You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

RK-8

8

அந்த ஆடவன் தன்னை சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொள்ள, அவளோ அவன் பேசுவதையெல்லாம் காதில் கூட வாங்கவில்லை. ரேகாவின் குரல்தான் அவள் மூளைக்குள் சென்று தெறித்து கொண்டிருந்தது.

“வேண்டாம் மது… ஏதாவது பெரிய பிரச்சனையில மாட்ட போற… ஒழுங்கா வந்திடு” என்று அவள் பலமாக எச்சரிக்கை செய்ய,

“அதெல்லாம் முடியாது” என்று திடமாக பதிலளித்தாள் மது!

“என்ன முடியாது?” என்று சுரேஷ் சந்தேகமாக கேட்கவும் மது நெற்றியை தேய்த்து கொண்டு, “அது ஒன்னும் இல்ல… சும்மா” என்று தட்டு தடுமாறினாள்.

“உங்க காதலுக்கு சம்மதம் கிடைக்குமா கிடைக்காதுன்னு பயமா இருக்கோ… அதான் இவ்வளவு டென்ஷனா?” என்று சுரேஷாக கற்பனை செய்து கொண்டு வினவ, அவள் பதில் சொல்லாமல் அசட்டுத்தனமாக சிரித்துவைத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் கவலை படாதீங்க… மாமா ரொம்ப நல்ல மாதிரி… கண்டிப்பா ஒகே சொல்லிடுவாரு” என்றான். அவளுக்கு தலையிலடித்து கொள்ளலாம் போல இருந்தது. போதாக் குறைக்கு ரேகா வேறு அவளை கடுப்பேற்ற, “உன்கிட்ட நான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன்… போனை வை” என்று அவள் ரகசியமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.  

“மது மது” என்று ரேகா கதறியதை அவள் காதில் வாங்கவேயில்லை.  

சுரேஷ் பாட்டுக்கு அவளுடன் பேசி கொண்டே அந்த பங்களாவின் உள்வாயிலை நோக்கி அழைத்து சென்று கொண்டிருந்தான். அவளுக்கு உள்ளுர தடதடத்து கொண்டிருந்தது. இருப்பினும் தான் வந்த வேலையை முடிக்காமல் போவதில்லை என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு நடக்க,

மீண்டும் அவன் கையிலிருந்த குழந்தை அழ தொடங்கியது.

“பாப்பா ஏன் அழுதிட்டே இருக்கா என்னாச்சு?” மது கேட்க,

“பசிக்க ஆரம்பிச்சிடுச்சு… பால் கலந்து கொடுத்தா தூங்கிடுவான்” என்றான். நிச்சயம் அவன் கையிலிருப்பது மூன்று அல்லது நான்கு மாத குழந்தை என்று தோன்ற, சற்றே விசித்திரமாக இருந்தது அவன் செயல் அவளுக்கு!

இவ்வளவு சின்ன குழந்தைகளை பெரும்பாலும் அம்மாக்கள்தானே சாமதானம் செய்வார்கள் என்று யோசித்தவள்,

“பாப்பாவோட அம்மா எங்கே?” என்று மனதில் எழும்பிய கேள்வியை கேட்டுவிட,

“தூங்கிட்டு இருக்காங்க… பாப்பா அழுகுறது டிஸ்டர்பன்ஸா இருக்குன்னு சொன்னாங்க… அதான் நான் கீழே கார்டனுக்கு தூக்கிட்டு வந்தேன்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அந்த குழந்தை அவனை பெரும்பாடு படுத்தி கொண்டிருந்தது.

“பாப்பாவை என்கிட்ட கொடுத்துட்டு… நீங்க பால் எடுத்துட்டு வாங்களேன்” என்றவள் கரம் நீட்ட,

“இல்ல உங்களால இவனை சாமாளிக்க முடியாது” என்றான்.

“நான் சமாளிப்பேன் கொடுங்க” என்று அவனிடமிருந்து வாங்கி கொண்டு, “பாப்பா பேரு” என்று கேட்டாள்.

“அருண்” என்றவன் சொல்லிவிட்டு, “நீங்களும் உள்ள வாங்க” என்று அவளை அழைத்து கொண்டே வேகமாக குழந்தைக்கு பால் எடுத்து வர உள்ளே சென்றான்.

