You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Episode 29

Quote

29

தவிப்பு

 

சக்திசெல்வன் ஜெயாவுடன் அவன் அறையில் பேசிக் கொண்டிருந்த போதுதான் மோகன் சிவசக்தியை பார்த்துவிட்டு சக்திசெல்வனை தன் அறைக்கு அழைத்திருக்கிறார்.

இருவரும் சந்தித்துக் கொண்ட போது அவர்கள் இருவரின் கோபமும் ஆழமாய் உணரப்பட சக்தி அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“என்ன டேட்... என்ன மேட்டர்?” என்றான் இயல்பாக!

சிவசக்திக்கு அங்கே நிற்க விருப்பமில்லை எனிலும் அறையை விட்டு உடனடியாக வெளியேறுவது நாகரிகம் இல்லை எனத் தவிப்போடு நின்றாள்.

மோகன் ராம் தன் மகனை நோக்கி, “உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” என்று வினவினார்.

இந்தக் கேள்வியை சக்திசெல்வன் எதிர்பார்க்கவில்லை. அதுவும் தன் அப்பா முதல் முறையாய் சிவசக்தியை குறித்துத் தன்னிடம் கேள்வி கேட்கிறார் என்று தயக்கத்தில் நின்றிருந்தான்.

சிவசக்தி தயங்காமல் மோகனை நோக்கி, “சார் எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை... அதே போல எங்களுக்குள்ள எந்தச் சம்பந்தமும் இல்லை...” என்று சொல்லிவிட்டு புறப்பட,

“டேட்... மிஸ். சிவசக்திக்கு யார் பேசிறதையும் கேட்கிற பொறுமையும் இல்லை” என்று லேசான புன்னகையோடு அவள் காதுப்படவே உரைத்தான்.

அந்த வார்த்தையைக் கேட்ட பின் போகமுடியாமல் சக்திசெல்வனின் புறம் திரும்பி

“என் பேரை கூட நீங்க சொல்ல வேண்டாம்... உங்களைப் பார்க்க கூட நான் விரும்பல” என்றாள்.

“உன் பேரை சொல்லவோ... உன்னைப் பார்க்கவோ நானும் இன்டிரஸ்ட்டடா இல்ல... நீ நிக்கிறது என் ஆபிஸ்ல... என்னைப் பார்க்க விருப்பமில்லாதவ இங்கே ஏன் வரனும்?” என்று கேள்வி எழுப்பினான்.

“அந்த ஜெயா... அறிவுகெட்டவ” என்று வாய்க்குள் முனக அது அவன் காதில் விழ,

“நீ மட்டும் புத்திசாலி... மற்ற எல்லோரும் முட்டாள் இல்லையா?” என்றான் சக்திசெல்வன்.

“நான் சத்தியமா புத்திசாலி இல்ல... இல்லாட்டிப் போன நீங்க அவாயிட் பன்றீங்கன்னு தெரிஞ்ச போதும் டெல்லி வரைக்கும் வந்து அவமானப்பட்டிருக்க மாட்டேன்” என்றாள்.

“நான் சூழ்நிலைக் காரணமா அப்படி நடந்துக்கிட்டேன்... ஆனா நீ உன் அவசர புத்தியால் நான் சொல்ல வந்ததைக் கேட்காம... என்னை வேணும்னே நிக்க வைச்சு அவமானப்படுத்தின” என்றான்.

இருவரும் மோகனின் எதிர்க்கே அப்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என மறந்து போயினர். இப்போது உண்மையிலேயே எரிச்சலடைந்த மோகன்,

“வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்... நீங்க இரண்டு பேரும் அடல்ட்ஸ்தானே... இப்படிக் குழந்தைத்தனமாச் சண்டை போட்டிக்கிறீங்க” என்று அதிகாரத் தொனியில் உரைக்க இருவருமே அமைதியாகினர். ஆனால் ஒருவர் மீது ஒருவருக்கான கோபம் என்னவோ முகத்தில் தெளிவாய் வெளிப்பட்டது.

சிவசக்தி தன் பொறுமையின்மையை எண்ணித் தானே நொந்து கொள்ள,

“சாரி டேட்” என்று சக்திசெல்வன் தன் தவறை ஏற்றுக் கொண்டான்.

ஆனால் மோகன் தன் மகனை நோக்கி,

“நான் உன்கிட்ட இதை எதிர்பார்க்கல சக்தி... நீ எத்தனையோ கிளைன்ட்ஸை மெச்சூரிட்டியா ஹேண்டல் பன்றதை பார்த்து திகைச்சுப் போயிருக்கேன்... பட் இன்னைக்கு என் முன்னாடி நிக்கிறது அந்தச் சக்திதானான்னு எனக்கு டௌட்டா இருக்கு” என்றார்.

