You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Srushti - Episode 9

Quote

9

தியாவின் வழக்கறிஞர்அவளை அவரின் அலுவலகத்திற்கு வர சொல்லியிருந்தார். அவளும் அவரை நேரில் சென்று சந்திக்க,

“நம்ம ஃபைல் பண்ண கேஸுக்கு சிருஷ்டில இருந்து பதில் அனுப்பி இருக்காங்க” என்றவர் விவரத்தைத் தெரிவிக்க,

“என்ன அனுப்பி இருக்காங்க” என்று கேட்டாள் தியா.

“அவங்க உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்காக வருத்தபடுறாங்களாம்… ஸோ” என்று அவர் மேலே படிக்காமல் தயக்கத்துடன் நிறுத்த,

“ஸோ” என்றபடி தியாவும் அவரைக் கூர்மையாகப் பார்த்திருந்தாள்.

“அவங்க உங்களுக்கு ஒரு பெரிய தொகையை நஷ்டஈடு குடுக்கிறதா சொல்லி இருக்காங்க” என்றதும் தியாவின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.

“நான்சென்ஸ்… என் பொண்ணோட இறப்புக்கு அவன் நஷ்டஈடு கொடுக்கிறானாமா?” என்றவள் கடுப்பாகக் கத்த,

“டென்ஷனாகாம கொஞ்சம் பொறுமையா யோசிங்க தியா” என்று அவர் அறிவுறுத்தினார்.

“இதுல பொறுமையா யோசிக்க என்ன இருக்கு… அவன் முதல என் ஹஸ்பென்ட் வைச்சு என்னை எமோஷ்னலா மிரட்டிப் பார்த்தான்… நான் அதுக்குப் படியலன்னதும் இப்போ பணம் தர்றேன்னு சொல்றானா… நோ வே… நான் இதுக்கெல்லாம் இறங்கி வர்றதா இல்ல… இந்த கேஸை நான் நடத்தியே தீருவேன்” என்றவள் உறுதியாகச் சொல்ல,

“இட்ஸ் எ குட்டீல் தியா… நீங்க தேவையில்லாம எமோஷ்னலா யோசிச்சு வேஸ்ட் பண்ணிடாதீங்க” என்றவர் சொன்னதில் அவள் எரிச்சலுடன்,

“எனக்கு எந்த டீலும் வேண்டாம்… எனக்கு என் மகளோட இழுப்புக்கான பதில் வேணும்” என்றாள்.

“கோர்ட்ல இந்த கேஸ் நிற்காது தியா… சிருஷ்டியை நம்ம ஜெய்க்கிறது ரொம்ப கஷ்டம்… நம்ம இந்த டீலை ஒத்துக்கிறதுதான் எல்லோருக்கும் நல்லது”

“என்ன சொல்றீங்க அருண்… அன்னைக்கு அவ்வளவு நம்பிக்கையா பேசுனீங்க”

“நான் சொன்னது சொன்னதுதான்… இப்பவும் நாம தோத்து போயிடலயே… ஒரு நல்ல டீலோடதானே முடிச்சுக்கப் போறோம்”

“டேம் இட்… நான் ஒன்னும் டீல்க்காக இந்த கேஸை போடல” என்றவள் கோபத்தில் பொங்கிவிட்டாள்.

“எமோஷன்லா யோசிக்காம ப்ரெக்ட்டிக்கலா யோசி தியா”

“நான் தீர்மானமா இருக்கேன்… இந்த கேஸ் நான் கோர்ட்டுக்கு கொண்டு போகதான் போறேன்”

“தென் சாரி தியா… நான் இந்த கேஸ்ல கண்டினியு பண்றதா இல்ல” என்றவர் சொல்ல அவள் அதிர்ச்சியுடன்,

“அப்போ… நீங்க இந்த டீலுக்காகதான் கேஸ் ஃபைல் பண்ணீங்களா அருண்” என்றாள்.

“பின்ன… கோர்ட் கேஸ்னு போனா நாம எல்லாம் சிருஷ்டி முன்னாடி நிற்க முடியுமா என்ன?”

