You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 16

Quote

16

அவளை பார்த்த கணத்தில் ஜீவாவிற்கு தான் வாழ்ந்த வீடு இடித்து நொறுக்கப்பட்ட காட்சிதான் முதலில் வந்தது. அதுதான் தன் வீட்டின் நிலை என்று அவனுக்கு முன்னமே தெரியும்தான்.

இருந்தாலும் லிங்கம் நிறுவனம் அவர்கள் வீட்டை வாங்கியதைத்தான் அவனால் இப்போதும் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

லிங்கம் டவர்ஸ் கட்டுவதற்கு அவர்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள இடத்தை வாங்கும் போதே இவர்கள் வீட்டையும் விலைக்குக் கேட்டார்கள்.

ஆனால் அவன் பாட்டி வாசுகிக்கு அதில் சுத்தமாக விருப்பமில்லை. முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அப்போதும் விடாமல் வேறு மாதிரி வழிகளில் எல்லாம் அவர்கள் தூது அனுப்பினார்கள்.

‘நாங்க கன்ஸ்டிரக்ஷன் ஆரம்பிச்சா இந்தப் பழைய வீடு தாக்குப் பிடிக்காது இடிஞ்சு விழுந்துடும்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்கள். மிரட்டல் முறைகளையும் கையாண்டார்கள்.  

ஆனால் எதற்கும் வாசுகி பணியாது போக, அருகே கட்டுமானத்தைத் துவங்கிய நாளிலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ தொந்தரவுகள் கொடுத்தார்கள்.

அதிக சத்தத்துடன் வேலை செய்வது, கற்களையும் மணல்களையும் அவர்கள் வீட்டு வாசலுக்கு முன்னே கொட்டுவது என்று தினமும் ஏதோ ஒரு விதமாக அவர்கள்  குடைச்சல் கொடுத்தார்கள். இதனால் அவர்கள் மொத்தக் குடும்பமும் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளானது.

அந்தச் சமயத்தில் ஜீவா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். நடப்பதை எல்லாம் பார்க்க அவனுக்கு அவ்வளவு கோபமாக வரும். ஆனால், ‘நீ சின்ன பையன் இதுல எல்லாம் தலையிட்டுக்காத’ என்று வாசுகி அவனை அடக்கிவிட்டார்.

இந்த நிலையில்தான் வாசுகியை பார்க்க அவரிடம் படித்த பழைய மாணவர் ஒருவர் வந்தார். அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதாகச் சொல்லவும் ஜீவா அவரிடம் எதார்த்தமாக லிங்கம் நிறுவனம் கொடுக்கும் தொல்லைகளைப் பற்றிக் குறிப்பிட்டான்.

அவருக்கு வாசுகி மீது அதிக மரியாதை என்பதால் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டார். அந்தச் சமயத்தில் லிங்கம் டவர்ஸ் கட்டிய படிக்கட்டுகள் அவர்கள் வீட்டு எல்லையைத் தொட்டிருப்பது தெரிய வந்தது.

இதனை அறிந்த ஜீவா அந்த வக்கீலுடன் சேர்ந்து வழக்கு போடுவதாக மிரட்டல் விடுக்கவும், நீதிமன்றத்திற்குப் போனால் நிறுவனத்தின் பெயர் கெட்டுப் போகும் என்று பயந்து அந்தப் படிக்கட்டுகளை இடிக்கச் சம்மதித்தார்கள்.

இப்படியாக லிங்கம் நிறுவனத்துடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக ஜீவா தங்கள் வீட்டை அவர்களுக்கு விற்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சிவகுமார் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

 “வேற யார்கிட்ட வீட்டை வித்தாலும் இந்த வீட்டை அவங்க இடிக்கத்தான் இடிப்பாங்க... ஏற்கனவே ரொம்ப பழைய வீடு ஆகிடுச்சு” என்று சொல்ல,

“சும்மா பழைய வீடு பழைய வீடுன்னு சொல்லாதீங்க மாமா... நீங்க சொல்றளவுக்கு எல்லாம் நம்ம வீட்டுல ஒன்னும் பிரச்னை இல்ல... இன்னும் ஸ்ட்ராங்காதான் இருக்கு” என்று  ஜீவா வீம்பாகப் பேசினான்.

