You don't have javascript enabled
Narmada novelsRomance

Madhu’s Maran-13

அத்தியாயம் 13


லண்டனில் தன் ஆன்சைட் வேலை முடிந்து வாணி பெங்களூர் வந்திருந்த நேரம் அது. அவள் தோழமைகள் அனைவரும் அவரவர் வாழ்வில் படு பிசியாய் இருந்த வேளை, எவரும் பெங்களூரில் இல்லாது சென்னை மற்றும் ஆன்சைட்டில் தங்கியிருந்ததால் தனித்து விடப்பட்டாள் வாணி.

பெங்களூரில் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணின் அறையே காலியாய் இருப்பதாய் உரைக்க,  அவ்விறையிலேயே அப்பெண்ணுடனேயே தங்கியிருந்தாள் வாணி.

அன்று வாரயிறுதி நாளில் வாணியுடன் தங்கியிருந்தப் பெண் அவளது ஊருக்கு சென்றிருக்க, அலுவலக வேலை இருந்தமையால் சென்னைக்கு செல்லாது அவளது அறையில் தனித்திருந்தாள் வாணி.

சனிக்கிழமை காலை ஷிப்ட் பார்க்க செல்லும் போதே சிறிது காய்ச்சலாய் உணர்நதவளின் உடல் சாயங்காலம் வீடு திரும்பும் வேளை கொதிநிலையில் இருந்தது. அதன் காரணத்தால் கம்பெனி வண்டியிலிருந்து இறங்கி தனதறைக்கு நடந்து செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்திருந்தாள்.

அவள் மயங்கி விழுந்திருந்தது மருத்துவமனையின் அருகிலேயே என்பதால் அவளை அங்கேயே அனுமதித்திருந்தனர் அந்நேரம் அச்சாலையை கடந்த சில பேர்.

மருத்துவமனையில் ஒரு அறையில் தங்க வைத்து அவளுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்து டிரிப்ஸ் ஏற்றியிருந்தார் மருத்துவர்.

அவளின் கைபையை துழாவி எவருக்கு தெரிவிக்கலாமென நர்ஸ் பார்த்துக் கொண்டிருக்க,  அதில் அவளின் கைபேசி நம்பர் லாக் முறையில் பூட்டப்பட்டிருந்தாலும் முன் பக்க டிஸ்பிளேவில் எமர்ஜென்சி நம்பரென அப்பா என போட்டு ஒரு நம்பர் இருப்பதை பார்த்தவர் அந்நம்பருக்கு அழைத்து தகவல் தெரிவித்திருந்தார்.

மறுபக்கம் கேட்டிருந்த வாணியின் தந்தை செல்வத்திற்கு மினி ஹார்ட் அட்டாக்கே வந்த நிலை.  தன் பிள்ளைக்கு சிறு பிரச்சனை என்றாலும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஓடோடி வரும் செல்வம்,  இன்று தன் மகள் எவரும் கவனிக்க ஆளின்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் நிலை அவரின் இதயத்தை வெகுவாய் வலிக்க செய்தது.  அவரை மீறி அவரின் கைகள் நடுக்கமுற்றது.

உடனே கிளம்பி வருவதாகவும் அதுவரை வாணியை அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுமாறு அந்த நர்ஸிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டவர் உடனே சென்னை கிளம்ப ஆயத்தமானார்.

அவருக்கு இந்த அழைப்பு வந்த நேரம் அவர் வேலை விஷயமாய் வெளியில் இருந்தமையால் வாணியின் தாய் நீலாமதியிடம் விவரத்தை கூறாது,  வாணிக்கு தீடீரென இரண்டு நாட்கள் விடுப்பு அளித்திருப்பதாகவும் ஆகையால் அவள் சென்னை வர விரும்புவதாகவும்,  தான் சென்று அவளை அழைத்து வரப்போவதாகவும் உரைத்தார் அவர்.  இது வழமையாய் நிகழும் நிகழ்வாதலால் நீலாமதியும் பெரிதும் கேள்விகள் கேட்காது செல்வத்தை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு பெங்களுரில் வாணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அறையானது இரு படுக்கை கொண்டது. ஆனால் இரு படுக்கைக்கும் இடையில் தடுப்பு இருந்தது.  இங்கிருப்பவர் அங்கிருப்பவரை காணவியலாது.

