Madhu’s Maran- 4&5
அத்தியாயம் 4:
ஹே எத்தன சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துற கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு
என்னை பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
“ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே” என்று நெடுஞ்சாலையில் தங்களது காரில் பெருஞ்சத்தத்துடன் பாட்டை வைத்துவிட்டு அதனுடன் தானும் சேர்ந்து பாடிக் கொண்டு குதூகலமாய் பயணத்திருந்தாள் மதுரவாணி தன் கணவன் வெற்றிமாறனுடன்.
அவ்வப்போது தனது பெங்களுர் கிளை அலுவலகத்திற்கு மாறன் செல்வது போல் தான் இப்பயணமும் அவன் திட்டமிட்டிருந்தான்.
திருமணத்திற்கு பின் மாறன் இல்லாது இருக்கவியலாது என தானும் அவன் செல்லும் இடமெல்லாம் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள் வாணி.
“நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி”
அடுத்ததாய் ஒலித்த இப்பாட்டில் அவளின் நினைவுகள் தனது தோழிகளுடன் பெங்களூர் தியேட்டரில் இப்படத்தை பார்த்த நாட்களுக்கு பயணிக்க, காரை இயக்கி கொண்டிருந்த மாறனின் தோளில் சற்றாய் சாய்ந்தவள் முந்தைய நாள் மாறனிடன் நடந்த தனது நண்பர்களை பற்றிய பேச்சு வார்த்தைக்கு செல்லலானாள்.
அவன் மடியில் படுத்திருந்த அவளின் கண்கள் கலங்கியிருக்க, “என்னாச்சு மது?? தலை ரொம்ப வலிக்குதா?” என்றானவன்.
“இல்லப்பா. என் ஃப்ரண்ட்ஸ நினைச்சி பார்த்தேன். ஒரு காலத்துல என்னுடைய தினசரி நடவடிக்கை நிகழ்வுகள் எல்லாமும் அவங்களுக்கு தெரியாம இருக்காது. அப்படி எல்லாத்தையுமே பகிர்த்துட்டு வாழ்ந்துட்டு இருந்தோம். அவங்கலாம் இல்லாம என் வாழ்க்கை எப்படி இருக்கும்னுலாம் நினைச்சு நான் கவலைப்பட்டிருக்கேன். ஆனால் இப்ப அவங்க ஞாபகங்கள் எல்லாத்தையும் நினைவுகளாய் நெஞ்சுல வச்சிட்டு அப்பப்ப நினைச்சு சிரிச்சிட்டு அழுதுட்டுனு வாழ பழகியாச்சு.”
“அவங்கவங்களுக்குனு வாழ்க்கை இருக்கு. வாழ்க்கை இழுத்துட்டு போற போக்குல போய்ட்டு இருக்காங்க. யாராவது ஒருத்தர் அப்பப்ப மீட் பண்ணலாம் முயற்சி செஞ்சி ப்ளான் செஞ்சா ஒழிய எல்லாரும் இணைவது பார்ப்பது பத்திலாம் யாருக்கும் எண்ணமே வராது. மேரேஜ் முன்னாடி வரைக்கும் அப்பப்ப அதை நான் செஞ்சிட்டு இருந்தேன். இப்ப எனக்கும் அந்த மைண்ட் செட் போச்சு. அவங்களா வந்து பார்க்கலாம்னு சொன்னா ப்ளான் பண்ணுவோம்”
