You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E38

Quote

38

மாலை சூரியனின் வெளிச்ச கீற்றுகள் மெல்ல மறைந்து சிறுமலை முழுவதுமாக இருள் கவ்வியது.

மாலதி மயக்கம் தெளிந்து கண் விழித்தாள். தான் எங்கே இருக்கிறோம் என்று அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அருகே பாயில் மயக்கத்தில் படுத்திருந்த கண்ணனைப் பார்த்த நொடிதான் அவளுக்கு கார் மோதி விபத்து நிகழ்ந்தது நினைவுக்கு வந்தது.

கண்ணனின் நெற்றியிலிருந்த காயத்திற்கு யாரோ மருந்து வைத்துக் கட்டுக் கட்டியிருப்பது தெரிந்தது.

 “கண்ணா என்னாச்சு உனக்கு?” என்று பதறியவள் குற்றவுணர்வோடு அவன் கரத்தை பற்றிக் கொண்டு, “சாரி கண்ணா… எல்லாம் என்னாலதான்… நான்தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்து…” என்று அவன் கைகளைப் பற்றி அவள் கண்ணீர் வடிக்க,

“அழாதீங்க ம்மா… அவருக்கு ஒன்னும் இல்ல… சின்ன காயம்தான்… நல்லா இருக்காரு… இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாரு” என்ற பின்னிருந்த கேட்ட பெண்ணின் குரலில் அவள் திரும்பி பார்த்தாள்.

எளிய தோற்றதிலிருந்த அப்பெண்ணை மாலதி குழப்பமாக நோக்க, “இருங்க… குடிக்க டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

மாலதி அந்த இடத்தை சுற்றிலும் பார்வையிட்டாள். அது ஒரு சிறிய வீடு.

அந்த சமயத்தில் கண்ணன் வலியோடு முனகிய சத்தம் கேட்டது.

“கண்ணா கண்ணா” என்றவள் அவன் கைகளை பற்றிக் கொள்ள அவன் மெல்ல கண் விழித்தான். கண்ணீர் நிரம்பிய அவள் விழிகள்தான் அவன் முகத்திற்கு நேராக வந்து நின்றது.

அவனுக்கு நடந்தவை எல்லாம் நினைவு வந்தது. நெற்றியில் ஏற்பட்ட காயத்தில் லேசாக அவன் முகத்தைச் சுருக்கவும், “ரொம்ப வலிக்குதா” என்று அவள் வாஞ்சையோடு கேட்க,

“பரவாயில்ல” என்றபடி எழுந்து அமர்ந்தவன், “உனக்கு ஒன்னும் இல்ல மாலு” என்று அதே பதட்டத்தோடு அவளிடம் வினவ,

“உஹும்  இல்ல… நான் நல்லா இருக்கேன்” என்றாள்.

 அவள் உடனே “சாரி கண்ணா” என்று சொல்ல,

“ஏய் நீ எதுக்கு சாரி கேட்குற? நான்தானே வண்டியை ஓட்டிட்டு வந்து  இடிச்சிட்டேன்” என்றான்.

“இல்ல… நான்தான் உன்னை தேவையில்லாம இங்கே கூட்டிட்டு வந்து இப்படியெல்லாம் ஆகிடுச்சு… நான்தான் உன்கிட்ட சாரி கேட்கணும்” என்றவள் பதிலுக்குக் கூற,

இருவரின் பார்வையும் ஒரு சேர கலந்தன. அவள் கரத்தை எடுத்து அவன் தன் கைக்குள் வைத்து கொள்ள, சரியாக அந்த சமயத்தில் தேநீரோடு அப்பெண் வந்து சேர்ந்தாள்.

“எடுத்துக்கோங்க” என்றவள் சொல்லவும் இருவருமே ஆச்சரியமாக அவளை பார்க்க, “எடுத்துக்கோங்க” என்றவள் வற்புறுத்தி இருவர் கரத்திலும் தேநீர் கோப்பையைக் கொடுத்தாள்.

