You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Episode 3

Quote

3

அவன் யாரோ?

சிவசக்தி. சிவமும் சக்தியாய் அவள் பெயருக்கு ஏற்றார் போல் பெண்மையின் குணங்களும், வசீகரமும் அதன் கூடவே ஒரு ஆணுக்குரித்தான அசட்டுத் தைரியமும் அவளிடம் கலந்தே இருந்தது.

சிவசக்தியின் சிறிய குடும்பத்தில் அவளின் தாய் மகேஷ்வரி மற்றும் ஒரே சகோதரன் அருண். இன்றைக்கு அவர்கள் இருவருமே இப்பூவுலகில் இல்லை என்பது அவளின் துரதிஷ்டம்தான்.

அவளின் தாய் மகேஷ்வரி காதலித்து மணந்த கணவனைப் பிரிந்து பெரும் போராட்டத்தோடு சிவசக்தியையும் அருணையும் வளர்த்தாள். அந்தப் போராட்டத்தில் தன்னையும் தொலைத்துவிடாமல் பிரபல வழிகறிஞராகத் தனக்கென்ற ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டாள்.

அதுமட்டுமின்றிக் குடும்ப வாழ்கையில் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வந்தாள். அத்தகைய துணையில்லா பெண்களைச் சுயமரியாதையோடும் பாதுகாப்போடும் வாழ வைக்கும் இல்லத்தின் பெயர் சிவசக்தி இல்லம்.

இப்படி வாழ்க்கையைத் தொலைத்து சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளைக் கேட்டு வளர்ந்த நம் கதைநாயகிக்கு பொதுவாகவே காதல் மற்றும் கல்யாணம் மீது அவநம்பிக்கை வளர்ந்து வந்தது.

அவளின் பதினாறு வயதில் தாய் மகேஷ்வரி உடல் நலம் குன்றி மரணித்தாள். இதனால் சிவசக்தி நிலைகுலைந்து போக, அருண் தன் தங்கைக்குத் துணை நின்று அவள் வாழ்க்கையை வழிநடத்திச் சென்றான். அருண் அவனுடைய கல்லூரி நாட்களில் திவ்யாவை காதலித்தான்.

திவ்யாவின் குடும்பத்தில் எழுந்த பெரும் எதிர்ப்பை மீறி திருமணமும் முடித்தான். ஆனால் துரதிஷ்டவசமாய் ஒரு விபத்தின் காரணமாய் அவனும் இன்று இல்லாமல் போய்விட்டான். அந்தச் சமயத்தில் திவ்யா கருவுற்றிருந்ததினால் பெங்களூரில் இருக்கும் அவள் பிறந்துவிட்டார் அவளை அழைத்துச் சென்றுவிட்டனர்.

இன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளால் துணையற்றுத் தனிமையில் நின்ற சிவசக்தி தன் தாய் ஏற்படுத்திய சிவசக்தி இல்லத்தில் ஆதரவற்ற பெண்களைத் தம் உறவுகளாகவே மாற்றிக் கொண்டு குடிபெயர்ந்து விட்டாள்.

இப்போதைக்குச் சிவசக்தி ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கனவு ஐ. ஏ. எஸ் படிக்க வேண்டுமென்பதுதான். அந்த எண்ணம் அவளின் தாய் மகேஷ்வரியின் மூலமாகச் சிறு வயதில் விதைக்கப்பட்டது. அதை நிறைவேற்றுவதே சிவசக்தியின் இன்றுவரையிலான இலட்சியம்.

இப்படியான அவள் வாழ்க்கை பாதையில் தன் அண்ணியின் மகள் தீக்ஷாவை பார்க்கும் ஆசையில் பெங்களூர் புறப்பட்டு வந்து இப்படி ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டாள்.

சிவசக்தியை இந்தச் சூழ்நிலையில் திவ்யா ரொம்பவும் நன்றாகவே கவனித்துக் கொண்டாள். ஆதலால் அவளின் உடல் நலம் ஒரளவு முன்னேற்றம் அடைந்திருந்தது. அருண் திவ்யாவை மணமுடித்து வந்த நாளிலிருந்தே நாத்தனாரும் அண்ணியும் நல்ல தோழிகளாகவே பழகி வந்தனர்.

மருத்துவமனை வாசனையும் அதன் சூழலும் சிவசக்திக்கு மனச்சோர்வை ஏற்படுத்த அவள் திவ்யாவிடம்,

“எனக்குத் தீக்ஷாவை பார்க்கனும்... எப்ப அண்ணி வீட்டுக்குப் போகலாம்?!” என்று கேட்டாள்.

