You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai ma(r)nanthayo- Final

Quote

28

அந்தக் குழியிலிருந்த உடல் யாருடையது என்று கண்டுபிடிக்க த்ரிஷ்யாவுக்கு ஒன்றும் கடினமான காரியமாக இல்லை. அந்த முகத்தை அவளால் உயிருள்ள வரை மறக்க முடியாது.

"மகேஷ் உங்க அப்பன் இறந்துட்டானா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள். அவனின் இறப்பிற்கு பிறகும் அவனுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்று எண்ணம் அவள் மனதில் தோன்றாததற்கு அவனின் ஈனச் செயல்களே காரணம். சில தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது.

அவள் கேள்விக்குப் பதிலாகப் பலமாக சிரித்தான் மகேஷ்.

"இல்ல த்ரிஷ்யா என் அப்பனுக்கு குழியிலே தூங்கணும்னு ஆசையாம். அதான் படுக்க வைச்சு இருக்கேன்." என்று வேடிக்கை போல் கூறினாலும் அவனது குரலிலிருந்த குரோதத்தை அவளால் நன்கு உணர முடிந்தது. ராஜசேகரின் இழப்பு எந்த வகையிலும் அவளது மனதைப் பாதிக்கப் போவதில்லை. ஆனால் இந்த கலவரங்களிலிருந்த பாத்திமாவையும் தன்னையும் எப்படித் தற்காத்துக்கொள்வது என்று அவளது மூளை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது ராஜசேகரின் அருகிலிருந்த மது பாட்டில் அவளது கண்ணில் பட, "உன் அப்பன் தூங்கும் போது கூட பாட்டிலும் கையுமா தான் இருப்பானா டா?" என்று மகேஷிடம் அவள் எள்ளிநகையாட,

"பாட்டில் மட்டும் இல்லடி. அந்த ஆள் சாவும் போது உங்க ரெண்டு போரையும் கூடவே கூட்டிட்டு போகணும்னு ஆசைப்பட்டான். பெத்த அப்பனோட கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? அதுக்கு தான் உங்க ரெண்டு பேரையும் இங்கே இழுத்துட்டு வந்து இருக்கேன். என்னடா சும்மா பார்த்துட்டு இருக்கீங்க. இவங்க இரண்டு பேரையும் குழிக்குள்ள தள்ளி உயிரோட சமாதி கட்டுங்கடா." என்று கூறி தனது கூலியாட்களை விரட்டினான்.

த்ரிஷ்யாவை டேவிடும் பாத்திமாவை சிவாவும் பிடித்து குழிக்குள் தள்ள முற்பட அச்சமயம் த்ரிஷ்யாவிற்கு  தான் கற்ற தற்காப்பு கலை கைக்கொடுக்க அனிச்சை செயலாக அவனது கையை மடக்கிக் குனியவைத்து அவனது கழுத்தை வளைத்துப்பிடித்துக்கொண்டாள். ஒரு சிலநொடிகளில் நடந்த இந்த நிகழ்வு மகேஷிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

பெண்பிள்ளைகள் தானே என்ற நினைப்பில் இரண்டு பேரை மட்டும் அழைத்துக்கொண்டு வந்தது தவறோ என்று அவன் யோசிக்கத் துவங்கிவிட, இதற்கிடையில் பாத்திமாவை பிடித்துக்கொண்டிருந்த சிவா அவளது கழுத்தில் கத்தியை வைத்தான்.

"ஹே பொண்ணு. ஒழுங்கா அவனை விடலன்னா உன் பிரெண்டு கழுத்தை அறுத்துடுவேன்." என்று சிவா எச்சரித்த மறுகணம் அவசரமாக த்ரிஷ்யா டேவிடை விடுவித்தாள். அவள் விடுவித்த வேகத்தில் த்ரிஷ்யாவை சரமாரியாக அறைந்தான் டேவிட். அவளது கன்னங்கள் சிவந்து உதட்டில் ரத்தம் வழிய துவங்கியது. அவள் தன்னை மடக்கிய விதத்தில் அவனுக்கு கோபவெறி தலைக்கேறியது. அந்த வெறி அவனை மிருகமாக்கியது. அந்த மிருகத்தன்மை அவள் ஒரு கர்பவதி என்பதையும் மறக்கடிக்க அவளது வயிற்றில் ஓங்கி ஓர் உதை உதைத்தான்.

அவன் உதைத்த வேகத்தில் வலிதாங்காமல் கீழே விழுந்த அலறி துடித்தாள் த்ரிஷ்யா.