இருவரும் தேநீரை பருகிய பின் மாலதி நன்றியுணர்வோடு,  

“தேங்க்ஸ் ங்க… எங்களை காப்பாத்தி கூட்டிட்டு வந்து… மருந்தெல்லாம் போட்டு” என்று சொல்லும் போதே இடைமறித்தவள்,

“ஐயோ! நான் உங்களை காப்பாத்தல…  சார்தான் கூட்டிட்டு வந்தாரு” என்றவள் மேலும், “ஹாஸ்பெட்டில் போனோம்னா மலைக்கு கீழேதான் இறங்கனும்… இல்லைனா மலைக்கு மேல போகணும்… அதனாலதான் சார் உங்க இரண்டு பேரையும் எங்க டீக்கடைக்கு கூட்டிட்டு வந்து ஃபர்ஸ்ட் எயிட் பண்ணாரு” என்றாள்.

“எங்களை காப்பாத்துனவரு இப்போ எங்கே?” என்று மாலதி ஆர்வமாக வினவ,

“வெளியே நிற்குறாரு” என்றாள்.

மாலதியும் கண்ணனும் அந்த நபரை பார்த்து நன்றி உரைக்க வெளியே வந்தனர். அவனை பார்த்த கணத்தில் மாலதி வியப்பின் விளம்பில் அப்படியே மௌனித்து நின்றுவிட்டாள்.

இதைத்தான் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வார்கள் போலும்?

அவர்கள் பேசுவதற்கு முன்பாக அந்த நபர் முந்தி கொண்டு, “உங்க இரண்டு பேருக்கும் ஒன்னும் இல்ல இல்ல… இப்போ எப்படி இருக்கீங்க… பரவாயில்லயா?” என்று நலம் விசாரிக்க, மாலதியின் மனமோ உள்ளூர சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

“உங்க காரை அந்தப் பக்கமா நிறுத்தி இருக்கேன்… பார்த்து பத்திரமா ஓட்டிட்டு போயிடுவீங்களா?” என்றவன் மேலும் அக்கறையோடு கேட்க,

“போயிடுவோம் சார்… ஒன்னும் இல்ல… நல்லா இருக்கோம்…  தேங்கஸ்… நீங்கதான் கூட்டிட்டு வந்து பர்ஸ்ட் எய்ட் எல்லாம் பண்ணீங்கன்னு அந்த அக்கா சொன்னாங்க” என்று பதிலுரைத்த கண்ணன் மெல்ல மாலதியின் காதோடு ரகசியமாக,

“ஏய் மாலு.. இவர்தானே நம்ம தேடி வந்தவரு… எனக்கு டவுட்டா இருக்கு” என்று கேட்டுவிட்டு, “ஏன் பேசமால இருக்க… பதில் சொல்லு” என்றான்.

 “பார்த்து பத்திரமா ட்ரைவ் பண்ணிட்டு போங்க… இந்த மலையோட டர்னிங் எல்லாம் ரொம்ப ஷார்பா இருக்கும்…  மலையை விட்டு கீழே இறங்கனதும் எதுக்கும் இரண்டு பேரும் ஹாஸ்பெட்டில் போயிட்டு போங்க” என்று அவன் கண்ணனிடம் கார் சாவியை தந்துவிட்டுச் செல்ல எத்தனிக்கவும்தான் மாலதிக்கு மூளை வேலை செய்யத் துவங்கியது.

 “ஒரு நிமிஷம்” என்றபடி முன்னே சென்று நின்றவள்,

“உங்க பேர் பாரதிதானே” என்றவள் பரபரப்பாக கேட்டாள்.  

“என் பேர் எப்படி உங்களுக்கு?” என்று அவன் குழப்பமாக அவளை ஆராய்ந்து பார்க்க,

“அப்போ நீங்கதான் பாரதி” என்று சொல்லி நிம்மதி பெருமூச்சுவிட்டவள்,

“உங்களை தேடித்தான் சார் நாங்க இரண்டு பேரும் சிறுமலைக்கே வந்தோம்… எங்ககெங்கேயோ தேடிட்டு கண்டுபிடிக்க முடியாம திரும்பும் போதுதான் இப்படி ஒரு ஆக்சிடென்ட் நடந்து போச்சு” என்றாள்.

