You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 12

Quote

12

எதிர்பார்ப்புகளே வேண்டாம்! சில மணிநேரப் பேச்சு! சிரிப்பு! நட்பு! என்றுதான் துவங்கியது. இது போதும்... இதுவே போதும் என்றுதான் மனம் சொன்னது. மூளை இதற்கு மேல் போகாதே என்று எச்சரித்தது.

இருந்தும் அவன் பக்கமாகச் சாய்கிறது மனம். உணர்வுகள் தூண்டப்படுகின்றன. திரும்பும் திசையெல்லாம் அவனை தேடுகிறது அவள் கண்கள்.

அவன் எப்போது பேசுவான் என்று காத்திருக்கிறது உள்ளம். இது போன்ற தவிப்பை இதுவரையில் யாரிடமும் அவள் உணர்ந்ததில்லை. யாருக்காகவும் இப்படி எல்லாம் தவித்து ஏங்கியதும் இல்லை.

பார்க்கும் சின்னச்சின்ன அழகான விஷயங்களை அவளுடைய கையளவிலான நோட்டு புத்தகத்தில் வரைந்து வைப்பது அவளுடைய வழக்கம். அவளைப் பொறுத்து வரையில் அது அவளது நினைவுகளின் கிறுக்கல்கள்.

ஆனால் சமீபமாக அவளுடைய கையளவு புத்தகம் முழுக்க கருப்பும் வெள்ளையாக அவனும் அந்த மாடித் தோட்டத்து வீடும் மட்டுமே நிறைந்திருந்தது.

ஆரம்ப பக்கங்களில் அந்த வீட்டை மட்டும்தான் அவள் வரைந்திருந்தாள். பின்னர் அந்தத் தோட்டத்திற்கு இடையே ஓர் ஆடவன் அழுது கொண்டிருப்பது போல,  அவன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல, தோளில் பையை மாட்டிக் கொண்டு  வீடு நோக்கி நடப்பது போல, பூக்களை ரசிப்பது போல...

இவை யாவுமே அவள் பார்த்து கடந்த காட்சிகள்.

மேசை மீது பென்சிலுடன் மூடப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் பறந்த போதுதான் அவளே இதை கவனித்தாள்.

திருப்பிய எல்லாப் பக்கங்களிலும் அவன் இருந்தான். அப்போதுதான் அவனும் ஒரு போதையாக அவளுக்கு மாறிவிட்டது உரைத்தது. ஆனால் இம்முறை அது உயிருள்ள மனிதன் மீதாகத் தோன்றியுள்ள போதை.

இந்தப் போதைதான் காதலா?

இப்படியாக யோசித்து அவள் குழம்பிக் கொண்டிருந்த நிலையில்தான் ஜீவா எப்போதும் போல அவளுக்கு, “ஹாய்” என்று குறுந்தகவல் அனுப்பினான்.

லேசான தயக்கம் எழுந்த போதும் அவள், “ஹாய்” என்று அனுப்ப, அவன் தொடர்ந்து தன் பள்ளியில் நிகழ்ந்த விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி எல்லாம் விவரித்துக் கொண்டிருந்தான்.

அவன் சொன்ன அனைத்திற்கும் வெறும் ‘உம்’ மட்டும் போட்டுக் கொண்டு வந்தாள். கருத்து எதுவும் சொல்லவில்லை. அவளாக எந்த உரையாடலையும் துவங்கவும் இல்லை.

அதனைக் கவனித்த ஜீவா, “என்ன... ஏதாவது பிரச்னையா?” என்று விசாரிக்க,

“அப்படி எல்லாம் எதுவும் இல்லையே” என்றாள்.

“இல்ல நீங்க எதுவுமே பேச மாட்டுறீங்க... ஒரு வேளை பிஸியா இருக்கீங்கனா அப்புறம் சாட் பண்ணலாம்” என்றவன் சொல்ல,

“பிஸி எல்லாம் இல்ல ஜீவா” என்றாள்.

“பேசுற மூட் இல்லயோ?”

“அதுவும் இல்ல” என்றவள் நிறுத்தி, "எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”  என்று நிறுத்த,

“அதுக்கு என்ன... கேளுங்க” என்றான்.

நிறையத் தயங்கிவிட்டுப் பின், “உங்களுக்கு லவ்... இல்ல க்ரஷ் அந்த மாதிரி யாராவது இருக்காங்களா?” என்று கேட்டுவிட, அவன் அழுவது போன்ற எமொஜியை அனுப்பினான்.

