக மாறியது.

“எங்கே ஓடப் போற? உன் வக்கிரமான காதலைக் காட்டுன இல்ல... இப்போ என்னோட ரௌத்திரக் காதலை நான் காட்ட வேண்டாமா?” என்று அவள் சீறினாள்.

“வேண்டாம் அக்கா... பாவம் விட்டுடுங்க” என்று செல்வம் மீண்டும் கெஞ்சினான்.

“எழிலை உயிரோட எரிக்கப் பார்த்த இவனுங்களுக்கா நீ பாவம் பார்க்குற?” என்று சுடர் கேட்ட கணத்தில் செல்வம் திரும்பிப் பார்த்தான். நெருப்புச் சூட்டில் தோல் கருகி, ஆடையற்றுக் கிடந்த எழிலின் கோலத்தைக் கண்டு, “ஐயோ... எழில் அக்கா” என்று கதறினான். தன் சட்டையைக் கழற்றித் துடித்தபடி கிடந்த எழில் மீது போர்த்தி, அவளை அணைத்துக்கொண்டான்.

“போலீசுக்குச் சொல்லுவோமா?” என்று ஜோஸ் கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்த சுடரின் கண்களில் அத்தனை வெறி. “நீ நினைக்குற மாதிரி அது அவ்வளவு ஈஸி இல்லை. இவன் அப்பன் ஒரு பெரிய ரவுடி... போதாக்குறைக்கு இந்தப்பொறம்போக்குக்கு மினிஸ்டர் சப்போர்ட்டு எல்லாம் வேற இருக்கு” என்றவள் சூர்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்திப் பிடித்து, “என் கண்ணு முன்னாடியே இவன் நம்ம பிரண்ட்ஸையெல்லாம் எரிச்சான்... துடிக்கத் துடிக்க எரிச்சான்... அப்புறம் என்னை... இவன் என்னெல்லாம் பண்ணான் தெரியுமா?” என்றவள் பேச முடியாமல் தொண்டை அடைக்கக் கண்களை மூடிக்கொண்டாள்.

ஜோஸ் அவள் தோள் மீது கை வைத்து, “இவனுங்களை விடக்கூடாது சுடர்” என்று சொன்ன கணத்தில் சூர்யாவின் அடிவயிறு கலங்கியது. “என்னைக் கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்குப் போகப் போறீங்களா?” என்றவன் கேட்க, சுடர் எள்ளலாகச் சிரித்தாள்.

“டேய்... நீ இத்தனை கொலை பண்ணிட்டுத் தப்பிக்கும்போது, நான் மூணு கொலை பண்ணிட்டுத் தப்பிக்க மாட்டேனா? அது என்ன நீ வெட்டுனாதான் கத்தி வெட்டுமாடா? நீ கொளுத்துனாதான் நெருப்பு எரியுமா... நான் கொளுத்துனா எரியாதா? எரியும்... யார் கொளுத்தினாலும் நெருப்பு எரியும்! அந்த எரியுற வலி எப்படி இருக்கும்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ எனக்கும் எழிலுக்கும் காட்டின இல்ல... இப்போ நான் உனக்குக் காட்டுறேன்” என்றவள் திரும்பி ஜோஸைப் பார்த்து, “பின்னாடி ஒரு பெரிய பண்டில் கயிறு இருக்கும், எடுத்துட்டு வா” என்றாள்.

ஜோஸ் ஓடிச் சென்று அந்தச் சணல் கயிற்றைக் கொண்டு வர, சூர்யாவின் கைகளைப் பின்னுக்கு வைத்து இறுகக் கட்டினாள் சுடர். ஒவ்வொரு முடிச்சையும் அவன் தனக்குச் செய்த ஒவ்வொரு கொடுமையையும் நினைத்து நினைத்து இறுக்கினாள். “ஆ... வலிக்குதுடி” என்று அவன் மரண ஓலமிட்டான். அந்த நொடி அவனது கர்வமெல்லாம் காற்றில் கரைந்திருந்தது.

“நீ பண்ணதுக்கு இதெல்லாம் ரொம்பக் கம்மி” என்றவள், அவன் ஏற்கனவே வெட்டுப்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த முதுகில் தன் காலை வைத்துப் பலமாக மிதித்து அழுத்தினாள். அவன் வலியால் துடிக்கத் துடிக்க அவளுக்குள் ஒரு நிம்மதி பரவியது. “அவசரப்பட்டுச் செத்துடாதே... உன்னைத் துடிக்கத் துடிக்க எரிச்சுக் கொல்லணும்! அப்போதான் என் மனசு ஆறும்... என் பிரண்ட்ஸ் ஆத்மா எல்லாம் சாந்தியடையும்” என்று சொல்லும்போது சுடரின் கண்கள் நெருப்புப் பிழம்பாக மின்னின.

