You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E1

Quote

விலக்கில்லா விதிகள் அவன்

1

பிரமாண்டமாய் ஓங்கி வளர்ந்திருந்த அந்த அரச மரக்கிளையின் மீது குக்கூ… குக்கூ… என்று ராகமாய் கூவி கொண்டிருந்தது அச்சிறு குயில்.

அக்குயலின் இசை தவத்தை களைக்கும் விதமாக அபஸ்வரமாக ஒலித்தன டங் டங் என்ற அந்த அறிவிப்பு ஒலி!

புழல் சிறையில் காலை உணவிற்கான அறிவிப்பு ஒலி அது!

விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் எல்லோரும் கையில் தட்டோடு வரிசையில் வந்து தங்களுக்கான உணவை பெற்று கொண்டனர்.

அவ்வரிசையில் அவனும் சென்று இணைந்து கொண்டான்.  

கைதி எண் 111… பத்து வருடத்திற்கு முன்பாக தமிழகத்தையே உலுக்கிய பிரபல கொலை வழக்கொன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற கைதி அவன்.

இருபத்து மூன்று வயதில் சிறைக்கு வந்தவன் தன் இளமை காலகட்டங்களில் முக்கால்வாசியை சிறை வாசத்திலேயே கழித்துவிட்டிருந்தான்.

காலை எழுந்ததும் குளித்து அந்த சிறைச்சாலையின் தெற்கு மூலையிலிருந்த அம்மன் கோவிலில் இறைவனை வணங்கிவிட்டு திருநீற்றை பூசி கொண்ட பிறகுதான் மற்ற எந்த வேலைகளையும் அவன் தொடங்குவான்.

அவன் அம்மா வித்யாலட்சுமி கற்று தந்த பழக்கம் அது. சிறைக்கு வந்த போதும் அவன் அப்பழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை.

அங்கிருந்த கைதிகளில் அவன் சற்றே விதிவிலக்கானவன். அவன் பார்வை அமைதியை போதித்தது. அவன் விழிகளில் தேஜஸ் நிரம்பியிருந்தது. முகத்தில் பிரகாசம் குடிகொண்டிருந்தது.

எல்லோரின் தட்டிலும் வட்ட கிண்ணமாக களி போன்று இறுகிய நிலையில் பொங்கலும் தண்ணீர் திரவம் போல சாம்பாரும் ஊற்றப்பட்டது. சிறை வாசத்திற்கு பழக்கமில்லாதவர்கள் பலருக்கும் ருசியோ மணமோ இல்லாத அந்த உணவை உண்பது மிகவும் கடினமாக இருந்தது.

ஆனால் அவனோ தன் உணவை சீராக உண்டு முடித்து கைகளை அலம்பி கொண்டிருக்கையில், “பாரதி” என்ற ஒருவரின் அழைப்பு கேட்டு திரும்பி பார்த்தான்.

தாடியும் மீசையுமாக ஆஜானுபாகுவான தோற்றதிலிருந்த அம்மனிதரை பார்த்து, “காசி அண்ணே” என்றவன் புன்னகை செய்ய,

“எப்படி இருக்க பாரதி? பார்த்து ஒரு அஞ்சு வருசம் இருக்கும் இல்ல” என்றார் அவரும் புன்னகையோடு!

“இருக்கும் அண்ணே”

இருவரும் சுவாரசியமாக பேசி கொண்டே மரத்தின் அடியில் நிழலாக இருந்த திண்டில் அமர்ந்தனர்.

“ஏதாச்சும் பெரிய கேஸா அண்ணே? சாதாரணமா நீங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் உள்ள வர மாட்டீங்களே”

“ஒரு போலிஸ்காரன் ரொம்ப ரப்ச்சர் கொடுத்துட்டு இருந்தான்… அதான் அவனை போட்டேன்”

“போலிசையா?”

“அட நீ என்ன ப்பா இப்படி ஷாக்காவுற… அந்த வியாசார்பாடி  சங்கரை போட்டவன்தானே நீ” என்றவர் சொன்னதை கேட்டு பாரதியின் முகம் இறுகியது.