“நீங்க யாரு… என்ன விஷயமா என்னை தேடி வந்தீங்க?” என்றவன் புரியாமல் வினவ,

“என் பேரு மாலதி… இவன் கண்ணன்… நம்மவர்னு நாங்க ஒரு யூடியூப் சேனல் நடத்திட்டு இருக்கோம்… நீங்க கூட சமீபமா அதுல பேசி இருக்கீங்க… ஒரு நிமிஷம்” என்றவள் உடனடியாக தன் கைப்பேசியை எடுத்து அந்த காணொளியைப் போட்டுக் காண்பித்தாள்.

அவன் அதிர்ச்சியாக அதனைப் பார்த்திருக்கும் போதே மாலதி அவர்கள் அவனைத் தேடி வந்த கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.

“எனக்கு புரியல… இந்த வீடியோவுக்கும் நீங்க என்னை தேடி வந்ததுக்கும் என்ன சம்பந்தம்?”

“நாங்க உங்களை தேடி வந்தது எங்களுக்காக இல்ல… தியாகு தாத்தாவுக்காக… அவர்தான் உங்களை பார்க்கணும்னு ஆசைப்படுறாரு” என்று மாலதி தியாகுவைப் பற்றி உரைக்க,

“எனக்கு நீங்க சொல்றவரு யாருன்னே தெரியாது… நீங்க தேடி வந்த பாரதி நான் இல்ல” என்றவன் அலட்டி கொள்ளாமல் கூறிவிட்டு,

“உங்க யூட்யூப்ல இருக்க என் விடியோவை எடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு விர்ரென்று தன் பைக்கில் பறந்துவிட்டான்.

மாலதி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டாள். அவன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை.

அப்போது பார்த்து கண்ணன் அவளிடம், “அப்போ நம்ம தேடி வந்த ஆளு இவரு இல்லையா?” என்றான்.

“இல்ல.. எனக்கு அப்படி தோணல” என்று குழம்பி நின்றவள், சட்டென்று ஏதோ யோசனை வந்தவளாக அந்த தேநீர் கடையிலிருந்த பெண்ணிடம் அவனை பற்றி விசாரித்தாள்.

“மலை மேல ‘நந்தினி மிளகு தோட்டம்’ இருக்கு… அந்த எஸ்டேட் ஓனர்தான் சார்” என்றவள் கூற கண்ணனும் மாலதியும் பார்வையால் தங்கள் அதிர்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

அப்போது தன் யூகம் சரிதான். ஆனால் அந்த பங்களாவிலிருந்த நபர் ஏன் மாற்றிப் பேசினார் என்றுதான் அவளுக்கு விளங்கவில்லை.

ஏதோ பெரிய சுழலுக்குள் தலையை விட்டது போல அவள் குழம்பி நின்றிருந்த அதே சமயத்தில் துர்காவின் சிந்தனையும் பாரதியை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.

முகுந்தனைச் சிறைச்சாலையில் சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து அவள் மனம் ஒருவிதமான அல்லாட்டத்திலிருந்தது.

பாரதி உயிருடன் இருக்கிறான் என்ற செய்தியை அவளால் ஏற்கவே முடியவில்லை. அவன் எங்கேயோ உயிரோடு இருக்கிறான் என்பதை எண்ணும் போதே எரிமலை குழம்பில் குளித்தது போல உஷ்ணமாகத் தகித்தாள்.

அந்த எண்ணத்தின் அடி ஆழத்தில் அவளுக்கு இருந்தது கோபம் மட்டும் அல்ல. விவரிக்க முடியாதளவுக்கான குரோதம்!

அவனை எந்தளவுக்கு அவள் நேசித்தாளோ அதைவிடவும் லட்சம் மடங்கு அதிகமாக அவனை வெறுத்தாள்.