“ஏன் என்னாச்சு?”

“என் லவ் க்ரஷ் எல்லோருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு... சிங்கிள் நாட் மிங்கிள்னு சுத்துறதுதான் என் விதி போல... ஒன்னும் பண்ண முடியாது” என்று அவன் விரக்தியாக பதில் போட,

“ஏன் அப்படி சொல்றீங்க?” என்று அவள் கேட்டாள்.

“அது அப்படிதான்... என்னைப் பத்தி விடுங்க... சரி... என்னை கேட்டீங்க இல்ல...  உங்க லவ் ஆர் க்ரஷ் பத்தி சொல்லுங்க” என்ற கேள்வியில் அவள் இதய் துடிப்பு அதிகரித்து.

மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு துணிந்து தட்டச்சு செய்தாள்.

“இதுவரைக்கும் அப்படி யாரும் இல்ல... ஆனா இப்போ ஒருத்தர் மேல அப்படி ஒரு பீலிங் வந்திருக்கு... அது கிரஷா இல்ல லவ்வா தெரியல” என்றதும் ஜீவா ஆர்வமாக,

“யாரு உங்க ஆபிஸ்லயா?” என்று கேட்டான்.  

“எனக்குதான் ஆபிஸ்ல பிரண்ட்ஸ்னு யாருமே இல்லையே” என்றாள்.

“யாரையாச்சும் பிடிச்சு இருக்கலாம்... பேச தயக்கமா இருக்கலாம்... எனக்கு கூட அப்படி ஒரு டீச்சரை பிடிச்சது... ஆனா அவங்ககிட்ட நான் சொல்லவே இல்லை... இப்போ அவங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு”

“ஏன் சொல்லல... சொல்லி இருக்கலாம் இல்ல”

“சொன்னாலும் ஒன்னும் நடக்காது”

“ஏன் அப்படி சொல்றீங்க... உங்க விருப்பத்தைச் சொல்லி இருந்தா அவங்க  ஓகேனு சொல்லவும் வாய்ப்பு இருக்குதானே”

“அதெல்லாம் வாய்ப்பே இல்ல விஜி”

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

“அதுக்கு ஒரு காரணம் இருக்கு”

“சொல்ல முடியாத காரணமா?” என்றதும் அவன்,

“அப்படி இல்ல” என்றவன் பின், “எங்க அக்கா மூளை வளர்ச்சி இல்லாதவங்க... மெண்டலி ரீட்டாடட்... அக்கா இப்படி பொறந்ததால அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய பிரச்னை சண்டை... அதனாலேயே  நான் பொறக்கும் போது அவர் என்னைப் பார்க்கக் கூட வரல... நானும் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தையாதான் இருப்பேன்னு நினைச்சுட்டாரு” என்றவன் சொன்னதை எல்லாம் கேட்டவளுக்குத் தன் வாழ்க்கை கதையை விட அவன் வலிகள் பெரிதாக தெரிந்தன.

அவன் மேலும், “ஸோ எங்க அக்கா பொறுப்பு என்னோடதுதான்... இதுல என்னை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு தலையிலயும் அந்த பொறுப்பை நான் சுமத்த விரும்பல...  எனக்கு அது பொறுப்பா இருந்தாலும் அவங்கள பொறுத்தவரைக்கும் அது பாரம்தானே”  என்றவன் சொன்னதை ஆழ்ந்து அவள்  யோசித்து கொண்டிருந்ததில் அவள் பதில் போட மறந்திருந்தாள்.

“என்னாச்சு சைலன்ட் ஆகிட்டீங்க?”

“இல்ல உங்க ஸ்டோரி ரொம்ப கஷ்டமா இருக்கு... சாரி” என்று அவள் அனுப்ப,

“என் கதையை விடுங்க... உங்க காதலை பத்தி சொல்லுங்க” என்று மீண்டும் கேட்டான்.

“நான்தான் சொன்னேனே... அது லவ்வா க்ரஷானு எனக்கே தெரியலனு”

“என்னவோ ஒன்னு... அதை பத்தி சொல்லுங்க” அவன் விடாமல் கேட்க, அவளும் சொல்லிவிடுவது என்ற முடிவுடன்,  

“என்ன சொல்றது... நான் இப்போ எல்லாம் அதிகமா யோசிக்கிறது உங்களைப் பத்தி மட்டும்தான்” என்று விட்டாள். அந்தப் பதிலைப் பார்த்த ஜீவா திகைத்துவிட்டான்.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவனும் அவளைப் பற்றி அதிகம் யோசிக்கிறான்தான். எப்போது அவளிடம் பேச ஆரம்பித்தானோ அன்றிலிருந்து அவன் வாழ்வில் நிறைய விஷயங்கள் மாறியிருந்தன. அதுவும் நல்ல விதமாக.

