Madhu’s Maran-6 & 7
அத்தியாயம் 6:
பெங்களூர் வந்து இரண்டு நாட்கள் நகர்ந்திருந்த நிலையில், இவ்விரு நாட்களும் மாறனும் வாணியும் அவரவர் அலுவல் வேலையில் பிசியாய் இருந்துவிட, மதுரனை பற்றி வாணியிடம் கேட்கும் தருணம் கிடைக்காமலேயே போயிற்று மாறனுக்கு.
என்றோ ஓர் நாள் ஒருவன் வந்து பேசியதை பெரியதாய் எண்ணி அவளிடம் கேட்கவும் மனமில்லை அவனுக்கு.
வாணி, தான் ஒருவரை தன் மனதில் நிறைவாய் எடுத்து வைத்து அன்பாய் பழகினாலானாள், தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு மனதில் ஓர் இடம் வைத்து, அவரை எவ்வளவு வருடம் கழித்து எங்கு காணினும் அதே பாச பிணைப்புடன் அதே பூரிப்புடன் பேசும் பழக்கமுடையவளாகையால் மருதனும் அவ்வாறு இவள் வாழ்வில் முக்கிய நபராய் இருப்பானாய் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அவனைப் பற்றி பெரியதாய் அறிய விழையவில்லை மாறன்.
ஆனால் அவனை அவ்வாறே கேள்வி கேளாது இருக்க விடுமா வருங்காலம்??
பெங்களூரிலிருந்த இரண்டு நாட்களும் இரவுணவு உண்ணக்கூட நேரமின்றி பின்னிரவு நேரமே வீடு வந்தடைந்தான் வெற்றி.
வாணியும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் விதத்தில் தான் இந்த பெங்களூர் பயணம் மேற்கொண்டதால் அவளும் அவளின் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தாள்.
மூன்றாம் நாள் இரவு பன்னிரெண்டு மணியை தாண்டி வந்த மாறன், அதீத வேலையின் காரணமாய் முழுதாய் சோர்ந்திருக்க, தூக்கமும் கண்களை சுழட்ட உண்ணாது வாணியின் அருகே கட்டிலில் சாய்ந்துவிட்டான்.
ஆழ்ந்த நித்திரைக்கு அவன் கண்கள் அவனை இழுத்துச் சென்ற சமயம் சரியாய் தும்மினாள் வாணி.
அடுத்து அடுக்கு தும்மலாய் அவள் தும்மிக் கொண்டிருக்க, அவளின் சத்தத்தில் நித்திரைக்குள் புகுந்திருந்த இவனின் நினைவுகள் விழிப்படைந்து விழிக்க செய்ய, பெரும் சோர்வில் தூங்கிட்டிருந்தவனை விழிக்க செய்த தும்மலின் மேல் பெருங்கோபம் எழ,
“ம்ப்ச் மது மாத்திரை போட்டியா இல்லையா?? கொஞ்சம் தள்ளி போய் தும்மிட்டு இரேன். என் தூக்கம் டிஸ்டர்ப் ஆகுதுல” என சற்று எரிச்சலாய் உரைத்தான்.
ஏற்கனவே சைனஸ்சினால் உண்டான அடுக்கு தும்மலில், முகம் சிவந்து தொண்டை வலிக்க காது அடைக்க மூக்கிலிருந்து நீராய் வழிய சீந்திக் கொண்டிருந்தவள், அவனின் இச்சொல்லில் மனம் வெகுவாய் காயம் பட, சற்றாய் கண்ணில் நீர் வர அவ்விடத்தை விட்டு பால்கனியிலிருந்த ஊஞ்சலில் மாத்திரையும் தைலமும் கையில் கைகுட்டையுமாய் வந்துமர்ந்தாள்.
அவளிடம் அவ்வாறு உரைத்து நித்திரைக்கு சென்றவனின் மனமோ, முழுதாய் நித்திரைக்கு செல்லாமல் முன்னே நிகழ்ந்த ஓர் நிகழ்வில் சென்று நின்றது.
அது அவன் திருமணம் நிச்சயமாகி அவர்கள் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நாட்கள்.
அப்போது ஒரு நாள், “ஏங்க எனக்கு எந்த நேரம் எப்ப உடம்பு முடியலைனு சொன்னாலும் எரிச்சல் படாம பார்த்துபீங்களா??” என்று கேட்டாள் மதுரவாணி.