அவன் மேலும் வெறிகொண்டவனாக அவளை நெருங்க மகேஷ் அவனைத் தடுத்தான்.

"போதும் போதும். இவங்க ரெண்டு பேரையும் முதல்ல உள்ளே தள்ளி குழியை மூடுங்க." என்று சலிப்புடன் கூறினான் மகேஷ்.

துடிக்க துடிக்க அவளது தலைமுடியை பிடித்து இழுத்துக்கொண்டு குழிக்கருகில் டேவிட் நிறுத்த அதே நொடி சிவா பாத்திமாவை குழிக்குள் தள்ளிவிட முயல, அடுத்தநொடி சிவா குழிக்குள் இருந்தான். அப்பொழுது தான் அங்கிருந்த அனைவரும் பாத்திமாவின் முகமாற்றங்களைக் கவனித்தனர்.

பாத்திமா காளியை போல் கடூரமாகப் பார்த்தாள்.

எரிமலையாக உஷ்ணம் தகித்த விழிகள்! அவளது நாடி நரம்புகளில் எல்லாம் அங்கிருந்த அனைவரையும் பஸ்பமாக்கும் வெறியேறியது.  

பார்க்கச் சாது உருவமாக அவள் காட்சி தந்த போதும் அவள் உடல் மொழியில் அடங்கா சீற்றம்!

அந்த நொடியே சுனாமியாகக் கரையைக் கடக்கும் அலைகளை போல பொங்கி எழுந்தவள் சிவாவை குழியில் பலம்கொண்டு தள்ளி அவனது கையிலிருந்த கத்தியை மட்டும் தன் கைக்கு மாற்றிக் கொண்டாள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மகேஷ் அவளை நெருங்க முற்பட அதற்குள் அந்த கத்தியை  டேவிடின்  வயிற்றில் இறக்கினாள். வலியால் துடித்துக்கொண்டிருந்த த்ரிஷ்யா சுற்றி நடக்கும் எதையும் உணரும் நிலையில் இல்லை.

பாத்திமாவின் முகம் மேலும் உக்கிரமாக மாறியது. ஏதோ இரத்தவெறி அடங்காத காட்டேறியைப் போல் மேலும் கீழும் மூச்சுவாங்க மேலும் மேலும் பலி கேட்பவள் போல் காத்துக் கொண்டிருந்தாள். குழியிலிருந்து மேலே ஏறும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தான் சிவா.

உடனடியாக மகேஷ் இடுப்பிலிருந்த துப்பாக்கியை கையில் ஏந்தினான்.

"ஒழுங்கா கத்தியை கீழே போடு பாத்திமா " என்று மிரட்ட அப்பொழுது சிங்க கர்ஜனை போல அந்த இடம் முழுக்க ஓங்காரமாக எதிரொலித்தது பாத்திமாவின் குரல்.

"போடலானா என்னடா பண்ணுவ? என்னை சுடுவியா? இல்ல இவளை சுடுவியா? சுடுடா..... சுடு... பயந்து பயந்து வாழ்ந்தா தினம் தினம் சாவுதான். இப்போ நாங்க எல்லாத்துக்கும் துணிஞ்சுட்டோம். எல்லாத்துக்கும் பயந்து நடுங்கின பாத்திமா எப்பவோ செத்துட்டா. அவளை கொன்னது இதோ இந்த குழியிலே விழுந்துகிடக்குறானே இவன் தான். முதல்ல என் குழந்தை பருவத்தை சாகடிச்சான். அப்புறம் என் இளமை பருவத்தை சாகடிச்சான். அப்படி பட்ட பரதேசி பயன் செத்தா அவன் கூடவே சேர்ந்து நீயும் குழியிலே படுத்து முடிக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு எங்க கிட்ட வந்து உன் வீரத்தை காமிச்சிட்டு இருக்க. உனக்கு வெட்கமா இல்லை?" என்று பொங்கிய அவளை பார்த்த மகேஷிற்கு பேரதிர்ச்சி!

மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பாத்திமா சேர்க்கப்பட்டிருந்தாள் என்பது மகேஷ் நன்கறிந்த விஷயம். அப்படி இருக்க அவளது தெளிவான பேச்சு ஒரு புறம் அதிர்ச்சி அளித்தது. அதற்குள் பாத்திமா தன் கையில் இருந்த கத்தியுடன் மகேஷின் அருகில் நெருங்க முற்பட மகேஷ் தனது கையிலிருந்த துப்பாக்கியில் ட்ரிக்கரை அழுத்த அந்த துப்பாக்கியின் சத்தம் காதை கிழிக்க அங்கிருந்த மரங்களின் மேல்  பறவைகள் சிதறி ஓடின.

