You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E29

Quote

29

கட்டுப்பாடின்றி வேகமாக உருண்டு விழுந்த பாரதி மரத்தின் தண்டில் இடித்து நிறுத்தப்பட்டான்.

அவனுக்கு அந்த நொடி இதே போன்று சிறு வயதில் படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.  

தலையில் பலமாக அடிப்பட்டு விழுந்த போது, “பாரதிஈஈஈஈ” என்ற ஒரு சிறு பெண்ணின் கதறல் அவன் காதில் இப்போது ஒலித்தது. அழுத்தமாக ஆழமாக ஒலித்தது.

நிச்சயமாக அவள் நந்தினிதான். அந்த கள்ளங்கபடமில்லா முகம் அவன் நினைவில் ஒரு நொடி மின்னலெனத் தோன்றி மறைந்தது.

‘உன் கூட நான் எப்பவும் இருப்பேன்… நீ பயப்பாடதே நந்தினி’  அவள் கைகள் பிடித்து சொன்ன தைரிய வார்த்தைகள்.

‘நான் விட மாட்டேன்… உங்களை பத்தி நான் அப்பாக்கிட்ட சொல்லுவேன்’ என்றவன் யாரிடமோ கண்டிப்பான தொனியில் சொன்ன வார்த்தைகளும் அவன் மூளைக்குள் மங்கலான காட்சியாகத் தெரிந்தன.

ஏதோ பார்க்க கூடாத ஒன்றை பார்த்தது போல அவன் உள்ளம் பதறித் துடித்தது.

“நீ உயிரோட இருந்தாதேனே டா” என்று வெறிகொண்டு அவனை மாடி படிக்கட்டில் இருந்து தள்ளிவிட்ட அந்த கைகள்!

அதன் பின் சுத்தமாக நந்தனி உட்பட நடந்த எல்லாவற்றையும் அவன் மறுந்து போனது. அரைகுறையாக இவையெல்லாம் அவன் நினைவுக்கு வந்த அதேநேரம் நெற்றியிலிருந்து இரத்தம் வடிந்து அவனை மயக்க நிலைக்கு தள்ளியது.

அவன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மயக்கத்தில் கிடந்தான். சூரிய ஒளி அவன் முகத்தில்  சுளீரென்று அடிக்கவும்தான் அவன் மயக்கம் தெளிந்தது.

நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். இரத்தம் உலர்ந்திருந்த போதும் வலி உயிர் போனது. மேலும் கை கால்களில் ஏற்பட்ட சிராய்ப்புகளால் உடலெல்லாம் எரிந்தது.

அந்த சரிவில் நந்தினி அவனைத் தள்ளி விட்டது நினைவுக்கு வந்தது. அவள் ஏன் அப்படி செய்தால்?

நடந்தவை எல்லாம் முன்னுக்குப் பின் முரணாகக் குழப்பத்தை உண்டுபண்ணியது. எந்த பக்கம் செல்வதென்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது வெகுதூரத்தில், “ஆஅ அம்ம்ம்ம்மமா” என்ற பயங்கரமான அலறல்.

அது நந்தினியின் குரல்தான் என்று கணித்தவனுக்கு அவளுக்கு என்ன நேர்ந்ததோ என்ற பதட்டம் உண்டாக அந்த சரிவான பாதையின் வழியாக மேலேறினான்.

அவள் குரலில் மிகுந்த வலியும் வேதனையும் தெரிந்தது. திரும்பத் திரும்ப அவளின் கதறல் கேட்டபடியே இருந்ததில் படபடப்பானவன் வேகவேகமாக மேலே ஏறிவந்தான்.

நான்கு காவலர்கள் சேர்ந்து பெண் என்றும் பாராமல் நந்தினியைக் கொடூரமாக அடித்து கொண்டிருந்தனர். சிகரட்டை பிடித்தபடி முகுந்தன் அந்த காட்சியை ரசித்துப் பார்த்திருக்க, பாரதிக்கு யாரோ அவன் இதயத்தை கசக்கிப் பிழிந்தது போல வலித்தது.

அவர்கள் விடாமல் நந்தினியின் வயிற்றில் ஓங்கி மிதித்த காட்சியைப் பார்த்து பாரதி பதறிப் போனான்.