“அருண் கண்ணா? ஏன் அழறீங்க?” என்றவள் அவனிடம் கொஞ்சி கொஞ்சி பேசி கொண்டிருக்க, அந்த பிஞ்சு பாலகனோ அந்த புதிய முகத்தை வெகுஆர்வமாக பார்த்து கொண்டிருந்தான்.

குழந்தை அழாமல் இருப்பதை பார்த்த சுரேஷ் கொஞ்சம் நிம்மதியடைந்தவனாக, “நீங்க இப்படி உட்காருங்க” என்றவளை அமர சொல்லிவிட்டு, சமையலறை நோக்கி நடந்தான்.

“ராஜி ம்மா… பாப்பாவிற்கு பால் எடுத்துட்டு வாங்க” என்றவன் குரல் வெளியே ஹால் வரை கேட்டது.

சரியாக அதே சமயம் அந்த வீட்டின் மாடி படிகளிலிருந்து இறங்கி வந்தான் ஏகே. அவன்தான் அஜய். ஏகே என்கிற அஜய் கிருஷ்ணா.

சோபாவில் அமர்ந்திருப்பவளை யாரென்று யோசனையாக பார்த்து கொண்டு அவன் இறங்கி வர, சுரேஷ் கையில் பால் பாட்டிலோடு நடந்து வந்தான.

“எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு? யார் சுரேஷ் அந்த பொண்ணு… உங்களுக்கு தெரிஞ்சவங்களா?” என்று அவன் சுரேஷை நிறுத்தி கேட்க,

“இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்றான் சுரேஷ் அவனை பார்த்து கேலியாக சிரித்து!

“என்ன நடிப்பு? நான் அந்த பொண்ணு யாருன்னுதானே  கேட்டேன்” அஜய் புரியாமல் கேட்க,

“போதும் போதும்… அந்த பொண்ணு யாருன்னு நாங்க கண்டுபிடிச்சிடோம்” என்று சுரேஷ் சொல்லிவிட்டு அவனை கிண்டலாக பார்த்து சிரிக்க,

 “என்ன உளறீங்க?” என்று கடுப்பானான் அஜய்.

“நீதானே நேத்து நைட் நான் ஒரு  பொண்ணை லவ் பண்றேன்… அவளைதான் கல்யாணம் பண்ண போறேன்னு உங்க அப்பா கிட்ட ஸ்டராங்கா சொன்ன” சுரேஷ் சொல்ல,

“அது நான் சும்மா அப்பா கிட்ட விளையாடுனே… அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்றாருன்னு” என்று அஜய் சொல்லி முடிக்க சுரேஷ் அதிர்ச்சியோடு,

“அப்போ இந்த பொண்ணு உன் லவர் இல்லையா?” என்று கேட்டான்.

“முதல யார் இந்த பொண்ணு?” என்று அஜய் குழப்பத்தோடு கேட்க, சுரேஷ் முகம் வெளிறி போனது.

“அந்த பொண்ணுதான் அஜய் உன்னை லவர்னு சொல்லுச்சு” என்று சுரேஷ் சொன்ன நொடி அஜய் முகம் கோபத்தில் சிவந்தது.

“யாராச்சும் எதாச்சும் சொன்னா நீங்க நம்பிடுவீங்களா?” என்று சீற்றமாக பொறிந்தவன் நேராக அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து நின்று அவளை முறைத்து பார்த்தான்.

சுரேஷ் பதறி கொண்டு அவளருகே வந்து குழந்தையை பிடுங்கி கொள்ள, அவள் எழுந்து அவர்கள் இருவரையும் ஆழமாக பார்த்தாள்.

அஜயின் முகத்தில் கோபம் கொப்பளித்து கொண்டிருந்தது. அதேநேரம் அவளுக்கும் அவனை எங்கேயோ எப்போதோ பார்த்திருப்போமோ என்ற யோசனையில் அவள் பதில் பேசாமல் அவன் முகத்தையே உற்று பார்த்து கொண்டிருந்தாள். அவள்

அந்த ஆராய்ச்சியில் இருந்ததில் எதுவும் பேசாமல் அவள் மௌனத்திருக்க, அஜய் பயங்கர கோபத்தில் அவளை பார்வையாலேயே முற்றுகையிட்டான்.