“ஏன் நல்லாதானே இருக்க!! அப்புறம் ஏன் அப்படி கேட்குற மது??” என்றான் மாறன்.
“எனக்கு சைனஸ் ப்ராப்ளம் இருக்குங்க. தூசி, தாளிச்ச வாசனை, சில்லுனு ஏசி காத்து இதெல்லாம் எனக்கு தும்மல் வர வைக்கும். நார்மல் சில்னஸ் எனக்கு ஒத்துக்கும். உள்ளங்கை உள்ளங்கால் சில்லுனு ஆகுற மாதிரி இருக்குற சூழல் தும்மல் வர வச்சிடும். இதுக்கு நிரந்திர சொல்யூசன்னு எதுவும் இல்ல. பட் உடம்பை ஹெல்தியா சாப்டு மெய்டெய்ண் பண்ணா அடிக்கடி வராம தடுக்கலாம்”
“சரி… எனக்கு தெரிச்ச வரைக்கும் இப்ப மாமா அத்தை உனக்கு தேவையானதெல்லாம் கொடுத்து உன்னை ஹெல்தியா தான் பார்த்துக்கிறாங்க. அதே மாதிரி நானும் உன்னை பார்த்துக்கனும்னு சொல்றியா மது. அதெல்லாம் நான் உன்னை நல்லா வச்சி பார்த்துப்பேன்” என்றான் மாறன்.
“அதில்லைங்க. ஒருத்தங்க உடலாலையும் மனதாலையும் பலமா இருக்கும் போது அவங்களை எதிர்நோக்கி வரும் எந்த சொல்லும் துன்பமும் அவங்களை சோர்வுறச் செய்யாது. மனம் கலங்கினாலும் அடுத்து அவங்களே தானா எழுந்து அடுத்த வேலைய பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா இதே ஒருத்தர் உடலும் மனமும் சோர்வா இருக்கும் போது அவங்கிட்ட சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் அவங்களை ரொம்பவே காயப்படுத்தும். நான் உன்னை நம்பி இருக்கனால தானே இப்படி பேசுறனு தன்னோட சுகமின்மை பெரிய இயலாமையா தெரிஞ்சு தன் மேலேயே அவங்களை பரிதாபப்பட வச்சி ரொம்பவே மனச வருத்தி கூனிக்குறுக வச்சிடும்”
“அதான் யாரையுமே அவங்க உடம்பும் மனசும் சரியில்லாத சமயத்துல, என்ன தான் அவங்க மேல தப்பு இருந்தாலும், என்ன தான் அவங்க நம்மள கடுப்பேத்தினாலும், அவங்கள அந்த நேரம் திட்டாம மனசும் வாடும் படி பேசாம இருக்கனும்”
“என்ன இவ சின்ன தும்மலுக்கு பெரிய லெக்சர் குடுக்குறானு நினைக்கிறீங்களா??”
“எனக்கு எந்த நேரம் தும்மல் வரும்னு தெரியாது, ஒரு நேரம் கசின் வீட்டுல இருந்தப்ப இப்படியாக, “என்னமா நீ எப்ப பார்த்தாலும் மூக்க உறிஞ்சிட்டு சீந்திட்டு சுத்துறனு எரிச்சல் பட்டுட்டாங்க”. இது அப்பாக்கு எப்படியோ தெரிய வந்து என்னைய கூட்டிட்டு போய்டாங்க”.
இந்த பேச்செல்லாம் தூங்கும் அவன் புலன்களில் ரீங்காரமிட்டு அவனை சுகமாய் நித்திரைக் கொள்ள விடாது அவனின் மனதை தத்தளிக்க செய்ய, மது என அலறிக் கொண்டே முழித்தான் மாறன்.
தன் பேச்சில் அவளின் மனம் என்னவாய் காயப்பட்டிருக்கும்… அதுவும் தும்மல் வரும் போது கண் சிவந்து அழுது தாய்மடி தேடும் பிள்ளை போலல்லவா அவள் நடந்துக் கொள்வாள். அச்சமயத்தில் அவளை திட்டிட்டோமே என பலவகையான எண்ணங்கள் அவன் ஆழ்மனதில் சுழன்றடிக்க, அந்நிலையில் தான் முழுதாய் தூக்கம் கலைந்து பதறி விழித்தான் மாறன்.
