You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E27

Quote

27

சென்னை விமான நிலையம்.

 “எங்க போயிட்டு இருக்கோம்… ஹாஸ்பெட்டில் போறேன்னு சொல்லிட்டு ஏர்போர்ட் கூட்டிட்டு வந்திருக்க” என்று பாரதி கேட்கவும்,

“நீதானே அறிவு மாமாவை பார்க்கணும்னு சொன்ன பாரதி” என்றாள் சாதாரணமாக உரைத்தாள்.

“அவரு ஹாஸ்பெட்டிலதானே இருக்காரு”

“அப்படிதான் எல்லோரும் நினைச்சிட்டு இருக்காங்க… ஆனா அவரு அங்கே இல்ல” என்றவள் சொல்ல அவளை ஏறஇறங்க பார்த்தவன், “அப்படின்னா இப்போ எங்க இருக்காரு?” என்றான்.

அவள் சூசகமாக சிரித்துவிட்டு, “முதல கோயமுத்தூர் போவோம்… மத்ததெல்லாம் அங்கே போய் சொல்றேன்” என்றவள் அதன் பிறகு விமான நிலைய வாகன நிறுத்தத்தில் அவளுக்காக காத்திருந்த காரியதரிசி உதயிடம் தனியாக வந்து, “விசாரிக்கச் சொன்ன விஷயம் என்னாச்சு உதய்?” என்று ரகசியமாகக் கேட்டாள்.

“விசாரிச்ச வரைக்கும் துர்கா உயிரோடதான் இருக்காங்க… அன்னைக்கு அக்ஸிடென்ட்ல இறந்து போனது துர்காவே இல்ல… தியாகுவோட பொண்ணு வசுமதி… இது அவருக்கும் அவர் மகன் ராஜாவுக்கு மட்டும்தான் தெரியும்” என்று சொல்லி அவள் தலையில் இடியை இறக்கினான்.

“ஆஅ… டிசெஸ்டர்” என்றவள் உதட்டை கடித்து கொண்டு,

“அப்போ முகுந்தன் விளையாடுல… ஹீ இஸ் சீரியஸ்” என்றாள். அதன் பின் அவள், “அந்த வீடியோ” என்று வினவ,

“அது ரியல்தான்… கிராபிக்ஸ் மார்பிங் எதுவும் இல்ல” என்று கூறினான்.

அவள் முகம் சுணங்கி போனது. “சரி ஒகே” என்றவள் மேலும்,

“உதய் அப்புறம்… என் ஃபோன் ஆப்லதான் இருக்கோம்… என்னை காண்டெக்ட் பண்ண ட்ரை பண்ணாதே... எந்த முக்கியமான விஷயமா இருந்தாலும் நீ மேனேஜ் பண்ணிக்கோ” என்று அவளைப் புரியாமல் பார்த்தான்.

“அப்புறம்… நாளைக்கு பத்து மணிக்கு இதுல இருக்க ஆடியோ பிரேக்கிங் நியூஸ்ல வரணும்… சரியா?” என்றவள் ரகசியமாக அவன் கையில் ஒரு விரலியை அழுத்தி கண் காட்ட அவனும் புரிதலாகத் தலையசைத்தான்.

“டிக்கெட்ஸ் கொடுத்துட்டு நீ கிளம்பு” என்று பயணச்சீட்டை வாங்கிக் கொண்டவள் பாரதியை அழைத்துக் கொண்டு கோயமுத்தூர் விமான நிலையத்தை வந்தடைந்தாள்.

பாரதி எதுவும் பேசவில்லை. அதன் பின் விமான நிலையத்தில் அவளுக்காகக் காத்திருந்த வாகனத்தில் பாரதியை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். 

தென்னை மரம் பசுமையான வயல்வெளிகள் என இயற்கை எழிலோடு மிளிர்ந்த அந்த சாலைகளைக் கடந்து சிறிய ஊர்கள் வழியாக வாகனத்தை அவள் சுற்றி சுற்றி ஒட்டி வந்ததை அவன் குழப்பமாகப் பார்த்தான்.

வெகுநேரமாக அவர்களுக்குள் கனத்திருந்த மௌனத்தை நந்தினி உடைத்தாள்.