சக்திசெல்வன் தன் தந்தையின் முன் எப்படி விளக்குவது எனப் புரியாமல் நிற்க மோகன் சிவசக்தியின் புறம் திரும்பி,

“சிவசக்தி... உன்னுடைய இந்த அவசர புத்தியும் உன் கோபமும் ஐ. ஏ. எஸ் ஆபிஸராகனும்ங்கிற உன் இலட்சியத்திற்குப் பெரிய டிராபேக்” என்றார்.

சிவசக்தியும் ஆச்சர்யமாய்ப் பார்த்தபடி மௌனமாகினாள்.

“சக்தி நீ உன் கேபினுக்குப் போ” என்று சொல்ல அவன் அடுத்தக் கணமே பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.

சிவசக்தி புறப்பட்டுவிடலாமா என்று நினைக்க மோகன் ராம்,

“நான் உன்கிட்ட ஒரு ஜந்து நிமிஷம் பேசனும்... பேசலாமா?” என்றார். தவிர்த்து விட்டுப் போக மனமில்லாமல் “ம்ம்ம்” என்று தலையாட்டியவளை அமரச் சொன்னார்.

சிவசக்தி பழக்கமில்லாத அவர் தன்னிடம் என்ன பேசப் போகிறார் என்ற கேள்விக்குறியோடு உட்கார்ந்தாள்.

“நான் அதிக நேரம் எடுத்துக்க மாட்டேன் ஷார்ட்டாவே சொல்லிடறேன்... சக்திக்கும் உனக்குமான இந்தப் பிரச்சனை என் வொய்ஃப் மீனாக்ஷியாலதான்.

சக்தி ஒரு வருஷம் உன்னைப் பேசாம பார்க்காம நிராகரிச்ச பிறகும்... நீ அவனைக் காதலிச்சா... உங்க இரண்டு பேரோட கல்யாணத்திற்குச் சம்மதிக்கிறேன்னு அவ போட்ட கன்டிஷன்தான் எல்லாத்துக்கும் காரணம்... சக்தி முதல அந்தக் கன்டிஷனுக்கு அக்ஸெப்ட் பண்ணிக்கல... அப்புறம் அம்மா மேல இருந்த மரியாதை... உன் காதல் மேல இருந்த நம்பிக்கையினால சம்மதிச்சான்.

இதனால அவன் உன்னை எந்தளவுக்குக் காயப்படுத்தினானோ... அதே அளவுக்கு அவனும் காயப்பட்டிருக்கான்மா... எந்த டெசிஷனையும் அம்மாவை கேட்காம எடுக்காத சக்தி... இப்போ அவங்க அம்மாகிட்ட பேசிறதையே நிறுத்திட்டான்.

இவ்வளவெல்லாம் அவன் உனக்காகத்தான் செய்தான்... ஆனா நீ அவனைப் புரிஞ்சிக்கல... அந்த டிப்பிரஷன் அவனுக்கு இப்படிக் கோபமா மாறி இருக்கு... இதுக்கப்புறமும் உனக்கும் சக்திக்குமான ரிலேஷன்ஷிப் இருக்கனுமா வேணாமான்னு நீதான் முடிவு பண்ணனும்” என்று சக்திசெல்வனின் பக்கம் இருக்கும் நியாயத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சிவசக்தியிடம் விளக்கிவிட்டார்.

இப்போது சிவசக்தியின் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. அந்த அறையை விட்டு வெளியே யோசனையோடு நடந்து வந்தவளின் தோள்களில் ஜெயா கை வைக்க அவள் பேசியதொன்றும் சிவசக்தியின் காதில் விழவில்லை.

தான் இதுவரை தவறேதும் செய்யவில்லை என்றிருந்த அவளின் கர்வம் நொறுங்கிப் போனது. அவன் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சதுரங்க போட்டியில் சூட்சமமாய்ச் சொன்னது வெறும் வார்த்தை அல்ல.

அவன் உணர்வுப்பூர்வமாகவே சொல்லி இருக்கிறான் என்று தோன்றியது. அன்று அவன் சொல்ல வந்ததை ஒரே ஒரு முறை காது கொடுத்துக் கேட்டிருக்கலாமே என அவள் மனம் சொல்ல, முடிவுற்ற விஷயங்களை நாம் மீண்டும் மாற்ற இயலுமா என்ன?!

ஜெயா தன் தோழியின் மௌனத்தின் அர்த்தம் புரியாமலே அவளுடன் வந்தாள். சக்திசெல்வனை நேரில் கண்டு மன்னிப்பு கேட்க துணிவுவரவில்லை. என்ன செய்வதென்று வழி தெரியாமல் அவதியுற்றாள்.

