You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Seethaigal Yaaro - Episode 38 & 39

Quote

அத்தியாயம் 38

மாவட்ட நீதிமன்ற வளாகம். கோப்புகளுடன் நடக்கும் கறுப்பு அங்கி அணிந்த வழக்கறிஞர்கள், மரத்தடிகளில் தங்கள் வழக்கறிஞருக்காகக் காத்திருக்கும் கவலை தோய்ந்த முகங்கள், கேண்டீனில் கமகமக்கும் டீ வடை வாசனைகள், "இன்னைக்கு வாய்தாதானா?" என்று பேசிக்கொள்ளும் குரல்கள், கைதிகளை வேனில் இறக்கி, நீதிமன்ற அறைக்குள் கொண்டு செல்லும் போலீசாரின் கெடுபிடிகள் என்று இவை அனைத்திற்கும்  இடையில் சிந்துவின் விழிகள் ஒருத்தியைத் தீவிரமாகத் தேடின.

‘எவ்வளவு நம்புன உன்னை இப்படித் துரோகம் செஞ்சுட்டியே’ என்று மனதிற்குள் கறுவிக் கொண்டே அவள் முகத்தைத் தேடியவள், எதிரே கருப்பு அங்கியில் வந்து நின்ற இளைஞனைப் பார்த்துத் திகைத்தாள்.

“வணக்கம் மேடம்” என்றான்.

“வணக்கம், நீங்க...”

“நான்தான் ஜோஸ்லினோட லாயர், செல்வம்” என்று அறிமுகம் செய்து கொண்ட நொடி அவள் முகம் சட்டென்று சுண்டிவிட்டது.

“ஜோஸ்லின் எங்க?”

“வந்துருவாங்க கொஞ்ச நேரத்துல” என்று விட்டு அவன் நகர, ‘இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு வெள்ளை கார் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய ஜோஸ் நேராக செல்வத்திடம் பேசினாள். அவள் முகத்தில் பயமோ, பதட்டமோ எதுவும் இல்லை. அதேநேரம் நீதிபதி வந்து விட்டதாகத் தகவல் வர, சிந்து உள்ளே நடந்தாள். வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது. ஜோஸ் நிற்க, அவளுக்கு அருகில் செல்வம் நின்றான். மற்றொரு பக்கம் சிந்து நின்றிருந்தாள். அவள் கண்கள் மட்டும் ஜோஸை விட்டு ஒரு கணமும் விலகவில்லை.

அன்று தன் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் போதிருந்த தெளிவும்  தோரணையும் இன்று சுத்தமாக இல்லை. அப்படியே பழைய அப்பாவி முகத்திற்கு மாறி இருந்தாள்.

‘யார்றா இவ’ உள்ளுர கோபம் தகித்தது. ஆனால் அது அவள் மீது மட்டுமல்ல, ஏமாந்து நிற்கும் தன் மீதும்தான்.

அப்போது செல்வம் தன் வாதத்தைத் தொடங்கினான். “யுவர் ஆனர், என் கிளையண்ட் மீது எந்த நேரடி ஆதாரமும் இல்லை. போலீஸ் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இவரை குற்றவாளி எனச் சித்தரிக்க முயற்சி செய்கிறது,” என்று கூறி ஒரு நொடி நிறுத்தி, “சந்தேகம் ஒருபோதும் ஆதாரமாகாது” என்றான்.

சிந்துவின் பக்கமிருந்த பப்ளிக் ப்ரோசிக்யூட்டர் குறுக்கிட்டு, “ஜோஸ்லின் என்கிற இந்த பெண் கான்ஸ்டபிள் தன்னுடைய மேலதிகாரியான சிந்துஜாவைத் துப்பாக்கி காட்டி மிரட்டி, மேலும் அவரைச் செயலிழக்கச் செய்து, தப்பித்து ஓடியிருக்கிறார்... Criminal intimidation and Arms offense” என்று ஆவேசமாகச் சொன்னார்.

நீதிமன்றத்தில் மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் செல்வம் நிதானத்துடன் எழுந்து, “அவங்க அப்படி மிரட்டுனாங்க அப்படிங்குறதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்க,

“ஆதாரத்தை வைச்சுக்கிட்டே குற்றவாளி தப்பு செய்ய மாட்டான்” என்று சிந்துவின் வழக்கறிஞர் சொல்ல,

“ஆதாரம் இல்லாம ஒருத்தரை எப்படி குற்றவாளின்னு சொல்ல முடியும்?” என்று செல்வம் திருப்பிக் கேட்டான்.

உடனடியாக சிந்துவின் வழக்கறிஞர் நீதிபதியிடமிருந்து திரும்பி, “யுவர் ஆனர், இவங்க அதிகாரி சிந்து விசாரிக்குற வழக்கில் குற்றவாளிக்கு உளவு பார்த்து இருக்காங்க, சிந்து அறையில் சீக்ரெட் கேமரா வைச்சு இருக்காங்க... ஷி இஸ் வெரி டேஞ்சரஸ் கிரிமினல் இவங்களை உடனே அரெஸ்ட் பண்ணி விசாரிக்க அனுமதிக்கணும்” என்றார்.

செல்வம் மீண்டும் பேசினான். “இவங்க அடுக்கடுக்கா குற்றங்கள் மட்டும்தான் சொல்றாங்களே தவிர அதுக்கு எதிராக எந்தச் சாட்சியும் இல்லை, எந்தப் பதிவும் இல்லை, எந்தத் தடயவியல் ஆதாரமும் இல்லை” என நீதிபதி சிந்துவின் வழக்கறிஞரைப் பார்த்து, “ஏதாவது ஆதாரம் இருக்கா?” என்று கேட்க, சிந்துவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வழக்கறிஞர் இயலாமையுடன், “இல்லை” என்று தலையசைத்தார். சிந்துவின் கைகள் கோபத்தில் இறுகின.

