Madhu’s Maran-16
அத்தியாயம் 16:
வாணி பெங்களூரில் தங்களது தோழிகளுடன் வீடு எடுத்து தங்கியிருந்த நேரமது. இளாவிற்கு வேணியை நிச்சயம் செய்திருந்த சமயமது.
ஞாயிறு இரவு 7 மணியளவில் ஃபோரம் மாலிலுள்ள பிவிஆர் சினிமாஸ்க்குள் நுழைந்தனர் இளா,வேணி மற்றும் வாணி.
மதியும் மஹாவும் அந்த வாரயிறுதி நாளில் தங்களின் நிச்சயத்திற்காக சென்னைக்கு சென்றிருக்க, வாணி வேணி மற்றும் இளா கான்சூரிங்க் படம் பார்க்கவென வந்திருந்தனர்.
வேணி நடுவே உட்கார, அவளின் இரு பக்கமும் வாணி மற்றும் இளா அமர்ந்திருந்தனர்.
வேணி தன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, “படம் ஆரம்பிக்கப் போகுது. என்னடி போன்ல பார்த்துட்டு இருக்க??” என்று கேட்டாள் வாணி.
“நமக்கு தான் அவங்க பேசுற இங்கிலீஷே புரியாதே…. அப்புறம் படம் புரியலைனா என்னப் பண்றது. அதான் படத்தோட கதைய ஒரு தடவை படிச்சி வச்சிக்கலாம்னு கூகுள் பண்றேன்” என்றுரைத்தாள் வேணி.
“ஹே சூப்பர்டி. நான் கூட இப்படி இங்கிலீஷ் படத்துல வந்து உட்கார வச்சிட்டியே. புரியாம அதுல என்னத்த பார்க்கிறதுனு நினைச்சேன். நல்ல ஐடியாடி” என்ற வாணி, வேணியுடன் சேர்ந்து அவளின் கைபேசியில் கதை படித்தாள்.
“அடப்பக்கிகளா…. படம் பாக்க முன்னாடியே கதை தெரிஞ்சா அதுல என்ன சுவாரசியம் இருக்கு இதுக்கு எதுக்கு தியேட்டருக்கு வரணும்” எனக் கேட்டான் இளா.
“நீயெல்லாம் அடிக்கடி இங்கிலீஷ் படம் பார்க்குற ஆளு. அதனால உனக்கு எங்க கஷ்டம் புரியாது” என இளாவிற்கு பதிலுரைத்தாள் வேணி.
படம் திரையில் போடத் தொடங்கியதும் திரையை கவனிக்கத் தொடங்கினர் மூவரும்.
“ஹே இங்கிலீஷ்ல டைட்டில் போடுறான்டி. அப்பாடா தப்பிச்சோம்” என கையிலடித்துக் கொண்டனர் வாணியும் வேணியும்.
இவர்களைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டான் இளா.
“நீங்களாம் சாப்ட்வேர் இன்ஜினியர்னு வெளில சொல்லிடாதீங்க” என மெல்லமாய் இவர்களுக்கு கேட்குமாறு இளாக் கூற,
“டேய் இவங்க நம்ம பேசுற மாதிரியாடா இங்கிலீஷ் பேசுறாங்க. நம்ம நாட்டு இங்கிலீஷ் எங்களுக்கு நல்லா புரியும். அவங்க தான் நம்மளுக்கு புரியாத மாதிரி பேசுறாங்க. சோ ஃபால்ட் எங்க மேல இல்ல. அவங்க மேல தான்.” என நாட்டு இங்கிலீஷ்க்கு வக்காளத்து வாங்கினாள் வேணி.
“சரி சரி படம் போட்டாச்சு பாரு. அப்புறம் வக்காளத்து வாங்கலாம் உன் நாட்டு இங்கிலீஷ்க்கு” என்றான் இளா.