மற்றொரு மெத்தையில் ஒரு வயதானவர் வயிற்று பிரச்சனைக்காக ஒரு நாள் சிகிச்சைக்காக தங்கியிருந்தார்.

நர்ஸ் வெளியில் வந்து செல்வத்திடம் கைபேசியில் உரைத்துவிட்டு வாணியை ஒரு எட்டு பார்த்து நகர்ந்துவிட, சிறிது நேரத்தில் வாணியின் மயக்கம் சற்றாய் தெளிய,  அரை மயக்கத்தில் இருந்தவள் “அப்பா.. அப்பா… ” என முனங்கவாரம்பித்தாள்.

காய்ச்சலால் ஏற்பட்ட தலைவலியும் உடல் வலியும் உண்ணாது வேலை பார்த்திருந்த நிலையும் அவளை முழுதாய் தெளியவிடாமல் தடுக்க,

வலியின் காரணமாய் கண்ணில் வழிந்த நீருடன் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

இதை மறுபுறம் வயதானவருடன் அமர்ந்திருந்த அவரின் மகனுக்கு கேட்க, “யாருப்பா அது?  அங்கே இருக்குறது?” எனக் கேட்டு அவன் அம்மெத்தையை பார்க்க எழ,

“அது ஒரு சின்ன பொண்ணுப்பா…  இப்ப நீ டாக்டர் பார்க்க போனப்ப மயக்க நிலையிலே வந்துச்சு” என்றவனின் தந்தை உரைத்ததை காதில் வாங்கிக் கொண்டே தடுப்பை தாண்டி அந்த மெத்தைக்கு சென்றான்.

அம்மெத்தையில் அவளை கண்ணுற்ற நொடி அவன் மனம் துடிப்பது பன்மடங்காக்கியது.

அவளை இதற்கு முன் கண்ட நாட்கள் நினைவிலாடியது அவனுக்கு. 
ஆனால் அவளின் ஊர், அவளின் பெயர், அவளின் உற்றார் உறவினர்கள் என எவரையும் தெரியாது அவனுக்கு.

சில நிமிடங்கள் தான் அவளை கண்டிருந்தான் அவனின் முந்தைய சந்திப்பில். “மறக்க கூடிய நாட்களா அது” எண்ணிக் கொண்டான் மனதில்.

அதன் பிறகு அவளை இவன் நினைக்காத நாளில்லை என்று தான் கூற வேண்டும்.  அவளை பிரிதொரு நேரம் காண நேர்ந்தால் அவளிடம்  மன்னிப்பும் நன்றியும் கேட்க வேண்டும் என பல நாட்கள் எண்ணியிருக்கிறான்.

அவளின் விழி நீர்,  அவள் வலியில் செய்யும் முணங்கல்,  அப்பா அப்பா என்ற அவளின் பிதற்றல்… ஏனோ அவனின் அடிவயிறு வரை ஓர் வலியை உண்டு செய்தது.

அவளை இந்நிலையில் காணயியலவில்லை அவனால்.

அவள் தனக்கு வெகு நாட்களாய் பரிச்சயம் என்பது போன்றதொரு எண்ணம். நீண்ட நாட்கள் தேடிக் கிடைத்த பொக்கிஷம் போன்றதொரு பரவசம். தனக்கு அவள் மனதிற்கு நெருக்கமான ஓர் உறவு என்றொரு ஆழமான நேசமிகுந்த உணர்வு என அவனை கலவையாய் தாக்கியது அவளை கண்ட நொடி.

இக்கலவையான உணர்வு அவனை நிற்கவிடாமல் கால்களை வலுவிழக்கச் செய்ய, அந்த மெத்தையின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்.

அவள் முகத்தை உற்று நோக்கினான். சாதாரண அழகு!! அதுவும் மருந்தின் தாக்கத்தில் வலியின் மிகுதியில் சோர்ந்து இருந்த அந்த முகம் தன்னை ஏன் வெகுவாய் கவர்கிறது?? என விளங்கிக் கொள்ள முடியவில்லை அவனால்.