“இன்னைக்கு ஒரு நாள்தான்... நாளைக்கு டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லி இருக்காரு” என்றாள் திவ்யா.

“ஒடுகிற டிரெயின்ல இருந்து குதிச்சிட்டு... உடனே வீட்டுக்கு போனோமாமே?” என்று திவ்யாவின் தம்பி ஜெகதீஷ் கேலியான புன்னகையோடு உரைத்தான்.

“பாருங்க அண்ணி... நானே குதிச்ச மாதிரி பேசிறாரு உங்க தம்பி” என்று திவ்யாவிடம் சக்தி சொல்ல,

“வாய மூடு ஜெகி” என்று தன் தம்பியை திவ்யா கண்டித்தாள்.

“உங்களுக்குத் தூக்கத்தில நடக்கிற வியாதி இருக்கோ?! !” என்று மீண்டும் சக்தியை விடாமல் கேலி செய்தான் ஜெகதீஷ்.

“ஆமாங்க சார்... எனக்குத் தூக்கத்தில நடக்கிற வியாதி இருக்கு... அதனாலதான் டிரயின்ல இருந்து நடந்து வந்து வெளியே குதிச்சிட்டேன்... போதுமா?!” என்று சக்தி ஜெகதீஷை கோபமாய் முறைத்தபடி உரைத்தாள்.

இவர்களின் பேச்சிற்கிடையில் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் தயங்கியபடி அந்த அறைக்குள் நுழைந்தாள். பின்னோடு வர்ஷினியும் வந்தாள்.

சக்தி அவர்களை அடையாளம் கண்டு கொண்டுவிட்டு,

“ஹாய் வர்ஷு” என்று முகத்தில் புன்னகையோடு வரவேற்றாள்.

வர்ஷினி படுக்கையிலிருந்த சக்தியை நெருங்கி, “ஐம் வெரி சாரி” என்றாள்.

“எதுக்குச் சாரி?” என்று சக்தி கேட்க,

வர்ஷினியின் தாய் முன்னாடி வந்து, “தப்பு எல்லாம் என்மேலதான் நான் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது... உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே எனக்குத் தெரியல... நீங்க மட்டும் இல்லைன்னா... வர்ஷினிக்கு... யோசிச்சி பார்க்கவே பயமா இருக்கு... ரொம்பத் தேங்க்ஸ்” என்றாள் கண்ணில் நீர் பெருக!

“பரவாயில்ல... விடுங்க” என்று இயல்பாக உரைத்து சக்தி அந்தப் பெண்ணின் வேதனையை ஆற்றினாள்.

“உங்களுக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா ?!” என்று அந்தப் பெண் தன் கைகுட்டையால் மீண்டும் கண்களைத் துடைத்தாள்.

சிவசக்தி இயல்பாகப் புன்னகையித்தபடி,

“நத்திங்... நீங்க இவ்வளவு பீஃல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை... ஐம் ஆல்ரைட்...” என்றாள்.

“நீங்க இன்னைக்கு நல்லா இருக்கீங்கன்னா... உங்க கூட வந்தவர்தான் காரணம்... நீங்க விழுந்திட்டீங்கன்னு நான் கத்தினதும் முதல் ஆளா ஓடிவந்து... டிரெயினை நிறுத்தி... உங்களைக் காப்பாத்தி... பஃஸ்ட் எயிட் பண்ணி...” என்று அந்தப் பெண் சொல்லிக் கொண்டிருக்க சக்தி உடனே,

“ஒரு நிமிஷம்... யாரு என்னைக் காப்பாத்தினது?” என்று சக்தி ஆர்வத்தோடு கேட்டாள்.

“உங்க ப்ஃரண்டுன்னு சொன்னாரு... அவர் உங்க கூட வந்தவர் இல்லையா?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

சிவசக்தி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனமாய் யோசிக்க இப்போது வர்ஷினி முன்வந்து, ”அதான் ரோஸ் கொடுக்கச் சொன்ன அங்கிள்” என்றாள்.

வர்ஷினி சொன்னதைக் கேட்டு சிவசக்தியின் இதழ்கள் விரிந்தன. அம்மாவும் மகளும் சக்தியிடம் இன்னும் சில மணிநேரம் நன்றி உணர்வுகளைப் பரிமாறிவிட்டுப், பின் மனம் நிம்மதி பெற அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் செல்வதற்கு முன்பு சக்தி இரயிலில் விட்ட அவளின் பையையும் கைப்பேசியையும் கொடுத்தனர்.