அப்பொழுது பாத்திமாவின் கண்கள் அதிர்ச்சியுடன் மகேஷின் மீது படிய அவன் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடந்தான். பாத்திமா அவளது மறு முனையில் திரும்பிப் பார்க்க அங்கு பிரபா ஆனந்தராஜ் சரவணன் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.

மகேஷ் தனது துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்திய அதே நேரம் அங்கு வந்த காவலாளியின் துப்பாக்கியில் இருந்த தோட்டா மகேஷின் தோளை துளைத்தது. அவனது உயிர் போகவில்லை எனினும் வலியால் துடித்துக்கொண்டிருந்தான். பின்பு மகேஷை காவலாளிகள் கைது செய்தனர்.

த்ரிஷ்யாவின் நிலையை கண்ட மற்ற நால்வரும் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.  மருத்துவமனையில் அனைவரும் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் நின்றுகொண்டு இருந்தனர். த்ரிஷ்யாவிற்கு கடந்த இரண்டு மணி நேரமாக சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. பாத்திமா ஆனந்தராஜின் தோளில் சாய்ந்தபடி இருக்க சீதா அஸ்மாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்தபடி அமர்ந்து கொண்டிருந்தார்.

சரவணன் பிரபாவின் தோள்களில் தடவிக்கொடுக்க பிரபா முள்மேல் நிற்பது போல் நின்றிருந்தான். ஜோதியும் சந்தானகிருஷ்ணனும் கூட அதே நிலையில் தான் இருந்தனர்.

முழு இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் கேட்ட குழந்தை சத்தம் ஆண்கள்  அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் திளைக்கவைத்தது. அதே நேரம் ஜோதியும் சீதாவும் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அப்பொழுது வெளியில் வந்த மருத்துவரை அனைவரும் சூழ்ந்துகொண்டனர்.

"பிரபா! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. கவலைப்படாதீங்க. த்ரிஷ்யாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க. ஆனா அவளுக்கு இன்னும் ஏழுமாசம் கூட முடியாத நிலையில பனிக்குடம் உடைந்து போய்டுச்சு. குழந்தையை வெளியில் எடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை. குழந்தையை ஒரு இரண்டு மாசம் இன்க்குபேட்டர்ல வைக்கணும். த்ரிஷ்யாவும் ஒரு ஒன் மன்த் பெட்ரெஸ்ட்ல இருக்கனும். குழந்தையை இப்போ உடனே யாருக்கும் காட்டமுடியாது. நீங்க எல்லாரும் த்ரிஷ்யாவை போய் பாருங்க. ஆனா ஒருத்தர் ஒருத்தரா போய் பாருங்க." என்று கூறி சென்றார்.

முதலில் அவளது தாய் அறைக்குள் சென்றார். த்ரிஷ்யாவை கண்டு அவளது தாய் கண்ணீர் வடிக்க, த்ரிஷ்யா அவரை சமாதானம் செய்தார்.

"எதுக்குமா இப்போ அழற? இனிமே நம்ம யாருமே அழக்கூடாது. நல்லதுதான் நடந்திருக்கு. இனிமேலும் நல்லதுதான் நடக்கும். இவ்வளவு நாள் என்னை சமாளிச்ச மாதிரி அடுத்து உங்க பேத்தியை சமாளிக்கத் தயாரா இரு."

என்று கூறியவள்,

"அம்மா... அவர் எங்கம்மா?" என்று கேட்டாள். "அவரா? எவரு மா?" என்று கிண்டலாக கேட்டார் சீதா. அதற்குப் பதிலாக த்ரிஷ்யா தன் தாயை தீ பார்வை பார்த்தாள். "எப்பா!! கண்ணாலேயே என்னை எரிச்சுடாதே… உன் புருஷனை வரச்சொல்றேன்." என்று கூற அவளோ அவசரமாக "வேணாம் வேணாம். அவருக்கா வரணும்னு தோணலைன்னா நீங்க ஏன் கூப்புடனும். அப்பாவை பார்க்கணும் அவரை வரச்சொல்லுங்க." என்று மிடுக்காக கூறினாள்.

"சரி.. பாத்திமா எங்க?"

"இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாங்க. நீயும் பாப்பாவும் நல்லா இருக்கீங்கன்னு தெரியுற வர யாருக்குமே இருப்பு கொள்ளல. பாத்திமா அந்த ஆள குத்திட்டாளாமே?! அதுக்கு சில ஃபார்மாலிட்டீஸ்லாம் பண்ணனும்னு இப்போ தான் கிளம்பி போனாங்க உன் அப்பாவும் அவளும்."