அவள் உள்ளத்திலிருந்த கொதிப்பைக்காட்டிக் கொள்ளாமல், “ஃபைன்… நான் வேற வக்கீலை வைச்சு இந்த கேஸை நடத்திக்கிறேன்” என்று தியா எழுந்து கொள்ள,

“நீங்க எப்பேர்ப்பட்ட வக்கீலை வைச்சு நடத்தினாலும் சிருஷ்டியை எல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது” என்றவர் பேசியதை காதில் போட்டு கொள்ளாமல் அவள் அலுவலகத்தைவிட்டு வெளியேறினாள். 

அதன் பிறகு அவள் நிறைய வழிக்கறிஞர்களைச் சென்று பார்த்துப் பேசினாள். யாருமே அவள் வழக்கை ஏற்று நடத்த முன்வரவில்லை. அதுவும் அவள் சென்ற அலுவலகத்தில் எல்லாம் சிருஷ்டியின் ரோபோக்கள் ஒன்று வேலைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதுதான் அவளின் உச்சபட்ச அதிர்ச்சி.

ரோபோட் மனிதனுக்குக் கீழாக வேலை செய்வது போன்று தெரிவதெல்லாம் வெறும் மாயைதான். நாம் அதனைப் பயன்படுத்த தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே நாம் அதன் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுகிறோம். ஆனால் இதை சொன்னால் யாருக்கும் புரிவதில்லை.

தியாவின் நம்பிக்கைத் தளர்ந்துவிட்டது. நட்டநடுகாட்டில் தன்னந்தனியே சிக்கிக் கொண்டது போல உணர்ந்தாள். யாராவது துணைக்கு வர மாட்டார்களா? என்று தவித்தாள்.

ஆனால் அப்போதைய தியாவின் மனநிலையும் வேதனையும் புரியாமல், “நாம முயுட்சுவல் கன்ஸன்ட்ல பிரிஞ்சுறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன் தியா… அதனால் நீ சைன் போட்டு தந்துட்டா” என்று கரண் இழுக்க,

“அப்போ நீ டெசிஷன் எடுத்துட்ட… என்னைப் பிரிய போற அப்படிதானே” என்றவள்,

கோபமாக அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு, “அவ்வளவுதானா கரண்… நம்ம உறவுக்கு என்ட்கார்ட் போட்டுட்டியா” அவள் ஏக்க பார்வையுடன் கேட்டாள்.

“இப்பவும் முடிவு உன்கிட்டதான் இருக்கு தியா… நீ சிருஷ்டி மேல  கேஸ் போட மாட்டேன்னு சொன்னா” என்றவன் நிறுத்திய நொடி அவன் சட்டையின் மீதிருந்த தன் கரத்தை விலக்கிக் கொண்டு பின் வாங்கிவிட்டாள்.

கரண் மேலும், “புரிஞ்சுக்கோ தியா… நாம இனி இருக்க காலத்தையாச்சும் பீஸ் ஃபுல்லா வாழ்வோம்… இந்த கேஸ் இதெல்லாம் வேண்டாம்… இங்க இருந்தா உனக்கு லித்துவோட ஞாபகம் வந்துட்டே இருக்கும்னு சொல்லு… நாம வேணா வேற ஊருக்கு ஷிப்ட் ஆகிட முடியுமான்னு பார்க்கலாம்” என,

“ஸ்டாப் இட் கரண்… என் பொண்ணோட நினைவுகளை என் மூளையை விட்டு மறக்கடிக்க நான் என்ன மிஷினாடா? நினைச்சதும் என் மூளைக்குள்ள இருக்கிற மெமரீஸ் எல்லாம் அழிக்க”

“இன்னைக்கு அதுவும் முடியும் தியா… அமெரிக்கால எல்லாம் நம்ம மூளைக்குள்ள இருக்க தேவையில்லாத மெமரீஸ் அழிக்கவும் ட்ரீட்மெண்ட் வந்திருச்சு… எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல… வேணா நாம அந்த ட்ரீட்மெண்டை கூட எடுத்துட்டு வரலாம்” என்றவனைச் சீற்றத்துடன் பார்த்தவள்,

“ஸ்டாப் இட் கரண்… என் பொண்ணோட மெமரீஸ் ஒன்னும் தேவையில்லாதது இல்ல… அதுல சோகம் மட்டும் இல்ல… அதுல எவ்வளவோ நெகிழ்ச்சியான சந்தோஷமான தருணங்கள் இருக்கு… அவளோட நினைவுகளில் நம்ம காதல் நினைவுகளும் இருக்கு கரண்… அதெப்படி கரண் அழிக்க முடியும்.

