Madhu’s Maran-19
அத்தியாயம் 19:
வேணிக்கும் மஹாவிற்கும் திருமணமாகி விடுப்பில் இருந்த நாட்களது.
அச்சமயம் வாணியுடன் வேலை பார்த்திருந்த ஒரு தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, இரண்டு நாட்கள் அவளுடன் மருத்துவமனையில் தங்கியிருந்து வாணி தான் அவளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
மாறன் மாலை போட்டு முப்பது நாட்களுக்கு மேல் ஆகியிருந்த சமயமது.
இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது இடையில் வந்த காரில் மோதி கை காலில் அடியுடன் மயக்க நிலையில் அனுமதிக்கப் பட்டிருந்தான் மாறன். வாணி தன் தோழிக்காக அவளுடன் இருந்த அதே மருத்துவமனையில் தான் மாறனும் இருந்தான்.
ஏற்கனவே விரதத்தில் இருப்பதால் உடலில் தெம்பு இல்லாத காரணத்தாலும் அடிபட்ட இடத்தில் அதிக இரத்தப் போக்கு இருந்த காரணத்தினாலும் அவனுக்கு இரத்தம் ஏற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூற, அவனது இரத்தம், அரிய இரத்த வகை ஆதலால் இரத்த வங்கிக்கு ஃபோன் செய்து செவிலியர் கூறிட்டிருந்த நேரம், அதை கேட்ட வாணி, தனக்கும் அந்த வகை இரத்தம் தான் எனக் கூறி இரத்த தானம் செய்ய முன் வந்தாள்.
அதற்குள் மாறனின் கைபையை துழாவி அவனின் கடை வேலையாளுக்கு அழைப்பு விடுத்து செய்தியை கூறி மருத்துவமனை வர செய்து விட்டனர் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள். மாறனின் அப்பாவும் இச்செய்தி அறிந்து சென்னையிலிருந்து கிளம்பி இருந்தார்.
அடிபட்டு மயக்கத்தில் இருந்த மாறன், பல நாட்கள் வைத்திருந்த தாடியுடன் இருக்க, வாணி அவனின் முகத்தை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.
வாணி மாறனின் அருகிலிருந்த கட்டிலில் படுத்து இரத்தம் கொடுத்துக் கொண்டு கண் மூடி படுத்திருந்தாள்.
அச்சமயம் நினைவு வந்து மாறன் முழிக்க, அருகில் கட்டிலில் தனக்கு இரத்தம் அளிக்கும் வாணியை தான் பார்த்தான் மாறன்.
“அப்பவும் மூடின உன் கண்ணுல இருந்து தண்ணீர் வந்துட்டு இருந்துச்சு. நீ மனசுல எதையோ நினைச்சு அழுதுட்டு இருக்கனு தோணுச்சு. எவ்ளோ நல்ல குணமுள்ள பொண்ணுனு தோணுச்சு. ஆனா என்ன கவலையோ இப்படி மனசுக்குள்ளயே வச்சு அழுதுட்டு இருக்கேனு தோணுச்சு. அப்ப யாரோ உள்ள வரது போல இருக்கவும் நான் கண்ணை மூடிட்டேன்”
“ஏன் கண்ணை மூடினீங்க??”
“அது என்னமோ ஒரு மாதிரி குற்றயுணர்வு மதும்மா. இவ்ளோ நல்ல பொண்ணு அப்படி சொல்லிட்டோமே. அழகுல உருவத்துல என்ன இருக்கு. வாழ்க்கைக்கு நல்ல குணநலன் தானே முக்கியம். இது புரியாம அப்படி பேசிட்டோமே அந்த பொண்ண .. எப்படி அந்த பொண்ணை நேருக்கு நேரா பார்ப்பேங்கிற குற்றயுணர்வு” என்றவன் கூற,
“சரி நான் ஏன் இரண்டு நேரமும் அப்படி அழுதேனு நீங்க என் கிட்ட கேட்கவேயில்லையே!! உங்களுக்கு ஏன்னு தெரியுமா?? அதெப்படி உங்களுக்கு தெரிஞ்சிது” என கேள்விகளாய் அவள் கேட்க,
“ஹ்ம்ம் என் மதுகுட்டி எந்த நேரத்துல என்ன யோசிக்கும்னு தான் உன்கிட்ட பேசின கொஞ்ச நாள்லயே தெரிஞ்சிட்டே!! அப்புறம் ஏன் உன்கிட்ட அத கேட்டு தெரிஞ்சிகிடனும்” என்றவன்,
“நீ ரொம்பவே ஃபேமிலி ஓரியண்டட் பொண்ணு. வீட்டுல வெளியவே விடாம வேற வளர்த்துட்டாங்க. சோ கண்டிப்பா உன் அழுகைலாம் அப்பா அம்மாவ பிரிஞ்சி இருக்குற உன் நிலையை நினைச்சி தான் இருந்திருக்கும். அவங்க இருந்திருந்த இந்த இடத்துல இப்படி தனியா வந்திருப்பேனா .. கூடவே இருந்திருப்பாங்களேனு நினைச்சிருப்ப” என்றவன் கூறியதும்,
தன் கண்ணை உருட்டி அதிர்ச்சியை வெளிபடுத்தியவள், “வாவ் செம்மங்க!! என்னைய இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கீங்களா??” என பூரித்து மகிழ,
“இப்ப தான் என் மது அவளோட ஃபார்ம்க்கு வந்திருக்கா” என அவளின் ரியாக்ஷன் பார்த்து கூறி சிரிக்க,
“இல்ல இல்ல நான் கோபமா இருக்கேன்” என கூறியவள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.