காரை ஒட்டிக் கொண்டே நந்தினி தன் கையிலிருந்த பழைய ரக பேசியை அவ்வப்போது பார்த்தாள். அவள் ரொம்பவும் டென்ஷனாக இருப்பதை பாரதி கவனித்து வந்தான்.

“நம்ம இப்பயாச்சும் எங்க போயிட்ட இருக்கோம்னு சொல்றியா?” என்று அவன் கேட்கவும்,

“அக்சுவலி… அது நான்… நம்ம போன பிறகு சொல்றேனே” என்றவள் தயங்கவும் அவன் முகம் இறுக்கமாக மாறியது.

“சாரி பாரதி… என் மேல கோபமா?” என்றவள் மெல்ல கேட்க,

“உரிமை இருக்குற இடத்துலதான் கோபம் எல்லாம் வரும்” என்றதும் நந்தினி காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

“வண்டியை எடு நந்தினி… எங்கயோ போகணும்னு சொன்ன இல்ல... போலாம்” என்றவன் அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசினான்.

“பாரதி என்னாச்சு? என்ன பிரச்சனை” என்றவள் வாஞ்சையாகக் கேட்டு அவன் கையை பற்றினாள். ஆனால் அவன் திரும்ப கூட இல்லை.

இறுக்கமாக அமர்ந்திருந்தான். “பாரதி என் மேல என்ன கோபம் உனக்கு” என்றவள் அவன் கரத்தை பிடிக்க வரவும் அவன் உடனடியாக காரை விட்டு இறங்கிவிட்டான்.

அவளும் அவன் பின்னோடு இறங்கி, “பாரதி ப்ளீஸ் ப்ளீஸ் கார்ல ஏறு… இங்க சேப் இல்ல” என்றவள் கெஞ்சி அவன் கையை பிடித்து இழுத்து வந்து காரில் ஏற்றிவிட்டாள். 

அதன் பின் அவள் அவனிடம் பேச முயலவில்லை. அவனும் எதுவும் பேசவில்லை. அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது. இத்தனை வருடங்களாக அவன் அருகாமைக்காக அவள் ஏங்கித் தவித்திருக்கிறாள். அவன் காதலைத் தாண்டி அவன் மட்டுமே தனக்கான ஒரே உறவாகவும் ஆதரவாகவும் இதுநாள் வரை அவள் நம்பி கொண்டிருக்கிறாள்.

அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நாட்களாகத்தான் அவன் உடன் இருக்கும் வாய்ப்பு அவளுக்குக்கிட்டியிருக்கிறது. ஆனால் அப்போதும் தன் மனதை அவனுக்குப் புரிய வைக்க முடியவில்லையே என்று வருந்தியவளுக்குக் குறைந்தபட்சம் ஒரு உறவாகக் கூட அவன் தன்னை மதிக்கவில்லை என்பதுதான் அவளுக்கு வலியாக இருந்தது.

அன்று மாலையே இருவரும் ஊட்டி வந்தடைந்தனர். அங்கிருந்த பங்களாவில் இறங்கி குளித்து முடித்து சாப்பிட்ட பின்னர் அவள் பாரதியிடம், “நம்ம நைட்டே இங்கிருந்து கிளம்புறோம்… நம்ம வந்த வண்டியில போக வேண்டாம்… அன் நம்ம வெளியே போனது கூட யாருக்கும் தெரியாம போகணும்” என்றாள்.

அவன் எந்தவித கேள்வியும் கேட்கவில்லை. மௌனமாக இரவு அவள் காட்டிய வழியில் அந்த பங்களாவை விட்டு திருட்டுத்தனமாக வெளியேறி வந்தனர். இருவரும் ஜெர்கினில் தலையை மறைத்துக் கொண்டனர். அதன் பிறகு அங்கிருந்து சில தூரம் நடந்த பிறகு ஒரு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

“நம்ம இதுலதான் போறோம்” என்றவள் சாவியை எடுக்கப் போக,

“நான் ஓட்டுறேன்” என்றவன் சாவியை பெற்றுக் கொள்ள அவளும் சந்தோஷமாக அவன் பின்னே அமர்ந்து கொண்டாள்.