“ஆமா யார் நீ? என் லவர்னு சொன்னியாம்” என்றவன் ஆரம்ப நிலையிலேயே அவளிடம் எகிற, அந்த கேள்வியில் அவள் தன் யோசனையை கைவிட்டாள்.

“நான் ஒன்னும் உங்க லவர்னு சொல்லல…  அவர்தான் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு” என்று அவள் சுரேஷை கை காண்பிக்க,

“இல்ல இல்ல அந்த பொண்ணுதான் சொல்லுச்சு” என்று சுரேஷ் அவசரமாக விளக்கம் தந்தான்.

ஆனால் அஜய் எந்த நிலையிலும் அவளை முறைப்பதை கை விடுவதாக வில்லை.

ஆனால் அவளோ கொஞ்சம் கூட பயஉணர்வே இல்லாமல், “டென்ஷனாகதீங்க… உங்க கிட்ட பேசலாம்ன்னு ரெண்டு நாளா ட்ரை பண்றேன்… முடியல… உங்க அபீஸ் வந்தேன்… அப்புறம் உங்க வீட்டுக்கு… பட் பார்க்கவே முடியல… அதான்” என்றவள் சொல்லி நிறுத்த,

“அதுக்கு இப்படி ஒரு பொய்யை சொல்வாங்களா? எங்க அந்த வாட்ச் மேன்… எவளாச்சும் என் லவர்ன்னு சொன்னா உடனே உள்ள விட்ருவானாமா?” என்று அஜய் எரிமலையாக பொங்கி கொண்டிருந்தான்.

“எவளாச்சுமா… ஹலோ மிஸ்டர் கொஞ்சம் மரியாதையா பேசுங்க” என்றவள் முகமும் கோபத்தில் சிவக்க,

“பொய் சொல்லிட்டு உள்ளே வந்திருக்க… உனக்கு மரியாதை வேற கொடுப்பாங்களாக்கும்” என்று அஜயும் பதிலுக்கு அவளிடம் ஏறினான்.

“நான் ஒன்னும் பொய் சொல்லிட்டு உள்ளே வரல” என்றாள்.

“அப்புறம்” என்றவன் புருவங்கள் முடிச்சிட, “காம்பவுன்ட் சுவரு எகிறி குதிச்சுதான் வந்தேன்” என்று பட்டென்று சொல்லிவிட்டான்.

அஜய் சுரேஷ் இருவரும் வாயடைத்து நிற்க, அருண் கூட தன் அழுகையை நிறுத்திவிட்டான்.

அஜயிற்கு அந்த நொடி கோபத்தை தாண்டி சிரிப்புதான்  வந்தது. அவளை சுவாரஸியமாக பார்க்க ஆரம்பித்தான். அவளோ அவனை எரிச்சலாக பார்த்து கொண்டிருந்தாள்.

“வெளியே நிற்குற அந்த ட்ரிப்ள் த்ரீ நம்பர் கார் உங்களோடதுதானே?” என்று அவள் தீவிரமாக கேள்வி கேட்க,

“ஆமா அதுக்கென்ன?” என்றவன் அலட்சியமாக பதிலளிக்க,

“ஒரு வாரம் முன்னாடி ஈசிஆர் ரோட்டல ஒரு அக்சிடென்ட் பண்ணியிருக்கீங்க… ரேஷ் டிரைவிங்… ஒரு தள்ளு வண்டிக்காரரோட கடையை அடிச்சு நொறுக்கிட்டு போயிருக்கீங்க… அவருக்கு பாவம் காலில் பலமான அடி” என்று சொல்லும் போது அஜய் சுரேஷை பார்க்க அவன் குழம்பி நின்றான்.

“எங்க வண்டிதான் இடிச்சுதுன்னு ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?”

“இல்லா இங்கே வந்து நிற்பேனா? இருக்கு… வேகமா உங்க கார் போனதுக்கான சிசிடிவி ஆதாரம் இருக்கு… உங்க கார் சைட்லயும் ஸ்கரச்சஸ் இருக்கு” என்றவள் சொல்ல அஜயின் பார்வை சுரேஷை முறைத்தது. அவன் எதுவும் பேச முடியாமல் நின்றான். 