அவன் முகம் பழைய நினைவுகளுக்குள் சென்று அவனுக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் யாவையும் பொங்கி எழ செய்தது. அவன் மௌனத்திலிருந்த வேதனையை புரிந்தவராக,

“சாரி பாரதி… நீ அப்படி கேட்டதும் ஏதோ ஒரு வேகத்தில சொல்லிக்கினேன்… ஒன்னும் தப்பா எடுத்துக்காதே”

அவர் பணிந்து பேசவும் அவன் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தான்.

“ஆமா… உங்களை எப்படி புடிச்சாங்க?” என்றவன் மீண்டும் சகஜமாக பேச,

“அவனுங்க எங்க புடிச்சானுங்க… நானாதான் சரண்டர் ஆயிக்கினேன்… இல்லாட்டி என்கவுன்டர்ல போட்டிருப்பானுங்க… போதா குறைக்கு அந்த தீனா கோஷ்டியோட தொல்லை வேற” என்றவர் நடந்த சம்பவங்களோடு சேர்த்து தன் வீரபிரதாபங்களை சொல்ல சொல்ல பாரதியின் முகம் வாட்டமுற்றது.

“எதுக்கு அண்ணே இப்படியொரு பொழைப்பு… சதாசர்வகாலமும் இப்படியே ஒருத்தரை மாத்தி ஒருத்தர் கொன்னுகிட்டே இருந்தா எப்படி? இதுக்கு ஒரு முடிவே இல்லையா?”

“ஏன் இல்ல? ஒன்னு நான் சாகணும்… இல்ல அந்த தீனா சாகனும்”

“இப்படி பேசுனா எப்படி? உங்க குழந்தைங்க எதிர்காலத்தை பத்தி யோசிச்சாவது இந்த தொழிலை விட்டுட கூடாதா?”

“அப்புறம் டப்பு… வாழ்க்கைக்கு பணம் முக்கியம் பாரதி”

“வாழ்க்கைக்கு பணம் மட்டும் முக்கியம் இல்ல… அமைதி சந்தோஷம் நிறைவு இதெல்லாமும் முக்கியம்… ஒவ்வொரு நிமிஷமும் கத்தி முனையில இப்படி உயிருக்காக போராடுற வாழ்க்கையில அமைதியும் சந்தோஷமும் இருக்குமா…

நல்லா யோசிச்சு பாருங்க… ஒரு வேளை உங்களை போலிஸ்காரனுங்க என்கவுன்டர்ல போட்டுட்டா… அப்ப உங்க குடும்பத்தை இந்த பணம் கப்பாத்தும்னு நினைக்குறீங்களா?” என்றவன் கேட்ட கேள்வியில் அவர் முகம் இருளடர்ந்து போனது.

“நீ சொல்றது எல்லாமே சரிதான் பாரதி… ஆனா நாங்க இனிமே இந்த ரவுடிஸத்தை விடுறது எல்லாம் நடக்காத காரியம்… புலி வாலை பிடிச்ச கதைதான்… விட்டோம் செத்தோம்” என்றார்.

அவர் சொன்ன நிதர்சனம் அவனுக்கு புரிந்ததாலோ என்னவோ அவன் அந்த பேச்சினை மேலும் வளர்க்க விரும்பாமல்,

“சரி அண்ணே… தோட்ட வேலை இருக்கு… முடிச்சிட்டு வந்து பேசறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.  

ஐந்து வருடத்திற்கு முன்பு சிறைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சில கைதிகளின் ஒத்துழைப்போடு அந்த பரந்து விரிந்த இடத்தில் காய்கறி தோட்டத்தை நிர்மானிதிருந்தான்.  

அவன் தோட்ட பராமாரிப்பு வேலைகளில் எப்போதும் போல ஈடுபட்டிருக்க, காலை வணக்கங்களோடு அவனை கடந்து சென்றவர்கள் எல்லோரின் பார்வையிலும் மரியாதை, அன்பு, சகோதரத்துவம் செறிந்தது. சிறை காவலர்கள் உட்பட.

கண்டிப்பான அதிகாரிகள் கூட அவனின் பண்பிலும் பார்வையிலும் கரைந்துவிடுவார்கள்.