அந்த குளிர்ந்த காற்றில் அவன் பின்னோடு நெருக்கமாக அமர்ந்து வருவது அவளுக்குக் குதுகலமாக இருந்தது. காற்றிலேறி பறப்பது போல மயக்கத்தில் வந்தவளிடம்,

“இப்பயாச்சும் மேடம் எங்க போறோம்னு சொல்றீங்களா?” என்றான்.  

“கேரளா எல்லையில் இருக்க முத்தங்கி காடு”

“கேரளா வரைக்கும் பைக்லயா?” என்றவன் அதிர்ச்சியாக,

“வேற வழி இல்ல… இதுல போனாதான் நம்மல யாரும் பாலோ பண்ண மாட்டாங்க” என்றாள்.  

“யார் நம்மல பாலோ பண்ணுவாங்க? எதுக்கு? அப்படி என்ன ரகசியமான இடத்துக்கு நம்ம போக போறோம்” என்றான்.

“போன பிறகு உனக்கே தெரியும் பாரதி” என்றவள் சொன்ன பிறகு அவன் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. வண்டியை இயக்குவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தினான்.

லேசான மழைச் சாரல் வீசியதில் அவள் மனதிலும் காதல் சாரல் வீசியது.  

அந்த சந்தோஷத்தில் வழித்தடம் மாறியதை கூட அவள் கவனிக்கவில்லை. கொஞ்ச தூரம் பயணித்த பின்னே நந்தினியை அதனை உணர்ந்து, “பாரதி ராங் ரூட்ல போயிட்ட” என்று கூற,

“அப்படியா?” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “யார்கிட்டயாவது வழி கேட்கலாமா?” என்றான்.

“இல்ல பாரதி… அது சரியா வராது” என்றவள் குழம்பி நிற்கும் போது லெனினிடமிருந்து அழைப்பு வந்தது.

உடனடியாக அழைப்பை ஏற்றவள், “தேங்க் காட்… நீயே ஃபோன் பண்ணிட்ட” என்றவள் பெருமூச்சுவிட,

“அங்கே ஏதாச்சும் பிரச்சனையா… என்னாச்சு? ஏன் உடனே கால் பண்ண சொல்லி மெஸஜ் பண்ண… நான் இப்பதான் வெளியே வந்தேன்… உன் மெசேஜ் எனக்கு இப்பதான் ரீச்சாச்சு” என்க,

“ஒகே ஒகே இப்போ நாங்க அங்கேதான் வந்திட்டு இருக்கோம்… கொஞ்சம் ரூட் மாறிட்டோம்” என்றதும் லெனின் அதிர்ச்சியானான்.

“நீ இங்க வரியா? பைத்தியமா உனக்கு… நம்ம மாட்டிக்க மாட்டோமா?”

“அதெல்லாம் மாட்டோம்… எனக்கு நீ ரூட் மட்டும் சொல்லு”

அவன் கடுப்பான போதும் அவளுக்குச் சரியான வழியை எடுத்துரைத்துவிட்டு, “நான் சொன்ன இடத்துக்கு வந்துடுங்க… நான் வெயிட் பண்றேன்” என்றாள்.

“ஒகே அப்போ வந்துட்டு கால் பண்றேன்”   

“ஆமா எங்களைன்னு சொன்னியே… உன் கூட யாரு வரா?”

“நான் வந்த பிறகு எல்லாமே சொல்றேன்” என்றவள் பட்டென இணைப்பை துண்டித்துவிட்டாள்.

லெனினிற்கு நந்தினி என்ன திட்டத்தோடு இங்கே வருகிறாள் என்று கணிக்க முடியவில்லை.

மணி 3.06 அவர்கள் இருவரும் அந்த காட்டின் பாதையை அடைய, லெனின் அவர்களுக்காகக் காத்திருந்தான். அவன் பாரதியைப் பார்த்த அடுத்த நொடி நந்தினியை உஷ்ணமாகப் பார்த்தான்.

ஆனால் இருவருமே எதுவும் பேசவில்லை. அவர்கள் குடிலுக்குள் வந்து சேர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது.