“அதுக்காக இங்கேயே இருக்க போறியா... எத்தனை நாளைக்கு இல்ல எத்தனை வருஷத்துக்குன்னு கேட்குறேன்” என்று சட்டென்று பொங்கி விட்ட சிவகுமார் பின் தன்னை ஒரு மாதிரி ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

“கொஞ்சமாச்சும் புத்திசாலித்தனமா யோசிடா... இன்னைக்கு நிலைமைக்கு இந்த இடத்தோட மதிப்பு மட்டும் ஆறு கோடி... சமமா பிரிச்சாலே... ஆளுக்கு மூணு கோடி வரும்... அந்தப் பணத்தை வைச்சு நல்ல வீடு வாழ்க்கைனு செட்டில் ஆவியா... அதை விட்டுட்டு தேவை இல்லாம பழைய கதை எல்லாம் பேசிட்டு இருக்க” என்றார். 

அத்தனை நேரம் அமைதியாக ஒதுங்கி நின்ற செல்விக்கு மூன்று கோடி என்றதும் முகம் பளிச்சிட்டது.

“மாமா சொல்றதல என்னடா தப்பு... நல்ல விலைக்கு வருது வித்துடலாம்னு சொல்றாரு... வித்துட்டு போக வேண்டியதுதானே” என்று அவரும் சேர்ந்து கொண்டு ஒத்து ஊத,

“ம்மா... இதையே விலையை யார் வேணா நமக்கு கொடுப்பாங்க... ஆனா நம்மள அவ்வளவு டார்ச்சர் பண்ண லிங்கம் கம்பெனிக்கு ஏன் இந்த வீட்டை நம்ம விக்கணும்னுதான் கேட்குறேன்” என்று அவன் அதே கருத்தில் நின்றான். 

அதற்கு சிவகுமார், “அவனுங்க பெரிய கம்பெனி... இந்த இடத்தை வாங்கணும்னு அவனுங்க முடிவா இருக்காங்க... நாளைக்கு நம்ம வீட்டை விற்க வர வேற பார்ட்டியை கூட்டி வந்தாலும் அவனுங்க விடமாட்டானுங்க...  பிரச்னை பண்ணுவானுங்க” என்றார்.  

“அப்போ பயந்துதான் இந்த வீட்டை அவனுங்களுக்கே விற்கலாம்னு சொல்றீங்களா?”

“பயம் மட்டும் இல்ல... இதுல நமக்கு லாபமும் இருக்கு”

ஜீவா அவர் கருத்துடன் உடன்படவில்லை. அப்போது செல்வி மகன் தோளைத் தொட்டு, “போதும் ஜீவா... இதுக்கு மேல இவ்வளவு பெரிய வீட்டை வைச்சுட்டு என்னால பார்த்துக்க முடியாது... நிம்மதியா ஏதாவது சின்ன வீடா வாங்கிட்டு போயிடலாம் டா” என்று கண்ணீர் நிரம்பிய கண்களுடன் சொல்ல, அந்த கண்ணீர் ஜீவாவின் பிடிவாதத்தை நொடி நேரத்தில் தளர்த்திவிட்டது.

அதற்கு மேல் எந்த விவாதமும் செய்யாமல் அவன் சம்மதித்தான். அடுத்த நொடியே மளமளவென்று வீட்டை விற்கும் வேலைகள் நடந்தன.

அதேநேரம் வீட்டைக் காலி செய்து கொண்டு தன் மாமாவின் வீட்டிற்குச் செல்ல ஜீவாவிற்கு துளியும் விருப்பமில்லை. ஆதலால் தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் உதவியுடன் அவசர அவசரமாக வீடு பார்த்து முன்தொகை கொடுத்தான்.