"பிரச்சனை எதுவும் இல்லையே..."

"இல்லமா.. நீங்க கடத்தப்பட்டதா போலீஸ்க்கு நாங்கதான் ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தோம் இல்ல. அதனால இது தற்காப்புக்காக செஞ்சது தான்னு நிரூபிச்சுடுவாங்க. நீ கவலைப்படாம இரு." என்று அவளுக்குச் சமாதானம் கூறினார்.

அதற்கு பிறகு அங்கு இருந்த அனைவரும் த்ரிஷ்யாவை தேடிவந்தனர். அவளது மனம் கவர்ந்தவனை தவிர. ஒவ்வொரு முறை அந்த அறை திறக்கப்படும் போதெல்லாம் பிரபாவை எதிர்பார்த்து பின் ஏமாந்து போவதுமாக ஏங்கி தவித்தது அவளது மனம். இறுதியாக வந்த சரவணனிடம், "இதற்கு மேல் யாரையும் நான் பார்க்க விரும்பலை எனக்கு அசதியா இருக்கு. என்னை யாரும் தொந்தரவு பண்ணவேண்டாம்னு சொல்லிடு சரோ." என்று கூறியவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ஒரு மர்மப்புன்னகை உதிர்த்தபடியே வெளியேறினான் சரவணன்.

மீண்டும் கதவு திறக்கப்படும் ஓசை கேட்க சலிப்பாக முகத்தைத் திருப்பி கொண்ட த்ரிஷ்யா, "என்னை யாரும் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொன்ன புரியாதா?" என்று உரத்த குரலில் கூறிவிட்டுத் திரும்பிய போது வந்த நபரைக் காணவில்லை.

சிறு அமைதிக்குப் பின் அவளது கையை யாரோ பிடித்துக்கொள்ள அது தன் ஆருயிர் கணவன் தான் என்பதனை அவள் நன்கு அறிந்துகொண்டாள்.

இருப்பினும் முகத்தைத் திருப்பவில்லை. சட்டென்று அவளது கையில் ஒரு துளி நீர் பட்டதும் அவசரமாகத் திரும்பியவள் முதலில் கண்டது தன் கணவனின் கண்ணீரையே.

"பிரபா… அழுறீங்களா?"

"......"

"பிரபா ப்ளீஸ். எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே உங்க கம்பீரம் தான்… நீங்க போய் இப்படி அசிங்கமா அழுறீங்களா?"

"போடி… மண்ணாங்கட்டி கம்பீரம்... என்னைவிட்டு எதுக்கு டீ போன? செத்துடேன்டீ உயிரோட என்னை கொன்னுட்ட... எதுக்கு டீ போன? எதுக்கு என்னை விட்டு போன? நீ என்ன நம்பலைங்குறத கூட என்னால தாங்கிக்க முடிஞ்சுது.. ஆனா அங்க… நீங்க அழுது துடிச்சியே…

ஐயோ! உனக்கோ இல்ல நம்ம குழந்தைக்கோ ஏதாச்சும் ஆகி இருந்தா... என்னால நினைச்சு கூட பார்க்கமுடியால" என்று பலமாக தலையை உலுக்கிக்கொண்டான். 

அவனது உண்மையான அன்பில் அவளது கண்களும் கலங்கின.

"இவ்வளவு பாசம் இருக்கிறவர் என்ன எதுக்கு இவ்வளவு நேரம் காக்க வைக்கணும்." என்று கூறி மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"என்னை இவ்வளவு நேரம் காக்க வைத்ததற்கு உனக்குத் தண்டனை." என்று அவன் கூற அதிர்ச்சியாக அவனது முகத்தை பார்த்தாள்.

"நானா?"

"ஆமா நீ காணாம போய் மூணு மணிநேரம் ஆச்சு. இந்த மூணு மணிநேரம் என் உயிர் என் கையில இல்லை. அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்."

"அதுக்காக பழிவாங்குறீங்களா?"

"ஆமா. அதெல்லாம் என் பொண்டாட்டிகிட்ட தான் நான் கத்துக்கிட்டேன்" என்று அவன் கூற அப்பொழுது அவளுக்கு அவனது உணவில் விஷம் வைத்தது நினைவிற்கு வர அதற்காக அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

"சாரி பிரபா. உங்களுக்கு நான் எவ்வளவு பெரிய துரோகத்தை செஞ்சுட்டேன். அதனால உங்க உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்து இருந்தா... என்னால..." என்று அவள் மேலே கூற முடியாமல் தவித்தாள்.

