You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 3

Quote

3

‘லிங்கம் டவர்ஸ்’

ஜீவிதா தான் தேடி வந்த இடத்தினைக் கண்டுவிட்ட நிம்மதியில் பெருமூச்சுவிட்டாள். கூகுள் மேப்பை நம்பி இருந்தால் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது. நல்ல வேளையாக அந்தப் பேருந்து பயணிச் சரியான வழியைக் காட்டினார்.

நன்றியுடன் அவனை நினைத்துக் கொண்டு அந்த உயரமான கட்டிடத்தை ஏறிட்டாள். துண்டு துண்டாக அடுக்கி வைக்கப்பட்டது போலிருந்தது. மேலே கோபுரம் போல வடிவமைக்கப்பட்டு அதில் சிவப்பு வண்ணம் தீட்டியிருந்தது.

மொத்தம் நான்கு மாடிகள். தரைதளத்தில் நவீன பல்பொருள் அங்காடி ஒன்றும் இருந்தது. மூன்றாவது தளத்தில் ‘சிவலிங்கா பில்டர் பிரைவட் லிமிடட்’ என்ற பலகை.

 ஜீவிதா கட்டிடத்தின் உள்ளே நடந்தாள். அது அந்தப் பல்பொருள் அங்காடிக்குள் சென்றது. மேலே செல்லப் படிக்கட்டு அல்லது மின்தூக்கி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எப்படி மேலே செல்வது என்று குழம்பியவள் அங்கே வேலை செய்யும் பெண்ணிடம் விசாரிக்கவும், அவள் வழி உள்பக்கம் இருப்பதாகக் காட்டினாள்.

படிக்கட்டை யாராவது உள்ளே தூக்கி வைப்பார்களா?

 இதில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கட்டிட நிறுவனம் என்ற பெருமை வேறு. ஜீவிதா மனதிற்குள் கடுகடுத்துக் கொண்டே மின்தூக்கி வழியாக மூன்றாவது தளத்தை அடைந்தாள்.

மிகப் பெரிய கண்ணாடிக் கதவு இருந்தது. அதனைத் திறந்து அவள் உள்ளே செல்லப் பெரிதாக சிவலிங்கா பிராபர்ட்டி கேர் என்ற வார்த்தைகள் வரவேற்றன. அங்கே நின்ற வரவேற்பாள பெண்ணிடம் தன்னை பற்றிய விவரத்தைக் கூற,

“மேடம் மீட்டிங்ல இருக்காங்க கெஞ்சம் வெயிட் பண்ணுங்க” என, ஜீவி சோபாவில் அமர்ந்தாள்.

நேரெதிரே இருந்த ஏசியில் அவள் முகத்தில் குளுமையான காற்று வீசியது. மாநகரப் பேருந்தில் அடித்துப் பிடித்து நெருக்கடியில் வந்ததினால் ஏற்பட்ட களைப்பு நீங்க, ஆசுவாசமாக மூச்சை விட்டுக் கொண்டாள்.

சரியாக அதேசமயம் டிங் டிங் என்று அவள் செல்பேசியில் குறுந்தகவல்கள் கொட்டின.

திறந்து பார்த்தாள். ‘மாம்’

அந்த நேரத்து அமைதியும் அவளுக்கு வடிந்து விட்டது. இவர்களிடம் பேச விரும்பாமல்தான் அவர்களின் அழைப்பை ஏற்காமலிருந்தாள்.

அப்படியும் குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார்கள். ‘என்னதான் இவர்களைச் செய்வது’ என்ற கடுப்புடன் அந்தக் குறுந்தகவலைப் படித்தவளுக்குக் கோபம் மூண்டது.

‘நான் எங்க தங்கனும் தங்க கூடாதுன்னு எல்லாம் நீங்கச் சொல்லக் கூடாது’ என்று அதிரடியாக அனுப்ப, தாமதிக்காமல் எதிர்புறத்திலும் இருந்தும் பதில் வந்தது.

‘ஏற்கனவே இழுத்து விட்டு பிரச்னை எல்லாம் போதாதா உனக்கு?”