மணி 3.56 குளிர் பயங்கரமாக இருந்தது. ஜீப்பிலிருந்து மூவரும் இறங்கினர். நந்தினி நேராக பாரதியிடம் சென்று, “அறிவு மாமா உள்ளேதான் இருக்காரு… போய் பாரு” என்றதும் அவன் புருவங்கள் சுருங்கின.

“இங்கயா?”

“ஹ்ம்ம்”

“தமிழ் நாட்டோட சி எம் நடுகாட்டுல இருக்காருன்னு சொல்றியா?” என்றவன் அவளை ஏளனமாக பார்க்க,

“ஆமாம் பாரதி… அவர் உள்ளேதான் இருக்காரு… நீ வா” என்றவள் அவன் கையை பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல முற்பட பாரதி அவள் கையை உதறிவிட்டான்.

“அப்போ அந்த முகுந்தன் சொன்ன மாதிரி நீ சி எம்மை கடத்தி வைச்சு இருக்க” அவன் குரல் கடுமையாக, நந்தினி அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

லெனினிற்கு அவர்கள் இருவரின் சம்பாஷனைகளும் புரியவில்லை.

“முகுந்தன் உன்னை கிரிமனல்னு சொன்னான்… நீ செய்றது எல்லாமே கிரிமினல் வேலைன்னு சொன்னான்… ஆனா நான் நம்பல… இப்போ நீ சொல்றதை கேட்டா”  என்றவன் கடுகடுத்தபடி

“அப்போ இது உண்மைனா… நான் ஜெயில் போயிருந்த சமயத்துல நீ துர்காவை கொலை பண்ண ட்ரை பண்ணது உண்மையா” என்று கேட்டதும்,

“ஸ்டாப் இட் பாரதி… நான் துர்காவை கொலை பண்ண ட்ரை பண்ணல” நந்தினி ஆக்ரோஷமாகக் கத்தினாள்.

“அப்படின்னா நீ முகுந்தன் கிட்ட பேசுன டீல்… அதுவும் பொய்யா நந்தினி?” என்றவன் நிதானமாகக் கேட்டு அவளைக் கூர்மையாகப் பார்க்க நந்தினி ஊமையானாள்.

ஆனால் உள்ளூர அவள் உள்ளம் கொந்தளித்தது.

‘டபுள் கேம் ப்ளே பண்ணிட்ட இல்ல முகுந்தா?’ என்று பொறுமிய அதேசமயம் முகுந்தன் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகள் குழுவுடன் உரையாடி கொண்டிருந்தான்.

சரியாக அப்போது மணி 4.10  

“சி எம் இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சு… உடனே ஒரு ரெஸ்கியு டீமை ரெடி பண்ணுங்க… சிக்ரெட்டா இந்த ஆப்ரேஷனை முடிக்கணும்… ஒகே” என்றவன் பேச,

“கேரளா பார்டர் சார்… நம்ம கேரளா கவர்மென்ட் கிட்ட பேசணும்… பாரஸ்ட் ஆபீஸர்ஸ் கிட்டயும் இன்பார்ம் பண்ணனும்” என்றான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… நாம உடனே கிளம்பணும்” என்று முகுந்தன் சொன்ன நொடி,

“நீங்க வர வேண்டாம் சார் ரிஸ்க்… உங்க பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம்… நாங்க போறோம்” என்று மூத்த அதிகாரி உரைக்க,

“இல்ல… நானும் வருவேன்” என்று முகுந்தன் முடிவாகச் சொல்லிவிட்டான்.

உயர் அதிகாரிகளுடன் இப்படியான ஆபத்தான சமயங்களை எதிர்கொள்ளும் பயற்சி பெற்ற குழு ஒன்றிணைந்து புறப்பட ஆயத்தமாகினர்.

மணி 4.53 ஹெலிகாப்டர் இறக்கைகள் சுழன்று வானில் பறந்தன.  

 அந்த குழுவில் உள்ளவர்கள் மனதில் முதலமைச்சரை பாதுகாப்பாக எப்படி மீட்கப் போகிறோம் என்ற திட்டமிடலைச் செய்து கொண்டிருக்க முகுந்தன் மனதில் ரகசியமாக ஒரு திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தான்.

நந்தினியும் பாரதியையும் அங்கேயே முடித்துவிட வேண்டும். 

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content