அருகில் மது இல்லாததை கண்டவன், அவள் எங்கேவென தேடி அறையை விட்டு வெளி வந்தான்.
அது ஏசி அறை ஆதலால் அவனின் அலறல் அவளின் செவியை தீண்டாதிருக்க, தைலம் தேய்த்து மாத்திரை போட்டு விலகி வைத்திருந்த தும்மலினால் தன்னை மீறி அந்த ஊஞ்சலிலேயே உறங்கியிருந்தாள் வாணி.
பால்கனி வந்து கண்கள் வீங்கி முகம் வாடி உறங்கிக் கொண்டிருந்தவளை கண்டவனின் மனம் வருந்தியது.
அவளருகில் வந்து மண்டியிட்டவன் அவள் காலருகே அமர்ந்து அவளின் மடியில் தலையை சாய்த்துக் கொண்டான்.
அவனின் ஸ்பரிசத்தில் விழித்தவள், “இங்க ஏன் படுத்திருக்கீங்க?? உள்ள போய் படுங்க. எனக்கு இப்போதைக்கு ஏசி ஒத்துக்காது. உள்ள வந்தா திரும்ப தும்மல் வந்துடும். அதனால நீங்க உள்ளே படுத்துக்கோங்க. நான் இன்னிக்கு இங்கேயே தூங்கிக்கிறேன்” என்றாள்.
“சாரி மதும்மா” தன் முகத்தை நிமர்த்தி அவள் முகம் நோக்கி கண் பார்த்துரைத்தான் மாறன்.
“பரவாயிலைப்பா. எல்லா நேரமும் மனுசன் பொறுமையாவே கவனிச்சிக்கிட்டே இருக்க முடியாதுல. அப்பப்ப கோவம் எரிச்சல் வரது சகஜம் தான்.” என்றாள் வாணி.
“இல்ல இது நீ ஏற்கனவே இந்த இடத்துல இப்படி சொன்னா நீ ஹர்ட் ஆவனு சொல்லியும் செஞ்சிட்டேனேனு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா” என்றானவன்.
அவனின் துயரம் அவளைத் தாக்க, அவனருகில் தரையில் அமர்ந்தவள், அவனை தன் மடி மீது சாய்த்து தட்டிக் கொடுத்து அவன் தலையை கோதினாள்.
“நீங்க இப்படி வந்து என்கிட்ட கேட்காம போயிருந்தா தான் எனக்கு கஷ்டமா இருந்திருக்கும் வெற்றிப்பா. ஏன் நாளைக்கே கூட இதுக்காக உங்ககிட்ட சண்டை போட்டிருப்பேன். நீங்க எவ்ளோ டயர்ட்ல இதை சொன்னீங்கனு தெரிஞ்சாலும் இவருக்கு நான் கவலைபட்டது முக்கியமாய் தெரியலைலனு சின்னபிள்ளதனமா சண்டை போட்டிருப்பேன். ஆனா இப்ப உங்க தூக்கத்தையும் தாண்டி என் கஷ்டம் உங்க தூக்கத்துலயும் முழிக்க வச்சிருக்குனா என் மேல எவ்ளோ அன்பு உங்களுக்குனு மனசு பூரிச்சு பொங்குது வெற்றிப்பா” என முகம் சந்தோஷத்தில் மின்ன உரைத்தவள்,
எப்பொழுதும் தான் உரைக்கும் டிரேட்மார்க் வசனமான, ” என் செல்ல கண்ணப்பா” என அவனின் கன்னத்தை கிள்ளி கொஞ்சி முடித்தாள்.
அவளின் கொஞ்சலில் சிரித்தவன், அவள் முகத்தை தன்னை நோக்கி இழுத்து முத்தமிட்டவனின் மனம் ஆசுவாசமடைய அப்படியே உறங்கி போனான்.
மறுநாள் காலை இந்த அன்பின் பூரிப்புலேயே வலம் வந்தவள், அவன் உண்ண அனைத்தையும் தயார் செய்து அவன் கிளம்பும் நேரமும் அவன் பின்னேயே வால் பிடித்து அலைந்தாள்.
அந்நேரம் சரியாய் வந்தது அந்த அழைப்பு அவளின் கைபேசிக்கு.