அப்போது நீதிபதி ஜோஸை நோக்கி, “உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று கேட்டார்.

ஜோஸ் முன்னால் வந்து, “நான் ஒரு சாதாரணமான ஆள் யுவர் ஆனர்... எங்க அம்மா ஒரு சின்ன கிராமத்துல வேலை பார்த்த நர்ஸ்... அவங்களும் இப்போ உயிரோட இல்ல... எனக்கு இப்போ இருக்கிறது என் வேலை மட்டும்தான்... ஆனா திடீர்னு சிந்து மேடம் அவங்க விசாரிக்கிற கேஸ்ல என்னையும் சம்பந்தப்படுத்துறாங்க. அந்த குற்றவாளியுடன் படிச்சு இருந்த காரணத்தால என்னையும் அவங்க குற்றவாளின்னு சித்தரிக்கப் பார்க்குறாங்க... அதுவும் நான் குற்றவாளிக்கு உளவு பார்த்ததா அவங்களா முடிவு பண்ணி என்னை இந்த கேஸ்ல சிக்க வைக்கப் பார்க்குறாங்க. ஒரு சாதாரண கான்ஸ்டபிளா என்னோட மேலதிகாரிகளை எதிர்த்து என்னால என்ன பண்ண முடியும்... அதான் நான் பயந்து தப்பிச்சு ஓடிட்டேன்... நான் செஞ்சது தப்புதான்... ஆனா துப்பாக்கி காட்டி மிரட்டுனதாகவும் விலங்கு மாட்டி தப்பிச்சதாகவும் அவங்க சொல்ற அத்தனையும் பொய்.”

அவள் பேசப் பேச சிந்துவிற்கு ஒரு எரிமலையே வெடித்துக் கொண்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் தன்னுடைய கோபத்தைக் காட்ட முடியாமல் அவள் பல்லைக் கடித்துக் கொண்டிருக்க, அடுத்து நீதிபதி பேசினார்.

“குற்றம் சாட்டப்பட்ட ஜோஸ்லின், இந்நிலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகிறார். பிணை மனு மீதான விசாரணை வரும் 10ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும். அதற்குள், வழக்குத் தொடர்ந்த தரப்பு, குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் தொடர்புடைய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.” என்று தற்காலிகத் தீர்ப்பை அறிவித்தார்.

ஜோஸை போலீஸ் அழைத்துச் செல்லும்போது, அவள் அருகே வந்து நின்ற சிந்து, “இதுதான் உன் உண்மையான முகமா ஜோஸ்?” என்று கேட்க,

“இங்கே உண்மை பொய்யுன்னு எல்லாம் எதுவும் இல்ல மேடம்... எங்கே எதை எப்படி காட்டுறோங்குறதுதான் விஷயம்.”

“அது சரி... உன் பிரண்ட் எங்க?”

“எனக்கு நிறைய பிரண்ட் இருக்காங்க, நீங்க யாரைக் கேட்குறீங்க?”

“அதான் அந்த சுடடடர்மொழி” - அந்தப் பெயரை சிந்து கடித்துத் துப்ப,

“அவதான் எப்பவோ செத்துட்டாளே மேடம்” என்று சாதாரணமாக சொன்னாள் ஜோஸ்.

 அவளை கடுப்புடன் பார்த்த சிந்து, “அவளை நான் பிடிச்சு காட்டுறேன்... அப்ப தெரியும் அவ உயிரோட இருக்காளா இல்ல செத்துட்டாளான்னு” என்று சவாலாக சொன்னாள்.

ஜோஸ் சிறு புன்னகையுடன், “நெருப்பை நீங்க பார்க்கதான் மேடம் முடியும்... பிடிக்க முடியாது... தேவை இல்லாம முயற்சி செய்யாதீங்க?” என்ற விட்டு கடந்து சென்றாள்.

“இவளை” என்று எரிச்சலுடன் வெளியே வந்த சிந்து பாரூக்கிற்கு அழைத்து நடந்தவற்றை விவரித்தாள்.

அப்போது மீண்டும் செல்வத்தைப் பார்த்தவள், “நான் சொல்ற ஆளை பத்தின டீடைல்ஸ் வேணும்” என்று கூறி முடித்து அழைப்பைத் துண்டித்துவிட்டுத் திரும்பும் போது, செல்வம் நின்றிருந்தான்.

ஒரு நொடி அவனைப் பார்த்து அதிர்ந்தவள், “என்ன வேணும் உங்களுக்கு?” என,

“இல்ல, என்னை பத்தின விவரத்தை ஏன் யார்கிட்டயோ கேட்குறீங்க? நானே சொல்றேன்” என்றான்.

“எனக்கு அம்மா அப்பா இல்ல, கல்யாணமும் ஆகல... அப்புறம் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இதே மாவட்டம்... ஊர் பெயர்” என்று நிறுத்தி, “ஆரிநத்தம்” என்று அழுத்தமாக சொல்லி விட்டு நகர, சிந்துவின் கண்கள் கோபத்தில் எரிந்தன.

அதே கடுப்புடன் அலுவலகத்திற்குத் திரும்பியவள் நேராக மோகன் ஜகதீஷிடம் சென்றாள்.

“ஆமா அந்த சகாதேவனை கன்டினியூவா வாட்ச் பண்ணிட்டு இருக்கீங்களா?”

“பண்ணிட்டு இருக்கேன் மேடம்.”

“ஏதாவது சந்தேகப்படுற மாதிரி?”