அம்மாவிடம் அந்த வீட்டின் புகைப்படங்களை எல்லாம் காட்ட, “என்னடா பிளாட்டா?” என்று தயங்கினார். இத்தனை வருட காலமாக தனி வீட்டில் ராஜ்ஜியம் செய்து விட்டுத் திடீரென்று அடுக்குமாடி போய் அடைந்து கொள்வதா?.

ஆனால் பிறந்ததிலிருந்தே தனி வீட்டில் வாழ்ந்துவிட்டதால் ஒரு மாறுதலுக்காக அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து பார்க்கலாம் என்று யோசித்த ஜீவா,  

“ம்மா என் ஸ்கூல் பக்கத்துலயே இருக்கு... காலையில பஸ் பிடிக்க அடிச்சு பிடிச்சு ஓட வேண்டாம்... நடந்தே போயிடலாம்” என்று அவனுக்கு ஏதுவான காரணங்களை உரைத்தான்.

“அதெல்லாம் சரிதான் ஜீவா... ஆனா” என்ற அவர் பார்வை சித்ராவின் மீது பதிந்தன.

“ம்மா... நான் அக்கா பத்தி கூட அந்த ப்ளாட் செகரெட்டரிகிட்ட பேசிட்டேன்... அவர் சொந்தத்துல இதே போல ஒரு பையன் இருக்கானாம்... அதனால நம்ம கஷ்டத்தை ஒரளவுக்கு புரிஞ்சிக்க முடியுதுன்னு சொன்னாரு...

ஸோ அக்கா ஒரு பிரச்னையே  இல்ல... அதுவும் இல்லாம எல்லாம் புது வீடு வாங்குற வரைக்கும்தானே” என்ற ஜீவாவின் வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும் அவர் மனதிற்கு என்னவோ நெருடலாகவே இருந்தது.

இருப்பினும் மகன் சொன்னதற்காக அந்த வீட்டிற்குக் குடி போகச் சம்மதித்தார். அதேசமயம் அந்த வீட்டை காலி செய்வதில் ஜீவாவிற்கு சில சிக்கல்களும் இருந்தன. அதில் முக்கியமானது அந்த மாடித் தோட்டம். அடுத்து வீட்டில் குவிந்த கிடந்த பழைய பொருட்கள்.

சிலவற்றை விற்றும் நிறையத் தேவையற்ற சாமான்களை எல்லாம் எடைக்கும் போட்டும் எப்படியோ பொருட்களை எல்லாம் ஒரு மாதிரி ஒழித்து கட்டிவிட்டான்.  இருப்பினும் மாடித் தோட்டத்தை என்ன செய்வது என்றுதான் அவனுக்கு புரியவில்லை.

பெரிய மாடி கொண்ட அவன் மாமா வீட்டில் கேட்ட போது, “அய்யய்யோ இவ்வளவு செடி எல்லாம் வைச்சுட்டு மெய்ன்டைன் பண்ண முடியாதுபா” என்று சீதா மறுத்துவிட்டார். உறவினர்களிடமும் இதே பதில்தான் வந்தது.

அதில் ஒரு சிலர் மட்டும் பூச்செடிகளை மற்றும் சில வகைச் செடிகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களும் மொத்தமாக எடுத்து கொள்ள விரும்பவில்லை.

இறுதியாக நண்பர் ஒருவர் மூலமாக நர்ஸரி ஒன்றில் விசாரித்தான். அவர்களே வீட்டில் வந்து எடுத்துக் கொள்வதாகச் சொன்னவர்கள் இறுதியாக கைவிரித்துவிட்டார்கள். இதனாலேயே அவன் தோட்டம் மொத்தமும் நிர்மூலமானது.  