கட்டிலில் அமர்ந்து அவன் கிளம்புவதையே பார்த்திட்டிருந்தவள், கைபேசி சத்தம் கேட்டு அதை எடுத்துப் பார்த்தவள் புதிய எண்ணாய் இருக்க அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என சிந்தித்திருக்க, “என்ன மது யோசனை?? யாரு போன்ல” என்றான் மாறன்.
“யாருனு தெரியலைப்பா… புது நம்பரா இருக்கு. ஆபிஸ் காலா இருக்குமோ?? மார்னிங்கே ஏதும் இஸ்யூ வந்துட்டுனு இந்த ஜூனியர் பிள்ளைங்க கால் பண்றாங்களோனு யோசிட்டு இருந்தேன்” என்றவள் அழைப்பை ஏற்று தன் காதில் வைத்து ஹலோ என்றவள் மறுப்பக்கம் பேசியவனின் குரலில், “மருதா நீதானா” எனக் குதூகலித்தாள்.
“என்னது அவனா!!! என்ன குட்டையை குழப்ப ப்ளான் பண்ணி கால் செஞ்சிருக்கானோ” என அதிர்ந்து திரும்பி வாணியை பார்த்தான் மாறன்.
அத்தியாயம் 7:
அந்த அழைப்பையேற்று பேசிக் கொண்டிருந்தவள் மாறன் கிளம்புவதைக் காணவும் மருதனை இணைப்பில் இருக்கச் சொன்னவள்,
“வெற்றிப்பா… மருதன் நம்ம இரண்டு பேரையும் விருந்துக்கு கூப்பிடுறான்” என்றவள்,
அலைபேசியில் அவனிடம், “டேய் மருதா!! நீயே அவங்களை இன்வைட் பண்ணு” எனக் கூறி, கைபேசியை மாறனிடம் நீட்டினாள்.
இன்முகமாகவே மருதனிடம் பேசினான் மாறன். கண்டிப்பாக வருவதாய் உரைத்து அழைப்பை துண்டித்தான்.
மருதனிடம் பேசிய நேரம் முழுவதும் மாறனின் மனதிற்குள் பெரும் எண்ண சுழற்சி நிகழ்ந்துக் கொண்டிருந்தது.
“யார் வீட்டுக்கும் அவ்ளோ சீக்கிரத்துல இவ போக ஒத்துக்க மாட்டாளே!! போக வேண்டாம்னு நினைச்சிருந்தா இவளே தட்டிக் கழிச்சிருப்பா என்கிட்ட ஃபோன கொடுத்திருக்க மாட்டா… அப்ப அந்த அளவுக்கு இவன் இவ வாழ்க்கைல முக்கிய பங்கு வகிச்சிருக்கானா?? அப்படி என்ன செஞ்சிருப்பான். ஒன்னு ஓவர் அன்பை பொழிஞ்சிருக்கனும் இல்லனா சரியான நேரத்துக்கு எதாவது உதவி செஞ்சிருக்கனும். அன்புக்கும் நன்றிக்கும் தான் இவ மட்டையா மடங்கி போவாளே!!”
என மருதனிடம் பேசிய சில நிமிடங்களில் இவன் எண்ணங்கள் எங்கேயோ சுற்றி சுழன்றிருக்க, அவகிட்டயே கேட்டுவிடலாமே என்றிவன் எண்ணி கேட்க முற்பட்ட நேரம் அவனின் கைபேசி அலற,
அலுவலகத்திலிருந்து வந்த அவசர அழைப்பு ஆதலால் அக்கேள்விகளை பின்பு கேட்டுக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான்.
நாட்கள் அதன் போக்கில் விரைந்து செல்ல மருதனின் விருந்துக்கு சென்று வந்து இரண்டு நாட்களாகியிருந்தது.