“எனக்கு அப்ப உன்ன ரொம்ப பிடிச்சிது மது. மேரேஜ் செய்யனும்னுலாம் தோணலை. ஆனா உன்ன அடுத்து பார்க்கும் போது தேங்க்ஸ் அன்ட் சாரி கேட்கனும்னு அந்த மடிவாலா கோவிலுக்கு போகும் போதெல்லாம் நினைப்பேன்”
“அப்ப எப்படி மாமாகிட்ட உடனே கட்டிகொடுங்கனு கேட்டேனுலாம் தெரியலை. ஆனா அடுத்து எஃப் பில உன்னைய ஃபாலோ செஞ்சதுல உன்னோட நேச்சர், பிடித்தம், ஒரு விஷயத்தை நீ பார்க்கும் விதம், உன் வளர்ப்புனு எல்லாம் உன்னை ரொம்பவே பிடிக்க வச்சிட்டு. எவ்ளோ வருஷம்னாலும் காத்திருந்து உன்னை தான் கல்யாணம் செய்துக்கனும்னு முடிவு செஞ்சேன்”
“கல்யாணத்துக்கு அப்புறம் எனக்காக நீ செய்ற எதுலயுமே எனக்கு உன்னோட அன்பு மட்டும் தான் தெரிஞ்சிது. என்னைய கொஞ்சமா ஹர்ட் பண்ணிட்டேனு தெரிஞ்சாலும் போதும்னு சண்டைய நிறுத்திட்டு என்னைய ஹர்ட் செஞ்சத நினைச்சி நீ ஃபீல் ஆகி கஷ்டபடுத்திட்டேனானு என்னைய சமாதானம் செய்றதுலாம் அவ்ளோ பிடிக்கும். இது தான் உண்மையான காதல்னு எனக்கு புரிய வச்சவ நீ!! நம்ம ஒருத்தரை மனசார நேசிக்கும் போது காதலால் பார்க்கும் போது அவங்களோட ஒவ்வொரு செய்கையையும் ரசிப்போம்னு உணர வச்சது நீ!! நமக்கு பிடிக்காத செயல் செஞ்சாங்கனா கூட வெறுக்க தோணாது அதை மாற்ற முயற்சி செய்ய தோணும் இல்லனா அப்படியே ஏத்துகிட்டு வாழ தோணும்னு புரிய வச்சவ நீ!! மொத்தத்துல இது தான் காதலுக்கான அர்த்தம் காதலான வாழ்க்கைனு ஒவ்வொரு நாளும் எனக்கு உணர்த்திட்டு இருக்க மதும்மா.” என்றான் மனம் நிறைந்த காதலை குரலில் தேக்கி.
அவள் வெறுமையாய் அவன் முகம் நோக்க, “லவ் யூ ஸ்வீட் ஹார்ட்” என கன்னத்தில் முத்தமிட்டிருந்தான்.
“நான் தூங்க போறேன்” எனக் கூறி கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள் மது.
சிறிது நேரம் சோபாவில் அமர்ந்திருந்தவன் அவள் உறங்கி விட்டதை நிச்சயம் செய்துக் கொண்டு அவளருகில் சென்று அவளிடையில் கை போட்டு கொண்டு படுத்துக் கொண்டான்.
மறுநாள் காலை அவன் விழித்த நேரம், “என்னைய அப்பாகிட்ட கொண்டு போய் விடுங்க” என்னும் கோரிக்கையுடன் நின்றிருந்தாள் மது.