அவனுடைய ஒவ்வொரு நாளும் புதிதாக இருந்தது. தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுவது, பூக்களை எல்லாம் படம் பிடிப்பது, அக்காவிடம் பேசுவது, உண்டு முடித்து இரவு வந்து படுப்பதற்கு முன்பாக நடந்த விஷயங்களை எல்லாம் அவளிடம் பகிர்ந்து கொள்வதில் அவன் வாழ்விலிருந்த விரக்தியும் வெறுப்பும் மாறியிருக்கிறது.

அதற்கு அவள்தான் காரணம்.

ஆனால் ஆரம்பத்திலேயே நட்பு மட்டும்தான் நமக்குள் என்று அவள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டாள். நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்துவிட்ட காரணத்தினாலோ என்னவோ இந்த நட்பில் வேறு எந்த வித எதிர்பார்ப்பையும் அவனாக உருவாக்கிக் கொள்ளவில்லை.

அவள் இப்படிச் சொன்னதும் என்ன சொல்வது என்று அவனுக்குப் புரியவில்லை. கொஞ்சம் அதிகமாகவே அதிர்ச்சியானவன், என்ன பதில் போடுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

அவளே மீண்டும், “நான் மனசுல பட்டதைச் சொன்னேன்... நீங்க அதை சீரியஸா எடுத்துக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்ல” என்று அனுப்ப,

“அதெப்படி முடியும்” என்று அவன் கேட்டான்.

“முடியும்... ஏன் னா என் வாழ்க்கையில எதுவும் பெருசா நிலைச்சது இல்ல ஜீவா... எல்லாமே பாஸிங் க்ளவுட்ஸ் மாதிரிதான்... நீங்களும் அப்படிதான்னு நினைச்சுதான் ஆரம்பத்துல நம்ம உறவுல எதிர்பார்ப்பும் வச்சுக்க வேண்டாம்னு சொன்னேன்...

இப்போ நானே அதை மீறுறேன்... ஐ நோ... இட்ஸ் எம்பாரசிங் பார் யூ... பட் திரும்பவும் சொல்றேன்... இதை நம்ம சீரியஸா எடுத்துக்கணும்னு இல்ல” என்று பதில் போடவும் யோசித்த ஜீவா,

“நீங்க சென்னைலதான் இருக்கீங்களா?” என்று கேட்டான்.

“ஆமா” என்றவள் அனுப்ப,

“அப்போ நம்ம மீட் பண்ணலாமா? உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டான்.

அவள் சந்தோஷத்துடன், “ஓ... எனக்கும் விருப்பம்தான்... ஆனா நான்” என்று தயங்கினாள். 

“ஆனா என்ன?”

“நான் பார்க்க நல்லாத்தான் இருப்பேன்... ஆனா ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க” என்றதும் அவன் முகத்தில் புன்னகை விரிந்தது.

அவன் பதிலுக்கு, “எவ்வளவு அழகா இருந்தாலும் நம்ம புரிஞ்சிக்க முடிஞ்சவங்க கூடதான் நம்மால நேரம் செலவழிக்க முடியும்... ஸோ உங்க முகம் எப்படி இருந்தாலும் அது நம்ம நட்பை எந்த வகையிலும் பாதிக்காது” என்றான்.

இந்த தெளிவான சிந்தனைதான் அவனை அவளுக்கு அவ்வளவு பிடிக்கக் காரணம் என்று நினைத்துக் கொண்டவள்,

“அப்படினா இந்த வீக்கென்ட் மீட் பண்ணுவோமா?” என்று உற்சாகமாகக் கேட்டாள்.

“ஓகே” என்றான். அதன் பின் அவளே ஓர் இடத்தையும் தீர்மானித்துக் கூற,

“ஏ இந்த காபி ஷாப் எங்க வீட்டு பக்கத்துலதான் இருக்கு” என்றான் ஆர்வமாக. அவளுக்குதான் தெரியுமே.

அவள் புன்னகையுடன், “நான் அடிக்கடிக்கு அங்கே போவேன் ஜீவா” என,

“நான் போனதில்லை ஆனா பார்த்திருக்கேன்” என்றான். 