மாறன் காலை வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, வாணி கட்டிலில் அமர்ந்து அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
“ஒரு வார்த்தை பேசுராறா பாரு. என் கிட்ட சரியா பேசி இரண்டு நாளாச்சு. முகத்தை கூட ஒழுங்கா பார்க்காம, ஏதோ சமைச்சத சாப்பிடுறேனு பேருக்கு சாப்டுட்டு நைட் நான் தூங்கின பிறகு வந்து தூங்கிட்டு கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கீங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்?? நீங்க பேசினது தான் தப்பு. நான் ஒன்னும் இறங்கி வரதா இல்லை” என இரு நாட்களாய் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டதைப் போல் தற்போதும் தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவன் முகத்தை பார்த்துக் கொண்டே மனதிற்குள் அவனை வசைபாடியவள்,
“நான் ஒன்னும் இறங்கி வர மாட்டேன். போடா” என மனம் கோபத்தில் தத்தளிக்க கண்கள் தானாய் நீரை சுரந்தது அவளுக்கு.
அந்த விருந்தில் நடந்த நிகழ்விலும் பேச்சிலும் கடுங்கோபத்தில் இருந்தவன் அவள் முகத்தை காண்பதை கூட இரு நாட்களாய் தவிர்த்திருந்தான்.
இரு நாட்கள் அவளும் கோபத்தில் இருக்க அவனால் அவ்வாறு இருக்க முடிந்தது.
ஆனால் இன்றோ அவன் முகத்தையே பார்த்திருக்கும் அவளை சுலபமாய் தவிர்க்க இயலவில்லை. அவனை மீறி அவனின் கண்கள் அவள் பக்கம் போக அந்நேரம் சரியாய் அவளின் கண்ணில் நீர் வழிய, அவனின் மனம் வெகுவாய் வலித்தது. எனினும் இம்முறை தான் இறங்கி வருவதாய் இல்லை என சூளுரைத்துக் கொண்டவன் அலுவலகம் கிளம்பிச் சென்றான்.
அன்றைய நாள் முழுவதும் அவனின் நினைப்பில் அழுகையிலேயே கரைந்தவள் அவன் வரும் நேரத்திற்காக ஒவ்வொரு நொடியையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்.
எப்பொழுது நாம் நம் பிரியமானவரிடம் சண்டையிட்டு அவரிடம் பேசவே கூடாதென சபதமெடுத்து இருக்கிறோமோ, அச்சமயம் தான் நாளின் 24 மணி நேரமும் மனம் அப்பிரியமானவரின் நினைப்பிலேயே இருக்கும்.
அத்தகைய நிலையில் தான் இருந்தாள் வாணியும். அவளுக்கு எவ்வேலையும் ஓடவில்லை. அவனின் வரவிற்காக ஆவலாய் காத்திருந்தாள்.
அன்றிரவு மாறன் வந்ததும் அவனின் பின்னேயே இவள் வால் பிடித்து அலைந்தும், அன்றைய சண்டையின் பாதிப்பில் இருந்து வெளிவராத மாறன் கோப முகமாகவே மௌனத்தைக் கடைப்பிடித்திருக்க, அது வெகுவாய் அவளின் மனதை வருத்த செய்ய,
அவன் அறையினுள் நுழைந்த நொடி அவன் மார்பில் சாய்ந்தவள் கண்ணீரால் அவனை நனைத்தாள்.
அதற்கும் மசியாது அவளை விலக்கிவிட்டு அவன் சென்று படுக்க, அவனருகில் தன் இடத்தில் படுத்துக் கொண்டவள் தேம்பிக் கொண்டே உறங்கிப் போனாள்.
மாறனின் மனமோ கோபத்திற்கும் இவள் மீதான காதலுக்கும் இடையில் தத்தளித்து உறக்கத்தை கைவிட்டிருந்தது.
தன் மார்பை தொட்டுப் பார்த்தவனுக்கு அவளின் கண்ணீர் ஈரம் கைகளில் உணர மனம் வலிக்க செய்தது.
“அப்படி என்ன உனக்கு, அவன் தான் முக்கியம் போல அன்னிக்கு நடந்துக்கிட்டல. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும். என் மாறனுக்கு என்னை பத்தி எல்லாம் தெரியும் நீ ஒன்னும் சொல்ல தேவையில்லனு அவன் மூக்கை உடைச்சிருக்கனும் தானே நீ… இன்னும் என்னைய பத்தி எல்லாம் நியாபகம் வச்சிருக்கியானு அந்த சீன் பார்ட்டிக் கிட்ட பூரிச்சி போய் பேசி கடுப்பேத்தினல…” என மைண்ட்வாய்ஸில் வாணியை வசைபாடியவன் மனமோ மீண்டும் அவளிடமே செல்ல, அவளை நெருங்கி படுத்தான்.