“ஒரு உண்மைய சொல்லவா வெற்றிப்பா. ஆணாயிருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி, அவங்க ஃலைப்ல அவங்க அவங்களா இருந்தது வாழ்ந்தது அவங்க ஃப்ரண்ட்ஸ் கூட வாழ்ந்த நாட்களா மட்டும் தான் இருக்கும். பெற்றோரோட இருக்கும் போது அவங்களுக்காக பார்த்து அவங்களுக்கா இருப்போம். ஆஃப்டர் மேரேஜ் கணவன் மனைவி பிள்ளைங்க அவங்க பிடித்தம்னு அவங்களுக்காக வாழ்ந்துட்டு இருப்போம். ஆனா ஃப்ரண்ட்ஸ் கிட்ட அப்படி எந்த ரெஸ்டிரிக்ஷனும் இருக்காது” என்றவள் கூறிய நொடி,
“ஏன் மது?? எனக்காகனு உனக்கு பிடிக்காத எதையாவது செய்றியா?? என்கிட்ட நீ நீயா இல்லையா??” என்றவன் வருத்தத்துடன் கேட்க,
மென்னகை புரிந்தவள், அவன் அருகினில் அமர்ந்து மார்பில் சாய்ந்து அவன் சட்டை பட்டனை திருகி கொண்டே, “இந்த நாலு செவுத்துக்குள்ள இந்த ரூமுக்குள்ள அதுவும் உங்க கிட்ட நான் கண்டிப்பா நானா தான் இருக்கேன். குட்டி குட்டி விஷயத்துக்கும் சண்டை போட்டுட்டு பொசசிவ் ஆயிட்டுனு பெங்களுருல இருந்த அந்த குட்டி பொண்ணா தான் உங்களை இம்சை செஞ்சிட்டு இருக்கிற பொண்ணா தான் நான் இருக்கேன்.”
“ஆனா வெளியில இந்த ஏழு வருஷம் வாழ்க்கை எனக்கு கத்து கொடுத்த விஷயங்கள் விவரங்கள்லாம் சேர்த்து மத்தவங்க இடத்துலருந்து யோசிக்க ஆரம்பிச்சி என்னோட பொசசிவ் எல்லாம் மத்தவங்க கிட்ட சுத்தமா இல்லாத அளவுக்கு மெச்சூர்டு ஆளா மாறியாச்சு. ஆனா உங்ககிட்ட அப்படி நானே நினைச்சாலும் மெச்சூர்ட்டாலாம் நடத்துக்க முடியாது சொல்லிட்டேன்.” என்றிவள் கூறி அவனின் தாடியை கடித்திழுக்க,
“ஸ்ஸ்ஸ்ஆஆஆ” என அலறியவன் பதிலுக்கு அவளின் கன்னத்தை சற்றாய் கடித்தவன் அவளுள் மூழ்கி போனான்.
வழியில் ஓர் நெடுஞ்சாலை உணவகத்தில் உண்ணவென மாறன் காரை ஓரமாய் நிறுத்திய சமயம் தன் நினைவுகளிலிருந்து நடப்புக்கு வந்தாள் வாணி. தூரமாய் இருவர் சண்டையிடுவது மாறன் கண்ணுக்கு புலப்பட்டது.
ஒரு சிறுவனை இன்னொரு பெரிய ஆள் அடித்துக் கொண்டிருக்க, அனைவரும் கூடி பார்த்திருந்தனர்.
தன்னை சுற்றி எவ்வித அராஜக நிகழ்வு நிகழ்ந்தாலும் அது தன் பார்வைக்கு வரும் பட்சத்தில் அங்கு ஆஜாராகி அந்த பிரச்சனையை தீர்க்க அந்த அராஜகத்தை தடுக்க முற்படுவான் மாறன்.
தனக்கென்ன வந்தது என்று ஒதுக்கி செல்லும் குணமுமில்லை. அடிதடிக்கு அஞ்சி ஒதுங்கி செல்லும் ஆளுமில்லை அவன்.
வாணி அவனுக்கு நேரெதிர் பதமாய் அடிதடி என்றாலே ஓடி ஒளிந்துக் கொள்ளும் சூராவளி. ஆக தற்சமயம் இவ்வாறு ஒரு நிகழ்வை கண்டதும் ஓடிச்சென்று அவ்விடத்தை அடைந்து அந்த சிறுவனை தன் பக்கம் இழுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான் அவன்.