"உன்னால உயிரோடவே இருந்திருக்க முடியாது. எனக்கு தெரியும். எனக்கு விஷம் வைச்சது மட்டும் இல்ல. என் உயிரை காப்பாத்தினதும் நீ தானே. ..."

"ஏன் பிரபா? உங்க மேல நான் அவ்வளவு வெறுப்பா இருந்து இருக்கேன். அப்போ கூட உங்களுக்கு ஒன்னுனா என்னால தாங்கவே முடியல.."

"ஏன்னா அது தான் லவ்... காதல் ஒருத்தன் நல்லவனா கெட்டவனான்னு பார்த்து வராது. காதலிச்சவங்க கெட்டவங்களா இருந்தாலும் அவங்க பண்ண தப்பை மன்னிக்குற சக்தி உண்மையான காதலுக்குதான் இருக்கு."

"இருந்தாலும் நீங்க எனக்கு ரொம்பதான் சப்போர்ட் பண்ணி கெடுத்து வைச்சு இருக்கீங்க."

"ஆமா உண்மை தான். ஆனா இனிமே அது நடக்காது." என்று கூற அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் த்ரிஷ்யா.

"நீ என்ன பண்ணி இருந்தாலும் உன்னை நான் வீட்டைவிட்டு வெளிய போக விட்டிருக்கக்கூடாது. அது தான் நான் பண்ண பெரிய தப்பு."

"நீங்க என்ன போகவிடாம தடுத்து இருந்தா மட்டும் நான் அப்போ இருந்த நிலைமையில் போகாம இருந்து இருப்பேன்னு நினைச்சீங்களா?"

 "மேலும் போக நினைச்சு இருந்தாலும் ரெண்டு அறை விட்டாவது உன்னை பிடிச்சு வைச்சு இருக்கனும். என் கைக்கு நடுவுல இறுக்கமா பிடிச்சு வெச்சு இருக்கனும்.... அப்போ இதெல்லாம் நடந்து இருக்காது."

"ஆமா ஆமா அதுவரை என் கை என்ன பூ பறிச்சுட்டு இருக்குமா?"

"ஒஹோ... மேடம் வேற என்ன பண்ணி இருப்பீங்க?"

"பதிலுக்கு நானும் உங்க கன்னத்துல ரெண்டு கொடுத்து இருப்பேன்.."

"என்னது... உம்மாவா... இப்போ தான் கொடேன்... என்ன இப்போ?" என்று குறும்பாக கூறி சிரித்தான்.

"அடடடா ஆசை தான். ஒன்னும் கிடையாது."

"வீட்டுக்கு வராமலா போக போற.. அப்போ யாருக்கு எது கிடைக்குதுனு தெரிஞ்சுடும்."

"கண்டிப்பா வருவேன். பிரசவம் முடிஞ்சதும் பிறந்த வீட்டுக்கு தான் போகனுமாம். சோ நான் ஒரு ஒரே ஒரு ...." என்று கூறி முடிக்காமல் குறும்புடன் தன் கணவனை கண்டாள்.

"ஒரு மாசமா? சான்சே இல்ல. அவ்வளவு நாள் எல்லாம் என்னால நீயும் நம்ம பாப்பாவும் இல்லாம இருக்க முடியாது."

"சே சே ஒரு மாசம்னு எல்லாம் சொல்லமாட்டேன்."

"அப்போ... ஒரு வாரம் தானே. நானும் ஒரு வாரம் உங்க கூட என் மாமியார் வீட்ல இருந்துட்டு போறேன்... என்ன இப்போ?"

"இல்ல பிரபா... ஒரே ஒரு வருஷம் தான்." என்று கூறி அவள் கண்ணடித்துச் சிரிக்க, "உன்னை...." என்று கூறி பிரபா பல்லைக்கடித்து முறைத்தான்.

அதே நேரம் அறைக்கதவு திறக்க படும் ஓசை கேட்க அங்கு பாத்திமா நின்றுகொண்டிருந்தாள்.

என்றும் இல்லாத விதமாக அவளது முகத்தில் இருந்து தெளிவு அங்கிருந்து மற்ற இருவரையும் மகிழ்ச்சியுற செய்தது.

"கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட பிறந்துடுச்சு. ஆனா நீங்க ரெண்டு பேரும் இன்னும் குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுக்குறீங்க..." என்று பாத்திமா கூற பிரபா த்ரிஷ்யாவிடம் பாய்ந்தான்.