“அம்ம்ம்ம்ம்மா” என்றவள் வலியால் அலறி துடிக்க அவர்கள் இன்னும் கோரமாக அவளை தாக்கியபடி இருந்தனர்.

அவள் உடல் முழுவதும் இரத்த தடங்கள். அவள் அழகு வதனத்தை இரக்கமே இல்லாமல் அடித்துச் சிதைத்திருந்தனர். மிருகங்கள் கூட முதலில் தான் வேட்டையாடும் மிருகத்தின் கழுத்தைக் கவ்வி அதன் உயிரை எடுத்துவிட்டு பின்புதான் புசிக்கும். ஆனால் நந்தினிக்கு நடந்திருக்கும் இந்த கொடூரத்தை அவனால் பார்க்கவும் முடியவில்லை. 

அவள் துடிக்கத் துடிக்க அவர்கள் அவளை அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்கள். 

“நம்ம போயிடலாம் பாரதி” என்று அவள் திரும்ப திரும்ப சொன்னதன் அர்த்தம் அவனுக்கு இப்போது விளங்கியது.

“ஐயோ! நான் பெரிய தப்பு செஞ்சுட்டேனே” என்று வெகு தாமதமாக தன் தவற்றை உணர்ந்தவன் வெடித்தழதபடி அந்த காவலர்களைத் தள்ளிவிட்டு நந்தினியின் தேகத்தை தன் மடியில் கிடத்தி வருந்தினான்.

“என்னை மன்னிச்சிடு நந்தினி… என்னை மன்னிச்சிடு…  நான் தப்பு செஞ்சுட்டேன்… உனக்கு இப்படி ஆகும்னு தெரியாதே” என்றவன் கதறிய காட்சியை பார்த்து முகுந்தன் உட்பட எல்லோரும் விசித்திரமாகப் பார்த்தனர்.

“ஒரு பொண்ணை போய் இப்படி காட்டு மிராண்டித்தனமா அடிச்சிருக்கீங்க… சை! என்ன மாதிரி ஜென்மம்டா நீங்கெல்லாம்…” என்றவன் கோபமாக பொங்க,

“முதல அவ எல்லாம் பொண்ணே இல்ல… இராட்சசி… பிசாசு” என்று முகுந்தன் பதில் கூறிய அதேநேரம் பாரதியின் அருகில் அமர்ந்து,

“அவ உங்க அப்பாவை கடத்தி கொண்டு வந்து கொன்னுட்டா… அது தெரியுமா உனக்கு” என்றான் நிதானமாக!

அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்த பாரதி, “அவ என்ன வேணா செஞ்சிருக்கட்டும்… அதுக்கு இப்படி இரக்கமே இல்லாமல் ஒரு பொண்ணை அடிப்பீங்களா? நீங்கெல்லாம் நல்ல அம்மா அப்பாவுக்கு பொறுந்தவங்களா இருந்தா இப்படி ஒரு கொடூரத்தை செய்வீங்களாடா… உங்களை எல்லாம் மிருக ஜாதில கூட சேர்த்துக்க முடியாது..” என்றவன் காட்டமாகக் கேட்க அங்கு நின்றிருந்த காவலர்கள் எல்லோரும் பாரதி மீது பாய வந்தனர்.

முகுந்தன் அவர்களை கை காட்டி தடுத்துவிட்டு அமர்ந்த வாக்கில் பாரதியையும் நந்தினியையும் ஒரு பார்வை பார்த்தவன், “உனக்கு இவதான் வேணும்னா… நீயும் இந்த காட்டுக்குள் கிடந்து செத்து போவ… இல்ல உனக்கு துர்கா கூட வாழணும்னு ஆசை இருந்துச்சுனா… இவளை இங்கேயே விட்டுட்டு என் கூட கிளம்பு… போலாம்” என்றான்.

பாரதிக்கு ஒரு நொடி மூச்சே நின்று போனது.

“உனக்கு துர்கா வேணுமா வேண்டாமா?” என்று முகுந்தன் மீண்டும் கேட்க பாரதியால் பதில் பேச முடியவில்லை. அவன் கண்களில் கண்ணீர் வழிந்து நந்தினியின் நெற்றியில் விழுந்தது.