“நோ.”

“நைட் முழுக்க வாட்ச் பண்ணுங்க... ஏதாவது சின்னதா டவுட் வந்தாலும் உடனே தகவல் சொல்லுங்க” என்று விட்டு அவள் தன் வாகனத்தில் கிளம்பினாள்.

சகாதேவன் வீட்டிற்கு அருகில் பாரூக் காத்திருக்க, அவனுடன் வந்து இணைந்து கொண்ட சிந்து, “எப்படியாச்சும் அந்தச் சுடரைப் பிடிச்சிடணும்... அவளைப் பிடிச்சு முதல உள்ளே போடணும்” என்று வெறியுடன் கூற,

“ஆனா அவ என்ன பிளான் பண்ணி இருக்கான்னு எந்த கெஸ்ஸும் பண்ண முடியலயே” என்றான் பாரூக்.

“ஆனா அவ அட்டாக் பண்ணா இன்னைக்கு நைட்தான் பண்ண முடியும்... நாளைக்கு காலேஜ் ஓபனிங் முடிஞ்சதும் அந்த சகாதேவன் பிளைட் ஏறிடுவான்” என்று சிந்து சொல்ல,

“அப்படி அவன் போயிட்டா அவன் செஞ்ச தப்புக்குத் தண்டனையே கிடைக்காது இல்ல... முப்பது பெண்களோட இறப்புக்கு நியாயமே கிடைக்காம போயிடும்” என்று பாரூக் தீவிரமாகக் கேட்டான்.

“அப்போ சுடர் வந்தா அவனை கொல்லட்டும்னு விட்டுடுவோமா பாரூக்?”

“நான் ஒன்னும் அப்படிச் சொல்லல.”

“நீயும் அவ டீம்னா கொஞ்சம் முன்னாடியே சொல்லிடு... லாஸ்ட் மினிட்ல ஷாக் கொடுக்காதே” என்று சிந்து சொன்னதைக் கேட்டுச் சிரித்தவன்,

“இல்ல நான் உன் டீம்தான்... ஆனா நியாயப்படி பார்த்தா நம்ம எல்லோரும் அவ டீம்ல தான் இருக்கணும்” என்று அவன் சொன்னதைக் கேட்டு அவள் திரும்பி முறைத்தாள்.

“டென்ஷன் ஆகாத... நம்ம சிஸ்டம் அப்படி இருக்குனு சொல்ல வந்தேன்.”

“சிஸ்டம் சரி இல்லன்னு சொல்லிட்டு யார் வேணா யாரை வேணா கொலை பண்ணலாமா? புரியல எனக்கு... கொலையை யார் செஞ்சாலும் எதுக்காக செஞ்சாலும் அது கொலைதானே... ஒருத்தர் சட்டத்தை வளைச்சாங்கன்னா அதை எல்லோரும் வளைக்கணும்னு இல்ல? அப்புறம் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் கொன்னுட்டுதான் இருக்கணும்” என்று சிந்து சொல்ல,

“ம்ம்ம் நீ சொல்றதுலயும் பாயிண்ட் இருக்கு” என்றவன் பின்னர் மெல்லிய குரலில், “உன்கிட்ட வேறொரு விஷயமா பேசணும்னு நினைச்சேன்” என்று தயக்கத்துடன் தொடங்கினான்.

“என்னது?” என்று கேட்டவள் பார்வை சகாவின் படுக்கை அறை விளக்கின் மீதே இருந்தது.

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்றதும் அவள் அதிர்ந்து திரும்பி, “என்ன?” என்று விழித்தாள்.

“இல்ல, உன் கூட வொர்க் பண்றது பிடிச்சிருக்குனு சொன்னேன்” என்றவன் மாற்றிவிட, அவள் அலட்சியமாக உதட்டைச் சுழித்தாள்.

“இந்த ஒரு கேஸ்தான்... அப்புறம் நீ யாரோ நான் யாரோ.”

“ஏன் உனக்கு என்னைப் பிடிக்கலையா?” என்றவன் கேட்டதில் மீண்டும் அவள் முறைக்கவும், “இல்ல, வொர்க் பண்றது பிடிக்கலையான்னு கேட்டேன்” என்றான்.

“பிடிக்கலன்னு இல்ல, எனக்கு இந்த கேஸ் முடிஞ்சா போதும்னு இருக்கு... அதுவும் அந்த எழில் என்கிட்டயே சவால் விடுறா... அந்த ஜோஸ் என்னடான்னா 'நெருப்பைப் பார்க்க முடியும், பிடிக்க முடியுமா?'ன்னு பஞ்ச் டயலாக் பேசுறா... அப்படி என்ன அவ பெரிய இவ... அந்த சுடரை நான் பிடிக்கணும்... என் கையால பிடிக்கணும்” என்று வெறித்தனமாகப் பேசிக் கொண்டிருந்த அவளை ஏக்கமாகப் பார்த்த பாரூக், “ஓகே பிடிச்சிடுவோம்” என்றான்.

அதற்கு பிறகு அவன் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அந்த இரவு அவர்களுக்குத் தூங்கா இரவாகக் கழிந்தது.

“அவ ஏன் வரல?” என்று சிந்து பாரூக்கிடம் கேட்க, “நம்ம வாட்ச் பண்ணிட்டு இருக்குறதை அவ பார்த்து இருக்கலாம்” என்றான்.

“அவ கண்டிப்பா பின்வாங்க மாட்டா” என்று சொன்ன சிந்துவிற்கு என்ன நடக்கப் போகிறதோ என்று பதற்றமாக இருந்தது.