அஜய் சில நொடிகள் நிதானித்துவிட்டு, “இப்போ நான் என்ன பண்ணணும்?” என்று கேட்க, மது தொடர்ந்தாள்.

 “நீங்க செஞ்ச வேலையை நான் கோர்ட்டுக்கு எடுத்துட்டு போக முடியும்… ஆனா உங்களை மாதிரி பணக்காரங்க இந்த கேசெல்லாம் அசல்ட்டா ஊதி தள்ளிட்டு போயிடுவீங்க… பாவம் அந்த தள்ளு வண்டிகாரர் தேவையில்லாம கோர்ட்டுக்கு அலையணும்…

ரூல்ஸ் படி அவர் அந்த ரோட்டல கடை வைச்சிருந்ததும் தப்பு… ஆனா என்ன பண்ண முடியும்… வயித்து பிழைப்புக்காக செஞ்சுட்டாரு… அவரையும் தப்பு சொல்ல முடியாது… லஞ்சம் வாங்கிட்டு இதுக்கெல்லாம் போலிஸ் காரங்களே அனுமதி கொடுக்கிறாங்க…

எனக்கு அந்த மாதிரி சுத்தி வளைச்சு மூக்கை தொடுற வேலையே வேண்டாம்…

பாவம்… அவருக்கு இருந்த ஒரே தொழிலும் போச்சு… கால் அடிப்பட்டதால எந்த வேலைக்கும் போக முடியாம படுத்து கிடக்குற மாதிரி ஆகிடுச்சு… இதுக்கெல்லாம் சேர்த்து நீங்க கம்பென்சேஷனா எதாச்சும் ஒரு அமௌன்ட் அந்த குடும்பத்துக்காக கொடுங்க” என்றவள் இறங்கிய குரலில் சொல்ல அஜய் மௌனமாக நின்றிருந்தான்.

அவள் உடனடியாக தன் கைகளில் வைத்திருந்த ஒரு வெள்ளை தாளை பிரித்து அவனிடம் கொடுத்து, “இது அவரை அடிமிட் பண்ண ஹாஸ்பெட்டில் பில்… அந்த ஷீட் பின்னாடியே அவங்க அட்ரெஸ் போன் நம்பர் இருக்கு… நீங்களே நேர்ல போய் நான் சொன்னதெல்லாம் உண்மையான்னு வெரிஃபை பண்ணிட்டு பணம் கொடுத்துடுங்க” என்றதும் அஜய் அந்த தாளை கையில் வாங்கி பார்த்து கொண்டிருந்தான்.

“கொஞ்சமாச்சும் மனசாட்சின்னு இருந்தா ப்ளீஸ் இதை செய்யுங்க… அப்புறம் ஒரு விஷயம்… இனிமே இந்த மாதிரி ரேஷ் ட்ரைவிங் பண்ணாதீங்க… நல்ல வேளையா இந்த தடவை எந்த உயிரும் போகல… போயிருந்தா அதுக்கு நீங்க எவ்வளவு கம்பன்சேஷேன் கொடுத்தாலும் அது ஈடாகாது” என்றவள் இறுக்கமாக சொல்ல அவன் பார்வையும் இறுகியது.

 “நான் கிளம்புறேன்” என்று சொல்ல

சுரேஷோ இத்தனை சிறு வயதில் இப்படியொரு குணமா இந்த பெண்ணுக்கு என்று தன்னையறியாமல் வியந்தபடி அவளை பார்த்து கொண்டிருந்தான்.

தன்னலமற்ற அவள் எண்ணங்களும் துணிவும் அவனை நெகிழ்த்தியது. அந்த முதல் சந்திப்பிலேயே அவள் மீது அபரிமிதமான மரியாதை வந்து தொற்றி கொண்டது.

மதுவோ அருண் கன்னத்தில் கிள்ளிவிட்டு,

“பை டா கண்ணா” என்று கொஞ்சிவிட்டு தான் வந்த வேலை முடிந்ததென்ற நிம்மதியில் அவள் வெளியேற,

அஜயிற்கு அவன் கையிலிருந்து ஏதோ ஒரு விலைமதிப்பற்ற பொருள் கை நழுவி போவது போல தோன்றியது.