இவள் இறங்குவதற்குள் அவன் ஓடியிருக்க, அவனின் ஓட்டத்தை பார்த்து தானும் பின்னே செல்ல இவள் எத்தனிக்க, சற்று தொலைவு சென்றிருந்தவன், திரும்பி பார்த்து “மது காருக்குள்ளேயே இரு. இறங்கி வராத” என அதட்டலாய் கூறி ஓடியிருந்தான்.
“அய்யோ இன்னிக்கு என்ன பிரச்சனை பார்த்து பொங்கிட்டு போயிருக்காரோ தெரியலையே?? நான் தான் இங்க அவருக்கு என்னச்சோ ஏதாச்சோனு பயந்துகிட்டு இருக்கனும். அவரு ஜாலியா பஞ்சாயத்து செஞ்சிட்டு வருவாரு” என மனதிற்குள் பேசியவளாய் அவன் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கு அந்த உணவகத்தின் முதலாளி அச்சிறுவனை அடித்திருக்க, அவனை காப்பாற்றிய மாறனை பார்த்ததும் அந்த முதலாளிக்கு ஏக கடுப்பு.
“எதுக்கு சார் இந்த பையனை இப்படி அடிக்கிறீங்க?” என்று மாறன் கேட்க,
“வண்டியில முட்டையை எடுத்துட்டு வரேனு எல்லா முட்டையும் வீணாக்கிட்டு வந்திருக்கான். இவனை வச்சி கொஞ்ச சொல்றீங்களா” என்று அவர் இன்னும் அதே கடுப்புடன் உரைக்க,
“அதுக்காக இப்படி எல்லார் முன்னாடியும் அடிப்பீங்களா சார். இந்த பையனை நீங்க இப்படி வேலைக்கு வச்சதே தப்பு. சைல்ட் லேபர்னு உங்க மேலே கம்பெளைணட் கொடுத்து உங்க கடைக்கு சீல் வைக்கிறேன் பாருங்க” என்றான் மாறனும் அடக்கப்பட்ட கோபத்துடன்.
அவனின் கைக்குள் அழுதுட்டிருந்த அச்சிறுவனும், “புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவர” என்றான் கடுங்கோபத்துடன்.
மாறன் தன் கையிலுள்ள போனில் நம்பரை அழுத்த போக, அந்நேரம் அங்கு வந்தான் அவன்.
“என்னங்க சார் நீங்க?? இது அவங்களுக்குள்ள அப்பா பையனுக்குள்ள இருக்க பிரச்சனை. இதுக்கு எதுக்கு போலீஸ் கம்பிளைண்ட்னு நீங்க பிரச்சனைய பெரிசாக்குறீங்க??” என்றான் அப்புதியவன்.
அந்த புதியவன் தான் அந்த பெரியவர் அடிக்கும் போதே, இப்பையன் அடிக்காதீங்க அப்பா என்று கூறியதை கேட்டிருந்தானே, ஆகையால் தான் இவன் பஞ்சாயத்து செய்ய உள் நுழையாது இருந்தான்.
“என்னது அப்பா பையனா??” என அதிர்ச்சியடைந்த மாறன், அவனின் பிரச்சனைய பெரிசாக்குறீங்க என்ற பதத்தில் கடுப்பாகியவன், “அப்பா பையனா இருந்தாலும் இப்படி தான் சின்ன பையனை அடிப்பாங்களா??” இவ்ளோ நேரம் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தீங்க?? இப்ப என்ன வக்காலத்து வாங்க வந்துட்டீங்க?” என்று அப்புதியவனை பார்த்து நக்கலாய் மாறன் கேட்க,
இப்பிரச்சினை அப்பா பையன் பிரச்சனையிலிருந்து இவர்களுக்குள்ளான சண்டையாய் உருமாற, பின் அனைவரும் கூடி பேசி இவர்களை சமாதானப்படுத்தி அவரவர் வேலையை பார்க்க அனுப்பினர்.