‘இனிமே பிரச்னை வந்தா உங்களை கூப்பிட மாட்டேன்... நீங்களும் வந்து நிற்கத் தேவை இல்ல’

‘அப்புறம் வேற யார் வந்து நிற்பா?’

‘என் பிரச்னையை நானே பார்த்துக்குவேன்’ என்ற அவர்கள் வாக்குவாதம் சில நொடிகள் நீண்டன.

‘இதுவரைக்கும் நீ பார்த்து கிழிச்சதெல்லாம் போதும்... ஒழுங்கா போய் உங்க அப்பா கூட திருச்சில தங்குற வழியை பாரு’ என்று முடிவாக அனுப்ப,  

‘முடியாது... நான் எனக்கு விருப்பமான இடத்துலதான் தங்குவேன்’ என்று முடித்து அத்துடன் செல்பேசியை அணைத்து பையில் தூக்கிப் போட்டாள்.

எதிரே வீசிக் கொண்டிருந்த குளுமையான காற்று இப்போது தீயை வாரி இறைத்தது. உடலெல்லாம் உஷ்ணம் பரவியது  போலிருந்தது. அங்கே உட்கார்ந்திருக்க முடியாமல் பையை வைத்து விட்டு கதவைத் திறந்து வெளியே வந்து நின்று தன்னை ஒரு மாதிரி அமைதிப்படுத்த முயன்றாள்.

 ‘என் சந்தோஷத்தை மொத்தமா கெடுத்து குட்டிச்சுவராக்கத்தான் நீ இங்க வந்தியா... ஒழுங்கா சென்னை போயிடு க்கா... இனிமே இங்கே திரும்பி வரவே வராதே... ப்ளீஸ் போயிடு’ என்ற வார்த்தைகள் அவள் மனதைத் தாக்கின. அவள் அமைதியை குலைத்தன.

தான் யாருக்கும் முக்கியமில்லை. யாருக்கும் தான் தேவையும் இல்லை என்று நினைத்து உள்ளம் வெதும்பிக் கொண்டிருந்த நிலையில் அவள் விழிகள் அருகே இருந்த மாடி தோட்டத்தைக் கண்டது.

அதன் பசுமையும் அழகும் புத்துணர்வைக் கொடுத்தது. பல வண்ணத்தில் ரோஜா மலர்கள் அதில் வண்ணமயமாக பூத்து குலுங்கின. கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அந்த வீட்டிலிருந்து அவள் பார்வையை எடுக்க முடியாமல் நின்றாள்.

அப்போது வரவேற்பாள பெண், “உங்களை மேடம் கூப்பிடுறாங்க” என்று அழைக்க, ஜீவி பரபரப்புடன் அறைக்குள் நுழைந்தாள்.

“உட்காருங்க ஜீவிதா”

நாற்பது வயது மதிக்கத்தக்கப் பெண். பெயர்ப் பலகையில் உஷாராணி என்று இருந்தது. அவர் முகத்தில் ஒப்பனை ஏதும் இல்லை. பார்க்க மிக எளிமையாக இருந்தார். ஆனால் கம்பீரமாக அமர்ந்திருந்தவர் மிதமான புன்னகையுடன் அவளை வரவேற்று அமரச் சொன்னார்.

ஏற்கனவே இணைய வழியில் நேர்காணலை அவள் முடித்துவிட்டதால் வேலை கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

அவள் தந்த கோப்புகளை எல்லாம் பிரித்து பொறுமையாக பார்வையிட்ட உஷா,

“எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவங்கள எங்க கம்பனில வேலைக்கு எடுக்கிறது இல்ல... இருந்தாலும் நீங்க அனுப்பின டிசைன் ஐடியா எல்லாம் பிடிச்சிருக்கவும்தான் நான் உங்களுக்காக எம்.டி கிட்டப் பேசினேன் ஜீவிதா” என்றார்.

“தேங்க்யூ ஸோ மச் மேடம்”   

“வெளியே ரிசப்ஷனிஸ்ட் கீதா ஒரு ஃபார்ம் கொடுப்பாங்க... அதை எழுதி கொடுங்க” என்றார்.