அந்த உணர்வை எப்படி எடுத்து கொள்வதென்றே அவனுக்கு தெரியவில்லை. அதற்கான காரணமும் புரியவில்லை. வெகுசில நிமிடங்களில் ஒரு பெண் தனக்குள் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

அவன் மனதில் அப்போது ஏதோ புரியாத உணர்வுகளும் யோசனைகளும் குவிய, “ஒரு நிமிஷம்” என்று வெளியே வந்து அவளை போக விடாமல் நிறுத்தினான்.

அவள் திரும்பி பார்க்க, “நம்ம எப்பயாச்சும் மீட் பண்ணி இருக்கோமா? உங்களை எனக்கு பார்த்த மாதிரி ஒரு பீல்” என்று ஆவலோடு கேட்டான்.

அவள் புன்னகைத்தபடி, “பார்த்திருப்பீங்க… நான் சோசியல் மீடியால ரொம்ப ஃபேமஸ்… லாயர் மதுபாலான்னா நிறைய பேருக்கு தெரியுமே” என்றாள் பெருமையாக!

“என்ன பெயர் சொன்னீங்க?” என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்து கொண்டே கேட்க, “லாயர் மதுபாலா” என்று சொல்லிவிட்டு அவள் நடந்து சென்றுவிட்டாள்.

அவனோ அப்படியே நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றுவிட்டான். “இது என் மது வா” என்று அவன் தன்னைத்தானே சில முறைகள் கேட்டு கொண்டான்.

மனதில் ஒரு புதுவிதமான உணர்வு பரவ, அவனை  உற்சாகம் தொற்றி கொண்டது.

அப்போது வாயிலில் காவலாளிக்கும் அவளுக்கும் சண்டை நடைபெற்றது.

 “யாருமா நீ… நீ எப்படி மா உள்ளே வந்த”

“அதுவே தெரியாமதான் இங்க நீங்க நிற்குறீங்களா?” என்றவள் கேலி செய்து சிரிக்க, அவன் தலையை சொறிந்துகொண்டிருந்தான்.

மீண்டும் அவளை பார்த்து, “எப்போ உள்ளே வந்தீங்க?” என்று கேட்க அவள் சிரித்துவிட்டு,

“அதெல்லாம் ராணுவ ரகசியம் சொல்ல முடியாது” என்று அந்த காவலாளியை கலாய்த்தாள்,  

தூரத்தில் நின்று நடப்பதை பார்த்து கொண்டிருந்த  அஜயிற்கு சிரிப்பு தாங்கவில்லை. இவள் உன் மதுதான் என்று அவன் உள்மனம் உறுதியாக சொன்னது.

‘ஏ வாலு… எகிறி குதிச்சு என் வீட்டுக்குள்ளேயே வரியா நீ… உன்னை என்ன பண்றேன்னு பாரு’ என்று சூட்சம புன்னகையோடு எண்ணி கொண்டவன் காவலாயிடம் கையசைத்து அவளை வெளியே விட சொல்லிவிட்டு அவன் வேகமாக உள்ளேநடந்தான்.

சுரேஷ் அஜய் வருவதை பார்த்ததும் வேலையாள் ராஜியிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வந்து, “அஜய்… அனன்யா அன்னைக்கு” என்று ஏதோ சொல்ல வர அவன் கை காட்டி பேச வேண்டாமென நிறுத்திவிட்டான்.

“எனக்கு தெரியும்… இது அனன்யா வேலைதான்… வேறு யாரு இந்த வீட்டுல இப்படியெல்லாம் செய்ய போறா” என்று கோபமாக கர்ஜித்தான்.

சுரேஷிற்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அவன் குற்றவுணர்வோடு பார்க்க,

“அவ இனிமே டிரைவர் இல்லாம காரை தொடட்டுமே… வைச்சிக்றேன் அவளுக்கு” என்ற அஜய் மேலும், “இந்த விஷயத்தை இப்படியே விடுங்க… அப்பா கிட்ட சொல்லிடாதீங்க… நான் இந்த பிரச்சனையை பார்த்துக்கிறேன்” என்றான்.

“சரி அஜய்” என்றதும் அவன் மாடியிலுள்ள தன்னறைக்கு செல்ல எத்தனிக்க, “அஜய் ஒரு நிமிஷம்” என்று அழைத்தான் சுரேஷ்!