அன்று காலை சகாதேவன் தனது மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவிற்குத் தயாராகி இருந்தார். விழாவை முடித்த கையோடு, அங்கிருந்து நேராக விமான நிலையம் சென்றுவிட வேண்டும் என்பதுதான் திட்டம். காலத்தின் நெருக்கடியால் விழா மின்னல் வேகத்தில் தொடங்கப்பட்டது.

அங்கே திரண்டிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தை ஒருவித அச்சத்துடனேயே பார்த்தாள் சிந்து. “பாரூக், எனக்கு என்னவோ தப்பா படுது,” என்று அவள் சொல்ல,

“இவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல அவ இதுவரைக்கும் அட்டாக் பண்ணதே இல்ல சிந்து,” என்றான் பாரூக்.

“ஒருவேளை இந்தத் தடவை அதுதான் அவளோட பிளானா இருந்தா?” சிந்துவின் குரலில் இருந்த பதற்றம் பாரூக்கையும் தொற்றிக் கொண்டது.

“பயப்படாத... நம்ம டீம் இந்த பில்டிங்கை முழுக்க நிற்குறாங்க. யாரும் தப்பிக்க முடியாது, முக்கியமா அந்த ‘சுடர்’ மாட்டாம போகமாட்டா... ஹெல்மெட் எல்லாம் மாட்டிக்கிட்டு இந்தத் தடவை உள்ளே எல்லாம் வரவும் முடியாது” என்றான் நம்பிக்கையுடன்.

சிந்து அடுத்த நொடி தனது புளூடூத் கருவியைத் தட்டி மோகனுடன் இணைப்பில் வந்தாள். “மோகன், கேமரா வியூஸ் எல்லாம் செக் பண்ணுங்க. ஒவ்வொரு முகத்தையும் ஸ்கேன் பண்ணுங்க... சந்தேகப்படுற மாதிரி ஒரு சின்ன அசைவு தெரிஞ்சாலும் எனக்கு ரிப்போர்ட் பண்ணுங்க. அப்புறம் சகா கழுத்துல இருக்க கேமரா சீன்ஸ் எல்லாம் ஒன்னு விடாம ரெக்கார்ட் ஆகி இருக்கணும்!”

“எஸ் மேடம், குளோஸ் வாட்ச்ல தான் இருக்கோம்!” என்றான் மோகன் உறுதியாக.

சகாதேவன் ரிப்பன் வெட்டித் திறப்பு விழாவை முடித்துவிட்டு, கட்டிடத்தின் உட்பகுதிக்குச் செல்ல, சிந்து ஒரு நிழலைப் போல அவரைத் தொடர்ந்தாள். வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த பாரூக், தன் காதிலிருந்த மைக்கில், “டீம்... பொசிஷன்ல இருங்க, அலர்ட்!” என்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

அந்த நொடியில்தான், அவன் வொயர்லெஸிலிருந்து ஜெகதீஷின் குரல் சிதறியது.

“சார்… பிளாக் C-ல… ஒரு பேக் இருக்கு. பார்க்க ஏதோ எலக்ட்ரீஷியன் கிட் மாதிரி இருக்கு” என்றான்.

பாரூக்கின் முகம் சற்றுச் சுருங்கியது. “ஜாக்கிரதை” என்றான் கரகரப்பான குரலில்.

சில நொடிகள் அமைதி…

“இது நார்மல் இல்லை... உள்ளே ஒயரிங் மாதிரி இருக்கு…”

மறுமுனையில் வந்த அந்தத் தகவலை சிந்துவும் கேட்டிருந்தாள்.

“உடனே நான் வரேன்” என்று அவள் பிளாக் C-க்கு சென்றுவிட, பாரூக்கிற்கு அந்த அமைதி அதீத பதற்றத்தை உண்டாக்கியது.

அடுத்த நொடி அந்த மௌனத்தைச் சிதறடித்த சிந்துவின் வார்த்தைகள் அவன் காதில் இடியாக விழுந்தது. “டேம் இட்… இது எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ்!”

பாரூக்கின் இதயத் துடிப்பு எகிறியது. “சிந்து… டச் பண்ணாத! ஏரியாவை ஐசோலேட் பண்ணு... நான் பாம் ஸ்குவாடுக்கு இன்ஃபார்ம் பண்றேன்” என்று விட்டு உடனே வொயர்லெஸில் கட்டளையிட்டான்:

“ஆல் யூனிட்ஸ் ஸ்டாண்ட் பை! சஸ்பிஷியஸ் எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ் டிடெக்டட்... பிளாக் C! இனிஷியேட் கன்ட்ரோல்டு எவாகுவேஷன்... மக்களை வெளியேத்துங்க... கிரவுட் பேனிக் ஆகக்கூடாது… நிதானமா கிளியர் பண்ணுங்க!” என்று பாரூக் மீண்டும் மீண்டும் கட்டளையிட்டான்.

அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள்... உள்ளே சகாதேவன்... எல்லாவற்றிற்கும் மேலாகச் சிந்து...

அவளுக்காக அவன் மனம் துடித்தது. எப்போதும் ஈகோவுடன் அவளிடம் மோதிக் கொண்டிருந்தவனுக்கு, இன்று அவள் உயிருக்கே ஆபத்து என்ற செய்தி உலுக்கிப் போட்டது. அவளிடம் சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்ட எத்தனையோ வார்த்தைகள் இப்போது அவனது தொண்டைக்குழியில் வந்து முட்டிக்கொண்டு நின்றன.

‘ஒரே ஒருமுறை... அவளிடம் தன் மனதில் உள்ளதைச் சொல்லிவிட மாட்டோமா?’ என்ற தவிப்பு அவனுள் பொங்கியது. ஆனால், இது அதற்கான நேரமில்லை.