அடுத்த நாள் பெங்களூரிலிருந்து தீக்ஷாவும் திவ்யாவும் வந்திருந்தனர். அவர்கள் முன்னமே வருவதாகத் தகவல் தெரிவித்த போதும் சிவசக்தி இந்தக் கவலையில் அதை மறந்தும் போனாள்.

திவ்யா சென்னையில் நிரந்தரமாய்த் தங்கிவிட வந்திருந்தாள். முன்னமே அவளுக்கான வேலையையும் விஜயின் தயவால் ஏற்பாடு செய்திருந்தாள்.

அன்று சிவசக்தியும் தீக்ஷாவும் அந்த மாலை வேளையில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். மாலை மேகங்கள் அழகாய்ப் படர்ந்திருக்க அன்று ஒரு நாள் மாலை அவளருகில் அவன் வானில் ரசித்த அழுகு ஓவியம் இன்று சிவசக்தியின் நினைவுகளுக்குள் ஒளிந்திருந்த காதல் உணர்வைத் தூண்டிவிட்டது.

அன்று ரொம்பவும் சாதாரணமாகத் தோன்றிய அந்தக் காட்சியின் அழகை அவனின் பிரிவில் இன்று ஏக்கத்துடன் கூடிய காதலில் உணர்ந்தாள். இன்னும் சிலமணி நேரங்களில் இருள் சூழ்கிற அதே சமயத்தில் மேகக்கூட்டங்கள் படையெடுத்து மழையை நம் பூமியின் மீது பூவாய் தூவக் காத்திருக்கிறது.

சக்தி இதை உணர்ந்தவளாய், “தீக்ஷா வா போகலாம்” என்று அவளைத் தூக்கிக் கொள்ள விஜய் அவள் முன்னே வந்து நின்றான். அவன் முகத்தில் ஒருவித கலக்கமும் புரியாத குழப்பமும் தென்பட்டது.

“விஜய்... வாட் அ சர்ப்பிரைஸ்?!... கொஞ்ச நாளாகவே உன்னைப் பார்க்க முடியல... வேலையில் பிஸியா?” என்று அவள் பாட்டுக்குக் கேள்வி எழுப்ப அவன் மௌனமாகவே நின்றான்.

அவனின் தயக்கத்தைச் சிவசக்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் அவனிடம் மீண்டும், “மழை வர மாதிரி இருக்கு கீழே போகலாம் வா விஜய்” என்றாள்.

“இங்கயே பேசுவோம்... நான் கொஞ்சம் பெர்ஸனலா பேசனும்” என்றான்.

சிவசக்தி குழப்பத்தோடு அவனைக் காக்கச் சொல்லிவிட்டு தீக்ஷாவை கீழே விட்டுவிட்டு வந்தாள். அந்தக் கார்மேகங்கள் அந்த இரவை மேலும் இருளாய் மாற்றிக் கொண்டிருந்தது.

சக்தி அதனைக் கவனித்தபடி,

“கம்மான் விஜய்... சீக்கிரம் சொல்லு” என்று அவள் அவனைத் துரிதமாக உரைக்கச் சொன்னாள்.

“சக்தி” என்று அவன் ஆரம்பிக்க வீட்டின் வாசலில் வந்து நின்ற காரின் சத்தம் சிவசக்தியின் கவனத்தைத் திசை திருப்பியது. எட்டி நின்று பார்த்த போது சக்திசெல்வன் வீட்டின் வாசலில் நிற்க, நடப்பதெல்லாம் கனவா என எண்ணியபடி தலை முதல் கால் வரை புரியாத உணர்வோடு அதிர்ச்சியில் நின்றாள்.

இன்று அவளின் சிறைப்பட்டிருந்த காதல் விடுதலைப் பெற்று அவனிடம் நேரில் பேச வேண்டுமென்ற ஆவலை தூண்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் விஜயை வேறு கவனிக்கத் தவறியவளாய், ”சாரி விஜய்” என்றாள்.

“யாராச்சும் கெஸ்ட் வந்திருக்காங்களா?” என்று விஜய் கேட்க, “ம்ம்ம்” என்று சொல்லி தலையை மட்டும் அசைத்தாள்.

சக்திசெல்வன் எப்படி வந்தான் என்ற சிந்தனையில் அவள் ஆழ்ந்துவிட விஜய் தன் காதலை எப்படி உரைப்பது என்ற கவலையில் சிக்குண்டான்.

சக்திசெல்வனை மீண்டும் பார்த்த எல்லோரின் முகத்திலும் ஆனந்த அதிர்ச்சிக் குடி கொண்டது. அதுவும் ஆனந்தி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். ஜெயா அழைப்பிதழ் வைக்கும் போது பார்வதியின் உடல்நிலையைப் பற்றி உரைத்திருந்தாள்.