"எல்லாத்துக்கும் இவ தான் காரணம். இவ தான் என்ன வெறுப்பேத்துறா. நீயே கேளு பாத்திமா..."

"அய்யயோ.. உங்க ரெண்டு பேர் சண்டையில் என்னை இழுக்காதீங்க.. " என்று கை கூப்பினாள்.

"சரி நீங்க ரெண்டு பெரும் பேசிட்டு இருங்க. நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்." என்று கூறி பிரபா அவர்களுக்கான தனிமையை அளித்து நகர்ந்து சென்றான்.

அப்பொழுது த்ரிஷ்யாவும் பாத்திமாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தனர்.

"எப்படி டீ இருக்க?" என்று பாத்திமா த்ரிஷ்யாவை பார்த்துக் கேட்க

"இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்." என்று கூறினாள் த்ரிஷ்யா.

 அவர்கள் இருவருமே தெளிவாக பேசிக்கொண்டது மைசூரில் இருந்த அந்த கடைசி இரவு தான். ஆனால் அதற்கு பின் இருந்த இந்த ஒரு வருட கால பிரிவு அவர்கள் இருவரையுமே பாதிக்கவில்லை என்பதே உண்மை. ஏனெனில் இந்த ஒரு வருட காலம் இருவருமே தங்களின் பிரிவை உணரும் நிலையில் இல்லை.

"த்ரிஷ்யா. என்னோட லைப் கிளாக் ஒன் இயர் முன்னாடி நடந்த அந்த சம்பவத்தோடவே நின்னு போச்சு. இன்னைக்கு உன்னை மறுபடியும் பார்த்த பொழுது தான் திரும்ப என்னோட வாழ்க்கையின் காலச்சக்கரம் சுழல ஆரம்பிச்சுதோனு தோணுது."

"உண்மையை சொல்லனும்னா எனக்கும் அப்படி தான் டீ. கிட்டத்தட்ட... ஒரு வார வித்தியாசம் இருக்கும். அவ்வளவு தான். போன வாரம் உன்னை மருத்துவமனையில் சந்திச்ச பொழுது தான் எனக்கு எல்லாமே ஞாபகம் வந்தது."

"அன்னைக்கு பிரபா அண்ணா மட்டும் இல்லனா... என்னால நினைச்சு கூட பார்க்கமுடியல த்ரிஷ்யா."

"நீ வேற.. அவர் அன்னைக்கு உன்னை காப்பாத்தி காரியத்தையே கெடுத்துட்டார்னு தான் நான் சொல்லுவேன்."

"என்னடி உளறல் இது?.."

"உளறல் இல்ல. உண்மையை தான் சொல்றேன். அன்னைக்கு பிரபா வரலைன்னா இன்னைக்கு நான் பார்த்த அந்த காளி தேவி அன்னைக்கே விஸ்வரூபம் எடுத்து அந்த ராஜசேகரை அழிச்சு இருப்பா."

"அது உண்மை இல்ல த்ரிஷ்யா... எனக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது நான் பயந்து நடுங்கினேன். ஆனா உனக்கு ஒரு கஷ்டம்னு தெரிஞ்சதும் எனக்கு எங்க இருந்து அவ்வளவு தைரியம் வந்ததுன்னு எனக்கே தெரியல."

"நான் ரொம்ப லக்கி பாத்திமா.. உன்னை மாதிரி ஒரு பிரெண்ட் பிரபா மாதிரி ஒரு கணவன் எல்லாத்துக்கும் மேல அவங்க அப்பா அம்மா என்னை கையில் வைத்து தாங்குறாங்க.."

"நீ மட்டுமா? நானும் தான் லக்கி.. உன்னை மாதிரி ஒரு பிரென்ட் கிடைக்க.. ஆனந்த் அங்கிள் மாதிரி ஒரு அப்பா கிடைக்க.." என்று அவள் கூறி முடிக்கும் முன் த்ரிஷ்யா,

"அப்புறம்... சொல்லு சொல்லு" என்று அவளை தூண்டிவிட்டாள்.

அவளது பேச்சில் இருந்த குறும்பு பாத்திமாவை குழப்ப, "என்ன அப்புறம்?" என்று சந்தேகமாக கேட்டாள்.

"சரவணன் மாதிரி ஒரு புருஷன் கிடைக்க கொடுத்து வைச்சு இருக்கணும்னு சொல்ல போற." என்று சிரித்தாள்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பாத்திமா சட்டென்று நாற்காலியை விட்டு எழுந்து கொண்டாள்.

"சரவணன் எனக்கு புருஷனா?? என்ன உளறல் இது?"