வீடு இடிக்கப்பட்டதற்குக்  கூட அவன் அத்தனை வேதனைப்படவில்லை. தோட்டத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்றுதான் அவன் மனம் அதிகமாக ஆதங்கப்பட்டது.

அந்த ஆதங்கம்தான் அவனுக்குக் கோபமாக வெளிப்பட்டது. அந்த கோபம் இன்னும் அவனுக்குள் இருக்கிறது. அதுவும் அவன் அப்படி என்ன தப்பாக கேட்டுவிட்டான் என்று அவ்வளவு மோசமாக அவனை நடத்தினார்கள் என்று புரியவே இல்லை

இதற்கு எல்லாம் இந்த பெண்ணும் காரணம் என்று எதிரே நின்ற ஜீவிதாவை பார்வையாலேயே எரித்தான். இவள் வீட்டின் அருகிலா குடிவந்திருக்கிறோம் என்று கொஞ்சம் கடுப்பானவன்,

‘இவளுக்கு பால்தான் ஒரு கேடு’ என்று அந்த பால் டம்ளரை திருப்பி எடுத்துக் கொண்டு நடந்தான்.

அப்போதே தெளிவு நிலைக்கு வந்திருந்த ஜீவிதா அவன் காட்டிய வெறுப்பையும் மீறி அவனிடம் பேச நினைத்தாள்.

அவள், “ஜீ...” என்று அழைக்கும் போது அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் சிலர் அவன் வீட்டிற்குள் நுழையப் போகவும் அவள் அப்படியே பின்வாங்கிக் கொண்டாள்.

வீட்டிற்குள் வந்து கதவை அடைத்துக் கொண்டவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  தலையைப் பிய்த்துக் கொண்டு அமர்ந்தவளுக்கு அப்போதுதான் செல்பேசியின் நினைவு வந்தது.

மேஜை மேல் அணைந்து கிடந்ததைக் கண்டவள் உடனடியாக அதனை எடுத்து சார்ஜ் போட்டு இயக்கினாள்.

அது இயங்கிய மறுகணமே ஜீவா அனுப்பிய குறுந்தகவல்கள்தான் அவள் செல்பேசியில் வரிசையாக வந்து குதித்தன. அவளுக்கு அப்படியொரு சந்தோஷம்.

‘அப்போ ஜீவா பதில் அனுப்பி இருக்கான்’ என்று விட்டு உடனடியாக அவற்றைச் சொடுக்கிப் பார்த்தாள். மிக நீண்ட குறுந்தகவல் ஒன்றை அவன் அனுப்பியிருக்க அதனை படிக்க ஆர்வமாக அமர்ந்தாள்.

மேலோட்டமாக தன்னுடைய வீட்டு விற்கும் பிரச்சினைகளை விவரித்தவன், ‘நாலு அஞ்சு நாளாவே இதே டென்ஷன்தாங்க... உங்ககிட்ட பேசணும்னு இருந்தாலும் நேரமே கிடைக்கல...

திங்க்ஸ் எல்லாம் எடுக்குறதே பெரிய வேலை... எல்லாத்துக்கும் மேல நம்ம தோட்டம் இருக்கு இல்ல... அது மொத்தமா இடிச்சு தள்ளிட்டாங்க

உங்களை நம்ம தோட்டத்துக்கு கூட்டிட்டு போய் காட்டணும்னு எல்லாம் நான் ரொம்ப ஆசை பட்டேன்... இப்போ அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லாம போயிடுச்சு

எல்லோரும் உங்களை மாதிரி பூக்களைச் செடி கொடிகளை நேசிக்குறவங்க கிடையாதுங்க... சிலருக்கு எல்லாம் வெறும் பணம் பணம் பணம் மட்டும்தான்

அவங்களுக்கு அவங்க வேலை அவங்க பிஸ்னஸ் நடந்தா போதும்... சுயநலவாதிங்க’

அந்த வரியில் பொதிந்துள்ள கோபமும் வெறுப்பும்  தன்னை குறிக்கிறதோ? என்று ஒரு நொடி யோசித்தவள் பின் வாசிப்பதைத் தொடர்ந்தாள்.