“ஓகே மேடம்” என்று விட, அவர் சொன்னது போல அந்தப் படிவத்தை வாங்கி வேகமாக நிரப்ப ஆரம்பித்தவளின் கரம், அப்பா அம்மா என்ற பெயரில் அப்படியே தேங்கி நின்று விட்டது.

“நல்லா யோசிச்சு முடிவெடுங்க?” அவள் தாத்தா அழுத்தமாகச் சொன்னார்.

“நாங்க இரண்டு பேரும் நிறைய யோசிச்சுதான் முயூச்சுவல் டிவோர்ஸ்ங்கிற இந்த முடிவுக்கு வந்திருக்கோம்... திரும்பப் போட்டு எங்களை குழப்பாதீங்க ப்ளீஸ்” பிரவீன் குமார் உறுதியாக கூற எதிரே அவள் அம்மா நித்யா ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.  

“அப்போ ஜீவிதா சவிதா... அவங்க இரண்டு பேரைப் பத்தியும் யோசிச்சீங்களா?”

“அவங்க இரண்டு பேருக்கும் என்ன எல்லாம் செய்யணுமோ அதை நாங்க சரியா செய்வோம்... எப்பவுமே நாங்க அவங்களுக்கு அப்பா அம்மா என்ற கடமைல இருந்து தவற மாட்டோம்” நித்யா சொல்ல,

“ஆமாம் ம்மா... நாங்க சவிதாவையும் ஜீவியையும் விட்டுட மாட்டோம்” என்று பிரவீன் குமாரும் தெளிவாக உரைத்தார்.

நைனம்மா அழுது கொண்டே கேட்டதும் அதற்கு அப்பா அம்மா கூறிய பதிலும் உள்ளே படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்த ஜீவியின் காதில் தெள்ளத்தெளிவாக்க விழுந்தது.

அப்போது அவளுக்குப் பத்து வயது. தங்கைக்கு ஏழு வயது.

அதுவரையில் அவளின் மொத்த உலகமே அவள் அம்மா அப்பா மட்டும்தான். ஆனால் அந்த உலகம் அவள் கண் முன்பாகவே இரண்டு துண்டாக உடைந்ததை பார்த்தாள்.

 அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் அப்பா வேறொரு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே அம்மாவும் செய்து கொண்டார்.  இதெல்லாம் அவளைப் பாதித்த அளவுக்குத் தங்கை சவிதாவைப் பாதிக்கவில்லை.

சவிதா அம்மாவுடன் துபாய் சென்றுவிட்டாள். ஆனால் அவளால் போக முடியவில்லை. இருவரையும் தனித்தனி உறவாகத் தனித்தனி உலகமாக அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

யார் வீட்டிலும் இருக்கப் பிடிக்கவில்லை. சென்னையில் பாட்டி தாத்தாவுடன் சென்று தங்கிவிட்டாள்.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா இறந்துவிட, அப்பா அவளையும் பாட்டியையும் கட்டாயப்படுத்தி திருச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த பள்ளியிலேயே அவளைச் சேர்த்து விட்டார்.

அவளுக்கு திருச்சி பிடிக்கவில்லை. ஷீலா அன்பாக இருந்தார். மகேஷ் அவளிடம் ஆசையாகப் பழகினான். ஆனால் அவர்கள் அன்பை அவளால் ஏற்க முடியவில்லை. அவர்கள் அவளின் குடும்பத்தை உடைத்தவர்கள். அவளது அன்பான அப்பாவைப் பிரித்தவர்கள் என்று மட்டுமே யோசிக்க முடிந்தது.

ஆதலால் பள்ளிப் படிப்பை முடித்ததும் திருச்சியில் வசிக்கக் கூடாது என்பதற்காகவே அவள் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள்.

மீண்டும் அவளும் பாட்டியும் தனியாக வந்தார்கள். ஆனால் ரொம்ப நாட்கள் பாட்டியும் அவளுடன் இல்லை.

“ஃபார்ம் பில் பண்ணீட்டீங்களா ?” அந்தப் பெண் வந்து நிற்க, அவள் இயல்பு நிலைக்கு தன்னை மீட்டு கொண்டாள்.