அவனிடம் பேசிய கடுப்புடனே காரினருகில் வந்த மாறனை, ” ஊர் வம்பெல்லாம் எதுக்கு விலைக்கு வாங்கிட்டிருக்கீங்க” என்றிவள் ஆரம்பித்த நொடி,
“கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வரியா மது. இப்ப தான் அங்க ஒருத்தன் அட்வைஸ் பண்றேன்ங்கிற பேர்ல சீன் போட்டுட்டு போனான். நீயும் திரும்ப ஆரம்பிக்காத” என மாறன் சீற்றமாய் உரைக்க,
மாறன் கோபமாய் இருக்கும் நேரம் எவர் எது பேசினாலும் காட்டமாய் தான் அவனிடம் பதில் வரும் என்பதை அறிந்ததினால், அவனை திசை திருப்பும் முயற்சியில் இறங்கினாள்.
“சரி எனக்கு பசிக்குது. சாப்பிட போகலாமா??” என்றிவள் கேட்டதும், அவளின் பசி என்ற மொழி இவனின் கோபத்தை சற்று மட்டுபடுத்த,
இருவரும் இறங்கி அங்கிருந்த மற்றொரு உணவகத்திற்கு சென்றனர்.
அங்கு உணவு ஆர்டர் கொடுத்து இருவரும் அமர்ந்திருந்த சமயம், அப்புதியவன், “ஹே மதுரா பொண்ணு” என்று வாணியின் அருகினில் வந்தமர்ந்தான்.
“டேய் மருதா!!” என்றிவளும் அவனை பார்த்து நெகிழ்ந்து குதூகலிக்க,
மாறன் இவர்களை கண்டு உறுத்து விழித்திருந்தான்.
<
p style=”text-align: center;”>அத்தியாயம் 5:
கடுப்புடன் மாறன் காரை இயக்கி கொண்டிருக்க, முன்னிருக்கையிலிருந்த வாணி பின் நோக்கி திரும்பி அமர்ந்து பின்னிருக்கையில் இருந்த இளமருதனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் முன்பு …
ஹோட்டலில் வாணியை பார்த்ததும் பொங்கிய உவகையில் அவளருகில் அமர்ந்து மதுரா பொண்ணு என அவள் கைகளை பற்றி, “எப்படி இருக்கடா??” என ஆதுரமாய் விசாரித்திருந்தான் இளமருதன்.
“டேய் மருதா!!” என அவனைக் கண்ட ஆனந்த அதிர்ச்சியில் உற்சாகமாய் பேசிட்டிருந்தாள் வாணி.
இவர்களின் எதிரே அமர்ந்திருந்த மாறன், “இங்க என்ன நடக்குது?? என்பது போன்றே அவர்களை பார்த்திருந்தவன், “இந்த சீன் பார்ட்டிக்கு மதுவ எப்படி தெரியும்??” என யோசிக்கலானான்.
இளமருதன் காண்பதற்கு வடநாட்டு சாயலில் படு கலராய் உயரமாய் ஸ்டைலிஷாய் இருக்கும் ஆடவன். கோயமுத்தூர் தான் அவனின் சொந்த ஊரெனினும், நடை உடை நாகரிகத்தில் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாதது போல் வெளிநாட்டு வாழ் மக்களை போல் இருப்பவன்.
சாதாரணமாய் காண்பதற்கே சற்று நிறமாய் இருப்பவன், ஐடியில் பணிபுரிய ஆரம்பித்த பிறகு தன்னை நாகரிகமாய் மாற்றிக்கொள்ள முற்பட்டான். அதன் பின் கிடைத்த வெளிநாட்டு வாய்ப்பில் தன்னை முழுவதுமாய் அந்நாட்டு ஆளாய் மாற்றிக் கொண்டான்.
அவனை கண்டதும் வேற்று ஊர் ஆடவனெனவே அனைவரும் எண்ணுவர். அவன் வாயிலிருந்து வரும் தமிழை கேட்டதும் கண்டிப்பாக சற்றாய் அதிர்ச்சி பிறக்கும், “இவன் தமிழனா??” என்ற கேள்வி பிறக்கும்.