காதலனாக மரண பயமும், சொல்ல முடியாத காதலின் வேதனையும் பிழிந்தெடுத்தாலும், ஒரு அதிகாரியாக அவன் அதைத் தன் முகத்தில் துளிகூட வெளிக்காட்டவில்லை. அவன் கண்கள் சிவக்க, குரலில் உறுதியை வரவழைத்துக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாரானான். அதேநேரம் சிந்துவின் கண்கள் அந்தப் பையிலிருந்த வெடிகுண்டை ஆராய்வுடன் பார்த்தன.

‘நான் உன்னை ரொம்பக் குறைவா எடை போட்டுட்டேன் சுடர்... ஆனா ஒரு உயிரைக் கொல்ல இத்தனை உயிரைக் கொல்லுவியா?’ - அந்த கேள்விக்கான பதில் அவளை ஒரு நொடி புரட்டிப் போட்டது.

அவள் புளூடூத்தை அழுத்தி, “மோகன், சகாதேவன் எங்கே இருக்காரு?” என்று கேட்க,

“அவரை கார்ல ஏத்தி அனுப்பிட்டோம்.”

“வாட்?”

“நோ நோ நோ” என்று அடித்து பிடித்து கீழே ஓடிக் கொண்டே, “இது டிஸ்டிராக்‌ஷன்... உடனே நம்ம டீமை அவர் காரை ஃபாலோ பண்ணச் சொல்லுங்க... அவரோட கேமராவை விடாம வாட்ச் பண்ணிட்டே இருங்க” என்று கட்டளையிட,

“மேடம்” என்று பதறினான்.

“என்னாச்சு?”

“சம்திங் ஹேப்பனட்”

“வாட்?”

“கேமரா, ஜிபிஎஸ் எல்லாமே ஒரே நேரத்துல சிக்னல் கட் ஆகிடுச்சு” என்றவன் சொன்ன அடுத்த நொடி அந்த இடமே அதிருமளவுக்கு ஒரு வெடிச்சத்தம் கேட்டது. எல்லோரும் திரும்பி பார்த்தனர்.

தனியாக சாலையில் சகாதேவனின் கார் வெடித்து தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது.

அத்தியாயம் 39

கார் பின்னிருக்கையில் எரிந்து கரிக்கட்டையாகக் கிடந்த சகாதேவனின் உடலைப் பார்த்த சிந்துவின் கண்களில் தோல்வி, பயம், கோபம் என அத்தனை உணர்வுகளும் போட்டி போட்டன.

அப்போது மூக்கைப் பொத்திக் கொண்டு அருகே வந்த ஜகதீஷ், “மேடம்... அந்த பிளாக் சி - ல இருந்த பாம் ஃபேக்,” என்ற தகவலை மெதுவாக அவள் காதில் சொல்ல, இன்னும் அவள் கடுப்பும் கோபமும் அதிகமானது.

செல்பேசியில் பேசி முடித்துவிட்டு அவள் அருகே வந்த பாரூக், “கமிஷனர் கன்னாபின்னான்னு கத்துறாரு,” என்று கூற...

“நம்ம பண்ண வேலைக்கு... வேற என்ன பண்ணுவாரு?” என்று சொன்னவள் மேலும் அந்த எறிந்த தடயங்களை பார்த்து, “பெட்ரோல் டேங்கை வெடிக்க வைச்சிருக்காங்க” என்றாள்.

அவன் தலையசைக்க சிந்து உடனே, “ஆமா, அந்த டிரைவர் எங்கே? மயக்கம் தெளிஞ்சுதா அவனுக்கு?” என்று கேட்டாள்.

“இப்பதான்,”

அவள் நேராக அவரிடம் சென்று, “உங்களுக்கு என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா?” என்று கேட்க, அவர் முகத்தைச் சுருக்கினார். தலையில் கட்டு இருந்தது.

“என்னாச்சுன்னு சொல்லுங்க!” என்று சிந்து அவசரப்படுத்த, பாரூக் கண்காட்டிக் கொஞ்சம் பொறுமையாக இருக்கச் சொன்னான். ஆனால், அவளிடம் அந்தப் பொறுமை இல்லை.

அவர் தன் தலையைப் பிடித்துக்கொண்டே மெதுவாகப் பேசினார். “கட்டிடத்துல பாம்... உடனே கிளம்பணும்னு சொன்னதால வண்டி எடுத்துட்டு வந்தேன். ஐயா ஏறினாரு. கொஞ்ச தூரம் வண்டி போனதும் யாரோ ஜன்னல் வழியா வண்டி பஞ்சர்னு கை காட்டினாங்க.”

உடனே சிந்து, “யாரு? அவன் எப்படி இருந்தான்?” என்று குறுக்கிட்டுக் கேட்க, “மூஞ்சி தெரியல... ஹெல்மெட் போட்டிருந்தான்,” என்றார் அவர்.

“சரி, அப்புறம் என்னாச்சு?” என்று பாரூக் கேட்க...

“நான் வண்டியை ஓரங்கட்டிட்டு வெளியே வந்து கார் டயரைப் பார்த்தேன். காத்து இறங்கி இருந்தது. கதவைத் திறந்து ஐயாகிட்ட சொல்லலாம்கிறதுக்குள்ள, யாரோ என் மூக்கை பலமா அழுத்திப் பொத்திட்டாங்க,” என்றார்.

“அப்புறம் என்னாச்சுன்னு எனக்கு நினைவு இல்ல. தூரமா எங்கேயோ விழுந்து கிடந்தேன். எழுந்து பார்த்தா ஐயாவோட வண்டி இப்படி...” என்று அவர் கவலையுடன் சொல்ல, சிந்து பாரூக்கைப் பார்த்தாள்.