இதைக் கேட்ட பின்பு சக்தியால் எப்படி அங்கே வராமல் இருக்க முடியும். அலுவலகத்தில் நடந்த மோசமான நிகழ்வு சிவசக்தியின் மீதான கோபத்தை அதிகப்படுத்தி இருந்தாலும் அதற்காக சிவசக்தி இல்லத்தில் உள்ளவர்களை எல்லாம் பார்க்காமல் தவிர்ப்பது நியாயமில்லை என எண்ணி அங்கே வந்திருந்தான்.

பார்வதிக்கு அவனைப் பார்த்ததில் அளவில்லா ஆனந்தம். அவனும் அன்போடும் அக்கறையோடும் விசாரித்தான். திவ்யா அவனுக்குப் புது முகமானாலும் அவள் ஏற்கனவே சிவசக்தியின் மூலமாக அவனைப் பற்றி அறிந்திருந்தாள். இருவருமே சில நொடிகளில் இயல்பாக அறிமுகமாகிப் பழகிவிட்டனர்.

தீக்ஷாவை தன் மடியில் வைத்து சக்திசெல்வன் கொஞ்சியபடி ஆனந்தியிடம், “சக்தி எங்கே?” என்று வினவினான்.

என்னதான் கோபம் இருந்தாலும் அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவனுக்குள்ளும் இல்லாமல் இல்லை.

“அக்கா மாடியில... விஜயண்ணா கூடப் பேசிட்டிருக்கா?” என்றாள்.

இப்போது சக்தி யோசனையோடு, “எந்த விஜய்?” என்று வினவினான்.

“அக்காவோட காலேஜ் மெட்” என்று ஆனந்தி சொல்ல இப்போது சக்திக்கு அவன் யாரென்று தெளிவானது.

சக்திசெல்வனின் மனம் ஏனோ மாடிக்குச் செல்ல வேண்டுமென்று தவித்தது. அவனே குழப்பத்தில் இருக்க ஆனந்தி விஜய் செய்த உதவிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இந்தச் செய்திகள் விஜயின் மீது நன்மதிப்பை உண்டு பண்ணியதோ தெரியாது. ஆனால் இப்போது அவன் தன்னிடத்தைப் பூர்த்திச் செய்யக் காத்திருக்கிறானோ என்ற எண்ணம் எழுந்தது.

சிவசக்தியின் மனதில் தனக்கு நிகரான இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று அவனின் ஆழ் மனதிற்குத் தெரிந்தாலும் ஏனோ அவன் சிந்தனை தவிப்பை அவனுக்குள் படரச் செய்தது.

நடப்பது நடக்கட்டும் என்ற தவிப்பின் மிகுதியால்,

“நான் சக்தியை பாத்துட்டு வர்றேன்” என்று மேல் தளம் நோக்கிச் சென்றான்.

அந்த நேரத்தில் விஜய் எப்படியோ தயங்கித் தயங்கி தன் காதலை சிவசக்தியிடம் உரைத்துவிட்டான். சிவசக்தி அதிர்ச்சியடைந்தவளாய் தான் நட்போடுதான் பழகியதாகப் புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். போதாக் குறைக்கு விஜய் செய்த உதவிகளும் அவன் மீது வளர்ந்துவிட்ட நட்பினாலும் அவனைக் காயப்படுத்த மனமின்றிப் பொறுமையாக எடுத்துரைத்தாள்.

அவளின் வார்த்தைகள் ஒன்றும் எடுபடவில்லை. சரி, இவனைத் தவிர்த்து விட்டு கீழே சென்றுவிடலாம் என நினைத்தால் கீழே சக்தியை நேரே சந்திக்க நேரிடும். அவனை எப்படி எதிர்கொள்வதென்ற கவலை வேறு அவளை வருத்திக் கொண்டிருந்தது.

விஜயும் புரிந்து கொள்ளாமல் விடாப்பிடியாய் அவள் சங்கடத்தை அதிகரிக்கும் விதமாய்,

“ஐ லவ் யூ சக்தி... ப்ளீஸ்... என் காதலை புரிஞ்சிக்கோ?!” என்று கெஞ்சியபடி நிற்க, சக்திசெல்வன் அந்த வார்த்தைகளைக் கேட்டபடி வந்து சேர்ந்தான்.

அவனை அவர்கள் இருவரும் கவனிக்கத் தவறிய நிலையில், சிவசக்தி காதலோடு மீண்டும் சக்திசெல்வனைச் சந்தித்த இன்பத்தை அனுபவிக்க விடாமல் விஜய் இடையூறாய் நிற்கிறான்.

Quote

Super ma 

You cannot copy content