You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Solladi Sivasakthi - Episode 18

18

பிடிவாதம்

மீனாக்ஷி தன் மகனின் அறைக்குள் அவனின்றி இதுவரை நுழைந்ததே இல்லை. அது நாகரிகமற்ற செயல் என்பது அவருடைய எண்ணம். ஆனால் இம்முறை அத்தகைய செயலை மீனாக்ஷி செய்தார்.

மீனாக்ஷி தன்னந்தனியே பெரும் அரசியல் கட்சியை நிர்வகிக்கும் அசாத்தியமான பெண்மணியாக இருப்பினும் மகன் என்ற உறவு அவரைச் சாதாரணப் பெண்மணி போலக் கொஞ்சம் சுயநலமாய்ச் சிந்திக்க வைத்தது. அதற்குக் காரணமும் இருந்தது.

எத்தனை வேலையிலும் தன் மகனின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் அவர் தவறியதில்லை. சக்திசெல்வன் எந்த ஒளிவுமறைவுமின்றி எல்லா விஷயத்தையும் மீனாக்ஷியிடம் பகிர்ந்து கொள்வான்.

மீனாக்ஷி பலமுறை தன் மகனிடம்,

“நீ யாரையாச்சும் காதலிக்கிறியா சக்தி?!” என்று கேட்ட போதெல்லாம்,

“உங்களை மாதிரி ஒரு தைரியமான பொண்ணைச் சந்திச்சா பார்க்கலாம்” என்று ஆர்வமின்றிப் பதிலுரைப்பான்.

இன்று ஒரு பெண்ணின் மீதான காதலுக்காகத் தன்னையும் விட்டு அவன் சென்றிருக்கிறான் என்பதை இப்பொழுதும் மீனாக்ஷியின் மனம் நம்ப மறுத்தது.

சக்திசெல்வனின் கப்போர்ட்டை மீனாக்ஷி திறந்து அவன் பொருட்களை உற்றுப் பார்த்தபடி இருக்க, அதிலிருந்த புத்தகம் ஒன்று ரொம்பவும் வித்தியாசமாய்த் தோன்றியது.

அதனை எடுத்துப் பார்த்தார். அந்தக் கவிதை நிரம்பிய பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் அட்டையில் இருந்த சிவசக்தி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்க யோசனையோடு மீண்டும் அந்தப் புத்தகத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டுக் கப்போர்ட் கதவை மூடினார்.

மீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்த்த போது சக்திசெல்வனின் கைப்பேசி அவர் கண்ணில் பட்டது. அதைத் திறக்க முயற்சிக்கப் பாஸ்வார்ட் கேட்டது. எப்போதுமே அவன் பயன்படுத்தும் வார்த்தைகளால் அவனின் கைப்பேசியைத் திறக்க முடியவில்லை.

கடைசியான முயற்சியாய் சிவசக்தி என்ற பெயரை முயற்சி செய்ய சக்திசெல்வனின் கைப்பேசி திறந்து கொண்டது. சிவசக்தி தன் மகனின் மனதில் எந்தளவுக்கு ஆழமாய் இடம்பிடித்திருக்கிறாள் என்பதை மீனாக்ஷி உணர்ந்து கொண்டார். அந்தக் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களில் ஒரே ஒரு பெண்ணின் படம் இருந்தது. அந்தப் படத்தில் தோன்றிய சிவசக்தியின் அழகோ அல்லது அவளின் நிமிர்ந்த தோற்றமோ மீனாக்ஷியை கவரவில்லை. மாறாய் ஏன் என்று தெரியாத வெறுப்பை ஏற்படுத்தியது.

இதெல்லாம் ஒரு புறமிருக்க முரளி சிவசக்தியை குறித்த செய்திகளை விவரித்தான். அவள் குடும்பமின்றித் தன் அம்மா நடத்திய இல்லத்தில் இருக்கிறாள். எஸ். எஸ் கல்லூரியில் சிவசக்தியை பார்த்து அவள் மீது காதல் கொண்டு சக்திசெல்வன் செய்த எல்லாக் காரியங்களைப் பற்றி முரளி விவரமாய் உரைத்தான்.

டெல்லிக்கு வருவதற்கு முன்பு சிவசக்திக்கு டிரெயினில் நடைபெற்ற விபத்தையும் அவளைக் காப்பாற்ற சக்திசெல்வன் போராடியதைக் குறித்தும் தெரியப்படுத்தினான். இவற்றை எல்லாம் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த மீனாக்ஷிக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்திய விஷயம் என்னவெனில் சக்திசெல்வன் அவளுக்காக இத்தனையும் செய்த பிறகும் அவனைச் சிவசக்தி நிராகரித்தது.