அங்கு சண்டை நிகழ்ந்தப் போது அவ்வாறு தான் முதலில் மாறனும் எண்ணினான்.
அதன் பின் மருதன் அந்த ஹோட்டல் முதலாளிக்காக பரிந்து வந்து பேச, மருதனை சீன் பார்ட்டியாய் எண்ண வைத்தது.
மதுவும் மருதனும் பரஸ்பர நலவிசாரிப்புக்கு பின் இயல் நிலைக்கு திரும்பிய பின், டேபிளில் எதிரில் அமர்ந்திருந்த மாறனை நோக்க, அவன் இவளை கடுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆஹா வாணி, ஓவர் எக்ஸைட் ஆகி உனக்கே ஆப்பு வச்சிக்கிட்டியே!! இவரை கண்டுகாம பேசிட்டு இருந்துட்டேனே!!” என அவளின் மைண்ட்வாய்ஸ் கூற,
“ஏங்க இவன் இளமருதன். லண்டன்ல எனக்கு நிறைய ஹெல்ப் செஞ்சிருக்கானு சொல்லிருக்கேன்ல அவன் தான் இவன்” என மாறனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
ஏனோ தன்னுடைய பெங்களுர் வாழ்வை பற்றி பேசிய அளவிற்கு லண்டனைப் பற்றி பேசியதில்லை வாணி. இளமருதன் மற்றும் சஹானா என இருவர் தனக்கு உதவியாக இருந்ததாய் மட்டுமே மாறனிடம் கூறியுள்ளாள். அவர்கள் இருவருமே திருமணத்திற்கு வராமல் இருந்ததினால் அவர்கள் இவளுக்கு நெருங்கிய தோழமைகள் இல்லை என எண்ணயிருந்தான்.
ஆனால் தற்போது மருதனை கண்டதும் வாணியின் வதனத்தில் கண்ட பூரிப்பும் நெகிழ்ச்சியும் அவளுக்கு அவன் மீதிருக்கும் அன்பை பறைசாற்றியது. மாறனுக்கும் அது நன்றாய் விளங்கியது.
வாணி அறிமுக படுத்தியதும் மருதனிடம் கை குலுக்கி பேசினான் மாறன்.
எனினும் முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் மருதனின் முதல் சந்திப்பு உண்டாக்கிய சிறிய கடுப்பு அவனுள் இருந்திருந்தது.
“மதுரா பொண்ணு, வெற்றி மாறன் உன்னை நல்லா பார்த்துகிறாரா??” என்று தன் தோழி நன்றாக வாழ்கிறாளா என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அடுத்த கேள்வியை அவன் கேட்க,
“என் பொண்டாட்டியை எனக்கு நல்லா பார்த்துக்க தெரியும். இதை கேட்க நீ யாரு??” என மாறனின் மனம் அவனுக்கு கவுண்டர் கொடுத்துக் கொண்டிருக்க,
“என் வாழ்க்கை பொக்கிஷம்டா அவரு” என கண்கள் மின்ன ஒரு வார்த்தையில் கூறி முடித்துவிட்டாள் வாணி.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த சமயம், திடீரென தன் மேஜையிலிருந்து அலறி எழுந்தான் மருதன்.
“அய்யய்யோ பஸ் போயிருக்க போகுது. உன்ன பார்த்ததுல பஸ்ஸயே மறந்துட்டேனே” என பதறிக் கொண்டு மருதன் ஓட,
“பஸ்ஸ மட்டுமா என்னையும் தானடா மறந்து பேசிட்டு இருந்த அவ கூட” என மாறனின் பொஸஸிவ் மனம் அவனை பொசுக்கி கொண்டிருந்தது.
ஹப்பாடா எப்படியோ கிளம்பினானே என நிம்மதி அடைந்தது மாறனின் மனது.