அவளோட முதல் பிறந்த நாளை நாம எப்படி எல்லாம் கொண்டாடினோம்… மறந்துட்டியா… அவ குழந்தைல செஞ்ச சின்ன சின்ன விஷயத்தைக் கூட நாம ரெகார்ட் பண்ணி வைச்சு இருக்கோமே.

அதெல்லாம் ஒரு டெலிட் ஆப்ஷன்ல அழிச்சிட சொல்றியாடா” என்று உணர்ச்சிப் பொங்கக் கேட்டாள்.

“அப்போ உனக்கு உன் பொண்ணுதான்… நான் உனக்கு முக்கியமில்லை… என் உணர்வுகளும் தவிப்பும் உனக்கு முக்கியமில்லை”

“அவ நம்ம பொண்ணு கரண்… உன் மூலமாதான் கரண் அவ… அவளோட நினைவுகளை நான் அந்தளவு நேசிக்கிறேன்னா… உன்னை நான் எந்தளவு நேசிப்பன்னு யோசிச்சு பாரு கரண்” என்று தியா எப்படி எப்படியோ கரணிடம் தன் உணர்வுகளை விவரித்துவிட்டாள்.

ஆனால் கரண் தீர்மானமாக இருந்தான். சிருஷ்டியின் மீது அவள் வழக்குத் தொடுப்பதாக இருந்தால் அவர்களின் விவாகரத்தும் உறுதி செய்யப்படும் என்று. அதற்கு மேல் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தியா அந்த டிஜிட்டல் பத்திரத்தில் தன் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தவிட்டாள். அந்த ஒரு கையெழுத்தில் அவர்கள் உறவு முறிந்துவிட்டது. அவர்களின் சொத்துக்கள் அனைத்தும்  இருவரின் சாம்பாத்யம்தான். ஆதலால் அதனை இருவரும் சரிசமமாகப் பிரித்து கொள்வதாக முடிவெடுத்திருந்தனர்.

தியா அவனிடம், “இந்த வீட்டோட என்னோட ஷேரை நீ எடுத்துக்கிட்டு என் பங்கை கார்ட்ல அனுப்பிடு கரண்” என்றாள்.

“ஏன் தியா?”

“நான் கேஸ் நடத்த எனக்கு பணம் வேணும் கரண்… நான் ஒரு பெரிய வக்கீலா பார்த்து பேசலாம்னு இருக்கேன்”

“இதுக்குதான் தியா… நான் வேண்டாம்னு சொன்னேன்”

“இனிமே என் டெசிஷன்ல தலையீட உனக்கு எந்த உரிமையும் இல்ல” என்றவள் சொல்லிவிட்டு, “எனக்கு ஒரு வாரத்தில ட்ரேன்ஸ்ஃபர் பண்ணிக் கொடுத்துடு” என்று கேட்டாள்.

கரண் அதிர்ச்சியுடன், “எப்படி  தியா… ஒன் வீக்ல” என்று வினவ,

“பதினைஞ்சு வருஷ உறவு இவ்வளவு சீக்கிரம் ஒன்னும் இல்லாம தூக்கிப் போட முடிஞ்சுது இல்ல… அப்புறம் இதுக்கு மட்டும் ஏன் யோசிக்கிற” என்றதும் அவன் சீற்றமானான்.

“தியா… நீ ஓவரா பேசிட்டு இருக்க” அவன் எகிற,

“நான் என்னோட பங்கை கேட்டேன்” என்றவள் அலட்சியமாக உரைத்தாள். இருவருக்கு இடையிலான பேச்சு வளர்ந்து வாக்குவாதமாக மாறியது.

“அப்படினா நான் பணத்தை அனுப்பின அடுத்த நிமிஷம் நீ இங்கே இருக்க கூடாது” என்றவன் கோபத்தில் வார்த்தையை விட.