அவன் திரும்பி என்ன என்பது போல் பார்க்க, “அந்த பொண்ணை உன் லவர்னு சொன்னதுக்கு சாரி… ஏதோ குழப்பத்தில” என்று தயக்கமாக சொல்லி கொண்டிருக்க அஜய் முகத்தில் அழகாக ஒரு புன்னகை அரும்பியது.

அந்த பொய்யை அவன் மனதார விரும்புகிறானே! அது இந்த நொடியே இப்போதே உண்மையாக மாறிவிட கூடாதா என்று அவன் ஒரு பெரிய மனகோட்டையே கட்ட ஆரம்பித்தான்.

அந்த உணர்வும் ஆசையும் இன்று நேற்று வந்ததல்ல. பாதியிலேயே அவளை தன் வாழ்க்கை பாதையில் தொலைத்த போது வந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் அவளை காணாமல் தேடும் போது வந்தது.

அவன் சுரேஷிற்கு பதிலேதும் சொல்லாமல் நேராக தன்னறைக்குள் நுழைந்து, அவன் கப்போர்டிலிருந்த ஒரு பழைய பையிலிருந்த பொருட்களை கொட்டினான்.

மது குழந்தையில் கிறுக்கியது அவள் விளையாடிய பொருட்கள் என்ற அந்த சேமிப்பிற்குள் இருந்த பழைய புகைப்படத்தை ஆராய்ந்து வெளியே எடுத்தான்.

ரெட்டை ஜடை அணிந்து கொண்டு அவன் முதுகில் ஏறி கொண்டிருந்த மதுவின் சிறு வயது புகைப்படத்தையும் சற்று முன்பாக அவனெதிரே நின்று பேசிய அந்த பருவ வயது பெண்ணையும் ஒப்புமை செய்தான்.

அவன் முகத்தில் அளவில்லா ஆனந்தம்.

“அப்படியே இருக்க வாலு நீ… என்ன புசு புசுன்னு அழகா இருந்த அந்த கன்னத்தை தான் டி காணோம்” என்று அவளின் நினைவுகளில் மூழ்கி திளைத்து முத்தெடுத்து கொண்டிருந்தது அவன் உள்ளம்!

ஒன்றாக வானில் சந்தோஷமாக எல்லைகளின்றி பறந்து திரிந்து கொண்டிருந்த அந்த பறவைகள் இரண்டும் திடீரென்று வழித்தடம் மாறி போன போது ஏற்படும் வலி. அதனை வார்த்தைகளாக அவனால் சொல்ல முடியாது. தனியாக வெதும்பிய நாட்கள் ஒவ்வொன்றும் அவன் நினைவுகளுக்குள் மோதின.

அவளின் பிஞ்சு விரல்களை பற்றிய போது உண்மையில் எந்த உணர்வில் பற்றினானோ தெரியாது. ஆனால் அதே விரல்கள் அவன் பிடியிலிருந்து நழுவிய போது  ஏற்பட்ட உணர்வு,  இன்று வரை, போகும் இடங்களிலெல்லாம் எங்கேயாவது அவளை மீண்டும் பார்த்து விட மாட்டோமா என்று தேட செய்தது.

ஆனால் திடீரென்று சண்டிகுதிரையாக வளர்த்து வந்து அவன் முன்னேயே  நிற்பாள் என்று அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

இறக்கை கட்டி வானில் பறக்க வேண்டும் போல் அவனுக்குள் பிறந்த உத்வேகத்தை பெரும்பாடுப்பட்டு கட்டுபடுத்தி கொண்டான்.

அவளை காணாமல் அவன் மனம் தேடும் போதெல்லாம் அவன் ஓயாமல் கேட்டு கேட்டு தேய்த்த அந்த பாடலை கேட்க வேண்டும் போலிருந்தது. அதனை ஒலிக்க செய்த மறு நொடி அவன் உலகமே மறந்து போனான். அவளை தவிர!

மது மது மது என்று அவள் மட்டுமே அவன் நினைவில் நிறைந்திருந்தாள்!

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்த காதலென்றால்

<

p style=”text-align: left;”>என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

To comment… click here 

You cannot copy content