சக்திசெல்வனை நிராகரிக்கும் அளவிற்கு அவள் திமிர் பிடித்தவளோ என்று மீனாக்ஷிக்கு நினைக்கத் தோன்றியது. இப்படிப்பட்ட பெண்ணுக்கு தன் காதலை உணர்த்த அத்தனை தூரம் சென்றிருக்கிறான் என்பது மனதளவில் சிவசக்தியின் மீதான துவேஷத்தை மீனாக்ஷிக்கு வளரச் செய்தது. ஆனால் இப்போதைக்குத் தன் மகனுக்காக அமைதிக் காப்பதென்று மீனாக்ஷி முடிவெடுத்தார்.

சக்திசெல்வனுக்கு அந்த வீட்டில் ரொம்பவும் நெருக்கமாய் இருந்தது ஆனந்தியும் கண்ணனுமே. பள்ளியில் ஜெயா அவனிடம் உற்றத் தோழியாக இருந்தாள். ஆனால் இத்தனை அருகாமையில் இருந்தும் சிவசக்தி அவனிடம் இயல்பாய்ப் பழகாமல் விலகியே நின்றாள். ஆசிரியர் தொழிலுக்கு சக்திசெல்வன் அனுபவமே இல்லாதவன், எனினும் அவன் முழு முயற்சியோடும் ஈடுபாட்டோடும் மாணவர்களைத் தன் திறமையால் புத்திக்கூர்மையால் கவர்ந்திழுத்தான்.

அவனின் திறமையைக் கண்ட ஜோதி சார் வாய் ஓயாமல் பாராட்டிக் கொண்டிருந்தார். எல்லோருமே அவரிடம் பாராட்டைச் சுலபத்தில் பெற்றுவிட முடியாது. அது சிவசக்தி உட்பட எல்லா ஆசிரியர்களுக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.

பள்ளியில் இருக்கும் நேரம் போக சக்திசெல்வனுக்கு அந்த அறை தனிமைச் சிறையாகவே தோன்றியது. சிவசக்தி இரவில் கடமைக்கென்று உணவு கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவாள். நாளுக்கு நாள் அவளின் பிடிவாதம் அதிகரித்தது போலவே அவன் உணர்ந்தான்.

அன்று சக்திசெல்வன் கைகளில் எழுதுகோலோடு முக்கியமான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் இரவு உணவை எடுத்துக் கொண்டு சிவசக்தி அவனின் அறைக்கு வந்தாள்.

கதவைத் தட்டி அவனின் அழைப்பிற்கு ஏற்ப உள்ளே வந்து உணவை வைத்துவிட்டு வெளியே செல்லும் போது சக்தி செல்வன் தவிப்போடு

“அதுக்குள்ள என்ன அவசரம்... சாப்பிடற வரைக்குமாவது கூடப் பேசிட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்க சிவசக்தி மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாய் நின்றாள்.

சிவசக்தி ஆர்வமாய் எழுதிக் கொண்டிருக்கும் அவனை நோக்கி,

“ஏன் மிஸ்டர். சக்தி... உங்க வசதி எல்லாம் விட்டுட்டு இப்படி இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?” என்று கேட்டாள்.

சக்தி செல்வன் குறிப்பு எடுப்பதை நிறுத்தி விட்டு,

“அந்த அளவுக்குக் கஷ்டமா இல்ல... ஆனா எங்க மாமைதான் நான் ரொம்ப மிஸ் பன்றேன்... அதுவும் இல்லாம நான் எங்கம்மாக்கிட்ட எதையுமே மறைச்சதில்லை... ஆனா உன்னைப் பத்தி மட்டும் சொல்லல” என்று சொல்லும் போதே அவனுக்கு அவன் தாயின் மீதான அன்பு தெளிவாய்த் தெரிந்தது.

சிவசக்தி அவன் சொன்னவற்றைப் புரியாமல் பார்க்க சக்திசெல்வன் மீண்டும்,

“நான் உன்னைக் காதலிக்கறேன்னு சொல்லி இருந்தா... ஒண்ணு உன்கிட்ட சம்மதம் வாங்க முயற்சி பண்ணுவாங்க... இல்லைன்னா நீ என்னை நிராகரிக்கிறது தெரிஞ்சு உன் மேல அவங்களுக்குக் கோபம் வரலாம்... இது இரண்டுமே நடக்கிறதை நான் விரும்பல” என்றான்

சிவசக்தி லேசாய் புன்னகைத்தபடி,

“நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

“ம்… சொல்லு” என்று சக்தி செல்வன் நிமர்ந்து அவளை நோக்க,

“நீங்க இங்க தங்க போற நாட்களில் நீங்க நினைச்ச மாதிரி எனக்கு உங்க மேல காதல் வரலன்னா நீங்க மனசு கஷ்டப்படக் கூடாது... ஒகேவா” என்றாள்.