முகுந்தன் பாரதியிடம் சொன்னது அவள் செவிகளையும் எட்டியது.

நந்தினி மெல்ல பாரதியின் கன்னத்தைத் தொட்டு, “நீ… நீ ப்ப்ப்ப்ப் போ… யிடு பா… பா ரதி” என்றாள். மிக சிரமப்பட்டு அவள் இதழ் பிரித்துப் பேச பாரதி கண்கள் கண்ணீரால் நிரம்பியது.

“முடியாது… என்னால முடியாது… உன்னை இங்க இப்படியொரு நிலைமையில என்னால விட்டுட்டு போக முடியாது” என்று அவன் அவளை தன்னோடு இறுக அணைத்து கொண்டான்.

வருட காலமாக அவள் ஏங்கி தவித்ததை அவனின் இந்தவொரு அணைப்பிற்கும் வார்த்தைக்கும்தானே!

ஆனால் அது கிடைக்கபெறும் போது அவள் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு வெகுதொலைவு சென்று கொண்டிருந்தது.

“நீ இப்…ப்படி சொன்னதே எனக்கு போதும்… ப்ளீ.. ஸ் பா ரதி… சாக போற எனக்காக உன்… உன் வாழ்க்கையை இழந்துடாதே… துர்காவும் நீயும்” என்று நந்தினி தட்டுதடுமாறி சொல்ல, பாரதி மறுப்பாகத் தலையாட்டினான்.

“துர்கா என்ன நிலைமையில இருக்காளோ ன்னு எனக்கும் கவலையாதான் இருக்கு… ஆனா என் கண்ணுக்கு முன்னாடி நீ இப்படி கிடக்கும் போது என்னால எப்பாடி துர்காவை பத்தி யோசிக்க முடியும்… என்னால முடியாது”

“அப்படினா… நீயும் இங்கேயே கிடந்து இவ கூடவே சாக வேண்டியதுதான்” என்று முகுந்தன் அலட்சியமாகச் சொல்லிவிட்டு தன் கரத்திலிருந்து சிகரெட்டை தூக்கியெறிந்துவிட்டு துப்பாக்கியை எடுத்தான். 

“உன் கோபத்தை வஞ்சத்தை எல்லாம் என்கிட்ட தீர்த்துக்கோ… என்னை சுடு… நந்தினியும் துர்காவையும் விட்டுடு முகுந்தா” என்றவன் இறைஞ்சுதலாக கேட்க,

“துர்கா” என்று சொல்லி சத்தமாக சிரித்த முகுந்தன் துப்பாக்கியை உயர்த்தி பிடித்துக் கொண்டே,

“உன்கிட்ட நந்தினியா துர்காவான்னு கேட்டதே ஒரு ட்ரிக்… நீ துர்கா முக்கியம்னு சொல்லி இருந்தாலும் நான் உன்னை விட்டிருக்க மாட்டேன் பாரதி” என்றவன் சூட்சமமாக சொல்லி சிரிக்க, பாரதி அவனை புரியாமல் பார்த்தான்.

“இங்கேதான் கதையில ஒரு பெரிய ட்விஸ்ட்” என்று சொல்லி மீண்டும் பயங்கரமாக சிரித்தவன் அந்த அதிர்ச்சிகரமான உண்மையை போட்டு உடைத்தான்.

“துர்கா என்னோட ஆளு… உன் வாழ்க்கையை நிர்மூலமாக்க நான் அனுப்பின ஆளு” என்றவன் சொன்ன நொடி பாரதியின் பார்வை உஷ்ணமாக மாறியது.

“நீ இப்படியெல்லாம் சொன்னா… நான் நம்புவேனா?” என்று பாரதி தீர்க்கமாக உரைக்க,

“நம்ப மாட்டியா… சரியான இமோஷனல் இடியட்டா நீ?” என்ற முகுந்தன் தன் கைப்பேசியிலிருந்து படங்களைக் காட்டி,

“இந்த போட்டோஸ் கொஞ்சம் பாரு” என்றான்.

முகுந்தனும் துர்காவும் மிகவும் நெருக்கமாக இருந்த படங்கள் அவை. அவள் தோற்றமும் உடையும் முற்றிலும் வேறு பாணியில் இருந்தது. 