உலகத்திலுள்ள அனைத்து வஞ்சங்களையும் ஒட்டு மொத்தமாக  அவன் மீது அவள் சேகரித்து வைத்திருந்தாள் என்று சொன்னால் அது மிகையில்லை. 

பொய்மை, துரோகம், வஞ்சம், குரோதம் என்று அவள் தன் முன்னேற்றத்திற்காக வகுத்த கொண்ட பாதையின் முதல் ஆரம்ப புள்ளி பாரதிதான். அவனைப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக தன் வாழ்க்கை பாதையையே அவள் திசை மாற்றி கொண்டாள்.

துர்கா தன் அம்மாவின் மரணத்திற்கு பிறகு பாரதியின் வீட்டில் அடைக்கலம் புகுந்தது… அவனைக் காதலித்தது… இது எதுவும் பொய்யில்லை.

ஆனால் அது ஏதோ வயது கோளாறோ அல்லது வெறும் வெளித்தோற்றத்தின் மீதான ஈர்ப்போ அல்ல. தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களினால் ஆணினத்தின் மீதே அவளுக்கு உச்சபட்சமான அவநம்பிக்கையும் வெறுப்பும் உண்டாகியிருந்தது. இதனால் ஆண்களை பார்த்தாளே ஒருவித பயவுணர்வும் அருவருப்பு உணர்வும் அவளைத் ஆட்கொண்டது.

ஆனால் பாரதியுடன் பழக ஆரம்பித்த கணத்திலிருந்து அந்த அச்ச உணர்வு மொத்தமாக வடிந்து போக, அவனருகில் அவள் ரொம்பவும் பாதுகாப்பாக உணர துவங்கினாள்.

மேலும் அவனின் குணநலன்களும் பண்போடு பழகும் விதமும் அவளைப் பெரிதுமாகக் கவர்ந்தது. மெல்ல மெல்ல அவனை தன் வாழ்வின் மொத்த நம்பிக்கையாகக் கருத ஆரம்பித்ததோடு மட்டுமல்லாது அவனை ஒரு நிஜ நாயகனாகவே தனக்குள் உருவகப்படுத்திப் போற்றவும்  ஆரம்பித்து விட்டாள்.

ஆனால் அவளது காதலை பாரதி ஏற்காதததும் ஆசிரமத்திற்கு அவளை அனுப்ப முடிவெடுத்ததும் அவளை பெரியளவில் ஏமாற்றத்தில் தள்ளியிருந்தது.

அன்று பாரதியின் அம்மா வித்யா பேசியவற்றை அவளால் இன்றளவும் மறக்கவே முடியாது.

“உன் வயசு உன்னை இப்படியெல்லாம் யோசிக்க வைக்குது துர்கா… இந்த வயசுல வர லவ் பீலிங் எல்லாம் வெறும் இன்பாக்ஸுவேஷன்… புரிஞ்சிக்கோ” என்று அவர் எடுத்துரைக்க, துர்கா சமாதானமடையாமல் அழுதபடி,

“இல்ல… நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இல்ல… நான் பாரதியை உண்மையா காதலிக்கிறேன்… அவருக்கும் என்னை பிடிக்கும்… நீங்க வேணா கேட்டு பாருங்க மிஸ்” என்றவள் வாதிட்டாள்.

“கண்டிப்பா இல்ல துர்கா… பாரதியோட சிந்தனை முழுக்க அவனுடைய லட்சியம் மட்டும்தான்… அவன் காதல் மாதிரி அற்பமான உணர்வுக்கு எல்லாம் இப்போதைக்கு இடம் கொடுக்க மாட்டான்” என்றவர் தீர்க்கமாக உரைத்தார்.

“சரிங்க மிஸ்…. அவரோட லட்சியத்தை அவர் அடையிற வரைக்கும் நான் காத்திருக்கிறேன்… அப்போ நீங்க நம்புவீங்க இல்ல… என் காதல் வெறும் ஈர்ப்பு இல்லன்னு” என்றவள் பேசியதைக் கேட்டு வித்யா எரிச்சலானார்.