அந்தச் சமயத்தில் சிவசக்தி வர்ஷினியின் தாயிடம்,

“தப்பா எடுத்தாக்காதீங்க... கணவன் மனைவியா நீங்க எப்படி வேணா இருக்கலாம்... அது உங்க இஷ்டம்... ஆனா அம்மா அப்பாங்குற பொறுப்புல நீங்க எப்பவுமே அலட்சியமா இருக்க கூடாது... அதனால வருகிற எதிர்வினை உங்களை ரொம்ப மோசமா பாதிக்கும்... புரிஞ்சிக்கோங்க” என்று சொல்ல அந்தப் பெண் சிவசக்தி சொன்னதை புரிந்து தலையசைத்து விட்டு நகர்ந்தாள்.

சிவசக்தியின் இந்த முதிர்ச்சி பல பெண்களின் வாழ்க்கை பாடத்திலிருந்து அவள் கற்றுக்கொண்டதே.

இத்தனை நேரம் சிவசக்தியை கேலி செய்து கொண்டிருந்த ஜெகதீஷுக்கும் நடந்தவற்றைப் பார்த்து அவள் மீது நன்மதிப்பு ஏற்பட்டது.

அவர்கள் சென்ற பின் குழப்பத்திலிருந்த திவ்யா சிவசக்தியிடம்,

“உன்னை காப்பாத்தின அந்த ப்ஃரண்டு யாரு?” என்று கேட்டாள்.

“எனக்குத் தெரியாது அண்ணி” என்று அலட்சியமாய்த் தலையாட்டினாள் சிவசக்தி.

“உன் போன், பேக் எல்லாம் இவங்க கிட்ட இருந்திருக்கு... அப்புறம் உன் பேரு... எங்க போன் நம்பர் எல்லாம்... உன்னை அட்மிட் பண்ணவருக்கு எப்படித் தெரியும்... எனக்கு ஒண்ணும் புரியல சக்தி...” என்றாள் திவ்யா.

சக்தி அவள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த தயங்கியபடி ஜெகதீஷை பார்க்க, உடனே திவ்யா அவனைப் பார்த்து சிறிது நேரம் வெளியே இருக்கும்படி சமிக்ஞை செய்தாள்.

ஜெகதீஷ் வெளியேறிய பின்,

“சரி சக்தி... இப்போ சொல்லு... உன்னை அட்மிட் பண்ணது யார்... உன் காதலனா... என் கிட்ட சொல்றதுல உனக்கு என்னடி தயக்கம்?” என்று திவ்யா சிரித்தபடி கேட்டாள்.

“அய்யோ அண்ணி... காதலும் இல்ல ஒரு மண்ணும் இல்லை... எனக்கு அவன் யாரு... என்னன்னு ஒண்ணும் தெரியாது... ஆனா அவனுக்கு என்னை நல்லா தெரியும்...” என்று சொல்லி சக்தி சலிப்புற்றாள்.

“என்னடி... புதிர் போடற?!” என்று திவ்யா புரியாமல் கேட்க சிவசக்தி கொஞ்சம் நேரம் யோசித்து விட்டு அவன் தன் வாழ்வில் வந்த நாளில் இருந்த நடந்தவற்றை எல்லாம் சுருக்கமாகத் திவ்யாவிடம் சொல்லி முடித்தாள்.

“என்ன சக்தி... இவ்வளவு விஷயம் நடந்திருக்கு... ஆனா இதைப் பத்தி நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல?!” என்று திவ்யா அதிர்ச்சியோடு கேட்டாள்.

“நீங்களே அண்ணனை இழந்து வருத்தத்தில் இருந்தீங்க... போதாக் குறைக்குக் கர்ப்பமாக வேற இருந்தீங்க... அந்தச் சமயத்தில் எப்படி உங்ககிட்ட நான் சொல்லுவேன்...” என்றாள்.

திவ்யா கண்கள் கலங்கியபடி, “உங்க அண்ணன் இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்க விட்டிருப்பாரா சக்தி?!” மனதில் வேதனைப் பொங்க உரைத்தாள்.

சிவசக்தி தன் அண்ணியின் கரங்களை ஆதரவாய் பற்றி,

“ப்ளீஸ்... வருத்தப்படாதீங்க அண்ணி... முடிஞ்ச விஷயத்தைப் பத்தி இப்ப பேசி என்னவாகப் போகுது” என்று சமாதானம் செய்தாள்.