உடனே பாரூக், மோகனுக்கு அழைத்தான். “அவ உள்ளே வந்திருக்கா... டயரைப் பஞ்சர் பண்ணியிருக்கா. பார்க்கிங் சைட்ல இருந்த கேமராக்களைச் செக் பண்ணச் சொல்லுங்க.”

அவன் சொல்லிவிட்டுத் திரும்பும் போது, சிந்து அங்கிருந்த கூட்டத்திடம் சந்தேகப்படும்படியாக யாராவது எதையாவது பார்த்தார்களா என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், யாரும் எதையும் பார்க்கவில்லை என்றனர். அப்போது மோகனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

“மேடம், நீங்க இதை வந்து பார்க்கணும்” என்று அவன் சொன்ன நொடி, அவள் அவசரமாகக் கட்டிடத்திற்குள் சென்றாள்.

மோகன் அதைக் காண்பித்த அந்த நொடி, அவள் இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது போலிருந்தது.

“இல்ல, இப்படி இருக்க சான்ஸ் இல்ல,” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாரூக், “என்ன மோகன், ஏதாவது புட்டேஜ்ல அவ மாட்டுனாளா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

“இல்ல சார், ஆனா வேறு ஒரு ஆள் மாட்டி இருக்காரு,” என்று மோகன் சொல்லி அந்த வீடியோவை காட்ட, அவனுக்கும் அதிர்ச்சிதான்.

ஆனால் சிந்து அளவுக்கு அவன் உணர்ச்சிவசப்படவில்லை. ஏனெனில் திரையில் அவர்கள் பார்த்தது ரூபனை.

“இதை நான் எதிர்பார்க்கல...” என்று பாரூக் சொல்ல,

“ரூபன் இந்த மாதிரி செய்யக் கூடிய ஆள் இல்ல,” என்று சிந்து அவனிடம் கூறவும்,

“அப்போ பார்க்கிங் வீடியோல இருக்குறது யாரு?” என்று கேட்டதும் அவள் பதிலின்றி நின்றாள். ஆனால் அவள் மனம் ஏற்க மறுத்தது.

“அவன் எழிலுக்கு எப்படி சப்போர்ட் பண்ணான்னு நம்மதான் பார்த்தோமே” என்று கூற, சிந்து மோகனிடம் வெளியே காத்திருக்க சொன்னாள்.

பின்னர் அவள் பாரூக்கிடம் திரும்பி, “ரூபன் கண்மூடித்தனமா எழிலை லவ் பண்றான்... ஆனா அதுக்காக அவன் ஒரு கொலைக்கு உடந்தையா எல்லாம் இருக்க வாய்ப்பே இல்ல.” என்று நிதானமாக உரைக்க,

“என்ன, காதல் உன் கண்ணை மறைக்குதா?” என்று திருப்பி கேட்டான்.

“நோ வே... எனக்கு ரூபனை சின்ன வயசுல இருந்தே தெரியும்... அவனால யாரையும் காயப்படுத்த முடியாது,” என்றவள் சொல்லும் போது அவள் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

“ஒருத்தனை கொலை பண்ணுவானா மாட்டானா, கிரிமினலா இல்லையான்னு எல்லாம் கூட இருக்குறவனால கூட சொல்ல முடியாது.”

“ஸ்டாப் இட் பாரூக்... ரூபன் ஒன்னும் கிரிமினல் இல்ல.”

“கிரிமினல் இல்லயா?... அவன் பார்க்கிங் லாட்ல இருக்கான்... இந்த வீடியோல பாம் த்ரெட் முன்னாடியே ஹெல்மெட் மாட்டிக்கிட்டு பைக்ல கிளம்புறான்... இதெல்லாம் பார்த்தா உனக்கு எப்படித் தோணுது?” என்ற கேள்விக்கு சிந்துவால் பதில் சொல்ல முடியவில்லை.

பாரூக் அப்போது மோகனை அழைத்து, “இந்த ஹெல்மெட் போட்டிருக்க வீடியோவை அந்த டிரைவர்கிட்ட காட்டு... இவன்தானான்னு கேளு,” என, சிந்துவின் முகம் வெளிறியது.

ஆனால் சகாவின் ஓட்டுநர், இதே ஹெல்மெட் அணிந்திருந்த நபர்தான் என்று அடையாளம் காட்ட, அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அன்று இரவு விசாரணை அறையில் அமர்ந்திருந்தான் ரூபன். அங்கே வந்த பாரூக் சிந்துவிடம், “நீ வர வேண்டாம், நான் பார்த்துக்கிறேன்,” என்று சொல்ல,

“வாட்! இந்த கேஸ்ல நானும் விசாரணை அதிகாரிதான்,” என்றாள்.

“ஆனா நான்தான் இந்த கேஸ்ல ஹையர் ஆபீசர்.”

“பாரூக்...”

“நீ உள்ளே வரக் கூடாது சிந்து,” என்று கூறிவிட்டு அவன் மட்டும் செல்ல, சிந்துவிற்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது.

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த பாரூக்கிடம், “ரூபன் என்ன சொன்னான்?” என்று பதைபதைப்புடன் வினவிய சிந்துவை அவன் ஆழ்ந்து பார்த்தான்.

“பாரூக் ப்ளீஸ் சொல்லு.”