குண்டூசி போட்டாலும் சத்தம் வரும் அமைதியான சூழலில் படம் ஆரம்பித்த சில நொடியிலேயே வாணி மற்றும் வேணிக்கு பயம் கவ்விக் கொள்ள, பயம் தெரியாதிருக்க இருவரும் படத்தில் வரும் திகில் காட்சிகளையும் கிண்டலடித்துச் சிரித்து பார்த்துக் கொண்டிருந்த சில நிமிடங்களில் கேட்டது அந்தக் குரல்.
“எக்ஸ்க்யூஸ் மீ. கேன் யூ பிளீஸ் பீ சைலண்ட்” எனக் கோபமாய் காட்டமாய் இவர்களின் முன் இருக்கையிலிருந்த ஒருவன் வாணியையும் வேணியையும் பார்த்துக் கூற,
“எவ அவ??” என்பதைப் போல் அவனை நோக்கியவர்கள்,
“சாரி” எனக்கூறி கப் சிப் என வாயை மூடிக் கொண்டனர் இருவரும்.
இவர்களை பார்த்து வாய் மூடி சிரித்தான் இளா.
இளாவின் சிரிப்பை போல் இன்னொருவனும் இவர்களது செயலில் சிரித்துக் கொண்டிருந்தான்.
ஆம் அவன் தான் நம் மாறன்.
வாணியின் அருகில் தான் அமர்ந்துக் கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
ஆனால் வாணியின் முகத்தை காணவில்லை அவன்.
வாணி வேணியின் பேச்சிலேயே சிரித்திருந்து அமர்ந்திருந்தவன், இளா வேணி ஜோடி என்பதையும் வாணி தனியாள் என்பதையும் அவர்களது பேச்சிலேயே அறிந்துக் கொண்டான்.
“இவ்ளோ பேச்சு பேசுதே இந்த பொண்ணு பார்க்க எப்படி இருக்கும்??” என்று அவனது மைண்ட் வாய்ஸ் கேட்க, இடைவேளை சமயத்தில் வாணியின் முகத்தை காண வேண்டுமென்ற ஆவல் பூத்தது அவனின் உள்ளத்தில்.
மாறனுடன் வந்த அவனின் நண்பன் அஸ்வின், “என்னடா படம் பார்க்காம யோசிச்சிட்டு இருக்க?” என்று அவன் காதில் கிசுகிசுக்க,
“இன்னிக்கு என்னோட வருங்கால மனைவியை சந்திக்க போறேனு என் மனசுல ஒரு பட்சி சொல்லுது மச்சான்” என்று தன் நண்பனை வெறுப்பேற்றுவதற்காய் மாறன் தன் வாயில் வந்ததை கூறினான்.
“உனக்கென்னடா மச்சி!! பார்க்க ஹீரோ மாதிரி இருக்க, உனக்கேத்த மாதிரி அழகா அம்சமா ஒரு பொண்ணு கிடைக்கும்” என்றவனின் நண்பன் இவனை உசுப்பேத்த,
ஹா ஹா ஹா என சிரித்து படத்தை பார்க்கலானான் மாறன்.
மாறன், தன் தொழிலை புதிதாய் தொடங்கி அது நல்லமுறையில் லாபத்தை அளித்திருந்த சமயமது.
சுயமாய் தொழில் செய்யும் கர்வமும், தான் அழகு என்ற அகந்தையும், அதனால் தன்னை மணக்கவிருக்கும் பெண் பேரழகியாய் சற்று மார்டனாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அப்போது இருந்தது மாறனுக்கு.
இடைவேளை சமயத்தில் வாணியை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தொத்திக் கொள்ள, மூவருக்கும் பின்னேயே சென்றான் மாறன்.
அங்கு பார்ப்கார்ன் வாங்குமிடத்தில், வாணியும் வேணியும் அது வேண்டும் இது வேண்டும் என்று இளாவிடம் கேட்டு அவனின் முக சுளிப்பில் சிரித்துக் கொண்டிருக்க,
சரியாய் அந்நேரம் பார்த்தான் மாறன்.