அதன்பின் அவள் ஜோஸ் மற்றும் செல்வத்தின் உதவியுடன் அந்தப் பழைய பாழடைந்த கிணற்றின் கனமான ஸ்லாப்பை இழுத்துத் திறந்தாள். ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. அந்தப் பத்து அடி ஆழக் குழிக்குள், முதலில் அவர்கள் மனோவின் சடலத்தைத் தள்ளினர். அதன்பின் துண்டிக்கப்பட்ட கையுடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த லோகுவைத் தூக்கி எறிந்தனர்.

சூர்யா இப்போது பித்து பிடித்தவன் போலக் கத்தினான். “நானே போலீஸ்ல உண்மை எல்லாம் சொல்லிச் சரணடைஞ்சுடுறேன்... என்னை எதுவும் செஞ்சிடாதே” என்று அவன் கெஞ்சியதைக் கேட்ட சுடர், “பத்தலடா... இன்னும் கெஞ்சு... நல்லா கெஞ்சு” என்றாள்.

“ப்ளீஸ் சுடர்... வீடியோ... வீடியோ எங்கே இருக்குன்னு சொல்றேன்... நீ அதை வைச்சு எல்லோரையும் தண்டிக்கலாம்.”

“சரி சொல்லு எங்கே இருக்கு?”

“என் ரூம்லதான் வைச்சிருக்கேன்.”

“சொல்லிட்ட இல்ல... இப்போ சாவு.”

“என்னைக் கொன்னீங்கன்னா எங்க அப்பன் உங்களை உயிரோட விடமாட்டான்.”

“அவனை நான் உயிரோட விட்டாதானே பாக்கலாம்” என்றவள் ஒரு நொடி யோசித்துவிட்டு, “செல்வம்... இவன் பைக் வெளியே இருக்கா பாரு” என்றாள்.

செல்வம் பார்த்துவிட்டு “ஆமா அக்கா” எனச் சொல்ல, “அதை இங்கே தள்ளிட்டு வா” என்றாள். செல்வம் அதைக் கொண்டுவரவும் பெட்ரோல் டேங்க் மூடியைத் திறந்துவிட்டுப் பைக்கை கிணற்றுக்குள் தள்ளச் சொன்னாள். பெரும் சத்தத்துடன் பைக் உள்ளே விழுந்ததும், பெட்ரோல் வாசம் அந்த இடத்தையே ஆக்கிரமித்தது.

சரியாக அந்தத் தருணம், ஊர் கோவிலில் வானவேடிக்கை “டம் டம்” என்று விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் தொடங்கியது. அந்தச் சத்தத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுடர், ஒரு பருத்தித் துணியில் தீயைப் பற்ற வைத்தாள். சுடர், செல்வம் மற்றும் ஜோஸ் மூவருமாகச் சேர்ந்து சூர்யாவைத் தூக்கி அந்தக் கிணற்றின் விளிம்பிற்குக் கொண்டு வந்தனர். “வேண்டாம்... வேணாம்டி... சுடர்... எரிக்காதே... ஆஆஆ!” என்று அவன் ஊளையிட, துளியும் இரக்கமின்றி அவனை அந்த குழிக்குள் தூக்கிப்போட்டுத் தீப்பந்தத்தை உள்ளே எறிந்தாள்.

அடுத்த நொடி, கிணற்றுக்குள் இருந்த பெட்ரோல் பற்றிக்கொண்டு “குபீர்” எனத் தீ மேலே எழுந்தது. அதே சமயம் பைக்கின் பெட்ரோல் டேங்க் பயங்கரச் சத்தத்துடன் வெடிக்க, கிணற்றின் ஆழத்திலிருந்து சூர்யாவின் அலறல் ஒரு நொடி மட்டும் ஓங்கி ஒலித்து, பின் அந்த வானவேடிக்கைச் சத்தத்தில் முற்றிலுமாக அடங்கிப்போனது. வானத்தில் வண்ணங்கள் சிதற, பூமியில் ஒரு பாவம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அணையாத அந்த நெருப்பை அப்படியே விட்டுவிடாமல் அதன் மீது கற்களையும் மண்ணையும் மூவரும் வாரிப் போட்டனர். அதன்பின் அந்த கனமான ஸ்லாப்பை மூவருமாக இழுத்து மூடினர். அப்போது எழில், “சுடர்... என்னால முடியல” என்று வலியால் துடிக்கத் தொடங்கினாள். அவள் வயிற்றின் மீது காயம் மோசமாக இருந்தது.