அவன் தலை கிறுகிறுத்தது. துர்கா தன்னிடம் பொய்யுரைத்திருப்பாள். தன்னை காதலித்து ஏமாற்றியிருப்பாள். தன் இரக்க குணத்தை அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பாள். இப்படியெல்லாம் அவனால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லையே!

அதெப்படி முடியும்? அதெப்படி?

உருகி உருகி அவள் தன்னை காதலித்ததன் பின்னணியில் இத்தனை போலித்தனமா?

எப்படி யோசித்தாலும் துர்காவின் அன்பை பொய்யென்று அவனால் எண்ணவே முடியவில்லை.

அன்பின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவன்.

அன்பு மட்டுமே அவன் அம்மா அவனுக்கு போதித்த நீதி.

துர்கா தன்னை வீழ்த்த அந்த அன்பையே ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறாள். அவனால் ஏற்கவே முடியவில்லை. அப்படியே பாரதி சிலையாகச் சமைந்துவிட்டான்.

நந்தினிக்குமே முகுந்தன் சொன்னதை நம்ப முடியவில்லைதான். ஆனால் துர்காவைப் பற்றி அவள் முன்னமே கொண்டிருந்த சந்தேகங்கள் குழப்பங்கள் முகுந்தன் சொன்ன உண்மையோடு பொருந்திப் போனது.

ஆனால் இந்த உண்மை பாரதியின் மனதை எந்தளவு காயப்படுத்தியிருக்கும் என்பதை நந்தினியால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் பாரதியின் கன்னங்களை ஆதரவாகத் தடவ, அவனிடம் எந்த அசைவும் இல்லை. அவனுடைய உலகம் சுழலாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. அந்த உண்மையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

“ஏன் டா? ஏன் டா… இப்படி பண்ண?” என்று நந்தினி ஆற்றாமையோடு முகுந்தனைப் பார்க்க,

“உன் காதல் ஜெய்க்க கூடாதுடி… நீ பாரதி கூட சேரவே கூடாது…  அதுக்காகதான்… அதுக்காகதான் இப்படி பண்ணேன்” என்றவன் குரோதமாகச் சொல்லிச் சிரிக்க பாரதி அவனை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான்.

அப்போது முகுந்தன் துப்பாக்கியை பாரதியை நோக்கி சுட்டான்.

ஆனால் பாரதியின் நெஞ்சில் பாய இருந்த குண்டை நந்தினி அவனை அணைத்து பிடித்து தன் கழுத்தில் வாங்கி கொண்டாள்.

 குபீரென்று ரத்தம் பீறிட்டு  பாரதியின் உடலை நனைத்தது. அவன் கரத்திலிருந்து அவள் தலை பின்னோடு உயிரற்று சரிய,“நந்தினி…” என்று அவளை அணைத்து பிடித்து கதறி அழுதான்.

அவன் தொண்டயைலிருந்து வெடித்து வந்த அழுகையில் பட்சிகளெல்லாம் படபடத்தன. மிருகங்கள் ஒலமிட்டன. அவற்றோடு புலியின் உறுமலும் அவற்றோடு கலந்து கேட்டதில் அங்கே நின்றிருந்த எல்லோரின் உடலும் அச்சத்தில் குலுங்கியது.

“சார்… வாங்க சார் ஓடிடலாம்… பக்கத்துல புலி இருக்கு சார்” என்று காவலர்கள் பதற முகுந்தனின் கவலை பாரதியை உயிரோடு விட்டு போவதுதான்.

“இவன் உயிரோட இருக்கானே”

“சார்… வேணா சார்… திரும்பியும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டா நமக்கே ஆபத்தா முடிஞ்சிடும்… சார் நம்ம கிளம்புவோம்… புலி நம்ம வேலையை செஞ்சுடும்… வாங்க” என்றவன் துரிதப்படுத்த, முகுந்தனுக்கும் வேறு வழியில்லை.

பாரதியை பார்த்த போது அவன் இப்போதைக்கு அந்த சோகத்திலிருந்து மீண்டு வருவான் என்று தோன்றவில்லை. அவனால் பெரிதாக ஆபத்தும் எதுவுமில்லை.