அவளின் கைபற்றி அவள் வலி போக்க அவ்வலிக்கு மருந்தாக பரபரத்தது அவனுக்கு. சரியாய் அந்நேரம் மெத்தையின் அருகில் இருந்த அவன் கையின் மீது அவளின் டிரிப்ஸ் ஏறிய கைகள் பட,  தன் கைகளுக்குள் அக்கையை பொதித்துக் கொண்டான். அவனையும் மீறிய செயலது.

அவளின் கையை தன் கைக்குள் வைத்த நொடி, “அப்பா” என்றுரைத்திருந்தாள் அவள். சிறு சிரிப்பு அவளின் இதழில்.

அவனின் ஸ்பரிசம் அவளின் தந்தையின் ஸ்பரிசமாய் அவளுக்கு தோன்ற, ஆழ் நிம்மதி அவளின் முகத்தை நிறைக்க அரை மயக்க நிலையிலிருந்தவள் முழு தூக்க நிலைக்கு சென்றாள்.

அவளின் நிம்மதி ஏனோ இவனையும் தாக்க சிறிது சமன்பட ஆரம்பித்தது இவனின் மனது. ஆனால் அவளை விட்டு செல்ல மட்டும் மனம் வரவில்லை அவனுக்கு.

“வெற்றி” அழைத்தார் அவன் தந்தை.

மனமில்லாது அவள் கையிலிருந்து தன் கையை பிரித்தெடுத்து சென்றான்.

அதன் பின் தன் தந்தைக்கு தேவையானதை கவனித்தவன், இந்த பெண்ணிடம் தன் மனம் விசித்திரமாய் நடந்துக் கொள்வதை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டவன் அவள் பக்கம் செல்லாதிருந்தான்.

அன்றிரவு அவனின் தந்தை டிஸ்சார்ஜ் ஆக ரெடியான நேரம் ஒரு முறையேனும் அவளை கண்டுவிட்டு செல்லேன் என அவன் மனம் பரபரக்க,  தன் தந்தையை வரவேற்பறையில் அமர வைத்தவன், “இங்க உட்காருங்க இதோ இப்ப வரேன்ப்பா” என்றுரைத்து அவளை காண சென்றான்.

அவன் அவளின் மெத்தையினருகில் நின்று அமைதியாய் உறங்கும் அவள் முகத்தையே பார்த்திருந்த நொடி நுழைந்தார் வாணியின் தந்தை செல்வம்.

உள்நுழைந்தவர் கண்கள் வாணியை மட்டுமே நோக்கியிருக்க, வாணியினருகில் சென்று அவள் முகத்தை வருடி பார்த்திருந்தவர், அவளுக்கு ஒன்றுமில்லை என அவளை முழுதாய் பார்த்து உணர்ந்து மனது சமன்பட்டவுடன்  கண்களை சுற்றிப் பார்க்க, அங்கே மாறன் நிற்கவும்,

“நீங்க யாரு??  நீங்க தான் என் பெண்ணை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தீங்களா??” என்று கேட்க,

அது வரை அவர் யாரென யோசித்திருந்து அவரின் செயலை ஓர் பொஸஸிவ் உணர்வுடன் பார்த்திருந்தான் மாறன்.

ஆம் பொஸஸிவ் உணர்வு, “யார் இவர்?? இவள் மீது என்ன அவ்வளவு உரிமையா இவர்க்கு?? அவர் கண்ணுல அவளோ பாசம் தெரியுதே” என பலவகையான எண்ணங்கள் மாறன் மனதில் ஓடிட, “ம்ப்ச் எனக்கு ஏன் இவர் அந்த பொண்ணை அன்பா தொட்டு உணர்ந்து பார்க்கிறது அப்படி கடுப்பை ஏத்தது” என யோசித்திருந்தவன்  அவரின் என் பொண்ணு என்ற பதத்தில் “ஓ அவளோட அப்பாவா” என்று ஆசுவாசமானான்.

அவரின் கேள்விக்கு பதிலுரைப்பதற்கு வாய் திறந்தவன், அவளை சில நொடிகள் பார்த்து விட்டு, “உங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுக்குறீங்களா??” என்று கேட்டிருந்தான்.

— நர்மதா சுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content