You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Episode 1

Quote

சொல்லடி சிவசக்தி

1

பயணம்

இரவு நேரம்... சென்னை சென்ட்ரல்... கால நேரமின்றி மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. எல்லோரும் தங்கள் பையைகளைத் தாங்கிக் கொண்டும் பெட்டிகளை இழுத்தபடியும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

இரயில்கள் வந்த வண்ணம் இருக்கப் பலரும் அங்கிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கியும், வந்து நின்ற இரயில்களில் இருந்து இறங்கியும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.

ஆங்காங்கே பயணத்திற்கு ஆயத்தமாகும் இரயில்கள் பற்றிய அறிவிப்புகள் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்க ஒலிஎழுப்பியில் அவற்றின் அறிவிப்புகளும் அந்த இரயில்கள் நின்று கொண்டிருக்கும் நடைமேடைகளும் அறிவிக்கப்பட்டன.

பெங்களூர் மையில் ஆறாம் நடைமேடையில் வந்து நிற்பதாக அறிவிப்பு ஒலித்தது. அந்த இரயிலில் ஏறுவதற்காக வேகமாகத் தன்னுடைய பையைக் கரத்தில் பிடித்தபடி வந்து கொண்டிருப்பவள்தான் நம் கதைநாயகி சிவசக்தி.

அழகிய வெள்ளை நிற சுடிதார்... அடர்த்தியாய்ப் பின்னப்பட்ட கூந்தல்... சீரான புருவங்களுக்கு இடையிலான தங்க நிற பொட்டு... ஏற்கனவே உயரமாக இருந்தும் இன்னும் உயரத்தைக் கூட்டியபடி ஒரு காலணியோடு நடந்து வந்தவள், பெங்களூர் மெயிலின் இரயில் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த வரிசைப்பட்டியலை சரிபார்த்தாள்.

அப்போது அவள் புருவங்கள் லேசாய் குழப்பத்தில் சுருங்கி பின் மீண்டும் தெளிவுப்பெற்று, “எஸ்... சிவசக்தி சி19” என்று கண்டுகொண்டு புன்னகைத்தாள்.

இங்கே சிவசக்தியோடு நம் பயணமும் தொடரப் போகிறது. அவளுக்கான இருக்கையைக் கண்டுபிடித்து அமர அங்கே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபடி ஒரு சிறுமி அமர்ந்திருந்தாள்.

சிவசக்தியை பார்த்து சிரிக்கலாமா என் அந்தச் சிறுமி யோசித்துக் கொண்டிருக்க, சிவசக்தி தன்னுடைய பையைக் காலுக்குக் கீழே தள்ளி விட்டு, “ஹொலோ” என்று அந்தச் சிறுமியை பார்த்துக் கைநீட்டினாள்.

அந்தச் சிறுமியும் தெளிவு பெற்று லேசாகச் சிரித்துக் கை குலுக்கினாள்.

“உன் பெயர் என்ன?” என்று சிவசக்தி கேட்க,

“ஐம் வர்ஷினி” என்றாள் கொஞ்சும் குரலில்.

“வாவ்... வெரி நைஸ் நேம்... உங்க கூட வந்தவங்க எங்கே வர்ஷு?”

வர்ஷினி எதிர்புறத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தபடி மும்முரமாய்க் கைப்பேசியில் அளவளாவி கொண்டிருந்த பெண்ணைக் கை காண்பித்து, “மை மாம்” என்றாள்.

சிவசக்தி அந்தப் பெண்ணை கவனத்துவிட்டு தலையசைக்க உடனே வர்ஷினி, “வாட்ஸ் யுவர் நேம்?” என்று கேட்டாள்.

“சிவசக்தி” என்று அழுத்தமாய் அவள் சொல்ல, அந்தச் சிறுமியின் முகம் சுருங்கிப் போனது.

சிவசக்தி உடனே புருவத்தை உயர்த்தி,

“என்னாச்சு வர்ஷு?” என்றாள்.

வர்ஷினி முகத்தைச் சுருக்கி சக்தியை பார்த்து,

“ஓல்ட் நேம் மாறி இருக்கே?” என்றாள்.

“எங்கம்மாவுக்கு இந்தப் பெயர்தான் பிடிச்சுது வர்ஷு... என்ன பன்றது?!” என்றாள் சிவசக்தி.