“நீ பணம் அனுப்புற வரைக்கும் நான் வெயிட் பண்ண மாட்டேன்… எனக்கு வீடு கிடைச்சதும் நான் இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன்… எனக்கு உரிமை இல்லாத இடத்துல நான் இருக்க விருப்பப்படல” என்றவள் சொல்லியபோதுதான் கரணுக்கு தான் பேசிய வார்த்தை தவறென்று உரைத்தது.

அடுத்த வாரத்திலேயே தியா வீடு பார்த்து குடி பெயர தயாராகத் தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தவள்,

“நாளைக்கு நான் ஷிப்ட் ஆகப் போறேன்… உனக்கு தெரியும்தானே” என்று கேட்டவளின் முகத்தை கரண் வலியுடன் ஏறிட்டான்.

“லித்துவோட திங்க்ஸ் எல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன் கரண்… அதுல உனக்கு ஒன்னும் ஆட்சபனை இல்லைதானே” என்று கேட்கவும் அவன் சரியென்று தலையசைத்தான்.

அவனின் அந்தப் பார்வை மௌனம் எல்லாம் அவள் மனதைத் தாக்க, “கரண் என்னாச்சு?” என்றவள் கேட்ட கணம் அவன் குரல் தழுதழுக்க, “தியா” என்றபடி அவளை இறுக அணைத்துக் கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டான்.

மேலும் அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு அவள் இதழ்களில் அவன் இதழ்களை இணைக்க அந்த முத்தத்தில் தியா கரைந்து போனாள். கரணின் அணைப்பில் இறுக்கம் கூடியது. தியா அவனைத் தடுக்கவில்லை.

வெகு நாட்களுக்குப் பிறகான அந்த நெருக்கமும் அணைப்பும் அவளுக்குமே தேவையாக இருந்தது. இத்தனை வருட அவர்கள் காதலின் நீட்சியும் பிரிவின் வலியும் இருவரின் உணர்வுகளையும் பொங்கிப் பெருக செய்ததில் காதல் காமத்தின் எல்லையைத் தொட்டிருந்தது.

அவர்கள் உறவு உணர்வுப்பூர்வமாகப் பயணித்ததில் அந்தச் சில நிமிடங்கள் தங்களுக்குள் இருந்த மனஸ்தாபங்களை மறந்து இருவருமே அந்த உணர்வில் திளைக்க, தியாவிற்கு கரணைப் பிரியும் எண்ணம் தளர்ந்து போனது.

அதுவும் அவள் மனதார அவர்களின் விவாகரத்திற்கு சம்மதிக்கவே இல்லை. அவனுடைய உறவையும் துணையையும் அவள் இப்போதும் விரும்பினாள். அவன் போக வேண்டாமென்று ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிடமாட்டானா என்று மனதளவில் ஏங்கினாள்.

ஆனால் அவளின் ஏக்கத்தை அவன் சிதறடிக்கும் விதமாக, “தாங்க்ஸ் பார் எவரிதிங் தியா… ஐ மிஸ் யூ… நீ எப்ப வேணா இங்கே வரலாம்… உனக்கு என்ன தேவையா இருந்தாலும் தயங்காம என்கிட்ட கேட்கலாம்… ஐம் ஆல்வேஸ் தேர் பார் யூ” என்றபடி அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்தான்.

தியாவிற்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அன்பு காதல் காமம் எல்லாம் தேவைக்காக மட்டும்தானா? அதுவே வாழ்க்கை என்று எண்ணியதுதான் தன்னுடைய குற்றமா?

உண்மையிலேயே தான் இக்காலகட்டத்திற்குத் தகுதியற்றவளா?

எல்லோரும் இயந்திரத்தனமாக மாறிக் கொண்டிருக்கையில் தான் மட்டும் ஏன் இப்படி உணர்வுகளைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறோம்? இப்படி பலநூறு கேள்விகள் தியா மனதைக் குடைந்து எடுக்க, அவள் அதற்கான விடையைத் தேடிக் கொண்டிருந்தாள்.

Rathi has reacted to this post.
Rathi

You cannot copy content