“சகாதேவன் அவங்க அப்பாவோட பிரண்டாம், அதனால பார்க்கப் போனானாம்... பார்த்தியான்னு கேட்டா இல்லன்னு சொல்றான்... எல்லாமே பொய்... அம்மாவைப் பார்க்கணும்னு சொல்லி இங்கிருந்து கிளம்பிட்டு அவன் மெடிக்கல் காலேஜ் ஓபனிங் போயிருக்கான்... எழில் திட்டத்தை அவன் எக்ஸிகியூட் பண்ணி இருக்கான்,” என்றதும் சிந்து மறுப்பாகத் தலையசைத்தாள்.

“இல்ல பாரூக், அப்படி இருக்காது.”

“வீடியோ ஆதாரம் இருக்கு... நான் அரெஸ்ட் வாரண்ட் வாங்கப் போறேன்.”

சிந்துவால் அவனைத் தடுக்க முடியவில்லை. ரூபன் இருந்த அறைக்குள் நுழைந்தவள், “ஏன் மெடிக்கல் காலேஜுக்கு வந்த... உனக்கு அங்க என்ன வேலை?” என்று கத்தினாள்.

“அந்தக் கேள்விக்கு எல்லாம்தான் நான் பதில் சொல்லிட்டேனே.”

“என்ன பதில் சொல்லி வைச்சு இருக்க... உன்னை அரெஸ்ட் பண்றேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான்.”

ரூபன் அதற்கு எந்த வித பதற்றமும் இல்லாமல் அமர்ந்திருக்கவும், சிந்து அவனை கவலையுடன் பார்த்து, “அப்படி என்ன உனக்கு அவ மேல காதல்... அவ உன்னை ஏமாத்தி இருக்கா, பொய் சொல்லி இருக்கா, எல்லாத்துக்கும் மேல உங்க அப்பாவை அவ...” என்றதும் அவன் கைகாட்டி நிறுத்தினான்.

“எனக்காக நீ கவலைப்படத் தேவை இல்ல.”

“என்ன? அந்த எழில் உனக்காக கவலைப்படுவான்னு நினைச்சுட்டு இருக்கியா... அவ பாட்டுக்கு உன்னை மாட்டிக்கிட்டு தப்பிச்சுப் போயிட்டே இருப்பா.”

அந்த நொடி அவன் மனம், எழில் தனக்காக இரத்தமும் சதையுமாகத் தன்னுடனே பிறந்து வளர்ந்த இரட்டைச் சகோதரி சுடரையும் எதிர்த்துக் கொண்டு, தன்னை நம்பி தான் சொன்னதற்காகத் தன்னுடன் இருந்துவிட்டதை நினைத்துப் பார்த்தான்.

அன்று எழில் அழுது கொண்டிருந்த சமயம் சுவரில் அடித்த பந்து போல சுடரும் ஜோஸும் திரும்பி வந்தனர். அவர்களைப் பார்த்த எழில், “என்னாச்சு?” என்று கேட்க, சுடர் அவளுக்குப் பதில் சொல்லாமல் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

“போலீஸ் நம்ம போட்டோஸ் எல்லாம் வைச்சு செக் பண்ணிட்டு இருக்காங்க... நம்ம யாரும் எங்கேயும் தப்பிச்சுப் போக முடியாது,” என்று ஜோஸ் வருத்தத்துடன் கூறிக் கொண்டிருக்கும் போதே,

“எல்லாம் இவளாலதான்... செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டுத் தேவையற்றதைச் செஞ்சுட்டு இருந்ததால்தான் இன்னைக்கு நம்ம இப்படி மாட்டிட்டு முழிக்கிறோம்,” என்று சுடர் கடுகடுக்க,

“சும்மா என்னையே சொல்லாத சுடர்,” என்று எழில் பதிலுக்கு முறைத்தாள்.

“அப்படின்னா உன் ஹீரோவை நம்மள எல்லாம் காப்பாத்தச் சொல்லு,” என்று ஏளனமாக உரைத்தாள் சுடர்.

அப்போது முன்னே வந்த ரூபன், “நான் ஒன்னும் ஹீரோ எல்லாம் இல்ல... ஏன் உங்க அளவுக்கு எனக்கு தைரியமும் இல்ல... ஆனா என்னால உங்கப் பிரச்னைக்கு ஒரு சொல்யூஷன் கொடுக்க முடியும்,” என்றதும் சுடர் மெல்லிய நகைப்புடன்,

“நீ அவளை ஏமாத்துன மாதிரி என்னை ஏமாத்த முடியாது,” என்றாள்.

அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன், “நம்ம நேசிச்ச ஒருத்தர், நம்புன ஒருத்தர் மோசமான மனுஷன்னு தெரிஞ்சா எவ்வளவு வலிக்கும்னு எனக்குத் தெரியும்... ஆனா அதுக்காக இந்த உலகத்துல எல்லோரும் அந்த நபரை மாதிரி இருப்பாங்கன்னு நம்புறது ரொம்ப ஆபத்து,” என,

“இப்போ என்ன, நான் உன்னை நம்பணும்னு சொல்றியா?” என்று எடக்காக கேட்டாள்.

“முயற்சி செஞ்சு பாரு... ஒரே தடவ நான் சொல்ற சொல்யூஷனைக் கேட்டுட்டு முடிவு பண்ணு,” என்றதும் சுடர் திரும்பி ஜோஸைப் பார்க்க, அவள் ஆமோதித்தாள்.

அதன்பின் அவன் சொல்லி முடிக்கவும் சுடர் எழிலைப் பார்த்து, “உன் புருஷன் நம்மள மொத்தமா கூண்டோட கைலாசம் அனுப்பத் திட்டம் போடுறாரு போல,” என்றாள்.