“ஏன்?” என்று அந்தச் சிறுமி கேள்வி எழுப்ப, சிவசக்தி புன்னகையோடு,

“எங்க அம்மாவுக்குப் பாரதியார் கவிதைகள்னா ரொம்பப் பிடிக்கும் வர்ஷு... இந்தப் பெயர் அம்மாவுக்குப் பிடிச்ச பாடலில் வருது... அதான்” என்றாள்.

“அதென்ன பாட்டு... பாடுங்க” என்று வர்ஷினி அழகாய் தலையைச் சாய்த்துக் கேட்க,

“இங்க எப்படி வர்ஷு... அப்புறமா” என்று சக்தி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தயங்கினாள்.

“ம்ஹும்... சிங் நவ்”என்று வர்ஷினி அதிகார தொனியில் கேட்க, அவளின் வார்த்தைகளுக்கு இப்போது சக்திக்கு மறுப்பு சொல்ல மனமில்லாமல்,

“சரி கிட்ட வா” என்று சொல்லி அந்தச் சிறுமியை அருகில் அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு மெதுவாகக் காதோடு பாடத் தொடங்கினாள்.

‘நல்லதோர் வீணை செய்து

அதை நலம் கெட

புழுதியில் எரிவதுண்டோ...

சொல்லடி சிவசக்தி...

என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாள்’

என்று அவள் ரம்மியமான குரலில் பாட அந்த இரயிலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த சலசலப்புகளையும் கடந்து அவளின் மிருதுவான குரல் அங்கே இருப்பவர்களை மெல்ல வருடிச் சென்றது.

வர்ஷினி தம் கைகளைத் தட்ட, அவளின் தாய் கண்பார்வையினாலே மிரட்டினாள்.

இந்த வித்தியாசமான தோழிகள் பிறகு வெகு சுவார்ஸ்யமாய்ப் பேசிக் கொண்டிருக்க, இரயில் புறப்படத் தயாரான சத்தம் ஒலித்தது.

அதே சமயத்தில் சிவசக்தியின் கைப்பேசியும் ரீங்காரமிட அவள் அதனை எடுத்துப் பேசியபடி எழுந்து கதவுப்புறத்திற்குச் சென்று,

“சொல்லுங்க அண்ணி” என்றாள்.

“எப்ப டீ வருவ?” என்று எதிர்புறத்தில் கேள்வி எழுந்தது.

“காலையில ஆறுமணிக்கெல்லாம் வந்துருவேன்”

“ஸ்டேஷனுக்குத் தம்பியை அனுப்பிறேன்” என்றாள் சிவசக்தியின் அண்ணி.

“வேண்டாம் அண்ணி... நானே வந்துருவேன்” என்றாள் சக்தி

“தனியா எப்படிச் சக்தி வருவ?”

“வந்துருவேன் அண்ணி... ஒகே... ஒகே டிரெயின் கிளம்பப் போகுது... நான் அப்புறம் பேசிறேன் “என்று சொல்லி, சக்தி அழைப்பைத் துண்டித்தாள்.

சத்தமாய் ஒலி எழுப்பி இரயில் சென்டிரலிலிருந்து மெல்ல நகர, சிலர் வேகமாய் உள்ளே ஏறினர். சிவசக்தி ஆடிக் கொண்டு சென்ற அந்த இரயில் பெட்டியில் நிலைத்தடுமாறாமல் தன் இருக்கைக்கு வந்துஅமர்ந்தாள். வர்ஷினியின் தாய் நிறுத்தாமல் இன்னும் போஃன் பேசிக் கொண்டிருந்தாள்.

வர்ஷினியின் எதிரே சென்று சிவசக்தி அமர அந்தச் சிறுதி இதழில் புன்னகையோடு,

“திஸ் இஸ் பாஃர் யூ” என்று அழகிய சிவப்பு நிற ரோஜா பூங்கொத்தை நீட்டினாள்.

அந்த ரோஜாவைக் கையில் வாங்கத் தயங்கியபடி சிவசக்தி,

“யார் கொடுத்தா வர்ஷு?!” என்று புருவம் சுருங்கக் கேட்க,

“ஜன்னல் வழியா ஒரு அங்கிள் இதை உங்ககிட்ட கொடுக்கச் சொல்லிட்டு போயிட்டாரு” என்றாள்.

சிவசக்தி ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க இரயில் நடைமேடையைக் கடந்து தம் வேகத்தை அதிகரித்தது. மீண்டும் வர்ஷினி அந்தப் பூங்கொத்தை நீட்ட, சிவசக்தி சலிப்போடு பெற்று அதில் எழுதியிருந்ததைப் படித்தாள்.