“இதோ முடிச்சிட்டேன்” என்று விட்டு அம்மா அப்பா என்ற இடத்தில் பிரவீன் குமார், நித்யஸ்ரீ என்று எழுதினாள்.

என்ன நடந்தாலும் அவளால் இந்த அடையாளத்தை மாற்ற முடியாது. அழிக்கவும் முடியாது.  

  சில நிமிட காத்திருப்பிற்குப் பிறகு உஷாராணி அவளுக்கு வேலைக்கான ஆணையை வழங்கியதோடு அவர்கள் நிறுவனத்தின் சில விதிமுறைகள் பற்றி விளக்கினார்.

பிறகு அவர் கட்டிட வடிவமைப்பு துறையினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

“சந்திரசேகர்... இவர்தான் நம்ம கம்பெனி சீப் ஆர்கிடெக்ட்” என்று விட்டு, “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி சென்று விட, ஜீவி டிசைனிங் டிபார்ட்மென்டை சுற்றிப் பார்த்தாள்.

எல்லோரும் நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயதில் இருந்தார்கள். ஓரிருவரைத் தவிர.

அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. இருப்பினும் இப்படி அங்கிள் வயது ஆண்களுடன் வேலை செய்வது ஏதோ ஏலியன் கூட்டத்தில் தனியாகச் சிக்கி கொண்டதை போன்ற உணர்வைக் கொடுத்தது.

ஒன்றும் செய்ய முடியாது. இனி இவர்களுடன்தான் இவள் வேலை. வாழ்க்கை.

அறிமுகப் படலம் எல்லாம் முடித்ததும் புதிதாக லிங்கம் ஆரம்பிக்கும் ப்ரொஜெக்ட்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றன. பின் அது சார்ந்த கோப்புகளை அனுப்பி அவளைப் படித்துப் பார்க்கச் சொன்னார் ராஜேசகர்.

அதை எல்லாம் படித்து முடிக்கும் போது மாலையாகிவிட்டது.

“நாளைக்கு சைட்டுக்கு போய் பார்க்கலாம்” என்று விட்டு சந்திரசேகர் புறப்பட அவளும் கிளம்பி வெளியே வந்தாள்.

கீழே வந்ததும் அவள் பார்வை அந்தத் தோட்டத்து வீட்டின் மீது விழுந்தது. பசுமையான அந்த வீடு அவள் அலுவலகத்தின் மிக நெருக்கமாக நின்றதையும் கவனித்தவள்,

‘ஆனா சென்னைல இவ்வளவு பழைய வீடா?’ என்று எண்ணினாள்.

 என்னவாக இருந்தாலும் அப்போதைக்கு அந்த வீடு அவள் மனதைக் கவர்ந்து விட்டது.

ஆதி காலத்து வீடு. நிறம் மங்கியிருந்தது. அதன் தோற்றமும் வடிவமைப்பும் மிகவும் பழைய மாதிரியாக இருந்த போதும் பூத்துக் குலுங்கும் அந்தத் தோட்டத்தின் பசுமையால் அந்த வீடு அழகாகக் காட்சியளித்தது.

வீடு என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். இவ்விதமாக அந்த வீட்டை ஆராய்ந்து கொண்டே நடந்தவள் பார்வை சுவரோடு சுவராகப் பதிந்திருந்த பெயர்ப் பலகையைப் பார்த்தது.

 ஆனால் அதில் என்ன பெயர் இருந்தது என்று படிக்க முடியவில்லை. பாதிக்கு மேல் அதில் வார்த்தைகள் அழிந்திருந்தன.

என்னவோ அந்த வீட்டை மிகவும் பிடித்து போக, நின்று அந்த வீட்டை தன் செல்பேசியில் படம் பிடித்து கொண்டாள். பின் அதனை புதுப்பித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டே அவ்வீட்டை ஜீவிதா கடக்க, கைப்பேசியில் பேசி கொண்டே  அதே வீட்டிற்குள் இருந்து ஜீவானந்தம் வெளியே வந்தான். 

 

 

priya.jagan has reacted to this post.
priya.jagan
Quote

super 👌

Quote

Super ma 

You cannot copy content