‘சரி அதை விடுங்க... இப்போ நாங்க ஒரு வழியா புது வீடு மாறி வந்துட்டோம்... இனிமே எந்தச் சிக்கலும் இல்ல... ஸோ இனிமே நம்ம மீட் பண்ணலாம்... எங்கே எப்போனு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க’ என்றவன் போட்டிருந்ததை படித்து முடித்தவள் மனம் ஏனோ சந்தோஷம் அடையவில்லை.

அவன் தன்னை நேரில் பார்த்தால் இதே போலப் பேசுவானா இல்லை சற்று முன்பு பார்த்தது போலக் கோபமும் வெறுப்பும் காட்டுவானா? என்று குழம்பினாள்.   

எல்லாவற்றிற்கும் மேல் இதே அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு அவன் குடிவந்து தொலைத்திருப்பது அவளுக்கு எந்த வகையிலும் சரியாகப்படவில்லை.

ஆதலால் அவன் கேள்விக்கு உடனடியாக அவள் எந்த பதிலும் போடவில்லை.

 யோசித்து விட்டு பதில் போடலாம் என்று நினைத்தவள் அலுவலகத்திற்குக் கிளம்பி தயாரானாள். உடல் மனம் இரண்டுமே ஒத்துழைக்க மறுத்த போதும் வீட்டில் தனித்து இருக்க அவள் விரும்பவில்லை.

வீட்டைப் பூட்டுவதற்கு முன்பாகப் பலமுறை எட்டிப் பார்த்தாள். யாரும் இல்லை என்று அறிந்ததும் அவசரமாக வீட்டைப் பூட்டி விட்டு மின்தூக்கியை அடைந்தாள்.

கதவு திறக்கவும் ‘அப்பாடா’ என்று அவள் உள்ளே சென்று நின்ற சமயத்தில் அவள் எதற்காகப் பயந்தாலோ அது நடந்துவிட்டது. ஜீவாவும் அவர்கள் குடியிருப்பின் செகரெட்டரி மாணிக்கமும் எதிரே வந்து நின்றார்கள்.

பேசி சிரித்துக் கொண்டிருந்தவர்கள் அவளைப் பார்த்ததும் காற்று போன பலூன் போல முகத்தைச் சுருக்கினார்கள்.

‘அந்த பொண்ணு போகட்டும்... நம்ம அப்புறம் போலாம்’ என்று அவளை இளக்காரமாகப் பார்த்தபடி மாணிக்கம் கண்ணசைவால் ஜீவாவிடம் சொல்ல அவனும் தலையசைத்தான்.

அவள் மனமுடைந்தது. உடனடியாகத் தரைதள பொத்தானை அழுத்த, கதவும் மூடி கொண்டது.

‘மாணிக்கம் மைக்கல் விஷயத்தை ஜீவாவிடம் சொல்லி விடுவார். தன்னை பற்றி அவன் கீழ்த்தனமாக நினைத்துக் கொள்வான். அதற்கு மேல் என்ன? எல்லாம் முடிந்துவிட்டது.

 இதெல்லாம் தன்னுடைய துரதிர்ஷ்டம்தான். எந்த உறவும் எந்த நேசமும் தனக்கு எப்போதுமே நிலைக்காது’ என்று எண்ணி வெதும்பியவள் மின்தூக்கியின் கதவு திறக்கவும் அவசரமாக முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நடந்தாள்.

யார் கண்களிலும் படாமல் எங்காவது தூரமாக ஓடிவிட்டால் போதுமென்று இருந்தது.

sumathi.mathi and eswari.skumar have reacted to this post.
sumathi.mathieswari.skumar
Quote

Super ma 

You cannot copy content