அவனின் பத்து வருட சிறை வாழ்க்கை அவனுக்கு நிறைய தோழர்களை பெற்று தந்திருந்தது. சூழ்நிலை காரணங்களால் கைதிகளாக மாறியவர்களின் வேதனைகளை கேட்டறிந்து அவர்களிடம் ஆறுதலாக பேசி இயல்பு நிலைக்கு கொண்டு வருவான். இதனாலேயே அவனிடம் எல்லோருக்கும் அன்பு கலந்த மரியாதை உருவாகியிருந்தது.

தோட்ட வேலைகள் முடித்துவிட்டு தன்னுடன் உடன் உதவி செய்தவனிடம், “கணேஷா… இந்த காயெல்லாம் கிச்சன்ல கொடுத்துடு” என்றவன் ஒரு கூடை நிறைய பறித்த காய்கறிகளை கொடுக்க,

“சரிங்க அண்ணா” என்று அவனும் அதனை பெற்று கொண்டு சென்றுவிட்டான்.

தோட்ட வேலைகள் செய்வதை தாண்டி அவன் விரும்பி செய்யும் காரியம் புத்தகம் வாசிப்பதுதான்.

அன்றும் எப்போதும் போல செய்திதாள்கள் வைக்கப்படும் ப்ளாக்கில் அமர்ந்து அவற்றை புரட்டியவனுக்கு முதல் பக்கத்திலிருந்த செய்தி ஒன்று அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மத்திய அமைச்சர் வேதநாயகம் தற்கொலை.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இப்படியான இறப்புகள் தொடர் கதையாக மாறி வருகின்றன. அவற்றில் சில தற்கொலைகளாகவும் சில மர்ம மரணங்களாகவும் இருக்கின்றன. ஆறு மாதத்திற்கு முன்பு டில்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரி ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அரசு மருத்துவர் சம்பத் மர்மமான முறையில் மருத்துவமனை மொட்டை மாடியிலிருந்து விழுந்து இறந்தது. மேலும் தமிழ் நாட்டை சேர்ந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் யசோதரன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் வரிசையில் மீண்டும் ஒரு மர்மான மரணம்…

அந்த செய்தியை முழுவதுமாக படித்த மாத்திரத்தில் பாரதி அதிர்ச்சியில் உறைந்தான். இந்த அதிகாரிகளில் யசோதரன் அவனுக்கு நெருங்கிய நண்பன். இருவரும் ஒரே சமயத்தில்தான் சிவில் சர்வீஸ் படித்தனர். ஆனால் சில காரணங்களால் பாரதியால் நேர்காணலில் பங்கேற்க முடியாமல் போனது அவனின் துரதிஷ்டம்தான். 

அவன் நண்பன் யசோதரன் சிவில் சர்வீஸ் முடித்துவிட்டிருந்தான். ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு செய்திதாளில் வந்த நண்பனின் மரண செய்தி அவனை உலுக்கி போட்டது.

தற்போது அமைச்சர் வேதநாயகம்… அவனுக்கு குழப்பமாக இருந்தது. 

அதுவும் இரண்டு வாரம் முன்பு வேதநாயகத்தின் செகரட்டரி ஒரு வழக்கறிஞருடன் வந்து சந்தித்து, “நீங்க கொஞ்சம் ஒத்துழைச்சீங்கன்னா உங்களை இப்பவே கூட ஐயா வெளியே கொண்டு வர தயாரா இருக்காரு” என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. ஆனால் அவன்தான் திட்டவட்டமாக மறுத்துவிட்டான்.

“காசி அண்ணே கிட்ட கேட்டா இதை பத்தி ஏதாச்சும் தகவல் கிடைக்கும்?” என்றவன் எண்ணி கொண்டிருக்கையில்,

“உன்னை எங்கெல்லாம் தேடுறது நீ இங்கதான் இருக்கியா?” என்றபடி அந்த சிறை வார்டன் பெரியசாமி வந்து நின்றார்.

“நான் இங்கதான் இருக்கேன்… என்ன விஷயம்?”

“ரொம்ப நல்ல விஷயம்… உன்னோட நன்னடத்தையை வைச்சு வர காந்தி ஜெயந்தி அன்னைக்கு உன்னை ரிலிஸ் பண்ண போறாங்களாம்” என்றவர் சொன்ன நொடி அவன் உள்ளம் களிப்புற்றது.

“நிஜமாவா?” என்றவன் நம்ப முடியாமல் கேட்க,

“ஆமா பாரதி… ஆபீசர் சொன்னாரு” என்றவர் வார்த்தையை முடிக்க கூட இல்லை.