நந்தினியின் கதை முடிந்தது என்ற திருப்தியோடு முகுந்தன் அவர்களோடு விரைந்துவிட்டான். அடுத்த மூன்று மணி நேரத்தில் அவன் சென்னையில் இருந்தான்.

அவன் மனதில் ஒரு பெரிய திட்டத்தை வகுத்து கொண்டான். ஒரு பெரிய அரசியல் நாடகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.

அறிவழகன் உடலை அவன் முன்பாகவே மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டான். அவர் கடத்தப்பட்ட செய்தியை மறைத்துவிட்டு அவர் இறந்த செய்தியை மட்டும் அறிவித்து முதலமைச்சர் பதவியில் தான் அமர வேண்டும் என்பதுதான் அவன் திட்டம்.

ஆனால் அவனின் ஒரே யோசனை அறிவழகனின் இறப்பை மக்களும் கட்சிக்காரர்களும் நம்பும்படி எப்படி கொண்டு சேர்ப்பது என்பதுதான்.

மற்றபடி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவது அவனுக்கு ஒரு விஷயமுமில்லை. ஆளுக்கு ஏற்றார் போல் பெட்டியை கொடுத்தால் விஷயம் சுமுகமாக முடிந்துவிடும்.

இதெல்லாம் இன்றே இப்போதே செய்து முடிக்க வேண்டும். வர்மா ஜீ யிடம் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறாக அடுத்தடுத்து செய்ய வேண்டிய முக்கிய வேலைகளைப் பற்றி யோசித்தபடி தன் சென்னை அலுவலகம் வந்து சேர்ந்தவனுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

சில நிமிடங்களுக்கு முன்பாக தீபம் சேனலில் ஒளிப்பரப்பட்ட முக்கிய செய்தி!

அந்த செய்தி தமிழகம் முழக்கவும் தீயாக பற்றிக் கொண்டது.

கல்வி அமைச்சர் முகுந்தன் கல்வி நிறுவனங்களில் செய்த ஊழல்கள், லஞ்சம் வாங்கி கொண்டு சில தகுதியற்ற நிறுவனங்களுக்கு கொடுத்த அங்கீகாரங்கள் என்று குற்றச்சாட்டுகள் வரிசையாக நீண்டன.

 ஆதாரங்களுடன் அவையெல்லாம் செய்தி சேனலின் ஒளிபரப்பானது எப்படியென்று தெரியவில்லை. அவன் தன் செல்பேசியில் பேசிய சில ரெகார்ட்கள் கூட இருந்தது.  

அப்படியே இருக்கையில் விழுந்தான்.

“நான் செத்தாலும் நிம்மதியா உன்னை வாழ விடமாட்டேன் டா…  நீ நினைச்சதை நடக்கவே விட மாட்டேன்” என்று நந்தினியின் சூளுரை அவன் காதில் கேட்டது.

ஒரே நொடியில் அவன் திட்டம் மொத்தத்தையும் சிதறடித்துவிட்டாள்.

அடுத்த நாள் காலை தீபம் தொலைக்காட்சியில் செய்தியாக வர வேண்டுமென்று விமானநிலையத்தில் நந்தினி தன் காரியதரிசி உதயிடம் கொடுத்த விரலியிலிருந்த  (பென் டிரைவ்) தகவல் இதுதான். 

தற்சமயம் முகுந்தனின் அலுவலக தொலைப்பேசியும் அவன் கைப்பேசியும் மாறி மாறி அலற அவற்றை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தவன், “அடியேய் நந்தினிஈஈஈஈ…” என்று பைத்தியம் பிடித்தவன் போல கத்தினான். கதறினான். அங்கிருந்த பொருள்களைத் தள்ளிவிட்டான்.

ஆனால் நடந்ததை மாற்ற முடியாது. இனி நடக்கப் போவது என்ன என்பதுதான் கேள்வி. 

******முதல் பாகம் முடிவுற்றது*****

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

Quote

Wow! Excellent sis ovvoru epiyum viruviruppu kuraiyavey illai. Nandhini character extraordinary. Mudhal paagam mudivu pettra idam seat edge thriller. Going to start part 2 

monisha has reacted to this post.
monisha
Quote

ப்ப்பாஆஆஆ!! செம்ம ஸ்டோரி❤️‍🔥

 

monisha has reacted to this post.
monisha

You cannot copy content