“சரி அதை விடு... இவ்வளவு உதவி செஞ்சிருக்காரு... அவர் முகத்தை நீ ஒரே ஒரு தடவை கூடப் பார்த்ததே இல்லையா...” என்று திவ்யா சந்தேகமாய் வினவ,

“எங்கே... அந்தக் கேரக்டர் என் கண் முன்னாடி வந்ததானே... இந்த ஆக்ஸ்டிடென்டிலதான் அவன் குரலையே முதல் தடவையா நான் கேட்டேன்... பட் என் பக்கத்தில இருந்தும் அவனை நான் பார்க்க முடியல... என் நேரம்” என்று சக்தி வெறுப்போடும் சலிப்போடும் சொல்ல திவ்யா சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்.

பின்னர் மீண்டும் திவ்யா சக்தியிடம், “நீ அவரைக் காதலிக்கிறியா சக்தி?” என்று குழப்பத்தோடு கேட்டாள். சக்தி கொஞ்சம் சூட்சமமாய்ச் சிரித்தபடி, “இந்தக் கேள்வியை அவன் நேரில வந்து கேட்டா நான் அவனைக் காதலிக்கனுமா வேணாமான்னு முடிவெடுப்பேன்... முகமே தெரியாதவன் மீது காதலில் விழ இதென்ன சினிமாவா?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவு தட்டப்பட, திவ்யா உள்ளே வரும்படி அழைத்தாள்.

அப்போது முகம் தெரியாத ஆடவன் உள்ளே நுழைந்தான். அந்த இளைஞன் ஒரு அழகான சிவப்பு நிற ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தோடு நிற்க சிவசக்தி சந்தேகமாய் அவனாக இருக்குமோ என்று விழிகள் ஸ்தம்பிக்கப் பார்த்தாள்.

“எங்க பாஸ்... இந்தப் பூங்கொத்தை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாரு மேடம்” என்று அந்த இளைஞன் சொல்லியபடி அந்த அழகிய மலர்களைச் சிவசக்தியிடம் நீட்டினான்.

சக்தி அந்தப் பூவை பார்த்துப் பெருமூச்சுவிட்டபடி,

“யார் உங்க பாஸ்... எதுக்கு இந்தப் பொக்கே... ப்ளீஸ் டேக் இட் அவே” என்று எரிச்சல் மிகுதியால் உரைக்கஅவன் இயல்பான புன்னகையோடு,

“கோபப்படாதீங்க மேடம்... நீங்க என்ன கேட்கனும்னாலும் எங்க பாஸ்கிட்டேயே கேளுங்க... அவரோட கான்டெக்ட் நம்பர் இதுல இருக்கு” என்று அந்த நபர் சொல்ல, சக்தி அந்த மலர்களை ஆர்வமாய் வாங்கினாள்.

அதிலிருந்த அட்டையில் 'கெட் வெல் சூன் சக்தி' என்று இருந்தது. அதன் இன்னொரு புறத்தில் ஒரு கைப்பேசி எண் அச்சிடப்பட்டிருந்தது.

அதற்குள் அந்த நபர் தன் வேலை முடிந்ததென வெளியேற,

“ஹெலோ மிஸ்டர்” என்று சக்தி குரல் கொடுத்து அவனைத் தடுத்தாள்.

அவன் அவள் புறம் திரும்ப,

“உங்க பாஸ் பேர் என்ன?!” என்று கேட்டாள்.

அவன் லேசாக நகைத்துவிட்டு,

“சாரி மேடம்... இந்தக் கேள்வியை நீங்க அவரையே கால் பண்ணி கேட்டுக்கோங்க” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

திவ்யாவுக்கு நடந்த நிகழ்வுகள் எல்லாம் திகைப்பை ஏற்படுத்தியது. ஆனால் சக்திக்கோ இவை எல்லாம் பழகிப்போயிருந்தது. இருப்பினும் அந்தப் பூங்கொத்தை பார்க்க பார்க்க அவளின் முகம் கோபத்தில் சிவந்தது.

எங்கேயோ ஒருவன் கண்களுக்கு மறைவாய் இருந்து கொண்டு தன்னைக் கண்காணிக்கிறான் என்பதே சிவசக்திக்கு வெறுப்பை உண்டாக்க, அவன் யாராக இருக்கும் என்று யூகிக்கக் கூட முடியாமல் அவள் ரொம்பவும் தவிப்புற்றாள்.

Quote

Super ma 

You cannot copy content