“தேங்க்ஸ் ப்பா” என்று சொல்லி அவரை தூக்கி சுற்றிவிட்டான்.

“பாரதி… பாரதி என்ன பண்ற… என்னை இறக்கிவிடு” என்றவர் அச்சம் கொள்ளவும் அவரை இறக்கிவிட்டவன் அவரை அணைத்து கொண்டான். அவன் கண்களில் நீர் துளிர்ந்து விழுந்தது.

பத்து வருட அவனின் சிறை வாசம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. எப்போதும் எந்தவித உணர்வுகளையும் நிதான நிலையில் கையாள்பவன் அந்த தகவலறிந்து துள்ளி குதிக்காத குறைதான்.

“பாஷா அண்ணா எனக்கு ரிலீசாம்… சீனு எனக்கு ரீலீஸாம்” என்று அந்த சிறை முழுக்கவும் தம்பட்டம் அடித்துவிட்டான். அப்படி உணர்ச்சிவசப்படும் பாரதி அங்கிருந்த எல்லோருக்கும் புதிது. எப்போதும் நிதான நிலையில் அமைதியாக இருக்கும் பாரதியைதான் அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் யாருக்கும் தெரியாது. இதுதான் உண்மையான பாரதி!

ஆட்டம் பட்டாம் கொண்டாட்டம் என்று ரசனையாக வாழ்ந்தவன்.

சிறைகாவலர்கள் கூட அவனுக்காக சந்தோஷப்பட்டனர்.

அன்று அவன் அறையில் பலரும் கூடிவிட்டனர். அவனுடைய இன்பத்தை அவர்களும் சேர்ந்து பகிர்ந்து கொண்டனர்.

“உண்மையை சொல்லுங்க… உங்களுக்கு ரிலீஸாகுறோம்ங்குறதை விட அண்ணியை பார்க்க போறோம்குறதுதானே அதிகம் சந்தோசம் இல்ல”

அவன் மௌனமாக புன்னகை பூத்தான். அவன் முகத்தில் ஒளிர்ந்த பிரகாசம் அவன் மனநிலையை காட்டி கொடுத்தது. இந்த பத்து வருடமாக அவன் உள்ளத்தில் அவளை தவிர வேறு எண்ணமே இல்லையே. ஒவ்வொரு நொடியும் மனதால் உணர்வால் நினைவால் அவளுடன் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.   

“அண்ணே இந்த ஹாப்பி மூட்டோட எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க”

“ஆமா பாரதி பாடு பாரதி” என்று அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவனை சூழ்ந்து கொண்டனர். ஒரு காலத்தில் பாடுவது அவனுக்கு தொழில். ஆனால் அவன் சிறைக்கு வந்த பிறகு பாடல் பாடுவது அவன் உள்ளத்தவிப்பிற்கும் வேதனைக்குமான வடிகால். அதேநேரம் மனதாலும் உணர்வாலும் காயம்பட்டு வேதனையில் துடிக்கும் கைதிகளுக்கு அவன் பாடல் ஒரு அருமருந்து.

பாரதி பாட தொடங்கினான்.

“உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே

உன் மேல ஆசை பட்டு பார்த்து காத்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு

என் மனம் தானா பாடிடலாச்சு

என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னாலே

எப்போது உன்னை தொட்டு பாட போறேன் தன்னால

செண்பகமே செண்பகமே…

தென் பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே ‘

சேர்ந்திருந்தா சம்மதமே”

அவன் உணர்ந்து பாடிய அந்த பாடல் வரிகள் அவனுடைய நினைவுகளுக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தன. எப்போதும் அவன் பாடலில் இழையோடும் சோகம் இன்று இல்லை. அவன் மனம் முழுவதுமாக சந்தோஷத்தில் மூழ்கி காதலில் திளைத்திருந்தது.

அந்த பாடலை தன்னவளுக்காக பாடினான்.

“துர்கா” அப்பெயரை உள்ள பூர்வமாக உச்சரித்து கொண்டவனின் மனதில் காதலின் உணர்வு ஊற்றாக சுரந்தது.

Marli malkhan, Rathi and 2 other users have reacted to this post.
Marli malkhanRathishiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content