“சரி கொஞ்சம் இரும்மா. நான் கிளம்பினதும் இரண்டு பேரும் சேர்ந்து போய் பார்த்துட்டு வந்துடலாம்” என்றவள் கூற,
“இல்ல நான் கொஞ்ச நாள் அப்பா கூட இருந்துட்டு வரேன்” என்றவள் கூற,
கட்டிலில் அமர்ந்திருந்தவன் ரிஃப்ரெஷ் ஆக எழுந்து அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.
“நானும் உன் கூடவே அங்கேயே இருக்கேன். எத்தனை நாள் இருக்கியோ அத்தனை நாளும் இருக்கேன்” என்றவன் கூற,
“எனக்கு கொஞ்ச நாளுக்கு உங்களை விட்டு இருக்கனும். நீங்க எனக்கு வேண்டாம். நான் அப்பாகிட்ட போறேன்.” என கண்களை துடைத்து கொண்டே உடைந்த குரலில் அவள் கூற,
எப்பொழுதும் அவளது குழந்தைதனத்தை ரசிக்கும் பாவனையில் தான் இப்பவும் பார்த்திருந்தான் அவளை.
அவள் மேலும், “என்னைய டிஸ்டர்ப் செய்யாம இருங்க போதும். நான் கொஞ்ச நாள்ல சரி ஆகிட்டு வந்துடுவேன். எனக்கு இப்ப உங்களை பார்க்கும் போதெல்லாம் உங்க பழைய காதல் தான் ஞாபகம் வருது. உங்களை ஏதாவது சொல்லி ஹர்ட் செஞ்சிடுவேனோனு பயமா இருக்கு. நான் கொஞ்ச நாள் தள்ளியிருந்தா தான் சரியா இருக்கும். ரொம்ப யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன்” என்றவள் திக்கி திணறி அழுது சொல்லி முடித்தாள்.
அவளது முகத்தையே அமைதியாய் பார்த்திருந்தவன், “சரி” என்று ஒற்றை வார்த்தை கூறிவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்துக் கொண்டான்.
அவளுக்கு மேலும் அழுகை வந்து கண்ணை மறைத்தது.
இவ்வளவு நேரம் அவன் ஏதும் சொல்லாமல் தன்னை தன் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என எண்ணியிருந்தவள், அவன் தற்போது இவ்வாறு ஏதும் சொல்லாமல் ஒத்து கொண்டதே, “தன்னை அவன் தடுக்கவில்லை. தான் போவதில் அவனுக்கு வருத்தமில்லை” என ஏதேதோ கற்பனை செய்து அழ செய்தது அவளை.
அவன் குளியலறையிலிருந்து வெளி வர, அவள் அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.
ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்தான். கண்கள் கலங்கி மனம் வெகுவாய் கனத்திருந்தது அவனுக்கு.
“பேசாம கூட இருடி. ஆனா கூடவே இருடி” என அவளிடம் கூற மனம் வெகுவாய் தவித்தது அவனுக்கு.
ஆனால் இது தனக்கு தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனையாய் ஏற்றுக் கொண்டான் மாறன்.
மாறனின் தாய் தந்தையிடம் ஏதேதோ காரணம் கூறி மது சமாளித்தாலும் அவர்கள் அவள் செல்வதற்கான காரணத்தை ஏற்கவேயில்லை. ஆயினும் அவள் போக விரும்புவதை தடுக்கும் எண்ணமும் இல்லை. அவள் கூறுவதை நம்புவதாய் காண்பித்து வழி அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி ஊடலை அவர்களே பேசி தீர்த்துக் கொள்வது தான் சுமூகமான தீர்வாய் அமையும் என அறிந்திருந்தவர்கள் இருவரிடமும் பெரியதாய் ஏதும் தோண்டாமல் அவர்கள் போக்கில் விட்டனர்.
மதுவின் தாய் தந்தைக்குமே மிகுந்த ஆச்சரியமாய் இருந்தாலும் வெகு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த பெண்ணை சந்தோஷமாய் பார்த்துக்கிட்டு அனுப்பி வைப்போம் என எண்ணிக் கொண்டு ஏதும் கேட்கவில்லை.
அன்று அவளின் தாய் தந்தை திருவண்ணாமலை செல்வதாய் உரைத்து இவளை வீட்டில் தனித்திருக்க விட்டு சென்றிருந்த நேரம் தான் மது அந்த இளையராஜா பாடலை பார்த்து விட்டு, “அன்னிக்கு எவ்ளோ ஹேப்பியா பார்த்துட்டு இருந்த பாட்டு. இன்னிக்கு அப்படியே சோகமா பார்க்க வச்சிருச்சே காலம்” என்று அழுதுக் கொண்டிருந்தாள்.
–நர்மதா சுப்ரமணியம்