கண்களில் நீர் தடமிருக்க உறங்கி கொண்டிருந்தவளின் முகம் காண இவனின் மனம் வெகுவாய் வாட, அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவனின் ஸ்பரிசத்தில் சற்றாய் உறக்கம் கலைந்தவளுக்கு சண்டையெல்லாம் நினைவில் இல்லை. இது என்றும் உறக்கத்தில் தரும் முத்தமாய் மட்டுமே அந்த அரைகுறை உறக்கத்தில் தோன்ற, எப்பொழுதும் அவள் கூறும் அந்த ட்ரேட் மார்க் வசனமான “என் செல்ல கண்ணப்பா” எனக் கூறி அவன் மார்பில் சாயந்து உறங்கிப் போனாள்.
அவளின் தலை கோதியவனுக்கோ அன்றைய விருந்தின் நிகழ்வு மனதில் நிழலாடியது.
அன்று ஞாயிற்றுக் கிழமை
பெங்களூரில் தன் அலுவலகத்தினருகே தனி வீடு எடுத்து அதில் அவன் மட்டுமே வசித்து வந்தான் இளமருதன்.
பெற்றோர் உறவினர் நண்பர்கள் என எவரேனும் வந்தால் வசதியாக இருக்குமென அவ்வாறு தனி வீட்டில் வசித்து வந்தான்.
“ஹே மதுரா வா வா… வாங்க மாறன். உங்களை மாறன் னு கூப்பிடலாம்ல” என மருதன் கேட்க, இன்முகமாகவே ஆமோதித்தான் மாறனும்.
இளமருதனின் விருந்தினர் உபச்சாரம் வெகுவாகவே மாறனை கவர்ந்தது.
“இரண்டு பேரும் என்ன குடிக்கிறீங்க?? டீ ஆர் காபி இல்ல ஜூஸ் இல்ல சாப்டதும் குடிக்கிறீங்களா?? வாணிக்கு காபி பிடிக்காதே உங்களுக்கு பிடிக்குமா மாறன் இல்ல நீங்களும் அவளுக்காக குடிக்காம இருந்துட்டீங்களா?? நான் லண்டன்ல இருந்த வரை அவளுக்காக காபி குடிக்கிறதையே விட்டுட்டேன்” என சமையலறையிலிருந்து வேலை செய்துக் கொண்டே பேசியிருந்த மருதனின் வார்த்தையில்,
“என்னது இவளுக்காக காபி குடிக்கிறத நிறுத்தினானா??” என மாறனின் மைண்ட் வாய்ஸ் கேட்க,
“இன்னிக்கு எப்படியாவது வாணிக்கிட்ட இவன் எப்படி இவ வாழ்க்கைகுள்ள வந்தான்னு கேட்டே ஆகனும்” என மனதினுள் முடிவெடுத்துக் கொண்டான்.
“மருதன் நீங்க மட்டும் தனியாவா இருக்கீங்க இந்த வீட்டுல” என்றான் மாறன்.
“ஆமா அம்மா அப்பா அப்பப்ப வந்துட்டு போவாங்க” என்றான் மருதன்.
“வெற்றிப்பா, இவனுக்கு தனியா இருக்கிறது தான் பிடிக்கும். எனக்கு அப்படியே ஆப்போசிட் நேச்சர் இவன். சரியான தனிமை விரும்பி” என்று மாறனிடம் உரைத்தவள்,
“நீ மாறவே இல்லடா மருதா. லண்டன்ல இருந்தது மாதிரியே தான் இருக்க” என்றாள்.
“உனக்கு அவ்ளோ க்ளோஸா இவன். ஆனா நீ இவனை பத்தி சொன்னதே இல்லையே மது” என இவர்களின் நட்பை அறியும் பொருட்டு மாறன் கேட்க,
வாணி விடைக் கூற தொடங்குமுன்,
“என்னது என்னை பத்தி சொல்லலியா?? நான் கல்யாணத்துக்கு வர மாட்டேனு சொன்னதுக்கு அப்படி சண்டை போட்ட, அதனால கோபத்துல சொல்லாம விட்டுட்டியா பக்கி” என்றான் அவளின் மண்டையில் ஒரு குட்டு வைத்து.