சக்திசெல்வன் உடனே புன்னகையோடு,

“அப்படி உனக்கு என் மேல காதல் வந்துட்டா மறுக்காம சொல்லிடனும் ஒகேவா” என்றான்.

சிவசக்தி அவனுக்குத் தான் புரிய வைப்பது சிரமம் என்ற தொனியில் தலையசைத்து விட்டு,

“நீங்க சாப்பிடுங்க... கீழே மரியக்கா தேடுவாங்க” என்று சொல்லிவிட்டு சிவசக்தி புறப்பட 'ஏதாச்சும் சொன்னா உடனே ஓடிடுவா' என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

சிவசக்தி அந்த அறையை விட்டு வெளியே போக அங்கே இருந்த சக்திசெல்வனுடைய பொருட்களோடு இருந்த டைரி அவளை அப்படியே அசையாமல் நிற்க வைத்தது.

சிவசக்தி அந்த டைரியை கவனிப்பதை சக்திசெல்வனும் கவனித்தான்.

சிவசக்தி டைரியை தன் கைகளில் எடுப்பதற்கு முன்பாக சக்திசெல்வன் ஒரெட்டில் அதனைத் தன் கையால் எடுத்துக் கொண்டான்.

“ஏய் அது என்னோட டைரிதானே ?” என்று சிவசக்தி கேட்க,

“ஆமாம்... இப்போ அதுக்கென்ன?” என்றான் சக்தி செல்வன்.

“அந்த டைரியை கொடுங்க” என்று சிவசக்தி கைகளை நீட்டிக் கொண்டு நின்றாள்.

“அதெல்லாம் கொடுக்க முடியாது... உன்னைக் கீழே மரியக்கா தேடுவாங்க போ” என்றான்.

“அது என்னோட டைரி” என்றாள் சிவசக்தி அடாவடியாய் நின்றபடி!

“அதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி... இந்த டைரி எப்போ என் கைக்கு வந்ததோ அதுல இருந்து இது என்னோடது சக்தி... நீ கெஞ்சினாலும் சரி கோபப்பட்டாலும் சரி... கிடைக்காது” என்றான்.

“நீங்க பேசிறது நியாயமே இல்லை... என்னோட டைரியை எடுத்து வைச்சுகிட்டு... நீங்க எப்படிச் சொந்தம் கொண்டாடலாம்” என்றாள்.

“நீயும் சரி... உன் டைரியும் சரி... எனக்குச் சொந்தமானதுதான்... யாருக்காகவும் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு சக்தி அப்படியே மலைத்தபடி நிற்க அவன் டைரியை தன் பேகில் வைத்து மூடினான்.

“நீங்க பேசிறது கொஞ்சம் கூடச் சரியில்லை... இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறீங்க” என்றாள் அதிர்ச்சியோடு!

“நான் உன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா... உன் மனசில என்ன இருக்கன்னு தெரியாம இல்ல ?” என்று அழுத்தமாய் சக்திசெல்வன் சொன்னான்.

சிவசக்தி சிரித்துவிட்டு,

“ரொம்பக் கற்பனை பண்ணாதீங்க மிஸ்டர்... எனக்கு உங்க மேல வெறுப்போ கோபமோ இல்ல... அட் தி சேம் டைம் அது காதலும் இல்லை... என் டைரியை நீங்க சொந்த கொண்டாடலும்... ஆனா என்னை முடியாது... நெவர்... கனவில கூட முடியாது...” என்றாள்.

“நான் இது வரைக்கும் முயற்சி செஞ்ச எதிலயுமே தோற்றதே இல்லை சக்தி” என்றான்

“ஓ... இஸ் இட்... அப்போ என் விஷயத்தில உங்க முதல் தோல்வியை நீங்க சந்திக்கப் போறீங்க மிஸ்டர். சக்தி” என்று சொல்லிவிட்டு விறுவிறுவெனச் சிவசக்தி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

சக்திசெல்வனுக்கு அங்கே இருந்த உணவை உண்ண மனம் வராமல் சலிப்புடன் படுக்கையில் சாய்ந்தான்.

“நான் நினைச்சதை விடவும் உன் பிடிவாதம் ரொம்பவே அதிகமா இருக்கு சக்தி... இப்படியே நான் அமைதியா பேசிட்டிருந்தா சத்தியமா உனக்குப் புரியப் போறதில்லை... வேற மாதிரிதான் உன்னை டீல் பண்ணனும்” என்று தனக்குத்தானே சொல்லி கொண்டு தீவரமாய் சக்திசெல்வன் யோசிக்கலானான்.

You cannot copy content