பார்த்ததும் மாறன் மனதில் தோன்றியது, “சரியான பட்டிகாடா இருக்கும் போல இந்த பொண்ணு” என்பது தான்.
“பெங்களூர்ல இருந்துட்டு முழு நீள சுடிதார் போட்டு உலாவுதுனா கண்டிப்பா நாகரிகமா லாம் இருக்காது. ஆளுக்கும் பேச்சுக்கும் சம்பந்தமேயில்ல. ஏதோ கிராமத்துல பிறந்த வளர்ந்த பொண்ணா தான் இருக்கனும். சரி கலரா அழகா இருந்தாலும் பரவாயில்லை. அது கூட இல்லையே. சோ சேட் மாறா. உன் எக்ஸ்பெக்டேஷன் புஸ்வானமாகிடுச்சே”
என மனதில் எண்ணிக் கொண்டவன் தன் இடத்திற்கு போய் அமர்ந்துக் கொண்டான்.
“என்னடா திடீர்னு அந்த பொண்ணுங்க பின்னாடியே போன?? இப்ப இப்படி வந்து உட்கார்ந்திருக்க??” என்று அவனின் நண்பன் கேட்க,
“அந்த பொண்ணு பேச்சு குரல்லாம் நல்லா இருந்துச்சுடா!! அதான் பார்க்க எப்படி இருக்கும்னு ஒரு எக்ஸ்ஸைட்மெண்ட்ல பார்க்க போனேன்” என்று அவன் கூறிய நொடி,
“ஏன்?? அந்த பொண்ணு தான் உன்னோட வருங்கால மனைவினு பட்சி சொல்லுச்சா” என்று சிரித்து கொண்டே கேட்க,
“என்னது அந்த பொண்ணு என் வௌய்ப் பா நோ சான்ஸ்” என பதறி கொண்டு வந்தது அவனின் பதில்.
அப்போது தன் விதியின் விளையாட்டை அறிந்திருக்கவில்லை அவன். இப்பெண்ணின் மூலமே வாழ்க்கை தனக்கொரு புதிய பரிமாணத்தை காண்பிக்க போவதையும் அறிந்திருக்கவில்லை அவன். இப்பெண்ணே பின்னாளில் தனக்கு யாவுமாய் மாறுவாள் என துளியும் உணரவில்லை அவன்.
அதற்குள் படம் ஆரம்பித்திருக்க மீண்டும் படத்தில் மூழ்கினர் இருவரும்.
இங்கு..
இங்கு இந்த நிகழ்வை மாறன் பெரும் குற்றவுணர்வுடன் வாணியிடம் கூறிக் கொண்டிருக்க,
கட்டிலில் இருந்து இறங்கி தங்களது அறையில் இருந்த சோபாவில் போய் அமர்ந்துக் கொண்டாள் வாணி.
மாறன் இறங்கி அவள் அருகில் செல்ல போக, “வேண்டாம் நீங்க அங்கிருந்து சொல்லுங்க” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.