"உளறல் இல்லம்மா... உன் மனசுல என்ன இருக்குனு நான் சொன்னேன் அவ்வளவு தான்."

"என் மனசுல அப்படி எதுவும் இல்ல.."

"அப்போ சரவணன் உன் கழுத்துல போட்ட செயினை கழட்டி தூக்கி போடு.." என்று கூற பாத்திமா அதிர்ச்சியாக த்ரிஷ்யாவை பார்த்தாள்.

"என்ன அப்படி முழிக்குற? சரவணன் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாரு."

"சரவணன் இவ்வளவு நாள் உன்கூடவே இருந்தது. உனக்கிட்ட பேசனது. இது எதுவுமே நீ உணரவே இல்லை. உன்னை பாதிக்கவும் இல்லைனு சொல்லு பார்க்கலாம்." என்று த்ரிஷ்யா கேட்க பாத்திமாவிடம் இருந்த மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

த்ரிஷ்யாவை பார்க்க வந்த சரவணன் பேசிய அனைத்து விவரங்களையும் பாத்திமாவிடம் அவள் கூறினாள்.

த்ரிஷ்யாவை கண்ட சரவணன் நலம் விசாரிப்புகளுடன் புன்னகைத்து,

"எங்க வீராங்கனைக்கு இன்னொரு வீராங்கனை பிறந்து இருக்கே… அதுக்கு முதலில் வாழ்த்துக்கள்." என்று அவன் கூற,

 "தேங்க்ஸ்.... எப்படி சரோ.. நாங்க இருந்த இடத்தை கண்டுபிடிச்சீங்க?" என்று கேட்டாள்.

அன்று நடந்த அனைத்து விவரங்களையும் சரவணன் அவளிடம் கூறினான்.

"எனக்கும் பிரபாவுக்கும் மகேஷ் பத்தி நல்லாவே தெரியும்.எப்படியும் அவன் இந்த மாதிரி ஏதாச்சும் செய்வான்னு எங்களுக்கு தோணுச்சு. அதான் நான் முன்னெச்சரிக்கையா பாத்திமா கழுத்துல ஒரு செயின் போட்டு இருந்தேன்.. அதுல சின்னதா ஒரு ஜி.பி.எஸ் டிவைஸ் சிப் செட் பண்ணி வைச்சு இருந்தேன். அது பிரபாவுக்கும் தெரியும்.. ஆனா அப்போ இருந்த டென்ஷன்ல அவன் அதை யோசிக்கல. அதனால பிரபா எனக்கு காண்டாக்ட் பண்ணி நீங்க ரெண்டு பேரும் காணாம போன விஷயத்தை சொல்ல முயற்சி செய்தான். இன்னைக்கு ஆபீஸ்ல எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருந்துது.அதனால அவனால என்னை ஈஸியா ரீச் பண்ண முடியல.. அதான் நாங்க வர கொஞ்சம் டிலே ஆயிடுச்சு. இல்லன்னா எப்பவோ நீங்க இருந்த இடத்தை ரீச் பண்ணி இருப்போம். ஆனா நாங்க வருவதற்குள் என்ன என்னவோ நடந்துடுச்சு."

"எதுவும் கேட்டது நடக்கவில்லை. எல்லாம் நன்மைக்கே... சரி அப்புறம் எப்போ உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்."

"நீ வேற.. இனிமே முதல்ல இருந்து நான் புதுசா கோடு போட்டு ஆரம்பிக்கணும் போல.. உங்களை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்ததில் இருந்து இப்போ வரைக்கும் அவ என்னை திரும்பி கூட பார்க்கல தெரியுமா?"

"அவளுக்கு உன் காதலை புரியவை.. அப்புறம் எல்லாம் தானா சரி ஆகிவிடும்."

"அவளுக்கு எல்லாம் தெரியும்... அவளுக்கு புதுசா என்ன புரிய வைக்கணும்."

"என்ன சரோ சொல்ற?"

"ஆமா. டாக்டர் சுரேஷ் ஒன் மந்த் முன்னாடி எனக்கு ஒரு விஷயம் சொன்னாரு. அவளுக்கு நாம பேசுறது எல்லாமே புரியுமாம். நம்ம செயல் எல்லாமே மனசுல பதியுமாம்… ஆனா அதற்கான எதிர்வினையை உணர்வுகளால் அவளால காட்ட முடியாது. அவ்வளவு தான்' அப்படினு சொன்னாரு."