மருதன் அவ்விடத்தை விட்டு அகன்றதும் மாறனிடம் திரும்பிய வாணி, அவனுடனான தன் நட்பின் கதையை கூற விழைய,
அவனை பற்றிய எவ்வகை பேச்சும் இவனின் மனம் கேட்க விரும்பாமல் இருக்க,
“ப்ச்… மது எனக்கு தலைவலியா இருக்கு. இப்ப இந்த கதை முக்கியமா?” என்று அவள் பேச்சிற்கு தடை போட்டுவிட்டான்.
மாறனின் நடவடிக்கை மற்றும் பேச்சை வைத்து வாணியும், மாறனின் மனநிலை மற்றும் மாறனுக்கு மருதனின் மீதான எண்ணத்தை புரிந்துக் கொண்டாள்.
மாறனும் வாணியும் அந்த உணவகத்தை விட்டு தங்களது காரில் ஏறப் போன சமயம், “மதுரா பொண்ணு” என மீண்டும் வந்து நின்றான் மருதன்.
“டேய் பஸ்ல போகலையா நீ??” என்றாள் வாணி.
“ம்ப்ச் உன்கிட்ட பேசினதுல பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன்” என்றானவன்.
அனைவரும் நின்றிருந்த இடம் கிருஷ்ணகிரி அருகிலிருந்த ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில்.
மாறனும் வாணியும் சென்னையிலிருந்து காரில் வந்திருக்க, மருதன் கோயமுத்தூரில் இருந்து பேருந்தில் வந்திருந்தான்.
மருதனும் பெங்களூருக்கு தான் பயணப்பட்டுக் கொண்டிருந்ததால், “மாறன் நீங்களும் பெங்களுர் தானே போறீங்க. என்னை வழில டிராப் செஞ்சிடுறீங்களா??” என்று கேட்டான்.
எத்தனை தான் மன நெருடல் இருந்தாலும், ஒருவர் உதவி என கேட்கும் போது, தன்னால் உதவி புரிய முடியும் பட்சத்தில் இல்லை என கூற மனசு வராது மாறனுக்கு.
ஆக அவனையும் தங்களின் பயணத்தில் இணைத்துக் கொண்டான் மாறன்.
அப்பொழுது கூட முழு மனதுடன் சந்தோஷமாகவே அவனை தன் காரில் ஏறுமாறு கூறினான் மாறன்.
ஆனால் அதன்பிறகு மாறனுக்கு ஏற்பட்ட கடுப்பிற்கு முழு காரணம் வாணி மட்டுமே.
எப்படியோ தன்னுடைய லண்டன் கதையை மருதனுடனான நட்பின் கதையை இந்த பயணத்தில் மாறனிடம் உரைக்க வேண்டுமென எண்ணியிருந்தாள் வாணி.
ஆனால் மருதனும் உடன் வருவதாய் முடிவு செய்ய படவும், அவனுடனான அளவளாவலில் இறங்கி விட்டாள் வாணி.
தன்னுடன் அமர்ந்துக் கொண்டு தன்னை சிறிதும் பொருட்படுத்தாது அவனிடமே அவள் பேசிக் கொண்டே வர, மாறனுக்கு அது கடுப்பை விளைவித்தது. மருதன் மீதிருந்த கோபத்தை வெறுப்பை இன்னும் கொஞ்சம் ஏற்றிவிட்டது.
அவர்கள் பேசிய பேச்சு எதுவும் மாறனின் காதில் விழவில்லை. அவன் உள்ளம் எல்லாம் மதுவை திட்டிக் கொண்டு வேறொரு திசையில் பயணித்திருந்தது.
இவர்களின் பேச்சை கேட்டிருந்தால் பின்னாளில் இவனால் தங்களுக்குள் உருவாகும் சண்டையை வராமல் தடுத்திருக்கலாம் மாறன். விதி வலியது ஆயிற்றே!!
திடீரென இவர்களின் பேச்சை நிறுத்த எண்ணிய மாறன், “நீங்க பார்க்க தமிழ் ஆள் மாதிரியே இல்லை. உங்களுக்கு எப்படி சுத்த தமிழ் பேர்?” எனக் கேட்டான்.