“பாரு இதுக்கு தான் நான் சொல்லாம இருந்தேன். நீ மனசு சங்கடபடுவேனு தான் எதுவும் சொல்லாம இருந்தேன்” என்று மாறன் அவளருகில் தரையில் அமர்ந்து அவளது கை பற்றி கூற,
“நீங்க என்னைய குறையா நினைச்சது எனக்கு கவலை இல்லங்க. ஆனா என் மாறன் சைட் அடிச்சது இல்ல. பொண்ணுங்களை மதிப்பா நடத்துவாருங்கிற என்னோட நம்பிக்கை இங்க அடி வாங்கிட்டுப்பா” என்றவள் கூறிய நொடி,
“அய்யோ மதும்மா அதெல்லாம் அப்ப இருந்த மாறன். வாழ்க்கைய புரிஞ்சிக்காம டீன்ஏஜ் வயசுல இருக்கிற போல ப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து குட்டி சுவரா சுத்திட்டு இருந்த மாறன் அது”
“என்னிக்குமே எபப்டிபட்ட ஆளா இருந்தாலும் அவங்களை குறையா பேச கூடாது. எல்லார்கிட்டயும் அழகான ஒரு விஷயம் ஒரு திறமை இருக்கும். அதை பார்த்து எப்பவும் என்னிக்கும் எல்லாரையும் பாராட்ட கத்துக்கனும். இப்படி பல விஷயம் உன் கிட்ட இருந்து கத்துகிட்டேன் மதும்மா. கண்டிப்பா முன்னாடி இருந்த மாறன் இல்ல நான்” என்று குற்றவுணர்வில் முகம் சுருங்க பேசிட்டு இருந்த மாறனை பார்த்தவள்,
அவனின் அம்முகமும் அவளின் மனதை வதைக்க, அவனை சரி செய்ய எண்ணியவள், “ஆமா அன்னிக்கே என்னைய உங்க வைய்ப்னு உங்க ஃப்ரண்ட் கரெக்ட்டா சொல்லிருக்காரே” என பூரிப்பாய் கூற,
அவனது முகம் மேலும் வேதனையை காட்டியது.
“நானும் அன்னிக்கு என்னோட வருங்கால மனைவியை கடவுள் எனக்கு காமிச்சிட்டாருனு நினைச்சி பூரிச்சி போனேன் தான்” என விரக்தியாய் உரைத்தான் மாறன்.
அவனின் பேச்சில் அவளுக்கு குழப்பம் அதிகமாக, “என்ன சொல்ல வர்றீங்க வெற்றி?? என்னாச்சு அன்னிக்கு??யாரை உங்க வருங்கால மனைவினு நினைச்சீங்க” என்று பதட்டத்துடன் கேட்டாள்.
“என் வாழ்க்கைல அந்த நாள் தான் கடவுள் எனக்கு பாடம் புகட்ட துவங்கிய நாள். அந்த நாள் நாளா தான் என்னோட அறியாமைகள், தவறுகள் தெரிஞ்சிது. என்னோட வாழக்கையோட கண்ணோட்டமே தவறுனு புரிஞ்சிது” என்றான் மாறன்.
“அப்படி என்ன நடந்துச்சுங்க” என்று வாணி கேட்க,
“அன்னிக்கு தான் நான் என் பழைய காதலியை கண்ட நாள். அவ தான் என் வருங்கால மனைவினு நான் நம்பி பூரிச்சி போன நாள்” என்று மாறன் கூற,
அது பேரிடியாய் வந்து விழுந்தது வாணியின் மனதில்.
“வேற பொண்ணை லவ் பண்ணீங்களா?? அப்புறம் எப்படி என்னைய லவ் பண்ணேன் சொன்னீங்க??” என கோபமும் ஆற்றாமையும் கலந்து கண்ணில் நீராய் பெருக வாணி அவனிடம் கேட்க,
அவளின் கண்ணீரை துடைத்தவன், “ப்ளீஸ் மதும்மா நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத!! நான் முழுசா என்ன நடந்துச்சுனு சொல்றேன்” என்றவன் அவள் கையை பற்ற,
தன் கையை உறுவி கொண்டவள், “நீங்க அங்க கட்டில்ல உட்கார்ந்து சொல்றதா இருந்தா சொல்லுங்க இல்லனா எதுவும் சொல்ல வேண்டாம்” என்று கோபமாய் அழுகை குரலில் கூறி தன் இடத்திலிருந்து அவள் எழுந்து கொள்ள,
“இல்ல இல்ல மதும்மா .. நீ முழுசா கேட்டா தான் என்ன நடந்துச்சுனு உனக்கு புரியும். என்னோட தவறும் நான் எப்படி திருந்தினேங்கிறதும் உனக்கு புரியும்” என்றவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அக்கதையை கூறலானான்.
–நர்மதா சுப்ரமணியம்