அவளருகே அமர்ந்த சுடர், “உனக்கு ஒன்னும் ஆகாது... நீ இதுல இருந்து மீண்டு வருவ” என்று கை பிடித்துத் தைரியம் உரைத்தவள், “ஜோஸ்... செல்வம்.. இவளைக் கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்குப் போங்க” என்றாள்.

“நீ வரலையா?” என்று ஜோஸ் பதறிக் கேட்க, சுடர் தன் முகத்தில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடி, “நான்தான் செத்துட்டேனே” என்று வலியுடன் சொல்லிச் சிரித்தாள்.

“என்னடி சொல்ற?”

“இந்த மூணு பேரோட இது முடியப் போறதில்லை ஜோஸ்... இன்னும் இரண்டு பேர் இருக்கானுங்க... அப்புறம் அந்த சூர்யாவோட ரவுடி அப்பன் ஒருத்தன்... நான் உயிரோட இருக்கேன் தெரிஞ்சா திரும்பவும் என்னைத் துரத்திட்டு வருவாங்க... சாஷாவைத் துரத்திக் கொன்ன மாதிரி என்னையும் கொல்லுவாங்க, கொளுத்துவாங்க...” என்று சொல்லி முடிப்பதற்குள் ஜோஸ் துடித்துப் போய், “இல்லடி... அப்படி நடக்கக்கூடாது” என்றாள்.

“அப்போ நம்ம ஓடக்கூடாது... துரத்தணும்” என்று சுடர் உறுதியாகச் சொல்ல, “சரி துரத்துவோம்... ஏன் நம்மால முடியாதா? நீ என்ன வேணா செய்யு... நான் உன் கூட இருக்கேன்” என்று ஜோஸ் அவள் கையைப் பிடிக்க, எழிலும் தன் கையை எடுத்து அவள் கை மீது வைத்தாள். “நீ இல்லாம நான் வெறும் உடம்புதான் சுடர்” என்று எழிலும் கூற, அவர்கள் மூவரும் அணைத்துக்கொண்டனர். செல்வம் அவர்கள் பிணைப்பை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“நானும் உங்க மூணு பேர் கூட இருப்பேன் அக்கா” என்று செல்வம் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கூறினான். “தேங்க்ஸ்டா” என்ற சுடர் உடனடியாக எழிலைத் தூக்கிப் பிடித்து, “முதல்ல இவளை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போங்க” என்றாள்.

“எப்படியாச்சுன்னு காரணம் கேட்டா?”

“அதான் அந்தச் சூர்யா சொன்னான் இல்ல... கூடப் பொறந்தவ சாவைத் தாங்க முடியாம கெரோசின் ஊத்திக் கொளுத்திக்கப் பார்த்தான்னு, அதையே சொல்லுங்க!” என்று அவர்களை அனுப்பி வைத்த சுடர், அங்கிருந்த ரத்தத் திட்டுக்களைச் சுத்தம் செய்ய இறங்கினாள்.

அப்போது மோப்பம் பிடித்தபடி அங்கே வந்த தெரு நாய்கள் சில அந்த ரத்தத்தை ருசி பார்த்தன. சுடர் அவற்றைத் தடவிக் கொடுத்தாள். “என் வேலையை நீங்களே செஞ்சுருவீங்கன்னு நினைக்குறேன்” என்று விட்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்பக்கமாக வந்து குளித்தாள்.

அதன்பின் உடை மாற்றிக்கொண்டவள் தந்தையின் அறையை எதார்த்தமாக எட்டிப் பார்க்க, அவர் மயங்கிக் கிடந்தார். பதறிப்போனவள் கதவு வெளிப்பக்கமாகத் தாளிட்டு இருப்பதை கவனித்துத் திறந்துவிட்டாள். அவரை மடியில் கிடத்தி மருந்து போட, “சுடர்... சுடர்...” என்று பிதற்றினார். கண்கள் கலங்க அவருக்கு மருந்து போட்டு முடித்துப் படுக்க வைத்துவிட்டு வெளியே செல்ல எத்தனிக்கையில், அவர் அவள் கையைத் தடுத்தார். “என்னை விட்டுப் போயிடாத சுடர்” என்று அரை மயக்க நிலையில் சொல்ல, “போகலப்பா... நீங்க கண்ணை மூடித் தூங்குங்க” என்று மீண்டும் அவர் அருகே அமர்ந்துகொண்டாள்.