சிரிப்புடனே மருதனின் செயலை பார்த்திருந்தான் மாறன்.
மாறனுக்கு வாணி ஆஷிக்கிடம் பேசும் நினைவு தான் வந்தது. அவனிடமும் இப்படி தானே வம்பளப்பாள் என எண்ணிக் கொண்டான்.
“போடா டாங்கி” என்றவள் “நீ ஒன்னும் அவ்ளோ பெரிய ஆளுலாம் இல்ல நான் பார்க்கிற ஆளுகிட்டலாம் சொல்றதுக்கு” என நாக்கை துறுத்தினாள்.
இவனிடம் பேசும் சுவாரசியத்தில் மாறனின் கேள்விக்கு விடையளிக்க மறந்து விட்டாள் வாணி.
“சோ சேட் மாறன். உங்களை பார்க்கிற ஆளு லிஸ்ட்ல சேர்த்துடுச்சே இந்த மதுரா பொண்ணு” என அவன் உச்சுக்கொட்டி சொல்ல,
மாறன் மதுவை முறைத்துப் பார்க்க,
“அய்யய்யோ ஏன்டா ஏன்?? நல்லா இருக்க குடும்பத்துல கும்மியடிச்சிட்டு போய்டுவ போலயே” என வாணி பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற,
மாறன் மருதன் இருவருமே வாய்விட்டு சிரித்தனர்.
அடுத்து இருவரும் உணவு உட்கொள்ள அமர்ந்த நேரம் ஆரம்பித்தது பிரச்சனை.
அங்கு நடந்த பேச்சு தான் இன்று இருவருக்குமான சண்டையாய் வெடித்து நிற்கிறது.
வாணிக்கு தெளிவாய் உறக்கம் கலைய மாறனின் கைகளுக்குள் அவனின் மார்பினில் படுத்திருப்பதை உணர்ந்தவள், முகத்தை மட்டும் நிமிர்த்தி அவன் முகத்தை கண்டாள்.
“ஏன் மதும்மா அன்னிக்கு அவன் தான் உனக்கு முக்கியம் போல பேசின?? அவனுக்கு தான் உன்னைய பத்தி எல்லாம் தெரியும்… எனக்கு தெரியாதுங்கிற மாதிரி பேசின” என மனதின் வலியை முகத்தில் தேக்கி மாறன் மதுவை கேட்க,
“அச்சோ என்னிக்குமே உங்களை தவிர என் வாழ்ககைல யாருமே பெரிசு இல்லப்பா. நீங்க மருதன தப்பா புரிஞ்சிக்கிட்டு என்கிட்ட சண்டை போடுறீங்கனுல நான் நினைச்சேன். ஆனா நீங்க என்னைய தான் தப்பா புரிஞ்சிட்டீகளா?” என அவனை விட்டு விலகி வந்து இவள் சோகமாய் கேட்க,
“அய்யோ திரும்பவும் முருங்கை மரம் ஏறிடுவா போலயே!! இன்னிக்கு இந்த பிரச்சனைக்குலாம் முடிவு கட்டிடலாம்” என எண்ணிய மாறன்,
“உனக்கு மருதனை எப்படி தெரியும்?? அவனைப் பத்தி ஏன் என்கிட்ட சொல்லாம விட்ட?? அதை முதல்ல சொல்லு நீ??” என மாறன் கேட்க,
அவனின் கேள்வியில் அவளின் கோபம் மேலுமேற, “அப்ப என்னைய பத்தி என்ன தான் நீங்க புரிஞ்சி வச்சிருக்கீங்க?? அதெப்படி எனக்கு க்ளோஸா இருக்கிறவங்கள பத்தி நான் உங்ககிட்ட சொல்லாம இருப்பேன்.” என ஆங்காரமாய் அவள் கேட்க,
“ஆஹா அவ சொல்லிருக்கா, நம்ம தான் மறந்துட்டோமோ?? மாறா உன் க்ரைம் ரேட் கூடிட்டே போகுதே!! இதேயே சொல்லி சொல்லி சண்டை போடுவாளே!!” என மாறனின் மனம் பீதியடைந்தது.
— நர்மதா சுப்ரமணியம்
First..😍😍😍
Sanda samathanam agala ya…
Matiya mara…😂😂😂
Waiting ka..
Ha ha ha.. Thanks ma 😍😍😍😍