 

"இத்தனை நான் பேசினது எல்லாமே அப்போ கண்டிப்பா அவ மனசுல பதிஞ்சு இருக்கனும். ஆனா ஒரு ரியாக்ஷனும் இப்பவும் அவ கொடுக்கலையே…" என்று சலிப்போடு கூறினான் சரவணன்.

நடந்த அனைத்தையும் பாத்திமாவிடம் கூறிய த்ரிஷ்யா அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இனி அவள் தான் கூறவேண்டும் என்பது போல்.

"என்னை என்ன செய்ய சொல்ற? அவர் என்கிட்ட எதையுமே இனி எதிர்பார்க்க முடியாது. அவருக்கு மனைவி ஆகுற தகுதியை நான் எப்பவோ இழந்துட்டேன்." என்று அவள் கூற அவளை தீப்பார்வை பார்த்தாள் த்ரிஷ்யா.

"முட்டாள்... உன்னை மாதிரி பல முட்டாள்கள் இந்த நாட்டில் இருக்க தான் செய்யறாங்க. உடல் ரீதியா உனக்கு ஒரு குறை ஏற்பட்டா அது ஒரு குறையா? மனரீதியா மானசீகமான நீ எந்த தப்புமே செய்யல. ஒரு உயிரை கொல்வதை விட ஆத்மாவை கொலை செய்வது தான் பெரிய குற்றம்.

அப்படி பார்த்தா நீ சுத்தமான ஒரு அப்பாவி. நாட்டில் பல பெண்களை ஆவங்களுக்குத் தெரியுமா வீடியோ எடுத்து மிரட்ட தன்னோட ஆசைக்கு ஆண்கள் சிலபேர் பணிய வைக்க முயற்சி பண்றாங்க. ஆனா அந்த மாதிரி சூழலில் தான் பெண்கள் புத்திசாலியா யோசிக்கணும். இந்த உடல் செத்த பிறகு மண்ணுக்கு போய்டும். அந்த உடலுக்காக தன்னோட ஆத்மாவை கொன்னுட்டு வாழ துணிவது தான் பெரிய தப்பு. ஒரு அசிங்கமான விடியோவை இன்டர்நெட்டில் ஒருத்தன் வெளிப்படுத்தினா அங்கே கேவலமான பிறவி அந்த செயலை செய்பவன் தான். அதில் பாதிக்கப்பட்ட பெண் இல்லை. அப்படி ஒரு அசிங்கமான படத்தையோ வீடியோவையோ பார்க்குறவனும் கேவலமான பிறவியா தான் இருக்க முடியும். அப்படி பட்ட ஒரு பிறவிக்கு பயந்து தற்கொலை பண்ணி கொள்வதோ இல்லை அப்படிப்பட்ட ஆண்களோட ஆசைக்கு இணங்குவதோ பெரிய முட்டாள்தனம். சரி தான் போடா பொறுக்கின்னு சொல்லி நம்ம வாழ்க்கையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கணும். நீ உன்னையே தண்டிக்கிறதா நினைச்சுக்குட்டு சரவணனோட வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சுடாதே. அவ்வளவு தான் சொல்லுவேன்." என்று கூறியவள் மேலே பேச எதுவும் இல்லை என்பது போல் கண்களை மூடிக்கொண்டாள்.

கண்ணீருடன் வெளியேறிய பாத்திமா அங்கு சரவணனை கண்டு அவனிடம் நெருங்கி சென்றாள். திடீரென்று அவளை அவ்வளவு நெருக்கமாகக் கண்ட சரவணன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க பாத்திமா அழுத்தமாக அவனை அணைத்துக்கொண்டாள்.

********************************************சுபம்******************************************** 

 

Uploaded files:
  • shamili.jpg
Quote

Good Attempt mam . Before publishing , Edit the Prabha's Hospital scenes . In climax also , increase dialogues . Not only in climax , some scenes are not complete . Edit it before publishing.  All the best Mam

monisha has reacted to this post.
monisha
Quote

என்ன நடந்தது என்று தெரியவில்லையே எனக்கு . நான் எப்படி உங்கள் update பார்க்காமல் இருந்தேன் என்று தெரியவில்லை . முதலில் மன்னித்து கொள்ளுங்கள் . கதையை எதிர் பார்க்காத விதத்தில் கொண்டு சென்று உள்ளீர்கள் , பெண்களால் எதுவும் முடியும் என்று . த்ரிஷ்யா - பாத்திமா கடைசி கட்ட பேச்சு , புரிந்து கொள்ள வேண்டும் தலைமுறை .. அருமையான முதல்  கதை , அடுத்த கதையை எதிர் பார்த்து நான் .,,!

Quote

Nice story 👍

You cannot copy content