ஊர் கச்சேரி சத்தமெல்லாம் ஓய்ந்து அமைதி நிலவிய அந்த நள்ளிரவில், தந்தையின் மேஜையின் மீது தன் டைரியைக் கண்டாள். அதில் அவள் எழுதிய கவிதைகளைப் படிக்கப் படிக்க நெஞ்சம் விம்மியது. தேம்பித் தேம்பி அழுதவள், தற்செயலாக அருகே இருந்த கம்பராமாயணப் புத்தகத்தைப் பார்த்தாள்.

அப்பா அவளுக்குச் சொல்லிக் கொடுத்த வரிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன:

'ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை;

முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந்து அடங்கினை;

அச்சம் தீர்த்து இவண் மீண்டது என்? நினைவு, "எனை விரும்பும்" என்பதோ?'

இராவணனைக் கொன்ற பிறகு, சீதையைச் சந்தித்த இராமன் அவளிடம், "அரக்கன் ஊரில் உண்டு உறங்கிச் சுகமாக இருந்துவிட்டுத் திரும்புகிறாயா? உன்னைக் காப்பாற்றவா நான் இத்தனை தூரம் வந்தேன் என்று நீ நினைக்கிறாய்?" என்று கேட்டபோது சீதை துடிதுடித்துப் போனாள். தன் தூய்மையை நிரூபிக்க அவள் தீக்குள் குதிக்க வேண்டியிருந்தது.

சுடர் அந்த வரிகளோடு தன் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தாள். ஒருவேளை அன்று இராவணன் சீதையைச் சீரழித்திருந்தால், அந்தத் தீ அவளைச் சுட்டிருக்குமா? இல்லை, இராமன் வருவதற்கு முன்பாகவே அவளே தன்னை மாய்த்துக் கொண்டிருப்பாளா? எது எப்படி இருந்தாலும், சமூகம் தீக்குளிப்பதையே ஒரு பெண்ணிடம் தீர்வாக எதிர்பார்க்கிறது.

இராமன் என்ற ஒருவன் தீக்குளிக்கத் தேவையில்லை; பிறன் மனை நோக்கிய இராவணனை அவன் மனைவி அக்னிப் பிரவேசம் செய்யச் சொல்லவில்லை. ஆனால் எதையும் அறியாத சீதைகள் மட்டும் ஏன் அக்னிக்குள் நுழைய வேண்டும்?

சுடரின் கதையில் இராமனும் இராவணனும் ஒருவனே. காதலித்தவனும் அவனே, கடத்திச் சென்று வன்புணர்வு செய்தவனும் அவனே. தீயிட்டுக் கொல்லத்தான் முயன்றவனும் அவனே. ஆனால், சீதையைப் போலச் அவள் தீக்குள் குதிக்கவில்லை.

அவள் மெதுவாக டைரியைத் திறந்து பேனாவை எடுத்தாள். அன்று தன் ரௌத்திரத்தை வார்த்தைகளாக வடித்து வைத்த அந்த வரிகளை இன்று விசாரணை அறையில் அமர்ந்திருந்த நாராயணமூர்த்தி படித்துக் கொண்டிருந்தார்:

மெய்மை சோதிக்கத் தீயில் சென்ற சீதை நான் இல்லை;

பெண்மை இழித்தவரைச் சுடும் தீ - நான் சுடர்!”

அதைப் படிக்கையில் நாராயணமூர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அன்று சூர்யா தள்ளிவிட்டதும், சுடர் அவருக்கு மருந்து போட்டதும் ஏதோ ஒரு கனவு போலத் தெரிந்தது. காலையில் எழில் மருத்துவமனையில் இருப்பதாக அறிந்தபோது அந்தச் சம்பவங்கள் மறந்து போனது.

தனது மகள்கள் இருவரையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்திலேயே அவர் இத்தனை காலம் இருந்தார். குணமடைந்த எழில், மாலை போட்டிருந்த சுடரின் படத்தை கண்டு கத்தி கதறியபோது, அவளுக்கு மீண்டும் ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் சுடரின் அத்தனை தடயங்களையும் பரணுக்கு மாற்றினார்.

இரண்டு வருடம் கழித்து எழில் முற்றிலும் மாறிவிட்டாள் என அவர் நம்பினார். ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் அத்தனையும் பொய் என்று தோன்றியது. ஒரு பக்கம் ஏமாற்றப்பட்ட வலி இருந்தாலும், தன் மகள் எங்கோ ஒரு மூலையில் உயிரோடு இருக்கிறாள், அநீதியை எதிர்த்து நிற்கிறாள் என்ற செய்தி அவர் மனதிற்குள் ஒரு சந்தோஷ ஊற்றை ஏற்படுத்தியது. அதுவே அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீராக வழிந்தது.

You cannot copy content