“என்ன பேசிட்டு இருக்க துர்கா நீ… இந்த வயசுல உன்னோட மோட்டிவ் படிப்பா மட்டும்தான் இருக்கணும்… நல்லா படிச்சு உங்க அம்மா ஆசையை நிறைவேத்த பாரு… அதை விட்டுட்டு காதல் கீதல்னு உன் எதிர்காலத்தை ஸ்பாயில் பண்ணிக்காதே”

“அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் மிஸ்… நான் கண்டிப்பா நல்லா படிப்பேன்… ஆனாலும் என்னால பாரதியை மறக்க முடியாது” என்றவள் கூறவும் வித்யா கோபமானாள்.

“மறக்க மாட்டேன் அது இதுன்னு என்னடி லூசுத்தனமா உளறிட்டு இருக்க நீ” என்று அவர் துர்காவை கத்தவும் அவள் முகம் வாடி வதங்கியது.  

ஏமாற்றமாகத் தலையைத் தாழ்த்திக் கொண்டு, “எனக்கு புரியுது மிஸ்…. உங்க பிரச்சனை என் வயசோ படிப்போ இல்ல… நான் ஒரு அனாதை… அதனாலதான் நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க” என்றவள் உரைக்க, வித்யா தலையிலடித்து கொண்டார்.

அவளுக்கு எப்படி புரியவைப்பதென்று தவிப்புற்றவர் வேறுவழியின்றி நந்தினியைப் பற்றிக் கூறினார்.  

“நிச்சயமா நீ சொல்ற மாதிரி எல்லாம் நான் யோசிக்கவே இல்ல துர்கா” என்றவர் மேலும்,

“நான் பாரதிக்குன்னு ஏற்கனவே ஒரு பொண்ணை முடிவு பண்ணிட்டேன்… அவ பேர் நந்தினி

பாரதியும் நந்தினியும் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள்… அவதான் என் மருமகன்னு நான் இன்னைக்கு நேத்து தீர்மானிக்கல… ரொம்ப வருசம் முன்னாடியே முடிவு பண்ண விஷயம்… பாரதி யுபிஎஸ்ஸி எக்ஸாம்ஸ் நல்லபடியா எழுதணும்… காதல் அது இதுன்னு அவனுக்கு எந்த டிஸ்ட்ரேக்ஷனும் வர கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக நந்தினிகிட்ட  பாரதியை சந்திக்கவே கூடாதுன்னு கண்டிஷனா சொல்லி இருக்கேன்...

நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக மூணு வருஷமா தான் காதலை மனசுலயே வைச்சுக்கிட்டு இருக்கா…. அவளோட சந்தோஷம் துக்கம் எல்லாமே அவன்தான்… அவனை அவ நேசிக்கிற மாதிரி வேற யாராலையும் முடியாது” என்று வித்யா விவரமாக சொல்ல, அதற்கு பின் துர்காவிற்குப் பேசுவதற்கு வழியே இல்லை. தன் பக்கமிருக்கும் நியாயத்தை அவள் வித்யாவிற்குப் புரிய வைக்க முயற்சி செய்து தோற்றுவிட்டாள்.

வித்யாவின் மறுப்பு ஏற்கனவே துர்காவை சுக்குநூறாக உடைத்துவிட்ட நிலையில் நந்தினியை பற்றி சொன்னது அவளின் இளம் மனதை இன்னும் ஆழமாகக் குத்தி காயப்படுத்தியது.

முகம் பார்க்காமலே நந்தினி என்ற பெயரின் மீது அவள் வெறுப்பை வளர்த்து கொண்டாள். ஆனால் அந்த பெயரையே தன் வாழ்நாளெல்லாம் சுவீகரித்து கொள்ளும்படியாக நேரிடும் என்று துர்கா எதிர்பார்த்திருக்க மாட்டாள். 

தன்னுடைய விசித்திரமான விதியை எண்ணி துர்கா நொந்து கொண்ட அதேசமயத்தில் ராஜேந்திரன் அவளிடம் பாரதியை பற்றிய தகவலோடு வந்து நின்றான்.  

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content