“அப்போ மீட் பண்றோம்” என்றதும் அவனும்,

“ஹ்ம்ம் கண்டிப்பா” என்று விட்டு, “ரொம்ப நேரமாகிடுச்சு...  தூங்குங்க... குட் நைட்” என்று அனுப்ப,

“குட் நைட் ஜீவா”  என்று அனுப்பிவிட்டவள் அப்படியே சோபாவில் சாய்ந்தாள். 

எந்த விதத் தயக்கமும் இல்லாமல் அவன் தன் வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறான். தான் மட்டும் பொய்யான அடையாளத்தில் இருப்பதை யோசிக்கையில் அவள் உள்ளம் நெருடியது. 

அவனை நேரில் சந்திக்கும் தருணத்தில் தன்னை பற்றி அத்தனையும் அவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக அவன் தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

இதெல்லாம் யோசித்தபடியே காதில் ஹியர் போனை மாட்டிக் கொண்டவள் அதில் இளையராஜா பாடலை ஒலிக்கவிட்டு கண்களை மூடிக் கொண்டாள். இந்த யோசனையைத் தந்ததும் ஜீவாதான்.

“தூக்கம் வரலன்னு சீரிஸ் சீரியல் எல்லாம் பார்க்காதீங்க... அப்புறம் இருக்கக் கொஞ்சம் நஞ்சம் தூக்கமும் போயிடும்... வேணா சாங்க்ஸ் கேளுங்க... இல்லனா மெலோடியஸ் ம்யூசிக் கேளுங்க... தூக்கம் வரலனாலும் மூளைக்கும் அது ஒரு மாதிரி ரெபிரஷிங்கா இருக்கும்” என்றவன் மேலும்,

“முக்கியமா பாட்டு கேட்டா ராஜா பாடல் கேளுங்க... அது செம பீல் கொடுக்கும்?” என்று ராஜாவிற்கு புகழாரம் வாசிக்க ஆரம்பித்தான்.

பெரும்பாலும் ரகுமான் பாடல்களைக் கேட்பவள் அன்றிலிருந்து ராஜா பாடல்களை எல்லாம் கேட்கத் துவங்கி இருந்தாள். முக்கியமாக ஜீவா தன்னுடைய விருப்பப் பாடல்கள் என்று சொன்ன அத்தனையும் அவள் தரவிறக்கம் செய்து தொடர்ச்சியாகக் கேட்டாள். அவளுக்கும் பிடித்திருந்தது.

கண்களை மூடி அந்தப் பாடல்களில் அவள் ரசித்து லயித்திருந்த அதே வேளையில் ஜீவாவும் ஹெட் போனை மாட்டிக் கொண்டு தன் படுக்கையில் சாய்ந்தான். அவளுக்காகக் கொடுத்த அறிவுரை என்றாலும் இப்போதெல்லாம் அவனும் அதைப் பின்தொடர்கிறான்.

எப்போதும் பாடலைக் கேட்டபடி இயல்பாக கண்ணயர்ந்துவிடும் ஜீவாவால் இன்று அத்தனை சீக்கிரத்தில் உறங்க முடியவில்லை. 

கண்களை மூடக் கூட தோன்றவில்லை. தன்னுடைய குடும்பச் சூழலைப் பற்றிச் சொன்ன பிறகும் அவள் தன் மீது விருப்பம் கொள்வதாகச் சொல்வதே அவனுக்கு வியப்பாக இருந்தது.

அவள் எப்படி இருப்பாள் என்ற அவனையும் மீறி மனம் சில அழகான கற்பனைகளை வடித்த போதும் அவன் அந்தக் கற்பனைக்குள் முழுவதுமாக ஆழ்ந்துவிடவில்லை.

புதிதாகப் பேசி பழுகுகிறவர்களுக்குதான் தோற்றம் தேவை. ஏற்கனவே பழகி நட்பாகிவிட்ட பின் தோற்றம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

இப்போதைக்கு அவளைச் சந்தித்துப் பேசுவோம் என்ற எண்ணத்துடன் மிகவும் பிராயத்தனப்பட்டு கண்களை மூட அவன் காதோரம் அந்தப் பாடல் மெலிதாக ஒலித்தபடி இருந்தன.

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

என்ற பாடலை கேட்டவன் சஞ்சலமில்லாத ஓர் உறக்க நிலைக்குள் ஆழ்ந்தான்.  ஆனால் அவளை சந்தித்த பிறகும் இந்த அமைதி நிலை அவனுக்கு நீடிக்குமா... ?

You cannot copy content