“ஹேப்பி அன் சேஃப் ஜர்னி” என்றிருந்ததைப் பார்த்ததும் அத்தனை நேரம் கலகலப்போடு பேசிக் கொண்டிருந்தவள் மௌனமானாள்.

ஏற்கனவே சிவசக்திக்கு அந்தப் பூக்களும் அந்த எழுத்துக்களும் பழகியனவே. அவள் கால் மீது கால் போட்டபடி தீவிரமான யோசனையில் ஆழ்ந்தாள்.

என்னைப் பின்தொடர்கிற அந்த நபர் ஏன் என் கண்ணு முன்னாடி வரமாட்டிறான்... அவனோட பிரச்சனை என்ன... எதுக்கு இந்தக் கண்ணாமூச்சி... என்னைப் பிடிச்சிருக்குன்னா ஏன் என்கிட்ட நேரடியா வந்து சொல்ல கூடாது?

‘யாருடா நீ? எங்க இருக்கு? உன் பெயர்தான் என்ன? இப்படி எதுவுமே தெரியாம... சே... இட்ஸ் இரிட்டேட்டிங்... அவன் என்னைக்காச்சும் என் முன்னாடி வராமலா போயிடுவான்... அப்போ பாத்துக்கிறேன்...’ என்று கோபத்தோடு அவள் தன் மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் எல்லோரும் தங்கள் இருக்கையைப் படுக்கையாய் மாற்றி உறங்கிப் போகச் சிவசக்தி அந்த ரோஜாப்பூக்களைத் தூக்கி எறிய மனமின்றி அவற்றைப் பார்த்தபடியே அவள் விழித்துக் கொண்டிருந்தாள்.

அந்தச் சமயத்தில் வர்ஷினியின் தாய் உறக்கத்திலிருந்து விழித்து வேகமாய் அந்தப் பெட்டியின் கழிவறையை நோக்கி விரைந்தாள்.

வெகு நேரமாய் அந்தப் பெண் திரும்பி வராமல் போக வர்ஷினி திடீரென விழித்து, “மாம்” என்று அழைத்தபடி கண்களைக் கசக்கித் தேட ஆரம்பித்தாள்.

“ரெஸ்ட் ரூம் போயிருக்காங்கமா... வந்திருவாங்க” என்றாள் சக்தி.

“நானும் போறேன்” என்று சொல்லி வர்ஷினி தன் படுக்கையிலிருந்து இறங்கி தடுமாறிக் கொண்டே நடந்து சென்றாள்.

அந்தச் சிறுமி தன் தாயை தேடி அவ்வாறு தனியாய் போவதை எண்ணி சிவசக்திக்கு கவலை உண்டாக அவளும் எழுந்து பின்னோடு சென்றாள்.

அங்கே வர்ஷினியின் தாய் கோபமாய்ப் போஃனில் பேசிக் கொண்டிருக்க அதனைக் கவனித்த வர்ஷினி தன் அம்மாவின் புடவையை இழுத்தபடி,

“டேட் கிட்ட சண்டேபோடாதிங்க மாம்... நாம நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்று அழுதாள்.

அவள் தாயோ வர்ஷினியின் அழுகையைப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாய் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்தச் சிறுமி மனவருத்தத்தோடு ஒருபுறத்தில் திறந்தபடி இருந்த கதவை நோக்கி,

“போங்க நான் போறேன்...” என்று ஓடும் இரயிலில் இருந்து இறங்க யத்தனித்தாள்.

அதனைக் கவனித்த சிவசக்தி அதிர்ச்சியோடு,

“வர்ஷு... நில்லுமா” என்று அழைத்தபடி கதவருகில் சென்று அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டு ஆட்டம் கண்டு கொண்டிருந்த அந்த இரயிலில் சிவசக்தி தன்னுடைய உயரமான காலணியால் தடுமாறி வெளியே வீழ்ந்தாள்.

வர்ஷினியின் தாய் அப்பொழுதுதான் நிலைமையை இன்னதென்று உணர்ந்தவளாய்,

“அய்யோ விழுந்துட்டாங்க! !” என்று உரக்கச் சத்தமிட்டு அந்த இரயில் பெட்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரையும் விழிக்கச் செய்தாள்.

நன்றாகவே தொடங்கிய சிவசக்தியின் பயணம் இப்படி ஒரு எதிர்பாராத விபத்தில் சென்று முடிந்தது.

தொடரும்...

Quote

Super ma 

You cannot copy content