“நான் தமிழ் பையன் தான்ங்க. அப்பா தமிழ் வாத்தியார். எனக்கு கொஞ்சம் மார்டனா இருக்க பிடிக்கும். அதுக்கேத்தது போல ஐடில வேலை கிடைக்கவும் ஃலைப் ஸ்டைல் டிரஸ்ஸிங் ஸ்டைல் லாம் மாத்தியாச்சு” என்றான்.
“அதுக்காக மீசை கூட இல்லாமலா இருப்பீங்க??” என்று மாறன் கேட்க,
“நல்லா கேளுங்கப்பா!! நான் இவன்ட்ட லண்டன்ல இருக்கும் போதே சொல்லியிருக்கேன் உனக்கு மீசை வச்சா நல்லாயிருக்கும். ஏன் இப்படி மொத்தமா வழிச்சிட்டு சுத்துறனு கேட்டுருக்கேன்” என்றவள் கூறிய நொடி,
“மீசைய பத்தி பேசுற அளவுக்கு இவன் க்ளோஸ் ஃபிரண்டா?? இவ அனாவசியமா எல்லார் கிட்டயும் இப்படி பேச மாட்டாளே!! இந்தளவுக்கு க்ளோஸ் நட்புனா அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு வரலை?? இவளும் ஏன் அவளோட பெங்களுர் ஃப்ரண்ட்ஸ் அளவுக்கு இவனை பத்தி பேசல??” என பல கேள்விகள் மாறன் மனதை துளைத்துக் கொண்டிருக்க,
“மீசை மேல எனக்கு பெரிசா விருப்பம் இல்லைங்க. இப்ப என்னை பார்த்தா சின்ன பையனா தானே தெரியுது. அப்படி இருக்க தான் எனக்கு பிடிச்சிருக்கு” என்றான் மருதன்.
மருதன் இறங்க வேண்டிய இடம் வரவும், இறங்கிக் கொண்டவன், மாறனின் பக்க கார் கண்ணாடி அருகே வந்து கை குலுக்கி நன்றி உரைத்து,
“மதுராவ லண்டன்ல பார்த்ததே நான் செஞ்ச புண்ணியம்னு அடிக்கடி நினைச்சிப்பேன். அவ கூட டச்ல இல்லைனாலும் எப்பவும் என் மனசுல அவ நினைவு இல்லாம இருந்ததில்லை. அவளை கண்கலங்காம நல்லா பார்த்துக்கோங்க மாறன்” என நட்பின் உரிமையில் கூறியவன்,
“அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை என் வீட்டுக்கு கண்டிப்பா வாங்க. உங்களுக்கு நான் விருந்து தரேன்” என்று உரைத்துவிட்டு கிளம்பினான்.
மாறனின் மனம் இப்பொழுது மொத்தமாய் குழம்பியது. “இப்படி ஒரு நட்பை எப்படி அவ நம்மகிட்ட சொல்லாம விட்டா??” தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தவன் அவளிடமே கேட்டுவிடலாமென திரும்பி பார்க்க, அவள் தலையை கண்ணாடி மீது சாய்த்து நன்றாய் உறங்கி கொண்டிருந்தாள்.
அவள் உறங்குவதை பார்த்தவன், காரை ஓரமாய் நிறுத்தி, அவள் அமர்ந்திருந்த இருக்கையை பின்னோக்கி சாய்த்து அவளை சாய்வாக படுக்க வைக்க, சற்றாய் தூக்கம் கலைய கண் திறந்து பார்த்தவள், அவனின் கன்னம் கிள்ளி முத்தமிட்டு, “என் செல்ல கண்ணப்பா” எனக் கூறிக் கொண்டே கண்ணயர்ந்தாள்.
–நர்மதா சுப்ரமணியம்
Nice ka..
Yanna mathuma ippadi pannita..😍😍
Maran pavam ilaya..😂😂