ரூபன் அதற்கு தெளிவாக பதில் சொன்னான். “எழிலுக்கும் ஜோஸுக்கும் எதிரா எந்த சாலிட்டான எவிடன்ஸும் சிந்துகிட்ட இல்ல... அதேபோல நீ... நீ சட்டத்தைப் பொறுத்தவரைக்கும் உயிரோடவே இல்ல... யூ ஆர் எ கோஸ்ட்

ஒரு வேளை நீங்க மூணு பேரும் ஒன்னா போலீஸ்ல மாட்டினீங்கன்னா, மொத்தமா இந்த கேஸை உங்களுக்கு எதிரா அவங்க திருப்ப முடியும்... அந்தத் தப்பை நீங்க பண்ணக் கூடாதுன்னு சொல்றேன்.”

அந்த நொடி சுடர் யோசிக்க ஆரம்பித்தாள். பின்னர் அவள் ஜோஸிடம் திரும்பிச் செல்வத்திற்கு அழைக்கச் சொன்னாள். அவனிடம் இந்த யோசனையைக் கூறவும், “இது ரொம்ப நல்ல யோசனை,” என்றான் உற்சாகமாக.

சுடர் இப்போது ரூபனைப் பார்த்து, “எப்படி யோசிச்சாலும் இப்போ எங்களுக்கு இருக்கிற ஒரு பெட்டர் ஆப்ஷன் நீ சொன்னதுதான்... ஆனா இதுல நீ ஏதாவது எங்களுக்கு எதிரா பண்ண யோசிச்சன்னு வை... உன்னையும் நான் உயிரோட வைச்சு எரிச்சுடுவேன்,” என்று மிரட்ட,

அவன் சிரித்துவிட்டு, “அப்படி நான் சொன்ன பிளான் வொர்க் அவுட் ஆகிட்டா, நான் எழில் மேல வைச்சிருக்க காதல் உண்மைன்னு நம்பணும்,” என்றான்.

ஒரு நொடி எழிலைப் பார்த்த சுடரின் விழிகள் பின்னர் மெல்லிய குரலில், “பார்க்கலாம்,” என, அவன் புன்னகை செய்தான். அதன்பின் அவன் யோசனைக்கு ஏற்ப மூவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்தனர்.

அதேநேரம் சகாதேவனின் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் காவல்துறையினர் சுடரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். யாரும் அந்த இடத்தில் ரூபனை எதிர்பார்த்திருக்கவில்லை.

அவன் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த சிந்து ஆதங்கத்துடன், “நான் இப்போ மேடம்கிட்ட என்ன சொல்வேன்... அவங்க பாவம் உடம்பு சரி இல்லாம இருக்காங்க,” என்று கூற,

“நான் இல்லன்னா என்ன... நீதான் இருக்கியே... பொண்ணு மாதிரி... பார்த்துக்கோ,” என்றான்.

அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் வெளியேறியவள், பாரூக்கிற்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.

அவள் நேராக எழிலிடம் சென்று நின்று, “உங்க பகைக்கு கடைசியில் ரூபனைப் பலிகடா ஆக்கிட்டீங்க இல்ல நீங்க?” என,

“என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத... ரூபனை அரெஸ்ட் பண்ணப் போறாங்க.”

“இல்ல, ரூபனை அரெஸ்ட் பண்ண மாட்டாங்க,” என்ற எழிலின் குரலில் இருந்த உறுதியைக் கண்ட சிந்து,

“உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.

“தெரியும்.”

அந்த நொடி ரூபனை கைது செய்யும் ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்த பாரூக்கைச் சந்திக்க, மோகனும் ஜகதீஷும் சென்றனர்.

“சார், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ இந்த வீடியோ அப்லோட் பண்ணி இருக்காங்க... வைரலா போயிட்டு இருக்கு,” என அதனை வாங்கிப் பார்த்த பாரூக் ஸ்தம்பித்துவிட்டான்.

திடீரென்று மரங்கள் அடர்ந்திருந்த சாலையின் பக்கவாட்டிலிருந்து நுழைந்த கருப்பு பைக் நபர், ஓடும் பைக்கில் இருந்தபடி தன் கையிலிருந்த லைட்டரைத் திறந்து சகாதேவனின் கார் பெட்ரோல் டேங்கில் வீசிவிட்டு மின்னல் வேகத்தில் மறைய... அடுத்த கணம் கார் வெடித்துச் சிதறுகிறது.

அந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த பாரூக், “இது…” என்று நிறுத்த,

மோகன் உடனே, “சார்… இதுல இருக்குறவன் பிளாக் பைக், பிளாக் ஹெல்மெட் போட்டிருக்கான்... ஆனா ரூபனோடது புளூ பைக், ரெட் ஹெல்மெட்,” என்றான்.

பாரூக் அந்த வீடியோவை மீண்டும் ஒருமுறை ‘ப்ளே’ செய்தான். அந்தத் தீப்பிழம்பு காரை விழுங்கும் நொடி, பைக்கில் சென்றவனின் உடல்மொழியில் ஒருவிதமான குரூர வெற்றியும், வேகமும் தெரிந்தது.

“ஆமா இது ரூபன் இல்ல... சுடர்... சுடர்மொழி... She is really a ghost” என்றவன் தன் கையில் இருந்த ரூபனின் அரெஸ்ட் வாரண்டை சுருட்டி மேசையில் வீசினான்.

அதேநேரம் அந்த வீடியோவை பார்த்த சிந்துவிற்கு நெஞ்சில் இருந்த பாரம் இறங்கியது.

 

Quote

அந்த சுடர் எழுத்தை highlight பண்ணும் போதே நினைச்சேன்.இன்னைக்கு சம்பவம் இருக்குன்னு.சூப்பர் .ரூபன் நியாயத்தின் பக்கம் இருக்கான்.சுடர் பற்றி எரிகிறது🔥🔥🔥

You cannot copy content